கோடுகளும் கோலங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 1,682 
 
 

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம்13-15

அத்தியாயம்-10

“மாடு கட்டிப் போரடிச்சா மாளாதுன்னா” சொல்லி, “டிராக்டர்கட்டிப் போரடிக்கும் அழகான கரும்பாக்கம்…”

கன்னியப்பனுக்கு ஒரே சந்தோசம். ஏதேதோ சினிமாப் பாட்டுக்கள். அவன் குரலில் மீறி வருகின்றன.

எப்போதும் வரும் முத்தய்யா, வேல்ச்சாமி, கன்னியப்பனின் ஆயா என்று பெண்கள்…

சாவடியை அடுத்த முற்றம் போல் பரந்த மேட்டில் கதிர்களைப் பரப்பிப் போடுகிறார்கள். பண்ணை வீட்டு டிராக்டர் பத்து ரவுண்டு வந்தால் போதும். நெல்மணிகள் கலகலக்கும். அப்பா வந்திருக்கிறார். சரோ படிப்புக்குப் போய்விட்டாள். சரவணன் டிராக்டரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். ரங்கன் எப்போதுமே களத்து மேட்டுக்கு வந்ததில்லை. அம்மாவும் கூட அதிசயமாகச் சாவடிப் பக்கம் நெல் துாற்ற முறத்துடன் வந்திருக்கிறாள். அம்முவும் நெல் தூற்றுகிறாள்.

எவ்வளவு மூட்டை காணுமோ?

வங்கிக் கடனை அடைத்து, தோடு ஜிமிக்கியை மீட்க வேண்டும். சாந்தி ஒடி வருகிறாள்.

“கையை குடுங்கக்கா!” கையில் கதிர்க் கற்றையுடன் பற்றிக் குலுக்குலுக்கென்று குலுக்குகிறாள்.

ஒரே சந்தோசம். வெயிலில் உழைப்பு மணிகள் முகத்தில் மின்னுகின்றன.

“விடு. விடு சாந்தி அருவா…”

அப்போதுதான் பார்க்கிறாள். நீலச்சட்டையும் ஒட்டு மீசையும் காமிராவுமாக அவள் புருசன் படம் பிடிப்பதை.

“ஐயோ இதென்ன சாந்தி?”

“வெற்றிச்சந்தோசம். அதுக்கு இது ரிகார்டு.”

சரவணனுக்கு வாயெல்லாம்பல்.

அம்மா, அப்பவே படம் எடுத்திருக்காங்க. நா டிராக்டர்ல உக்காந்து எடுத்திருக்காங்க!”

“அப்படியா? நீயாவது வந்து நிக்கிறியே, சந்தோசம்டா…”

“ஏங்க எங்க இரண்டு பேரையும், எங்களுக்குத் தெரியாமயே எடுக்கணுமின்னே எடுத்தீங்களா? தெரிஞ்சு போஸ் குடுத்தா அது நல்லா இருக்காதே…”

“அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ கையப் புடிச்சிக் குலுக்கினப்ப கதிர்க்கட்டு, இடுப்பு அரிவா எல்லாம் கச்சிதமா வுழுந்திருக்கு” செவந்தி குரலை இறக்கிக் கோபித்துக் கொள்கிறாள்.

“என்ன சாந்தி இது? எங்கூட்டுக்காருக்கு… இதெல்லாம் ரசிக்காது. இப்பவே ரொம்பப் பேசறதில்ல. உன்னிடம் சொல்றதுக்கென்ன, அன்னிக்கு ரேடியோவப் போட்டு உடச்சிட்டாரு…”

“அதெல்லாம் சரியாப் போயிடும் அக்கா! நான் சொல்றன் பாருங்க! நம்ம செட்ல, நீங்கதா உடனே போட்டு, பலன் எடுத்திருக்கிறீங்க. படம் நல்லா வந்தா இவுங்க போட்டிக்கு அந்தப்படத்த அனுப்பப் போறதாச் சொல்லிருக்காரு…”

செவந்தி ஏதோ ஒரு புதிய உலகில் நிற்பது போல் உணருகிறாள்.

பொன்னின் கதிர்கள்.

பொன்னின் மணிகள்.

வியாபாரி, ரத்தின முதலியார் வந்திருக்கிறார்.

எல்லாக்கதிர்களும் பகல் ஒரு மணிக்குள் அறுவடையாகி வந்து விட்டன. டிராக்டர் தன் பணியைச் செய்துவிட்டுப் போகிறது.

செவந்தி குவிந்த நெல்மணிகளைப் பார்த்து ஊமையான உணர்வுகளுடன் நிற்கிறாள். ஒரு பதர் இல்லை. ஒரு சாவி இல்லை.

பொன்னின் மணிகளே.

நெற்குவியலுக்கு முன் கர்ப்பூரம் காட்டிக் கும்பிடுகிறாள். பொரி கடலைப் பழம் படைக்கிறாள்.

அப்பா ஒரு பக்கம் சுந்தரியும் கன்னியப்பனும் துாற்றி விட்ட நெல்லைச் சாக்கில் அள்ளுகிறார்.

“அப்பா நெல்லு நெடி. நீங்க போங்க… இருமல் வந்திடப் போவுது வேணி… வந்து சாக்கப் புடிச்சிக்கம்மா…”

“இருக்கட்டும்மா, புது நெல்லு, ஒண்ணும் ஆவாது. இந்த நெடிதா நமக்கு உள் மூச்சு. எம் பொண்ணு நின்னுக்கிட்டா, நா உசந்துடுவே…”

“எல்லாம் அந்த ஆபீசர் அம்மாக்குச் சொல்லுங்க”

“ஆமாம்மா. மகாலட்சுமிங்க போல அவங்க வந்தாங்க, நாங்கூட இவங்க என்ன புதுசாச் செய்யப் போறாங்க. எத்தினி யூரியா போட்டும் ஒண்ணும் வெளங்கல. பூச்சி புகையான் வந்து போவுது. ஏதோ போடணுமேன்னு போட்டுச் சாப்புடறோம். செலவுக்கும் வரவுக்கும் சரிக்கட்டிப் போவுது. உழுதவங் கணக்குப் பாத்தா உழக்கு மிச்சம்பாங்க. அதும் கூட செரமமாயிருக்குன்னுதாம்மா நெனச்சே…”

மூட்டைகளைக் குலுக்கி எடுக்கிறார். செலவு போக, ஏறக்குறைய ஒன்பது மூட்டைகள் கண்டிருக்கின்றன.

எப்போதும் வரும் ஆண் பெண் சுற்றார்களே கூலி பெறுபவர்கள். சுந்தரி காபி கொண்டு வந்து கொடுக்கிறாள்.

மூட்டைகளைத் தட்டு வண்டியில் போட்டுக் கொண்டு முதலியார் போகிறார். மூன்று மூட்டைகளைச் செலவுக்கு வைத்திருக்கிறாள்.

ஆறு மூட்டைகள்… ஆயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய், சுளையாகக் கைகளில்…

அப்பா செவந்தியின் கைகளில் கொடுக்கிறார்.

வாங்கிக் கொண்டு களத்து மேட்டிலேயே அப்பன் கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறாள்.

“இருக்கட்டுங்கப்பா. நீங்க வச்சிக்குங்க. வங்கிப் பணத்தைக் கட்டிருவம். பொங்கலுக்கு மின்ன புது நெல்லு வந்திட்டது. அதுதான் சந்தோசம். நா நினைச்சே, பொங்கக் கழிச்சித்தா அறுப்போமின்னு…”

“கதிர் முத்திப் பழுத்துப் போச்சி. உதுர ஆரம்பிச்சிடுமில்ல… நீ முன்னாடியே நாத்து நடவு பண்ணிட்டல்ல…?”

“அப்பா தொடர்ந்து, கொல்ல மேடுல சாகுபடி பண்ணனும். இது முழு ஏகராவும் பயிர்பண்ணனும்.”

ஆங்காங்கு வைக்கோல் இழைகள். நிலம், பிள்ளை பெற்று மஞ்சட் குளித்து நிற்கும் தாய்போல் தோன்றுகிறது.

வைக்கோல் அங்கேயே காயட்டும் என்று போட்டிருக்கிறார்கள்.

வீட்டில் சுந்தரிதான் அடுப்பைப் பார்த்துக் கொண்டு, ஆட்களுக்குக் காபியும், பொங்கலும் வைத்துக் கொண்டு வந்தாள். அதிகாலையிலேயே ஆட்கள் வந்துவிட்டார்கள்.

அவளுக்கு… அந்தப் பெரியம்மா பிள்ளை சாவு. பெரிய அதிர்ச்சி. ஒரு இளம் பெண் புருசனை இழந்து சமூகக் கட்டுப்பாடுகளுக்கு ஆட்படுவதைப் போன்ற கொடுமை ஒன்றும் கிடையாது. அந்தச் சாவுக்குப் போய் வந்ததாலோ என்னமோ, அவள் கணவனும் சரியாகவே இல்லை. அம்மாதான் அந்தக் கடைசி ஊர்வலப் பெருமையை, ஏதோ கல்யாண வைபவம் கண்டவள் போல் சொன்னாள். பெரிய பெரிய அமைச்சர்கள் வந்தார்களாம். பூமாலைகளே வந்து குவிந்ததாம். நடிகர் ஜயக்குமார் வந்து கண்ணிர்விட்டு அழுதானாம். லட்ச ரூபாய் செலவழித்தானாம், அந்தக் கடைசி ஊர்வலத்துக்கு..!

அம்மா இந்தப் பெருமையைச் சொன்னது ரங்கனுக்கே பிடிக்கவில்லையோ? “ஆமாம், குடிச்சிப்புட்டு ஆடினானுவ. வாணவேடிக்கை, இதெல்லாமா? செத்தவனுக்கு, ஒரு சாமி பேரு, கோவிந்தான்னு சொல்லல்ல. மட்றாசு விவஸ்தை இல்லாம ஆயிட்டது. பூமாலை மேலுக்கு மேல் போட அமைச்சர் வாரார். வட்டத் தலைவர், செயலாளர், டி.வின்னு பெருமைதாம் பெரிசு. அந்தப் புள்ள பொஞ்சாதி தா உள்ள அழுதிட்டிருந்திச்சி. அதுக்காகத் தான் கருமாதியன்னிக்குப் போன. அவ அண்ணன் கூட்டிட்டுப் போயிடுவா. பாவம், அஞ்சு வருசம் வாழ்ந்து ரெண்டு புள்ளையத் தந்தா. குடி… குடிக்கறதோட, சாமி இல்லேன்னு திரிஞ்சானுவ. அதுதா அடிச்சிடுத்து…” என்று வருந்தினாள்.

செவந்திக்கு ஆறுதலாக இருந்தது.

“இந்தப் புள்ளிங்க இல்லன்னா, வேற கலியாணம் கூடக் கட்டலாம். ஆம்புளங்க கட்டுவாங்க, புள்ளிங்களை வளர்க்கன்னு. பொம்புள, இந்தப் பிஞ்சுகளுக்கு ஒராண் காவல் வேணும், அப்பன் ஸ்தானத்திலன்னு கல்யாணம் கட்டலாமா? கூடாது. அத்தோட விட்டதா? சொந்தக்காரங்க, கூடப் பெறந்தவங்க கூட நடத்த சரியில்லன்னு கரியத்தித்தும். இவங்க புருசன் பொஞ்சாதி இணைபிரியாம, சீவிச்சிங்காரிச்சி மினுக்குவாங்க. அட, வூட்டில படுவெட்டா, புருசனில்லாம ஒரு பொம்புள இருக்காளேன்னு நினைப்பாங்களா?” என்று யாருக்கோ கல்லிலே மருந்திழைப்பது போல் உரசி விட்டாள்.

பொங்கலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் அறுவடை செய்திருக்கிறார்கள். பச்சை நெல்லை முற்றத்தில் காய வைத்திருக்கிறாள். ஒரு மூட்டையைப் புழுக்கி வைக்க வேண்டும்.

ஓய்ந்தாற் போல் குறட்டில் உட்காருகிறாள்.

வெந்நீர் வைத்து உடம்புக்கு ஊற்றிக் கொள்ளவேண்டும். வயிறு பசிக்கிறது.

“பொங்க இருக்குதாசுந்தரி?”

“இருக்கக்கா… குழம்பூத்தித் தாரேன். சாப்பிடுங்க. நீங்க சரியாகச் சாப்பிட்டிருக்க மாட்டீங்க…”

“உனக்குத்தா ரொம்ப வேல சுந்தரி..”

“நமக்குள்ள இதெல்லாம் எதுக்கக்கா! பொங்கலுக்கு முருகண்ணா அண்ணி எல்லாம் வராங்களாம். மதியம் அத்தான் சாப்புட வந்தப்ப லெட்டர் வந்திருக்குன்னு சொன்னாங்க.”

“லெட்டரா? நாளப் பொங்கலுக்கா வராங்க? விசேசந்தா…”

“நா முதல்ல அறுப்பு வச்சது நல்லாப் போச்சு. புதுநெல்லு போட்டுப் பொங்கி, வாராத அண்ணனும் அண்ணன் பொஞ்சாதியும் வாராங்கன்னா விசேசந்தா.” பொங்கலுக்கு எப்படியும் துணி வாங்குவது வழக்கம். காஞ்சிபுரம் போய்க் குழந்தைகளுக்கும், அப்பாவுக்கும், வாங்க வேண்டும் என்றிருந்தாள். கோ – ஆப்டெக்ஸ் கடையில், ஒரு வாயில் சேலை எடுத்தால், சரோவை உடுத்தச் சொல்லலாம். அவர்கள் அப்பா அவளுக்கும், சரவணனுக்கும் வேண்டியதை எடுப்பார். அவள் தலையிட மாட்டாள். அவளுக்கும் ஏதோ ஒரு சேலை வரும். பொங்கல் தீபாவளி என்றால், முருகன் இருநூறு இருநூற்றைம்பது என்று பணம் அனுப்பி வைப்பான். இல்லையேல், அவன் மட்டும் பேப்பர் திருத்த, அது இதென்று பட்டணம் வரும்போது சுங்கடிப் புடவையோ, வேட்டியோ வாங்கி வந்து கொடுப்பான். அதற்கே அம்மா அகமகிழ்ந்து போவாள்.

பொங்கல் சந்தை அல்லவா? கோ – ஆப்டெக்ஸ் துணிக்கடையில் கூட்டம் அலை மோதுகிறது. செவந்தி கன்னியப்பனையும் கூட்டி வந்திருக்கிறாள். ஒரு சோடி வேட்டி நாற்பது நாற்பது ரூபாயில் இரண்டு சட்டைகள், ஒரு வாயில் சேலை, நான்கு ரவிக்கைத் துணிகள் என்று துணி எடுக்கிறாள். புதுப்பானை, நான்கு கருப்பந்தடிகள், வாழைப்பழம், ஒரு சிறு பறங்கிக் கொட்டை, பூசணிக்காய், கத்தரிக்காய், மொச்சைக் கொட்டை என்று வாங்கிக் கொள்கிறாள். சேவு அரைக் கிலோ, இனிப்பு கேக், ஒரு பெட்டி என்று பணத்தைச் செலவு செய்கிறாள்.

கன்னியப்பன் உடன் வர விடுவிடென்று நடந்து வீட்டுக்குள் நுழைகையில் வீடு கலகலவென்றிருக்கிறது. ரங்கன் மட்டும் வந்திருக்கவில்லை. அண்ணன் முருகன், அண்ணி, இரண்டு குழந்தைகள் வந்திருக்கிறார்கள். கயிற்றுக் கட்டிலில் பிள்ளைகளுடன் அண்ணன் இருக்கிறார். அண்ணி கருப்புத்தான். ஆனால் படித்த களை, பணக்களை.

“வாங்கண்ணா, அண்ணி நல்லாருக்கிறீங்களா?”

“ம். பொங்கச்சந்தையா?”

“ஆமா. நேத்துத்தா காகிதம் வந்திச்சின்னு சொன்னாங்க. நா காலம வரீங்களோ, ராத்திரியோன்னு நினைச்சே. பஸ்ஸுல வந்தீங்களா?”

“நாங்க மெட்ராசிலிருந்து வரோம். மாப்பிள்ளைகிட்டச் சொன்னனே? கண்ணன் காரியத்துக்கு வந்திருந்தாரே. இவ தங்கச்சி வீடு ஏரிக்கரைப் பக்கமிருக்கே ஜீவா பூங்கா நகர். அங்கதானே இருக்கு? புதுசா கட்டிருக்காங்க. கிரகப்பிரவேசத்துக்கே வரணும் வரணும்ன்னாங்க. அட பொங்கல், அப்படியே ஊருக்கும் வருவோம்னு வந்தோம். நீ என்னமோ கிளாஸ் எடுத்தியாமே? நல்ல வெள்ளாமைன்னு அப்பா சொன்னாங்க…”

“ஆமாம் காக்காணிக்கு ஒம்பது மூட்டை, ஒரு கருக்காய் பதர் இல்ல..” என்று ஆற வைத்துக் குந்தாணியில் குத்துப்பட்ட நெல்லை – அரிசியைக் கொண்டு வந்து காட்டுகிறாள்.

“இருக்கட்டும் நமக்கு இதெல்லாம் சரிவராது. மாப்புள்ள போல…”

“அண்ணி, நின்னிட்டே இருக்காங்க, நீங்க பாட்டுல உக்காருங்க…”

“அதான் பாய விரிச்சி வச்சேன்…” என்று கூறும் சுந்தரி காபி கொண்டு வருகிறாள். சாமி மேடைக்கு முன் ஒரு தாம்பாளத்தில், ஸ்வீட் பாக்கெட், கதம்பம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய வரிசைகள் இருக்கின்றன. நீலத்தில் கருப்புக் கரையிட்டு இரு சரிகைக் கோடுகள் ஒடிய சுங்கடிச் சேலை, ஒரு உயர் ரக வேட்டி, மேல் வேட்டி, எல்லாம் இருக்கின்றன. அண்ணியின் கழுத்தில், புதிய தங்கச் செயின் டாலருடன் பளபளக்கிறது. இரண்டு அன்னங்களாய்க் கல்லிழைத்த டாலர். உள்ளங் கழுத்தில் அட்டிகைப்போல் ஒரு நகை. தங்கமாக ஒரு மீன் இரண்டு முனைகளையும் இணைக்கிறது. மீனின் சிவப்புக்கல் கண் மிக அழகாக இருக்கிறது. செவிகளில் சிவப்புக்கல் கிளாவர் ஜொலிக்கும் காதணியில் முத்துக்கட்டி இருக்கிறது. நதியாகுத்தோ, நகுமா குத்தோ, குத்தி அதில் ஒரு சிவப்பு நட்சத்திரம் சொலிக்கிறது. கைகளில் மும்மூன்று தங்க வளையல்கள், ஒரு சிவப்பும் முத்துமான வளையல். மூக்கில் முத்துக்கட்டிய மூக்குத்தி, விரலில் வங்கி நெளி மோதிரம். முடியைத் தளர்த்தியாகப் பின்னி காதோரம் தூக்கிய ஊசிகளுடன் பேஷனாக அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். இந்த இடத்துக்கே பொருந்தாமல், இரண்டு விரல்கடை சரிகை போட்ட, மினுமினுக்கும் பட்டில் பூப்போட்ட சேலை… இளநீலமும் ரோசுமான கலர். அதே இள நீலத்தில் ரவிக்கை… குழந்தைகளில் பெரியவன் ஆண். எட்டு வயசாகிறது. ஆனால் நருங்கலாக இருக்கிறான். புசுபுசுவென்று ஒரு முழுக்கால் சட்டை கழுத்து மூடிய பூப்போட்ட பனியன் போன்ற மேல் சட்டை. அவன் கழுத்தில் ஒரு போட்டோ பிடிக்கும் காமிரா. பொம்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது. பெண் சிறியவள். அடுக்கடுக்காக ஜாலர் வைத்த பம்பென்ற லேசு வைத்த கவுன் போட்டிருக்கிறது. காதுகளில் சிறு தங்க வளையல்கள். கழுத்தில் இருக்கிறதோ இல்லையோ என்ற மெல்லிய இழைச்சங்கிலி. நட்சத்திர டாலர்…

கன்னியப்பன் அந்தச் சட்டையை சிறு குழந்தைக்குரிய ஆவலுடன் தொட்டுப் பார்க்கிறான். அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கையில் கிள்ளி உதட்டில் வைத்துக் கொள்கிறான். உடனே அந்தக் குழந்தை முகத்தைச் சுருங்கிக் கொண்டு அம்மாவைப் போய் ஒட்டிக் கொள்கிறாள்.

“அவ… அழுக்குக் கையோடு தொடுறா…”

“ந்தா. அப்படில்லாம் சொல்லக் கூடாது திவ்யா!” என்று முருகன் சிறு குரலில் அதட்டுகிறான். உடனே, அவள் தொட்டாற் சுருங்கியாக அழத் தொடங்குகிறாள்.

செவந்திக்கு அப்போதே கவலை பற்றிக் கொள்கிறது. இரவு இவர்கள் எங்கே தங்கி, எப்படிப் படுத்துக் கொள்வார்கள்? முன்பு அவர்கள் வந்த போது கழிப்பறை கூடக் கிடையாது என்று குறைப்பட்டு, போய் விட்டாள். இப்போது, படலை ஒரமாக ஒரு கழிப்பறை கட்டி இருக்கிறார்கள். அது சரோ மட்டுமே உபயோகிக்கிறாள். சுத்தம் செய்ய என்று ஆள் பிடிப்பது சிரமம். அதனாலேயே அதை உபயோகிப்பவள் அவள் மட்டுமே.

இதெல்லாம் நினைவுக்கு வந்து அழுத்துகிறது.

திராபையான கந்தலை இழுத்துப் பிடிக்கும் சாகசத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது.

அப்பா இருமினாலும் கொண்டாலும் இருக்கட்டும் என்று சுந்தரி வீட்டுக்குப் படுக்க அனுப்புகிறாள். சரோவுடன் கூடத்து அறையில் அண்ணி, குழந்தைகள், கட்டிலில் அண்ணன். கீழே அம்மா.. விடிந்தால் போகி..

கவலைகளின் கணமும் அலுப்பும் உடலை அயர்த்தி விடுகிறது. வாசலில் சட்பட்டென்று சாணம் தெளிக்கப்படும் ஒசையில் அலறிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.

இருள் பிரியவில்லை.

அத்தியாயம்-11

முதல் பொங்கல், பெரும் பொங்கல் எல்லாம் சுரத்தில்லாமலே கழிந்து போகின்றன. அன்று மாலையே அண்ணியையும் குழந்தைகளையும் அண்ணன் கூட்டிக் கொண்டு போகிறான்.

“நா இவங்கள மட்ராசில விட்டுப் போட்டு வாரம்மா, அப்பா தப்பா நினைக்காதிங்க தப்பா நினைக்காத மாப்புள” என்று அண்ணன் விடைபெறுகிறான்.

செவந்தி தலையாட்டிக் கொண்டு நிற்கிறாள். போகியன்று, விளைந்த நிலத்தில் அடுப்பு வைத்துப்பானை வைத்துப் புத்தரிசியைப் போட்டு, வீட்டுச் சாமியை நினைத்துப் பொங்கல் வைத்தாளே. அண்ணி, அண்ணன் வந்தார்களா? பெரும் பொங்கல். முன் வாசலில் வைத்து இவள்தான் விரதமிருந்து கும்பிட்டாள். “எங்களுக்கு இதெல்லாம் வழக்கமில்ல. தப்பா நினைச்சிக்காத செவந்தி. திவ்யாவுக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ்னு மருந்து குடுக்கிறோம். நேரத்துக்கு அதுக்கு பாலு, முட்டைன்னு குடுக்கணும். பொங்கல் வீட்டுக்கு வராமலிருக்கக் கூடாதுன்னு வந்தோம்…” என்றாள். ஒப்புக்கு நின்றாள்.

ரங்கன் குழந்தைகளுக்குப் புதுத்துணி வாங்கி வந்தான். மாப்பிள்ளைக்கும் வேட்டி துண்டு வாங்கி வந்தான். முன் வாசலில் மாலையோடு பொங்கல் வைத்துக் கும்பிட்ட போது, ஏதோ சிறைக் கைதி போல் தோன்றியது. தான்வாங்கி வந்த வாயில் சேலையை அண்ணிக்குக் கொடுக்கலாமா என்று தோன்றியது. பிறகு, அவள் அதைத் தொடக்கூட மாட்டாளோ என்றும் தயங்கிக் கொடுக்கவில்லை. சரோவும் சரவணனும் தான் பொங்கலை ரசித்து அனுபவித்தார்கள். சரோ வாசலில் பெரிய பெரிய கோலம் போட்டாள். கலர் பொடி வாங்கி வந்து தூவினாள்.

பொங்கல் பானை, கரும்பு, மஞ்சட் கொத்து என்று கோலம்…

“மாமா, எப்படி?”

“நல்லா போட்டிருக்கே. உங்கம்மாவுக்கு இந்த மாதிரி ஃபைன் ஆர்ட் வராது. காட்டு மேட்டு வேலதான் செய்வாள்…”

“எனக்குப் பெயின்டிங் பண்ணக் கூட ஆசை. டென்த் முடிச்சப்புறம் என்ன கோர்ஸ் எடுக்கலாம் மாமா?”

“மேல படிக்கப் போறியா? உன்ன உங்கம்மா இப்பவே புருசன் வீட்டுக்கு மூட்டைக்கட்ட ரெடியா வச்சிருப்பாளே?”

“நோ… அதெல்லாம் நடக்காது. நா பி.இ. படிக்கணும். குறைஞ்ச பட்சம் பாலிடெக்னிக்ல படிச்சிட்டேனும் டிகிரி எடுப்பேன்! மாமா, ரேங்க் வாங்கிட்டா மேல் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குமில்ல?”

“கிடைக்கும். நீ பரீட்சை எழுதிட்டு மதுரைக்கு வா. விமன்ஸ் பாலிடெக்னிக் இருக்கு. சேரலாம்.”

அவள் முகம் ஒளிருகிறது. மத்தாப்பூக்கட்டினாற் போல்.

“நிச்சயமாவா மாமா?”

“நிச்சயமா, உன்னோடு நான் ஏன் விளையாடணும்? நல்ல ஸ்கோப். சொந்தத் தொழில் செய்யலாம், வேலையும் கிடைக்கும்…”

“ப்ளஸ் டு படிக்கணும்ன்னாலும் உங்க ஸ்கூலில் இடம் கிடைக்குமா?”

“அதுவும் பார்க்கலாம்.”

“அம்மா என்ன எப்பப் பார்த்தாலும், பொம்புளப்புள்ள படிச்சிட்டு என்ன கிழிக்கப் போறேன்னு இன்ஸ்ல்ட் பண்ணுது. அதக்காகவேணும், நான் படிப்பேன்.”

“படி… உங்கம்மாவுக்கு ஒரு பாடம். . நீ வா, சரோ… பரீட்சை எழுதிவிட்டு வா.”

இந்தப் பொண்ணை வேறு எதற்குத் துண்டிவிட வேணும்?

அவளுக்குக் கோபம் கொள்ளாமல் வருகிறது. ‘அவங்கவுங்க அவங்கவுங்க வேலையப் பார்த்திட்டுப் போனா நல்லாயிருக்கும். சமுசாரிக் குடும்பத்துலதா கட்டணும். அதுக்கு மேல எடுப்பு எடுக்க உங்களுக்குச் சத்து இல்ல…’ என்று முகத்தைக் காட்டி விட்டுப் போகிறாள்.

அவர்கள் கிளம்பிச் செல்வதில் வருத்தமில்லை. அவர்கள் சந்தோஷமாக உறவு கொண்டாடாததோ, ஏதோ ஒப்புக்கு வந்து போவதோ எதிர்பாராததில்லை. அவள் வருத்தம், கன்னியப்பன் இரண்டு நாட்களிலும் வந்து தலை கூடக் காட்டியிராததுதான். அவனுக்கென்று அவள் வாங்கிக் கொடுத்த கோடி வேட்டியும், சட்டையும் அணிந்து அவன் வரவில்லை. மறுநாள் மாட்டுப் பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புக்கு வர்ணம் அடித்து, அவன் தானே எல்லாம் செய்வான்.

அவன் ஏன் வரவில்லை?

அவனை இங்கு யாரேனும் ஏதேனும் பேசினார்களா?

மகனும் மருமகளும் குழந்தைகளும் பெரும் பொங்கலன்று மாலையிலேயே பட்டணம் திரும்பிச் செல்வதைத் தெருவே பார்த்தது.

படித்தவர்களுக்கும், கிராமத்திற்கும் வெகு தொலைவு என்று கணக்குப் போட்டது. அண்ணியின் தோற்றம், குழந்தைகளின் அரசகுமாரக் கோலம் ஆகியவற்றை வைத்து, நாலெழுத்துப் படித்து டவுனுக்குப் போனால்தான் வாழ்வு என்று உறுதி செய்தது.

மனசுக்குள் பூனை பிறாண்டுவது போல் ஒவ்வாமை, காலையில் எழுந்து களேபரமாக இருந்த சமையல்கட்டில் இருக்கும் சாமான்களை ஒழித்துப் பின்பக்கம் போடுகிறாள். முதல் நாள் அடுப்பு வைத்த முன் வாசலில் மீண்டும் சாணம் தெளித்துப் பெருக்குகிறாள். சரோவை எழுப்பிக் கோலம் போடச் சொல்லிவிட்டுப் பின்பக்கமாகவே ஏரிக்கரைப் பக்கம் நடக்கிறாள்.

நெல்லு மிசின் புழுங்கல் உலர்த்தும் முற்றம் விழாக் கொண்டாடுகிறது. பக்கத்தில் பெரிய சாலை. காஞ்சிபுரம் பஸ் போகும் சாலை. வயல்கள்… கரண்ட் ஆபீஸ்… அந்தப் பக்கம் உள்ள குடிசைகளில் ஒன்றுதான் கன்னியப்பனும், ஆயாவும் இருக்கும் இடம். வெளியே முற்றம் பச்சென்று தெளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கோலமும் புதிதாகப் போட்டிருகிறது. ஆயா எழுந்திருக்கிறாள்.

“கன்னிப்பா. கன்னிப்பா..!”

உள்ளிருந்து அவன் எட்டிப் பாக்கிறான். சட்டென்று வேட்டியை நன்றாக இறுக்கிக் கொண்டு மேல் துண்டுடன் வெளியே வருகிறான்.

“அக்கா நீங்களா?”

“ஆமாம்பா. நீ பொங்கலுக்கு வாராம போயிட்டே?”

அவன் அவளையே நேராகப் பார்க்கவில்லை.

“மிசின்காரர் வூட்ட வேலை இருந்திச்சி. போயிட்டே.”

“ஏம்பா கூடவே ஒழச்சிட்டு நம் மூட்டுக்கு வராம போயிட்ட?”

அவன் கால் பெருவிரல் நிலத்தைச் சீண்டுகிறது.

“நம்மூடு இல்லிங்க. உங்கூடு. நீங்களும் நானும் எப்படீங்க சமமாக முடியும்?”

“இதெல்லாம் என்ன கன்னிப்பா, புதுப் பேச்சு?”

“புதுசு இல்லீங்க. பழசுதா. எனக்குத்தா புத்தி குறைவு. நா ஒங்கள அக்கா அக்கான்னு கூட்டாலும் எனக்கு அக்கா ஆக முடியுமா? நீங்க எசமானி. நாபண்ண பாக்குற கூலிக்கார. ஆயி அப்பந் தெரியாத அநாத. ஊருச்சோத்தத் தின்னும் கூலிக்கார ஆயா. எப்படிங்க ஒண்ணாக முடியும்?”அவனுடைய நெஞ்சுச் சுமையைப் பிளந்து வரும் குரல்…

அவள் சொல்லொணா வேதனைக்காளாகிறாள்.

“ந்தா.. கன்னிப்பா, நீ இப்படியெல்லாம் பேச எங்க கத்துக்கிட்ட? உன்னயாரு என்ன சொன்னாங்க?”

புரியவில்லை.

யார் என்ன சொல்லி இருப்பார்கள்? அவள் புருசனா? இருக்காதே? அண்ணனா? சரோவா? அப்பாவா? இல்லை… அம்மாவாகத்தான் இருக்கும்.

அவள்தான் விசச்சொல்லை உதிர்ப்பவள். பல்லில் விசம். உடம்பில் விசம்.

“யாருப்பா சொன்னாங்க… ? கன்னிப்பா?” அவன் அருகில் நகர்ந்து அவன் கையைப் பற்றுகிறாள்.

அவனுக்குச் சிறுபிள்ளை போல் அழுகை வந்துவிடுகிறது.

“யாரப்பா உன் மனசு நோகப் பேசியவர்?”

“இல்லீங்க யாரும் இல்ல. நீங்க வீட்டுக்குப் போங்க. நீங்க இந்தக் குட்சப் பக்கம் வந்தது யாரு கண்ணிலும் பட்டாக்கூட காது மூக்கு வச்சிப் பேசுவாங்க. ஒரு கையகல பூமி சொந்தமில்ல. நாலெழுத்தும் பாக்கல…”

துக்கம் துருத்திக் கொண்டு வருகிறது.

“நீ இப்படில்லாம் பேசுன, நான் வூட்டுக்கே போக மாட்டேன். இங்கே உக்காந்திருப்பே. இல்லேனனா, ஏங்கூட இப்ப நீ வீட்டுக்கு வா. மாடுகளெல்லாம் குளிப்பாட்டி எல்லாம் வழக்கம் போல நீதா செய்யணும். நீ இல்லாம, வீட்டுல உசுரே இல்லே…”

அவன் சட்டென்று உள்ளே சென்று வருகிறான்.

அவள் வாங்கிக் கொடுத்த சட்டை, வேட்டி, துண்டு பிரிக்கப் படாமலே இருக்கின்றன. அவளிடம் நீட்டுகிறான். “இந்தாங்க. எனக்கு நீங்க குடுக்கற கூலி சரியாப் போச்சி. அதுக்கு மேல இதுக்கெல்லாம் அவசியமில்ல..”

அவள் விக்கித்துப் போகிறாள்.

“கன்னிப்பா, உன்ன யாரு, எது என்ன சொன்னாலும் நீ என்ன மதிக்கலியா? நான் உழைச்சது உனக்கு எடுத்துத் தந்தது. எனக்குக் கூடப் பிறந்தவ இருந்தும் புண்ணியமில்ல. நீதா தம்பிக்கு மேல, புள்ளக்கி மேலன்னு நினைச்சிட்டிருக்கே. உன் உழைப்பு, என் உழைப்பு. இத்தனைக்கு மேல நீ என்ன மதிக்கலேன்னா, இந்த வேட்டி, சட்டையத் தூக்கி எறிஞ்சிடு. எங்கூட்டுக்கு நீ வரவேணாம். இல்ல, என்ன மட்டும் மதிக்கிறேன்னா, இன்னிக்கி வந்து கொட்டில் மாடுங்களுக்குச் செய்நேர்த்தி செஞ்சி பொங்கலுக்கு வந்திடு. கோயிலுக்கு கொண்டு போவம். சாமி கும்பிடுவோம். நீ வரலன்னா அந்த வூட்டுல இன்னிக்கு மாட்டுப் பொங்கலும் இல்ல… நாவார!” முகத்தில் சிவ்வென்று இரத்தம் ஏறினாற் போல் இருக்கிறது. வேகுவேகென்று திரும்பி வருகிறாள்.

மாடு கரக்கவில்லை. அது கத்துகிறது. கன்றை அவிழ்த்து விடுகிறாள். உள்ளே வந்து எண்ணெய்க் கிண்ணம், செம்பு, மடிகழுவ நீர் எல்லாம் கொண்டு வருகிறாள்.

“காலங்காத்தால எங்க போயிட்டே? வாசல் கோலம் வைக்கல. எனக்கு முழங்கால் புடிச்சிக்கிச்சி. சரோவ எழுப்ப எழுப்ப எந்திரிக்கல. நீ எங்க போயிருப்பன்னு எனக்குத் தெரியும். அவவ, நாக்கு மேல பல்லுப் போட்டு கண்டதும் பேசுறாளுவ. பொங்கலுக்கு வந்த புள்ள ஒரு நேரம் தங்குனதே போதும்ன்னு கெளம்பிப் பூட்டான். நீ என்னதாண்டி நினைச்சிட்டிருக்கிறே?”

செவந்தி பேசவில்லை. பேசாமல் பால் கறக்கிறாள். பால் கறப்பவர் மனம் சரியில்லை என்றால் மாடும் பாலை எக்கிக் கொள்ளும்.

“லச்சுமி! நீயும் எனக்கு விரோதியா? வாணாண்டி!”

மாட்டைத் தட்டிக் கொடுக்கிறாள்.

பாலைக் கறந்து உள்ளே கொண்டு வந்து வைக்கிறாள்.

அம்மா விடுவதாக இல்லை.

“ஏண்டி செவந்தி, நீ என்னதா நினைக்கறடீ? இப்ப நீ எங்க போயிட்டு வார? கூலிக்காரப் பய. அவன் கோவிச்சிட்டா வரலன்னு பாக்கப் போற. கூடப் பொறந்த அண்ண, அண்ணி, அவுங்களப் பாத்துப் போறாமயில சாவுற!”

“தா… வார்த்தய அளந்து பேசு! ஆருக்குப் போறாம! கன்னிப்பன என்ன சொல்லி வெரட்டின? அந்தப்புள்ள, இந்தக் குடும்பத்துக்கு ஒடம்பச் செருப்பா ஒழக்கிறவ. ஒரு ஒழவோட்டினா கூலி எம்பது ரூபா இந்த வூட்டுக்கு அது எத்தினி ஒழச்சிது? ஒம்பது மூட்ட, காக்காணில. ஒரு பதாரில்ல, கருக்காயில்லன்னு பூரிச்சி போனியே? அது ஆரூ ஒழச்சி வந்தது? ராவோடு தண்ணி பாத்து அடச்சது ஆரு? உம்புள்ளையா, மருமகப் புள்ளயா? இத சுந்தரி பாவம் புருசனில்ல. வெள்ளாம வைக்க வகையில்லாம தருமச்சோறு சாப்புடுது. பூமி நீ குந்திச் சாப்புடக் குடுக்காது. உழச்சித் தின்னத்தான் கொடுக்கும். அந்தப் புள்ள, ஒரு கள்ளம் கபடு தெரியாது. என்ன கேலி பண்ணாலும் தப்பா எடுத்துக்காது. அத்த வெரட்டிட்டே, மனசு நோகப் பேசி!”

“ஆமா வெரட்டித்தா விட்ட அததுக்கு ஒரு வரமுற இருக்கு. எதெது எங்க வைக்கணுமோ அங்க வைக்கணும். போ…டி… நேத்து மொளச்ச முசுக்கட்ட, எனக்குப் புத்தி சொல்ல வாரா! அறிவு இருக்காடி உனக்கு? அவ உழவோட்டினா கூலி குடுத்திட்டுப் போ! அதுக்கு மேல அவனுக்கென்ன சரிகக் கோடு போட்ட வேட்டி, சட்ட, துப்பட்டா விளக்குமாறு? அருமயா அண்ணா, அண்ணி, அவம்புள்ளங்க வந்திருக்கு. அதுக்கு ஒரு பார்வயா நல்லது செய்ய உனக்குத் தோணல. என்னமோ பொண்ணக் கட்டின மருமவங் கோவிச்சிட்ட மாதிரி ஓடுறா துடப்பக்கட்ட…”

“ந்தாம்மா, ரொம்பப் பேசாத நா அவனியே மருமகப் புள்ளயா ஆக்கிக்குவே! உன்னப் போல நன்னிக் கொன்ன ஆளில்லே நா! உம்புள்ள, மருமவ என்ன செஞ்சா ஒரு தல முழுவி, வெளக்கேத்தி பொங்கக் கும்புட முடியாதவ எதுக்கு வந்தா? கிராமத்துல இப்படி இருக்கும்னு தெரியுமில்ல? இல்லாட்டி இவரு வந்து பத்தாயிரம் செலவு பண்ணி அம்மா வந்திருக்கத் தோதா குழா போட்டு, மேடப் போட்டு அலமாரி போட்டு கட்றது? நானா வாணாங்கறேன்? அஞ்சு வருசமா கொல்ல மேட்டுல ஒழுங்காசாகுபடி இல்ல. ஒரு கேவுறு கூட இந்த வருசம் வெதய்க்கல. நாதி இல்ல. இவிரு கலியாணத்துக்குத்தான கிணத்துப் பாசன நிலத்த ஒத்திக்கு வச்ச? அதையேனும் அடச்சாரா, இத்தினி வருசத்துல? அவ நகை போட்டுட்டு மினுக்குறா, ஏன் சொல்லுறதான புள்ளகிட்ட?”

இவளுக்கு ஆற்றாமை பொங்குகிறது. சொற்கள் பொல பொல வென்று வருகின்றன.

ஆனால் அம்மாவோ… ஆம்பிளப் பிள்ளையைப் போல் இவள் பேசுவதா என்று மேலே இருந்து விரட்டுகிறாள்.

“ஏய், நீ இப்படிப் பேசுறதுன்னா, இப்பவே வூட்டவிட்டுத் தனியாப் போய்க்க. பூமி அவனோடது. அவன் போடுவா, அழிப்பா. இன்னைக்குத் தேதில அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவனால சோறு போட முடியும். வித்துப் போட்டு ஊரோட வந்திருங்கன்னுதான் இப்பவும் சொல்லிட்டுப் போச்சி! அப்பாவுக்கும் அங்க வந்தா, நல்ல டாக்டர்ட்ட காட்டி வைத்தியம் பண்ணுறன்னு, வூடு கட்டியிருக்கு. கிரக பிரவேசம்னு வைக்கல. சாங்கியமா பால் காச்சி சாபிட்டுட்டு டூசன் பசங்க வரதுக்குத் தோதா தெறந்து விட்டிருக்கு. நீங்க வாங்க. இங்க ஒரு வசதியும் இல்லன்னு சொல்லிட்டுத்தாம் போயிருக்கா…”

மலை உச்சியில் இருந்து கீழே தள்ளிவிட்டாற் போல் இருக்கிறது செவந்திக்கு.

அதுவும் அப்படியா? இப்படி உருவேற்றத்தான் இப்போது பொங்கலுக்கு வந்தார்களா?

அவள் பொட்டில் அடிபட்டாற் போல் நிற்கிறாள்.

சரோ பின்புறம் பல்துலக்கி விட்டு வருகிறாள்.

“கன்னிப்ப வந்து மாடெல்லாம் அவுத்துட்டுப் போறா! தாத்தாவும் கூடப் போவுது…”

குளிர்ச்சியான துளி விழுந்தாற் போல் ஆறுதலாக இருக்கிறது. ஒன்றும் பட்டுக் கொள்ளாமலே அடங்கியவளாக இயங்குகிறாள். மாடுகளைக் குளிப்பாட்டி, வயிறு நிறையத் தீவனம் வைக்கிறார்கள். கொம்புக்கு வர்ணம் பூசி, சலங்கைகளைப் பளபளப்பாக்கிக் கட்டுகிறான். கட்டுத்தறி சுத்தம் செய்து, வீடு முழுதும் மாவிலையும் தென்னங் குருத்துமாகத் தோரணம் கட்டுகிறான். வாயிலில் பொங்கல் வைக்கிறார்கள். ஏர், குந்தாணி, உலக்கை எல்லாமே வாயிலுக்கு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மஞ்சள் குங்குமம் வைத்து, இலையில் பொங்கலும் காயும், இனிப்பும் படைத்துக் கன்று காலிகளையும், தொழில் செய்யும் கருவிகளையும் கும்பிடுகிறார்கள்.

சரோவும், சுந்தரி குழந்தைகளும் சரவணனும் கரும்பு கடித்துத் துப்புகிறார்கள்.

அலங்கரித்த மாடுகளை எல்லாம் கும்பலாகக் கோயில் முன் ஒட்டிச் செல்கிறார்கள். கொட்டு மேளம் முழங்க மாடுகளுடன் ஏரையும் உழுவது போல் தூக்கிக் கொண்டு கன்னியப்பன் பொழுது சாயும் நேரம் வீட்டின் முன் வந்து வைக்கிறான்.

செவந்தி மனம் துளும்ப, கண்துளும்ப வரவேற்கிறாள்.

அத்தியாயம்-12

இந்தக் கூட்டம் இவர்களுடைய அமாவாசைக் கூட்டம் போல் இல்லை. இதுவும் தான்வா பண்ணை மகளிர் கூட்டம் என்று தான் சாந்தி கூறினாள். இவர்கள் வட்டத்துக்குள் இல்லை. செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் மாமண்டூர் சரகத்தில் நடக்கிறது. காலையிலேயே சாந்தி, பிரேமா, செவந்தி மூவரும் பஸ் ஏறி வந்திருக்கிறார்கள்.

விவசாயத் துறை அலுவலர், பெண்கள் முதலில் பேசினார்கள். பிறகு மதியம் அங்கு வந்திருந்த பெண்கள் அனைவரும் தத்தம் அநுபவங்களைச் சொல்கிறார்கள். செவந்தியையும் பேசச் சொன்னார்கள். அவளுக்கு வெட்கமாக இருந்தது. “சாந்தி நீ என்னைக் காட்டி வுடாதே. நீ பேசு…” என்றாள் கண்டிப்பாக.

அலுவலர் அம்மா ஒவ்வொருவர் பேரையும் சொல்லிக் கூப்பிடுகிறார். “பாப்பாம்மா… பாப்பாம்மாள் வந்து பேசுவார்…” என்ற அறிவிப்பு வருகிறது.

பாப்பம்மாவுக்கு இளம் வயசுதான். வெள்ளைச் சேலை உடுத்தி, நெற்றியில் துளி திருநீறு வைத்திருக்கிறாள். புருசன் இல்லாதவள் என்பதை அந்தக் கோலம் பறையடித்துத் தெரிவிக்கிறது.

“இந்தப் பாப்பம்மா அனுபவத்தைக் கேளுங்கள். அவ்வளவுக்கு மனசைத் தொடும்” என்று சாந்தி காதில் கிசுகிசுத்தாள்.

“வணக்கமுங்க… எனக்குப் பேசெல்லாம் தெரியாதுங்க. நாலாவது வரைதான் படிச்சேன். பொம்புளப்புள்ள எதுக்குப் படிக்கணும்னு நிறுத்திட்டாங்க. எங்கூட்டுக்காரர் லாரி ஓட்டிட்டிருந்தாருங்க. லாரி கவுந்து இறந்து போய்ட்டாருங்க. எனக்கு ரெண்டு புள்ளிங்க. ரெண்டு பொண்ணு. ஒண்ணுக்கு நாலு வயசு. மத்தது ரெண்டு வயசு, லாரியக் குடிச்சிட்டு ஓட்னாருன்னு மொதலாளி நட்ட ஈடெல்லாம் ஒண்ணுமில்லன்னுட்டாங்க. சரக்கு ஏத்திப் போயிட்டுத் திரும்பி வாரப்ப விபத்தாயிட்டது. பங்காளிங்க, எங்க பங்குக்கு பிரிச்சித் தந்தது ரெண்டேக்கர்… மானாவாரி. எப்பனாலும் மழ பெஞ்சிச்சின்னா பயிரு வைக்கலாம். எங்கூட்டுக்காரருக்கு முதலே பயிரு வேல பழக்கமில்ல. சின்னப்பவே லாரி கிளீனராப் போயிட்டராம்.

“எங்க மாமியாதா அவ மருமகன் கூட முன்னெப்பவோ ஏரித் தண்ணி வந்தப்ப, பயிரு வைச்சாங்களாம். எள்ளு தூவி வைப்பாங்க. கேவுரு போடுவாங்க. அதும்கூட சரியாக் காவல் இல்லன்னா யாரும் பூந்து அறுத்திட்டுப் போயிடுவாங்க. ஆம்புள உரப்பா காவல் இல்லன்னு தெரிஞ்சா ஆடுமாடக் கூட இஷ்டத்துக்கு மேயவுடுவாங்க.

“அப்படி ஒரு ஞாபகம் இது. எங்க மாமியாளும் சீக்கு வந்து செத்துப் போச்சி. நா ரெண்டு புள்ளங்களக் காப்பாத்திப் பிழைக்கணுமே? கூலி வேலைக்குப் போவே. சாணி கொண்டாந்து ஒரு மூட்டை தட்டி விப்பே. நடவு, களையெடுப்புன்னு கும்பலா போறவங்க கூடப் போவே… தனியாப் போனாலே எப்பிடி எப்பிடியோ பேசுவாங்க. பொம்புளயாப் பொறந்தாலே கஷ்டந்தாங்க.

“பெறகு இந்தத் தான்வா திட்டம் வந்திச்சி. இந்தம்மாமாருங்க காரப் போட்டுகிட்டு வந்தாங்க.

“நா அப்ப கூளம் கொண்டாந்து எருமுட்ட தட்டிட்டிருந்தே. இவங்க வாரதப் பாத்துப் பயந்து உள்ள ஒடிக் கதவப் போட்டு கிட்டே.

“ந்தாம்மா…? ஆரு, ஆரு உள்ள கதவத் தெறங்க!”

“இங்க ஆம்புள யாரும் இல்லிங்க. எங்கூட்டுக்காரு செத்திட்டாருன்னே. அழுக வந்திச்சி. ‘நாங்களும் பொம்புளதாம்மா. நீங்க பயப்பட வேணாம். வெளில வாங்க’ ன்னாங்க. கதவத் தெறந்தே. எனக்கு லாரிக்கார நட்டஈடு குடுப்பாங்கற ஆச அப்பவே போயிடிச்சி. அவன் குட்சிட்டுக் கொண்டு போய் மோதிட்டா, அவனால லாரியும் நட்டமாச்சி, சரக்கும் போச்சின்னு சொல்லிட்டாங்க. இப்ப லாரிக்காரங்க, நா நட்ட ஈடு குடுக்கணுமின்னு பொம்புள ஆபிஸ்ரை வுட்டுருப்பாங்களோன்னு பயம் புடிச்சிக்கிச்சி. எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. என்னிய வுட்டுடுங்க. ரெண்டு பொம்புளப் புள்ளியா வச்சிட்டு நா எப்படியோ பிழைக்கிறேங்கன்னு அழுவற…

அவுங்க ஏங்கிட்ட ‘ஏம்மா பயப்புடுறீங்க. உங்களுக்கு உதவி செய்யணு மின்னு தா வந்திருக்கிறோம். நாங்கள் உங்களைப் போல் விவசாயப் பெண்களுக்கு, நிலத்தில் இறங்கி வேலை செய்யும் பெண்களுக்கு, நல்லபடியாகப் பயிர் செய்து விளைச்சல் காண உதவி பண்ணனும்னு வந்திருக்கிறோம். உங்களுக்கு இந்த ஊருதான?’

‘ஆமாங்கம்மா, எங்கூட்டுக்காரருக்கோ, எனக்கோ சொந்தமா நெலமில்லீங்க. பங்காளிங்க பிரிச்சிட்டாங்க…”

‘நிசமாவா?’ன்னு கேட்டாங்க.

எங்கூட்டுக்காரர் பண்ண தப்புக்காக, அந்தத் தரிசு நெலத்தயும் புடுங்கிட்டுப் போகத்தா இப்பிடிச் சூழ்ச்சி பண்றாங்கன்னு நினைச்சிட்டு, ‘நீங்க போங்க இங்க நிலமும் இல்ல ஒண்ணுமில்ல’ன்னு கதவச்சாத்திட்ட…

ஆனாஅவுங்க வுடல. மறுநாளைக்கி, இந்தப் பாலாமணி அம்மாளக் கூட்டிட்டு வந்தாங்க. பாலாமணி கூட நா நடவுக்குப் போயிருக்கிற, அவுங்களுக்கு என்னியப் பத்தி நல்லாத் தெரியும். அவங்க தான்வா பயிற்சி வாங்குனதும் இப்பிடி இந்த கிராமத்துலன்னு துப்பு சொல்லியிருக்காங்க. அவங்க எல்லாம் எடுத்துச் சொன்னாங்க.

“பொம்பிளைன்னு ஏன் நம்மையே தாழ்வா நெனச்சுக்கணும்? இப்ப மத்தவங்க வயல்ல போயி, நடவு பண்ணுற, களை எடுக்கிற, அறுவடைக்கும் போறீங்க. இத்தையே நம்ம சொந்தமா இருக்கிற அறுபது சென்டிலோ, ஒரு ஏகரிலோ ஏன் செய்யக் கூடாது?’ன்னாங்க.

“அது என்னால முடியுங்களா? நா ஒரே ஆளு.”

“நீ ஒரே ஆளுதா. செய்யணும்னு நினைச்சா முடியும். நீ நினைக்கணும். உனக்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான்னு யாருமே இல்ல. அட, ஒரு உறவு கூடவா இரக்கமா இல்ல? நீங்க எல்லாத்தையும் நடக்காதுன்னுற கண்ணுல பார்க்காம, நடக்கும்னு பாருங்க. நாம்ப பொம்பளைங்க ரொம்பப் பேர் யோசிக்கறதே இல்ல. வாழ்வு வரும்போதும் யோசிக்கிறது இல்ல. தாழ்வு வரும்போதும் யோசிக்கிறது இல்ல. சரிதானா? யோசிச்சுப் பாருங்க…?”

அவங்க புட்டுப்புட்டுச் சொன்ன பிறகுதான் யோசிக்கணும்னு தோணிச்சி. வூட்டுக்காரரு லாரில லோடு கொண்டு போயிட்டு வாரப்ப, பூவு, பழம், துணி, மணின்னு கொண்ட்டு வருவாங்க. ஆசையா புள்ளைங்களுக்கும் குடுப்பாரு. அவரு குடிக்கிறாரா, குடிச்சிட்டு வண்டி ஓட்டுறாரா, எங்க சாப்புடறாரு, எதுனாலும் கேட்டனா, இல்ல. ஆம்புளங்க வெளில போவாங்க. பவுரானவங்க அவங்கதா எல்லாம்னு இருந்த பெறகு ஒரேடியாப் போனதும் நம்மால ஒண்ணும் ஆகாதுன்னு ஓஞ்சு போன நிலை மாறும். அவர் குடிச்சிட்டுத்தா வண்டு ஓட்டுனாரா, அவரு மேலத் தப்பான்னு கேக்கத் தோணல… எம் மேலியே எனக்கு நம்பிக்கையே இல்ல.

“இவங்க வந்து சொன்ன பிறகு யோசிச்சே.”

“எம் மாமியா, மருமகனத் துணையா, ஒரு ஆதரவா வச்சிட்டுக் கழனி வேலை செஞ்சாங்க. இப்ப நாத்தனாளுக்கு ரெண்டு மகன் இருக்கிறான். படிக்கவும் படிக்கிறா, கழனிக்கும் வாறான். நான் போயி ஏன் கேக்கக் கூடாதுன்னு தோணிச்சி.”

“மின்ன இந்த ரோசனையை யாருன்னாலும் சொன்னா ஊருல நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க. நாத்துனாரே, ஆரு குடியடி கெடுக்க வாரேன்னு பேசுமோன்னு பயந்தே.”

“இப்படியெல்லாம் சொல்லிட்டு, பயிற்சி கிளாசுக்கு என் பேரை எழுதிக்கிட்டாங்க. அஞ்சு நாளாக்கிப் புள்ளங்கள அக்கம் பக்கத்துல விட்டுப் போட்டுப் போனே. அங்கதா மண்ணை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்புறதிலேந்து, விதையைத் தேர்வு பண்ணி, திரம் மருந்து போட்டு வச்சு நாத்தங்கால் பயிர் பண்ணுவதெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க. எப்படி வேப்பம் புண்ணாக்கு உரமா போடுவது… கடலப் பயிருக்கு எப்படி செய் நேர்த்தி பண்ணுவது, புழுதி உழவு பண்ணுறப்பவே பூச்சி பாத்து அழிப்பதுன்னெல்லாம் சொல்லிக் குடுத்தாங்க. எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க… எல்லாம் கத்திட்டு வந்த பெறகு பூமிய வச்சிட்டு நா ஏ சோத்துக்குத் திண்டாடணும்னு தோணிச்சி.

“நாத்தனா வூடு பட்டாபிராம் பக்கத்துல… புருசன் செத்திட்டாரு. ஒரு மக கலியாணம் கட்டிருக்கு, ஒரு பய்யன் பி.ஏ. படிச்சிட்டு கழனி வேல செய்யிறா. இன்னொருத்தன் ப்ளஸ் டு படிக்கிறான்னாங்க.

“என்னப் பார்த்ததும் அவங்களே, மக ‘தான்வா’ பயிற்சிக்குப் போய் வந்து கடல போட்டு நல்ல விளைச்சல் எடுத்ததைச் சொன்னாங்க. அவங்க பையன் கருவமே இல்ல. விவசாயப் படிப்புப் படிக்கப் போறேன்னிச்சி. கூட்டியாந்தேன். பூமியப் பார்த்தோம். மண் பரிசோதனை முடிச்சி பத்து வண்டி ஏரி வண்டல் அடிச்சோம். ஆதிச்சப்புரம் கூட்டுறவு வேளாண் வங்கிக்குக் கூட்டிப் போச்சி. அவங்க ரொம்ப உதவி செஞ்சாங்க. நா நெல்லுப் போடலான்னு பார்த்தேன். அந்தப் புள்ள, நெல்லுக்குத் தண்ணி சவுரியம் இல்ல. மாணவாரி கடல பயிர் பண்ணலாம்னிச்சி.

“ஜி.ஆர்.ஐ. கடலை வித்து வாங்கி வந்தம். திரம் மருந்து கலந்து பாலதின் பையில் போட்டுக் குறுக்கி வச்சிட்டம். நெல்லு போல இதுல தண்ணி வுடக்கூடாது. பூமில ஈரம் பக்குவமா இருக்கணும். உழவோட்டிட்டே வாரப்ப ஒண்ணொன்னா விதைக்கணும். பிறகு எம்.என். மிக்ஸர் ஒரு கிலோவை ஒரு சட்டி மணலில் கலந்து தூவினோம். ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் நடுவுல ஒரு சாண் வுடனும். அப்பப்ப மழை பெஞ்சிச்சி. ஈரம் காயாம இருந்திச்சி. பதினைஞ்சு நா கழிச்சி களையெடுத்தோம். அப்பல்லாம் அது படிக்கப் போயிட்டது. எனக்குத் தயிரியம் வந்திட்டது. ஆளவச்சிட்டுக் களையெடுத்தேன். நாப்பத்தஞ்சி நாள் ஆனதும் ஜிப்சம் ஒரு இருபது கிலோவாங்கி, ஒவ்வொரு செடிக்கும் மண்போட்டு அணைச்சி விட்டோம். நூறு நாள்ள கடலை மண்ணுக்குள் தூர் இறங்கிச்சி. அப்ப ஒண்ணைப் புடுங்கிப் பாத்தம். கடலை புடிச்சிருந்திச்சி. ஒரே ஒரு தண்ணி மட்டும் ஏரிக்காவாயில கிடைச்சிச்சி. பிறகு பே மழைதான். எட்டு மூட்டை வேர்க்கடலை கிடைச்சிச்சி. பிறகு சொன்னாங்க. ஊடு பயிரா பயிறு உளுந்து போடலாமின்னு… இப்ப எங்க நாத்துனா குடும்பம் எனக்கு ரொம்ப ஒட்டிப் போச்சுங்க. அந்தப் பைய, கோயமுத்துார் விவசாய காலேஜில படிக்கிறா. படிச்சாலும் ஆம்புளயோ, பொம்புளயோ நாம சேத்தில கால வச்சாத்தா, ஊரே சோத்துல கை வைக்கணும்னு புரிய வைக்கணும். அச்சப்படக் கூடாதுங்க…”

கூட்டம் மாநாடு முடிந்து திரும்புகையில் செவந்திக்கு ஏதோ ஊட்டச்சத்து ‘டானிக்’ சாப்பிட்ட மாதிரி இருக்கிறது. கால் காணியில்லை, ஒரு ஏகரும் அறுபது சென்ட்டும் உள்ள முழு இடத்திலும் பயிர் பண்ண அப்பன் கடன் வாங்கித் தருவார். சின்னம்மாவின் கொல்லை மேட்டில், நாமும் ஏன் பாப்பம்மா சொன்ன கடலை பயிரிடக் கூடாது? அந்த பூமி ரங்கன் பெயரில் இருக்கிறது. இப்போது கணவர் சற்றே திருந்தி வருவது போல் நினைக்கிறாள். எனவே, அவர் மனசு வைத்துக் கடன் வாங்கித் தந்தால்… அதில் கடலையும், இதில் நெல்லும் பயிரிடலாமே…? இந்தத் தடவை முதலிலிருந்து எல்லாம் பாடம் படித்த படி செய்து விட வேண்டும்.

இரவெல்லாம் கிளர்ச்சியாக இருக்கிறது. அதிகாலையில் அயர்ந்து தூங்கி இருக்கிறாள்.

பொழுது விடிந்து, காலை வேலைகள் முடித்து, கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கிறாள். வாசலில் பேச்சுக் குரல் கேட்கிறது. அண்ணன்… அண்ணனும் அவள் புருசனும் பேசிக் கொண்டே படி ஏறி வருகிறார்கள்.

ஒ, பெண்சாதியையும் குழந்தைகளையும் விட்டு விட்டுத் தனியாக வந்திருக்கிறானா? என்ன விசயம் இருக்கும்? முதலிலேயே சந்தேகம் தான் தோன்றுகிறது. அப்பா பல் விளக்கிக் கொண்டிருக்கிறார். காறிக் காறிச் செம்பு நீரை வாயில் விட்டுக் கொப்புளிக்கிறார். அண்ணன் குரல் கேட்ட வெறுப்பா? அம்மா கொண்டாடிக் கொண்டாலும் அப்பா உள்ளூரச் சங்கடமடைந்திருக்கிறார் என்பதை அவள் அறிவாள். அந்தக் காறி உமியும் கொப்பளிப்பு வெறுப்பைப் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.

“அப்பா, நீங்க தப்பா நெனச்சிடக் கூடாது. பேபிக்கு டாக்டர் பிரைம்ரி காம்ப்ளக்ஸ்னு சொல்லி மருந்து குடுத்திட்டு வாரோம். இங்க ஹைஜினிக்கா இல்ல. சளியும் காய்ச்சலும் வரக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு. சின்னப் புள்ள, எல்லாரையும் போல, கேணித் தண்ணிய மொண்டு குடிக்கும். அத்தோட சுகந்தாவுக்கு ‘மென்ஸ்ஸ் டைம்’ வசதி இல்லாத இடத்தில இருந்து பழக்கமில்ல. அப்பா இங்க ஒரு பாம்பே டைப் கக்கூஸ் கட்டிடுங்க. அதனாலேயே இங்க வரச் சங்கடப்பட வேண்டி இருக்கு…” என்று அப்பாவிடம் எதற்கோ குழை அடிக்கிறான்.

“கட்டவேணான்னு நான் சொல்றனா? வந்து லீவு ரெண்டு மாசமும் இரு. எப்படிவூட்டக் கட்டணுமோ அப்படிச் செலவு பண்ணிக் கட்டு!”

செவந்தி பாத்திரங்களை உள்ளே கொண்டு வந்த கையோடு அவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கேட்க அந்த வாயிலிலேயே நிற்கிறாள்.

“செவந்தி ஏன் நிக்கிறே? நாங்க காபி ஒண்ணும் குடிக்கல. காபி கொண்டா…”

“காபிக்கு வைக்கிற…” என்று சொல்லிவிட்டு அவர்கள் பேசுவதைக் கேட்பதிலேயே அவள் தீவிரமாக இருக்கிறாள்.

“எனக்கு ரெண்டு மாசம் இங்க எப்படி இருக்க முடியும் அப்பா? தவிர இங்க டச் வுட்டுப் போயி ரொம்ப நாளாச்சி. மாப்பிள்ளதா இருக்காரு. வூட்ட இடிச்சிச் சவுரியமா கட்டிக்க வேண்டியது தான்?”

“ஒரு லட்சம் பணத்தை அனுப்பி வையி. மாடி போட்டு, குழா கக்குசெல்லாம் போட்டு நல்லா கட்டிடறோம். இந்த வெள்ளாமய நம்பி, வூடு கட்ட முடியாதப்பா இப்பதா செவந்தி ஏதோ போட்டு வெள்ளாம எடுத்தது ரொம்ப சிரமம். எனக்கும் வயிசாயிப் போச்சு. முடில. ஒழவு கூலி எழுபது எம்பதுங்கறா. அஞ்சேரு, ஆறேரு வச்சிப் பயிர் பண்ணி, வெள்ளாம எடுக்கறதப்பத்தி நெனக்கவே பயமா இருக்கு. அதுக்கும் ஆள் கிடைக்கல.” அப்பா பரவாயில்லையே என்று செவந்தி நினைத்துக் கொள்கிறாள்.

“இதையேதான் நானும் மாப்பிள்ளையிடம் சொல்லிக் கிட்டிருந்தேன். வெள்ளாமை பண்ண முடியலைன்னா வித்துக் காசாக்க வேண்டியதுதான? நானே ஒரு விசயம் கேள்விப் பட்டேன். இப்ப கடலூர் புவனகிரி எல்லாம் தோண்டி எண்ணெய் இருக்குன்னு கண்டுபிடிச்சி நிலமெல்லாம். ஏதோ ஒரு வெலக்கி சர்க்கார் ஆர்ச்சிதம் பண்ணிருக்கு. ஏரிக் கரைய சுத்தி இருக்கிற சின்னச்சின்ன கிராமம், குடிசை தரிசெல்லாம் ஒரு சாடிலைட் டவுன் ஷிப்பாக்கிடறதா பிளான் இருக்கிறதா கேள்விப்பட்டேன். இன்டஸ்ட்ரியல் டவுன்ஷிப்னு வேற சொல்லிட்டாங்க. அந்த இடம் வெலைக்கு வந்தா வித்துடறது நல்லது. அம்பதாயிரம் கண்டிப்பா கிடைக்கும். வித்துட்டு வீட்ட நல்லாக் கட்டுங்க. நாங்களும் வந்து இருக்கலாம்…”

பூமி நழுவுவது போல் செவந்தி அதிர்ச்சி அடைகிறாள்.

தோலக் கடிச்சி, துருத்தியக் கடிச்சி, ஆட்டக் கடிச்சி, மாட்டக்கடிச்சி மனிசனையே பதம் பாக்குறீங்களா?

“இத பாருங்க நா அந்தப் பூமில பயிர் வைக்கப் போற! அதெல்லாம் விக்கிய முடியாது! சின்னம்மா பூமி. என் சங்கிலிய சின்னம்மாக்குக் குடுத்தேன். நான் பயிர் வைப்பேன்!”

இப்படி ஓர் இடையீட்டை அவர்கள் எதிர்பார்க்க வில்லை. அப்பா மவுனமாக இருக்கிறார்.

அண்ணன்தான் அதிகாரக் குரலில் அதட்டுகிறான்.

“இதபாரு செவந்தீ! உனக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்ல. வீடு என் உரிமை. அந்த நிலமும் உன் புருசன் பேரில இருக்கு. அதுனால கம்முனு இரு!”

செவந்திக்கு ஒர் அரக்கனைக் கட்டிப் போட்டாற் போல் இருக்கிறது.

“என்ன அநியாயம்? சின்னம்மாவுக்கு மூவாயிரம் தேறாதுன்னு வித்திங்க. எழுதி வாங்கிட்டீங்க. இப்ப எனக்கு ஒண்ணுமே உரிமையில்லைன்னு சொல்றீங்க? ஏங்க, கேட்டுட்டுச் சும்மா உக்காந்திருக்கிறீங்க?”

குரல் கக்கலும் கரைசலுமாகப் பீறி வருகிறது.

“இதபாரு செவந்தி, நீ எதுக்கு முந்திரிக் கொட்டை போலத்தலையிடுற? எனக்கு என்ன செய்யணும்னு தெரியும். நீ பேசாம இரு.”

“அந்தப் பூமில என்னத்த வெளயும்? ஏரில தண்ணி இல்லை. ஒரு பக்கம் அரசியல்வாதிகளின் ஆளுங்க குட்ச போட்டுட்டு உட்கார்ந்திருக்காங்க. நம்ம நிலத்திலும் ஒண்ணும் பண்ண முடியாதபடி எவங்கிட்டன்னாலும் பத்துப் பத்துன்னு பணம் வாங்கிட்டு முப்பது பேரைக் கொண்டாந்து வைப்பானுவ. இப்படித்தான் மட்ராஸ் பூர நடக்குது. பேசாம மில்லுகாரர் வாங்கிக்கிறார்னா குடுத்திட்டு ரொக்கம் வாங்க. வூட்ட நல்லபடியாக் கட்டலாம். இல்லாட்டி ஏன் கடைய ஆட்டோ ஷாப்பாக்க வசதியாக இருக்கும்…”

“அதெல்லாமில்ல. எனக்கு லோன் வாங்கித் தருவீங்க. நா மணிலாக் கொட்டைப் பயிர்வைப்பேன்…”

“இத பாரு செவந்தி, நீ வீண் கனவு காணாத, லோன் லாம் எடுக்க நாவரமாட்டே…”

‘நான் பயிர் பண்ணுவே பாருங்க!’ மனசுக்குள் சபதம் செய்து கொள்கிறாள் செவந்தி.

– தொடரும்…

– கோடுகளும் கோலங்களும் (சமூக நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *