கூத்துக்கார இளவரசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 17,248 
 
 

மணகரை வாசல் வெறிச்சோடிக்கிடந்தது.

ஆயிரம் கால் ஊன்றின அர்த்தனாரி மண்டபத்தில்நெடுமரமாய் நிற்கும் தூண்களில் கோபப்புகைகக்குவது போல், தீவட்டிச் சுடர்கள். அந்தச்சுடர்களின் ஆக்ரோஷம் பூந்துறை மன்னன்காளிங்கராயக் கவுண்டரின் முகத்திலும்பிரதிபலித்தது.

மன்னர் அவ்வளவு சுலபமாய்க் கோபப்படமாட்டார். அப்படிக் கோபப்பட்டால் ஒரு ஜாம நேரமாவதுருத்திரமூர்த்தியாகவே காட்சியளிப்பார். அந்த நேரத்தில் பட்டத்துராணி காணியாலம் காக்கம் தேவிஅருக்காணியாத்தாகூட அவரெதிரில் வரமாட்டார். ஆனால், இப்போதோ அதன் எல்லைகளையும் கூடகடந்துவிட்டார்.

‘‘எனக்குச் சுயநலமா? யார் ஏவிவிட்ட அசிங்கச் சொல் இது? இந்த ஒரு வார்த்தைக்காக என்மணிமுடி துறக்கிறேன். எனக்கு இந்த நாடும் வேண்டாம். அரியணையும் வேண்டாம். இந்தக்கால்வாயில் இனி ஒரு சொட்டுத் தண்ணீரும் பருக மாட்டேன். என் வம்சா வழிகள் கூட இதில் ஒருசொட்டுத் தண்ணீர் பருகார். இது இந்தக் காளிங்கனின் இரண்டாம் சபதம்!’’

அவன் கோபம்கொப்பளிக்க கொந்தளித்தபோதே மணகரைவாசலில் குழுமியிருந்த எண்ணாயிரம் சேனைகளும்,பதினாறாயிரம் குடிகளும் நடுநடுங்கித்தான் போயின.

என்றாலும் துளி அஞ்சாமல்தான் பேசினாள், அந்த ஆட்டக்கார சிறுக்கி.

‘‘ஆயிரந்தான் ஆனாலும் மகாராஜா நீங்க வாய்க்காலு வெட்டியது நாட்டுக்கு நல்லதுன்னு ஊர்மக்கள்போற்றலாம். ஆனால், நான் பேசமாட்டேன். நீங்க முக்காத வழி தூரம் போன சர்ப்பத்துக்கு இணையாஏழு காத தூரத்துக்கு வாய்க்காலு வெட்டியதுல பயிர்பச்சை விளையப் போவதென்னவோ வாஸ்தவந்தான். ஆனாலும், அது நம்ம இளையராஜா காதலுக்குத்தானேயொழிய குடிகளுக்காகஇல்லையே! அது உங்க சுயநலந்தானே?’’

‘மலுக்’கென்று ஒரு பார்வை. ‘களுக்’கென்று பிறிதொரு சிரிப்பு. இமைப்பொழுதில் கண்ணுக்குள்ளிருந்துஒரு மின்னல் வெட்டல். கொஞ்சம் ஆடித்தான் போனார் மன்னவர்.

‘‘கால்வாய் உங்க காதல் சுயநலம்தானே?’’ திரும்பத் திரும்ப நாராசமாய் அந்த வார்த்தைகள். சபையில்பெரும் சலசலப்பு எழ மன்னன் பேசத் தொடங்கினான்.

‘‘இந்த வாய்க்கால் நீரை நான் பருகினால்தானே சுயநலம்? என் மக்கள் பருகினால் பொதுநலம்தானே? நானும் என் வம்சமும் தென் திசை செல்கிறோம். என் தளபதி இனி இந்தப் பூந்துறைநாட்டை ஆள்வார்!’’

விஜயநகரம் ஆளப்பட்ட தேவராயர் அவர்களின் குமாரனுக்குச் சித்த பிரம்மை நீக்கினவர்காளிங்கராய மன்னர். அதனால் அவர் கடாட்சத்தில் ஆனைமலைச் சாறலிலே காணிக்கைநாடு பூந்துறை நாட்டிடம் ஒப்படைப்பு இருந்ததால், காரியம் சுலபமாகி விட்டது. ஆனால் பூந்துறைநாடுதான் ஒரே நாழிகையில் ஒப்பாரிக்கோலம் பூண்டு விட்டது. ‘சொன்ன சொல் தவறாதவன்காளிங்கன்’ என்பது எட்டுப்பட்டியும், சுத்துப்பத்து பாளையப்பட்டுகளும் அறிந்த விஷயம்.

அவரைக் கைப்பிடித்த மகாராணிக்குத் தெரியாதா? ராமனுடன் வனவாசம் புறப்பட்ட சீதை போல்,உடனே புறப்பட்டு விட்டாள். இங்கே லட்சுமணன் இல்லை. பதிலுக்குக் காளிங்கரின் அருமைப்புதல்வர், பூந்துறை நாட்டு இளவரசர் நஞ்சய்ய காளிங்கன்தான் இருந்தான்.

அவனுக்கு இதில் ஒன்றுமே புரியவில்லை. எதற்காக எதை வேண்டுமானாலும், ஏன் பூந்துறைநாட்டையே கூட விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தான். ஆனால், கேவலம் ஒரு ஆட்டக்காரிசொல்லுக்காக நாட்டைவிட்டு, தன் காதலுக்காக ஆறேழு ஆண்டு காலம் வெட்டி வச்ச வாய்க்காலைவிட்டுவிட்டு, யாருக்காக _ எதற்காக நாடே இந்தப் பாடுபட்டதோ அந்த பண்ணகுலப்பைங்கிளி, தன்அருமைக்காதலியை விட்டு விட்டுச் செல்வதில் அவனுக்கு விருப்பமேயில்லை. ‘அப்படியே அவளைச்சம்பந்தம் பேசப்போனாலும் அப்பவே ‘பரறிசி’ எளக்காரம் பேசின அவள் குடும்பம் இப்போதுபராறியாகிவிட்ட இந்த இளவரசனுக்குப் பெண் கொடுப்பார்களா?’ அவன் மனதில் ஓடும் கவலைரேகைகள். அவள் காதலி தாமரைநாச்சியின் நினைவுகள் நெஞ்சில் மோதியது.

அவள் வம்சம் காளிங்கராயன் வம்சத்துக்கு மாமன் மச்சான் முறை. தன் நாட்டையும் அதில் உள்ளவளத்தையும் எள்ளி நகையாடியதால், நீண்டகாலப்பகை என்பது, பின்னாளில்தான் தெரிந்தது.அதனால் காளிங்கராயர் அந்தக் குடும்பத்தில் பெண்ணெடுக்கமாட்டேன் என்று உறுதிபட நின்றார்.ஆனால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தாமரைநாச்சி நினைப்பாலே பட்டத்துஇளவரசர் இளைத்துத் துரும்பாகி நிற்கவே, அரசர் பண்ணகுல வம்சத்தில் பெண் கேட்டுநிச்சயத்திற்கும் நாள் குறித்தார்.

நிச்சயதார்த்தத்தன்று பூந்துறை நாடே பெண்வீட்டில் குழுமியிருந்த வேளை. இரவு நேரம்.

‘‘வந்தவர்களுக்குச் சமைக்க எந்த அரிசி போடறது!’’ சமையல்காரன் கேட்ட சந்தேகம். பெண் வீட்டுப்பெண்டுகள் பதிலுக்கு, ‘‘கம்பு விளையற சீமையிலிருந்து வந்தவங்களுக்கு எந்த அரிசின்னு தெரியப்போவுது? பரறிசி போடு!’’ இளக்காரமாய்க் கூறின வேகம். காளிங்க மன்னரின் செவிகளுக்கும் சேதிஎட்டி விட்டது.

ஏற்கெனவே ரோஷக்காரர். அந்தக் கடுவார்த்தையால் ருத்ரகாரராகிப் போனார்.

‘ரிஷபகிரி சோழராஜா மகளை முறை சரித்தவன். சேர ராஜா பாணியில் கன்னாலம் கட்டிக்கொண்டவன். எட்டாயிரம் குடி சீதனத்துடன் பூந்துறை நாடேகின இந்தக் காளிங்கனைப் பார்த்தா,இந்த வார்த்தைகளை உதிர்த்தீர்கள் பெண்டுகளா? எம் ஊர்லயும் நெல்லு வெளையும்படியாக நீர்ப்பாங்கு உண்டு பண்ணிக் கொண்டு, உம் வீட்டில் பெண் எடுப்பேன். இது நான் கும்பிடும்சர்வேஸ்வரன்ஆணை!’’ என்று சொல்லி சபதமேற்றுப் புறப்பட்டவர்தான்.

வைராக்கியத்தில் மிகுந்த மன்னவன். வீரதீரத்தில் சிறந்தவன். தன் குடி எட்டாயிரத்தையும் பவானிஆற்றுப்படுகை¨யில் இறக்கி விட்டான். இரவு பகல் என்றில்லை. பவானி ஆறு தொடங்கி, கொடுமுடிகூடல் வரை மொத்தம் ஏழு காத தூரம் ஆறேழு ஆண்டுகள் ஓயாத வேலை. ஊன் உறக்கம் இல்லை.நாட்டின் பயிர் விளைச்சல் கூட இரண்டாம் பட்சம்தான். ‘எல்லை எமதே!’ என்று புறப்பட்டுப் வந்தவேட்டுவர்களையும் போரில் சரித்தான். குறுநிலப் பிரபுக்களுக்குப் பாத்தியதையான நிலங்களைப்பொற்காசுகள் கொடுத்துப் பொதுப் பட்டயமாக்கினான். இப்படியாக உருவான வாய்க்காலுக்குநீர்வரப் பெற பவானி ஆற்றின் குறுக்காக மண் அணையையும் மதகுகளையும் எழுப்பினான். தண்ணீர்திறக்க நாளும் குறித்து விட்டான்.

அந்த நாளில்தான், இப்படி ஒரு கூத்துக்காரி வந்து பிரச்சினை செய்துவிட்டாள்.

ஈராயிரம் வீரர்கள், 300 குதிரைகள், 100 யானைகள் அம்பாரி கட்டி பல்லாக்கு, உபய சாமரம், சுறுட்டி,வெள்ளைக் கொடை முதலான ஆயிரமாயிரம் பொருட்களுடன் காளிங்கராயருடைய வம்சமே தெற்குதிசை நோக்கி புறப்பட்டுவிட்டது. அவர்களை வழியனுப்பியது சில குடிகளே என்றாலும்,அவர்களுடனே விசுவாசம் மாறாமல் கூடவே வந்தது பல குடிகள். கருட நாட்டுப் பெருவழியில் பூத்துறை நாட்டு எல்லை தாண்டி பரிவாரங்கள் நகர்ந்த வேளையில், இந்த ஊர்வலத்தை எதிர்த்தவாக்கில் ஒரு பெண் மயில்.

‘‘காளிங்கராய மகாராசரே! என்னை விட்டுப்போனால் ஆயிற்றா?’’ என்றபடி நின்றது சாட்சாத்அந்தக் கூத்துக்காரப் பெண்தான். அதே குறும்புப்பார்வை. மின்னல் வெட்டு. இப்போது அவளுடன் மற்றகூத்துக்காரர்கள் யாருமில்லை.

‘‘அடப்பாவி, இப்போது என்னை மாய்மாலம் செய்ய வந்தாளோ?’’

ராஜாவின் பின்னால் அணிவகுத்த குடிகள் அரண்டு நின்ற வேளை. பின்புற பல்லக்கில் அமர்ந்திருந்த நஞ்சய்யகாளிங்கனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. பல்லக்கிலிருந்து இளவரசர் படபடத்துக்கீழிறங்கினார். அந்தக் கூத்துக்காரியை எட்டிப் பிடித்து, ‘‘ஆஹா… தாமரைநாச்சி…நீ எங்கேபோயிருந்தாய்?’’ எனக் கேட்டு நிற்க, ஆடிப்போனார் மன்னவர்.

‘‘தாமரைநாச்சியா? கூத்துக்காரியாக வந்து மணகரை வாசலில் நம்மிடமே நடித்தவள், இளவரசன்விரும்பிய பைங்கிளியா?’’

மன்னவருக்குச் சந்தேகத்தில் தலை சுற்றாத குறைதான்.அதைப் போக்குவதுபோல், அவரருகே வந்தாள் கூத்துக்காரி. அவர் காலைத் தொட்டு வணங்கினாள்.

‘‘என்னை மன்னியுங்கள் மகாராஜா. எங்கள் சீமையில் உங்க நாட்டில் வெட்டுகிற வாய்க்காலைப்பற்றித்தான் நிறையப் பேர் பேசிக்கிறாங்க. ஆயிரந்தான் அடுத்த நாட்டுக்காரன் அசுர சாதனைபுரிந்தாலும் அதை இளக்காரம் பேசாவிட்டால், இந்த நாட்டுக்காரனுக்குத் தூக்கம் பிடிக்காதே!அப்படித்தான் எங்க நாட்டுப் பொண்டுகள், ‘நீ பட்டத்து இளவரசியாகக்கூடிய நாட்டுல உன்காதலுக்காக ராஜா வாய்க்கால் வெட்டறாராம்ல? என்ன சுயநலம்? அந்தச் சுயநல நாட்டுக்காபோகப்போறே?’ன்னு என் காதுபடவே பேசிக்கிறாளுக.

அதை அண்டை நாட்டவன் கல்வெட்டுல பொறிச்சு கொடுமுடியில வைக்கப்போறதாகவும் சொன்னாங்க. இதை நான் எப்படி அனுமதிக்கமுடியும்? என்னால புகுந்த வீட்டுக்கு ஒரு அவப்பெயரா? அதைச் சரித்திரம் பேசலாமா? அந்த ராசாமட்டுமல்ல, நான் கட்டிக்கப்போற இளவரசரும் சுயநலம் பார்க்கறவங்க இல்லே. அதைநிரூபிக்கிறேன்னு எங்க அரண்மனையிலயே சபதம் போட்டுட்டு வந்தேன். கூத்துக்காரி வேஷம்கட்டினேன். ஜெயிச்சும் காட்டினேன். நான் செய்தது தப்பா?’’ என்று கேட்டு நிற்க, காளிங்கரால்பேசக் கூட முடியவில்லை.

‘‘இவளல்லவோ என் மருமகள்!’’ என்று நாதழுதழுத்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *