கால் ஒப்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2024
பார்வையிட்டோர்: 768 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இனிப் பொறுக்கேலாது. இண்டைக்கு எப்பிடியும் தற்கொலை செய்யப்போறன். ‘தற்கொலை செய்யிற எண்ணம் வந்தா ஒருக்கா என்னட்டை வந்து சொல்லிப்போட்டுச் செய்யுங்கோ” எண்டு அம்மா தன்னட்டை வாற கிளைன்ற்ஸ்க்குச் சொல்லிறதைக் கேட்டிருக்கிறன். அதுதான் உங்களிட்டை ஒருக்காச் சொல்லிப்போட்டுச் செய்வம் எண்டு யோசிக்கிறன். 

வெளியிலை சூறாவளி அடிக்குது! 

எப்படிச் செய்யப் போறன் எண்டு யோசிக்கிறியளோ? அலரிக்கொட்டை ஆயிறதுக்கும் அரைக்கிறதுக்கும் எல்லாம் எனக்குக் கை இல்லை. சிம்பிள் வழி இருக்கு!. 

பீல்ட் பைக் குறூப் ஒழுங்கையாலை போகேக்கை முன்னாலை பாயிறது கட்டாயம் அச்சொட்டாகச் சாகலாம். சிலவேளை அவையும் பிரளுவினம் – அப்படி நடந்தா எனக்கு மரணத்துக்குப் பிறகு நாய் மோட்சம் கிடைக்கும். நல்ல விசயம்! 

என்ன கண்டறியாத வாழ்க்கை! எனக்கு அப்பிடி ஒரு டிப்பிறெஸ்ஸனாக் கிடக்கு. தனிய இருக்கிற ஆக்களுக்கு எப்பிடி மனச்சோர்வு வாறதெண்டு இப்பதான் விளங்குது. அப்பாவும் அம்மாவும் போய்ப் பத்து மாதமாகுது – இண்டைக்காவது வருவினமோ எண்டு பார்த்தன். பொழுது பட்டிட்டுது, கேர்பியூ -இனிவராயினம் அதான் அழுது போட்டு இந்த முடிவுக்கு வந்தனான். 

அம்மான்ரை அன்ரி சாப்பாடு கொணர்ந்து வைக்கிறவ. எனக்கு சாப்பாடும் தண்ணியுமே வாழ்க்கை? பேசப் பறைய, விளையாட ஆள் இருக்கோணும். 

இது பெருங்காற்று! 

அம்மாவை இருக்கேக்கையும் அவை வேலைக்குப் போற நேரம் கொஞ்சம் லோன்லியா ஃபீல் பண்றனான்தான். எண்டாலும் பின்னேரம் அவை வேலையாலை வந்திட்டினமெண்டா ஒரே கொண்டாட்டம். 

இப்ப வீசுற காற்றுக்குப் பேர் தென்றல்! 

வீட்டை வாற விசிற்றேர்ஸ் எல்லாரோடையும் நான் விளை யாடுவன். புதாக்கள் கேற்றிலை வரேக்கை மணம் வித்தியாசமாக் கிடந்தா ஒருக்காச் சத்தம் போடுவன் பிறகு அவை உள்ளை வந்து போட்டிக்கோவிலை இருந்தினமெண்டால் அப்பாக்கோ, அம்மாக்கோ தெரிஞ்சாக்கள் எண்டுதானே கருத்து. மெல்லப்போய் அவைன்ரை காலை ஒருக்கா மணந்து பாப்பன். பிறகு சீவியத்திலை அந்த மணம் எனக்கு மறக்காது. மணம் ஓ.கே. எண்டால் மெல்ல… அவைன்ரை மடியிலை ஒரு காலைப் போடுவன். சில பேர் அதைச் சந்தோசமாக எடுத்தக் கொண்டு என்னோடை கதைப்பினம். விளையாடுவினம். சிலருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. என்னை விடத் தாங்கள் பெரிசெண்டாக்கும். எண்டாலும் பேசாமல் நெளிஞ்சுபோட்டு இருப்பினம். சிலபேர் கொஞ்சம் கோபமாகக் காலைத் தட்டிவிடுவினம். தாங்கள் பெரிய சுத்தமெண்டாக்கும். நான் விடமாட்டன். திருப்பியும் காலைத் தூக்கிப் போடுவன். பலதரம் அன்பைக் குடுத்தால் என்னெண்டு ஏற்காமல் விடுறது? உங்களிலை கனபேருக்குத் தெரியாத தியரி என்ன? 

அவை அம்மா விஸ்கட் சேர்வ் பண்ணினால் அதிலை ஒரு துண்டை எனக்குப் போடுவினம். நான் அதைச் சாப்பிட்டிட்டு இன்னொருக்காக் காலைப் போடுவன். 

அப்பிடி நேரத்திலை சிலவேளை அப்பா பேசுவார். அம்மா கூப்பிடுவா,”ஃபிராங்! உள்ளுக்கு வா…. உனக்கு பிஸ்கட் தரலாம்” எண்டு. அம்மா சொன்னாச் சொன்னதுதான்… ஒருநாளும் ஏமாத்த மாட்டா. நான் உள்ளை போனனெண்டால் ஒரு முழு பிஸ்கட் தருவா. தந்திட்டுக் கதவைச் சாத்திடுவா… நான் உள்ளுக்கு அகப்பட்டிடுவன். 

இப்ப என்ன காத்து வீசுது? சோளகம். 

பரவாயில்லை எண்டிட்டு உள்ளை போய் கரப்பான் பூச்சியோ, வெட்டுக் கிளியோ அகப்பட்டதோடை விளையாடுவன். 

வெட்டுக் கிளியோடை விளையாட எனக்கு ஆசை. கண்டா ஸ்ரைலாக் காலைத் தூக்கிப் போடுவன்… மணந்து பாப்பன்… பிறகு வாலை ஒருக்கா ஆட்டிட்டுத் திரும்பக் காலைப் போடுவன்… நகம் சிலவேளை பட்டிடும். இப்பிடி ஒரு ஐஞ்சு நிமிஷம் விளையாட முந்தி அது சனியன் செத்திடும். அதுக்கு என்னோடை விளையாடத் தெரிஞ்சாத்தானே! 

விசிற்றர்ஸ் போனாப் பிறகு அம்மா உள்ளுக்க வருவா. அவவின்ரை ஹவுஸ்கோட்டைப் பல்லாலை பிடிச்சு இழுத்துக்கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் திரிவன். என்ரை நாப்பத்திரண்டு பல்லிலை வேட்டைப் பல்லுத்தான் அவாவின்ரை ஹவுஸ்கோட்டுக்குத் துவாரம் வைக்கும். அது என்னை உள்ளை விட்டுப் பூட்டின கோவமும் செல்லமும் சேர்ந்த விளையாட்டு எண்டாலும் அம்மா எனக்கு ஒரு நாளும் அடிச்சதில்லை. “ஃபிராங் குட்டி சட்டையை விடு, சோறு போடுறன் உன்ரை பிளேற்றிலை சாப்பிடு” எண்டுதான் சொல்லுவா. 

பை த வே நான், சைவந்தான். அம்மா சைவம் என்டபடியா சின்னனிலை இருந்து பழகிட்டன். நீங்கள் சொல்றது சரி. என்ரை குடும்பப் பேர் கனிடே. ஓடர் காணிவோறா. அப்படி எண்டா இறைச்சி சாப்பிடுற ஆக்கள் எண்டுதான் கருத்து. என்ரை குடும்பத்தைச் சேர்ந்த ஓநாய், நரி எல்லாம் எப்பிடியான ஆக்கள் எண்டு தெரியுந்தானே. ஆனா என்னட்டை அந்தப் பழக்கம் ஒண்டும் இல்லை. சூழலிலை எவ்வளவோ விசயம் தங்கியிருக்குப் பாருங்கோ. தச்சமயம் என்ரை பழைய குணத்தாலை ஒரு அணிலை எலியைப் பிடிச்சாலும் சாப்பிடமாட்டன். 

அம்மாவோ, அப்பாவோ அல்லது இரண்டு பேருமோ வீட்டுக்குள்ளை இருக்கினம் எண்ட மணம் நிச்சயமெண்டா நான் கூலா வெளிப்படிலை படுத்திருப்பன். முன்னங்கால் இரண்டையும் நீட்டித் தலையை அதிலை வைச்சுக் கொண்டுதான் படுப்பன், கடும் நித்திரை கொள்ளமாட்டன். ஏதும் சின்னச் சத்தம் கேட்டாலும் அந்த மாதிரி வீட்டைச் சுத்தி ஓடிப் பார்த்துத் தேடுவன் அவைக்குக் கேளாத அதிர்வெண் எல்லாம் எனக்குக் கேக்கும். 

இப்ப வெளிலை நிலையான காற்று அடிக்குது போலை. 

ஒருநாள் இப்பிடித்தான் ஒரு செக்கல் நேரம். அம்மா படிலை இருந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தவ. அப்பா உள்ளுக்கு ஈசிசெயாரிலை படுத்து ஏதோ வாசிச்சுக் கொண்டிருந்தார். நான் அம்மாக்குப் பக்கத்திலை அவான்ரை சட்டையிலை லேசத் தலையை வைச்சுக் கொண்டு படுத்திருந்தனான். முத்தத்துப் பலா மரத்திலை ஏதோ சத்தம் கேட்ட மாதிரி இருந்திது. மணமும் கொஞ்சம் வித்தியாசம். பாய்ஞ்சு போய்ப் பார்த்தன்… ஒரு பெரிய முறுகம் மரத்தைச் சுத்திக் கொண்டு மெல்ல இறங்கி வாறார். கண்டிட்டன். விடாமல் சத்தம் போட்டன். 

“ஃபிராங் குலைக்குது என்னண்டு பாருங்கோ” கேற் லைற்றைப் போட்டிட்டு அப்பா வந்தார்”. அது சும்மா பயந்திட்டுதாக்கும்” எண்டார். 

‘இல்லை அது சும்மா பயப்பிடாது. மரத்தைப் பார்த்துக் குலைக்குது. வடிவாப் பாருங்கோ” எண்டு சொல்லிக் கொண்டு அம்மா எழும்பி வந்தா. என்னைக் குறைச்சுக் கதைக்க அம்மா விடா. வந்த வீச்சிலை…. ‘ஐயோ…. பாம்பு…” எண்டு கத்திக் கொண்டு திரும்பி ஓடினா. பிறகு முன் வீட்டு அண்ணைமாரெல்லாம் வந்து பாம்பை அடிச்சினம். 

வீட்டைக் காவல் காக்கிற வேலை எங்களுக்கு இண்டைக்கு நேற்றைக்கே பழக்கம்? பன்னிரண்டாயிரம் வருஷமா நாங்கள் உங்களோடை சிநேகிதமா இருக்கிறம். வேட்டையிலை உதவி செய்யி றது, ஆட்டு மந்தையைப் பாதுகாக்கிறது, விசுவாசமாய் இருக்கிறது, அன்பு காட்டிறது எல்லாம் எங்கடை முப்பத்தொம்பது சோடி நிறமூர்த்தத்திலை இருக்கிற குணங்கள். பிறவிக்குணம், அதுதான் புராதன எகிப்திலை எங்களைப் புனித உயிர் எண்டு போற்றினவை. 

காற்று இதமா இருக்கு! 

அப்பா மருந்துப் பைக்கற்றை சாமி அறைக்கை வைச்சிருப்பார். இரவு சாப்பிட்டிட்டு விறாந்தைக் கதிரையிலை வந்திருப்பார். நான் மருந்துப் பைக்கற்றை வாயிலை எடுத்துக் கொண்டு வந்து அவருக்குப் பக்கத்திலை வைச்சிட்டு பார்த்துக் கொண்டு படுப்பன். மருந்து போடாட்டி அவருக்கு பிறெஷர் கூடிடும். நாக்கை நீட்டிச் சுவாசித்தபடி அவற்றை முகத்தைப் பார்ப்பன். 

காலமை வேலைக்குப் போறதுக்கு அவசரமாகக் குளிச்சிட்டு அம்மா சோப்பைத் தொட்டியடிலை விட்டிட்டு வந்திடுவா. நான் அதை வாயிலை கவ்விக் கொணந்து ஒருக்கா விளையாடிட்டு அறைக்கை போட்டிடுவன். 

அந்தப் பொற்கால நினைவுகளிலை அமிழ்ந்திருக்கிறதே ஒரு சுகம். 

வெண்கலக் காலத்திலையே ஐரோப்பாவிலை எங்கடை உருவங்களைச் சுவர்களிலை கீறத் தொடங்கிட்டினம். இடுகாட்டு வாசல்களிலை எங்கடை உருவங்கள் சிலைகளாகச் செதுக்கப் பட்டிருந்தது. எத்தினை வயிரவர் கோயில்களிலை நாங்கள் அவற்றை வாகனமாய்ச் செதுக்கப்பட்டிருக்கிறம் – கீறப்பட்டிருக்கிறம். 

எனக்கு ஃபிராங் எண்ட பேர் வந்த கதையைச் சொல்ல மறந்திட்டன். ஓம் – இங்கையும் அங்கையுமாகத்தான் சொல்லுவன். சாகிற மூட்டிலை இருக்கிற என்னட்டை எப்பிடி நீங்கள் ஒழுங்காச் சொல்லுவன் எண்டு எதிர்பார்ப்பியள்? 

அம்மா அப்ப இத்தாலிக்கு ஒரு செமினாருக்குப் போனவ. அந்த நேரம் அப்பா தான் தனிய வீட்டிலை எண்டு என்னை இரண்டு மாதக் குட்டியா இருபத்தெட்டுப் பல்லோடை பிடிச்சுக் கொண்டு போனவர். அவைன்ரை வீட்டிலை ஒரு ரியூசன் கொட்டில் பழைய கொட்டில். அதைச் சுத்திப் பதிவான குந்து அதின்ரை வாசலைத் தகரத்தாலை மூடிட்டு, அந்தக் கொட்டிலுக்கை என்னை விட்டார். நான் சின்ன ஆள்தானே. குந்தைப் பாயமாட்டன் எண்டு நினைச்சிருப்பர். நான் ஒரு நாள் தகரத்துக்குள்ளாலை மூக்கை வைச்சு வெளிலை வந்திட்டன். பிறகு அப்பா வாசலுக்குச் சீமெந்துக் கட்டி அடுக்கிப் போட்டார். 

இரண்டு கிழமையாலை அம்மா வந்தா. நான் ஒரு புதாள் வீட்டை நிக்கிறன். அவவுக்கு இத்தாலியிலை லெக்சர் எடுத்த ஒரு டொக்டருக்குப் பேர் ஃபிராங் ஆம். எனக்கு அந்தப் பேரை வைச்சிட்டா. அவக்கு என்னைப் பார்த்த உடனை பிடிச்சிருக்க வேணும். என்னைத் தூக்கி நெத்தியிலை தடவிக் கொண்டு வளவெல்லாம் சுத்திக்கொண்டு வந்தா. 

இதுதான் பொய்கைக் காற்று! 

பிறகு எனக்குப் பால் கரைச்சு வைச்சா. எனக்கெண்டு ஒரு பிளேற்றும் கப்பும் வந்திது. என்னை ரியூசன் கொட்டிலுக்காலை தூக்கி வெளிலை விட்டிட்டா. 

“ஓடிடும்” எண்டார் அப்பா. 

“அவன் எங்களை விட்டிட்டு ஓடமாட்டான்”. அம்மா இப்ப…. அவ என்னை விட்டிட்டு ஓடிட்டா….! நான் கடைசி வரையும் அவையோடை ஃபிராங்காத்தான் இருந்தனான்! 

பழைய கதை எல்லாம் சொல்லச் சொல்ல அழுகையாய் வருது. 

காத்து மாறி வாடை தொடங்குது! 

முந்தியும் இடைக்கிடை என்னை வீட்டிலை விட்டிட்டு இவை கொழும்புக்குப் போறவை. ஒருக்கா அப்பாக்குச் சுகமில்லை எண்டு போனவை. அப்ப ஒரு நாள் நான் கேற்றுக்கு மேலாலை பாய்ஞ்சு றிஸ்க் எடுத்தனான். தப்பிட்டன். ஏனோ? இவையைத் தேடத்தான்!. 

பிறகு ஒருநாள் அன்ரி சாப்பாடு வைச்சிட்டு என்னைப் பின் விறாந்தையிலை விட்டுப் பூட்டிட்டுப் போட்டா. எனக்கு ரொயிலற்றுக்கு வருது. நான் என்ன வீட்டுக்கையே இருக்கிறது. 

இருக்கிறது. யன்னலுக்குப் போட்டிருந்த நெற் எல்லாம் விறாண்டிக் கொட்டிப் பெரிய ரகளை பண்ணிப் போட்டன். அதுக்குப் பிறகு என்னை வெளிலைதான் விடுவா. அதுதான் பிழைச்சுப் போச்சு. இப்ப வெடிச் சத்தத்துக்குப் பயமாக் கிடக்கு எண்டாலும் வீட்டுக்கை போய்ப் படுக்க ஏலாமல் கிடக்கு. 

முந்தி இவை கொழும்புக்குப் போனாலும் ஆக மிஞ்சினா ஒரு மாதத்துக்கிடையிலை வந்திடுவினம். 

வந்திடுவினம். இந்த முறைதான் இப்படிச் செய்திட்டினம். என்னோடை என்ன கோவமாம் இவைக்கு? 

ஓ….நான் ஒழுங்காத்தான் இருந்தனான். வீட்டுக்கு வெளிலை லேசிலை போகமாட்டன். வீட்டு மதிலைச் சுத்திச் “சிச்சீ” இருந்து நிலத்திலை என்ரை மணத்தை உரஞ்சி… “ரெறிற்றறி” போட்டு வைச்சிருக்கிறன். மற்றவைன்ரை ரெறிற்றறிக்குள்ளை நான் போறேல்லை. அப்பிடி ஒரு ஒழுங்கிருந்தா ஏன் அடிபட வேணும். எங்களிலை நானூறுக்கும் மேற்பட்ட இனம் இருக்குது. ஆனா நாங்கள் ஆளை ஆள் சாக்காட்ட மாட்டம். எங்களுக்குத் தெரியும். கனிஸ் ஃபமிலியாரிஸ் எண்டா, ஆளோடை ஆள் இனம்பெருக்கக் கூடிய ஆக்கள் எண்டு. 

இதுகள் என்னடா மனிசர். மூளைகெட்ட சாதி! தங்களைத் தாங்களே சாக்காட்டுதுகள்! 

புயல் அடிக்கத் தொடங்குது! 

ஓகஸ்ட் பதினொராந் திகதி….! 

நான் சீவியத்திலை கேளாத பெரும் பெரும் சத்தமெல்லாம் கேக்குது. இடி முழக்கம் எண்டாலே நான் பயந்து அம்மாக்குக் கிட்டப் போய்ப் படுக்கிறனான். இது தலைக்கு மேலை வெடிக்குது…இதயம் நிண்டிடும் மாதிரி இருக்கு! அப்பாக்கு இதய வருத்தம். என்னெண்டு தாங்கிறாரோ தெரியேல்ல. தொடர்ந்து கேக்குது… அப்பா அம்மாவும் ரெண்டு மூண்டு நாள் ஒரு இடமும் போகேல்லை. ரேடியோவைக் போட்டுப் போட்டு என்னவோ கேக்கினம். ஒழுங்கை தெருவிலை ஒரு சனம் இல்லை. பச்சை உடுப்புக்கள் மட்டுந்தான் திரியுது. 

எனக்கு ஆழ்மனம் பயப்பிடுது. ஏதோ வித்தியாசம் எண்டு விளங்குது. முந்திச் சிலவேளை பின்பக்கத்தாலை பரராஜசேகரப் பிள்ளைார் கோயிலடி மட்டும் போறனான். அதுகும் கேள் பிரண்ட் கூப்பிட்டாத்தான். போனாலும் பத்து நிமிஷத்திலை வந்திடுவன். அம்மா சாப்பிடத் தொடங்கேக்கை போனனெண்டா அவா சாப்பிட்டு முடிஞ்சு கோப்பை கழுவ நான் காலடிக்கை நிப்பன். இப்ப நான் வீட்டாலை அசையிறதே இல்லை. அம்மா இருக்கிற கதிரைக்குக் கீழை வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்திடுவன். 

பெரிய ஒலியள் சூழலை மாசடையச் செய்யும் எண்டு அம்மா பிள்ளையளுக்குப் படிப்பிக்கிறதை நானே கேட்டிருக்கிறன். அது சயன்ஸ் சிலபஸ்சில இருக்காம். இப்ப எல்லாரும் பள்ளிக்கூடம் போயினம். படிக்கினம். அப்ப ஆர் இதைச் செய்யினம்? நான் நினைக்கிறன் சூழல் மாசடைதல் என்ற பாடம் பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கேக்கை பள்ளிக் கூடம் போகாமல் கள்ளம் போட்டிட்டு நிண்டாக்கள் தான் செய்யினம் எண்டு. 

புயல் பெரிசா அடிக்குது! 

காத்தெல்லாம் ஒரே இரத்த மணமாக் கிடக்கு. செத்த வீட்டிலை பொம்பிளையள் அழுகிற சத்தம் எந்த நேரமும் கேக்குது. பறை மேளம் நித்திய வாத்தியமாயிட்டுது. சித்திரவதை செய்யேக்கை குழறிற சத்தம் உள் மனதுக்கை கேக்குது. பயம்… பயம்…. பயம். 

இப்ப இவை மெல்ல வேலைக்குப் போயினம். ஆனா ஒருத்தற்றை முகத்திலையும் சிரிப்பைக் காணேல்லை. பின்னேரத்திலை விசிற்றேர்ஸ் வாறேல்லை. வந்தாலும் நிண்டபடி கதைச்சிட்டு ஓடினம். அம்மா யாருக்கும் பிஸ்கட் குடுக்கிறேல்லை. 

முந்தி அம்மா.. காலைமையிலை எனக்கு நூடில்ஸ் தாறவா. இப்ப வெள்ளைப் பச்சைப் பழஞ்சோறுதான் வைக்கிறவா. அவ என்ன சாப்பிடுறா எண்டு ஒரு நாள் எட்டிப் பார்த்தன். ஒண்டும் சாப்பிடாமல் ரீயோடை வேலைக்குப் போறா. ஏன் இப்படி? அம்மாட்டைக் காசில்லாமல் இருக்காது. அப்பா பிரின்சிப்பல். சம்பளம் வந்திருக்குந்தானே! 

இரவிலை லைட் போடினமில்லை. லாம்பைக் கொழுத்தி வைச்சிட்டுப் படியிலை குந்தியிருக்கினம். ஆருக்குச் சேமிக்கினம்? பொம்பிளைப் பிள்ளையும் இல்லை இவைக்கு…. இவை மட்டுமில்லை எல்லாருந்தான் சேமிக்கினம். இணுவில்லை ஒரு வீட்டிலையும் வெளிச்சத்தைக் காணேல்லை. 

படியிலை குந்தியிருந்து என்ன கதைக்கினம் எண்டு கேட்டுப் பாத்தன். காட், சங்கங்கடை, கியூ, மண்ணெண்ணெய், சுட்டிட்டாங்கள், பிடிச்சிட்டாங்கள் இந்தச் சொல்லுகளைத் தான் திருப்பித் திருப்பி பாடமாக்கினம். சின்ன வகுப்பிலை படிச்ச சொல்லுகள் மறந்திட்டினமோ தெரியேல்லை. 

அம்மா வாற ஓட்டோ துரை வீதியிலை இறங்கேக்கை எனக்குச் சத்தம் தெரியும். ஓடிப்போய் கேற்றிலை காலைப் போட்டுக் கொண்டு நிப்பன் வரவேக்கிறதுக்கு ஃபிராங் எண்டு என்னைக் கூப்பிட்டு, நெத்தியிலை ஒருக்காத் தடவி விட்டுத்தான் உள்ளை வருவா. அண்டைக்கு விசுக்கெண்டு உள்ளை போறா. என்னைத் திரும்பிப் பாக்கேல்லை. “மருந்து வாங்கிறதுக்கு மனுசர் நாயர் அலைய வேண்டியிருக்கு” எண்டு அப்பாவைப் பாத்துக் கோவமாச் சொல்லுறா. நான் ஒரு இடமும் அலையேல்லையே! எனக்கு விளங்கேல்லை. 

அதுக்குப் பிறகு ஒரு மாதமா ஏதோ கடதாசியள் கொண்டாறது. நிரப்பிறது, கொண்டு போறது, வாறது, போறது எண்டு காலமை தொடக்கம் பின்னேரம் வரைக்கும் அலைஞ்சு திரிஞ்சா. பின்னேரம் வரேக்கை நல்லாக் களைச்சு விழுந்து வருவா. அம்மா என்ன விறகு கொத்திற வேலைக்கா போறா? எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை. 

இப்ப இரவிலை “செக்கிங், றவுண்ட் அப், சிக்கின் கூனியா” 

எண்ட சொல்லுகளையும் பாடமாக்கினம். 

ஒரு நாள் பின்னேரம் அப்பா ஈசி செயரிலை படுத்திருக்கிறார். நான் அவற்றை காலை நக்கி விடுவம் எண்டு நாக்காலை தொடுறன். அப்பாடா… நெருப்பைத் தொட்ட மாதிரிக் கால் சுடுது. 

நான் அம்மாக்குக் கிட்டப் போய் அவன்ரை காலை நக்கிறன். “என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை ஃபிராங்'” என்றா. 

அடுத்த நாள் விடிய பாக்கைத் தூக்கிக்கொண்டு இரண்டு பேரும் ஓட்டோவிலை ஏறினம். நேரம் வெள்ளென பாக் பெரிசு – ஏதோ வித்தியாசம் எண்டு விளங்குது எனக்கு. “போட்டு வாறன் ஃபிராங் என்றா அம்மா. அவ சொன்னாச் செய்வா. போறன்” எண்டு சொல்லேல்லை “வருவா” எண்டுதான் இவ்வளவு நாளும் பாத்தன். இப்ப வரவர  நம்பிக்கை குறையுது. 

வெளிலை பேய்க்காற்றுச் சுழண்டு அடிக்குது. 

எந்த நேரமும் அழ வேணும் போல கிடக்கு. எதிர்காலம் வெறுமையா இருக்கு. நான் இனி இருந்து ஒரு பிரயோசனமும் இல்லைத் தானே! நான் அம்மா அப்பாவை வடிவாப் பாக்கேல்லையோ – ஏதும் பிழை விட்டிட்டனோ எண்ட குற்ற உணர்வாயும் தெரியுது. எதிலையும் அக்கறை இல்லை. கேள் பிரண்டிட்டையும் போறேல்லை. என்ன சத்தம் கேட்டாலும் அசையிறேல்லை. பேசாமல் படுத்துக் கிடக்கிறன். சரியான களைப்பா இருக்கு. நித்திரை வாறேல்லை. வந்தாலும் கனவெல்லாம் படு பயங்கரமா இருக்கு. பசிக்கிறேல்லை. அன்ரி பத்துத்தரம் கூப்பிட்டா சிவனே எண்டு ஒரு வாய் சாப்பிடுவன். பீல்ட் பைக் குறூப் அடிக்கடி ஒழுங்கையாலை திரியுது. நான் குலைக்கிறேல்லை. 

இதென்ன வாழ்க்கை பாருங்கோ… சாப்பாடும் பயமும்… பயமும் சாப்பாடும்…! ஒரே 

ஒரே இருட்டு இரவிலை லாம்பு கொழுத்தவும் ஒருத்தருமில்லை. உள்ளையும் இருட்டு – வெளிலையும் இருட்டு. 

இஞ்சை தான் நாங்கள் இப்பிடித் தேடுவாரற்றுத் திரியிறம். மூளை இல்லாத மனுசர் வாழுற நாட்டிலை. ஐரோப்பிய நாடுகளிலை, நாய் வளர்ப்பு மல்ரி மில்லியன் டொலர் பிஸ்னஸ்! 

எனக்கு எவ்வளவு பெரிய இலட்சியமெல்லாம் இருந்தது. அம்மாட்டைக் கேட்டு ஸ்பெஷல் ரெயினிங் எடுத்துக் கண் தெரியாத மற்றும் மனவளர்ச்சி குறைஞ்ச மனுசருக்கு வழிகாட்டி அழைச்சுக் கொண்டு போகோணும் எண்டு. எல்லாம் துலைஞ்சுது போ! 

எங்கடை ஆக்கள் எவ்வளவு பெரிய பெரிய வேலை எல்லாம் செய்யினம்! என்சைக்கிளோ பிடியோ பிரிட்டானிக்காவிலை மட்டும் எங்கடை ஆக்கள் எண்பத்தாறு பேரின்ரை ஃபோட்டோ வந்திருக்கு. சிலபேர் ஆட்டு மந்தை, செம்மறிக்கூட்டம் இதுகளுக்குப் பாதுகாப்பு வழங்கினம். 

மனுசர் செம்மறியளா இருந்தா நாங்கள் நிம்மதியாப் படுத்தெழும்ப ஏலாமல் கிடக்கு. 

வேறை சிலபேர் கள்ளரைக் கண்டு பிடிக்கப் பொலிசுக்கு உதவினம். ஆஸ்பத்திரிலை நோயாளர் தேறி வாறதுக்குக் கூடச் சிலபேர் உதவினம். ஏனெண்டா மனுசரை உற்சாகமடையப் பண்ணிறதிலை எங்கடை அன்பு நிறைய உதவும். 

வெடி பொருளைக் கண்டுபிடிக்கிறது. காணாமற் போனவையைக் கண்டு பிடிக்கிறது இப்பிடி வேலையள் கூட எங்கடை ஆக்கள் செய்யினம். கேவலம் கெட்டதுகள் அதுக்காவது எங்களை ஒழுங்காப் பாவிக்கலாம். அதுகும் இல்லை. நஞ்சுப் பொருளைக் கண்டு பிடிக்கிறது. போதைப் பொருளைக் கண்டுபிடிக்கிறது. நிலம் தோண்டிறது 

இப்பிடி எவ்வளவு செய்யக்கூடிய நான் இண்டைக்குச் சாகிற மனநிலைக்கு வந்திருக்கிறன். 

ஓ….. உண்மைதான். இவ்வளவும் சொன்னாப்பிறகு கொஞ்சம் மனம் ஆறித்தான் இருக்கு. மனதுக்கை இருந்ததெல்லாம் கொட்டித் தள்ளிப் போட்டன் பாருங்கோ. தற்கொலை செய்யிறது ஆரோக்கியமான செயல் இல்லை எண்டு அம்மாவும் சொல்லுறவ தான். அப்ப என்ன செய்வம்? 

ஓம்…. பாருங்கோ நீங்கள் சொல்றது சரி… தலை வெடிக்கிற மாதிரிச் சத்தம் போடுறவையை அதை நிப்பாட்டச் சொல்லிக் கேப்பம். தாங்களும் கொஞ்சம் நிம்மதியா இருந்து எங்களையும் இருக்க விடச் சொல்லிக் கேப்பம். அப்பிடி எண்டா அம்மாவும் அப்பாவும் வந்திடுவினம். எனக்கு எழுதத் தெரியாது. நீங்கள் எழுதித் தாறியளே? நான் கால் ஒப்பம் வைச்சு விடுறன். 

– தாயகம் செப் -2007

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *