கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2021
பார்வையிட்டோர்: 2,873 
 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கொக்கரக்கோ’ என்று கோழி கூவிற்று. சின்னப்பன் படுக்கையை விட்டு எழுந்தான். எழுந்தவன், தன் மனைவியை ஒரு முறை பரிதாபத்துடன் பார்த்தான். அவள் அசைவற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய நெற்றியில் விழுந்து புரண்டு கொண்டிருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

இன்னெரு முறை கோழி கூவிற்று.

அவன் மீண்டும் ஒரு முறை தன் மனைவியைப் பார்த்தான். பார்த்துவிட்டு, “நாளெல்லாம் நாய் மாதிரி உழைச்சுப்பிட்டு வருகிறாள், பாவம்? உடம்பெல்லாம் ஒரே அசதியாயிருக்காதா? எப்படி இம்புட்டுச் சீக்கிரத்தில் எழுந்திருக்க முடியும்?” என்று தனக்குத் தானே வாய்விட்டுச் சொல்லிக்கொண்டான்.

மீண்டும் கோழி கூவிற்று.

சின்னப்பன் தன் மனைவியை லேசாகத்தீண்டி, “செல்லம், செல்லம்!” என்றான்.

செல்லம் திடுக்கிட்டு எழுந்து, “என்ன, பொழுதா விடிந்துவிட்டது” என்றாள்.

“இல்லை, இப்பத்தான் கோழி கூவிற்று” என்றான் சின்னப்பன்.

செல்வம் எழுந்து பல்லைத் துலக்கி முகத்தை அலம்பிக் கொண்டாள். குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு, “நீங்கள் வீட்டிலே தானே இருக்கப் போறிங்க?” என்று கேட்டாள்.

“ரொம்ப நல்லாயிருக்கு! பொம்மனாட்டி வேலைக்குப் போறது; புருசன் வீட்டிலே குந்திக்கிட்டுக் கொட்டாவி விடறதா, என்ன? அந்தப் பாழாய்ப்போன ‘மாட்ச் பாக்டரி’க்காரன் மனசு எப்போ இளகப் போகுதோ, நாங்க எப்போ வேலைக்குப் போகப் போறோமோ? அதுவரை எங்கேயாச்சும் கூலி வேலை, கீலி வேலை இருக்கான்னு பார்க்கவேணுமில்லே?”

“அப்படின்ன போறப்போ தட்டியை இழுத்துச் சாத்தி நல்லாக்கட்டிட்டுப் போறிங்களா?”

“போறேன்.”

“மத்தியானம் நான் அய்யர் வீட்டிலேருந்து சோறு எடுத்துக்கிட்டு வாரதுக்குள்ளே நீங்க இங்கே வந்து இருக்கிறீங்களா?”

“இருக்கிறேன்.”

“சரி, அப்போ நான் போயிட்டு வாரேன்!” என்று சொல்லிவிட்டுச் செல்லம் நடையைக் கட்டினாள்.

சின்னப்பன் வாயில் பல் குச்சியை எடுத்து வைத்துக் கொண்டு கொல்லைப் பக்கம் சென்றான்.


அந்த ஊரில் ‘எம். எம். மாட்ச் பாக்டரி’ என்றால் “மன்னார்குடி மாணிக்கம் தீக்குச்சித் தொழிற் சாலை” என்று எல்லோருக்கும் தெரியும். அந்தத் தொழிற்சாலையில் ஏறக் குறைய இருநூறு பேருக்கு மேல் வேலை செய்து வந்தனர்.

இந்த இரு நூற்றுச் சொச்சம் பேருடைய வயிறுகளையும் சென்ற மகாயுத்தத்தின் போது தோன்றிய பஞ்சம், சமதர்மவாதிகளாக மாற்றிவிட்டது. தங்களுக்குத் தெரியாமல் சமதர்மவாதிகளாக மாறிவிட்ட தங்கள் வயிறுகளைத் தேசியவாதிகளாக மாற்ற அந்த அப்பாவித் தொழிலாளிகள் பெருமுயற்சி செய்தனர். அந்த முயற்சியில் அவர்கள் ஒரு வருஷம் வெற்றி யடைந்தனர்; இரண்டு வருஷங்கள் வெற்றி யடைந்தனர்; மூன்று வருஷங்கள் வெற்றியடைந்தனர். அதற்குமேல் அவர்களுடைய முயற்சி பலிக்கவில்லை; அந்தப் பாழும் வயிறுகள் அத்தனையும் ‘அசல் சமதர்மவாதி’களாகவே மாறி, நிலைத்து நீடித்து நின்றுவிட்டன!

இதன் பயனாகத் தங்களுக்குச் சம்பள உயர்வுவேண்டு மென்று கோரி, முதலில் அவர்கள் முதலாளிக்கு ‘நோட்டீஸ்’ விடுத்தனர். முதலாளிகளின் சம்பிரதாயத்தை யொட்டி அந்த ‘நோட்டீஸ்’ காற்றில் பறக்க விடப்பட்டு விடவே, தொழிலாளிகள் கடவுளுக்கு அடுத்தபடியாக இருந்த வேலை நிறுத்தத்தில் இறங்கினர்; கடவுளைப் போல் வேலை நிறுத்தம் தங்களைக் கைவிடாதென்றும் அவர்கள் நம்பினர். அப்படி நம்பியவர்களில் ஒருவன்தான் சின்னப்பன்.

வேலை நிறுத்தம் ஆரம்பித்து விளையாட்டுப் போல் இரண்டு மாதங்களாகிவிட்டன. சர்க்கார் வழக்கம் போல் அந்த வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோத மாக்கிவிட்டுப் பேசாமலிருந்தனர். தொழிலாளிகள் இந்த இரண்டுமாத காலமும் கூட்டம் கூட்டமென்று கூட்டினர்; பேச்சுப் பேச்சென்று பேசினர்; தீர்மானம் தீர்மானமென்று நிறை வேற்றினர்—எந்த விதமான பலனும் இல்லை.

இருந்தாலும் அவர்கள் சளைக்கவில்லை; “வெற்றி நமதே!” என்று கோஷித்துக் கொண்டு வீதியெல்லாம் சுற்றிச் சுற்றி வந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வாறு கோஷமிடுவதற்கும் அவர்கள் ஏதாவது சாப்பிட வேண்டியிருந்தது; அதற்காகத் தங்கள் உடம்பையும் உயிரையும் பணயம் வைத்து உழைக்கவேண்டியிருந்தது. இதை நினைத்துத்தான் மன்னார்குடி மாணிக்கம்மெளனம் சாதித்து வந்தார். அத்துடன் அவர் நிற்கவில்லை; அவர்களுடைய ‘சரணாகதி’யை எதிர்பார்த்துத் தமக்குள் சிரித்துக் கொண்டுமிருந்தார்!

இந்தச் சிரிப்பைச் சின்னப்பன் பொருட்படுத்தாம விருப்பதற்குச் செல்வம் துணை புரிந்தாள். அதாவது, வேலை நிறுத்தம் ஆரம்பமானதும் அவள் அந்த ஊர்ப் பெரிய மனிதர் வீடு ஒன்றில் வேலைக்கு அமர்ந்தாள். காலையில் வீடு வாசலைப் பெருக்கிச் சாணம் தெளித்துக் கோலமிடுவது. பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, காலைச் சிற்றுண்டிக்கு மாவு அரைத்துக் கொடுப்பது முதலியவைதான் அவளுடைய வேலைகள். இந்தப் பிரமாத வேலைக்கு மாதம் பிறந்தால் சுளை சுளையாக ஐந்து ரூபாய் சம்பளம், அத்துடன் மத்தியான வேளையில் ஏதாவது சாதம், குழம்பு மீதமானால், அவை பிச்சைக்காரனுக்கு அல்ல; அவளுக்குத்தான்!

மத்தியானம் மட்டுமா இந்தச் சலுகை? இரவில் ஏதாவது கறி வகைகள் மிஞ்சி மறுநாள் காலை அவை கெட்டுப்போனால் செல்லத்துக்கு அடித்ததுயோகம்! அந்தக் கறி வகைகள் அத்தனையும் குப்பைத் தொட்டிக்கா என்கிறீர்கள்?—இல்லை, இல்லை; செல்லத்தின் வயிற்றுக்குத் தான்!

செல்லத்துக்கு அடித்து வந்த இந்த யோகம், கடந்த இரண்டு மாத காலமாகச் சின்னப்பனுக்கும் அடித்து வந்தது. அதன் பயனாக அவளுடைய உயிர் மட்டும் அல்ல: அவனுடைய உயிரும் உடம்பில் ஊசலாடிக் கொண்டிருந்தது. இருவரும் உயிருள்ள பிணங்களைப்போல ஊரில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று மத்தியானம் ‘அலைந்தது மிச்சம்’ என்று அய்யர் வீட்டுச் சோற்றை எதிர்பார்த்தவனாய்ச் சின்னப்பன் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விட்டான் வந்தவன் தட்டியை அவிழ்க்கவும் இல்லை; குடிசைக்குள் நுழையவுமில்லை, வாசலிலேயே நின்று அவளுடைய வரவை ஆவலுடன் எதிர்பார்த்து நின்றான்.

நின்றான், நின்றான், நின்றான்—நின்று கொண்டேயிருந்தான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் அவள் சற்றுத் தூரத்தில் வருவது தெரிந்தது: அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது சூரியனைக் கண்ட தாமரையைப் போல அல்ல; சோற்றைக் கண்ட ஏழையைப் போல.

அவள் அருகில் வந்தாள்: அவன் முகம் குவிந்தது!

ஏன் தெரியுமா?—இத்தனை நாளும் அவளுடைய முகத்தில் ஒருவிதக் களை இருக்குமே, அந்தக் களையை இன்று காணவில்லை; இத்தனை நாளும் அவளுடைய கையில் சாதம் இருக்குமே, அந்தச் சாதத்தையும் இன்று காணவில்லை!

“இன்னிக்குத் திடீரென்று அய்யர் வீட்டுக்கு ரெண்டு விருந்தாளிங்க வந்துட்டாங்க, அதாலே ஒண்ணும் கிடைக்கலே!” என்று சொல்லி வருத்தத்துடன் கையை விரித்தாள் செல்லம்.

“அதுக்குத்தான் என்ன பண்றது! தண்ணீர் இருக்கவே இருக்கு; யார் வீட்டுக்கு எத்தனை விருந்தாளிங்க வந்தாலும் நம்மை அது தாங்குமில்லே!” என்று சொல்லி, ஒரு வறட்டு சிரிப்புச் சிரித்தான் சின்னப்பன்.

“அப்படின்னா நான் வாரேன்! ஏகப்பட்ட துணிங்க இருக்கு; தோய்ச்சுப் போடணும்!” என்று சொல்லிவிட்டுத் திரும்பினாள் செல்லம்.

“சரி, போய் வா! நானும் ‘மீட்டிங்’குக்குப் போறேன்” இன்னிக்குப் பட்டணத்திலே யிருந்து யாரோ ஒரு பெரிய தலைவரு வந்து பேசப் போறாராம்!” என்றான் சின்னப்பன்.

இருவரும் பிரிந்தனர்—நிரந்தரமாக அல்ல; தற்காலிகமாகத்தான்!


அன்று மாலை செல்லம் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு வாசலுக்கு வந்து நின்றாள். சின்னப்பன் வந்தான்.

“வாங்க, பட்டணத்திலேயிருந்து வந்த தலைவரு என்ன சொன்னாரு?” என்று ஆவலுடன் விசாரித்தாள் செல்லம்.

சின்னப்பன் தலையைச் சொறிந்து கொண்டே, “அவர் நல்லதைத்தான் சொன்னாரு!” என்றான்.

“என்ன, நல்லதைச் சொன்னாரு?”

“இப்போ எங்கே பார்த்தாலும் தீப்பெட்டிக்குப் பஞ்சமாயிருக்குதில்லே? இந்தச் சமயத்திலே நீங்க ‘ஸ்ட்ரைக்’ சேஞ்சி உற்பத்தியைக் குறைக்கலாமான்னு கேட்டாரு!”

“உற்பத்தியைக் குறைக்காம இருப்பதற்கு உழைக்கிறவனுங்க உடம்பிலே கொஞ்சமாச்சும் தெம்பு இருக்க வேணாமா?—அதுக்குக் கொஞ்சம் சம்பளத்தை ஒசத்திப் போட்டால் என்னவாம்?”

“எப்படி ஒசத்தறது? உற்பத்தியைப் பெருக்குனாத்தானே முதலாளிக்கு லாபம் அதிகமா வரும்? அவரும் சந்தோசமா சம்பளத்தை ஒசத்திப் போடுவாரு!— இது தெரியாம இத்தனை நாளா நாங்களும் இந்த ‘ஸ்ட்ரைக்’ கைக் கட்டிகிட்டு அழுதோமே!” என்று சொல்லித் தன் அடி வயிற்றில் லேசாக அடித்துக் கொண்டான் சின்னப்பன்.

“அப்படியா சங்கதி? அப்படின்ன நீங்க இப்போ என்ன தீர்மானம் பண்ணியிருக்கீங்க?” என்று கேட்டாள் செல்லம்.

“தீர்மானம் என்ன? நாளையிலேருந்து எல்லோரும் பழையபடி வேலைக்குப் போகப் போறோம்!” என்று சின்னப்பன் சொன்னன்.

“இதுக்குத்தானா இம்புட்டு நாளா ஊரைச் சுற்றிச் சுற்றி வந்தீங்க?” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே செல்லம் முகவாய்க் கட்டையில் கையை வைத்துக் கொண்டாள்.

“எல்லாம் பட்டாத்தானே தெரியும்!” என்று அலுத்துக் கொண்டு கீழே உட்கார்ந்தான், கடமையை உணர்ந்து உரிமையை மறந்த சின்னப்பன்.

“நல்ல கூத்து, போங்க!” என்று சொல்விக் கொண்டே, செல்லம் தன் மடியிலிருந்து ஒரு பிடி வேர்க்கடலையை எடுத்து அவனுக்கு எதிரே ‘கலகல’ வென்று போட்டாள்.

“ராத்திரிக்காச்சும் கஞ்சிகிஞ்சி காய்ச்சலையா” என்று சின்னப்பன் ஒப்பாரி வைத்தான்.

“இந்தாங்க, காய்ச்சாத கஞ்சி!” என்று சொல்லி, ஒரு குவளே நிறையக் குளிர்ந்த நீரை எடுத்து வந்து அவனுக்கு எதிரே வைத்து விட்டுச் சிரித்தாள் செல்லம்.


எழுபது நாட்களுக்குப் பிறகு, ‘எம். எம். மாட்ச் பாக்டரி’யில் மீண்டும் வேலை தொடங்கிற்று. முன்னெல்லாம் மாலை ஐந்தரை மணி மட்டும் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிகள், இப்பொழுது இரவு ஒன்பதரை மணி வரை வேலை செய்ய ஆரம்பித்தனர். இதனால் அவர்களுடைய ஊதியமும் கொஞ்சம் உயர்ந்தது; உற்பத்தியும் பெருகிற்று.

மொத்த வியாபாரிகள் திணறிப் போகும்படியாகத் தீப்பெட்டிகளைக் கட்டுக் கட்டாக அனுப்பி வைத்தார் மன்னார்குடி மாணிக்கம் அவர்கள், “போதும், போதும்!” என்று அலறும் வரை அவர் நிறுத்தவேயில்லை.

அந்த மாதம் சம்பளம் வாங்கியதும் “செல்லம், நீ நாளையிலேருந்து அய்யர் வீட்டு வேலைக்குப் போக வேணாம்; என்னுடைய சம்பாத்தியமே போதும்!” என்று சின்னப்பன் தன் மனைவியிடம் சொல்லி விட்டான். அதைக் கேட்டு அவளும் பூரித்துப் போனாள்.

இருந்தாலும் சின்னப்பனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு குறை இருக்கத்தான் இருந்தது அதாவது, “இப்பொழுது நாம் இரவு ஒன்பதரை மணிவரை வேலை செய்வதால் தானே சம்பளம் கொஞ்சம் அதிகமாக் கிடைக்கிறது? அப்படிச் செய்யா விட்டால் பழைய சம்பளம்தானே கிடைக்கும்?” என்று எண்ணி அவர்கள் அதிருப்தி யடைந்தார்கள். ஆனால் அந்த அதிருப்தியிலும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை, “நாம் உற்பத்தியைப் பெருக்கினால் ஊதியம் தானாகவே உயரும்” என்பது தான்.

இந்த நம்பிக்கையில் ஒரு வருஷம் எப்படியோ ஓடிவிட்டது. அரையணாவுக்கு விற்ற தீப்பெட்டி முக்காலணாவாக உயர்ந்தது. இதனால் தானே, அல்லது உற்பத்தியைப் பெருக்கியதினால்தானே சுற்றுப்புறத்திலிருந்த தீப்பெட்டிப் பஞ்சம் தீர்ந்தது. மன்னார்குடி மாணிக்கம் இன்னும் கொஞ்சம் முன்னால் வந்த தம் தொந்தியை லேசாகத் தடவி விட்டுக் கொண்டார். ஆனால், சின்னப்பனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் இருந்த கவலை மட்டும் இன்னும் தீரவில்லை. அதாவது, அவர்கள் நினைத்தபடி சம்பளம் உயரவில்லை.

அதற்குப் பதிலாக, “நம்மிடம் தீப்பெட்டி ‘ஸ்டாக்’ அதிகரித்து விட்டது. மொத்த வியாபாரிகளிடமிருந்து ‘ஆர்ட’ரும் வரவில்லை அவர்களெல்லாம் விலையைக் குறைப்பதற்கு ஏதாவது முயற்சி செய்தால் தேவலை என்று வேறு எழுதி வருகிறார்கள். எனவே, இனி உங்களுக்கு இரவில் வேலை கிடையாது; பகலில் மட்டுந்தான் வேலை!” என்று மன்னார்குடி மாணிக்கம் அறிவித்து விட்டார்.

அவர்தான் என்ன செய்வார், பாவம்! நிலைமை லாபத்தில் நஷ்டம் வரும் அளவுக்கு வந்து விட்ட போது, அவர் பேசாமல் இருக்க முடியுமா?

இருந்தாலும், இதைப் பற்றிப் ‘பட்டணத்துத் தலைவர்’ வந்து ஏதாவது சொல்வார் என்று ‘எம். எம். மாட்ச் பாக்டரி’ தொழிலாளிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அந்தப் பக்கம் வரவும் இல்லை; ஒன்றும் சொல்லவும் இல்லை!


அன்று காலை வேலைக்குப் புறப்படும்போது, “செல்லம், நாலுபேரைப் போல தாமும் நல்லாயிருக்கிறதுக்கு இருபத்து நாலு மணி நேரம் வேணுமானாலும் நான் வேலை செய்யலாம்னு எண்ணியிருந்தேன்; அதுக்கும் இனிமேல் வழியில்லாமல் போச்சு!” என்றான் சின்னப்பன்.

“ஏன்?” என்று கேட்டாள் செல்லம்.

“தீப்பெட்டி ‘ஸ்டாக்’ ஏராளமா இருக்குதாம். அதுக்காக இனிமேல் ராத்திரியிலே வேலை இல்லைன்னு எசமான் சொல்லிட்டாரு!”

“அப்படின்னா இனிமேல் பழைய சம்பளம் தான் கிடைக்கும்னு சொல்லுங்க!”

“ஆமாம்.”

“தொலையறது! ஏதோ கிடைச்சவரை திருப்தியடைய வேண்டியதுதானே?” என்றாள் செல்லம்.

“வேறே என்ன செய்யறது? நாம் அம்புட்டுத்தான் கொடுத்து வச்சிருக்கோம்—நான் போய்வாரேன்!” என்று சொல்லிவிட்டுப் போனான் சின்னப்பன்.

அவனை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு, செல்லம் வீட்டுக் காரியங்களில் ஈடுபட்டாள்.

அடுப்பை மூட்டி உலை வைத்துவிட்டு அவள் அரிசியைக் கழுவிக் கொண்டிருந்த சமயத்தில், சின்னப்பன் எதிர் பாராத விதமாகத் தளர் நடை நடந்து வந்து அவளுக்கு எதிரே நின்றான்.

“என்னங்க, என்ன உடம்புக்கு? லீவு கீவு போட்டுட்டு வந்துட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே, அவனைத் தலைநிமிர்ந்து பார்த்தாள் செல்லம்.

அவன் ஒன்றும் சொல்லாமல் விசித்து விசித்து அழுதான்.

செல்லம் திடுக்கிட்டு எழுந்து நின்று, “என்னங்க, என்ன? விசயத்தைச் சொல்லுங்களேன்!” என்று பரபரப்புடன் கேட்டாள்.

அதற்கும் அவன் ஒன்றும் பதில் சொல்லாமல் மீண்டும் விம்மி விம்மி அழுதான்.

“ஐயோ! இதென்ன, பொம்மனாட்டி மாதிரி இப்படித் தேம்பித் தேம்பி அழறீங்களே!—ஏதாச்சும் தப்புத் தண்டா செய்து விடடுப் போலிசிலே கீலிசிலே மாட்டிக்கிட்டீங்களா, என்ன?” என்று கவலையுடன் கேட்டாள் செல்லம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை, செல்லம்! இனிமேல் நாம் எப்படிப் பிழைக்கப் போறோம்னுதான் எனக்குத் தெரியலே!” என்று விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையே ஆரம்பித்தான் சின்னப்பன்.

“பிழைச்சாப் புழைக்கிறோம், செத்தாச் சாகிறோம்—முதல்லே விசயம் என்னான்னு சொல்லித் தொலையுங்க!” என்று செல்லம் கத்தினாள்.

“ஆமாம், செல்லம்! நீ சொல்றது சரிதான்! நாம் செத்தால் சாகிறோம், பிழைச்சாப் பிழைக்கிறோம்னுதான் எங்க முதலாளியும் நினைச்சுப்பிட்டாடு! அவரு உற்பத்தியைக் குறைக்கணும்னு இன்னிக்கு ஐம்பது பேரை வீட்டுக்கு அனுப்பி வைச்சுட்டாரு! அவர்களிலே நானும் ஒருத்தன்” என்று சின்னப்பன் விஷயத்தை ஒருவாறு சொல்லி முடித்தான்.

அவ்வளவுதான்; செல்லம் ஏனோ ‘குபீர்’ என்று சிரித்தாள்!

சின்னப்பன் அழுகையை நிறுத்தி விட்டு அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

“கவலை வேணாம், போங்க! பட்டணத்துத் தலைவர் சொன்னபடி உற்பத்தியைப் பெருக்கினீங்க, கைமேல் பலன் கிடைச்சுது! அம்புட்டுத்தானே?” என்று சொல்லி விட்டு, அவள் மீண்டும் மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டே இருந்தாள்.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

– ஒரே உரிமை, 1950, வெளியீடு எண்:6 – அக்டோபர் 1985, புத்தகப் பூங்கா, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *