காட்சிக் கூண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2012
பார்வையிட்டோர்: 10,057 
 

கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்.

மாநகராட்சியின் பொதுப்பூங்காவில் அப்படியொரு கூண்டினை உருவாக்க வேண்டும் என்றொரு யோசனையை யார் முன்மொழிந்தது என்று தெரியவில்லை. ஆறுமாதங்களாகவே நகரின் முக்கிய பூங்காங்கள் யாவும் மறுசீரமைப்பு செய்யபட்டு வந்தன. செயற்கை நீருற்றுகள், சிறார்களுக்காக சறுக்கு விளையாட்டுகள், அலங்கார விளக்குள், ஆள் உயர காற்றடைக்கபட்ட பொம்மைகள் நாளிதழ்கள் வாசிப்பதற்காக வாசகசாலை என்று பூங்காங்களின் தோற்றம் பொலிவு கண்டிருந்தது.

ஆனால் நகரின் வேறு எந்த பூங்காவிலும் இல்லாத தனிச்சிறப்பாக இரட்டை சாலைசந்திப்பின் அருகிலிருந்த ஔவை பூங்காவில் இரும்பு கூண்டு ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். ஆறடிக்கு பத்தடி அளவில் உருவாக்கபட்ட அந்த இரும்பு கூண்டு சர்க்கஸில் சிங்கம் அடைத்து வைக்கபட்ட கூண்டினை விடவும் சற்றே பெரியதாக இருந்தது.

மின்சாரத்தால் இயங்கும் அந்த கூண்டில் விரும்புகின்ற யார் வேண்டுமானாரும் உள்ளே சென்று உட்கார்ந்து கொள்ளவோ, நின்று கொண்டு இருக்கலாம். கூண்டினில் ஆட்கள் சென்ற மறுநிமிசம் தானாக கதவு மூடிக் கொள்ளும்படியாக மின்சாரத்தால் உருவாக்கபட்டிருந்தது. சரியாக ஐந்துநிமிசங்கள் கூண்டு மூடியிருக்கும். பிறகு கதவு தானே திறந்து கொண்டுவிடும்.

கூண்டில் ஆட்கள் ஏறி மூடிக் கொண்ட மறுநிமிசம் அதிலிருந்து மியமிங்மியமிங் என்று விசித்திரமானதொரு சப்தமிடும். அது பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்க கூடியதாகயிருந்தது. மற்ற நேரங்களில் கூண்டில் எந்த சலனமும் இருக்காது.

கூண்டினை பூங்காவில் பொருத்தபட்ட மூன்று தினங்களுக்கு அதில் எவரும் நுழையவேயில்லை. இவ்வளவிற்கும் கூண்டின் அருகாமையில் பெரியதாக விளம்பர பலகை வைக்கபட்டிருந்தது. முதன்முறையாக அந்த கூண்டில் நடைபயிற்சிக்காக தினமும் பூங்காவிற்கு வரும் ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் உள்ளே நுழைந்தார். அவருக்கு கூண்டை பார்க்கும் போது அவரது அலுவலக அறை போன்று நினைவிற்கு வந்திருக்க கூடும்.

அவர் தரையில் இருந்து சற்று உயரமாக வைக்கபட்ட கூண்டிற்குள் போவதற்காக இரண்டு படிகள் ஏறி கூண்டின் கதவை திறந்து உள்ளே போன போது கதவு தானாக மூடிக் கொண்டது. மறுநிமிசம் மியமிங்மியமிங் என்ற சப்தம் உரத்து கேட்க துவங்கியது. நடை பயிற்சியில் இருந்தவர்கள், பூங்காவில் விளையாண்ட சிறுவர்களுக்கு திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். வங்கி அதிகாரி கூண்டிற்குள் இருந்தபடியே வெளியே பார்க்க ஆரம்பித்தார். அப்படி அவர் ஒரு நாளும் அந்த பூங்காவை கண்டதேயில்லை.

கூண்டிற்குள் இருப்பது ரொம்பவும் பாதுகாப்பாகவும் இயல்பாகவும் இருந்தது. அவர் கூண்டின் வலுவான இரும்புகம்பிகளை பிடித்தபடியே நின்று கொண்டிருந்தார். அவருக்கு தெரிந்த சிலர் நடைபயிற்சியின் ஊடாகவே அவரை பார்த்து சிரித்தபடியே போனார்கள். அவருக்கும் அவர்களை பார்த்து சிரிக்க வேண்டும் போலிருந்தது. கம்பியில் முகம்பதித்து கொண்டு அவர் வெளியே பார்த்து சிரித்தார். சிறார்கள் கூண்டின் அருகில் வந்து நின்றபடியே அவரை பார்த்து பரிகாசம் செய்தார்கள்.

வங்கி அதிகாரி கூண்டிற்குள்ளாகவே அங்குமிங்கும் நடக்க துவங்கினார். அப்போது அவரது செல்போன் அடிக்க துவங்கியது. போனில் பேசியபடியே அவர் நடந்து கொண்டிருப்பதை கண்ட ஒரு இளம் பெண் வியப்போடு அவருக்கு கையசைத்தபடியே போனாள்.

தான் கூண்டிற்குள் இருப்பது எப்படியிருக்கும் என்று தனக்கு தெரியாதே என்பதால் அவருக்கு திடீர் யோசனை உருவானது. அந்த பெண்ணை கைதட்டி அழைத்து தன்னை ஒரு புகைப்படம் எடுத்து தரும்படியாக செல்போனை நீட்டினார். அந்தப் பெண் கூண்டிற்குள் அவர் நிற்பதை புகைப்படம் எடுத்து தந்தாள். அதை பார்க்கும் போது அவருக்கே சிரிப்பாக வந்தது. இரண்டு மூன்று நிமிசங்களுக்கு பிறகு அவரது கால்கள் வலிப்பது போல இருந்தன.

கூண்டிற்குள்ளாக உட்கார்ந்து கொள்ளலாமா என்று பார்த்தார்.இருக்கைகள் எதுவும் இல்லை. எப்படி உட்காருவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். கடந்த இருபது ஆண்டுகளில் அவர் ஒரு முறை கூட தரையில் உட்கார்ந்ததேயில்லை. சரி உட்கார்ந்து பார்க்கலாமே என்று கூண்டின் தரையில் அவர் உட்கார முயன்ற போது கால் முட்டிகளில் வலி உருவானது. மண்டியிட்டு காலை மடக்கி ஒருவழியாக உட்கார்ந்து தன்னை நிலைபடுத்திக் கொள்ளும் போது கூண்டின் இசை நின்று கதவு தானே திறந்து கொண்டது. அவ்வளவு தானா என்றபடியே அவர் கூண்டினை விட்டு வெளியே இறங்கி நடக்க துவங்கினார். அன்றைக்கு வேறு எவரும் கூண்டிற்குள் ஏறி தன்னை அடைத்துக் கொள்ளவில்லை.

ஆனால் மறுநாள் பூங்காவிற்கு வழக்கமாக வரும் காதலர்கள் இருவர் கூண்டிற்குள் தங்களை அடைத்து கொண்டார்கள். இருவருக்கும் அது வேடிக்கையாக இருந்தது. அவர்களை தொடர்ந்து வணிகபிரதிநிதி ஒருவன், கிரிக்கெட் ஆடும் சிறுவர்கள் இரண்டு பேர் என்று பத்திற்கும் மேற்பட்டவர்கள் கூண்டிற்குள் அடைத்து கொண்டார்கள்.

ஞாயிற்றுகிழமை காலையில் முதன்முறையாக ஒரு குடும்பம் அந்த கூண்டிற்குள் ஏறி தன்னை அடைத்துக் கொண்டது. அது மிக வேடிக்கையானதாக இருந்தது. அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இரண்டு மகள்கள், ஒரு பையன் மற்றும் மகளின் கணவன் மற்றும் கைக்குழந்தை யாவரும் ஒரே நேரத்தில் உள்ளே ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏழாவது குறுக்குதெருவில் உள்ள அரசு குடியிருப்பில் இருப்பவர்கள் என்று பூங்காவின் காவலர் சொன்னார்.

நாற்பது வயதை கடந்த அந்த அந்த வீட்டின் பெண்மணி கூண்டினை தொட்டு தொட்டு பார்த்தபடியே நல்ல காற்றோட்டமாக இருக்கிறது. வெளிச்சம் கூட எப்படி சீராக விழுகிறது பாருங்கள் என்று கணவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கணவரோ வீட்டிலிருந்து ஏதாவது சமைத்து கொண்டுவந்திருந்தால் அதற்குள் உட்கார்ந்து சாப்பிடலாமே என்று ஆதங்கபட்டுக் கொண்டிருந்தாள்.

கூண்டிற்குள் அடைக்கபட்ட இரண்டு இளம்பெண்களும் கம்பிகளை பிடித்தபடியே வெளியே நடந்து செல்லும் இளைஞர்களை பார்த்து சிரித்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி கூண்டில் ஒரு கண்ணாடி மாட்டி வைத்திருந்தால் முகம் பார்க்க உதவியாக இருக்கும் என்று சலித்து கொண்டாள்.

சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்கள் அந்த பெண்களை பார்த்து சிரித்தார்கள். சிறுவனோ கூண்டின் இசையோடு சேர்ந்து மியமிங்மியமிங் என்று கத்திக் கொண்டிருந்தான். ஆறுநிமிசங்களுக்கு பிறகு அவர்கள் வெளியே வந்தபோது குடும்பத்துடன் ஒருவரை கைகளை தட்டியபடி ஆரவாரமாக கத்தினார்கள்.

அன்றைக்கு கூண்டிற்குள் தன்னை அடைத்து கொள்வதற்கு இருநூறு பேர்களுக்கும் மேலாக முன்வந்தார்கள். அது பூங்காவில் பெரிய வேடிக்கையாக இருந்தது. யார் எப்போது கூண்டிற்குள் போவார்கள். கதவு மூடப்பட்டவுடன் கூண்டிற்குள் என்ன செய்வார்கள் என்று வேடிக்கை பார்ப்பது சுவாரஸ்யமாக இருந்தது. இதற்காகவே பூங்காவிற்கு நிறைய கூட்டம் வரத்துவங்கியது.

கூண்டில் தங்களை தானே அடைத்துக் கொள்வதில் மக்கள் காட்டும் ஆர்வம் அதிகமானதை கண்டு அதை ஒழுங்குபடுத்தவதற்காக இரண்டு காவலர்கள் நியமிக்கபட்டிருந்தார்கள். அவர்கள் கூண்டிற்குள் போவதற்காக காத்திருப்பவர்களை வரிசையில் நிற்க செய்தார்கள். விடுமுறை நாட்களில் அந்த வரிசை பூங்காவை விட்டு வெளியே சாலை வரை நீண்டு போவதாக மாறியது.

முதன்முறையாக ஒரு வயதானவர் தன் வீட்டிலிருந்து மடக்கு நாற்காலி ஒன்றை கொண்டு வந்து கூண்டிற்குள் போட்டு உட்கார்ந்து கொண்டு நாளிதழ் படித்தார். தன் உடலை செம்மை படுத்துவதில் ஆர்வம் கொண்ட நடுத்தரவயது ஆண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பாக கூண்டிற்குள்ளாகவே யோகா செய்ய ஆரம்பித்தார்.

புதிதாக திருமணம் ஆன கணவன் மனைவி இருவரும் மதிய உணவிற்கு பிறகு கூண்டிற்குள் வந்து உட்கார்ந்து கொண்டு சீட்டாடினார்கள். அந்த பகுதியின் வார்டு கவுன்சிலர் தன்னுடைய விசுவாசிகள், நண்பர்கள் என கூண்டில் இடமில்லாமல் நெருக்கடி ஏற்படும் அளவு நாற்பத்தி ஆறு பேர்களுடன் கூண்டினுள் தன்னை பூட்டிக் கொண்டார். அவரிடம் கூண்டிற்குள் குடிநீர் இணைப்பு குழாய் ஒன்று பொருத்தபட வேண்டும் என்பதற்கான புகார் மனு அளிக்கபட்டது. அடர்ந்த தாடி கொண்ட ஒரு இருபது வயதை கடந்த இளைஞன் கூண்டிற்குள் சென்றதும் சுருண்டு படுத்து நிம்மதியாக உறங்க துவங்கினான்.

வரலாற்று பேராசிரியர் ஒருவர் அது கடந்த கால நினைவுகளுக்குள் நம்மை அழைத்து செல்வதாகவும், குற்றவாளிக்கூண்டுகள் அமைப்பதை பற்றி மதுராந்தகத்தில் ஒரு சோழர்கால கல்வெட்டு இருப்பதாகவும் உடன் வந்த ஆய்வுமாணவர்களிடம் தெரிவித்தார்.

பூங்கா இரவு பதினோறு மணி இதற்காகவே திறந்து வைக்கபட்டிருந்தது. நகரின் பல்வேறு பகுதியில் இருந்து கூண்டில் தன்னை அடைத்துக் கொள்வதற்காக மக்கள் பயணம் செய்து வந்து பூங்கா திறக்கும் முன்பாகவே காத்திருந்தார்கள்.

இரண்டு தினங்களுக்கு முன்பாக நூறடி சாலையில் உள்ள ஒரு உணவகத்தை நடத்துகின்றவர் அந்த கூண்டினை பார்வையிட்டு அதை உருவாக்குவதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்று விசாரித்து கொண்டிருந்தார். பூங்காவில் காவலர் தனக்கு தெரியவில்லை என்றபோது அந்த கூண்டின் அருகாமையில் தான் ஒரு துரித உணவகபிரிவை துவங்குவதற்கு யோசனையிருக்கிறது என்று சொன்னார். பூங்கா காவலனும் அது மிக அவசியமாக ஒன்று வரிசையில் நிற்பவர்கள் சில நேரம் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள் என்று சொன்னான்.

கூண்டின் பாதுகாப்பிற்காக வந்திருந்த சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை ஒருமுறை கூண்டில் அடைத்துக் கொண்டார். அவருக்கு கூண்டு அவ்வளவு பெரியதாக இருப்பதில் உடன்பாடில்லாமல் இருந்தது. நடக்க இடமில்லாமல் தலைமுட்டும்படியாக அடைக்கபடும் போது தான் கூண்டின் முக்கியத்துவம் தெரியும் என்று அலுத்துக் கொண்டார்.

பல நேரங்களில் மக்கள் வரிசையில் நின்றும் கூண்டுகாலியாக கிடைக்காமல் போவதால் கூண்டிற்குள் அடைக்கபடும் நேரத்தினை மூன்று நிமிசமாக மாற்றி உத்திரவிட்டது அரசு. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடைபயிற்சியில் வரும் சில பணம்படைத்தவர்கள் தனியாக தங்களது வீடுகளில் அது போன்ற கூண்டுகளை தாங்களே வடிவமைப்பு செய்து உருவாக்கி கொண்டார்கள்.

காதலர்கள், கஞ்சாபுகைப்பவர்கள், குடுபத்தவர்கள், அரசியல்வாதிகள், சாதாரண மக்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் என்று அந்த கூண்டு ஒய்வில்லாமல் கத்திக் கொண்டேயிருந்தது. அந்த கூண்டினை பற்றிய சிறப்பு கட்டுரையை நாளிதழ்கள் வெளியிட்டன .இரண்டு நாட்களின் முன்பாக அந்த கூண்டிற்குள் தொலைகாட்சி ஒன்றின் நேரடி நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஏன் தங்களை கூண்டில் அடைத்துக் கொள்கிறார்கள் என்பதை பற்றி ஒவ்வொருவரும் ஒரு பதில் சொன்னார்கள்.

இப்படியாக காட்சிக்கூண்டு அதிமுக்கியத்துவம் அடைய துவங்கியதை கண்டு மாநகராட்சி நகரின் அத்தனை பூங்காங்களிலும் இது போன்ற கூண்டுகளை உருவாக்கும் புதிய திட்டம் ஒன்றை கொரிய அரசின் ஒத்துழைப்போடு உருவாக்க திட்டமிட்டது.

ஆறுமாதங்களில் நகரில் புதிது புதிதாக நூற்றுக்கும் மேற்பட்ட கூண்டுகள் திறக்கபட்டன. இந்த கூண்டுகளில் வெறுமனே ஒலிபரப்பாகும் இசைக்கு பதிலாக தங்களது விளம்பரங்களை ஒலிபரப்பலாமே என்று பன்னாட்டு குளிர்பான நிறுவனம் முன்வந்த பிறகு கூண்டுகளின் நிறம் மற்றும் வடிவம் புத்துருவாக்கம் கொள்ள துவங்கின.

மாநகரில் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்சிக் கூண்டுகள் இருப்பதாகவும் அதன் விளம்பர வருமானம் பதினெட்டு கோடி என்றும் மாநகராட்சி பெருமையாக அறிவித்தது. ஆனால் இதுவரை ஒருவர் கூட கூண்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேயில்லை என்பதோடு யார் இந்த யோசனையை உருவாக்கியது என்பது குறித்தும் அறிந்து கொள்ளவேயில்லை.

மனவருத்தம் தீராத நாற்பது வயது மனிதன் ஒருவன் ஒரு இரவில் பூங்காவில் நுழைந்து அந்த கூண்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். அதன் காரணமாக நகரில் உள்ள அத்தனை கூண்டுகளுக்கும் உற்றுநோக்கும் கேமிரா பொருத்தபட்டது. அதை கண்காணிக்கும் அலுவலகம். அதற்கான பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், சோதனை அதிகாரிகள், என்று தனித்துறை உருவானது.
நாளடைவில் மக்களுக்கு சலித்து போக ஆரம்பித்தது. எவரும் கூண்டில் ஏறி தன்னை அடைத்துக் கொள்ளவில்லை. மெல்ல புறக்கணிப்பின் கரங்கள் அதை பற்றிக் கொள்ள மழை வெயிலில் துருவேறிய கூண்டு கவனிப்பாரற்று போக துவங்கியது.

ஆனால் அரசின் கூண்டு பராமரிப்பு துறையோ தன் உயர் அலுவலர், கண்காணிப்பாளர், பணியாளர்கள், பாதுகாவலர்கள் என்று ஆயிரக்கணக்கான ஆட்களுடன் இன்றைக்கும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. யாரும் அதை பற்றி சிறு குறை கூட தெரிவிக்கவில்லை என்பதே அதன் சிறப்பம்சம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *