கோட்சேக்கு நன்றி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 10, 2021
பார்வையிட்டோர்: 5,326 
 
 

திடீரென்று விழிப்பு.

விழிப்பா? ஆழ்ந்து உறங்கினால் தானே விழிப்பு? ஒரு கணம் கனவு, அடுத்த கணம் விழிப்பு… எது கனவு, எது விழிப்பு என்று பிரித்தறிய முடியாதபடி ஒரு குழப்பம். சொப்பணாவஸ்தை. எது பாம்பு, எது பழுதை?

சங்கரரும் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டிருப்பாரோ? வள்ளுவர் நன்றாக உறங்கியிருக்கக் கூடும். கண் விழித்தால் வாழ்க்கை, தூங்கினால் சாக்காடு.

மணி நாலரை.

விளக்கைப் போட்டேன். அவள் இருந்திருந்தால் சொல்லி யிருப்பாள் ‘ரத்திரிப் பேய்தான் நீங்க!’ ‘இது ராத்திரியில்லே, மைடியர். ரிஷிகள் ஜெப நேரம். நான் ஜெபம் செய்யப் போகலே, ‘வாக்கிங்’ போறேன்…’ ‘கதவைப் பூட்டிண்டு போங்க, இந்திரன் வந்துடப் போறான்.’

அவள் இன்று இல்லை. ஆனால் என் மனசுக்குள் உரையாடல் நிகழ்கிறது.

விளக்கைப் போட்டதும் ஒரு நிழல் தோன்றி மறைகிறது.

என்னை விடாமல் தொடரும் நிழல். வெளிச்சத்தைக் கண்டால் பயம்.

வயது ஆக ஆக நிழல் நெருங்குகிறது. நான் செய்வதை யெல்லாம் கண்காணிக்கிறது. என்னை அவசரப்படுத்திக் கொண்டிருப்பது போல் ஒரு தவிர்க்க முடியாத உணர்வு. இ சம்போகத்தில், சாதனையில், ஆனந்தக் கணத்தின் உச்சிப் பொழுதில், நிழல், நிஜத்தில் ஒடுக்கம். ஒரு நாளில் ஒரேயொரு உச்சிப் பொழுதுதான்!

காலையில் நான் நிழலை விரட்டுகிறேன். மாலையில் அது என்னை விரட்டுகிறது. இருட்டில் எது நிழல், எது நிஜம்?

குளியலறை. விளக்கு எரிகிறது. கரப்பான் பூச்சிகளின் சாம்ராஜ்யம். லட்சக்கணக்கான கரப்பான் பூச்சிகளில் மத்தியில் ஒரு பெண். இது சாதனை என்று அறிவிக்கிறது ஒரு செய்தி.

இதுவா சாதனை?

இன்றைய மனிதர்களிடையே நான் வசித்துக் கொண்டிருக்கின்றேனே, இதைவிட என்ன சாதனை வேண்டும்?

கொலை, கொள்ளை, குண்டு வீச்சு, சிசுவதை, கற்பழிப்பு, அதுவும் எட்டு வயது மகள்களையே அப்பன்மார்கள் கற்பழித்து கொல்லும் பாரதப் பண்பாட்டின் சிகரம்.

அரசியல் எதிரி மேல் பழியை போட இதைச் சுலபமாகச் செய்ய முடிகின்றது.

எதிர்க்கட்சிக்காரர்களுக்கு, இது ஒரு தேர்தல் கோஷம். அவர்கள் கட்சியின் அதிகபட்ச தேர்தல் வாக்குறுதி, ‘நாங்கள் எங்கள் மகள்களைக் கற்பழிக்க மாட்டோம்! சமூக நீதி இதுதான். இதைக் காக்க, வீராங்கனைகளும் வீரக் காளையரும்.’

– பல்லை விளக்கிவிட்டு வெளியே வருகிறேன். ‘வாக்கிங்’ போக வேண்டும்.

போன மாதத்திலிருந்து ஒரு புதிய பழக்கம். போகுமிடத்தில் வழியில் ஒரு ஹோட்டல் புதிதாக வந்திருக்கிறது.

ஐந்து மணிக்கே காப்பி கிடைக்கும். அருமையான காப்பி.

உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் போது, ட்யூப் வெளிச்சத்தில் உயிர் பெற்றெழும் அந்த ஹோட்டலில், நெற்றியில் திருநீறு துலங்க, பளிச்சென்ற முகத்துடன், உடையுடன், ‘காப்பியா அண்ணா?’ என்று ஒருவர் கேட்கும் போது, காலம் ஸ்தம்பித்து நிற்கிறது.

காலெண்டர் பின்னோக்கிக் கிழிந்து, நாற்பது நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால், கும்பகோணம் அம்பி ஐயர் ஹோட்டலில் நிற்பது போல் ஒரு பிரமை.

இன்னொரு விஷயம். முதல் முதல் அங்கு சென்றபோது, காப்பி கௌன்டரிலிருந்தவரிடம் – ஐம்பது வயதிருக்கும் – ‘சர்க்கரை கம்மி ஸ்ட்ராங் காப்பி’ என்றேன். அடுத்தநாள் நான் போனவுடன் என் வரவை தலையசைப்பினால் அங்கீகரித்து புன்னகையுடன், சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங் காப்பி’ என்றார்.

மனம் நிறைகிறது.

என் முகம் அவருக்குத் தெரிகிறது.

எனக்கு ஓர் அடையாளத்தை அவர் வழங்கி விட்டார்.

என் ‘ஈகோ’வுக்கு சீராட்டு. அதற்கு அடுத்த நாள், என்னைக் கண்டவுடனேயே அவர் தலையசைப்பு அங்கீகாரம், பேசவில்லை . எனக்கு என்ன வேண்டுமென்று அவருக்குத் தெரியும்.

அவரை ஒரு நாள் காணவில்லை. ஓர் இளைஞன் அவரிடத்தில். என் மனத்தில் இனம் தெரியாத ஓர் சங்கட உணர்வு. அவனிடம் நான் சொல்லியாக வேண்டும்… சர்க்கரை கம்மி, ஸ்ட்ராங் காப்பி!’

சொன்னேன், அவன் என்னை கவனித்ததாகத் தெரியவில்லை. அவன் பார்வை வாசலை நோக்கி. திரும்பினேன். ஓர் இளம் பெண் ‘ஜாகிங்’ உடையில்.

மறுபடியும் சொல்ல வேண்டுமா?

சொன்னேன்.

‘என்ன சார்?’

மூன்றாம் தடவை.

கலந்த காப்பியை கீழே வைத்து விட்டு, முகத்தில் சிறிது எரிச்சலுடன் புதிதாகக் கலந்தான்.

அவன் எரிச்சலுக்கு நான் காரணமாக இருந்தேன் என்பது என் மன அமைதியை சற்று குலைத்தது; அன்று காப்பி ருசிக்கவில்லை.

நான் அன்று முகமற்ற, அடையாளமற்ற ஓர் ஆள். என் ‘ஈகோ’ சிணுங்கியது.

ஆகவே தினந்தோறும் நான் ‘வாக்கிங்’ போகும்போது என் பிரார்த்தனை… ‘வழக்கமானவர் இருக்கவேண்டும். அவருக்கு நோய் நொடி எதுவும் வந்துவிடக்கூடாது.’

‘வாக்கிங்’ போவதினால், காப்பி, குடிக்கின்றேனா, காப்பி குடிப்பதற்காக ‘வாக்கிங்’ போகின்றேனா? வாழ்வதற்காகச் சம்பாதிக்கின்றோமா, சம்பாதிப்பதற்காக வாழ்கின்றோமா?

சிக்கல்.

அவளிருந்திருந்தால் இந்தச்சிக்கலே இருந்திருக்காது. ‘வாக்கிங்’ போய்விட்டு வரும்போது அவள் கொடுக்கும் காப்பி அமிர்தம்.

‘கலை கலைக்காக’… ‘வாக்கிங் வாக்கிங்காக’ ‘காப்பி காப்பிக்காக’.

டி.டி.கே ரோடில் நடைபாதையில் இரண்டு, மூன்று பசு மாடுகள், கண்களை மூடியவாறு அசை போட்டுக் கொண்டிருந்தன. தத்துவ ஞானிகள் போல் தெரிந்தது.

திடீரென்று ஒரு நாய் எங்கு முளைத்தது. தோல் உடம்பி லிருந்ததா என்பது சந்தேகம். எலும்புக்கூடு. உயிர் பழக்க வாசனையினால் ஒட்டிக் கொண்டிருந்தது.

குரைத்தது. அநுபவ பாக்கியதை விசுவாசம். அந்த இடம் அதற்கும் சொந்தமாக இருக்க வேண்டும். ஆக்ரமிப்பைக் கண்டு ஆக்ரோஷம். சரீரத்துக்குச் சம்பந்தப்படாத சாரீரம். –

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் ஓர் ஒற்றுமை. ஒரு நாய் குரைத்தால், அநுதாபக் குரல் கொடுக்கப் பல நாய்கள். ஒரு கூட்டத்தில் ஒரு மனிதன் கோஷம் எழுப்பினால், இதைத் தொடர்ந்து எத்தனை கோஷங்கள்! நடைபாதை முழுவதும் நாய்களும், மாடுகளும். நான் என் நடைபாதையில் நடக்கும் உரிமையை தியாகம் செய்து விட்டு, நடுத்தெருவுக்கு வந்தேன்.

இந்தியச் சுற்றுலாத் துறையினருக்கு ஒரு யோசனை. அவர்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களுக்குக் கொடுக்கும் கையேட்டில் இதையும் குறிப்பிடவேண்டும். ‘இந்திய மாநகர்களில் நடைபாதை உரிமை சிறுசிறு கடைகளுக்கும், நாய், பசு, பன்றி போன்ற விலங்கின பெருமக்களுக்கும் தான். சில சமயங்களில் வாகனங்களும் உரிமை கொண்டாடக்கூடும். மனிதர்கள் கண்டிப்பாய் நடு வீதியில்தான் நடக்க வேண்டும்.’

பல ஆண்டுகளுக்கு முன்னால் தில்லியில் நடந்த நிகழ்ச்சி. சாந்தினி சௌக், செங்கோட்டைக்கெதிரே தெரு சந்திப்பு.

ஒரு கம்பீரமான பசுமாடு அச்சந்திப்பின் நடு மத்தியில் நின்று கொண்டு, உலகத்தை ‘சர்வே’ செய்வதுபோல் பார்த்துக் கொண்டு நின்றது. அது பிரும்மாண்டமான மாடு. மாட்சிமை மிக்க தோற்றம்.

ஒரு வயதான ‘ட்ராஃபிக்’ போலீஸ்காரர் அதைப் பார்த்துக் கொண்டே நின்றார்.

போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.

ஒருவர் காரினின்றும் இறங்கி வந்து போலீஸ்காரரிடம் சத்தம் போட்டார்! ‘மாட்டை விரட்டுங்களேன்!’

‘முடியாது.’

‘ஏன் முடியாது?’

‘நான் முஸ்லீம்.’

‘மாட்டுக்குத் தெரியுமா?’

“இங்கே இருக்கிறவர்களுக்குத் தெரியும்.’

ஒரு வயதான ஹிந்துப் பெண்மணி, அந்த மாண்புமிகு மாட்டை தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு சென்றாள்.

ஐரோப்பிய மொழிகளில் பலவற்றில் ‘புனிதப் பசு’ என்ற சொல் வழக்கு இருக்கிறது. இந்தியக் கலாச்சாரத்தின் நன்கொடை.

‘தி புக் ஆஃப் நாலெட்ஜ்’ என்ற பத்துத் தொகுதி புத்தகம் வெளிநாட்டுப் பிரசுரம். இந்தியாவுக்கு வரும் புத்தகங்களில், ‘இந்தியா’ வைப் பற்றிய கட்டுரையில் ஒரு பக்கத்தில் மையிட்டு அழித்திருப்பது தெரியும். அப்பக்கத்தில் ஒரு புகைப்படம். மாநகர் வீதியில் மக்களுக்கு தரிசனம் தரும் கோமாதா.

நாம் இது தினம் தெருக்களில் காணும் காட்சி. நாம் பார்க்கக் கூடாதென்பதற்காக ஏன் மையிட்டு அழிக்க வேண்டுமென்று எனக்குப் புரியவில்லை . வெளிநாட்டு பதிப்புகளில் மாட்டின் தோற்றப்பொலிவு மாசுறா வண்ணம் இருக்கிறது. இந்தப் படத்துக்கு ஆட்சேபணை இருந்தால் அரசாங்கம் புத்தகத்தை தடை செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், நம் கண்ணில் கறுப்புக் கண்ணாடி போடுகிறது.

வேஷதாரித்தனம்.

– டி.டி.கே. ரோட், ராதாகிருஷ்ணன் சாலையைச் சந்திக்கு மிடத்தில் அவரைப் பார்க்கிறேன்.

அவர் கதீட்ரல் ரோடிலிருந்து ஓடி வருகிறார். அவர் வீடு நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது. வீட்டிலிருந்து ஓடி வருகிறார். காந்தி சிலை வரை ஓடுகிறார். ஓரிரண்டு நிமிஷங்கள் காந்தி தரிசனம். மறுபடியும் ஓட்டம், அண்ணா சதுக்கம் வரை.

‘ஹல்லோ சார்…’

நிற்கவில்லை, சொல்லிக் கொண்டே ஓடுகிறார். அவர் பெயர்… மைகாட்? மறந்து போய் விட்டது. அவர் பெயரை, எதனுடனோ சம்பந்தப்படுத்தி நான் ரஸித்தது என் ஞாபகத்துக்கு வருகிறது.

நினைத்துப் பார்க்கிறேன். மூளை பிடிவாதமாக ஒத்துழைக்க மறுக்கிறது.

‘A’ விலிருந்து தொடங்கி ஒவ்வொரு எழுத்தாய், நினைத்துப் பார்க்கிறேன். ‘அகிலாண்டம், அனந்த பத்மநாபன்.’

‘B’ ‘பூபதி’

‘C’ ‘குமாரஸ்வாமி’ (ஸ்ரீலங்கா ‘ஸ்பெல்லிங்)

…..

…..

‘N’… மைகாட் எஸ்.. அவர் பெயர் நடராஜன். ஏன் ஆடாமல், ஓடுகிறார் என்று எண்ணியது நினைவுக்கு வருகிறது. இதுதான் சம்பந்தம்.

சுவாரஸ்யமான மனிதர், அவரே தம்மை அன்று அறிமுகப் படுத்திக் கொண்டார்.

துபாய் பணக்காரர். ஓடி ஓடி சம்பாதித்தது போதுமென்று தீர்மானித்த, ஓட்டமே குறிக்கோளாக இப்பொழுது ஓடுகிறார்.

துபாயில் எட்டாண்டு வாசம்.

இந்த எட்டாண்டுகளைத் தவிர, மற்றபடி பத்து வயதிலிருந்து அவர் ஓடுவதாகச் சொன்னார். அவர் வாழ்க்கையில் இதுவரை 2 லட்சம் மைல் ஓடியிருப்பதாகச் சொன்னார். கணக்கு வைத்திருக்கிறாராம்.

ஒரு மணிக்கு ஒருவன் ஐந்து மைல் ஓட முடியுமென்றால், அவர் இதுவரை வாழ்க்கையில் இருபது வருஷங்கள் ஓடியே கழித்திருக்கிறார். இதுவும் அவர் சொன்ன கணக்கு.

‘இந்த இருபது வருஷங்கள் சேமிப்பு நிதி. எமனின் வரவை இருபது வருஷங்கள் ஒத்திப் போடும் யுக்தி’ என்று சொல்லிவிட்டு அவர் புன்னகை செய்தார்.

‘எதற்காக ஒத்திப் போட வேண்டும்?’

‘பிறந்தது சாவதற்கா?’

‘ஒத்தித்தானே போட முடியும்?’

அவர் முகத்தில் சிறிது சலனம்…. “யு ஆர் இன்காரிஜிபில்” என்றார் தீர்மானமான முடிவுடன்.

நீடித்து வைக்கும் இந்த இருபதாண்டுகளில் அவர் என்ன செய்வார்?

ஓடுவார்! வேலி குறுக்கிடும் வரை.

– ‘பிரிஸிடென்ட்’ ஹோட்டல் வாசலில் ஒருவன் காலைக் கடனை முடிக்கும் நிலையில் நின்று கொண்டிருந்தான்.

“மணி என்ன சார்?” நேற்றிரவு உட்கொண்டதன் எச்ச ‘நறுமணம்’.

‘அஞ்சு ‘.

‘என்ன சார், இம்மாங் காலையிலே ‘வாக்கிங்’ போய்க்கிணு? அதெல்லாம் நம்மாலே முடியாது. பேஜாரு புடிச்ச வேலை. அவன் ‘பாண்ட்’ ஜிப்பை இழுத்து விட்டுக் கொண்டான்.

அவனை ‘வாக்கிங்’ போகும்படி நான் வற்புறுத்தவில்லை என்று சொல்லலாமா? அவன் என்னிடமிருந்து பதிலை எதிர் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது.

ஓரமாக நிறுத்தி வைத்திருந்த சைக்கிள் ரிக்ஷாவில் படுத்துக் கொண்டுவிட்டான்.

அவன் சந்தோஷமாக இல்லை என்று சொல்ல முடியுமா?

எது சந்தோஷம்?

வானமே கூரையாய், பூமியே ‘டாய்லெட்’ டாக அவனுக்கு இப்பொழுது இருக்கிறது. எது சந்தோஷம் என்பது பற்றி அவன் ஆராயக் கூடியவனாகவும் தோன்றவில்லை. வாழ்க்கையில் அவன் எதையும் எதிர்பார்ப்பவனாகத் தோன்றவில்லை.

எதிர்பார்த்தால்தானே கிடைத்தால் சந்தோஷம், கிடைக்கா விட்டால் ஏமாற்றம் என்றெல்லாம்?

எதனையும் எதிர்பார்க்காத பற்றற்ற நிலையில் ரிஷாவே பிரபஞ்சமாக, பிரபஞ்சமே ரிஷாவாக, இவனால் ‘ஒருமையுள் ஆமை போல்’ தன்னை எப்படி ஒடுக்கிக் கொள்ள முடிகிறது! எவ்வளவு பெரிய தத்துவஞானி! சுதந்திரம் கிடைத்த இந்த 48 வருஷங்களில் பதவிக்கு வந்த வெவ்வேறு அரசியல் கட்சிகள், தொடர்ந்து இப்படிப்பட்ட எத்தனை தத்துவ ஞானிகளை உருவாக்கி வருகின்றன! |

‘ஏழைக் குடும்பத்தில் நீ இந்தியாவில் பிறக்க நேர்ந்தால், ஒன்று எதனையும் எதிர்பார்க்காதே அல்லது உன் பேட்டை ரவுடியிடம் அடியாளாகச் சேர்ந்துவிடு. அதிர்ஷ்டமிருந்தால், முதலமைச்சராகக் கூட ஆகிவிடலாம். ‘தமிழ்நாட்டில் வேறு சில தகுதிகளும் தேவைப்படுகின்றன. சினிமாவில் நாலைந்து படங்களிலாவது தலையைக் காட்டியிருக்க வேண்டும். கையூட்டு என்பதை அருங்கலையாகவே பயின்றிருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு எம்.எல்.ஏ. ஆகலாம்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணவிரும்புகின்றவர்கள், ஏழைகள் எப்பொழுதும் ஏழைகளாக இருந்து சிரித்தால்தான் கடவுள்

தரிசனம் நிரந்தரமாகக் கிட்டுமென்ற பக்திப் பரவசத்திலிருப்பார்கள் போலிருக்கிறது.

ஏழைக்கு வசதி ஏற்பட்டு பணக்காரனாகிச் சிரித்தால் இறைவன் காணாமல் போய்விடக் கூடிய சாத்தியக் கூறுமுண்டு! இறைவனும் ஏழைகள் ஏழைகளாய் இருப்பதைத்தான் விரும்புவான் போலிருக்கிறது.

தன்னையும் அவர்களிடத்தில் அடையாளம் காண்பது அவனுக்குப் பெருமை சேர்க்கின்றது.

‘தரித்திர நாராயணன்’

பாலம் வந்துவிட்டது.

வராக நாராயணர்கள் கவலையின்றி திரிகின்றார்கள்.

மூக்கை மூடிக் கொண்டேன்.

அதோ, வரிசையாக தரித்திர நாராயணர்களின் ‘மாளிகைகள்’.

‘ஏழைகள் மண்ணை ஆள்வார்கள்’ என்கிறது பைபிள். மண்ணை ஆண்டுகொண்டிருந்தனர் வரிசையாக, கையே தலையணையாக.

எனக்கு ஏன் இன்னும் மரத்துப் போகவில்லை ? இதுதான் என் துயரம்.

அதோ… காந்தி இந்த இடத்தைவிட்டு ஓடிவிடப் பார்க்கிறார் போலிருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புறப்பட்டுச் சென்று விடலாம் போன்ற ஆயத்தம்.

போலிஷ் ஜோக்.

கார்ல் மார்க்ஸ், போலீஷ் கம்யூனிஸ்ட் அதிபர் யெருஸெல்ஸ்கியிடம் சொன்னாராம், ‘என்னை ஒரு நிமிஷம் உங்கள் டி.வி.யில் பேச அனுமதியுங்கள்’,

அனுமதித்தார்.

காரல் மார்க்ஸ் சொன்னார், ‘உலகத் தொழிலாளர்களே, என்னை மன்னித்துவிடுங்கள்’.

அதே போல் காந்திஜி இந்தியத் தொலைக் காட்சியில் பேச அனுமதிக்கப்பட்டால் என்ன பேசக்கூடும்…?

‘கோட்சேக்கு நன்றி…!’

நிமிர்ந்து நோக்கினேன். அமோதித்து, காந்திஜி புன்னகை செய்வது போலிருந்தது.

(‘கணையாழி’ ஆக. ’95).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *