விழுதலும் எழுதலும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2024
பார்வையிட்டோர்: 1,324 
 
 

(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த “பாமசி”யின் முன்னால், முச்சக்கரவண்டியில் இவள் வந்திறங்கியபோது, அதன் ஒற்றைக்கதவு மட்டும் திறந்திருந்தமை இருள் மண்டியிலிருந்த மனதில் ஒரு சிறு ஒளிக்கீற்றை வரவழைத்து மகிழ்ந்தது. நேற்று முதன் முதலாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளை “கிறவுட்டைச்” சமாளிக்க முடியாமல் பல மருந்தகங்கள் மூடப்பட்டதாக இவளுக்கு யாரோ சொல்லியிருந்தார்கள். 

ஒளிக்கீற்று – அந்த மின்னல் ஒரு கணந்தான்! அந்த ஒற்றைக் கதவில் ஒருவன் கையை நீட்டி வாசலை அடைத்தபடி நின்ற முறையும், அவனது கைகள் எப்போது விலகும் நாங்கள் உள்ளே நுழைந்து விடலாம் எனக் கூட்டமும் நெருக்கமுமாய் முண்டியடித்து நின்ற சனங்களும், கண்ணில் பதிவு செய்யப்பட்டு, மூளையின் மேற்பட்டையின் பார்வைப்புலப் பகுதியில் புலக்காட்சி பெற்ற அடுத்த கணத்தில் “இந்தக் கூட்டம் என்னை உள்ளே விடுமா?” என எழுந்த சந்தேகம் அந்த ஒளிப் பொறியை மறையச் செய்தது. 

நேற்றுக் காலை மானிப்பாயில் இப்படித்தான் விழுந்தடித்த கூட்டத்தில் அகப்பட்டுப் பிசைபட்டு, இரண்டு மணித்தியால முடிவில் ஒரு மருந்தும் வாங்காமல் இவள் திரும்பிய பரிதாபத்தில் நெகிழ்ந்திருந்த முச்சக்கர வண்டிச் சாரதிக்கு இவள்மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டிருக்கும் இந்தக் குறுகிய நேரத்தில் பஸ் ஓடுமோ, ஓடாதோ” என்ற சமசியத்தில் எண்ணூறு ரூபா கொடுத்து ஓட்டோ பிடித்து வந்திருக்கும் இவளது நிலையும் அவனுக்குப் புரிந்திருந்தது. என்றாலும் இது ரவுண். கிராமத்தில் தோல்வி போகும் விடயங்கள் நகரத்தில் வெற்றி பெறும் என்பது பொது நம்பிக்கை. இவள் முச்சக்கர வண்டியை விட்டு இறங்க முதலே, சாரதி தான் இறங்கிப் பாமசிப் பக்கம் சென்றான். கூட்டத்தின் பிற்பகுதியில் நின்ற சிலரிடம் ஏதோ கதைத்தான். திரும்பி வந்தான். 

“மருந்து குடுக்கிறாங்கள். பத்துப் பத்துப் பேரா உள்ளை விடுறாங்கள். இப்ப ஒன்பது மணிதானே. நீங்கள் போங்கோ. வாங்கிப் போடலாம். பொம்பிளையளை ஓரளவு விடுவங்கள்”. 

தான் ஆணாகவும் இளைஞனாகவும் இருப்பதால் தோல்வி அடைந்து விடுவேனா என்ற பயத்தில் இவளையே அவன் அனுப்ப விரும்புவது போல இருந்தது. அவன் எதைச் சொன்னாலும் தேவை இவளுடையது. அவன் வெறும் சாரதி. இவள் தானே போகவேண்டும்?. 

போனாள்.. 

சுமார் இருநூறு பேர் மதிக்கக்கூடிய கூட்டத்தில் இவள் ஒருத்தி தான் பெண்ணா? மேற்குப் புறத்தில் பச்சைச் சேலையுடன் வயதான இன்னொரு அம்மா நிற்பது போலச் சாடையாகத் தெரிந்தது. இவளுக்கு நிச்சயமாக அவவைவிட வயது குறைவு. அவவே நம்பிக்கையோடு நிற்கிறா. இவளால் ஏன் முடியாது? 

நிற்கிறாள்.. 

மற்றதுகளைத் தான் விட்டாலும் இந்த “கவர்சில்” மருந்தை இண்டைக்கு எப்படியும் வாங்கியாக வேணும். “வீட்டிலை ஒரு குளிசை தான் கிடக்கு” 

“சீ போனகிழமை வாங்கியிருக்கலாம். ஆருக்குத் தெரியும். இப்பிடித் திடீரென்டு A9 பாதையும் மூடிச் சண்டையும் பெருக்குமெண்டு” 

“வழக்கம்போல முடிய வாங்குவம் எண்டு இருந்திட்டன். விசர் வேலையாப் போச்சு…” 

“கண்காணிப்புக் குழு நிக்குது.. வெளிநாடெல்லாம் நிக்குது… இந்தமுறை சண்டை பெருக்காதெண்டெல்லோ சனமெல்லாம் நம்பியிருந்தது” 

“இந்த முறைதான் ஆகலும் பெரும் பிரச்சினையாப் போச்சு” எண்ணச் சுழல்கள் நிர்ப்பந்தமாய் மூளையைக் குறுக்கறுத்தன. “இந்த மருந்து இண்டைக்கும் கிடைக்காட்டில், நாளைக்கு அவருக்கு மருந்தில்லை. மருந்து குடுக்காட்டில்…..?” 

நினைவைத் தொடர விரும்பாது இடையில் “கட்” பண்ணி மூடியது மூளை. அந்தக் “கட்” உந்தலுடன் இரண்டு பேரை விலத்தி உள் நுழைய முயன்றாள். 

“அண்ணை கொஞ்சம் விடுறியளே. அவர் காட் (Heart) பேசண்ட். மருந்து குடுக்காட்டி இதயம் நிண்டிடும்..” 

யாருடைய இதயம் நின்று போவதைப் பற்றி யார் கவலைப்பட முடியும் இந்த நாட்டில்? யாருக்கு இதயம் இருக்கிறது? ஒவ்வொரு நாளும் பலநூறு இதயங்கள் காணாமல் போகும் மகத்துவம் பெற்ற பூமி! 

மெலிதாக ஒலித்த இவள் குரலை யாரும் காதில் வாங்கியதாக இல்லை. ஒவ்வொருவரும் உள்நுழையும் போராட்டத்தில் கடுமையான எத்தனங்களைப் புரிந்தபடி!. 

எல்லாப் பக்கத்திலிருந்து இடிகளை இலவசமாகப் பெறும் இடத்திற்கு இவளும் எப்படியோ வந்துவிட்டாள். முழங்கை இடி முதுகு நெரி கால் மிதி யாரும் யாரையும் எதுவும் செய்யலாம். அதற் கெல்லாம் சுதந்திரம் கொடுத்துவிட்ட புண்ணிய தேசம். 

அரைமணி நேரமாக மூச்சுவிடுவதற்கு மூச்சுவிடாமற் போராடி அந்தக் கைகள் திறந்தபோது, இவள் கடையினுள் நுழைந்தாள். நுழைந்தாளா? அல்லது பின்னால் நின்றவர்கள் தள்ளிய தள்ளில் உள்ளே போய் விழுந்தாளா? அந்தத் தலைப்பில் ஒரு பட்டிமண்டபம் செய்தால் நடுவர் தீர்ப்புக் கூறத் திணறுவார். விழுந்தாள் என்று சொல்வது மிக மோசமான பிழை – ஏனென்றால் எள்ளுப் போட்டாலும் விழமுடியாத கூட்டத்தில் ஒருவர் எப்படி விழ முடியும்? நின்றாள் 

சரிந்தாள்-பினைபட்டாள்! 

“அப்பாடா, உள்ளை வந்தாச்சு… இனி எப்பிடியும் வாங்கிப் டலாம்”. 

நம்பிக்கை இழப்பின்றி இருத்தலே வாழ்வு. 

வெளியே நல்ல வெயில்! உள்ளே ஒரே இருள். மின்சாரம்தான் 

இரண்டு நாளுக்கு முன் முற்றாக நின்று போச்சே! 

சனத்தால் முற்றாக மூடப்பட்டிருக்கும் ஒற்றைக் கதவினூடு எங்கே ஒளி வரும்? 

ஒளியில் வாழ்ந்து பழகிய கண் இருளுக்கு இசைவாக்கம் பெறப் பெரிதும் சிரமப்பட்டது. 

பல்லாயிரம் முதுகுகளும் தலைப்பிடரிகளுமே கண்களுக்குத் தெரிகிறது. முகங்களைக் காண அதனால் முடியவில்லை. 

“எங்கையப்பா? தர்சினியை ஆள்விட்டுக் கூப்பிடச் சொன்னனான் – இவ்வளவு சனத்துக்கும் ஆர் மருந்து குடுக்கிறது?” 

“தர்சினி வாறா. பஸ் இல்லையாம் நடந்து வாறா. இப்ப வந்திடுவ”. 

“ராசன் -ஏனப்பா இவ்வளவு பேரையும் உள்ளை விட்டனி? பத்துப் பத்துப் பேரா விடச் சொன்னனான்…” 

“நான் எங்கை விட்டனான் – அதுகள் என்ரை கையைத் தள்ளிக் கொண்டு வந்திட்டுதுகள்….” 

“இனி விடாதை என்ன?” 

“ஓமோம்” 

கிணற்றின் அடியில் இருந்து கேட்பது போல் இவள் காதில் குரல்கள் விழுகின்றன. யார் கதைக்கிறார்கள்? எங்கே பில் போடு கிறார்கள்? யார் மருந்து கொடுக்கிறார்கள்? தலை சுற்றுகிறது. உலகத்தின் ஒட்சிசன் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதா? அப்படிப் பேப்பரில் வரவில்லையே! கொலை எல்லாம் பேப்பரில் வரும் என்று யார் சொன்னது? பேப்பரில் நடந்த உண்மை வரும் என்று யார் சொன்னது? பேப்பரில் வருவது எல்லாம் உண்மை என்று நம்பச் சொன்னது யார்? என்ன? எல்லாம் குழப்பமாக இருக்கிறது. 

இவளின் தலைக்கு மேல் ஆயிரம் கைகள் முளைத்து நீண்டிருந்தன. 

“ஒரு காட் பனடோல்” 

“எனக்கு வென்ரோலின்” 

“அண்ணை இந்தத் துண்டை ஒருக்காப் பிடியுங்கோ” 

“தம்பி இந்த மருந்து கிடக்கே” 

“இடிக்காதையும் ஐசே…” 

 “நான் எட்டு மணிக்கு வந்தனான். இப்ப வந்து அந்தரப்படாதை நீ…”

வாசலில் இருந்து சுமார் ஐந்தடி தூரத்தில் பில் போடுகிறார்கள் போல இருக்கிறது. அந்தப் புள்ளியை நோக்கி இவள் அங்குலம் அங்குலமாக நகர முயன்றாள். அதுவே இந்தக் கணத்தில் வாழ்வின் இலக்குப் புள்ளி! நகர்ந்தாளா? 

நசுங்கிப் பிழிபட்டு ஊர்ந்தாள். 

95இல் சாவகச்சேரியை நோக்கி றோட்டில் ஊர்ந்தது பெரும் சுமையாய் நினைவில் தோன்றிக் கரைந்தது. 

கதவை மறித்து நின்ற வாலிபக் கையில் இருந்து பில் போடும் இந்தக் கிழட்டுக் கை வரை வரச் சுமார் அரைமணிநேரம் எடுத்தது. ஆனால் பில் போடப்படும் இடத்திற்கு வந்தவர்களுக்கெல்லாம் பில் போடப்படும் என்று யார் சொன்னார்கள்? அல்லது அந்த இடத்திற்கு வந்தவர்களுக்கு மட்டுந்தான் மருந்து கொடுக்கப்படும் என்று யார் அறிவித்தார்கள்? 

கதவின் குறுக்கே இருந்த கைக்கு வெளியில் நின்றே சிலர் மருந்து வாங்கிக் கொண்டு சென்றார்கள். விற்பனைப் பையன் ஒருவன் ஒற்றைக் கதவடிக்குச் சென்று அப்போதுதான் உள்நுழைந்த பலரின் கேள்விகளைப் பூர்த்தி செய்து கொடுத்துக் கொண்டிருந்தான். 

யார் அவர்கள்? எப்படி அவர்களுக்கு அது சாத்தியமாகிறது? விற்பனைப் பையனை ஒத்த ஆண் வர்க்கம் என்பதாலா? ஒருவேளை அவனது உறவினர்களா? நண்பர்களா? தெரிந்தவர்களா? மருந்துக் கடையில் நிற்பவர்கள் இனிமேல் எப்படி இவளுக்கு உறவினராகவோ நண்பராகவோ ஆக முடியும்? 

இவளும் இந்தக் கடையின் வாடிக்கையாளர் என்ற வகையில் தெரிந்தவள் தானே! கவர்சில் என்ற இந்த இதயப் பாதுகாப்பு மருந்தை மாதந்தோறும் இவள் இங்கு தானே வாங்குவாள்? ஏன் இன்று யாரும் இவளைக் கண்டுகொள்கிறார்கள் இல்லை? 

கேள்விகளுக்கு விடை கண்டு பிடிக்க முடியாத, விடைகள் சிறைபட்டுப் போன நாடு இது. 

மூன்று நான்கு விற்பனைப் பையன்களுக்கு மத்தியில் ஓடித் திரிந்து கொண்டிருந்த ஒரு பொம்பிளைப் பிள்ளையின் உதவியை ஈற்றில் நாடினாள். பெண் வர்க்கம்! 

“தங்கச்சி நான் களைச்சுப் போனன். இந்த மருந்தை ஒருக்காத் தாங்கோ” 

“நில்லுங்கோ அம்மா வாறன்” தங்கச்சி வலு பரபரப்பாக ஓடி ஓடி ஆண்களையே கவனிக்கிறா. எதிர்ப்பால் கவர்ச்சியோ? அல்லது உடல் வலுவுக்கான பயமோ? இவதான் நடந்து வந்த தர்சினியாக்கும். 

“பிள்ளை எனக்குப் பிறகு வந்தவை எல்லாருக்கும் குடுத் திட்டியள். எவ்வளவு நேரமா நான் இதிலை இடிபட்டுக் கொண்டு நிக்கிறன்!.” 

குரலில் பலமான கெஞ்சல், நேர்மையான கேள்விகளுக்குப் பதில் சொல்ல மனிதர்கள் விரும்புவதில்லை. அவளது குரலும் உடலைப் போலவே நசுங்கிக் கிடந்தது. 

இருட்டுக்குள் கையை உயர்த்தி நேரத்தைப் பார்ப்பதில் வெற்றி கண்டாள். பத்து முப்பது! 

பல ஆண்களின் வியர்வையும் காற்றின் புழுக்கமும் சேர்ந்து வந்த கார நெடி சத்திவரும் போல இருந்தது. சத்தி எடுக்க வெளியே போக முடியுமா? சத்தி வந்தால் முன்னுக்கு நிற்பவரின் முதுகு இவளை இடித்து முந்திய குற்றத்திற்காகத் தாங்க வேண்டியதுதான்! 

“பெண் என்றால் பேயும் இரங்கும்” என்று எந்த விசரன் சொன்னான்? 

குரலை உயர்த்தி வெற்றி பெற்றுச் சென்ற சில ஆண்களை அவதானித்ததில் தானும் அதைச் செய்யலாமோ என்று முயன்றாள். 

பில் போட்டுக் கொண்டிருந்த கிழவரை நோக்கினாள். 

“என்ன அநியாயம் அண்ணை நீங்கள் செய்யிறது. ஒன்பது மணிக்கு நான் இந்த நெரிசலுக்குள்ளை வந்தனான். அவசர மருந்து. பனடோலைப் பிறகும் குடுக்கலாந்தானே.” 

“அம்மா சத்தம் போடாதேங்கோ. காய்ச்சல்காறருக்குப் பனடோல் முக்கியம். உங்களுக்கு அது முக்கியம். கொஞ்சம் பொறுங்கோ, நாங்கள் என்ன செய்யிறது?” 

“ஆக்களை ஒரு ஒழுங்கிலை லைனிலை விட்டிருக்கலாந் தானே…” 

“நாங்கள் என்ன பொலிசே அம்மா. சனம் தாங்களா எல்லோ லைனிலை வரவேணும்…. 

அதுவும் தோற்றது. விவாதம் நடந்ததே தவிர விஷயம் நடை பெறவில்லை. 

ஒழுங்கு! திடீரென்று எல்லாம் மறுக்கப்பட்ட சமூகத்தில் எப்படி வரும் ஒழுங்கு! ஒழுங்கு என்பது அழகியல் தேவையுடன் சம்பந்தப் படுவது. மாஸ்லோவின் தேவைக் கூம்பில் மிக மேலே வரும் தேவை. அடிப்படை உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படாத மக்கள் மத்தியில், பாதுகாப்புத் தேவை என்பது பூதாகாரமாகய் எழுந்து நிற்கும் சனங் களிடை ஒழுங்கு எங்கிருந்து வரும்? 

திடீரென்று…..! 

வெளியே உயிரையே நடுங்க வைக்கும் பெரீய வெடிப்புச் சத்தம்! 

ஷெல்லா? கிளைமோரா? 

யார் இறந்தார்கள்? யார் காயப்பட்டார்கள்? யாருக்கு அடி விழுந்தது? எங்கே சுற்றி வளைப்பு? 

இதயம் பல கணம் துடிக்க மறந்து மீண்டும் துடிப்பை நினைவு படுத்திக் கொண்டது. 

உள்ளே நெரிசலுக்குள் மற்றொரு கனமான நெரிசல் அலை! 

என்றாலும் யாரும் கடையை விட்டு வெளியே போனதாக இல்லை. 

“நான் ஏழெட்டு மருந்து எழுதிக் கொண்டு வந்தனான். ஒண்டும் வேண்டாம். இந்தக் “கவர்சில்” ஒரு மருந்தை மட்டும் தாங்கோ. இதயம் நிக்காமல் பாக்க… நான் போறன்…” 

கெஞ்சல் பயன் தரவில்லை. குரலை உயர்த்தி ஒன்றும் ஆகவில்லை. உறுதியான வெளிப்பாட்டுக்கு என்ன நடக்கும் பார்ப்போம். 

நெஞ்சில் ஏற்படும் இந்த உணர்வு என்ன? மருந்து கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமா? இப்படி அநீதி நடக்கிறதே என்ற கோபமா? இப்படி ஒரு வாழ்வுக்குள் தள்ளப்பட்டு விட்டோமே என்ற கவலையா? என்ன வாழ்க்கை 

வாழ்க்கை இது என்ற விரக்தியா? இடிபட்டதால் வந்த அருவருப்பா? இருபது வருடமாய் எதைக் கண்டோம் இந்த மண்ணில் என்ற சலிப்பா? எல்லாம் சேர்ந்த ஒரு கலவை உணர்வா? கலவையில் முதன்மை பெறும் உணர்வு எது? 

“இந்த மருந்தை இன்று எப்படியாவது வாங்கிவிட வேண்டும்” வலிமையான அந்த எண்ணம் – எல்லா உணர்வுகளையும் மேவிவரும் வாழ்வுக்கான உந்தல். 

“தங்கச்சி உள்ளுக்குப் போகட்டா?” 

உள் அறைக்குள் போயும் சிலர் மருந்தோடு திரும்புவது பதினொரு மணிக்குத்தான் இவள் கண்ணில் பட்டது. 

மருந்துத் துண்டும் கையுமாக ஒன்பது மணியளவில் நீண்ட இவளது கை. 11.10 ஆகிறது. இன்னும் மடியவில்லை! கின்னர்ஸ் புத்தகத்தில் எழுதி விடுவார்களோ? 

11.30க்காவது வெளியில் வராவிட்டால் 12.00க்குள் வீடு போய்ச் சேர முடியாது. பன்னிரண்டு மணிக்கு ஊரடங்குச் சட்டம். காலையில் யாழ் எப்.எம் பல முறை அறிவிப்புச் செய்தது. 

“காலை எட்டு மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் பகல் பன்னிரண்டு மணிக்குக் கடுமையாக அமுல்ப்படுத்தப் படும்.” 

பன்னிரண்டு மணிக்குப் பின் தெருவில் காணப்பட்டால் மருந்துடன் மரணிக்க நேரலாம். அதைவிட வெறுங்கையுடன் திரும்பினால் இவளது உயிர் மிஞ்சும். 

“அண்ணை உங்கடை காலிலை தொட்டுக் கும்பிடுவன். ஆறு லட்சம் ரூபா செலவழிச்சுக் கொழும்பிலை கொண்டே ஒப்பறேசன் செய்த பேசண்ட். இந்த மருந்து குடுக்காட்டி ஆபத்து. ஒருக்காத் தந்திட்டு நில்லுங்கோ….” 

இறுதி முயற்சி… 

“பிள்ளை தர்சினி இந்த அம்மா கனநேரம் குளறிக்கொண்டு நிக்கிறா.”கவர்சில்லாம்”. கிடக்கோண்டு பார் பிள்ளை…” 

“கவர்சில்” ஒரு காட்தானே கிடந்து பத்துமணி போல டொக்டருக்குக் குடுத்தது. உந்த மருந்து இல்லை அம்மா முடிஞ்சுது.” 

இந்தப் பதில் இவளின் செவிப்பறையை அடையும் போது நேரம் 11.40. 

பில்போடும் கிழட்டுக் கையில் இருந்து, 

வலிமையான கதவுக் கையைத் தாண்டி, பாதுகாப்பான முச்சக்கர வண்டிக்கு வெளியேற அவள் எடுத்த நேரம் ஒரு செக்கன். 

அந்த வலிமையை அவள் எங்கிருந்து பெற்றாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. 

– மல்லிகை 2007

– வரிக்குயில்(சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: நவம்பர் 2016, கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *