‘டொக்! டொக்!’ என்று கதவைத் தட்டிவிட்டு அறைக்குள்ளே வந்தாள் நர்ஸ்.
“ என்னம்மா!…. மாலை நாலு மணிக்கு ஆபரேஷன்….நீங்க இன்னுமா நீங்க பணம் கட்டலே!….உடனே போய் கேஷ் கவுண்டரில் பணத்தைக் கட்டிட்டு வாங்க!..”
என்று நர்ஸ் சொன்னவுடன் மகன் முருகேசனைப் பார்த்தாள் பார்வதி.
“ அம்மா!…நேற்று நீ கொடுத்த நகைகளை பாங்கில் அடமானம் வைத்து ஐம்பதாயிரம் வாங்கினேன்….அந்தப் பணத்தை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இங்கு தான் வந்தேன்!…இங்கு வந்து பார்த்தா ரசீது தான் இருக்கு!….நோட்டுக் கட்டைக் காணோம்!..வழியில் எங்கயோ தவறி விழுந்து விட்டது!…”
“ ஐயோ!…ஐயோ!…” என்று பார்வதி தலையில் அடித்துக் கொண்டு கதறினாள். முருகேசன் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தான்.
அன்று வந்த மாலைப் பதிப்பு செய்தி தாள் பிரிக்காமல் அப்படியே கீழே கிடப்பதைப் பார்த்தாள் நர்ஸ். “ தம்பி!.. அந்தப் பேப்பரில் முதல் பக்கத்தில் 50 ஆயிரம் என்று என்னவோ போட்டிருக்கு!.. என்னவென்று எடுத்துப் பார்!….” என்றாள்.
நர்ஸ் சொன்னவுடன் அவசர அவசரமாக செய்தி தாளை எடுத்தான். அதில் முதல் பக்கத்திலேயே கொட்டை எழுத்தில் போட்டிருந்தது!
இன்று காலையில் ஒரு ஆட்டோ டிரைவர் வீதியில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் கட்டை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாராம்! அந்த உத்தமரின் நேர்மையைப் பாராட்டி முதல் பக்கத்தில் பெரியதாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள்! உரியவர் தக்க ஆதாரத்தைக் காட்டினால் பணத்தை திருப்பித் தரப்படும் என்று செய்தியில் தெளிவாகப் போட்டிருந்தது!
முருகேசனுக்கு அந்த செய்தியைப் பார்த்தவுடன் உயிர் வந்தது! காவல் நிலையத்திற்குப் போய் எந்த இடத்தில் தவற விட்டேன் என்ற விபரம் சொல்லி சான்றுகளைக் காட்டி பணத்தைக் கேட்டான்.
“ அதெல்லாம் சரியாத்தான் இருக்கு!..இங்கே பத்தாயிரம் வெட்டினா உனக்கு உடனே பணம் கிடைக்கும்!…இல்லா விட்டா கோர்ட்டு, வக்கீல் என்று நீ அலைய வேண்டியிருக்கும்!..”
சோதிடத்தில் தான் ராகு கேது இடம் மாறி உட்கார்ந்திருப்பதாகச் சொல்வார்கள்! நம்ம ஊரிலே உத்தமனும், வில்லனும் கூட இடம் மாறி உட்கார்ந்து விடுவார்கள் போலிருக்கிறது! முருகேசன் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்!
பாக்யா டிசம்பர் 2-8 2016