கோழியாப்பண்ணை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 16,149 
 
 

‘சீனிக்கிழங்கு மூக்கும் கத்திரிக்கா காதும் நவாப்பழக் கண்ணுமா… கிழவன் அப்போ எப்பிடியிருப்பான்! இந்த போட்டோவுல இப்போ அப்பிடியா இருக்கான்? சுருட்டு குடிச்சிக் குடிச்சி பொசுங்கிப்போன வாயும், ஆடு-மாடு மேய்ச்சி முழுசா மொத்த மயிரையும் வெயிலுக்குத் தின்னக்கொடுத்த தலையுமா, எவனோ சாமக்கோடங்கி மாதிரிலா இருக்கான். சனியன்… இந்த போட்டோ எப்படியும் கீழ விழுந்து உடைஞ்சி, நொறுங்கி ஒண்ணும் இல்லாமப்போவுணும்னு பார்த்தா, இந்தச் சிலந்திவலையில தொங்கிக்கிட்டுலா இத்தனை வருஷமா கூடவே கிடக்கு. இப்போ போய் திடீர்னு எடுத்தா, இந்தச் சிலந்திங்க விடுமா? அப்படியே பிடுங்கி எடுத்துட்டுப் போனாலும், நாம போற ஊருல இந்த போட்டோவைத் தொங்கவிட்டா, கூடுகட்ட இந்தச் சிலந்திங்கதான் எங்க பின்னாடியே வருமா? கண்டிப்பா வரும். பொறந்த வீட்ல இருந்து புகுந்த வீடு வரைக்கும் கூடவே வந்த சிலந்திங்க, இப்போ மட்டும் தனியா பொழைச்சிட்டுப் போங்கன்னு விட்டுடுமா என்ன! வரும்… இந்தச் சிலந்திங்க மட்டும்தான் இனி கூடவரும். பாவம்! யாருமே இல்லாத ஊர்ல இந்தக் கிழவன் மட்டும் எதுக்குத் தனியாக்கிடந்து தொங்கணும்? போற இடத்துல தனிக் குடிசையோ, அநாதைச் சத்திரமோ, அங்க வந்து தொங்கட்டும்; இல்லைனா உடையட்டும்; உடைஞ்சி நொறுங்கட்டும்.’

நீண்ட யோசனைக்குப் பிறகுதான், சிலந்திவலைகளுக்குள் தொங்கிக்கொண்டிருந்த சீனிக்கிழவன் புகைப்படத்தை எடுத்த பொயிலாள், அதை வீட்டில் இருந்த கடைசிப் பொருளாக கோணிப்பைக்குள் திணித்துவைத்தாள். இப்போது அவளும் அவள் அக்கா குட்டச்சியும் வாழ்ந்த தடயம் எதுவும், அந்தக் குடிசைக்குள் இல்லை. குளிக்கப்போன குட்டச்சி வந்துவிட்டால் போதும். இரண்டு கிழவிகளும் இந்த ஊரைவிட்டு, இந்தக் கோழியாப்பண்ணையைவிட்டு ஏதோ ஒரு திசை நோக்கிக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், ‘கடைசியாக ஒருமுறை ஊர் வாய்க்காலில் குளித்துவிட்டுவருகிறேன்’ எனப் போன அக்கா கிழவி குட்டச்சிதான் இன்னும் வரவில்லை.

மொட்டைப் பனையில் பசியெடுத்த ஓணான் ஒன்று, வெறிபிடித்து ஏறுவதைப்போல சரசரவென வெயில் ஏறிக்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் வடக்கே பனங்காட்டுக்குள், ஆடுகளைக் கொன்று தின்று கொழுத்துத் திரிவதாக எல்லோரும் சொல்லும் ஒற்றை நரியைப்போல, அகோரமாக இந்த வெயில் ஊளையிடத் தொடங்கிவிடும். அப்புறம் அவ்வளவுதான்… தீக்குழிபோல பரந்து விரிந்துகிடக்கிற ஆற்றுமணலில் கால்வைத்து, கடவுளே வந்தாலும் நடந்து போக முடியாது. அப்படி அனலடித்து வெயில் சுட்டுப் பொசுக்கும்.

‘எங்கே போய்த் தொலைந்தாள் இந்தக் குட்டச்சி? ‘கடைசியா ஒருமுறை வாய்க்கால்ல முங்கிக் குளிச்சுட்டு வர்றேன்’னு சொல்லிட்டுப் போனவளுக்கா இவ்வளவு நேரம்? ஒருவேளை எதுக்குக் குளிச்சுட்டு எந்திரிக்கணும், நம்ம ஊரு, நம்ம வாய்க்கா, நம்ம தண்ணீனு இங்கேயே குளிச்சுட்டே இருப்போம்னு இருக்காளா அந்தக் கிழவி? சொல்ல முடியாது, கிழவிக்கு ஊரைவிட்டுப் போவ மனசே இல்ல. பைத்தியம் புடிச்சமாதிரி, ஊருக்குள்ளயே சுத்திச் சுத்தி அலைஞ்சாலும் அலைஞ்சுக்கிட்டிருப்பா. போய் தேடிப் பிடிச்சுக் கூட்டிட்டு வந்தாதான், வெயில் ஏறுறதுக்குள்ள சீக்கிரமா ஆத்தத் தாண்டிப் போக முடியும்’ – நினைத்துக்கொண்ட பொயிலாள், குட்டச்சியைத் தேடி தெருவுக்குள் வேகமாக இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

தெரு எனச் சொல்லலாமா அதை? நேற்று இவ்வளவு நேரத்துக்கு இந்தத் தெரு எப்படி இருந்தது! எவ்வளவு குழந்தைகள், எவ்வளவு விளையாட்டு, எவ்வளவு சத்தம், எவ்வளவு சிரிப்பு! இன்றைக்கு எதுவும் இல்லாமல் அகால நேரத்தில் மயானத்தின் வழியாக நடப்பதைப்போல் இருந்தது பொயிலாளுக்கு. ஆள் இல்லாமல், ஆடு – மாடுகள் இல்லாமல், தெரு நாய்கள்கூட இல்லாத அந்தத் தெருவில் நடப்பது, செருப்பு இல்லாமல் முள் காட்டுக்குள் இறங்கி நடப்பதுபோல் இருந்தது. அப்படியும் இப்படியுமாக அவசரஅவசரமாகப் பூட்டப்பட்டுக்கிடக்கும் வீடுகளைப் பார்த்தபடி நடந்தவளுக்கு, நேற்று மாலை ஊர்க்கூட்டம் நடந்த சாவடியைத் தாண்டி, ஓர் அடி எடுத்துவைக்க முடியவில்லை. கை ஒடிந்த ஒட்டச்சி சிலைபோல, அப்படியே அங்கேயே உறைந்து வெறித்து நின்றாள். குழந்தைகளின் அழுகை, ஆண்களின் ஆவேசம், பெண்களின் பரிதவிப்பு, ஆடு-மாடுகளின் கதறல்… என நேற்றைய ஊரின் எல்லா சத்தங்களும் தெளிவாகக் கேட்டன அவளுக்கு.

‘ஆளாளுக்குச் சத்தம் போடாதீங்க. எது நடக்கக் கூடாதுனு நாம நினைச்சோமோ, அது நடந்துபோச்சு. பக்கத்து ஊர்ல எவனோ எவளையோ கூட்டிட்டு ஓடிட்டானாம். ஊர் எல்லாம் கலவரமாகிக்கிடக்கு. இனி இந்த ஊர்ல ஒண்ணுமண்ணாப் பழகி, நாம நிம்மதியா வாழ முடியாது. நம்ம புள்ளகுட்டிங்க உசுரக் காப்பாத்தி, மானத்தோட வாழணும்னா நாம வேற ஊர் தேடி, நாடு தேடி போய் பொழைக்கிறதுதான் வழி.’

‘அது எப்படி? பொறந்த ஊர்… தண்ணியும் பச்சையுமா செழிப்பா இருக்கு. உழைச்ச காடுகரையை விட்டுட்டு, நாம எதுக்கு பஞ்சம் தேடி போறமாதிரிப் போகணும்? எவனோ எவளையோ கூட்டிட்டுப்போனதுக்கு நாமளா பொறுப்பு?’

‘அது அப்படித்தான். ஓநாய்ங்க கூட்டத்துக்கு மத்தியில வாழ்ந்தா, உசுரைக் காப்பாத்திக்க சிதறி ஓடுறதைத் தவிர வேற வழி இல்ல.’

”அதுக்காக இப்படி ஒரே நாள் ராத்திரியில வந்து, ‘ஊரைக் காலிபண்ணிட்டுப் போய்டுங்க’னு சொல்றது அநியாயமால்லா இருக்கு. புல் முளைக்கிறதுக்கு முன்னாடி புள்ளபெத்து, வாழையடிவாழையா வாழ்ந்த ஊரைவிட்டு நம்மளைப் போகச் சொல்ல இவங்க யாரு?’

‘ ‘அவங்க யாரா?’ ஊரைச் சுத்தி அவங்கதான் இருக்காங்க தெரியுமா? ‘இத்தனை நாளா நமக்கு அடங்கி, ஒடுங்கி, பயந்து, குனிஞ்சி, கஞ்சி குடிச்சி வாழ்ந்த பயலுவ, இன்னைக்கு நம்ம வீட்டுப் பொண்ணையே கூட்டிட்டுப் போற துணிச்சலுக்கு வந்துட்டானுவ. நாளைக்கு இதே மாதிரி கோழியாப்பண்ணையில இருக்கிற தெருக்காரப் பயலுவலும் எவளையாவது கூட்டிட்டு எந்த நாட்டைப் பார்த்தாவது ஓட மாட்டான்னு என்ன நிச்சயம்..?’னு வந்து கேக்கிறாங்க. ‘அதெல்லாம் என்னைக்கும் நாங்க பண்ண மாட்டோம்’னு சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணிக்கொடுத்தாலும் நம்ப மாட்டேங்கிறாங்க. ‘கலவரம் பரவிக்கிட்டு வருது. நீங்க பன்னிரண்டு குடும்பமும் எங்ககூட சேர்ந்து இருந்தா, எங்களுக்குத்தான் அவமானம். நாலாபக்கமும் தீ நின்னு எரியுது. நடுவுல கோழியாப்பண்ணை பன்னிரண்டு குடும்பம் மட்டும் பவுசா இருக்குதோனு, எங்க ஊர் இளந்தாரிப் பயலுவ வந்து அடிச்சு விரட்டுறதுக்குள்ள, பேசாம ஊரைக் காலிபண்ணிட்டுப் போய்டுங்க. அதுதான் உங்களுக்கும் நல்லது, எல்லாருக்கும் நல்லது’னு நாசூக்கா சொல்லிட்டுப் போயிருக்காங்க. இதுக்கு மேல என்ன பண்றது?’

‘அவங்க சொன்னா, நீங்க ஏன் இப்படிப் பயந்து சாவுறீங்க? இந்தக் கோழியாப்பண்ணையில அவங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்குதோ, அதே உரிமை நமக்கும் இருக்கு. இங்க இருக்கிற வாய்க்கால் வரப்பு எல்லாத்துலயும் நம்ம கால் தடமும் கைத்தடமும் பதிஞ்சி, காய்ச்சுப் போயிருக்கு. என்ன ஆனாலும் ஆகட்டும். நாம இந்த ஊரைவிட்டுப் போகக் கூடாது. மானா இருந்தாதானே ஓநாய்ங்க பிரச்னை… நாமளும் ஓநாய்ங்களா நின்னு முறைச்சி ஓங்கி ஊளையிட்டா, எந்த நாய் இந்தப் பக்கம் வரும்?’

‘ஏலே கணேசா… உனக்கு என்ன, நீ இளந்தாரி. செய்யறதைச் செஞ்சுப்புட்டு எங்கேயும் போயி ஓடி ஒளிஞ்சுடுவ. நாங்க கெழடுகட்டைகளும் பொம்பளைங்களும் குழந்தைகளுமா எங்க போய் ஒளியுறது?’

‘அதுக்காக இன்னோர் ஊரைத் தேடிப் போய், வந்தட்டியா கூனிக்குறுகி வாழச் சொல்றீங்களா? வாங்க… போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளெயின்ட் ஒண்ணு எழுதிக்குடுத்து, பாதுகாப்புக் கேப்போம்.’

‘ஆமா… வெளங்கும். உள்ளூர் போலீஸ்கார னுக்கே பாதுகாப்பு இல்லாம, லீவு கொடுத்து வெளியூருக்கு அனுப்பிட்டு, வெளியூர்க்காரனுங்களைக் கொண்டுவந்து இறக்கிருக்கானுவோ. அது மட்டும் இல்லாம வர்றவன், ‘என்ன நீங்க இன்னும் கிளம்பலையா?’னுதான் கேக்குறான். அவனாவது… பாதுகாப்புத் தர்றதாவது?!’

‘ஆமா… ஆமா. நாடுவிட்டு நாடு போனா அகதி; சொந்த ஊரைவிட்டு ஊரு போனா வந்தட்டி. நம்ம நாட்டுல அகதியைவிட வந்தட்டிதான் அதிகம். இனி கோழியாப் பண்ணைக்காரன் அத்தனை பேரும் வந்தட்டி. வேற வழி இல்லை.”

‘சரிப்பா… நீங்க சொல்ற மாதிரி ஊரைக் காலி பண்ணிட்டுப் போறோம். போய், நாம மொத்தம் பன்னிரண்டு குடும்பமும் ஒண்ணா சேர்ந்து வாழ்ற மாதிரி, ஒரு ஊரு இருக்கா… பூமி இருக்கா? சொல்லுங்க!’

‘அது எப்படி அப்படிக் கிடைக்கும்? யார் யாருக்கு எங்கங்க சொந்தக்காரன், சொக்காரன், பொண்ணு கொடுத்தவன், பொண்ணு எடுத்தவன் இருக்கானோ… அங்க போய், அவங்களை அண்டிப் பொழைச்சுக்கவேண்டியதுதான். எப்போ வாய்ப்புக் கிடைக்கோ, அப்போ வந்து இங்க கிடக்கிற அவனவன் காடுகரைய வித்துட்டுப் போகவேண்டியதுதான்.’

‘காடுகரைய விக்கணுமா… யாருக்கு விக்கணும்?’

‘வேற யாருக்கு? நம்மளை விரட்டுற ஓநாய்ங்களுக்குத்தான். அதுக்குத்தானே அடிக்காம – கொல்லாம, செல்லமா, மரியாதையா நம்மளைப் போகச் சொல்றாங்க!’

”நீங்க சொல்றதைப் பார்த்தா… இன்னையோட இந்தப் பன்னிரண்டு குடும்பத்துக்கும் கோழியாப்பண்ணைக்கும் உள்ள உறவு முடிஞ்சுருச்சா. நாம இனி ஒத்துமையா கோயில், கொடை, திருவிழானு சந்தோஷமா இருக்க முடியாதா?’

‘அதுக்கு ஒரு வழி இருக்கு. நம்ம கோயில்ல இருந்து கொஞ்சம் புடி மண்ணை அள்ளிட்டுப் போய், எந்த ஊர்ல நம்ம ஆளுங்க அதிகமா இருக்காங்களோ அங்க ஒரு கூடத்தைப் போட்டு, என்னைக்காவது ஒருநாள் எல்லாரும் ஒத்துமையா வந்து கும்பிட்டுக்க வேண்டியதுதான்.’

‘சொந்த பூமியே இல்லைன்னு போயிடுச்சு. இந்த சாமி மட்டும் எதுக்காம் உங்களுக்கு?’

‘அது எப்படிப்பா… குலசாமி இல்லாம வாழ முடியுமா? வந்தட்டியா போய் வாழலாம். வந்தட்டியா சாமி கும்பிட முடியுமா… நமக்கு நம்ம சாமி வேண்டாமா?’

‘ஆமா… ஆமா… உசுரே போனதுக்கு அப்புறம் மசுரு ரொம்ப முக்கியம்தான். மண்ணள்ளி மடியில வெச்சுக்கங்க.’

‘எப்பா… சண்டை போடுறதை நிறுத்திட்டு ஆகுற வேலையைப் போய் பாருங்க. எல்லாரும் எல்லாத்தையும் எடுத்துட்டு ராத்திரியோட ராத்திரியா கிளம்பப் பாருங்க. யாருக்கு எந்த ஊருக்குப் போகணுமோ போங்க. போய் சேர்ந்த பிறகு வர்ற தைப்பூசத்துக்கு, யார் எந்த ஊர்ல இருந்தாலும் திருச்செந்தூர் வள்ளி குகை பக்கத்துல வந்துடுங்க. அங்க பார்த்துப் பேசி யார்… யார்… எந்த ஊர்ல இருக்காங்கன்னு தெரிஞ்சுக்குவோம். அதுக்குப் பிறகு விசேஷங்களுக்குக் கூப்பிட்டு இப்படியே ஒண்ணுமண்ணுமா, தாயா பிள்ளையா சொந்தபந்தமா வாழ்ந்துக்கிடலாம்… சரியா?’

இப்படித்தான் வேறு வழி இல்லாமல் எல்லோரும் பேசி முடித்து, நெஞ்சுமுட்டி, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அழுது புரண்டு, ‘என் மகளுக்கு உன் மகன்தான் புருஷன்’, ‘என் தம்பிக்கு உன் தங்கச்சிதான் பொண்டாட்டி’ என அங்கேயே சில அவசரமான நிச்சயங்களையும் மறக்கவே முடியாத வாக்குகளையும் கொடுத்து உயிர் அற்றவர்களாக, நிலமற்றவர்களாக, புதிய வந்தட்டிகளாகக் கலைந்துபோகும் வரை பொயிலாளும் குட்டச்சியும் அந்தக் கூட்டத்துக்குள்தான் நின்றிருந்தார்கள். 70, 80 வயது தாண்டிய அக்கா – தங்கையான இந்த இரண்டு கிழவிகளும், இனி எந்த ஊருக்குப் போவார்கள், எந்த ஊரில் இவர்களுக்கு யார் இருக்கிறார்கள்… என யாருமே கேட்கவில்லை, ‘எங்ககூட வந்துடுங்க பாட்டி’ என சில குழந்தைகள் கூப்பிட்டார்கள். ‘உங்க பொறந்த ஊருக்கே போய்டுங்க பாட்டி’னு சிலர் சொன்னார்கள். ‘அதான் ரெண்டு பேருக்குமே வயசாகிருச்சே… உங்கள யார் என்ன செய்வா? பேசாம நீங்க இங்கேயே இருந்திட வேண்டியதுதானே…’ என்றும் சிலர் சொன்னார்கள். எல்லோரும் ஊர் மண்ணை அள்ளி மடியில்வைத்துக் கட்டிக்கொண்டு நடந்துபோனதைப்போல, பொயிலாளும் குட்டச்சியும் தங்கள் மடியிலும் கொஞ்சம் மண்ணை அள்ளிக் கட்டிக்கொண்டு, எதுவும் யாரிடமும் பேசாமல் தங்கள் குடிசைக்குள் வந்து முடங்கிக்கொண்டார்கள். மொத்த ஊரும் ஊர்ந்து வெளியேறும் வரை பொயிலாளும் குட்டச்சியும் குடிசைக்குள்தான் இருந்தார்கள்.

‘யாரை மாப்ள பார்த்தாலும் சரி, ஆத்துக்கு அந்தப் பக்கமா இருக்கிற மாப்ளையா பார்த்தாதான் நான் கட்டிக்குவேன்’ எனச் சொல்லி, முதன்முதலில் கோழியாப்பண்ணைக்கு வாக்கப்பட்டு, இந்தக் குடிசைக்குள் வந்து சேர்ந்தவள் குட்டச்சி கிழவிதான்.

‘அது ஏன்மா உனக்கு ஆத்துக்கு அந்தப் பக்கம் உள்ள மாப்ள கேக்குது?’

‘நான் இந்த ஆத்தத் தாண்டணும். என்னைக் கட்டிக்கிட்டுப் போறவன், ஆத்துக்கு அந்தப் பக்கமா என்னைக் கூட்டிக்கிட்டுப் போவணும். ஆத்துக்கு அந்தப் பக்கமா அவன்கூட நான் வாழணும். இந்தப் பக்கம் வாழ்ந்தது போதும்’ எனப் பிடிவாதமாக நின்று, சீனிக்கிழவனைக் கல்யாணம் செய்துகொண்டு, ஆற்றைத் தாண்டி கோழியாப்பண்ணைக்கு வந்துசேர்ந்தாள் குட்டச்சி. சீனிக்கிழவன்கூட சேர்ந்து வாழ வாழ, அவன் மேல குட்டச்சிக்கு ஆசை கூடிக்கொண்டேதான் போனதே தவிர, அவனுக்கு ஒரு பிள்ளையை மட்டும் அவளால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

‘எல்லாரும் சொல்ற மாதிரி நான் வேணும்னா மலடியா இருந்துட்டுப்போறேன். என் சீமத்துரை எதுக்கு மலடனா இருக்கணும்? விளையிற காட்டைக் கொடுத்தா ஊருக்கே விதைச்சுப் போடுவானே என் ராசா’ என்றுதான் சீனிக் கிழவனுக்கு இன்னொரு மனைவியாக, தன் தங்கச்சி பொயிலாளையும் ஆற்றைக் கடந்துபோய் கட்டிக்கொண்டு வந்தாள் குட்டச்சி. ஆனால், ஆற்றுக்கு இந்தப் பக்கம் வந்த பொயிலாளின் நிலத்திலும் புல் பூண்டுகூட முளைக்கவில்லை. ஒரு குடிசை, ஒரு சோற்றுப்பானை, ஒரு கோரப்பாய் என முக்கி, முடங்கி மூன்று பேரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்துபார்த்தாலும் அழுதுபார்த்தாலும், அங்கே செடி ஒன்று முட்டி முளைப்பதற்கான வழியே இல்லாமல்போனதன் வருத்தமும் வலியும், சீனிக்கிழவனைச் சீக்கிரமாகவே அடித்து வீழ்த்தி, குடிசைக்குள் கொண்டுபோட்டுவிட்டன. சுருட்டுக் குடித்துக்கொண்டும் இழுத்து இழுத்து இருமிக்கொண்டும் குடிசைக்குள் குட்டச்சியையும் பொயிலாளையும் மட்டும் ஆட்சி செய்யும் ஒரு தோல்வியுற்ற அரசனைப்போல வீழ்ந்துகிடந்த சீனிக்கிழவன், இறந்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டன. அன்றில் இருந்து பிள்ளை இல்லாமல், பேரன் இல்லாமல் ‘உனக்கு நான்… எனக்கு நீ… நமக்கு இந்த ஊர்’ என குட்டச்சியும் பொயிலாளும் பேசிப் பேசிச் சிரிக்க, ஆற்றுக்கு அந்தப் பக்கம் இரண்டு பேரும் சேர்ந்து விளையாடிய கதை இருக்கிறது; அழுது அழுது துடிக்க ஆற்றுக்கு இந்தப் பக்கம் வந்து, இரண்டு பேரும் சேர்ந்த கதை இருக்கிறது… குடிசைக்குள் வாழப் பழகிக்கொண்டதில் இருந்து அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

‘போறவங்க போகட்டும். நாம எதுக்கு இந்த ஊரைவிட்டுப் போகணும்? என்ன ஆனாலும் சரி… நாம இங்கேயே இருப்போம். ரெண்டு கிழவிங்களை வந்து யார் என்ன செய்றாங்கன்னு பார்ப்போம்?’- குட்டச்சி இதே வார்த்தைகளைத்தான் ஊர் எல்லாம் கிளம்பத் தொடங்கியதில் இருந்து சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் பொயிலாள்தான், அதை ஏற்றுக்கொள்ள முடியாமலும், என்ன செய்வது எனத் தெரியாமலும் தவித்துக்கொண்டிருந்தாள்.

‘எல்லாரும் போய்ட்டாங்கன்னா நாம ரெண்டு பேரும் மட்டும் எப்படி இங்க இருக்க முடியும்?’

‘ஏன்… இந்தக் குடிசைக்குள்ள நாம ரெண்டு பேரும் மட்டும்தானே இருக்கோம்? அவங்க போனதுக்கு அப்புறம், இந்த ஊரே நம்ம குடிசைன்னு நினைச்சு இருந்துக்குவோம்… என்ன?’

‘அதெல்லாம் சரிதான். ஆனா, சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’

‘அதுக்கு என்ன… இவ்வளவு பெரிய ஆறு ஓடுது. போய் தண்ணி அள்ளிக் குடிச்சுக்கிடலாம். தோட்டத்துல செடி-கொடிகள் கிடக்கு. அவிச்சித் தின்னுக்கிடவேண்டியதுதானே.’

‘எல்லாம் சரிதான். செத்துப்போனா தூக்கிப்போட ஆள் இல்லாம, நாய் கடிச்சுத் திங்குற மாதிரி சாகணுமா என்ன? நம்ம பொறந்த ஊர்னு ஒண்ணு ஆத்துக்கு அந்தப் பக்கம் இருக்குதானே? அங்க போய் வாழ்ந்தா யார் என்ன செய்வா?’

‘எந்த ஊருக்குப் போகச் சொல்ற? கையில பிள்ளை இல்லாம மலடியா அங்க போகக் கூடாதுன்னுதான் உன்னைக் கட்டி, கூட்டிட்டு வந்தேன். இப்போ நீயும் ஒண்ணும் இல்லாம நானும் ஒண்ணும் இல்லாம, கையை வீசிக்கிட்டு கடைசியா சாகிறதுக்கு மட்டும்தான் வந்தோம்னு அங்க போனா, நம்ம கிழவனை ‘ஆம்பள’னு எவன் மதிப்பான் சொல்லு? ஆனது ஆகிப்போச்சு… என்ன ஆனாலும் அவன் ராசா, நாம ராணி மாதிரிதான் வாழ்ந்தோம்; ராணி மாதிரிதான் சாகணும். அவனை அசிங்கப்படுத்த அந்த ஊருக்கு நான் வரலை. நீ வேணும்னா போ.’

‘நீ இல்லாம அங்க போய் நான் எதுக்கு வாழணும்? என்ன ஆனாலும் சரி… இங்கேயே எல்லாம் ஆகட்டும்.’

ஒரு சுடுகாட்டைப்போல, நாய்கள் இல்லாமல் ஆந்தைகள் மட்டும் அலறக்கூடியதாக மாறிப்போய்விட்ட கோழியாப்பண்ணை கோடித்தெருவின் குடிசைக்குள்ளாகவே, ஒற்றை விளக்கு ஒன்றை எரியவிட்டபடி குட்டச்சியும் பொயிலாளும் கண்களைச் சிக்கென மூடிக்கொண்டு கிடந்தார்கள். எந்தச் சத்தமும் கேட்காத அந்த இரவு, அவர்களுக்கு அச்சப்பட்ட இரவாகத்தான் இருந்தது. அப்போதைக்கு ஒரு நாய் எங்கிருந்தாவது குரைத்தால்கூட அவர்களுக்குப் போதும் என இருந்தது. அவர்கள் நினைத்ததைப்போல ஒருவருக்கு ஒருவர் வேண்டிக்கொண்டதைப்போலவே எங்கிருந்தோ ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. தூரமாகக் கேட்ட நாய் சத்தம், திடீரென அவர்கள் வீட்டு வாசலில் வந்து கேட்பதைப்போல இருக்க, குட்டச்சிதான் ஓடிப்போய் முதலில் கதவைத் திறந்தாள். திறந்தவளுக்கு எத்தனை பேர் வாசலில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை யூகிக்க முடியவில்லை. ஆனால், அங்கு அவர்களோடு மூன்று நாய்கள் நிற்கின்றன என்பதையும், அதில் ஒரு வெள்ளை நாய் குரைத்துக்கொண்டே இருக்கிறது என்பதை மட்டும் குட்டச்சி சரியாக யூகித்துக்கொண்டாள்.

‘என்ன கிழவி… ஊரே பயந்து காலி பண்ணிட்டுப் போய்டுச்சு. உங்களுக்கு மட்டும் என்னவாம் போறதுக்கு?’

கேட்கக் கூடாத சத்தத்தைக் கேட்டவுடன், பொயிலாளும் எழுந்து வாசலுக்கு ஓடிவந்தாள். குட்டச்சி பதில் சொல்வற்கு முன்பாகவே அவளைத் தடுத்து பொயிலாள்தான் பதில் சொன்னாள்…

‘நாங்க ரெண்டு பேரும் நாளைக்குச் சாகப்போற கிழவிங்கப்பா. நாங்க எங்க போவோம்? எங்களுக்குன்னு பிள்ளையா… குட்டியா… யாரு இருக்கா?’

‘அதுக்கு… இங்கேயே இருப்பீங்களா? அது முடியாது. இனி கோழியாப்பண்ணையில கோடித்தெருவும் இருக்கக் கூடாது; கோடிக் குடிசையும் இருக்கக் கூடாது. கிளம்புங்க ரெண்டு பேரும்.’

”எங்க ரெண்டு பேரால யாருக்கு என்ன பிரச்னைப்பா வரப்போகுது… நாங்க உங்களுக்கு என்ன தொந்தரவு தரப்போறோம்? எங்களை மட்டுமாவது விட்டுருங்களேன்.’

‘ஓகோ… நாங்க இவ்வளவு சொல்றோம். கிழவிங்களை என்ன செய்வானுவ… செய்யட்டுமே பார்க்கலாம்னுதானே உங்களை இங்க விட்டுட்டுப் போயிருக்கானுவ? எங்களுக்கு நீங்க கிழவிங்கன்னு தெரியும். ஆனா, எங்களோட வந்திருக்கிற நாய்களுக்குத் தெரியாது. வம்பா நாய் கடிச்சிச் சாவப் போறீங்களா? என்ன பண்ணுவீங்களோ… எங்க போவீங்களோ தெரியாது. நாளைக்கு யாரும் இங்க இருக்கக் கூடாது. ஆத்தைத் தாண்டி அந்தப் பக்கம் போய் வாழுங்க. இல்ல… சாவூங்க. சரியா?’

அவ்வளவுதான்… அப்படியே மேலே உள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் மிகச் சரியாக ஒரு துணுக்கு இரக்கம் இல்லாமல் அரக்கத்தன்மையோடு, அவர்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். அதற்குப் பிறகுதான், அந்த நாய்களுக்குப் பயந்துதான், குட்டச்சியும் பொயிலாளும் கோழியாப்பண்ணையைவிட்டே போக முடிவுசெய்தார்கள். எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு, குளிக்கப்போன மூத்தக் கிழவி குட்டச்சியைத் தேடி பொயிலாள் சாவடிக்கு வந்து நிற்கிறாள்.

குளித்துவிட்டு வந்த குட்டச்சி, சேலையில் வாய்க்காலையே அள்ளிக்கொண்டு வந்ததைப்போல நீர் சொட்டச் சொட்ட வந்து சேர்ந்தாள். பொயிலாள் நினைத்ததைப்போல வெயில் உச்சி ஏறி, நரியைப் போல ஊளையிடத் தொடங்கியிருந்தது. இனியும் தாமதிக்க முடியாது என இருவரும் ஆளுக்கு ஒரு சாக்கு மூட்டையைத் தூக்கிக்கொண்டு, ஆற்றைப் பார்த்து நடந்தார்கள். எங்கே போவது, எந்த ஊருக்குப் போய்ச் சேர்வது என அவர்கள் இன்னமும் முடிவுசெய்யவில்லை. கண்களை மூடிக்கொண்டு, முத்துமாலையம்மனை நினைத்துக்கொண்டு தீ மிதிப்பதைப்போல, தீச்சூட்டில் ஆற்றுமணலில் இறங்கி, தெற்கு நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். சூடு பொறுக்காமல் காலைத் தூக்கி, நொண்டி ஆடுவதைப்போல நடந்த பொயிலாள் கேட்டாள்…

‘இப்பயாவது சொல்லுக்கா… எந்த ஊருக்கு போறோம்? என்ன ஆனாலும் சரின்னு நம்ம ஊருக்கே போய்டுவோமா? செத்தா தூக்கியாவது புதைப்பானுங்க.’

‘வேண்டாம்… நம்மளைப் புதைச்சு, எப்பவோ புதைச்ச நம்ம கிழவனைத் தோண்டி எடுத்து, ஒண்ணும் இல்லாத கிழவன்னு அவமானப்படுத்திடுவானுங்க. ஆத்தைத் தாண்டிப் போவோம்; நடப்போம். எந்த ஊர்ல கூப்பிட்டுக் குடிக்கத் தண்ணி தர்றாங்களோ, அந்த ஊர்லயே ஒரு நிழல்ல படுத்துருவோம்… சரியா?’

பொயிலாளுக்கும் அதுதான் சரி எனப் பட்டது. இருவரும் வேக வேகமாக நடந்து, ஆற்றுக்கு வந்து சேர்ந்தார்கள். நிமிர்ந்து ஆற்றைப் பார்த்தார்கள். எல்லோரும் கிளம்பி எங்கெங்கோ போவதைப்போல, மொத்தமாக முழுவதையும் அள்ளிக்கொண்டுபோய் கடலில் சேர்ந்துவிட வேண்டும் என்பதைப்போல தாமிரபரணி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. வேகவேகமாகச் சுமையை இறக்கிவிட்டு, ஆற்றில் இறங்கி தண்ணீரை அள்ளிக் குடித்தார்கள்; மூச்சு வாங்கியபடி, கரையிலே உட்கார்ந்தார்கள்; திரும்பிப் பார்த்தார்கள். கிழவிகள் இருவரும் நடந்து வந்த ஆற்று மணல் பாதச் சுவடுகளின் வழியே கோழியாப்பண்ணை தெரிந்தும் தெரியாமலும் மறைந்துபோயிருந்தது. நேரம் ஆக ஆக வேறு வழி இல்லாமல் குட்டச்சிதான் முதலில் கேட்டாள்…

‘இப்போ என்ன பண்றது, ஆத்துல இவ்வளவு தண்ணி போகுதே. இறங்குனா போக முடியாது வரவும் முடியாதே… என்ன பண்றது?’

‘நீதானே சொன்ன… ‘ஆத்தைக் கடந்து போவோம். அது எங்க கொண்டுபோவுதோ அங்க போவோம்’னு. அப்புறம் என்ன? வா இறங்கு. வாழ வழி இல்லாதவங்களை இந்த ஆறு எங்கே கொண்டுபோய் எப்படிச் சேர்க்குதுனு பார்க்கலாம் வா’ என பொயிலாள், தன் சுமையை தலையில் தூக்கிவைத்தபடி நடக்கத் தொடங்க, குட்டச்சியும் தன் சுமையோடு, பொயிலாளின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு இறங்கினாள். நதிக்குள் போகிறோமா, இல்லை அக்கரைக்குப் போவோமா, இல்லை கடலுக்குள் போகப்போகிறோமா… என எதுவும் தெரியாமல், எங்கோ நிச்சயம் போகிறோம் என இறுமாப்புடன் வந்து இறங்கிய கிழவிகளின் மடியையும், அதில் இருந்த கோழியாப்பண்ணை மண்ணையும் முதலில் நனைத்துக் கரைத்தது தாமிரபரணி. பிறகு கொஞ்சம் மெள்ள உயர்ந்து, குழந்தை ஒன்று பிறந்து வந்து, கடிக்காமலே கருகி சுருங்கிப்போன, அந்தக் கிழவிகளின் மார்புகளை நனைத்துக் குளிரச்செய்து இன்னும் மேலெழுந்த அந்தப் பொருநை நதி, அழுதுதோய்ந்த அந்தக் கிழவிகளின் கண்களைத் தொட்டுத்தடவி, ஒரே மூச்சில் அவர்களின் உச்சந்தலையையும் முழு நதியாக முத்தமிட்டு, அடுத்த நொடியே அவர்களைத் தன்னோடு சேர்த்துக்கொண்டது என்றும் சொல்லலாம்; இல்லை… இரக்கம் இல்லாமல் விழுங்கிக்கொண்டது என்றும் சொல்லலாம்!

– செப்டம்பர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *