கருவ மரம் பஸ் ஸ்டாப்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 9,683 
 
 

என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரத்திலிருக்கும் கல்லூரிக்கு சென்று வரும் எனக்கு, குறிப்பாக ஒரேயொரு பேருந்து நிலையத்தை மாத்திரம் மறக்கவே இயலாது. ஆம்! அதுதான் அந்த ‘கருவ மரம் பஸ் ஸ்டாப்’. தினமும் கல்லூரிக்குச் செல்லும் எனக்கு தவறாமல் என் தந்தை பத்து ரூபாய் கொடுப்பது வழக்கம். பேருந்து பயணச்சீட்டு ஆறு ரூபாய் போக மீதி நான்கு ரூபாய் எனக்கு மிச்சம். கல்லூரி முடிந்து மாலை நேரம், சில நேரங்களில் நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் மற்றும் வடை சாப்பிட்டாலும் இரண்டு ரூபாயாவது மிஞ்சும். இப்படி மாதம் முழுவதும் மிஞ்சும் பணத்தை வைத்துப் போட்ட மூலதனத்தில் அறிமுகமானவர்கள்தான் கவிஞர் மீரா தொடங்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், மு.மேத்தா, நா.காமராசன், மாக்சிம் கார்க்கி, கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ், வைரமுத்து, கல்யாண்ஜி, பாமரன், இராகுலதாசன், டாக்டர் வ.தேனப்பன், ஊடி வயலார், கவிஞர் கண்ணதாசன், டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி, அறிவுமதி, சுப.வீரபாண்டியன், பா.ராகவன் என கவிஞர் மதுமிதா வரை எனக்குப் பரிச்சயம். இப்படியாக சென்று கொண்டிருந்த என் கல்லூரி வாழ்க்கையில் தேவகோட்டை பேருந்து நிலையத்தில், காலையில் வந்திறங்கியவுடன் தினமும் தவறாமல் ஒருவரைச் சந்திப்பேன். என்னைப் பார்த்தவுடன் அவர் புன்முறுவலுடன் எனக்கு வணக்கம் வைப்பார். நானும் வணக்கம் வைப்பேன். உடனே என்னையறியாது என் கைகள் எனது சட்டைப்பைக்குள் செல்லும். கட்டாயம் அவருக்கென வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயம் யாருமறியாது அவரின் கைக்குள் கைமாறும். அடிமனதிலிருந்து திரும்ப ஒரு நன்றி சொல்லிவிட்டு கைகளாலேயே நடந்து அடுத்த பக்கம் சென்று விடுவார். ஆம்! அவருக்கு கால்கள் இரண்டும் போலியோவால் பாதிக்கப்பட்டு, சுட்டெரிக்கும் தார் ரோட்டில் கைகளாலேயே நடந்து செல்லும் மாற்றுத் திறனாளி நண்பர் முருகேசன். இப்படித்தான் எங்கள் பந்தம் பல வருடங்கள் தொடர்ந்தன.

Imageஒருமுறை கல்லூரி மதியமே விடுமுறை அறிவிக்க, கட்டாயமாக நண்பர்களுடன் திரைப்படத்திற்குச் செல்லும் நான், ஏதோ ஒரு முக்கிய விசயத்துக்காக வீட்டுக்கு விரைந்தேன். வழக்கமாகச் செல்லும் பேருந்து மாலைதான் வரும். வேறொரு பேருந்தைப் பிடித்து வீடு செல்லவேண்டும் என்ற வேகத்தில் விரைந்தேன். எனது நண்பர் முருகேசனைச் சந்தித்த நான், எப்போதும்போல் என் சட்டைப்பைக்குள் கை விட்டேன். எடுத்தேன், அவசரத்தில் வந்ததைக் கொடுத்தேன். வழக்கத்துக்கும் மீறிய புன்முறுவல் என் நண்பர் முருகேசனிடம். பிறகுதான் தெரிந்தது அது ஒரு ரூபாய் அல்ல, ஐந்து ரூபாய் நாணயம். ஒரு வழியாகப் பேருந்தில் ஏறி நின்று கொண்டேன். “சீட்டு வாங்கணுமா? வண்டில யாரும் சீட்டு வாங்கணுமா?” நடத்துனர் முன் பக்கத்திலிருந்து பயணச்சீட்டு கேட்டுக்கொண்டே நெருங்குகிறார். நான் சட்டைப் பைக்குள் கை விடுகிறேன். தூக்கி வாரிப் போட்டது. பேண்ட் பைக்குள் கை விடுகிறேன்…. மீண்டும் அதிர்ச்சி. பேருந்து காற்றைக் கிழித்துக்கொண்டு சென்ற போதும் என் உடல் முழுவதும் வியர்வை. பேருந்தில் கிட்டத்தட்ட என்னைச் சேர்த்து மூன்றோ அல்லது நான்கு பேரோதான் நின்று கொண்டிருக்கிறோம். இன்று பார்த்து ஏராளமான வயதுப் பெண்கள் பேருந்தில் அமர்ந்து இருப்பதாகத் தெரிகிறது. திகைத்துப் போகிறேன். காரணம், ஒரு நயா பைசாகூட என்னிடம் இல்லை. இது எப்படி நடந்தது? சத்தியமாய்த் தெரியவில்லை. “என்ன செய்வது? யாரிடம் கேட்பது? அந்தப் பேருந்தில் ஓட்டுனர், நடத்துனர் உட்பட எனக்குத் தெரிந்த முகங்கள் யாருமே இல்லை. வழக்கமாய் போகும் பேருந்து என்றாலும் ஒரு வழியாய் சமாளிக்கலாம். அட கடவுளே! அவமானமாய்ப் போய்விடுமே!” கிட்டத்தட்ட நடத்துனர் எனக்கு அருகாமையில் வந்து பயணச்சீட்டு கொடுத்துக்கொண்டுள்ளார். “கருவ மரம் பஸ் ஸ்டாப் எந்திரிச்சு வாங்க”, சீட்டு வாங்கணுமா? யாராச்சும் சீட்டு வாங்கணுமா?”. கசக்கிப் பிழிகிறது என் அடிவயிறு. எனக்கு அடி வயிறு இருப்பதை அன்றுதான் உணர்கிறேன். அப்படியொரு மரண வேதனை. “காசு இல்லாம ஒனக்கெல்லாம், பேண்ட், சட்டை. அதுல வேற இன்-பண்ணிருக்கே, கீழ எறங்குடா வெண்ணெ” என்று யாரோ திட்டுவதாக என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

“டமார்!! ஓ…ஓ… பாத்து… பாத்து, ஏய்.. ஏய்.. என்னாச்சுப்பா… என ஆங்கங்கே சத்தம். நான் மேலே பிடித்திருந்த கம்பியை மீறி, நடத்துனர் மீது பலமாக இடித்து, அவர் நிலை தடுமாறி, ஒரு வழியாய் சுதாரித்துப் பார்த்ததில், பேருந்து கிட்டத்தட்ட பக்கத்தில் இருக்கும் வயலில் தலைகீழாக விழும் தருவாயில் நின்று கொண்டிருந்தது. “எல்லாரும் சீக்கிரம் எறங்குங்க, எறங்குங்க….” ஒரே இறைச்சல், சத்தம்… எதிரே வந்த லாரி பேருந்து மீதி மோதி, லாரி ஓட்டுனர் இறங்கி ஓடிவிட, அனைவரும் கீழே இறங்கினோம். நெற்பயிர் வளர்ந்து கதிர்களோடு சேறும், சகதியுமாய் இருந்த அந்த வயலுக்குள் அனைவரும் இறங்கி, ஒரு வழியாக சாலையோரம் வந்தால்…. சரியாக அந்தக் கருவ மரம் பஸ் ஸ்டாப். யாருக்கும் எந்தக் காயமும் இல்லை. பேருந்து கண்ணாடி உடைந்து நொறுங்கி, முன்புறம் சேதமடைந்திருந்தது. எல்லோரும் கருவ மரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தோம்.

எனக்கு தலை சுற்றியது. இந்த விபத்து எனக்காகவே நடந்ததோ! எனக்குள் ஓராயிரம் கேள்விகள்….. “சரி, பேசாமல் மாலை வரும் எனது வழக்கமான பேருந்திலேயே சென்று விடுவோமா?” என நினைக்கிறேன். விபத்து நடந்தும், யாருக்கும் எதுவும் நடக்கவில்லையே என்ற திருப்தி ஒருபுறம் இருந்தாலும்…. என்னிடம் காசு இல்லாமல் போனதற்கும், என் நண்பர் முருகேசனுக்கும், அந்தக் கருவமரம் பஸ் ஸ்டாப்பிற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகவே நான் உணர்ந்தேன். இதற்கிடையில் இரு புறமும் பேருந்து செல்ல இயலாத சூழல்…. வந்த பேருந்து அனைத்தும் வந்த வழியே திரும்பி வேறு வேறு வழியில் செல்லத் தயாராகிக்கொண்டுள்ளன. கிட்டத்தட்ட நான் மட்டுமே அந்தக் கருவமரம் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கிறேன். நான் போக வேண்டிய திசையில் வந்த ஒரு பேருந்து திரும்புவதற்காக நடத்துனர், ஒருவர் கீழே இறங்கி “வரலாம் வா… வரலாம், வரலாம் வா… வரலாம், என விசிலடிக்கும் சத்தம். “நம் நிலைமை இப்படியாகிவிட்டதே! ‘நீயே பிச்சையெடுக்கிற நிலையில இருக்கிற, இதுல வெட்டிப் பந்தா வேற… அஞ்சு ரூவாயா போடுறே, மவனே அஞ்சு ரூவா… ஒரு ரூவாதாண்டி ஒனக்கு லிமிட்டு, இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல” என என்னை யாரோ திட்டுவதாக எனக்குத் தோன்றியது. விசிலடிக்கும் நடத்துனரைப் பார்க்கிறேன். திடீரென ஒரு மகிழ்ச்சி. அவர் எனக்குத் தூரத்துச் சொந்தம் என என் தந்தை ஒருமுறை எப்போதோ அந்தப் பேருந்தில் வரும்போது அறிமுகம் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட திரும்பி, கிளம்பி விட்ட பேருந்தை தலை தெறிக்க ஓடிப்போய், விரட்டிப் பிடித்தே விட்டேன். பேருந்தில் நல்ல இடம் பார்த்து நின்று கொண்டேன். மீண்டும் நடத்துனர்…. அருகே பயணச்சீட்டு கேட்டுக்கொண்டே வருகிறார். நான் அவரைப் பார்த்து அசடு வழியாத குறையாய் சிரிக்கிறேன். “என்ன தம்பி நல்லாருக்கியளா? அப்பா எப்படி இருக்காரு? என்ன, இன்னிக்கி சீக்கிரமே வந்துட்டியே, காலேசு லீவா?” என ஒரே மூச்சில் கேட்டு முடித்தார். “ம்ம்.. நல்லாருக்கேன், நான் வந்த ஆர்.பி.எஸ். பஸ் ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு, அதான்…” என இழுத்தேன். உடனே அவர் என் பஸ் நிறுத்தத்திற்கான பயணச்சீட்டைத் தந்தார். நான் என் சட்டைப்பைக்குள் கையை விட்டேன். “அட சும்மா வைய்ங்க…..” என்றார். எனக்கு மீண்டும் தலை சுற்றியது. சட்டைப்பையும், பேண்ட் பையும் காலி என்பது அவருக்கெங்கே தெரியப் போகிறது. ஆனாலும், ஏதோ… அந்தக் கணத்தில், எனக்குள் தோன்றிய எண்ணங்கள், கேள்விகள், தற்காலிக திருப்தி….. இவை என்றுமே எனக்குள் அழிக்க முடியாத அற்புதமான நினைவுகள். சில மணித்துளிகளுக்கு முன் நான் அந்தக் ‘கருவ மரம் பஸ் ஸ்டாப்’பின் அடியில் நிற்கும்போது தோன்றிய எண்ணங்களுக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத இந்த நினைவுகள் நிரந்தரமானவைகளா? அப்போது, எனக்கு எதுவும் தெரியாது. நான் செய்த ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் தர்மம், ஓர் அற்பக் காரியமானாலும்….. “தர்மம் தலை காக்கும்” என கர்ணன் ரேஞ்சுக்கு கற்பனையில் மிதந்ததென்னவோ உண்மைதான்.

இன்றும் நான் என் சொந்த ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள அந்த “கருவ மரம் பஸ் ஸ்டாப்”பில் ஒரு இரண்டு நிமிடங்களாவது நின்று விட்டுச் செல்வது வழக்கம். நான் தவறாது கருவ மரத்தைப் பார்க்கிறேன். ஆனால், என் நண்பர் முருகேசனை இன்றுவரை சந்திக்கவே இல்லை. பேருந்து நிலையத்தில் பூக்கடை அக்கா முதல், பழக்கடை ராசேந்திரன் வரை அனைவரிடமும் விசாரித்து விட்டேன். என் நண்பர் முருகேசன் பற்றி இன்றுவரை எந்தத் தகவலும் இல்லை. “நண்பரே! நீங்கள் எங்கிருந்தாலும், சகல சவுகரியங்களோடு, நலமாய், வளமாய் வாழ வேண்டும் என்பதுதான் எனது தீராத ஆசை. கடவுள் என்ற ஒருவன் உண்மையிலேயே இருந்தால், இனி…. ஒரேயொரு முறை உங்களைச் சந்தித்து, மனமாற கட்டியணைத்து…. முத்தமிட்டு நாம் இருவரும் ஒன்றாய்…. ஒரே உணவு விடுதியில் சமமாய் அமர்ந்து…. வயிறார சாப்பிடும் வரம் ஒன்று வேண்டும்….. அந்த வாய்ப்பை எனக்குத் தருவீர்களா?…. அதுவே எனது தீராத ஆசை. முருகேசா….. நீங்கள் எங்கேயோ நலமாக இருக்கிறீர்கள் என்பது மட்டும் எனக்குள் தெளிவாய்த் தெரிகிறது. நண்பா…. ம்ம்….ப்ச்ச்…. நான் இழுத்து விடும் பெருமூச்சு என் நண்பனுக்கு அவசியம் கேட்கும்….. நீ வாழ்க! நலமோடும், வளமோடும் வாழ்க!! இனி அடுத்த முறை செல்லும்போது குறைந்த பட்சம் அந்தக் கருவ மரத்தைத் தவறாது கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றுவதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

‘கருவமரம் பஸ் ஸ்டாப் எந்திரிச்சு வாங்க….. போலாம் ரைட்……’ இன்னும் அந்தக் குரல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

– மார்ச் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *