திருவல்லிக்கேணியில் மார்க்கபந்து மேன்ஷன் ரொம்பப் பிரபலம்.
மஞ்சள் கலர் பெயிண்டிங்கில் ‘ப’ வடிவில் மூன்று அடுக்குடன்கூடிய பெரிய கட்டிடம் அது. அதில் இரண்டு கட்டில்கள் போடக்கூடிய சிறிய அறைகள் நிறைய இருந்தன. ஒரு அடுக்கில் முப்பது அறைகள் இருக்கும். நீளமான பால்கனியின் இரண்டு ஓரங்களிலும் தகரக் கதவினாலான இரண்டு சிறிய கக்கூஸ். நடுவில் குறுகலான மாடிப்படிகள்.
இந்த மேன்ஷனில் பல மாதங்கள் அல்லது சில வருடங்கள் ஜீவித்துவிட்டு பிறகு திருமணமாகி தனிக்குடித்தனம் போனவர்கள் ஏராளம்.
ஜனார்த்தனும், சிவக்குமாரும் அந்த மேன்ஷனின் முதல் அடுக்கில் கடந்த மூன்று வருடங்களாக ஒரே அறையில் தங்கியிருந்தார்கள்.
அதனாலேயே நண்பர்களானார்கள். ஜனார்த்தன் தஞ்சாவூர். சிவக்குமார் திருச்சி. ஜனார்த்தனனுக்கு ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை. சிவக்குமார் மத்திய அரசாங்க ஊழியர்.
இருவரும் நட்பின் அதீதத்தில் போடா, வாடா, நாயே, மயிரு, மச்சி, மாப்ள, வாத்தியார், பங்காளி என்று விளித்துக் கொள்வார்கள்.
சிவக்குமார் தினமும் மாலை அறைக்கு வந்ததும் தன் கட்டிலில் அமர்ந்து குடிப்பான், நிறைய புகைப்பான். அந்த புகைத்தலில் சிகரெட்டும் உண்டு, பீடியும் உண்டு. அது அப்போதைய மணிபர்ஸ் கனத்தைப் பொறுத்தது. அறையில் அவனுடைய ஷெல்பில் ஏராளமாக காலியான பீர் பாட்டில்களும், விஸ்கி பாட்டில்களும் அடுக்கி வைத்திருப்பான். அவைகளை மாதம் ஒருமுறை பழைய சாமான்கள் வாங்கும் கடையில் கொடுத்து காசாக்கிக் கொள்வான். அதே ஷெல்பில் காலி சிகரெட்
பாக்கெட் மற்றும் காலி தீப்பெட்டிகள் நிறைய இறைந்து கிடக்கும்.
அறையில் இருக்கும்போது எப்பவும் ஒரு அழுக்கு லுங்கியில் இருப்பான். வாரம் ஒருமுறைதான் ஷேவ் பண்ணுவான். உதடுகள் கறுத்து பார்ப்பதற்கு அழுக்காக இருப்பான். ஆனால் அடுத்தவர்கள் வம்புக்கு போகமாட்டான். அமைதியானவன். அதிர்ந்து பேசமாட்டான்.
டூட்டி முடிந்து அறைக்கு திரும்பி வரும் வழியில் சரக்கு வாங்கி வந்துவிடுவான். அவனுடைய ஒரே பொழுதுபோக்கு தினமும் மாலை ஒரு குவார்ட்டர் அல்லது இரண்டு பீர் பாட்டில்களை காலி செய்துவிடுவது.
ஜனார்த்தன் பார்ப்பதற்கு சிவப்புத் தோலில் பளிச்சென இருப்பான். தினமும் ஷேவ் பண்ணிக்கொண்டு, எப்போதும் நேர்த்தியான உடைகளில் வலம் வருவான். அவனுக்கு சிகரெட், குடிப் பழக்கம் கிடையாது.
ஆனால் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தான். சபல புத்திக்காரன். பெண்களுக்காக நிறைய செலவழிப்பான். அவர்களை தான் காதலிப்பதாக பொய்சொல்லி உருகுவான். அவர்களுடன் எளிதில் நட்பாகி, பிறகு அதே வேகத்தில் கழட்டியும் விட்டுவிடுவான். பழகும் எல்லாப் பெண்களையுமே ஒருமுறையாவது முகர முயற்சிப்பான். சரியான காரியவாதி.
அன்று புதன்கிழமை. அரைநாள் லீவு போட்டுவிட்டு பகலில் எவளையோ மேன்ஷனுக்கு தள்ளிக்கொண்டு வந்து தன் அறையினுள் சென்று கதவைச் சாத்திக்கொண்டான். அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர்.
அவளுடன் ஒருமணி நேரம் குலாவிவிட்டு வெளியே வந்தான்.
அப்போது மேன்ஷனின் வயதான செக்யூரிடி அந்தப் பெண்ணை சந்தேகக் கண்களுடன் உற்றுப் பார்த்தான்.
அன்று மாலை அறையில் தனியே தண்ணியடித்துக் கொண்டிருந்த சிவக்குமாரிடம், “ஆண்கள் தங்கும் மேன்ஷனுக்கு பெண்களை கூட்டிவருவது தவறு…. அடுத்தமுறை இம்மாதிரி நடந்தால் ஜனார்த்தன் மேன்ஷனை காலி செய்துவிட வேண்டுமென்று” எச்சரித்து விட்டுச் சென்றான்.
அன்று இரவு அறைக்கு வந்தவனிடம் சிவக்குமார் “யார மச்சி இன்னிக்கி நம்ம ரூமுக்கு தள்ளிகிட்டு வந்த?” என்றான்.
ஜனார்த்தன் இதை எதிர்பார்க்கவில்லை.
சமாளித்துக்கொண்டு, “அவ என்னோட ஆபீஸ்மேட் சிவா. அர்ஜண்டா ஒரு பென்ட்ரைவ் வேண்டியிருந்தது” என்று சமாளித்தான்.
சிவக்குமார் “மயிரு நீ எவளோடயும் எப்படியும் எங்கயும் போ…அது உன்னோட பர்சனல் மேட்டர். ஆனா மேன்ஷனுக்கு கூட்டிக்கிட்டு வராத. அவள மேன்ஷனுக்கு வெளில நிக்க வச்சுட்டு நீ ரூம்லருந்து பென்ட்ரைவ எடுத்துட்டு போகவேண்டியதுதானே? ரூமுக்குள்ள அவளோட போயி கதவ சாத்தினாத்தான் அது கிடைக்குமா என்ன?” வெப்பமாகக் கேட்டான். .
ஜனார்த்தன் கோபத்துடன், “யாரு அந்த செக்யூரிட்டி கிழப்பய கம்மனாட்டி உங்கிட்ட போட்டுக் குடுத்துட்டானா?” என்றான்.
முகத்தைக் கழுவி, நெற்றியில் வீபூதி இட்டுக்கொண்டவன், இரண்டு சாப்பாட்டு கூப்பனை கையில் எடுத்துக்கொண்டு “சரி வா சிவா, மணி ஒன்பது, பசிக்குது. மெஸ்ல போய் கொட்டிக்கலாம்” என்றான்.
சிவக்குமார் கட்டிலிலிருந்து எழுந்து தன் அழுக்கு லுங்கியை இழுத்துக் கட்டிக்கொண்டான். காலியான விஸ்கி பாட்டிலை உள்ளங்கையால் மூடி ஒருமுறை குலுக்கிவிட்டு பிறகு நிதானமாக அதைத் திறந்து ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்து பாட்டிலினுள் போட்டான். அது ஊதாக்கலரில் குப்பென ஒளிர, கைகொட்டி சிரித்தான். பின்பு பாட்டிலை எடுத்து ஷெல்பில் அடுக்கியவுடன், இருவரும் கிளம்பினார்கள்.
திருவல்லிக்கேணியில் இரண்டு தெருக்களுக்கு ஒரு மெஸ் இருந்தது. எல்லா மெஸ்களிலும் தொடர்ந்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். பெரும்பாலான மெஸ்கள் பிராமணர்களால் நடத்தப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் கணபதிஐயர் மெஸ்.
ஜனார்த்தன் கணபதிஐயர் மெஸ் கவுன்டரில் கூப்பன்களை கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட அந்த டேபிளில் சிவக்குமாருடன் போய் உட்கார்ந்தான். அங்கிருந்து பார்த்தால்தான் சமையலறையில் இருக்கும் அலமேலு தெரிவாள். அவளும் ஜனார்த்தனும் அடிக்கடி ஒருவரையொருவர் குறுகுறுவென பார்த்துக் கொள்வார்கள். இது தினசரி வாடிக்கை. பல சமயங்களில் அவளே இருவருக்கும் பரிமாறுவாள். அவ்விதம் பரிமாறும்போது அதில் ஒரு தனிப்பட்ட கவனிப்பும் அன்னியோன்யமும் காட்டப்படுவதாக சிவக்குமாருக்குத் தோன்றும்.
சாப்பிட்டுவிட்டு மேன்ஷன் திரும்பும்போது, “மச்சி…. நீ திருந்தவே மாட்டியாடா… காலேல பால் வாங்கப்போனா அங்க சுகன்யா, காலைடிபன் சாப்பிட சுந்தரேசஐயர் மெஸ் போனா அங்க காயத்ரி; மத்தியானம் ஆபீஸ்ல எவளோ ஒருத்தி ! நல்ல வேளை உன்னோட ஆபீஸ் கண்றாவியெல்லாம் எனக்குத் தெரியாது….சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க மாப்ள” என்றான்.
“என்னோட பலமே பெண்கள்தான் சிவா, பலஹீனமும் அவங்கதான். என்னால இதல்லாம் அவ்வளவு சீக்கிரம் விடமுடியாது சிவா…விட்டா செத்துருவேன். இந்த உலகமே என்னை ஒதுக்கி வைத்த மாதிரி தோணும். நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்” என்றான்.
“சரி, சரி இனிமே மேன்ஷன் வரையும் எவளையும் கூட்டிகிட்டு வராத அப்புறம் உன்னை உள்ள புகுந்து வீடுகட்டி அடிப்பாங்க…..எனக்கும் தர்மஅடி விழும்…என் உடம்பு தாங்காது.”
இருவரும் பெரிதாக சிரித்தனர்.
ஜனார்த்தனன் “மச்சி உங்கிட்ட சொல்றதுக்கென்ன….என் டிபார்ட்மெண்ட்ல புதுசா வஹிதாபானுன்னு ஒரு பொண்ணு ஜாயின் பண்ணியிருக்கு. செம பிகர். கிளி கொஞ்சும் அழகு. ஒரு மூணு மாசமா நான் அவள லவ் பண்றேன். சொந்த ஊர் காயல்பட்டினம். ரொம்ப நல்ல பேமிலி. பெரிய பணக்காராங்க. ஐ திங் ஐயாம் சீரியஸ் வித் ஹர்….” என்றான்.
“வேணாம் மச்சி போன வருஷம் ஸ்டெல்லாவோட ரொம்ப சீரியஸா சுத்தின….இப்ப வஹிதான்ற. பேர பாத்தா முஸ்லீம் மாதிரி இருக்கு. லவ் பண்ணா ஒழுங்கா அவளையே கல்யாணம் பண்ணிக்க. மவனே அவகிட்ட வால நீட்னா உன்ன போட்டுத் தள்ளிருவாய்ங்க….அதேசமயம் நேர்மையான காதலுக்கு உயிரையும் கொடுப்பாங்க…”
“வஹிதாபானு சீரியஸா இருக்காடா….ஆனா எனக்குதான் மனசு வேவரிங்கா இருக்கு மச்சி.”
“ரெண்டு வருஷம் முந்தி முஸ்லீம் தொண்டு நிறுவனங்கள்தான் சென்னை வெள்ளத்துல மாட்டிக்கிட்ட ஏகப்பட்ட குடும்பங்களை காப்பாற்றி அவர்களை மஸ்ஜித்தில் தங்க வைத்து சூடான உணவு கொடுத்து பெரிய சேவை செய்தார்கள்…..அவர்கள் அப்போது ஆற்றிய பணி அளப்பரியது….ஆனா அவங்களை எவரேனும் ஏமாற்றினால் கடுமையான கோபம் கொள்வார்கள்…பார்த்து நடந்துக்க.”
அடுத்தமாதம் சிவக்குமார் திருச்சி ஆண்டாள் தெருவில் கிரிஜா என்கிற பெண்ணை பார்த்துவிட்டு வந்து, அடுத்த நான்கு மாதத்தில் கல்யாணம் என்றான். அவளுடைய போட்டோவை பெருமையுடன் காண்பித்தான்.
வட்ட முகத்தில் அளவான சிரிப்புடன் சமர்த்தாக காணப்பட்டாள் கிரிஜா.
ஜனார்த்தனனுக்கு பொறாமையாக இருந்தது.
“மச்சி அடுத்தவாரம் எட்டாம்தேதி அவளுக்கு பொறந்தநாள். அன்னிலேர்ந்து
நான் இந்தக்குடி, சிகரெட்ட கம்ப்ளீட்டா விட்டுவிடுவேன்…”
சொன்னமாதிரியே அவைகளை விட்டுவிட்டான்.
இரண்டு வாரங்கள் சென்றன.
ஜனார்த்தன்-வஹிதாபானு காதல் மிகவும் முற்றியது…
ஒருநாள் வாட்ஸ்ஆப்பில், வஹிதாபானு ஜனார்த்தனுக்கு அனுப்பிய தகவலை, அவளின் மூத்த சகோதரன் சலீம் படித்துவிட்டான்.
அவளிடம் கேட்டதற்கு, “ஆமாம் அவரைத்தான் நிக்காஹ் செய்துகொள்வேன்’ என்றாள்.
மறுநாளே சலீம் ஆபீஸ் சென்று ஜனார்த்தனை சந்தித்து, “அந்த வீட்டின் மூன்று சகோதரர்களுமே தங்களது ஒரே சகோதரியான வஹிதாபானுவிடம் உயிரையே வைத்திருப்பதாகவும், அவளின் விருப்பம்தான் தங்களுடைய விருப்பமென்று” சொன்னான்.
ஜனார்த்தனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘என்னடா இது, விளையாட்டு வினையாகிவிடும் போலிருக்கே! காலை சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது போலிருக்கே!!’ என்று கவலைப்பட ஆரம்பித்தான்.
அன்றிலிருந்து அவன் வஹிதாபானுவிடமிருந்து விலகியே இருக்க ஆரம்பித்தான். பெண்கள் விளையாட்டுப் பொருளா என்ன? ஆண்களைவிட அவர்கள் அதிகம் அன்பினாலும், பாசத்தினாலும் பின்னப் பட்டவர்கள். காதலித்தவனை நினைத்து உருகுபவர்கள்.
ஜனார்த்தன் அடுத்த இரண்டு நாட்கள் ஆபீஸ் போகவில்லை.
வஹிதாபானு போன் பண்ணினாள். “தஞ்சாவூர் சென்றிருந்ததாகவும், தன் பெற்றோர்கள் அவளுடனான திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை….எனவே அவனை மறந்துவிடும் படியும்” கதை அளந்தான்.
அடுத்த நிமிடம் சலீம் போன் பண்ணி, “பானு என்னிடம் பெரிதாக அழுகிறாள்….உடனடியாக அவள் திருமணம் நடக்க வேண்டும், அதன் பிறகு நேரில் சென்று உன் பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளலாம்….அப்போது நானும் உடன் வருகிறேன்.” என்றான்.
ஜனார்த்தன் கடுப்புடன், “ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் சலீம், ஐயம் ஹெல்ப்லஸ்” என்றான்.
“அப்ப இதுதான் உன் முடிவா?”
“ஆமாம்.”
“என் சிஸ்டரின் உன்னதமான காதலுக்கும், ஏக்கத்துக்கும் என்னதான் பதில் ஜனா?” சூடாகக் கேட்டான்.
“காதல்தான செஞ்சோம்….அது எங்க கல்யாணத்துல முடியல. அவ்வளவுதான். எதுக்கு சலீம் உனக்கு கோபம்?” மொபலை கட் செய்தான்.
மறுநாள் ஜனார்த்தன் ஆபீஸ் போனான். ஆனால் வஹிதாபானு வரவில்லை. அவள் ரிசைன் பண்ணிவிட்டதாக கேள்விப்பட்டான். மனதிற்குள் சற்று நிம்மதியடைந்தான்.
ஒருவாரம் சென்றது.
அன்று காலை ஐந்தரை மணிக்கு எழுந்திருந்து ஆவின்பால் பூத்துக்கு சுறுசுறுப்பாக கிளம்பினான் ஜனார்த்தன். சுகன்யாவைப் பார்க்கலாம்.
அறையைவிட்டு வெளியே வந்து கதவை வெறுமனே சாத்திவிட்டு, நீளமான பால்கனியிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான். இருட்டாக இருந்தது.
அப்போது மான்ஷனுக்கு எதிரே ஒரு கார் வந்து நின்றது தெருவிளக்கின் வெளிச்சத்தில் தெரிந்தது. ஜனார்த்தன் அசுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது காரின் முன் சீட்டிலிருந்து சலீம் இறங்கியதையும், தொடர்ந்து பின் சீட்டிலிருந்து மூன்றுபேர் முரட்டுத் தோற்றத்துடன் லுங்கியில் இறங்கியதையும் பார்த்தான்.
அவர்களிடம் சலீம் மான்ஷனின் முதல் அடுக்கை கை நீட்டிக்காட்டி ஏதோ சொல்ல அவர்கள் மான்ஷனை நோக்கி விரைந்தார்கள்.
ஜனார்த்தனுக்கு உடம்பு தொப்பலாக வியர்த்தது.
பயம் அடிவயிற்றைப் புரட்ட, சரேலென்று பால்கனியின் கடைசியில் இருந்த கக்கூஸ் ஓடிச்சென்று அதன் தகரக் கதவைத்திறந்து உள்ளேசென்று இருட்டில் ஒளிந்துகொண்டு, கக்கூஸின் மேற்கூரைக்கும் தகர கதவுக்கும் இருந்த இடைவெளியில், இதயம் திக் திக்கென அடித்துக்கொள்ள, மூச்சைப் பிடித்துக்கொண்டு வெளியே உற்றுப்பார்த்தான்.
அடுத்த வினாடி அந்த மூவரும் மாடிப்படியேறி வந்து ஜனார்த்தனின் அறையைத் திறந்துகொண்டு உள்ளே சென்றார்கள்.
நான்கு நிமிடங்கள் கழித்து அவர்கள் அறையைவிட்டு வெளியேறினார்கள்.
சிறிதுநேரத்தில் கார் கிளம்பும் சத்தம் கேட்டதும், ஜனார்த்தன் கக்கூஸை விட்டு வெளியேவந்தான்.
மெதுவாக தன் அறைக்குவந்து கதவைத்திறந்து உள்ளேசென்று லைட்டைப் போட்டான்.
அங்கு சிவக்குமார் ரத்த வெள்ளத்தில் குவியலாக இறந்து கிடந்தான்.
ஜனார்த்தன் அலறிக்கொண்டு ஓடிப்போய் செக்யூரிட்டியை எழுப்பினான்.
அடுத்த இருபது நிமிடங்களில் திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ் பாண்டியன் அங்கு விரைந்தார்.
ஜனார்த்தனிடம், “எப்படி இந்தக்கொலை நடந்துச்சு?” என்றார்.
“சார் நான் தினமும் காலைல சீக்கிரம் எந்திருச்சு ஆவின்பால் பூத்துக்கு போவேன்…இன்னக்கி அம்மாதிரி போறப்ப “ஐயோ அம்மான்னு சிவா குரல் கேட்டுச்சு….பூத் போகாம திரும்பி ஓடிவந்தேன்…பார்த்தா ரத்த வெள்ளத்துல செத்துக்கிடக்கான் சார்.” பெரிதாக அழுதான்.
“அப்ப மேன்ஷனுக்குள்ள இருக்கற யாரோதான் இவரு தினமும் பால் வாங்கப்போறத தெரிஞ்சுகிட்டு, இந்தாள போட்டுத் தள்ளியிருக்காங்க…நீ என்னய்யா பெரிய்ய செக்யூரிட்டி?” என்று செக்யூரிட்டியை இன்ஸ் விரட்ட,
“சார் இந்த ஆளு தினமும் மப்புலதான் இருப்பாரு அந்த ஷெல்ப பாருங்க” – திறந்திருந்த ஷெல்ப்பைக் காண்பித்தான்.
அங்கு காலியான பாட்டில்கள் ஏகப்பட்டது இறைந்து கிடந்தன. .