திடீரென கண்களைக் கூசச்செய்யும் வெளிச்சம்.. கண்களின் முன்னே.. அவனால் கண்களையே சரியாக திறக்க முடியவில்லை.. எப்படியோ கஷ்டப்பட்டு திறந்த பார்த்தால்.. அவனால் நம்பவே முடியவில்லை. முன்னே கடவுள் நின்று கொண்டிருந்தார். அவனுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. கடவுள் அவனைப் பார்த்து..
“தைரியம் கொள் மானிடா..! உனது வேண்டுதல்களில் நான் மிகவும் மகிழ்ச்சி கொண்டேன். எப்போதுதுமே நீ பிறருக்காக மட்டுமே வேண்டுவாய். உனக்காக எதுவுமே கேட்டதில்லை. இப்பொழுது உனக்கொரு வரம் தரலாம் என இருக்கிறேன். என்ன வேண்டுமோ கேள்”, என்றார்.
அவன் உடம்பு நடுங்க நின்று கொண்டிருந்தான். எப்படியோ தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
“கடவுளே! . உலக மக்கள் அனைவருமே எப்போதுமே, யாருக்காவது அது நடக்க வேண்டும்.. இது நடக்க வேண்டும்.. என்று அடுத்தவரைப் பற்றியே அதிகம் சிந்திக்கின்றனர். நல்லது நினைத்தாலாவது பரவாயில்லை.. கெட்டது மட்டுமே நினைக்கின்றனர்.. நீங்கள் கொடுத்திருக்கும் இவ்வளவு பெரிய வரமான வாழ்வில், நல்லது செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. கெட்டது நினைக்காமலாவது இருக்க வேண்டும்.
“சரி.. உனக்கு வேண்டிய வரம் தான் என்ன?”
“எவரெல்லாம்.. அவ்வாறு கெட்டது நடக்க வேண்டும் என நினைக்கிறார்களோ.. அவர்களின் சிந்தனையின் அளவைப் பொறுத்து. அவர்களுக்கு கொம்பு முளைக்க வேண்டும்.”
“அச்சச்சோ.. என்ன வரம் இது?”
“இன்னும் முடிக்கவில்லை. கடவுளே!.. பின் அவர்கள் நினைக்கும், செய்யும் நல்லதைப் பொறுத்து. அந்த கொம்பின் அளவு குறைக்கப்படவேண்டும். எவன் ஒருவன் நன்மை மட்டுமே நினைக்கிறானோ. அவன் மட்டுமே இப்போது போல எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க வேண்டும்.”
“சரி அப்படியே ஆகட்டும்”, என்று கூறிய படியே சட்டென மறைந்து விட்டார்..
அப்போது தான் அவனுக்கு விழிப்பு வந்தது. எழுந்து உட்கார்ந்ததும் மணியைப் பார்த்தான்.. மணி காலை ஆறு.
தன் கனவையும், அதில் கிடைத்த வரத்தையும் சிந்தித்தவாறே அலுவலகம் கிளம்பினான்.
அவன் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை.
அவன் சென்ற சாலையெங்கும். எங்கு பார்த்தாலும் கொம்பு முளைத்த மனிதர்கள்!.
சின்ன கொம்பு, பெரிய கொம்பு மட்டுமில்லாமல். சிலருக்கு கணக்கு வழக்கின்றி அத்தனை கொம்புகள் முளைத்திருந்தன..குழந்தைகள் மட்டும் எப்போதும் போல அழகாக கொம்பின்றி இருந்தன. கொம்பில்லாத வேறு மனிதர்களையே அவனால் பார்க்க முடியவில்லை. அவன் சாலையில் செல்ல செல்ல எல்லோரும் அவனையே கைக்காட்டி பேசிக்கொண்டே சென்றனர்.ஏனெனில் முளைத்திருந்த எல்லாக் கொம்பிலுமே இவனது படம் அச்சாகியிருந்தது.. எதேச்சையாக அவன் கண் ஒரு கடைக்குள் இருந்த தொலைக்காட்சி செய்தியைக் காண, ஊரே அந்நிகழ்வைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தன. அங்கே செய்தி வாசிப்பவருக்கும், அந்த செய்தியில் காட்டப்பட்ட நாட்டின் தலைவர்களுக்கும், இவன் ரொம்ப நல்லவர்கள் என நம்பிய அனைவருக்குமே.. கொம்பு முளைத்திருந்தது..
இவனுக்கே இவனை நினைத்து பெருமையாக இருந்தது.. அனைவரும் இவனை அணுகி ஏன் இப்படி? என்ன நிவர்த்தி? எனக்கேட்டனர்.. அவன் சொன்னதைக் கேட்ட அவர்கள் அவனை பயபக்தியாகப் பார்த்தனர்.கொம்பு இல்லாத இவன். அவர்கள் எல்லாம் இப்படியே இருந்தால் எப்படி இருக்கும் என சின்னதாக மனதிற்குள் நினைக்கத் தொடங்கிய அடுத்த கணமே இவனுக்கும் கொம்பு முளைக்க ஆரம்பித்தது..