கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 13,753 
 
 

பந்தி நடந்து கொண்டிருந்தது. கிராமத்தின் நடுத்தெருவின் ஆரம்பம் தொடங்கி, முடிவுவரை பந்தல் போடப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

“கல்யாணத்துக்குச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்; சாப்பிட வாருங்கள்’ ஒலிப்பெருக்கி மூலம் அழைப்பு விடுத்தார்கள். அழைப்பு விடுத்த நேரம் நண்பகல் இரண்டு மணி.

குட்டச்சிகுடிசைக்குள் முடங்கிக் கிடந்த குட்டச்சி எழுந்து கொண்டாள். நாக்கின் சுவை மொட்டுகள் ருசியான பதார்த்தங்களுக்காக ஏங்கின. ஒரு பெருமூச்சை வெளிப்படுத்துவதை தவிர, அவளால் வேறொன்றையும் செய்ய முடியாத நிலை. ஊர் ஜனமான சொந்த பந்தங்கள் எல்லாம் தொடர்பைத் துண்டித்து பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏன் தனிமைப்படுத்தப்பட்டோம் என்பது அவளுக்கே புரியாத புதிராய் இருந்தது.

அறுபது வயதைக் கடந்த குருவம்மா என்ற குட்டச்சிக்கு கால்கள் இரண்டும் முடமாகி போனது ஒரு விபத்தின் துரதிர்ஷ்டம்தான். கோபம் கொப்பளிக்காத குணத்துக்கு சொந்தக்காரி, சிறுபிள்ளைகள் கூட அவளை குட்டச்சி என்று அழைப்பதை பெரிதுபடுத்தாத பெருந்தன்மையுடையவள்.

தவழ்ந்து வந்து தனது வெளித் திண்ணையில் அமர்ந்து தெருவில் போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருந்தாள். பட்டு சேலைகளுடனும் பகட்டு நகைகளுடனும் கலகலப்பு பேச்சுகளும் அவளது குடிசையைக் கடந்து கொண்டிருந்தன.

சாப்பிட்டு முடித்த பெண்களில் சிலர் எடுப்புச் சோறு வாங்கிக் கொண்டு சென்றார்கள். பெரிய போணிச் சட்டிகளில் சோறும், தூக்குவாளியில் சாம்பாரும் இதர பாத்திரங்களில் கூட்டு, பொரியல், பாயாசம், சாப்பிடுவதற்கு வாழை இலைகளையும் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

கிராமத்து கல்யாணங்களில் சொந்த பந்தங்கள், கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் எடுப்புச்சோறு கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும். முதியோர்கள், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் படுக்கையிலிருப்பவர்கள் இந்த எடுப்புச் சோறை எதிர்பார்த்து பசியோடு காத்திருப்பார்கள்.

எடுப்புச் சோற்றை சுமந்து கொண்டு வந்த அன்னப்பூ பாட்டிக்கு மூச்சு வாங்கியது. குட்டச்சியின் வீட்டுத் திண்ணையில் பாத்திரத்தை இறக்கி வைத்துவிட்டு முந்தானையால் புழுக்கத்தை துரத்திக் கொண்டிருந்தாள்.

“”ஏண்டி இவளே, நல்லா இருக்கியா? சாப்புட்டியா?” ஒரு சம்பிரதாயத்துக்காக குட்டச்சியிடம் கேட்டு வைத்தாள்.

“”அடியே அன்னப்பூவா? இந்த வேகாத வெயில்ல யாருக்கு எடுப்புச் சோறு எடுத்துட்டுப் போறே?”

“”மருமவளுக்குத்தான். பயபுள்ள மாசமா இருக்கா. சேமியா பாயாசம்னா நாக்கை சப்பு கொட்டுவா. வயித்துப் புள்ளக்காரி வெளியே எங்கும் போகக்கூடாதுன்னு மவன் சொல்லி போட்டு டவுனுக்கு உரம் வாங்க போயிட்டான். அவனுக்கும் சேர்த்துதான் எடுப்புச்சோறு வாங்கிட்டுப் போறேன்.”

“நீயும் ஒரு வா சாப்பிட்டு பாரேன்’னு சொல்ல மனமில்லை அன்னப்பூ பாட்டிக்கு.

“”மூலக்கரைப்பட்டி சமையல்காரர் நல்ல ருசியா செய்திருக்கார்” என்ற வாக்கியத்தையும் சேர்த்துச் சொன்னாள் அன்னப்பூ. குட்டச்சியின் பசிக்கு அணைபோட முடியாத நிலையிலிருந்தது அன்னப்பூவின் பேச்சு.

“”ஆண்டவன் உனக்கு நல்ல ஆயுசை கொடுப்பான்” என்ற குட்டச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் அன்னப்பூ.

“”அட என்னடி அப்படிச் சொல்லுதே?”

“”பின்ன என்ன? வீட்டுக்கு விளக்கேத்தி வைக்க வந்த மருமவள பெத்த மவளா நினைச்சு எடுப்புச் சோறு எடுத்துட்டுப் போறியே இந்த நல்ல மனசு எல்லோருக்கும் வந்துடாதம்மா”

வெயிலின் தாக்கம் குறைந்து தென்றல் வீசியபோது தேவாலய கோபுர மணி நான்கு முறை அடித்து நின்றது. குட்டச்சிக்கு சாப்பிட வேணும்போல் தோன்றியது. இன்னேரம் புதுக்குரிச்சி அழகு டீக்கடைக்குப் போனால் சுடச்சுட வாழைக்காய் பஜ்ஜியும் வெங்காய போண்டாவும் கிடைக்கும். தின்னுட்டு வர வேண்டியதுதான் என்று எண்ணினாள். தனது வாகனத்தை வெளியே எடுத்தாள்.

இரண்டடிக்கு இரண்டடி பலகையில் நான்கு பேரிங்குகள் மாட்டப்பட்ட வாகனம் அது. பருத்திப்பாட்டு ஆசாரி செய்து கொடுத்தது.

கால்களில் அணிய வேண்டிய செருப்பை இடது கையில் மாட்டிக்கொண்டு தரையில் ஊன்றியபடி தள்ள பலகை வண்டி அழகு டீக்கடையை நோக்கிச் சென்றது. முக்கால் கிலோமீட்டர் தூரம் சென்றால்தான் டீக்கடையை அடைய முடியும். ஒரே சாலை. வாகனப் போக்குவரத்து எதுவுமில்லை. ஆறுமணிக்குத்தான் 39ஏ பஸ் திருநெல்வேலியிலிருந்து மருதகுளம் செல்லும்.

குட்டச்சியின் வாகனம் முன்னோக்கிச் செல்ல கடந்து வந்த காலங்கள் பின்னோக்கிச் சென்றன.

தாவணியோடு வலம் வந்த காலங்கள் அவை. அம்மா அப்பாவுக்கு அடுத்து அவள் நேசித்தது தான் ஆசையாக வளர்த்து வந்த ஆட்டுக் குட்டிகளைத்தான். அவற்றை மேய்ச்சலுக்காக சற்றுத் தள்ளியிருந்த கல்குவாரி அருகே ஓட்டிச் செல்வாள்.

கல்லுடைத்த களைப்பு தீர கருவாலி மர நிழலில் இளைப்பாறுவான் மணிமுத்து. குட்டச்சியின் மனதுக்குள் அவன் சித்திரம் வரையப்பட்டது. அதிகம் அலட்டிக் கொள்ளாமல் சுருக்கமான பேச்சு வார்த்தை மூலம் எனக்கு நீ உனக்கு நான் என்ற எழுதப்படாத ஒப்பந்தத்தை இருவரும் ஏற்றுக்கொண்டார்கள். பெற்றவர்களுக்கு மகளின் நலனே முக்கியமாகப்பட்டது; எதிர்ப்பு இல்லை.

மணிமுத்துவுக்குத்தான் பெற்றோர்கள் இல்லை. பிறந்த ஊரைக்கூட அவன் தெரிந்து வைக்காததுதான் பெரும் குறை. பஞ்சம் பிழைக்க வந்த ஊரிலேயே தங்கிவிட்டான்.

குருவம்மா என்ற குட்டச்சியை அவன் கைப்பிடித்து தனது குடிசைக்கு அழைத்து வந்தபோது, கிராமத்து ஜனங்கள் பிரமித்துதான் போனார்கள். ஒரு நகைக்கடையையே கொண்டு வந்திருக்கிறாள் குட்டச்சி என்று பேசிக் கொள்வார்கள்.

வயிற்றில் ஒரு புழு பூச்சி உண்டானால் நல்லாயிருக்குமே என்ற நோக்கோடு இருவரும் பாளையங்கோட்டை வந்து ஒரு மருத்துவச்சியின் ஆலோசனை பெற்று, சந்தோஷமாகத்தான் நடந்து கொண்டிருந்தார்கள். ரயில் கேட்டைத் தாண்டியபோது இருவரையும் உரசினாற்போல் வந்து நின்றது இரண்டு யூனிட் ஜல்லி கற்களை சுமந்து வந்த டிப்பர் வண்டி. அதை ஓட்டி வந்தான் மணிமுத்துவின் நண்பன் நாகப்பன்.

“”ரெட்டியார்பட்டி விலக்குல இறக்கி விடுதேன். பெரியதாழை பஸ் வருவான், அதுல ஏறி ஊருக்குப் போயிடுங்க” என்றான் நாகப்பன். இருவரும் டிப்பர் வண்டியின் மீது ஏறிக்கொண்டார்கள். நாகப்பன் நல்ல அனுபவசாலியாயிருந்தும், வண்டி அவன் கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்து பள்ளத்தில் குடை சாய்ந்தது. மணிமுத்துவையும் நாகப்பனையும் எமன் தனது வாகனத்தில் ஏற்றிச் சென்றுவிட, குட்டச்சி மட்டும் கால்களை இழந்து உயிர் பிழைத்து, இதோ கால்களை இழந்தாலும் பீடி சுற்றி ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறாள்.

கோவில் விழாக்களுக்கு கேட்காமலேயே நன்கொடை கொடுப்பாள். இப்படிப்பட்ட நல்ல மனம் கொண்டவளுக்கு ஊரில் நடக்கும் நல்ல காரியங்களில் கலந்து கொண்டு, வாய்க்கு ருசியாகச் சாப்பிடும் பாக்கியம் இல்லாமல் போய்விட்டதே ஏன்? கடந்த கால நினைவுகள் எல்லாம் நிறைவு பெற்றபோது, சின்ன துண்டு வாழை இலையில் சூடான வாழைக்காய் பஜ்ஜியும் தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியும் கொடுத்தான் அழகு.

“”அக்கா சாப்புடுங்க, பஜ்ஜி இன்னைக்கு சூப்பரா இருக்கு. புது எண்ணையில் போட்டது. சுக்கு காப்பி கொண்டு வாரேன். குடிச்சுட்டு போயிடாதீங்க. ஒரு பத்து நிமிஷம் இருந்து போகணும். நான் வீடு வரை போயிட்டு வர்ரேன்” என்றவன், அவளின் பதிலை எதிர்பாராமல் சற்று தள்ளியிருந்த வீட்டுக்குச் சென்று திரும்பினான்.

அவனது கையில் திருமண அழைப்பிதழ் அதை குட்டச்சியிடம் கொடுத்தான்.

“”அக்கா எனக்கு கல்யாணம் ஒழுங்காயிட்டுது. பொண்ணு நாகர்கோவில் பக்கம். எண்ணி இன்னும் எட்டே நாள்தான் இருக்கு. முதல் அழைப்பை உங்களுக்குத்தான் கொடுக்குறேன். நீங்க இந்த கல்யாணத்துல கலந்து கொண்டு எங்களை ஆசீர்வதிக்கணும். உங்களை அழைத்து வரவும், திரும்பக் கொண்டுவிடவும் ஆட்டோ அனுப்புவேன்” என்று அழகு சொன்னபோது குட்டச்சியால் கண்ணீருக்கு அணைபோட முடியவில்லை. மடை திறந்த வெள்ளமாக வெளிப்பட்டது ஆனந்தக் கண்ணீர்.

குடிசைக்குள் திரும்பியபோது மனதுக்குள் ரணமாக அழுத்திய புண்ணுக்கு, அழகு தடவிய அன்பு என்னும் மருந்து அவளுக்குள் மகிழ்ச்சி என்னும் விதையை விதைத்திருந்தது. அழகு கல்யாணத்துக்கு ஐநூறு ரூபாய் மொய் எழுதணும். முகத்தில் வீசிய மாலை தென்றலாய் மனம் முழுவதும் சந்தோஷத் தென்றல்.

– மே 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *