பத்து நாட்கள் ஜுரத்துல படுத்து, ஸ்கூலுக்கு லீவு போட்டிருந்த ஆனந்தி, அன்று தான் அரைப் பரிட்சை ஆரம்பம் என்பதால், பள்ளிக்கு வந்திருந்தாள்.
“”ஆனந்தி… தமிழ் பரிட்சைக்கு நல்லா படிச்சுட்டீயா? நம்ப சுகுணா இந்த முறை உன்னை பின்னுக்கு தள்ளி, பர்ஸ்ட் ராங்க் எடுத்துடணும்ங்கிறதில் குறியா இருக்கா. நீயும் உடம்பு சரியில்லாம பத்து நாளா ஸ்கூலுக்கு வரலை. எப்படி படிச்சி இருக்கே?” சகதோழி கேட்டாள்.
“”ம்… நல்லா படிச்சிருக்கேன், ” சொன்னவள் மனதில் பயம் ஏற்பட்டது.
“இவ்வளவு நாள் வகுப்பில் முதல் மாணவியாக வந்த நான், இந்த முறை சுகுணாவிடம் விட்டுக் கொடுத்து விடுவேனோ… மாட்டேன் எப்படியும் நான் தான் முதல் ராங்க் வர வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது? மற்றவர்கள் முன், என் தகுதியை குறைத்துக் கொள்ள முடியாது…’ மனதில் ஏற்பட்ட எண்ணம், அவளைத் தப்பு செய்யத் தூண்டியது.
ஹாலில் மாணவிகள் உட்கார்ந்து பரீட்சை எழுத, அவர்களை கண்காணித்தபடி நடந்து கொண்டிருந்தாள் மீனா டீச்சர். ஆனந்தியின் அருகில் வந்த போது, அவள் சற்று தடுமாறுவது போல் தோன்ற, “”என்ன ஆனந்தி… உடம்பு பரவாயில்லையா… நல்லா படிச்சிருக்கியா… தைரியமா எழுது,” புன்னகையுடன் அவளைப் பார்த்தபடி கடந்து சென்றாள்.
பத்தாவது படிக்கும் அந்த மாணவியர், பரிட்சை எழுதுவதில் தீவிரமாக இருக்க, அந்த பெரிய ஹாலில் திரும்ப நடந்தவள், அப்போது தான் ஆனந்தி காலிடுக்கில் மறைத்து வைத்த புத்தகத்தை பார்த்து எழுதுவதை கவனித்தாள்.
“”ஆனந்தி… என்ன செய்யறே… எழுந்திரு.”
கண்களில் பயம் பரவ, மாட்டிக்கொண்டு விட்டோமே என்ற பதற்றம் நெஞ்சில் தொற்றிக் கொள்ள, மெல்ல எழுந்தாள்.
“”என்ன புக் மறைச்சு வச்சிருக்கே… அதை எடு.”
வாங்கியவள், தமிழ் கோனார் நோட்ஸ் என்பதைப் பார்த்து, “”என்ன ஆனந்தி… நல்லா படிக்கிற பொண்ணு உனக்கு என்ன ஆச்சு. இப்படி செய்யலாமா… புத்தகத்தைப் பார்த்து எழுதறது தப்பில்லையா… உனக்கு உடம்பு சரியில்லாததால் சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன். அதுக்காக, இது எவ்வளவு கேவலமான காரியம். இப்படியெல்லாம் தப்பான அணுகுமுறையோடு பரீட்சை எழுதணுமா… உனக்கு இது தப்பா தெரியலை?”
“”டீச்சர்… தெரியாம செஞ்சுட்டேன்.”
குரல் தடுமாற ஆனந்தி சொல்ல, வகுப்பில் பரீட்சை எழுதும் மற்ற மாணவியர் அவளையே பார்க்க, அவமானத்தில் தலைகுனிந்து நின்றாள்.
“”உன் பேப்பரை கொடு.”
வாங்கி, அதில் பரீட்சை பார்த்து எழுதியதைக் குறிப்பிட்டு, கையெழுத்துப் போட்டு, திரும்ப அவளிடம் கொடுத்தாள்.
“”இது தான் உனக்கு தர்ற தண்டனை. அப்பதான் இனிமே இந்த மாதிரி எண்ணம் உன் மனசில் வராது. உனக்கு இந்த முறை தமிழ் பரிட்சையில் மார்க் கிடையாது. நல்லா படிக்கிற பெண்கிறதாலே, உன்னை எச்.எம்.,கிட்டே கூட்டிட்டு போகாம விடறேன்.”
கண்களில் கண்ணீர் வழிய பரீட்சை ஹாலை விட்டு வெளியேறினாள் ஆனந்தி.
“”ஆனந்தி… ஸ்கூலுக்கு கிளம்பலையா?” துணிக்கடையில் வேலை பார்க்கும் ஆனந்தியின் அம்மா, வேலைக்கு கிளம்பியபடி மகளைப் பார்த்து கேட்டாள்.
“”இதோ கிளம்பிட்டேன்.”
“”சரி ஆனந்தி… சாப்பாடு காரியர் டேபிள் மேலே இருக்கு. மறக்காம எடுத்துக்க. கதவை பூட்டி, பக்கத்து வீட்டில் சாவியை கொடுத்துடு. அப்பா ஷிப்ட் முடிஞ்சு இரண்டு மணிக்கு வருவாரு. நான் போய்ட்டு வர்றேன்.”
மகளிடம் விடை பெற்று கிளம்பினாள்.
அவள் தெருவில் இறங்கி நடக்க, கதவை உள்புறம் தாழிட்டாள் ஆனந்தி.
“டீச்சர், எல்லாருக்கும் முன் கண்டிச்சதை தாங்க முடியாம, ஆனந்தி தூக்கு மாட்டி செத்து போயிட்டாளாம்…’ என்று, ஊரே பரபரப்பாக பேசியது.
பெற்றவர்கள், மகளைப் பறிக் கொடுத்து கதறி அழ, அவர்களை அனைவரும் பரிதாபமாக பார்த்தனர். ஊர்க்காரர்கள் ஒன்று திரண்டு, ஆனந்தியின் சாவுக்குக் காரணமான, மீனா டீச்சரை கைது செய்யச் சொல்லி, போலீஸ் ஸ்டேஷன் முன் மறியல் செய்ய, மீனா டீச்சர் கைது செய்யப்பட்டாள்.
“”சார்… தூக்கு மாட்டி செத்துப் போச்சே… அந்தப் பொண்ணோட அம்மா வந்திருக்காங்க.”
அழுது சிவந்த கண்கள், பெற்ற மகளை பறிகொடுத்த சோகம் முகத்தில் தெரிய, தன் முன் நிற்பவளை பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
“”அம்மா… நீங்க ஏன் போலீஸ் ஸ்டேஷன் வந்தீங்க. உங்க சொந்தக்காரங்க, ஊர்காரங்க புகார் கொடுத்ததின் பேரில், உங்க மகளோட சாவுக்குக் காரணமான அந்த டீச்சரை கைது செய்து விட்டோம். விசாரணை நடத்தி, தக்க தண்டனை வாங்கித் தருவோம். நீங்க கவலைப்படாம போங்க.”
புடவைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்தவள், இன்ஸ்பெக்டரை ஏறிட்டாள்.
“”சார்… தயவு செய்து அந்த டீச்சரம்மா மேல் எங்க வீட்டுக்காரரும், ஊர்காரங்களும் கொடுத்த புகாரை வாபஸ் பண்ணிடுங்க. அவங்களை விடுதலை செய்திடுங்க. அவங்க மேலே எந்த விசாரணையும் வேண்டாம். எதிலே கையெழுத்து போடணும்ன்னு சொல்லுங்க. பெண்ணை பெத்த நானு தயாரா இருக்கேன்.”
“”என்னமா சொல்ற… உன் மகளோட சாவுக்கு அவங்கதான் காரணம்ன்னு எல்லாரும் சொல்றாங்க. நீ என்னடான்னா புகாரை வாபஸ் வாங்க வந்திருக்கே. உனக்கு என்ன ஆச்சு?”
“”ஐயா… தயவு செய்து நான் சொல்றதைப் புரிஞ்சுக்குங்க. என் பொண்ணு தூக்கு மாட்டி செத்துப் போனதுக்கு, இந்த டீச்சர் காரணமில்லை. எதையும் எதிர்நோக்க தைரியமில்லாத கோழைத்தனமான என் பொண்ணோட மனசு தான் காரணம்.”
தன்னையே பார்க்கும் இன்ஸ்பெக்டரை கண்கலங்கப் பார்த்தாள்.
“”ஐயா… மாதா, பிதா, குரு, தெய்வம்ன்னு சொல்வாங்க. அப்படி தெய்வத்தோட இடத்தில் வச்சு மதிக்க வேண்டியவங்க, பாடம் சொல்லித்தர்ற ஆசிரியர். அவங்க என் மகள் செய்த தப்பை கண்டிச்சாங்க. முதல் மார்க் வாங்கற மாணவி, புத்தகத்தைப் பார்த்து எழுதினதை அவங்களால ஏத்துக்க முடியலை. அவள் செய்த தப்பை சுட்டிக் காட்டினாங்க.
“”எதுக்காக, இனி இது மாதிரி தப்பு நடக்கக் கூடாதுங்கறதுக்காக. இதிலே அவமானப்படவோ, வேதனைப்படவோ என்ன இருக்கு. தப்பு செய்தவ என் மகள். அதை தட்டி கேட்க உரிமையுள்ள ஆசிரியர், தப்பை சுட்டிக்காட்டிக் கண்டிச்சிருக்காங்க.
“”என் மக என்ன செய்திருக்கணும்… “நல்லா படிக்கிற நான் செய்தது தப்பு. இனிமேல் நல்லபடியா படிச்சு நல்ல மார்க் வாங்கி, என் தகுதியை உயர்த்தி, நாலுபேர் கிட்டே வெளிச்சம் போட்டுக் காட்டணும். அப்பதான் நான் செஞ்ச தப்பு மறையும்…’ன்னு நல்லவிதமாக யோசித்து, முடிவெடுத்திருக்கணும்.
“”ஆனா… அவ அப்படி செய்யாம, ஒரு கோழையா, தன் தப்பு நாலு பேருக்குத் தெரிஞ்சு போச்சேன்னு, எதிர்நோக்க தைரியமில்லாம, உசுரை மாய்ச்சுக்கிட்டா. இதிலே அந்த டீச்Œரோட தப்பு என்னங்க இருக்கு?
“”நாலு பேருக்கு பாடங்களை போதித்து, அவங்க அறிவை வளர்த்து, அவங்க வாழ்க்கையை முன்னேற்ற பாடுபடறவங்களை, இப்படி படிக்கிற பிள்ளைங்க, தங்களோட தப்பான முடிவால, அதல பாதாளத்துக்கு தள்ளிடறாங்க…
“”அவங்க படிப்பு நாலு பேருக்கு பயன்படணும். என் மக செஞ்ச தப்புக்கு, அந்த டீச்சரை தண்டிச்சுடாதீங்க. தயவு செய்து, அவங்க மேலே கொடுத்த புகாரை தள்ளுபடி செய்து, அவங்களை அனுப்பிடுங்க. உங்களுக்கு புண்ணியமாக போகும்.”
தன் மகளைப் பறிகொடுத்த துக்கத்தை மறந்து, அந்த ஆசிரியருக்காக, கையெடுத்து கும்பிடும் அந்த தாயின் மனதைப் புரிந்து கொண்டவர், மவுனமாக அவளைப் பார்த்தபடி நின்றார்.
– நவம்பர் 2012
நல்ல படிப்பினை.