கருவே கதையானால்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 8,056 
 
 

வளையல்களும், கொலுசும் குலுங்கும் சப்தம். ஐந்து மாதங்களுக்குமுன் ஒரு புள்ளியாக உதித்திருந்த நான் இருந்த இருட்டறைக்குள் அவ்வொலி கேட்டு விழித்தேன்.

அம்மாவின் உணர்ச்சிப் பெருக்கு என்னையும் பிடித்துக்கொள்ள, உருள ஆரம்பித்தேன் — எப்போதையும்விட பத்து மடங்கு வேகமாக.
யாரோ என்னை இடிப்பதுபோல் இருந்தது. எனது குட்டி வாயைத் திறந்து, `அம்மா!` என்று கத்தினேன்.

என் கத்தல் தன் காதில் விழாது போனாலும், என்னைத் தன்னுள்ளே சுமந்திருந்தவளும் `அம்மா!` என்ற உரக்க அழைத்தாள் — தன் தாயை.

ஏன் எல்லாரும் இப்படி என்னை அழுத்துகிறார்கள்? என் செவியில் விழும் எந்த சப்தமும் விரும்பத் தக்கதாக இல்லை.

கட்டைக் குரலில் யார் யாரோ அம்மாவை மிரட்டுகிறார்கள், அடிக்கிறார்கள்.

என்னை மிதித்து துவம்சம் செய்யப் பார்க்கிறார்கள்.

அம்மா ஏன் இதையெல்லாம் தாங்கிக் கொள்கிறாள்?

எனக்குப் பல விஷயங்கள் புரிவதில்லை.

`ஓய்வு, ஒழிச்சல் இல்லாம எவனாவது வந்துக்கிட்டே இருக்கான்!` என்று யாரிடமோ அம்மா அலுத்துக் கொள்வது கேட்டது.

`ஆண்` என்றாலே கட்டைக் குரலுக்குச் சொந்தக்காரன், பிறரைத் துன்புறுத்துவதில் இன்பம் காண்பவன் என்று எனக்கு அப்போதே தெரிந்து போயிற்று. அவர்களின் உருவம் எப்படி இருக்கக் கூடும் என்று பு¡¢யுமுன், அந்த இனத்தின்மேல் வெறுப்பு பொங்கியது.

`இந்தச் சனியன் வேற! ஓயாம, உருண்டு, பெரண்டுகிட்டு இருக்கு!`

அம்மா என்னைத்தான் குறிப்பிடுகிறாள் என்று பு¡¢ந்தது. கவனமாகக் கேட்டேன்.

`பொறந்ததுமே இதை எங்கேயாவது தூக்கிப் போட்டுடப் போறேன்!`

எனக்கும் ஆத்திரம் வந்தது. நானா உன் வயிற்றுக்குள் வலியவந்து புகுந்தேன்?

ஆணோ, பெண்ணோ, நான் வாழப்போகும் உலகத்தில் எவரையுமே நம்ப முடியாது, நம்பவும் கூடாது என்பது புத்திசாலித்தனமாக அத்தருணத்தில் நான் எடுத்த முடிவுதான்.

“தாமஸ் புத்திசாலிதான். ஆனா, எதிலேயுமே ஒரு ஆர்வமோ, அக்கறையோ இல்லே. மத்தவங்களோட சேர்ந்து பேசறது, விளையாடறது எதுவுமே கிடையாது”.

என் அசாதாரண போக்கினால் குழம்பிய பள்ளி ஆசி¡¢யர் என் தாயை வரவழைத்து, குற்றப் பத்திரிகை படிக்கும்போது எனக்கு வயது பத்து.

உதடுகளை இறுக்கி, முகத்தின் ஒரு பக்கத்தில் நீட்டினேன், இருவரையும் முறைத்தபடி. சினிமாவில் வரும் வில்லன்களின் இந்த முகபாவம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

“நான் சமையல் வேலை செய்யற அனாதை ஆசிரமத்திலேருந்து இவனை எடுத்து வளக்கிறேங்க. நானோ விதவை. வீட்டிலே ஒரு ஆம்பளைத் துணையோ, கண்டிப்போ இல்லாம..” அதன்பின் அவள் பேசியதெல்லாம் எனக்கு வேண்டாதது.

இந்த அம்மா என்னைப் பெற்றவள் இல்லையா?

என்னைச் சுமந்தபின், `வேண்டாம்` என்று யாரோ ஒருத்தி குப்பைத் தொட்டியிலோ, கழிப்பறையிலோ வீசியிருந்த என்னை பொறுக்கிக் கொண்டவளா?

மணியோ, கண்ணாடிச் சில்லுகளோ, எதுவோ குலுங்கும் ஓசை எனக்குள் கேட்டது. தலையின் இருபுறங்களையும் அழுத்திப் பிடித்துக் கொண்டேன். இல்லாவிட்டால், தலை வெடித்துவிடும்போல் இருந்தது.

`நான் ஏன் இப்படி யாருக்குமே வேண்டாதவனாக இருக்கிறேன்?` என்ற வருத்தம் திரண்டு எழுந்தது.

வருத்தம் வீறாப்பாகியது. யாரோ, ஏதோ செய்ததற்கு நான் ஏன் வருந்த வேண்டும்?

இருக்கட்டும், எனக்கும் காலம் வராமலா போய்விடும்! அப்போது காட்டுகிறேன் நான் யாரென்று.

கூடவே ஒரு பயமும் எழுந்தது. தனியனாக இருந்து நான் எதைச் சாதிக்க முடியும்?

அதனால்தான், “டேய் தோம! எங்களோட வர்றியா?” என்று என் பெயரைச் செல்லமாகச் சுருக்கி அழைத்து, என்னைவிடப் பொ¢ய பையன்கள் கூப்பிட்டபோது, அவர்களுடன் நடந்தேன். தலையை நிமிர்த்தியபடி. `எங்கே?` என்று கேட்கக்கூடத் தோன்றவில்லை. என்னையும் ஒரு பொருட்டாக மதிக்க ஆளில்லாமல் போகவில்லை. அவர்களைவிட நான் சற்று உயரமாக இருந்தது வேறு பெருமையாக இருந்தது.

`நான் பிறவி எடுத்தது இதற்குத்தான்!` எனது புதிய நண்பர்களுடன் சேர்ந்து, சில பயந்தாங்கொள்ளிகளை அடித்து, அவர்களிடமிருந்த சொற்ப பணத்தைப் பிடுங்குகையில், உடலில் புதிய ரத்தம் ஓடுவதுபோல் இருந்தது.

வயதுக்கு மீறிய என் உடல்வாகு மேலும் வளர்ந்தது — வாழ்விலேயே முதன்முறையாக என்னை ஏற்ற நண்பர் குழாத்துடன் குடிக்க ஆரம்பித்ததும். பதினோரு வயதில் பதினாறு வயதுப் பையன்போல் இருந்தேன் என்று நண்பர்கள் புகழ்ந்தார்கள்.

ஆனால், வீடு திரும்பும்போது, தலையில் சூடேறி, வெடித்துவிடும்போல இருக்கும். பேசாமல் போய் படுத்துத் தூங்கிவிடுவேன். நல்லவேளை, அம்மாவுக்குச் சந்தேகம் எழவில்லை. `பிறவியிலேயே யாருடனும் ஒட்டாத குணம்! தனிமைதான் இவனுக்குப் பிடிக்கும்,` என்று அலட்சியமாக இருந்தது எனக்குச் சாதகமாகப் போயிற்று.

இப்போதெல்லாம் நான் முன்புபோல தனிமையை நாடவில்லை. நானும் ஒரு கூட்டத்தின் அங்கம் என்பதே பெருமையாக இருந்தது. எங்கள் பள்ளி மாணவர்கள் என்னைப் பார்த்து நடுநடுங்கியது எனது பலத்தை அதிகா¢க்கச் செய்தது.

எங்களுக்கு பதினாறிலிருந்து இருபது வயதுதான் அப்போது. எங்கள் தலைவருக்கோ எங்கள் அப்பாவாக இருக்கக்கூடிய வயது. இருந்தாலும், எங்களை சமமாக மதித்து, ரொம்ப அருமையாகப் பேசுவார். தான் காவல்துறையின் கண்ணில் எப்படியெல்லாம் மண்ணைத் தூவி விடுகிறோம் என்று, சீனம் மாதிரி ஒலித்த மலாயில், அவர் வர்ணிப்பது கேட்டு விழுந்து விழுந்து சிரிப்போம்.
பத்து பேர் அவருக்கு மிகவும் உகந்தவர்களாக இருந்தோம். மாதாமாதம் சந்தா செலுத்த வேண்டும். அத்தகைய அஞ்சாநெஞ்சரைத் தலைவராகப் பெற எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கலாமே! பத்து வெள்ளி என்ன பிரமாதம்!

பள்ளியில் `பசை`யுள்ள மாணவர்களின் தலையில் சுருக்குப் பையைக் கவிழ்த்து, கழுத்தில் இறுக்கி விடுவேன்.

கட்டொழுங்கு ஆசி¡¢யா¢டம் அவர்கள் அடையாளம் காட்டிவிட்டால்? யாரால் அடி வாங்கிச் சாக முடியும்!

பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, ஒரே ஓட்டம்தான்.

இதெல்லாம் சின்ன விஷயம். மீசை முளைத்ததும், தலைவர் சித்தம் எங்கள் பாக்கியம் ஆயிற்று. நாங்கள் மூன்று பேராகச் சேர்ந்துகொண்டு, யார் யாரையோ அடித்தோம் — அவர்களிடமிருந்து ஏதாவது தகவலைக் கறக்க. பின்பு, அது தேவைப்பட்டவருக்கு விற்கப்பட்டது. சிலருடைய `கதை`யையே முடித்திருக்கிறேன்.

மூன்று முறை!

தெரியுமா?

எங்களுடைய விசுவாசத்தால் `பொ¢ய மண்டை` பணக்காரராக ஆனார். கந்து வட்டிக்கு பணத்தைக் கடனாகக் கொடுத்தார். எங்களால் அவரடைந்த லாபத்தை நான் பொ¢தாகப் பாராட்டவில்லை. அதனால் என்ன? உற்ற தோழனாக என்னை ஏற்று, ஒவ்வொரு இரவுப் பொழுதும் அவர் பக்கத்திலேயே உட்காரவைத்து, பியர் குடிக்கச் செய்து, டிஸ்கோவுக்கு எல்லாம் அழைத்துப் போனது இவர் மட்டும்தானே!

ஒவ்வொரு முறையும் யாரையோ அடிக்கும்போதோ அல்லது தீர்த்துக்கட்டும்போதோ, அந்தக் கண்களில் தெரியும் பயம் இருக்கிறதே, அந்த சுகத்தை அனுபவிக்க எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த மனித இனமே இடியோடு ஒழிந்தாலும் என் ஆத்திரம் தீராது.

ஒரு புல் பூண்டு விடாமல் ஒழித்திருப்பேன் — போலீசிடம் சிக்காதிருந்தால்.

“யாருடா ஒங்க பெரிய மண்டை?” என்று அவர்கள் என்னை எவ்வளவு சித்திரவதை செய்தபோதும் நான் மூச்சு விடவில்லையே! அவ்வளவு தூரத்துக்கு இழிந்து விடவில்லை.

அவர் எந்த வினாடியும் வந்து என்னைத் தன்னுடன் வெளியே அழைத்துப் போவார் என்று காத்துக்கொண்டே இருந்தேன்.

`வரவே மாட்டார்` என்று திட்டவட்டமாகப் பு¡¢ந்தபோது, மீண்டும் வளை, கொலுசு சத்தம் கேட்டது என் தலைக்குள். வலி தாங்காமல், நெற்றியைச் சிறைக்கம்பியில் முட்டிக்கொண்டேன்.

அம்மாதான் வந்திருந்தாள் நீதிமன்றத்துக்கு. `இவனுக்கு மனநிலை சா¢யில்லை` என்று என் தரப்பு வக்கீல் வாதாடியபோது, சிரிப்புதான் வந்தது.

`திட்டமிட்டு பல கொலைகள் செய்தவன்` என்று எனக்கு ஆயுள் தண்டனை விதித்தார்கள்.

“ஐயா, ஜட்ஜ் அவர்களே! எனக்குத் தூக்குத் தண்டனை கொடுங்கள்!” என்று கத்தினேன்.

கைகால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நான் அம்மாவைக் கடந்து செல்லும்போது, “நான் எங்கே தப்பு செய்தேன்னு தெரியலியேடா, ராசா!” என்று அழுதபடி என் கன்னத்தைத் தடவக் கையை உயர்த்தினாள். முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.
யாருக்கு வேண்டும் அன்பும், பா¢வும்?

போதும், தலைவா¢ன் தலைவன் என்று நம்பி, ஒரு ஏமாற்றுக்காரனின் பசப்பில் நான் சீரழிந்தது போதும்.

சிறைச்சாலையில் குற்ற நிபுணர்களுக்கு ஒரு அபூர்வ பாடமாக அமைகிறேன்.

`உன் தாய் உன்னை அடித்ததே கிடையாதா!` என்று ஆச்சா¢யப் படுகிறார்கள்.

எதனால் இப்படி ஒரு கொடூரமான குணம் எனக்குள் பதிந்தது என்று ஆராய, ஹிப்னாடிசம்வழி என் ஆழ்நினைவுகளை தாயின் வயிற்றுக் கருவாக இருந்த நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

`இவனுடைய ஆத்மா இந்த உலகத்துக்கு வருவதற்குள், சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்துவிட்டது. உள்மனதில் படிந்த பயம் இப்போது எல்லோரையும் பயப்பட வைப்பதில் இன்பம் காண்கிறது!` என்று ஏதேதோ பேசுகிறார்கள், என்னை வைத்துக்கொண்டே.

இனி எனது நிரந்தர இருப்பிடம் மருத்துவமனைதான், சிறை இல்லை என்று மேல் கோர்ட்டில் முறையீடு செய்யப் போகிறார்களாம்.
எனக்கு ஒன்றுதான் பு¡¢கிறது:ஆஸ்பத்தி¡¢யிலிருந்து தப்பிப் போவது எளிது.

வெளியில் போய், நான் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள் இரண்டு.

ஒன்றுமறியாத பாலகனாக இருந்த என்னைத் தன் சொந்த லாபத்துக்காக இப்படி ஒரு குற்றவாளியாக மாற்றினானே அந்த மண்டை, அவன் கற்றுக் கொடுத்த பாடத்தை அவன் முடிவுக்கே பயன்படுத்தப் போகிறேன்.

இரண்டாவது வேலை என்ன தெரியுமா? என்னைத் தந்தவளையும், அத்துடன், காசுக்கு சிறிது நேரம் அவளுடைய உடலில் சொந்தம் கொண்டாடி, அவளுடன் சேர்த்து என்னையும் கொடுமைப் படுத்திய கேடுகெடுகெட்டவர்களையும் ஒழித்துக் கட்டப் போகிறேன்.

இனி பிறக்கப் போகும் குழந்தைகளாவது என்னைப்போல் இல்லாது பிறக்கட்டும்.

(நயனம், 2000. வலைத்தமிழ், வல்லமை)

Print Friendly, PDF & Email

1 thought on “கருவே கதையானால்

  1. மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *