கூவத்தில் பிணம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2023
பார்வையிட்டோர்: 3,514 
 
 

அந்தப் பாலத்தின் இடது புறம் ஏகமாய் மனிதத் தலைகள். ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு பாலத்தின் கீழே பார்த்த வண்ணம் இருந்தார்கள். ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த எனக்கு ஆர்வம் மேலிட உடனடியாக ஸ்கூட்டரை ரோட்டோரத்தில் பார்க் செய்து விட்டு பாலத்தை நோக்கி விரைந்த போது எதிர்ப்பட்டவரை மெல்ல விசாரித்தேன். 

“என்ன சார். இவ்வளவு கூட்டம்? என்ன விஷயம்?” 

“அதுவா… ஒன்னுமில்லப்பா… ஒரு பிணம் மிதக்குது. அதான்” 

சொன்னவர் அதோடு பேச்சைத் துண்டித்துவிட்டு தன் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தவாரே, 

“எனக்கென்னவோ அது சிவப்பு மிடி மாதிரிதான் தெரியுது. நிச்சயம் காலேஜ் பொண்ணாத்தான் இருக்கும். என்ன சொல்ற?” 

போய்விட்டார். காலேஜ் பெண்! தற்கொலை கேஸ்!! காதல்… என் கற்பனை விரிந்து கொண்டே போனது. 

லேசில் பாலத்தின் கைப்பிடிச்சுவரை நெருங்க முடியவில்லை. இங்கே தள்ளி அங்கே தள்ளி ஒருவழியாக கான்கிரீட் கிராதியை நெருங்கிவிட்டேன். அப்படியும் கட்டைமேல் தொற்றிக் கொண்டு பார்க்கும் ஒரு சிறுவனின் தலை மறைக்க, அவன் தலையை எட்டிப் பிடித்து ஒரு அழுத்து அழுத்த, 

ஆமாம். பாலத்தின் கீழே ஒரு பிணம் அசைவற்று மிதந்து கொண்டிருந்தது, சாய்வாகக் குப்புறக் கவிழ்ந்த நிலையில் கட்டியிருப்பது புடவையா, பாவாடையா, மிடியா என்று சொல்லமுடியாத அளவுக்கு குப்பலாய் சுற்றியிருந்தது. 

கண்களை சற்று ஓடவிட்டேன். கரையில் மூன்று பேர் பிணத்தை எடுக்க ஆயத்த வேலைகள் செய்து கொண்டிருந்தார்கள். கழிவு நீரில் இறங்குவது சரிவராது என்பதால் கயிறுகளிள் கொக்கிகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். கொக்கிகளை வீசி பிணத்தை இழுத்து கரையில் போடுவது அவர்கள் திட்டம் போலும். 

என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. பக்கத்தில் இருந்தவரிடம் வாயைக் கிண்டினேன். “என்ன சார் விஷயம்?” 

“ஏதோ ரேப் கேஸாம் சார். சிந்தாதிரிப்பேட்டையிலே இதுக்கு வூடு இருக்குதாம். ரேப்பான துக்கம் தாளாம இங்கே வந்து குதிச்சிடிச்சின்னு பேசிக்கிறாங்க.” 

சொன்னவரின் வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் என்னவோ பிணத்தின் அங்க ஆராய்ச்சிகளில்தான் இருந்தன. திடீரென பக்கத்தில் கசங்கிக் கொண்டிருந்தவர் அதை மறுத்தார். 

“இல்லை சார். இது மர்டர் சார். மர்டர். நாலு காலேஜ் பசங்க இதை ரேப் பண்ணிட்டாங்களாம். ரேப்பிலேயே செத்திடுச்சாம். ராத்திரியே காதும் காதும் வச்ச மாதிரி இங்க கொண்டாந்து போட்டுட்டு ஓடிட்டாங்களாம். ஒரு பச்சை வேன் நின்னதை ஆட்டோ ஸ்டாண்டுலேர்ந்து பார்த்திருக்காங்க. நாட்ல என்ன அநியாயம் நடக்குது பார்த்தீங்களா? இந்த காலத்திலே பசங்க காலேஜுக்கு படிக்கவா வரானுவங்கிறீங்க?” 

கொக்கியை வீசிவிட்டார்கள். அவ்வளவுதான்! கூட்டம் அலை பாய்ந்தது. நான் கிட்டத்தட்ட பாலச் சுவரோடு நசுக்கப்பட்டேன். போலீஸ் விசில் சத்தம் கேட்டது. கரும்புச் சக்கை மாதிரி நசுக்கப்பட்டு பிதுக்கி வெளியே எறியப்பட்டேன். 

எல்லோரும் எக்கி எக்கி பாத்துக் கொண்டிருக்க எனக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகியது. மீண்டும் இங்கே தள்ளி அங்கே தள்ளி கூட்டத்தினுள் புக முயற்சித்தேன். ம்ஹூம்! மூஞ்சியில் கை வைத்துத் தள்ளாத குறை. 

“என்ன சார் விஷயம்?” என்னிடமே ஒருவர் கேட்டார். 

யோசித்துக் கொண்டிருந்த நான் தயங்கவே, பக்கத்தில் இருந்தவர், கொஞ்சம் படித்தவர் போலும். மூக்கின் மீது இருந்த கர்ச்சீப்பை லேசாக விலக்கி, 

“ஏதோ எக்ஸ்ட்ரா மாரிட்டல் அஃப்பையராம். இதுக்கு சேலமாம். மேரேஜ் ஆகி குட்டிங்க இருக்காம். ஒரு வயசுப் பயலோட எலோப் பண்ணிடுச்சாம். இங்க பக்கத்து லாட்ஜிலதான் தங்கியிருந்தாங்களாம். காசல்லாம் தீர்ந்து போனதும் தட் பாய் வானிஷ்டு. தென்வாட்டு டூ? இங்க வந்து சூய்சைடு.” 

எனக்கு எதை எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. போலீஸ் சடசடவென லத்தியால் மொத்திக் கொண்டு வர நான் சற்று விலகி அந்தப் பக்கமாய் போய் கிடைத்த இடைவெளியில் உள்ளே புகுந்துவிட்டேன். 

பிணத்தை எடுத்து கரையில் போட்டிருந்தார்கள். என்னால் மிகச் சிரமப்பட்டு இடுக்குகள் வழியாகத்தான் பார்க்க முடிந்தது. பிணத்தை ஒரு கந்தல் துணியால் போர்த்தியிருந்தாலும் நீள அகலம் போதாததால் ஓரளவுக்குத்தான் தெரிந்தது. நன்கு ஊறிப்போய், கருநீலம் பாய்ந்து கட்டையாய் இருந்தது. கைகள் தூக்கிய மாதிரியே இருந்தன. கால்-அரை நிர்வாணமாய் இருந்ததை கவனித்த அந்த ஆசாமிகள் இன்னும் சில கந்தல் துணிகளை போட்டு மூடிவிட்டனர். 

கூட்டத்தின் ஆர்வம் அடியோடு குறைந்து போனது. ஏதோ சினிமா விட்டது போல மக்கள் சாரை சாரையாய் விலக ஆரம்பித்தனர். புதிதாக வந்தவர்கள் அதையாவது பார்த்து வைப்போம் என்று அவசரப்பட்டார்கள். 

அப்போதுதான் நான் ஒன்றை கவனித்தேன். நான் அங்கே பார்த்து இங்கே பார்த்து கடைசியில் பாலத்தின் இந்த பக்கத்துக்கு வந்து விட்டேன். என் ஸ்கூட்டர் எதிர்ப் பக்கத்தில் இருந்தது. மெல்ல நடையை கட்டினேன். 

“பார்த்தியா வயிறு எப்படி உப்பியிருக்கு? இது நிறைமாசந்தான்.” 

“அடப்போடா தண்ணி உள்ள போனா வயிறு உப்பும். நான் தஞ்சாவூர் அய்யன் குளத்திலே எவ்வளவு தற்கொலை கேஸ் பார்த்திருக்கேன்.” 

“அது இருக்கலாம். ஆனா இது நெசம்மாவே மாச கேசாம். பேசிக்கிட்டாங்க. எவனோ சினிமால சான்ஸ் வாங்கித்தரேன்னு இட்டாந்து ஏமாத்திப்பிட்டானாம். உயிரோட இருந்தப்ப நல்லா வெள்ளையா இருந்திருக்கும்னு நெனைக்கிறேன்.” 

இரண்டு பேர் கெக்கே பெக்கே என்று சிரித்து கொண்டு சென்றனர். 

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து பாலத்தின் மீது வந்தேன். போலீசுக்கு பொறுமை எல்லை மீறிவிட்டது. நிற்கும் நபர்களையெல்லாம் காலரைப் பிடித்து வீசியெறிந்தார்கள். 

அப்படியும் பாலத்தில் வாகனங்கள் போக குறுகிய வழிதான். பஸ்கள் பாலத்தை நெருங்கவும் பஸ் பிரயாணிகள் எல்லோருமே இடது புற ஜன்னலுக்கு வந்து விட்டார்கள். 

ஆபீஸ் வந்து சேர்ந்த அரைமணியில் இந்த விஷயம் சுவாரஸ்யம் இழந்து, மறந்து போனது. 

ஒரு ஞாயிற்றுக் கிழமையில் சந்துரு வீட்டுக்கு வந்திருந்தான். சந்துரு ஜீ. ஹெச்சில் டாக்டர். போஸ்ட் மார்ட்டம் கேஸ்களை கவனிக்கிறவன். அடிக்கடி என்னிடம் பல கிரைம் கேஸ்களைப் பற்றி போரடிக்கும் வரை அளப்பான். 

அவனைப் பார்த்ததும் கூவத்தில் மிதந்த அந்தப் பிணம் ஞாபகம் வந்தது. கேட்டேன். நிறைய கேஸ்கள் வருவதால் அவனால் எளிதில் நினைவுகூற முடியவில்லை. எனக்கும் சரியான தேதி ஞாபகம் இல்லை. 

நிறைய யோசனைகளுக்குப் பிறகு, 

“ஓ.. அந்த பார்வையிழந்த பெண் கேஸ்?” 

“பார்வையிழந்த பெண்ணா?” 

“ஆமாம்பா. ரொம்ப பேதடிக். அந்த பெண் ராத்திரிலே பாலம் ஓரமா வந்திருக்கு. ரெண்டு நாள் முன்னாடி பேஞ்ச மழையிலே பாலத்தின் ஓரத்திலே அரிப்பு ஏற்பட்டிருக்கு. பள்ளம் தெரியாம உருண்டு தண்ணீர்ல விழுந்திருக்கு. ராத்திரியா இருந்ததுனால யாரும் கவனிக்கலை.” 

“ஏதோ ரேப்பு கீப்புன்னு பேசிக்கிட்டாங்க.” 

“இல்லை. ரேப்புக்கான ஒரு இன்டிகேஷனும் இல்லை. கர்ப்பமும் இல்லை. உருண்டதிலே சில சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கு. மண்டையிலே லேசான அடி அவ்வளவுதான்.” 

மை காட்! அன்று பாலத்தில் எப்படிப்பட்ட மட்டரகமான வதந்திகள். அவர்கள் பேசி மகிழ்ந்தது ஒரு பக்கம் இருக்கட்டும், இதில் நானுமல்லவா பங்காளி? ஒருவித குற்ற உணர்வு என்னை ஆக்கிரமிக்க, நான் செய்வதறியாது திகைத்துப் போனேன். 

– 16 மே 1997, சில ரகசியங்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2018, வெளியிடு : FreeTamilEbooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *