யாதுமாகி நின்றான்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 20, 2022
பார்வையிட்டோர்: 2,466 
 

“அம்மா ! நாளைக்கு அனுஷாவோட பிறந்த நாள் விழாவுக்கு அனிலும் , அமலாவும் போகும்போது நீயும் கூடப் போற..

சரியா மூணு மணிக்கு ரெடியா இருக்கணும்..பார்ட்டி நாலு மணிக்கு ஆரம்பிக்குது .. ஏழு மணிக்கெல்லாம் முடிஞ்சிடும்..

என்ன சொன்னது காதுல விழுந்ததா..?என்னவோ யோசனையிலேயே இருக்கியே….! அம்மா… உன்னத்தான்…!”

“என்ன..? என்ன சொன்ன….?”

“அம்மா…? நீ காலம் முழுக்க இப்படியேதான் இருக்கப் போறியா..? என்னால முடியலம்மா….!”

சுஜாதா அம்மாவின் தோளைத்தொட்டு உலுக்கினாள்…

“நான் போகமுடியாது..என்ன தொந்தரவு பண்ணாதடா !! ப்ளீஸ்…!”

கோகிலா அழாத குறையாய் கெஞ்சினாள்..

தேவனோடு அவள் மகிழ்ச்சி , ஆனந்தம் , சிரிப்பு ஏன் உயிரே அவளை விட்டு போனதுபோல் , பித்து பிடித்தது போல்தான் இருக்கிறாள்..

“அம்மா..தம்பி போன வருத்தம் எனக்கு மட்டும் இல்லியா..? ஆறு வருஷமாச்சு..! நீயா மனசு வச்சா மட்டுமே இந்த டிப்ரஷனிலிருந்து வெளிய வர முடியும்..எத்தன கவுன்சிலிங் , மருந்து , மாத்திரை..? ப்ளீஸ்மா…!!? நான் சொன்னா கேப்பியா , மாட்டியா…? நோ.. இன்னைக்கு நீ போய்தான் ஆகணும்…மத்த குழந்தைகளைப் பாத்தா மனசுல ஒரு உற்சாகம் பிறக்கும்…!

உனக்கு வேண்டிய டிரெஸ் எல்லாம் தயாரா எடுத்து வச்சிட்டேன்…

அனிலும், அமலாவும் உன்ன நல்லா பாத்துப்பாங்க…!!யூ ஆர் கோயிங்…!!

***

“பாட்டி..நேரமாகுது… எல்லாரும் வந்திருப்பாங்க…

அம்மா..நாங்க இரண்டுபேரும் தனியா போய்ட்டு வருவோம்… பாட்டிக்கு வரப்பிடிக்கலன்னா ஏம்மா கட்டாயப்படுத்துறீங்க…?“

அமலாவுக்கு பொறுமையில்லை…!

அனுஷா அவளுடைய பெஸ்ட் ஃபரெண்ட் ஆச்சே…!

“நத்திங் டூயிங்..பாட்டி கண்டிப்பா வராங்க….மணிமேகலையோட பாட்டி தாத்தா கூட வராங்களாம்….அவுங்க கிட்ட உக்கார வை… லெட் ஹர் ஹாவ் எ குட் டைம் டுடே..!”

காரில் உட்கார்ந்துமே வியர்த்து கொட்டியது கோகிலாவுக்கு…வெளியே வந்து நாலு வருஷம் ஆயிருக்குமா…?”

“பாட்டி….பார்ட்டிக்குத்தானே போறோம்… பீ சியர் ஃபுல்…”

அனில் பாட்டியை இறுக்கி கட்டிக் கொண்டான்…அப்பா மாதிரியே முரடு….

“டேய் விடுடா..பாட்டிக்கு வலிக்கும்….”

“பரவாயில்லை அமலா…..”

பாட்டிக்கு மனசு தான் வலித்தது…

அனுஷா வீடு நெருங்க நெருங்க கோகிலாவுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது….

“வாங்க…கோகிலா ஆன்ட்டி… உங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு…வாங்க…..! மணிமேகலையோட தாத்தா , பாட்டிய அறிமுகப்படுத்தி வைக்கிறேன்…”

அனுஷாவின் அம்மா அவள் கைகளைப் பற்றிக் கொண்டாள்…

அனிலும், அமலாவும் மாயமானார்கள்…

அனுஷாவின் அம்மா பாவனா , கோகிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தவள்,

“ஹாய்….பாவனா…!என்ற குரல் கேட்டு திரும்பினாள்…

சினேகாவின் அம்மா பவித்ரா..!!

“ஹாய் பவி….எப்போ டெக்ஸாஸிலேர்ந்து வந்த ?“

கோகிலாவை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு பவியுடன் உள்ளே மறைந்தாள் அனுஷாவின் அம்மா..

கோகிலாவுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது…மயக்கம் வரும்போல இருந்தது…

‘இந்த அனிலும், அகிலாவும் எங்க போய்த் தொலைஞ்சாங்க…? சுஜாவுக்கு எத்தனை சொன்னாலும் புரியாது….எனக்கு எதுக்கு இந்த தண்டனை..?’

கோகிலாவுக்கு தலை சுற்றுவது மாதிரி இருந்தது.. சட்டென்று அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..

கைக்குட்டையை எடுத்து கண்ணில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டாள்..

“பாட்டி..ஆர் யூ ஓக்கே….?”

கனிவான ஒரு குரல்..மென்மையான பூங்கரம் அவளது கைகளைப் பற்றிக் கொண்டது…

“அழறீங்களா பாட்டி….?”

கண்ணைத் துடைத்தபடி நிமிர்ந்து பார்த்தாள்..

ஒரு ஒன்பது அல்லது பத்து வயதில் ஒரு சிறுவன்..சுருண்ட முடி..வண்டுக் கண்கள்… மாநிறம்….!

தேவனா….?

தேவன் போனபின் பார்க்கும் சிறுவர்களெல்லாம் தேவனாகவே அவள் கண்ணுக்குத் தெரிவார்கள்..

“பாட்டி…எம்பேரு அகிலன்…. நானும் அனுஷாக்கா படிக்கிற ஸ்கூல்லதான் படிக்கிறேன்… எங்க அக்கா யாமினி , அவளோட க்ளாஸ் தான்….

பாட்டி.. உங்களுக்கு உடம்பு சரியில்லயா..? ஏன் கையெல்லாம் நடுங்குது…. ?

பயப்படாதீங்க…!! அதோ பாருங்க அனிலும் , அமலாவும்….உங்கள விட்டுட்டு எங்கயும் போகமாட்டாங்க…அவுங்களையும் எனக்கு தெரியும்…!

குடிக்க தண்ணி கொண்டு வரேன் இருங்க….!”

யாரிவன்…? எங்கிருந்து வந்தான்…?

***

சொன்னபடியே ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தான்.. தண்ணீருடன் அல்ல..

ஒரு கிளாசில் ஜூஸ். கையில் ஒரு காகிதத்தட்டில் இரண்டு பிஸ்கெட்டுகள்..

“பாட்டி இது ஆப்பிள் ஜூஸ்.. உடம்புக்கு நல்லது..இத சாப்பிடுங்க..கேக் வெட்டி, சாப்பிட ஒரு மணிநேரம் ஆகும்..இப்போ ஒரு மாஜிக் ஷோ இருக்கு..வாங்க..சீக்கிரம் போய் முன் வரிசையில் உட்காரலாம்…!”

“மாஜிக் ஷோ வா..? வேண்டாம்..நீ போய் பாரு… நான் இங்கியே உக்காந்து இருக்கேன்….!”

“பாட்டி.. நான் உங்கள இங்க தனியா விட்டுட்டு போகவே மாட்டேன்..வாங்க பாட்டி….!!”

இழுத்துக் கொண்டு போய் முதல் வரிசையில் உட்கார வைத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

கோகிலாவுக்கு சீக்கிரம் அந்த இடத்தைவிட்டு கிளம்பவேண்டும்போல இருந்தது…

“பாருங்க..அந்த தொப்பியிலிருந்து வரிசையா ரிப்பன்…”

“அதோ..பாக்கெட்டிலேர்ந்து ஆறு முயல் குட்டிங்க..!! “

அகிலன் சொல்வது ஒன்றுமே கோகிலா காதில் விழவில்லை..

“கூட்டத்திலேர்ந்து யாராவது வாங்க..நீல சாரி…! அம்மா மேல வரீங்களா…?”

“பாட்டி..உங்களத்தான் வரச்சொல்றாரு ..கமான்.. வாங்க.. நானும் கூட வரேன்..”‘

“நோ அகிலன்… லீவ் மீ அலோன்…”

“வாங்கம்மா..பயப்பட ஒண்ணுமேயில்ல..”

மெஜீஷியன் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து அவள் கையைப் பற்றி அழைத்துப்போனான்…

“இந்த சிலேட்டில உங்களுக்கு பிடிச்சவங்க பேரை எழுதுங்க…யாருக்கும் காட்டாதீங்க…!”

‘தேவன் ‘என்று எழுதப் போனாள்…

“சரி.. குழந்தைகளா…! நான் அந்த சிலேட்ட பாத்தேனா…?”

“நோ..! நோ…!”

எல்லா குழந்தைகளும் ஒன்றாக கத்தினார்கள்…

“இப்போ நான் சொல்றேன்..நீங்க எழுதின பேர் ‘அகிலன்‘..சரியா…?“

இல்லை என்று தலையாட்டப் போனவள் சிலேட்டை திருப்பி காண்பித்தாள்…

அவள் கண்களை அவளே நம்ப முடியவில்லை…!

அவளையறியாமல் அகிலன் என்று எழுதிவிட்டாளா…? இது மாயமா? இல்லை தேவன் இடத்தை அகிலன் பிடித்துக் கொண்டானா…?

“கூட்டத்தில அகிலன் யாராவது இருக்கீங்களா. ?”

அகிலன் எழுந்து நின்றான்..எல்லோரும் பலமாகக் கை தட்டினார்கள்.

கோகிலாவுக்கு உற்சாகம் பிறந்து விட்டது..

மாஜிக் ஷோவில் வைத்த கண்ணை எடுக்கவில்லை…

அவளா கைதட்டுகிறாள்..? சிரிக்கிறாள்…?

தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் கோகிலா..

“அகிலன்..தாங்யூ டியர்…இது மாதிரி சிரிச்சு எத்தன வருஷமாச்சு..?”

“பாட்டி..உங்க பேரென்ன…?”

“கோகிலா….!”

“நான் கோகிலா பாட்டின்னு கூப்பிடலாமா…? ஏன்னா.. வீட்ல எனக்கு இன்னொரு பாட்டி இருக்காங்க….ஜெயா பாட்டி…”

“ஷ்யூர்…..!

“இதோ எங்கம்மா வந்துட்டாங்க..!”

“அகிலன் போலாமா…? யாமினி எங்க…?”

“அம்மா..இவங்க என்னோட புது ஃப்ரெண்ட்.. கோகிலா பாட்டி…அமலாவோட பாட்டி…”

‘நீ தவமாய் தவமிருந்து இப்படிப்பட்ட பிள்ளையைப் பெற்றிருக்க வேண்டும்..’

கோகிலா மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

“பாட்டி.. நீங்க கட்டாயம் வீட்டுக்கு வரணும்..அம்மா உங்களுக்கு ஃபோன் பண்ணுவாங்க…”

“ஆமாம்மா..அகிலனுக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்குன்னு தோணுது…அமலா வீட்டுக்கு வரும்போது நீங்களும் அவசியம் வாங்க…”

அகிலனை மனதில் சுமந்து கொண்டு கிளம்பினாள் கோகிலா….!

“அகிலன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுதா பாட்டி…? ஸ்கூல்லயும் அவன எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்…இல்லியா அனில்…?“

***

“அமலா…யாமினி வீட்டுக்கு அடிக்கடி போவியே..? ஒரு வாரத்துக்கு மேலாச்சே..!!”

“ஏன் பாட்டி.. அகிலன பாக்கணுமா..?”

“அதுக்கில்ல… சும்மாதான்….”

“அம்மாவே ஆசப்பட்டு வெளிய போக ரெடியா இருக்காங்க… கூட்டிட்டு போ அமலா…”

“சரிம்மா.. நாளைக்கு அவளோட ஒரு ப்ராஜெக்ட் பண்ணனும்.. அனுஷாவும் வருவா…காலைல போய்ட்டு சாயங்காலம்தான் வருவேன்…பரவாயில்லையா பாட்டி…?”

“எனக்கு ஓக்கே….”

கோகிலா முதல் முறையாக தனக்கு பிடித்த ஒரு புடவையை எடுத்து கட்டிக் கொண்டாள்..

அகிலனுக்காக எதையெதையோ பாக் பண்ணிக் கொண்டிருந்தாள்..

நடுநடுவே ஒரு பாட்டை வேறு முணுமுணுத்துக்கொண்டு….

“ஹாய்..கோகிலா பாட்டி….!”

அகிலனின் வீடு கோகிலா எதிர்பார்த்ததைவிட பிரம்மாண்டமாய் இருந்தது.

அகிலனுடன் கூடவே ஒடி வந்தது ஒரு நாய்க்குட்டி..

“அப்பு..கீப் கொயட்..உக்காரு…”

மந்திரத்தால் கட்டுப் பட்டது போல் உட்கார்ந்தது அப்பு..

“இவங்க என்னோட ஃபிரண்ட்…பேசாம இருக்கணும்..சரியா….?”

“வாங்க.. ஒண்ணும் பண்ணாது… அம்மாவும் அப்பாவும் மீட்டிங் போயிருக்காங்க..வாங்க..ஜெயா பாட்டிய பாக்கலாம்…”

ஜெயா பாட்டி ஒரு வீல் சேரில் உட்கார்ந்திருந்தாள்…

“வாங்க..உங்களப்பத்தி அகிலன் நிறையவே சொல்லியிருக்கான்…”

சொல்வதற்கு என்ன இருந்திருக்கும்…?

“இன்னைக்கு ஒரு மணிநேரம் நான்தான் பாட்டியோட ‘பேபி சிட்டர்’ சுகுணா அக்கா வர வரைக்கும்….நானும் பாட்டியும் ஒரு கார்ட்டூன் பாப்போம்… அப்புறம் போர்ட் கேம் விளையாடுவோம்…இன்னைக்கு நீங்களும் ஜாயின் பண்ணப் போறீங்க..! சரியா..?”

ஒருமணி நேரம் இமைப்பொழுதில் பறந்து போனது…

“வாங்க..சுகுணா அக்கா வந்தாச்சு… நாம தோட்டத்த சுத்தி பாப்போம்…!!”

“பாட்டி.. நீங்க ஏன் பார்ட்டியில வருத்தமா இருந்தீங்க.. ? நீங்க அழுதத நான் பாத்தேன்…”

இந்த சின்னஞ்சிறு பாலகனிடம் தன் துக்கத்தை பகிர்ந்து கொண்டால் சரியாகுமா..? அவனுக்கு எவ்வளவு தூரம் புரியும்..?

கோகிலாவின் மௌனம் அகிலனை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை..அதுவே அவளை அவனிடம் பேசத் தூண்டியது…

“ஆமா.. அகிலன்.. !நான் வெளியே வரதே இல்ல..ஆறு வருஷமாச்சு… எனக்கு தேவன்னு ஒரு பையன் இருந்தான்… அவன் இப்போ இல்ல… எனக்கு அவன் போனப்புறம் எதுவுமே பிடிக்கல..அன்னைக்குத்தான் முதல்ல வெளில வந்தேனா..!! அதான்…..”

“பாட்டி.. தேவன் அண்ணாவுக்கு என்னெல்லாம் பிடிக்கும்..? உங்களுக்கு அவங்க கிட்ட ரொம்ப பிடிச்சது என்ன….?”

கொஞ்சமும் தயக்கமில்லாமல் உண்மையான அக்கறையுடன் , ஆர்வத்துடன் , அப்பாவித்தனத்துடன் அந்த பத்து வயது சிறுவன் கேட்ட கேள்விகள் அவளது மனதில் இதுவரை புதைந்து கிடந்த எண்ணங்களை தோண்டி எடுத்தது .!

ஒரு பாண்டோரா பாக்ஸை திறந்து விட்டது போல, மளமளவென்று வந்து கொட்டின வார்த்தைகள்…

கோகிலா நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனாள்..

அகிலன் அவளது கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கேட்டுக் கொண்டே நடந்தான்….ஒரு வார்த்தை கூட குறுக்கிடாமல்….!

“என்ன ? பாட்டியும் பேரனும் சாப்பிட வராம தோட்டத்திலேயே ஐக்கியமாய்ட்டீங்க…? கமான்..எவ்ரிஒன் இஸ் வெய்ட்டிங் ஃபார் யூ!”

***

இப்பொழுதெல்லாம் அடிக்கடி அகிலனைப் பார்க்க கிளம்பி விடுகிறாள் கோகிலா.

சுஜாவுக்கு அம்மாவின் இந்த மாற்றம் இன்ப அதிர்ச்சியை தந்தது..

“ஏம்மா.. அகிலன் உனக்கு என்ன சொக்குபொடி போட்டான்..அவன பாக்காட்டா உனக்கு தூக்கம் வராது போல இருக்கே…

“சுஜா..அகிலனோட அம்மாவும் அப்பாவும் எவ்வளவு பெரிய வேலைல இருக்காங்க தெரியுமா..? ஆனாலும் அவன எப்படி வளத்திருக்காங்க தெரியுமா…?

அவுங்க வீட்டு வாட்ச்மேன் கிட்ட , தோட்டக்காரன் கிட்ட எத்தன மரியாத..?

“இவர்தான் எங்க வீட்ட பத்திரமா பாத்துக்கிற சிங்காரம் மாமா…”

“இவர் தோட்டக்கார தாத்தா கிட்டுச்சாமி..பாருங்க.இவர் மட்டும் இல்லைனா இந்த பூவெல்லாம் இப்படி பூத்து குலுங்குமா…?”

ஒவ்வொருத்தரையும் அவன் எவ்வளவு உசரத்தில வச்சிருக்கான்னு நீ பாத்தாதான் நம்புவ..

நம்ப அபார்ட்மென்ட்ல இருக்கிறவுங்க ‘ வாட்ச்மேன்.. வாட்ச்மேன் ‘னு கத்தினா , குழந்தைகளும் அப்படித்தானே வளரும்.அவனுக்கும் ஒரு பேர் இருக்கும்னு நாமதானே சொல்லித்தரணும்…

“அம்மா அகிலாவும் அனிலும் கூட சொல்லுவாங்க..அவன பிடிக்காதவுங்களே பள்ளிக்கூடத்தில கெடையாதுன்னு…”

“சுஜா..!! நான் மனசில ஒண்ணு நினச்சிருக்கேன்..சொல்லலாமா…?”

“அம்மா..மனசுக்குள்ள எதையும் பூட்டி வைக்காம நீ இப்படி கேக்கமாட்டியான்னுதான் நான் இத்தனை நாளா ஏங்கியிருக்கேன்..! சொல்லும்மா….!”

“வர சனிக்கிழமை தேவனோட பிறந்தநாள்.. அகிலனையும் அவுங்க அப்பா, அம்மா அக்கா எல்லாரையும் சாப்பிட கூப்பிட்டா என்ன?”

அம்மா வாயிலிருந்து இப்படி ஒரு வேண்டுகோளை கனவிலும் எதிர்பார்க்கவில்லை சுஜாதா….

தேவனுடைய பிறந்த நாளுக்கு ஒரு வாரம் முன்பிருந்தே அறையில் போய் கதவை சாத்திக்கொண்டாளென்றால் , சுலபத்தில் வெளியே வரமாட்டாள்..அழுதழுது கண்ணும் முகமும் வீங்கியிருக்கும்.

ஒருவாய் கஞ்சிக்கு கெஞ்ச வேண்டும்..

இன்றைக்கோ விருந்து கொடுக்க தயாராய் இருக்கிறாள்..?

எப்படி இந்த மாயம் நிகழ்ந்தது…?

“அம்மா..நானே அகிலனோட அம்மா அப்பாவ பாக்கணும்னு எவ்வளவு ஆசையா இருக்கேன் தெரியுமா..?

“டன்!”

அம்மாவை இறுகச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்…

***

“சுஜா.. இன்னைக்கு நான்தான் சமைக்கப்போறேன்…நீ காய்கறி மட்டும் வெட்டிக் குடு.. போதும்..”

“அம்மா நீ சமையலறைக்குள்ள நொழஞ்சே வருஷக்கணக்காச்சே…!! முடியுமா…?”

“கவலையே வேண்டாம்… ஐயம் இன் ஃபுல் ஃபார்ம்…”

பன்னிரண்டு மணிக்குள் எல்லாமே ரெடி.. இத்தனையும் அம்மாவால் தனியாக எப்படி செய்ய முடிந்தது….?

“அம்மா..வாசல்ல கார் சத்தம் கேக்குது… அவுங்க தான்னு நெனைக்கிறேன்…”

வீல் சேரில் ஜெயாவைத் தள்ளிக் கொண்டு வந்த அகிலனைப் பார்த்து அப்படியே மெய்மறந்து நின்றாள் கோகிலா..

“ஜெயா..நீங்க வருவீங்கன்னு கற்பனையில கூட நெனைக்கல..உங்க கூப்பிடக்கூட தோணல.. ஐயம் வெரி சாரி..”

“உங்க வீட்டுக்கு வர எதுக்கு அழைப்பு வேணும்..? என்ன மாசத்துக்கு ஒரு தடவையாவது வெளியே கூட்டிட்டுப் போகாம இருக்க மாட்டான் அகிலன்….”

“வாங்க..நாம எல்லாரும் மேசையில தட்டெல்லாம் எடுத்து வைக்கலாம்…”

அகிலனின் அன்புக்கட்டளைக்கு அமலாவும் , அனிலும் , யாமினியும் உடனே அடிபணிந்தார்கள்.

“அனிலோட அப்பாவுக்கு கனடால ஒரு வருட ப்ராஜெக்ட்…ஆனா அகிலனப் பத்தி அம்மா அவர்கிட்ட நிறையவே சொல்லியிருக்காங்க…!!“

“பாட்டி… சூப்பர்…! இதெல்லாம் தேவன் அண்ணாவுக்கு பிடிச்ச ஐட்டம் இல்லியா…?”

சுஜாவுக்கு மனசில் ஒரு குறுகுறுப்பு..தனக்கு எப்படி மறந்து போனது..?

“அகிலன் உனக்கு தேவனப்பத்தி இவ்வளவு தெரிஞ்சிருக்கே….!”

“கோகிலா பாட்டி.. நான் டிஸர்ட் என்னன்னு கரெக்ட்டா சொல்லவா? கேரட் அல்வா….! சரிதானே ?”

கோகிலா அவனை அப்படியே ஓடிவந்து கட்டிக் கொண்டாள்….

‘இத்தனை நாள் எனக்கு ஏன் தோணமல் போனது..? தேவனை நினத்து கொண்டாட இத்தனை விஷயங்கள் இருக்கும்போது, சதா அழுது கொண்டு , இருப்பவர்களின் நிம்மதியையும் குலைத்து….!’

தேவனைப் பற்றிய ஆயிரம் கேள்விகள் அம்புகளாய் அவள் மார்பை இத்தனை நாள் துளைத்துக் கொண்டிருந்தது..இப்போது அவை பூமாலைகளாய் மாறியது யார் செய்த மேஜிக்…?

எத்தனையோ ஆலோசனைகள் , மருந்து மாத்திரைகள் சாதிக்க முடியாததை இந்த கள்ளம் கபடமற்ற சிறுவன் சாதித்து விட்டானே…?

இழப்பையும் கொண்டாடக் கற்றுக் கொடுக்க ஒரு பத்து வயது சிறுவனால் எப்படி சாத்தியமானது..?

இவன் தேவதூதனா….?

இல்லையில்லை.. இவன் தேவனே தான்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *