காமராஜ் மரணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2021
பார்வையிட்டோர்: 2,434 
 
 

(இதற்கு முந்தைய ‘அப்பாவின் அசைவச் சாப்பாடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

இந்திராகாந்தி அவசரநிலைமை பிரகடனம் செய்தார். அந்தச் செய்தியால் அவன் அப்பா பெரிய அளவில் பாதிக்கப் படவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பே அவர் இந்திராகாந்தி பற்றி கொண்டிருந்த அபிப்பிராயங்கள் எதுவும் தப்பாகி விடவில்லை என்கிற மாதிரியான மனோபலத்துடன்தான் அப்பா அவசரகாலச் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் எமர்ஜென்சியினால் காமராஜர் மிகவும் மனம் நொந்து போனார். தான் இந்திராகாந்தி விஷயத்தில் செய்துவிட்ட மிகப்பெரிய தவறுகளை தனிமையில் எண்ணி வருந்தினார். சில மாதங்களுக்குப் பிறகு திடீரென மெட்ராஸில் காமராஜ் காலமானபோது அவன் அப்பா மனம் உடைந்து போனார். துக்கத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

காமராஜ் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்புதான் அப்பா அவரின் நண்பர் டி.எஸ்.கிருஷ்ணாவை இழந்திருந்தார். அந்த இரண்டு நண்பர்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே மரணம் ஏற்பட்டிருந்தது. உணவு வேளைக்குப் பிறகு ஓய்விற்காக சிறிய தூக்கத்திற்காக படுத்தவர்கள், தூக்கம் கலையாமல் தூக்கத்திலேயே இறந்து போயிருந்தார்கள். தனக்கும் அதே மாதிரியான மரணம் வரவேண்டும் என்று அவன் அப்பா விருப்பப்பட்டார். ஆனால் அவன் அப்பாவின் மரணம் அந்த மாதிரி தூக்கத்தில் நிகழவில்லை.

காமராஜ் இறந்து பதினெட்டு வருடங்கள் கழித்து அவன் அப்பாவின் மரணமும் மிக இலகுவாக கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்தது. எப்போதும்போல அன்றும் அப்பா காலை ஆறரை மணிக்கு எழுந்தார். சூடாக இரண்டு முட்டைகள் கலந்து பால் சாப்பிட்டார். அன்றைய செய்தித் தாள்களை வாசித்தார். தோட்டத்தில் சிறிது நேரம் நடந்தார். பெரிய அண்டா நிறைய இருந்த குளிர்ந்த நீரில் குளித்தார்.

சலவையில் இருந்து வந்திருந்த வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு பூஜை அலமாரியைத் திறந்து அவருடைய இஷ்ட தெய்வங்களை எப்போதும்போல கும்பிட்டார். அடுத்து நேராக டைனிங் ஹால் போய் காலைப் பலகாரம் சாப்பிட வேண்டும். ஆனால் அப்பா சாப்பிடச் செல்லவில்லை. என்னமோ செய்திருக்கிறது.

ஹாலில் மேற்குப்புற சுவர் ஓரமாக இருந்த அவருடைய கட்டிலில் போய் உட்கார்ந்திருக்கிறார். அடுத்த நிமிடம் அப்பாவின் உடல் தரையில் சரிந்தது. ஐந்தாவது நிமிடம் குடும்ப டாக்டர் வந்துவிட்டார். அதற்குள் அப்பாவின் உடலில் இருந்து உயிர் பிரிந்திருந்தது.

காமராஜ், டி.எஸ்.கிருஷ்ணா என்ற இரண்டு நண்பர்களின் இறப்புக்குப் பின் வாழ்ந்த பதினெட்டு வருடங்களும் அவன் அப்பா அவருடைய நாட்களை வீட்டிற்குள்ளேயேதான் கழித்தார். அவன் சகோதரிகளின் திருமணங்களும் முடிந்து, சகோதரனின் திருமணமும் முடிந்து, அவர்களால் அவருக்கு எந்தப் பிரச்னையும் கவலையும் இல்லாமல் இருந்தது. வருமானமும் வேண்டிய அளவு வந்து கொண்டிருந்தது. உடல் நலத்திலும் அப்பாவுக்கு எந்தக் குறையும் இல்லை. அவருடைய ஒரே கவலை அவன்தான்.

அவன் திருமணம் செய்துகொள்ள மறுத்து விட்டான் என்கிற கவலை. பணம் சம்பாரிப்பதற்காக வேலையிலோ தொழிலிலோ அவனை ஈடுபடுத்திக் கொள்ளாமல் வெறுமே மெட்ராஸில் தனியாக இருந்தான். மனதால் யாரோடும் பெரும் பிணைப்பு எதையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் சுதந்திரமாக இருந்தான். பொறுப்பு, கடமை என்ற எந்த நிர்ப்பந்தங்களும் இல்லாத இலகுவாக இருந்தது அவனுடைய வாழ்க்கை.

ஆனால் அவன் அப்பாவுக்கு அவன் வாழ்க்கை பெரிய துயரமாக இருந்தது. அவனுடைய தனிமையான மெட்ராஸ் வாழ்க்கையை நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் அவன் அடிக்கடி ஊருக்குச் சென்று அப்பாவோடும், அம்மாவோடும் இருந்து கொண்டுதான் இருந்தான். ஆனாலும் காலம் பூராவும் மெட்ராஸில் அவன் ஹோட்டல்களில் சாப்பிட்டுக் கொண்டிருப்பது ஓர் அவலம் என்பதாக அவன் அப்பா மனம் உருகினார்.

அவன் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம்; பணம் சம்பாரிப்பதற்காக வேலை எதுவும் பார்க்க வேண்டாம். ஆனால் ஊரில் அவர்களோடு நிம்மதியாக வீட்டில் இருந்து நேரத்துக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமே என்று அப்பா கலங்கினார். அவனுக்கு அப்பா அம்மாவோடு எந்தப் பிரச்னையும் கிடையாது. அவர்களின் உறவில் ஏராளமான அன்பு இழையோடிக் கொண்டிருந்தது. இருந்தாலும் சாப்பாடுக்காக அவர்களுடனேயே இருப்பது என்பது அவனுக்கு எந்த விதத்திலும் சாத்தியமாகாத விஷயம்.

இதை அப்படியே அவர்களிடம் சொன்னால் கஷ்டப் படுவார்கள் என்பதால் அவன் சொல்லவில்லை. ஒரு சமயம் சேர்ந்தாற்போல் ஊரில் பத்து நாட்கள் இருந்தபின் மெட்ராஸ் திரும்ப அவன் தயாராகிவிட்டான். அன்று இரவு அவனுக்கு ரயில். காலையில் அப்பாவிடம் இதைத் தெரிவித்தான்.

பொதுவாக இந்த மாதிரி அவன் தெரிவிக்கும் போது, அப்பா பீரோவைத் திறந்து பணம் எடுத்து, “செலவுக்கு வச்சுக்க…” என்று சொல்லிக் கொடுப்பார். “ஒடம்பைப் பாத்துக்க, நல்லா சாப்பிடு…” என்பார். ஆனால் அன்று அவன் மெட்ராஸ் கிளம்புவதாகச் சொன்னதும், அப்பா மெதுவாக நடந்து அவனிடம் வந்தார். அவன் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டார். அவரால் அழுகையையும், கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அழுது விம்மியபடியே, “நிம்மதியா இங்கேயே சாப்பிட்டு ஒடம்பை பாத்துக்கலாம்ல… எதுக்காக மெட்ராஸ் போய் அங்க ஒத்தையிலேயே கெடக்கணும்… ஒன்னை நெனச்சாத்தான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு… ஒன்னை எப்படியெல்லாம் நான் ஆசையா பாத்து பாத்து வளர்த்தேன். இப்பிடி வீட்ல தங்காம நாடோடியா அலையிறியே…”

அப்பா சில நிமிடங்களுக்கு திருப்பி திருப்பி இதையே சொல்லி அரற்றிக் கொண்டிருந்தார். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அப்பாவின் அழுகையைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் மாடிக்குப் போய்விட்டான்.

ஒரு மணி நேரம் கழித்து அப்பா மாடி ஏறி வந்தார். ஊரில் வீட்டில் இருக்கும்போது பொதுவாக அவன் ஏதாவது புத்தகம் வாசித்துக்கொண்டு மாடியில்தான் இருப்பான். அவன் வீட்டு மாடி பால்கனி மிக அழகாக இருக்கும். சில நேரங்களில் அவனுடன் பேசிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்போது அப்பா மாடிக்கு வருவார்.

அன்று மாடி ஏறி வந்தவர் அவனிடம் நிறைய பணத்தை நீட்டினார்.

“செலவுக்கு வச்சுக்க… ஜாக்ரதையா போய்ட்டு வா. அடிக்கடி வந்து போயிட்டு இரு. நீ வீட்ல இருக்கும்போது நான் ரொம்ப செக்யூர்டா பீல் பண்றேன்…” என்றார்.

இந்த வார்த்தையை அவன் அப்பாவிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை. அவருடைய நிலையை அந்தக் கோணத்தில் ஒரு நாளும் அவன் யோசித்துப் பார்த்ததில்லை. இனி அடிக்கடி ஊருக்கு வந்து அவருடன் இருந்துவிட்டுப் போக வேண்டுமென்று அப்போதே தீர்மானம் செய்து கொண்டான். தொடர்ந்த நாட்களில் அதை அவன் செயலும் படுத்தினான். அப்பாவும் அதனால் சந்தோஷமடைந்தார்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *