சகபயணிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 991 
 

கிழக்கு – மேற்கு ஜெர்மனிகளின் பிளவின்போது  அதன் தலைநகரமான பெர்லினும் கிழக்கு பெர்லினாகவும், மேற்கு பெர்லினாகவும் பிரிந்துபோனமை நமக்கெல்லாந்தெரியும்.. பின்னர் அவை மீளவும் இணைவதற்கு முன்னர் நாங்கள் மேற்கு பெர்லினில் வாழ்ந்திருந்தோம். ஒருநாள் மாலையில் அதன் மையமான ZOOLOGICALGARTEN எனும் பகுதிக்கு எமக்கான மளிகைப்பொருட்கள் சில வாங்குவதற்காகச் சுரங்கத்தொடரியில்  சென்றிருந்தேன். சுரங்கத்தைவிட்டு வெளியில் வந்ததும் என்னருகில் என் திசையில் இன்னொருவரும் என்கூட நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை வினய் என்பார்கள். அவர் பெயரைத் தமிழில் வினை என்றும் எழுதலாமென அவரைக் காணும்போதெல்லாம் நினைப்புவரும். நாற்பதைத் தாண்டிய அகவைகள். அவர் பெர்லினில் ஒரு காப்புறுதிக் குழுமத்தின் ஆலோசகர்வகையிலான . சிறப்புப்பணியொன்றின் நிமித்தம்  மலேஷியாவிலிருந்து வந்தவர்  சாகேதராமன் எனும் இலங்கை  இலக்கிய நண்பர் ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் வாடகை கொடுத்து வாழ்ந்துகொண்டிருந்தார். சாகேதராமன் என் நண்பரும். அவர் வீட்டில் வினயைப் பலதடவைகள் பார்த்திருக்கிறேன், அவ்வளவுதான் எனக்குப்பரிச்சயமான நண்பர் என்றுஞ்சொல்லமுடியாது.

எம் பார்வைகள் வெட்டியபோது என்னிடம் “ஹலோ  எங்கே போகிறீர்…” என்று விசாரித்தார். நான் என் அலுவலாகப் போகிறேன் என்பதைச்சொன்னேன். நான் பதிலுக்கு அவரிடம் “நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்” என்று உசாவவில்லை. அது அம்மா சின்னவயதிலேயே எனக்குக் கற்றுக்கொடுத்த பழக்கம். “பெரியவர்களிடம் ஒருபோதும் என்ன அலுவலாக, எங்கே போகிறீர்கள் என்றெல்லாம் அநாவசியமாக விசாரிக்கப்படாதாம்”.  மௌனமாக அவரோடு சென்று கொண்டிருந்தேன்.

அவராகவே “உமக்குத் தெரியுமா… இன்று ASTOR film Palast இல Hirak Rajar Deshe என்றொரு அருமையான வங்காளப்படம் போடுகிறார்களாம்… ஆறுமணி ஷோ மட்டுந்தானாம்” என்றார்.

 “படத்தின் இயக்குனர் யார்” என்றதுக்கு “வேறு யார்  சத்யஜித்ரேயதாம்… அதுக்குத்தான் நானும் போய்க்கொண்டிருக்கிறேன், மனுஷன் என்னோட ஃபேவெறிட் டிறெக்டர்” என்று என்னையும் உசுப்பேற்றினார்.

 சத்யஜித்ரேயதாம்  என்றதும் என் மனதும் குதியாட்டம் போடவும் ஜக்கெற்றின் பொக்கெற்றினுள் கையைவிட்டு என் வல்லுவத்தை (பர்ஸ்) வெளியில் எடுத்தேன். அதனுள் சில நாணயங்களைத்தவிர பணத்தாள்கள் எதுவும் இருக்கவில்லை. வேண்டுமானால் மளிகையை நாளைக்கும் வங்கிக்கொள்ளலாம், அரியவகையிலான சினிமா தப்பிவிடுமே. ஏமாற்றத்தைச் சகித்துக்கொண்டு சொன்னேன்: “அண்ணே… எனக்கும் சத்ஜித் ரேயின் படம் பார்க்க ஆசைதான்… ஆனால் நான் டிக்கெட்டுக்கான பணத்தை எடுத்துவரவில்லையே ” என்றேன்.

 “அச்சுச்சோ….” என்று எனக்காக வருந்துபவர்போலக் கொஞ்சத்தூரம் மௌனத்தில் நடந்து வந்தவர் “இப்பிடிச்செய்வோமா மிஸ்டர்” என்று விட்டுத் தானே அதற்கான வழியையும் இயம்பலானார். “ஓகே… நான் இன்றைக்கு உனக்கு டிக்கெட் எடுத்துத்தருவனாம், இரண்டு நாளைக்குள்ள அந்தப்பணத்தை  சாகேதராமன் வீட்டில கொண்ணாந்து எங்கிட்ட கொடுத்திடுறியா… நீயும் சத்ஜித்ரே படத்தை விரும்பிறதால இதைச்செய்யிறேன்” என்றார் பரோபகாரியாகி. விஞ்சிப்போனால் நுழைவுக்கட்டணம் 15 மார்க்குக்குள்ளேதான் இருக்கும்.  ‘இரண்டு நாளைக்குள்ள பணத்தைக் கொண்ணாந்து திருப்புவியா’ என்ற சந்தேகங்கலந்த நிபந்தனையோடு அந்தத் தமிழ்க் கஞ்சல் பனாதியின் உதவியைப்பெறுவதா வேண்டாமாவென மனது விசாரஞ்செய்யவும். சுரங்கத்தொடரியின் பருவகால அட்டையை வைக்கும் உறையை எடுத்து அதன் பகுப்பறையொன்றினுள் விரலை நுழைத்தேன், அதற்குள் அவசரதேவைகளில் உதவுமேயென்று நான் எப்போதோ சொருகிவைத்திருந்த  20 மார்க் தாள் ஒன்று பதுங்கிக் கிடந்து சிரித்தது.  ‘பெரும் ஆசுவாசம்’ ஏற்பட இப்போது பணம் இருப்பதைச்சொன்னேன், பேராபத்தொன்றிலிருந்து தப்பியவரைப்போல முகம் விகசித்தார் மறவர்.

படஅரங்கத்தை அடைந்ததும் நான் கழிப்பறைக்குப்போவதைப்போல் போக்குக்காட்டிவிட்டு  அவர் உள்நுழைந்தானதும், வேறோரு நிரையில்போய் அமர்ந்தேன், பிறகு அம்மனிதரின் முகத்தைப்பார்க்கப் பிடிக்கவில்லை.

இந்த அனுபவத்தின்பின் ஒரு வாரம் கழிந்திருக்கும். எனக்கு (பெர்லினிலிருந்து) என் சகோதரி வதியும் Dortmund நகருக்கு ஒரு நடைசெல்ல வேண்டியிருக்க Felix Reisen எனும் தொலை தூரப் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். நான் பேருந்துப்பயணங்களைத் தேர்வதெல்லாம் பொருண்மியம் கருதியேயன்றி  அதன்மீதான காதலால் அல்ல. நீண்ட பகல்களையுடைய கோடை அது. 550 கி.மீ தொலைவு, வாகன நெரிசலைப் பொறுத்து  ஆறிலிருந்து ஏழுமணிவரையிலான பயணம். வெளிநாடுகளில் பேச்சுத்துணைக்கு சகபயணிகள் கிடைப்பது அரிது. பேசக்கூடிய ஒருவர் வாய்த்தாலும் அவர் உதைபந்தாட்டத்தைப் பற்றியோ, சோளம், கோதுமை,  சீனிக்கிழங்கு, முந்திரிச் சாகுபடிபற்றியோ பேச ஆரம்பித்தால் நான் முழிக்கவேண்டும். இதனால் என் பயணங்களில் புரிந்த புரியாத வகைகளில் இரண்டு புத்தகங்களாவது எடுத்து வைத்துக்கொள்வேன். இன்று என் பக்கத்தில் ஒடிசலான உடம்புடன் பார்வையிலேயே மாணவி என்று கணித்துவிடக்கூடிய அரிவை ஒருத்தி அமர்ந்திருந்தாள். அவள் வைத்திருந்த எடுப்புப்பையில் நிறைய புத்தகங்களும், அப்பியாசப் புத்தகங்களுமிருந்தன. மடிப்பு மேசை முழுவதும் தன் சிறிய நெகிழிச்சாப்பாட்டுப் பொட்டலங்களை ஜலதரங்கம் செய்யவிருப்பவளைப் போலப் பரவிவைத்திருந்தாள்.  விநோதமாயிருந்த அவற்றைக் கடைக்கண்ணால் நோக்கினேன்.

ஏதோவொரு பயறுவகையின் முளைகள், நீளவாட்டில் சீவிய காரட், அவித்த பச்சைப்பட்டாணி, வாட்டிய சில சோயாக்கீலங்கள் (Torfu / Peat), ஜீரகக்கிழங்கின் நறுக்குகள், இரண்டு கிவிப்பழங்கள், ஒரு குடைமிளகாய், Ruccola சலாட் தழைகள் கொஞ்சம்.

எமது பிள்ளைகளும் பாலுணவு,  புலாலுணவைத்தவிர்த்து   இப்போது இவ்வகையிலான ’Vegan’ உணவுப்பழக்கத்துக்கு மாறிவிட்டார்கள். எம் பார்வைகள் சந்தித்தபோது கொஞ்சம் நட்பானவளாயிருப்பாள் போலிருக்க அவளிடம் நீங்கள் ’Vegan னா‘ வென்று கேட்டேன்.  அவள் முகம் மேலும் விகசிக்க  ’ஆமா’ என்றாள்.

இப்படி ’Vegan ஆவதற்குச் சுகாதாரம் தவிர்த்து வேறும் ஏதும் மெய்யியல்  காரணங்களும் உண்டோ’ என்றேன்.

 ‘நிறைய உண்டே… முதலாவது பூமியில் பிறக்கும் எல்லா உயிரினங்களும் வாழ்வதற்காகத்தான் பிறக்கின்றன, அப்படியிருக்க நாம் எமது உணவுக்காக அவற்றை  அறுத்துப்போடுவதில் எனக்கு உடன்பாடில்லை’.

 ‘இரண்டாவது உலக மக்கள் அனைவரும்  சுவைக்காகப் புலால் உணவைத்தான் விரும்புகிறார்கள்.  சுவைக்காக உண்பவர்கள் தமக்குத் தேவையானதைவிடவும் அதிகமான உணவை நுகர்கிறார்கள். அதனால் இறைச்சியின்  தேவை ஜனத்தொகையுடன் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இறைச்சிக்காக ஐரோப்பாவில் வெட்டப்படும் ஒரு மாட்டின் சராசரி எடை 1000 கிலோ, அதில் உண்ணக்கூடிய பகுதி 625 கிலோ மட்டுமே. 1000 கிலோ மாட்டை வளர்த்தெடுக்க நாம் அதற்கு 7000 கிலோ கடலை, கொள்ளு, சோளம் போன்ற தாவர உணவையூட்டுகிறோம். 625 கிலோ இறைச்சியைவிட 7000 கிலோ தானியத்தை வைத்து நாம் பத்துமடங்கு அதிகமான வயிறுகளைப் போஷிக்கலாம்.’

‘இனி எவருமே மீன்களைப் பிடிப்பதில்லை என்று நிறுத்திக்கொண்டுவிட்டால் எத்தனையோ ஆயிரம் கோடி டன்கள்  மீன் உணவு உற்பத்தி கடலில் விரயமாகி விடுமே’ என்றேன்.

 ‘அம் மீன்கள் எவையுமே அதீதப்பெருக்கத்தால் தரைக்கு வந்து நம்மைக் கடிக்கப்போவதில்லை, காட்டில் விலங்குகளின் பெருக்கம் இயற்கையால் கட்டுப்படுத்தப்படுவதைப்போல கடலின் உட்சூழல் மீன்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் அவை அதற்கான சூழலுடன் தொடர்ந்து தொந்தரவுகளின்றி வாழத்தம்மை இசைவாக்கிக் கொள்ளும்’ என்றாள் அவ்  IT Engineering இல் முதுகலை பயிலும் மாணவி. அவளது துறையுடன் நேரடித்தொடர்பிராத சூழலியலில் அவளது ஆழ்ந்த அறிவைக்கண்டு அசந்தேன்.

இப்படியே  பேச்சு சுவாரசியமாகப் போய்க்கொண்டிருக்க  Magdeburg  எனும் நகரத்தின் தரிப்பு வந்தது.  அதில் சிற்றுண்டி, காப்பி, பானகங்கள் மற்றும் புகைபிடிப்போருக்காக 30 மணித்துளிகள் பேருந்தை நிறுத்துவார்கள். அரிவை பேருந்தால் இறங்கியதும் கழிப்பறையை நோக்கிச்சென்றாள்.

நான் காப்பிக் கடையில்போய் ஜாக்கெற்றின் பொக்கெற்றில் கைவிடவுந்தான் அது காலியாயிருப்பது தெரிந்தது. திருட்டுச் சகோதரர்கள் இப்படி நேரங்காலந்தெரியாமல் விளையாடுகிறார்களே, என்ன செய்யலாம்?  அத்துவானத்தில் நின்று குளறி எதுவுமாகப்போவதில்லை, சற்றே காலாற நடந்துவிட்டு மீண்டும் வந்து  பேருந்தில் ஏறினேன். அரிவை தான் எடுத்துவந்திருந்த தோடை இரசத்தைக் குடித்துக்கொண்டிருந்தாள்.

நானும்  இயல்பாக எனது வல்லுவம் திருட்டுப்போய்விட்டதைச் சொன்னேன்.

உச்சுக்கொட்டி ‘அதற்குள் என்னவென்னவெல்லாம் இருந்தன’ என்று கேட்டாள்.  ‘200 இயூரோ வரையிலான பணம், அதைவிடவும் என் அடையாள அட்டை, கடனட்டைகள், சாரதியுரிமம், மருத்துவக்காப்புறுதி அட்டையெனப் பலஅட்டைகள் சேர்ந்து ஒன்றாகத் தொலைந்துவிட்டன’ என்றேன்.

“Schade” (பரிதாபம்/வருத்தம்) என்று உச்சுக்கொட்டிவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்க்கத்தொடங்கினாள்.

அவ்வளவுதான்  அதன் பிறகு அவள் தன் எண்ணங்கள் கருத்துக்கள்  எதனையும் என்னிடம் பகிர்ந்துகொள்ளவில்லை.  இடையிடையே தன் புத்தகங்கள் சிலவற்றைப் புரட்டினாள். ‘ சரி படிக்கட்டும்’ என்று நானும் மௌனமாக இருந்தேன். இவ்வளவு பேசியவள் Dortmund அடையும்வரையிலான மீதி   நாலுமணிநேரமும் உதடுகளை 4 x 6cm பிளாஸ்திரிபோட்டு ஒட்டியதைப்போல  மூடி வைத்திருந்தாள்.

நான்   Dortmund இல் பேருந்தை விட்டிறங்குகையில் ‘உன் மீதிப்பயணம் நல்லபடி அமையட்டும்’ என வாழ்த்தினேன்.  ஒரு செயற்கையான புன்னகையை உதிர்த்தாள்.

நான் மேற்கொண்டு வீடுபோய்ச் சேருவதற்குத் தன்னிடம்  ‘ஒரு 15 இயூரோ கொடு’ என்று  கேட்டுவிடுவேனோவெனப் பயந்திருப்பாள்போல, என்னசெய்யலாம்… இப்படியான மனிதர்களின் குமுகாயத்தில்  வாழத்தான் வாய்த்திருக்கிறது வாழ்க்கை!

– ஞானம் இதழ் – 286,  மார்ச் 2024

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *