கூலிக்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 5,715 
 
 

சிந்தாதரிப்பேட்டை புண்ணிய தலத்தில் ஓடும் கூவம் ஆற்றின் கரையில் குடியிருந்த ஏழை ஜனங்களில் பலர் போன வருட பெரு மழையில் பாதிக்கப்பட்டதும், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டனர் இல்லையா. அப்போது துரைப்பாக்கத்திற்கு அரசாங்கத்தின் கருணை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட துரும்பில் ஒன்று நம் முருகேசன். பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் . காவிரிப் பாசனம் இருந்த காலத்தில் விவசாயக் கூலியாக நாலஞ்சு தலைமுறையாக வாழ்ந்து வந்த குடும்பம். இவன் காலத்தில் தண்ணித் தகறாறு, மீத்தேன் வாயு என்ற பிரச்சனைகளில் வேலை இல்லாமல் பாதிநாள் ஒரு வேளை சோத்துக்கு வழியில்லாமல் போகவே அசட்டு தைரியத்தில் சென்னைக்கு வண்டி ஏறியவன்.

இவனது 10 வகுப்பு பாஸ் ஒன்றும் பெரிதாக வேலை கிடைக்க உதவவில்லை. முருகேசனுக்கு தலைவரிடம் அலாதி மரியாதை. யாராவது எதாவது தப்பாச் சொன்னா கோவம் வரும்.கண்மண் தெரியாமல் அடித்துக் கூட விடுவான். தலைவருக்காக உயிரையும் தரத் தயார்தான். தலைவரிடம் கட்சி ஆபீசில் வேலை போட்டுத்தர உறுப்பினர் அட்டை காட்டி கேட்கலாம் என்றால் வாசலில் நிக்கிற வட நாட்டு காவல்காரன் ‘அரே பாய், ஜாவ், ஜாவ்” என்று துரத்துகிறான்.

ஒன்றும் புரியாத நிலையில் எதோ லாரி கம்பெனியில் கிளீனராக சேர்ந்து டிரைவருக்கு எடுபிடி வேலை செய்தும், சேர்த்து வைத்திருந்த காசில் அவ்வப்போது குவாட்டர் குருதட்சிணையாக வாங்கிக் கொடுத்தும் டிரைவிங் கற்றுக் கொண்டான். அப்படி இப்படி கொஞ்சம் பணம் புரட்டி லைசன்ஸ் எடுத்து விட்டான். முருகேசனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. லாரி ஓட்டும் போது பொதுவாக ஹைவேயில் இரவு ராணிகள் கைகாட்டினால் சபலமின்றி தவிர்த்து வண்டியை வேகமாக ஓட்டி விடுவான். அனாவசிய செலவுகள் இல்லாததால் பணம் சேர்ந்தது. ஊரில் வெள்ளையும் சொள்ளையுமாகப் போய் இறங்கிய போது தாய்மாமன் கோவிந்தனின் மகள் செல்லாயிக்கு அவனை கட்டி வைத்து விட்டனர்.

சென்னை வந்து லாரி கிளீனர் ஆனதும் ஷெட்டில் தங்கிக் கொள்வான். டிரைவர் என்று ஆன பின்னும் அதை தொடர்ந்தான். ஆனால் இப்பொது அப்படி முடியாதே. வீடு பார்க்க வேண்டிய கட்டாயம். ஆறு மாத அட்வான்ஸ், 2500 ரூபாய் வாடகையில் ஆவடியில் அவுசிங்க் போர்டு LIG 13 அடிக்கு 36 அடி அளவில் கோமணம் மாதிரி வீடு கிடைத்தது. பூந்தமல்லியில் கம்பெனி. அதனால் ஆவடியில் இருந்தா வசதி. வீட்டு ஓனர் யாரோ பெரிய ஆபீசராம். அவருக்கு சிட்டிக்குள்ள ஏழெட்டு பங்களாங்க எல்லாம் இருக்காம். அதனால் இங்க வருவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லாம் புரோக்கர் சின்னப்பன் மூலம் தான். அவருக்கு வேற வேற பேரில் இத மாதிரி பத்திருபது வீடுங்க சிட்டி பூராம் இருக்காம். அந்த மனை குலுக்கலில் மனை கிடைத்த ஆளுங்களை சின்னப்பன் நோட்டம் விட்டு ஆளுக்கு விக்கறதுக்கு நெருக்கடி தருவான். வீடு கட்டற அளவு வசதியில்லாதவர்களிடம் மார்கெட் விலையில் பணம் தவணைப் பணம் போக மீதி பணம் கொடுத்து ஆபீஸர் பேரில் வாங்கி விடுவான். அப்போ கையெழுத்து போட மட்டும் தான் சப் ரிஜிஸ்ட்ரார் ஆபீசுக்கு வருவாராம் அந்த பணக்கார ஏழை. அப்புறம் சின்னப்பன் அதில் வீடு கட்டி முடியும் வரையில் எல்லாவர்றையும் பார்த்துக் கொள்வானாம். இதெல்லாம் சின்னப்பன், முருகேசனிடம் வாடகைக்கும் அட்வான்சிற்கும் பேரம் பேசும் போது சொன்னது. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் அய்யா சொல்றதுதான் என்று கறாராகச் சொல்லிவிட்டான். சரி இதை விடக் குறைவாக எங்கேயும் கிடைக்காது என்பதால் கடன் பதினைந்தாயிரம் ரூபாய் கூட வேலை செய்யும் ஆறுமுகம் கிட்ட இரண்டு வட்டிக்கு தண்டல் வாங்கினான். ஆறுமுகம் வட்டிப்பணம் 15 மாசத்திற்கு நாலாயிரத்தைனூறு ரூபாய் பிடித்துக் கொண்டு பத்தாயிரத்தைனூறு ரூபாய் பணம் கொடுத்து மாதம் ஆயிரம் வீதம் அசலை பதினைந்து மாதம் கொடுத்து விட ஏற்பாடாயிற்று. அது தவிர வட்டியில்லாக் கடனாக அண்டிமாண்டு பத்திரம் பதினைந்தாயிரம் பத்திரமும் எழுதி வாங்க்கிக் கொண்டான்.

குடித்தனம் போட்டாச்சு. எல்லாம் நல்லாத்தான் போய் கொண்டிருந்தது. செலவு முன்ன மாதிரி இல்லை. செல்லாயி உண்டாகி இருந்தாள். டாக்டர் செக்கப், மருந்து மாயம் அப்படி இப்படி என்று செலவு எகிறியதில் என்ன செய்ய என்றே புரியவில்லை. ஒரு நாள் கிளீனர் பாண்டியிடம் தன் நிலையைச் சொல்லிக் கொண்டிருந்த போது, கவலை படாதேண்ணே. நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றபோது சரி என்று சொன்னதுதான் தப்பாயிற்று.

பாண்டி கூட்டி வந்த ஆள், ஒரு மஞ்சப்பையில் தரும் பொருளை அவன் டிரிப் போகும் ஊரில் அவர் பாண்டியிடம் அடையாளம் சொல்லி அனுப்பிய நபரிடம் கொடுத்து விட வேண்டும். அதற்கு ஆயிரம் ரூபாய் தந்து விடுவார். இதுதான் ஏற்பாடு. முதலில் பயந்தான். ஆனால் பையில் சின்னதாக நூறு கிராம் நிறையில் நாலைந்து கவர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. கிராமத்து மனிசன் முருகேசனுக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை. ஒரு வருடம் அதற்குள் ஓடிவிட்டது. செல்லாயிக்கு நிறை மாசம். கர்நாடகாவில் மங்களூருக்குப் போகும் போது திடீரென மடக்கிய போலீஸ் சோதனையில் அவன் கொக்கெயின் என்ற போதைப் பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டான். அப்போதுதான் மஞ்சப்பையில் இருந்த கவர்கள் பற்றித் தெரிந்தது. தலைக்கு மேல் வெள்ளம், நடப்பது நடக்கட்டும் என்ற மன நிலைக்கு வந்து விட்டான். அப்புறம் பாண்டி தனக்கு ஒன்றும் தெரியாது எல்லாம் முருகேசன் தான் என்று அப்ரூவர் ஆக சாட்சியம் சொல்லி நழுவியதில் கர்நாடகா சிறையில் தண்டனையாக மூன்று வருடம் கழிந்தது. வெளியில் வந்தபோது எந்த லாரிக் கம்பெனியிலும் அவன் நுழைவதற்கு முன்னரே அவன் சரித்திரம் நுழைந்திருந்தது. எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவன் செயிலுக்குப் போன பின் செல்லாயி எப்படியோ காலத்தைத் தள்ளினாள். ஊருக்குப் போனாலும் கெட்ட பெயர்தான். போதைக் கடத்தக்காரன் பொண்டாட்டி என்று. அப்பா கோவிந்தனை வரச் சொல்லி செய்தி அனுப்பினாள். அனாதை என்று சொல்லி கோஷா ஆஸ்பத்திரியில் பிள்ளை பெற்றுக் கொண்டாள். கொஞ்சம் பச்சை உடம்பு சரியானதும் கட்டட வேலைக்குப் போய் வயிற்றுப் பாட்டை எதிர் கொண்டாள். ஓரளவு தைரியம் வந்ததும் அப்பனை ஊருக்குத் திரும்பி அனுப்பிவிட்டாள். நாலைந்து மாசத்திற்கு ஒருமுறை மங்களுர் சிறையில் முருகேசனைப் பார்த்து பிள்ளையைக் காட்டிவிட்டு வருவாள்.

முருகேசன் இல்லாத போது ஆவடி வீடு எல்லாம் அவளது தற்போதைய பொருளாதாரத்திற்கு சரிவராது என்பது தெளிவாகப் புரிந்தது. புரோக்கர் சின்னப்பன் தொந்தரவு வேற. “இங்கயே இருந்துக்க. நா அப்பப்ப வந்து போறேன்” என்றவன் முகத்தில் காறித்துப்பி விட்டு சிந்தாதரிப்பேட்டை கூவம் கரையில் தஞ்சம் அடைந்தவள்தான். திரும்பி வந்த முருகேசனுக்கு ஆறுதல் கூறி வந்தாள். அமைவதெல்லாம் சில்லறை வேலைகள் தான். அதுவும் பல நாட்களில் கிடைக்காது. இப்போ மூணு நாளா வேலை இல்லை. இரண்டு நாள் எப்படியோ தள்ளியாச்சு. குழந்தைக்கு நாளையிலிருந்து கொடுக்க ஒண்ணுமில்லை. புரோக்கர் ரவி வந்து கூப்பிட்டார்.கட்சிக் கூட்டங்களுக்கு போஸ்டர் ஒட்டறது, தோரணம் கட்டறது, கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது கொடிகள் நடுவது இதெல்லாம் அவர்தான் காண்டிராக்ட்.அவனுடைய தலைவருக்கு எதிரிக் கட்சிக் கூட்டமாம்.

ஊர்வலம், பொதுக்கூட்டம் இரண்டு நாள் வேலை.சாப்பாடு, போஸ்டர் ஒட்டுக் கூலி தனி.எல்லாம் சேர்ந்து இரண்டாயிரம் ரூபாய் வரும்.ஆனா மனசு கேட்கவில்லை. பிடிவாதமாக மறுத்தான். பிச்சை எடுத்தாலும் இந்த கேவலமான வேலையை செய்ய மாட்டேன் என்றவனை, நாய் வித்த காசு குறைக்கவா செய்யும். உன் தலைவன் என்னைக்கு வேலை தந்து நீ என்னை காப்பாத்த. குடும்பத்தை, புள்ளயைப் பாரு என்று செல்லாயியும், ரவியும் கரைத்தனர். சரி வேற வழியில்லாமல் சம்மதித்து அட்வான்ஸ் இருநூறு ரூபாய் வாங்கியாச்சு. ராவெல்லாம் கொசுக்கடியில் போஸ்டர் ஒட்டி முடிச்சிப்படுக்கும் போது மணி மூணு. காலையில ஆறு மணிகெல்லாம் பச்சைத்தண்னியை குடிச்சிட்டு, துரைப்பாக்கத்திலிருந்து தி. நகர் வந்து பழைய கிருஷ்ணவேணி தியேட்டர் பக்கம் காத்திருந்தான். ஆட்டு மந்தை மாதிரி லாரியில் நூறு பேரோட ஏற்றிவிட்ட கட்சிக்காரர் ஆளுக்கு ஒரு சுலோக நோட்டீஸ் தந்து எப்படி சொல்லவேண்டும் என்று பயிற்சி கொடுத்தார். வழியேற வாழ்க ஒழிக கோஷம் போட்டபடி பயணம். ஆனால் தலைவர் ஒழிக மட்டும் சொல்ல மனசு இடந்தரவில்லை. யாராவது சிலரோடு பேசிப் பார்க்கலாமே என்றால் அவர்களில் யார் கட்சிக்காரர், யார் தன்னைப்போல கூலிக்கு வந்தவர்கள் என்று தெரியவில்லை.எதாவது பேசப் போய் தன்னிலை மறந்து பேசிட்டால் பிரச்சனை வருவது மட்டுமில்லாமல் அடிவேறு கிடைக்கும். அதனால் ஒண்றும் பேசவில்லை. விவரம் விசாரித்தவர்களிடம் துரைப்பாக்கம் ரவி அண்ணன் ஆள் என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.

மத்தியானம் வரைக்கும் ஒண்ணுமேசாப்பிடதரவில்லை.அப்புறம் ஒரு பிரியாணி பொட்டலமும், தண்ணி பாக்கெட்டும் கிடைத்தது.மறைமலை நகர் பக்கத்தில் இறக்கிவிட்டனர்.அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் கூட்ட மேடை வரை ஊர்வலம். ஊர்வலம் தொடங்கி முக்கால் மணி நேரமாயிற்று. அரை குறைச் சாப்பாடு, முந்திய நாள் தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து கண்ணை இருட்டியது. போதாத குறைக்கு பிடிக்காத கட்சி வேறு. திடீரென முன்னால் எதோ குழப்பம். எதிர் திசையில் கூட்டம் ஓடிவர தள்ளு முள்ளு என்ன ஏதுன்னு தெரியதுக்குள்ள முருகேசனை நெடித்தள்ளியது கூட்டம்.அடித்துவந்த வெள்ளம் மாதிரி தள்ளாடியபடி ஓடத்தலைப்பட்ட முருகேசனை மிதித்தபடி முன்னேறியது கூட்டம். காலையில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் முருகேசன் மற்றும் ஐம்பது பேரின் மரணம் தலைப்புச் செய்தியானது.கூட்டம் நடக்கவில்லை என்றாலும் அந்த எதிரிக்கட்சித் தலைவர் மறு நாள் முருகேசன் வீட்டிற்கு ரவியோடு வந்து ஆறுதல் சொன்னார். இறுதிச் செலவுக்கு இரண்டாயிரம் தந்தவர், விரைவில் ஒரு லட்ச ரூபாய் கட்சி நிதியிலிருந்து தருவதாக வாக்களித்தார். கட்சி ஆபிசுக்கு ரவி அண்ணனுடன் பலமுறை அலைந்து விட்டாள். அங்கே கட்சி உறுப்பினர் அட்டை கேட்டனர்.

செல்லாயிக்கு மூன்று மாதத்திற்குப் பின் கட்சி தர இருந்த ஒரு லட்சம் ரூபாய் அவன் வேற கட்சி என்பதால் கிடைக்காமலேயே போனது.

இப்போது ரவி புரோக்கரின் நிரந்தர ஆட்கள் பட்டியலில் செல்லாயி சேர்க்கப்பட்டு முழுசாக நான்கு மாதம் முடிந்து விட்டது. மாதம் நான்காயிரம் சம்பளமாம். கூட்டத்திற்கு தலைவர்கள் பெயர் வைக்க பிள்ளையோடு வரவேண்டுமாம். இதெல்லாம் முருகேசனின் ஊர்க்கார நண்பன் முத்துசாமி நாலு நாள் முன்பு வீட்டில் கொத்தனார் வேலையில் வெள்ளை அடிக்க வந்த போது சொன்ன தகவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *