கொரோனா பாடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 6,975 
 
 

நம் சரித்திரத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு); கிறிஸ்து பிறந்ததற்குப் பின் (கி.பி) என்று இருப்பது போல, தற்போது கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்குப் பின் (கொ.மு; கொ.பி.) என்று தற்போதைய சரித்திரத்தை புதிதாக எழுத வேண்டும் போல.

ஒரு காலத்தில் பர்த்டே பார்ட்டி; பேச்சிலர் பார்ட்டி; நிர்வாக ஆனுவல் டே; என்று எதையாவது காரணம் காட்டி, கூடி கூடிக் கும்மியடித்தோம். மால்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத் தலங்கள் எனக் கூடி கூடிக் கொக்கரித்தோம். காரணங்களைத் தேடித் தேடி ஈஷிக் கொண்டோம்.

நினைத்தபோது குடும்பத்துடன் விமானம் ஏறி சுற்றிப் பார்க்க என்று அயல் நாடுகளுக்குப் பறந்தோம். மொபைலில் தடவித் தடவி வேண்டியவற்றை சாதித்துக் கொண்டோம்.

இனிவரும் காலங்களில் இதெல்லாம் கண்டிப்பாக சாத்தியப் படாது என்று தோன்றுகிறது. இனி மக்கள் எளிதாகக் கூடிவிட முடியாது.

இதில் கொடுமை என்னவென்றால், லாக்டவுன் என்று உலக நாடுகள் அனைத்தும் அறிவித்த பிறகு, அன்றாட வேலையே இல்லாதவர்கள்; இருந்த நல்ல வேலையை இழந்தவர்கள்; தவிர, பெரிய பெரிய நிறுவனங்கள் கூட ப்ரமோஷன், இன்க்ரிமென்ட் என எல்லாவற்றையும் நிறுத்தி வைத்ததுதான். ஒயிட் காலர் ஜாப் என்று பீற்றிக்கொண்ட மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களும் இதில் அடக்கம். அரசாங்கம் எவ்வளவு கரடியாகக் கத்தினாலும், பலருக்கு ஏப்ரல் மாத சம்பளமே இன்னமும் க்ரிடிட் ஆகவில்லை.

பிராபகருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பார்ப்போம். பிராபகர் எம்.ஈ. படித்துவிட்டு அதற்கும்மேல் எஸ்.ஏ.பி என்று எதையோ ஸ்பெஷலாக கற்றுக்கொண்டு, கடந்த பதினைந்து வருடங்களாக, லக்ஸம்பர்க்கை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பெரிய ப்ராடக்ட் கம்பெனியில் சென்னையில் மேனேஜராக இருப்பவன்.

கை நிறைய சம்பளத்துடன் நங்கநல்லூரில் கம்பெனி மூலமாக வாடகைக்குப் பெரிய வீடு, இன்னோவா கம்பெனிக் கார் என மனைவி இரண்டு குழந்தைகளுடன் குதூகலமாக வாழ்க்கையை நடத்தி வருபவன்.

அவனுடைய நிறுவனம் வங்கிகள் சம்பந்தப்பட்ட மல்டிபான்ட் (multifond) மற்றும் டிரான்ஸ்பர் ஏஜென்ட் (transfer agent) என்கிற ஒரு நிஷ் (nish) ப்ராடக்ட்டை மென்பொருளாக தயாரித்து அதை உலகில் உள்ள பெரிய பெரிய வங்கிகளுக்கு விற்பனை செய்து வந்தன.

கொரோனா வைரஸ் லக்ஸம்பர்க்கிலும் வெகுவாகப் பரவியதால் அங்கும் ஜூன் ஒன்றாம் தேதிவரை லாக்டவுன் அறிவித்து விட்டனர். அதனால் வங்கிகளிலிருந்து வரவேண்டிய பணம் ப்ராடக்ட் கம்பெனிக்கு உடனே வந்து சேரவில்லை.

அதைவிடக் கொடுமை ப்ராடக்ட் கம்பெனியின் நிறுவனர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டார்.

மார்ச் இருபத்தி ஐந்தாம் தேதி முதல் இந்தியாவில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. ஒர்க் ப்ரம் ஹோம் என்று ஹெச்.ஆர் மெயில் மூலம் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை விட்டதால், பிரபாகர் வீட்டில் இருந்தபடியே லேப்டாப்பில் தன் கடமைகளைச் சரிவர செய்துவந்தான். மார்ச் மாத சம்பளம் அனைவருக்கும் ஒழுங்காக வழங்கப்பட்டது.

ஏப்ரல் கடைசி வாரத்தில் ஹெச்.ஆரில் இருந்து ஒரு நீண்ட மெயில் வந்தது. அதில், தவிர்க்க முடியாத பல காரணங்களால் ஏப்ரல் முப்பதாம் தேதியுடன் கம்பெனி இழுத்து மூடப் படுவதாகவும், எனவே ஊழியர்கள் தங்களிடம் உள்ள லேப்டாப், பென்ட்ரைவ், நிலுவையில் உள்ள லோன் போன்றவற்றையும், இன்னபிற கம்பெனியின் சாதனங்களையும் உடனே திருப்பிக் கொடுத்துவிட்டு, இறுதி செட்டில்மென்ட் செய்து கொள்ளலாம். ஏப்ரல் மாதம் அனைவரும் வீட்டில் இருந்ததால், அதையே நோட்டீஸ் பிரியடாக எடுத்துக்கொண்டு, ஏப்ரல் இறுதிவரை சம்பளம் தரப்படும். கான்டாக்ட் ஹெச் ஆர் ஈஷ்வர் என்று சுற்றறிக்கை சொன்னது.

பிரபாகர் கடுப்பாகி விட்டான்.

உடனே ஓடிச்சென்று தன்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரைத் தேடி எடுத்துப் படித்துப் பார்த்தான். அதில் மூன்று மாதங்கள் நோட்டீஸ் பிரியட் இரு பக்கங்களிலும் தர வேண்டும் என்று தெளிவாக இருந்தது. அந்தக் கடிதம் கம்பெனியின் எம்.டியால் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், அவர் சென்னை வந்தபோது ஒப்பமிடப்பட்டு பிரபாகருக்கு தரப்பட்டிருந்தது.

தற்போதைய ஹெச்.ஆர் மனேஜர் ஈஷ்வர் ஐந்து வருடங்களுக்கு முன்பாகச் சேர்ந்தவன்.

பிரபாகர் உடனே கணக்கிட்டுப் பார்த்தான். மூன்று மாத நோட்டீஸ் பிரியட் என்றால் அவனுக்கு ஏழரை லட்ச ரூபாய் வரவேண்டும். தவிர ஏப்ரல் மாதச் சம்பளம். நடுவில் இவன் நான்கு லட்ச ரூபாய்க்கு மல்டி பர்பஸ் லோன் எடுத்திருந்தான். அதில் ஒரு சிறு பகுதியை வட்டியுடன் திருப்பிக் கட்டிவிட்டான். தன்னிடம் இருக்கும் கம்பெனி ஆப்பிள் லேப்டாப் ஒரு லட்சம் ரூபாய். வீட்டு வாடகைவேறு இரண்டு மாதங்களாக கம்பெனி வீட்டின் ஓனருக்கு செலுத்தவில்லை. அதையும் மொத்தம் ஐந்து மாதத்திற்கு தர வேண்டும்.

கால்குலேட்டரை எடுத்துவைத்து நிதானமாக கணக்குப் போட்டுப் பார்த்தான். இன்றே மூன்று மாத நோட்டிஸ் பிரியட் என்று ஆரம்பித்தாலும், பிரபாகர் ஐம்பத்துமூன்று ரூபாய் ஐம்பது காசுகள் மட்டும் கம்பெனிக்கு திருப்பித்தர வேண்டும். அவ்வளவுதான். இது தவிர, இரண்டு வருடங்களுக்கு முன் இவனுக்கு கொடுக்கப்பட்ட இன்னோவா ஆட்டோமேடிக் 2.8 Z லக்ஸுரி கார் இவனிடம் உள்ளது. ஆனால் அது கம்பெனி பெயரில் உள்ளது.

யோசித்துப் பார்த்து, தன்னை பிரபாகர் நிதானித்துக் கொண்டான். ஈஷ்வர் அனுப்பிய மெயிலை கண்டுகொள்ளவேயில்லை.

மே மாதம் முதல் வாரத்தில் ஈஷ்வர் போன் பண்ணான்.

“ஹாய் பிரபா, நீ என்னுடைய ஈ மெயில் படித்திருப்பாய். அதன்படி லேப்டாப், கம்பெனி கார், வாங்கிய லோன் அனைத்தையும் திருப்பித்தர வேண்டும். எப்ப வர்றே?”

“எனக்கு நோட்டீஸ் பிரியட் மூன்று மாதங்கள் ஈஷ்வர்… பதினைந்து வருடங்களுக்கு முன்பாக எம்.டியே எனக்கு கொடுத்த ஆர்டர். நான் நேர்மையாக கணக்குப் போட்டுப் பார்த்தேன். நான்தான் கம்பெனிக்கு ஐம்பத்து மூன்று ரூபாய் ஐம்பது பைசா தரவேண்டும். என்னால டீசல் செலவழித்து, என் நேரத்தை செலவழித்து கம்பெனிக்கு வரமுடியாது. நீ என் வீட்டுக்கு வந்து அந்தப் பணத்தை வாங்கிட்டு, அப்படியே ஒரு கப் காபி குடிச்சிட்டு போ…”

“பிரபா, ப்ளீஸ் பிஹேவ் யுவர்செல்ப். நான் வந்ததிலிருந்து எல்லாருக்கும் நோட்டீஸ் பிரியட் ஒரு மாசந்தான். இது பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்பே எல்லோருக்கும் மெயில் அனுப்பிட்டேன். அப்ப சும்மா இருந்துவிட்டு, இப்ப என்னிடம் தகராறு பண்ணாதே…”

“நீ மெயில் அனுப்பினா, நான் அதை படிச்சுப் பார்க்கணுமா என்ன? நீ ஸ்மார்ட் ஹெச்.ஆரா இருந்திருந்தா, பழைய ஆர்டரை கேன்ஸல் செய்துவிட்டு, எனக்கு இன்னொரு கடிதம் கொடுத்து அதற்கு என்னிடம் ஒப்பம் வாங்கி இருக்கவேண்டும் ஈஷ்வர். ஸோ யு ஹாவ் நாட் டன் யுவர் டியூட்டி…”

“நான் போலீஸுக்கு போக வேண்டியிருக்கும் பிரபா…”

“நீ எவன்ட வேணுமானாலும் போ… லீகலா நீ போனாலும் சரி; இல்ல அடிதடிக்கும் நான் ரெடி… என்கிட்ட உதார் காட்டாத. இந்த உலகில் இளிச்சவாயனாக மட்டும் இருக்கவே கூடாது.” மொபலை கட் செய்தான்.

அதன் பிறகு ஈஷ்வர் போன் பண்ணவில்லை.

பிரபாகர் வேறு கம்பெனிகளுக்கு அப்ளை செய்து, ஒரு நல்ல வேலையை உடனே தேடிக்கொண்டான். லாக்டவுன் தொடர்ந்ததால், வீட்டிலேயே இருந்து கம்பெனியைப் பற்றி வெப்சைட்டில் படித்துப் புரிந்து கொள்ளச் சொன்னார்கள்.

இரண்டு மாதங்கள் கழித்து அண்ணா சாலையில் தற்செயலாக ஈஷ்வரைப் பார்க்க நேரிட்டது. ஈஷ்வருக்கு இவன் வேறு வேலையில் இருப்பது தெரியாது.

மிகவும் சோர்ந்து காணப்பட்டான். அவனையும் எம்.டி கழட்டிவிட்டு விட்டதாகச் சொன்னான். வேறு வேலை தேடிக் கொண்டிருக்கிறானாம்.

“அதுசரி, நம்ம கம்பெனி உனக்கு ரிலீவிங் ஆர்டர், சர்வீஸ் சர்டிபிகேட் எதுவும் தரலையே? அப்ப எப்படி வேறு வேலையில் சேருவாய்?”

“நான்தான் கம்பெனி லெட்டர் ஹெட் நான்கைந்து எப்போதும் என்னுடன் வைத்திருப்பேனே… தவிர கம்பெனி ரவுண்ட் சீல் என்னிடம் இருக்கிறது… கம்பெனியை இழுத்து மூடிவிட்டதால், ரெபரன்ஸ் செக் இனி எதுவும் பண்ண முடியாது. அதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை…”

“அடப்பாவி… அப்ப ப்ளீஸ் எனக்கும் ரெண்டு லெட்டர் ஹெட் கொடேன். எனக்கு ஏதாவது இண்டர்வியூ வந்தால், உன்னுடைய ரெபரன்ஸ் கொடுக்கிறேன். ஹெல்ப் மி ப்ளீஸ்…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *