கதைக்க முடியாத கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 1,909 
 
 

(1990 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த மாலை நேரம், குரங்குகை மாலையாக கசங்ககிக் கொண்டிருந்தது.

குமுதினியின் அறைக்குள் ஒவ்வொருத்தியாக வந்து உட்கார்ந்தார்கள். கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகள் இருப்பதுபோல் அந்த மாணவிகளும், பல்வேறு வண்ணத் தோரணங்களாய் வந்தார்கள். ஒரே கூட்டம். அந்த மகளிர் கல்லூரி விடுதியிலும் ஒருதொலைக்காட்சிப்பெட்டி இருந்தது. ஆனால், அது ஒட்டை உடைசல், குமுதினியிடமோ அழகான வண்ணப்பெட்டி இருந்தது.

குமுதினி சிரித்தபடி, அத்தனை பெண்களையும் வரவேற்பது போல், இருக்கைகளை நகர்த்திப் போட்டாள். அந்த அறை, திரையரங்காகியது. வசதியாக உட்கார்ந்திருந்த ஒரு வெடிவால் தாவணி, “குமு! கதவைச் சாத்தட்டுமா? இதுக்கு மேல் கூடடம் தாங்காதுடா” என்றாள்.

குமுதினி சிரித்தபடியே சொன்னாள்:

“அப்படிக் கதவைச் சாத்துறதாய் இருந்தால், முதல்ல, நான்தான் அறைக்கு வெளியே நிற்பேன்.”

அப்போது வாசலுக்குள் நுழைந்த தமிழ்ப் பட்டப்படிப்பு இரண்டாவது ஆண்டுக்காரி ஒருத்தி, வெடிவால் மங்கையைச் செல்லமாகவும், சீண்டுவது போலவும் கேட்டாள்.

“இடுவார் பிச்சையைக் கெடுவார், கெடுப்பாராம். ஒனக்கென்ன வந்திருக்கு?”

“ஏய், வாயை அடக்கிப் பேகடி.”

“சரி, நீ கெடுவாளாயே இருந்துட்டு போ”.

இரண்டு பெண்களும், ஒருவரை ஒருவர் சக்களத்திகள் மாதிரி பார்ததபோது, அரசி, ஆண்டாள், மல்லிகா, செண்பகம், பாமா, வடிவு, விமலா, கமலா, கஸ்துாரி ஆகிய மற்றப் பெண்கள், அவர்களையே தொலைக்காட்சிப் பிம்பங்களாய் நினைத்து ரசித்தார்கள். குமுதினி, சண்டைக் கோழிகளை அமைதிப்படுத்தினாள்.

“ஏன் இப்படிக் கதைக்கிறிங்க? இங்கே யாரும் யாருக்கும் பிச்சை போடல. நம்மோட பேச்சுக்கள் எல்லாம் காகிதத் தோட்டாக்கள்தான். ஆனாலும், அந்தக் காதிகம் அட்டைக் காகிதமாய் அழுத்தமாய் ஆகிடக்கூடாது.”

எல்லாப் பெண்களும், அவளை அதிசயித்துப் பார்த்தார்கள். பொருளாதாப் பட்டப் படிப்பில் இறுதியாண்டு. ஏதோ உச்சியில் இருந்து, கனைநீர் உள்ளுறக் கொட்டிக் கொண்டிருப்பது போன்ற குளுமையான முகம். சிவப்பும் கருப்பும் சந்தித்து, தங்களது ‘சந்ததி” நிறத்தைப் பரீட்சார்த்த ரீதியில் உருவாக்கிய கருஞ்சிவப்பு. உடைமேல் உடை வைத்ததுபோல் இருந்த பல பெண்களுக்கு மத்தியில், உடைக்குள், உடலே தெரியாமல் இருப்பவள். அந்தப் பெண்கள், அதற்காக அவளை அதிசயித்து நோக்கவில்லை. அவள் அழகால் ஏற்படும் இயல்பான இலைமறை காய்மறைவுப் பொறாமையையும் மீறிய அன்புப்பார்வை, சூது என்பதே இனிமேல் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதுபோல், பேகம் பேச்சு; வாயில் சென்னைத் தமிழைச் சின்னதாக்கும் இலங்கைத் தமிழ். அவளையே, சொல்லி வைத்ததுப் போல் பார்த்த அத்தனை பெண்களும், வாசலில் சத்தம் கேட்டுக் கண்களைத் திருப்பி காதுகளைச் சாய்த்தார்கள்.

நாணம் கலந்த பார்வையோடு சித்திராவும், இன்னும் நான்கைந்து பெண் பட்டாளமும் உள்ளே வந்தது. சித்திரா, பையிலிருந்த அழைப்பிதழை எடுத்து, குமுதினியிடம் நீட்டினான். இதற்குள் ஒருத்தி, “எப்போ கல்யாணம்? அவர் பேரு என்ன? நீ காதலிச்ச அதே ஆள்தானே?” என்றாள்.

“படித்துப் பாரேண்டி” என்ற சித்திரா, அவளுக்கும் ஒரு அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, அங்கேயே திருமணம் நடந்து கொண்டிருப்பது போல் நாணப்பட்டபோது, அதே அந்த வெடிவால் மாணவி, “இவள் பேரு சித்திரா. அவர் பேரு என்னவா இருக்கும்? தெரியலியா நான் சொல்றேன். பங்குனி. இல்லேன்னா வைகாசி” என்றாள்.

உடனே, இன்னும் அவளிடம் வன்மம் வைத்த தமிழ்க்காரி “ஏண்டி? கர்நாடகமாய் பேசுறே? சித்திரை சித்ராவா ஆயிட்டாள் பங்குனி, பங்குனியா ஆயிடும் வைகாசி, வைகான்னு ஆயிடும். ஏய். சித்ரா உன் அவருக்கு என்ன, என்ன பேருப்பா? முந்தின மாதமா? பிந்தின மாதமா?” என்றாள்.

உடனே வெடிவால், ‘இன்னும் கல்யாணமே ஆகல! அதுக்குள்ளே எப்படி மாதம் வரும்?” என்றாள். மணக்கப் போகிறவளோட வந்த விடுதி மாணவியர் செயலாளர் தமயந்தி குமுதினியை உரிமையாேடு கண்டித்தாள்.

“என்னடி குமுதினி சித்ராவுக்கு ஏதாவது செய்யனுமுன்னு நன்கொடை வசூலிச்சோம். நீகண்டுக்கவே” என்று சொன்னபடியே, பாதி மையான ஒரு காகிதத்தை நீட்டினாள். அதில், குமுதினி எதையோ எழுதி நீட்டிவிட்டு, மேஜையைத் திறந்தபோது, செயலாளப் பெண் ஆச்சரியம் தாங்க முடியாமல் கத்தினாள். “அடேயப்பா, ஐநூறு ரூபாய்.”

எல்லா மாணவிகளும், தொலைக்காட்சிப் பெட்டியை நோக்காமல், அந்தக் காகிதங்களையே பார்த்தபோது, குமுதினி ஒரு சின்ன அட்டைப் பெட்டியைத் திறந்தாள்.

“சித்திரா, இங்கே வா. இது உன் கைக்கு சரியாய் இருக்கான்னுபாரு இல்லேன்னா நகைக் கடைலே போய் மாத்திட்டு வாரேன்.”

தயங்கியபடி வந்த சித்திராவை தன் பக்கம் இழுத்தபடியே, குமுதினி அவள் கையில் மோதிரத்தை மாட்டினாள். பிறகு, “ஒனக்குன்னு செய்தது மாதிரியே இருக்குது” என்று சொல்லி விட்டு, மோதிரத்தைக் கழற்றப் போன சித்ராவை தடுத்து. ‘ஒன்னவர் விரல்லேயே இருக்கட்டும். ஒன் அவர் கல்யாண மோதிரம் போடுமுன்னாலேயே நான் போட்டதாய் இருக்கட்டும். அப்பாகிட்டே இருந்து இந்த மாதக் கோட்டா வர்லே. இல்லேன்னா பெரிசாவே வாங்கியிருப்பேன்” என்றாள்.

மாணவிகள் பிரமித்தார்கள். சிலர், பணத்திமிரைக் காட்டுகிறாள் பாரு’ என்றுகூட, தங்களை அறியாமல் நினைத்துவிட்டு, அப்புறம் தலைகளில் மானசீகமாகக் குட்டிக் கொண்டார்கள். அப்பா, தொழிற்சாலை வைத்திருப்பவர். சென்னை நகரில், தனிப்பங்களாவில் இருக்க வேண்டும் என்று அவர் வாதாடி எழுதியிருந்தாலும், மற்ற மாணவிகளோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தக் கொகத் தொல்லையும், வார்டனம்மா தொல்லையும் நிறைந்த விடுதிக்குள் வந்திருப்பவள் குமுதினி. லண்டனில் படிக்க வேண்டும் என்று அப்பா சொன்னாலும், படித்தால் தமிழ்நாட்டுத் தலைநகரில்தான் படிப்பேன் என்று பிடிவாதம் போட்டிருந்தவள். இந்த கல்லூரியில் இதே சித்திரா அவளுக்கு உயிர்த் தோழி ஆகிவிட்டாள்.

சித்திராவும், அவள் மெய்காவலாளிகளும் போய் விட்டார்கள். மாணவிகள் தொலைக்காட்சியை உற்று நோக்கினார்கள். குமுதினிக்கும் அந்த தொலைக்காட்சியின் ஒலியும், ஒளியும், அவள் மனத்தில், காசிநாதனை ஒளிரூபமாக்கி காட்டியது. காசிநாதன் இப்போ என்ன செய்வார்? என் மாதிரியே என்னையே நினைத்தபடி இருப்பாரா? மதுரைக்கு வரணுமுன்னாரே, வந்திருப்பாரா?

தொலைக்காட்சியில், அந்த நிகழ்ச்சி முடிந்து, அடுத்த நிகழ்ச்சி துவங்கியது. ஒரு சில மாணவிகள் ஒடிவிட்டார்கள், பெட்டியில் வண்ணம் போய், வெண்மை வந்தது. உடனே நேரத்தைக காட்டும் 20-20-50, அப்புறம் 50-51.60. பிறகு வட்ட வட்டமான உள்வட்டங்களைக் கொண்ட ஒரு பெரிய வட்டம்.

“வணக்கம் இன்றைய தலைப்புச் செய்திகள்”

“இலங்கையெங்கும், குறிப்பாக கொழும்பு நகரில் நூற்றுக்கணக்கான தமிழர்கள், சிங்களவர்களால் கொல்லப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கொலை வேகம் குறையவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.”

குமுதினி, தன்னை அறியாமலே எழுந்தாள். அந்தக் கொலைகள், அந்தப் பெட்டிக்குள்ளேயே நடப்பதுபோல், அதை விரோதித்துப் பார்த்தாள். துக்கித்துக் கேட்டாள். கேட்கக் கேட்கக் காதுகள் சிவந்தன. பார்க்கப் பார்க்கப் பரிதவிப்பு:

பதினைந்து நிமிடச் செய்தி வாசிப்பில், பத்து நிமிடங்களுக்கு மேல், இலங்கை. இலங்கையில் இனப்படு கொலைகள். வாசிப்பாளரே. அரண்டும், மிரண்டும், அழுவது போலவும் படித்தார். கொழும்பில் மட்டும், நூறு பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்களாம். ராணுவம் இந்தக் கொலைகாரச் செயலில் ஈடுபட்டிருப்பதுபோல் தெரிகிறதாம். ஊரடங்கு உத்திரவாம். பத்திரிகைத் தணிக்கையாம். பெண்கள் கற்பழிப்பாம். தமிழ்க் குழந்தைகள் நெருப்பிலாம். தெருக்களில் ஒரே பிணக் குவியலாம். விமானப் போக்குவரத்து ரத்தாம். தொலைதகவல் தொடர்புத் துண்டிப்பாம். துப்பாக்கிச் சூடுகளாம்.

குமுதினி நடப்பது தெரியாமல் நடந்து, அந்தத் தொலைக்காட்சிப்பெட்டிமேல் சாய்வது தெரியாமல் சாய்ந்தபோது, பெட்டியின் மேல்முனையில் இரண்டாகவிரிக்கப்ட்ட திரைத்துணி, மீண்டும் தொங்கி இழவுச் செய்திகளைச் சொன்ன திரையை மறைத்தது. அதுவரையில் செய்திகளை சிறிது துணுக்குற்று கேட்ட மாணவிகள், அப்போதுதான், குமுதினிக்கு ஒருவேளை ஏற்பட்டிருக்கக்கூடிய ஈடு செய்ய முடியாத இழப்புகளை உணர்ந்தவர்கள்போல் ஒடிப்போய், அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். அவளோ, அவர்களையும் மீறி, அடித்துப் புரண்டாள். கொழும்பில் நடுத்தர தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளரான அவள் தந்தையும், தாயும், தம்பியும், தங்கையும், சிங்களவர்கள் அதிகமாக வாழும் நகர்ப்பகுதியில் ஒற்றைக் குடும்பமாய் இருப்பவர்கள். அவளைக் கைப்பிடிப்பதாய் இருக்கும் காசிநாதன், அதற்கு அடுத்த தெருவில், பொறியாளனாக இருப்பவன். “என்ன ஆனார்களோ?”

குமுதினி வாய்விட்டுக் கதறினாள்.

“அப்பா! அம்மா! ஒங்களையும் தம்பி, தங்கைகளையும் நான் உயிரோடு பார்ப்பேனா? பார்க்க முடியுமா. காசி, என்னோட காசி. அப்பா, அம்மம்மா, என்னை விடுங்கடி, விடுங்கடி.”

கல்லூரிக் கட்டிடமே அதிரும்படி குமுதினி கத்தினாள். அந்த விடுதியில் உள்ள அத்தனை பெண்களும் ஓடிவந்தார்கள்.ஒரே அமளி. ஒரே பரபரப்பான படபடப்பு. நளினி மூர்ச்சித்தவளாய்த் தரையில் வீழ்ந்தாள். எவளோ ஒரு பெண், சமயோசிதமாக, அவள் முகத்தில் நீரைத் தெளித்தபடி, “காற்று வேணும் கொஞ்சம் வழி விடுங்க” என்றாள். குமுதினியே அங்கு மரித்துவிட்டதுபோல், மாணவிகள் ‘ச்சொ, ச்சொ என்றார்கள். இறுதியில் அங்கே ஓடிவந்த விடுதிச் செயலாள மாணவி தமயந்தியும், சித்ராவும், குமுதினியைத் துாக்கி நிறுத்தினார்கள், சித்ரா, அவளை, தன் தோளில் சாய்த்துக் கொண்டாள். ‘என்ன விஷயம் என்பதுமாதிரி ஒருத்தியை, வினாக்குறியுடன் அவள் பார்க்க, அவள் விளக்கினாள். விளக்கும்போதே அழுதுவிட்டாள். அழுதவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு குமுதினியும் அழுதாள். இறுதியில் செயலாளப் பெண், நளினிக்கு ஆறுதல் கூறினாள்.

“என்ன குமுதினி குழந்தைமாதிரி. ஒன்னோட நல்ல குணத்துக்கு ஒன் குடும்பத்துலே யாரும் செத்திருக்க மாட்டாங்கம்மா. நிச்சயமாய் நம்புடி”

குமுதினி, தன்னைப்போலவே அழுதுக் கொண்டிருந்த சித்ராவின் மார்பில் முகம் புதைத்தாள். பிறகு, “நான் எப்படியோ? என்னேடா அம்மா, அப்பா குணத்தோட ஒப்பிட்டால் நான் துாகடி, துாக. என்ன ஆனாங்களோ? அவங்களோட பிணத்தையாவது நான் பார்ப்பேனா.” என்றாள்.

“அபத்தமாய்ப் பேசப்படாது. வேணுமுன்னாப் பாரேன். அவங்களுக்கு எதுவும் ஏற்பட்டிருக்காது.”

“ஏய் சித்ரா என்னை இப்பவே கொழும்புக்கு அனுப்புடி.என் பெற்றோரை நான் பார்த்தாகணும். என் தம்பி, தங்கை கிட்டப் பேசியாகணும். இப்பவே பார்க்கணும் இப்பவே பேசனும் என்னை அனுப்புடி, அப்படியே அவங்களுக்கு வந்தது எனக்கும் வரட்டும். எனக்கும் வரணும். தமயந்தி என்னைக் கூட்டிட்டுப் போடி.கூட்டிட்..”

மாணவிகள் மெளனித்தார்கள். அத்தனை கண்களும் மேகமாயின. அவளுக்கு எப்படி ஆறுதல் சொலவதென்று புரியவில்லை. அப்பா செத்தால் அம்மாவைக் காட்டலாம், அம்மா செத்தால் அப்பாவைக் காட்டலாம். இருவரும் செத்தால் குடும்பத்தில் எஞ்சியவர்களைச் சுட்டிக் காட்டி, ஆறுதல் கொடுக்கலாம். அந்தக் குடும்பமே ஒட்டு மொத்தமாய் செத்தால்..?

தமயந்தி தன் ஆழுகையை அடக்கியபடியே ஆற்றுவித்தாள்.

“அழாதே குமுதினி, அழாதே! தொலைக்காட்சியிலே கூறப்பபடுகிறதுன்னுதானே சொல்லி இருக்காங்க?”

“அரசாங்கச் செய்தியிலே கூறப்படுதுன்னு சொன்னால், இலங்கையில கூற்றுவன் கூத்தாடுறான்னுதானடி அர்த்தம்? நாலைஞ்சு நாளாவே பதட்ட நிலை இருக்குதுன்னு செய்தி வந்துதே. சிங்களவங்க, ஐந்து வருஷமாய் தமிழர்களோட வீடுகளுக்குள் புகுந்து, எல்லாப் பொருளையும் கொள்ளையடிச்சு கொள்ளையடிச்சு பழக்கப்பட்டுப் போனாங்க. இப்போ எம் ஆட்களோட உயிரையே கொள்ளை அடிக்கிறாங்களே.”

உள்ளத்தால் செத்து, உடலால் மட்டுமே அங்கே இருப்பவள்போல் உணர்வற்று கிடந்தாள் குமுதினி. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒவ்வொரு பெண்ணாக அகன்றார்கள். இறுதியில், சித்திரா மட்டுமே நின்றாள். வெளியே ஏதோ சத்தம் கேட்டு நகரப் போனவளை, குமுதினி திடீரென்று பாய்ந்து பிடித்துக் கொண்டாள். “எனக்குப் பயமாய் இருக்கு. என்னை விட்டுட்டுப் போயிடாதே” என்றாள்.

“இந்த நிலையில் ஒன்னை விட்டுட்டுப் போனால், எனக்கும் சிங்களவங்களுக்கும் என்ன வித்தியாசம்?”

“நான் யாருக்காக அழுறது? அப்பாவுக்கா. அம்மாவுக்கா. தம்பிக்கா. தங்கைக்கா… என்னோட காசிக்கா. யாருக்காகடி அழுறது? இவங்க எல்லாம் உயிரோட இருந்து, அவங்கெல்லாம் எனக்காக அழுதால்கூடப் பரவாயில்லே. ஒருத்திக்காக பலர் அழலாம். பலருக்காக ஒருத்தி அழமுடியுமாடி?”

“என்னம்மா நீ. கற்பனையும் பயமும் ஒண்ணாயிட்டால் நாம் வேரில்லாமல் போயிடுவோம். நடந்திருக்காத ஒன்றை நடந்ததாய் அனுமானிக்கிறது பெரிய தப்பு:”

குமுதினி, குழந்தையாய்க் கேட்டாள்.

“சித்ரா, அப்படியா சொல்றே? எங்க குடும்பத்துல யாரும் இறந்திருக்க மாட்டாங்கன்னு சொல்றியா?”

“ஆமாம். என் மனகல ஏதோ ஒண்னு ஒனக்கு எந்த இழப்பும் நடந்திருக்காதுன்னு சொல்லுது.” ‘நீ சொன்னது மாதிரியே இருக்கட்டும். என்னோட காசிநாதனுக்கும் எதுவும் நடந்திருக்காதே?”

“எதுவும் நடந்திருக்காதும்மா. நீ என்னை நம்புடி.”

“நிசமாவா?”

“நிசமாவே என் வாக்கு எப்பவுமே பொய்த்ததில்லை.”

குமுதினி, சித்திராவை மாணவி மாதிரி பார்த்தாள். ஆசிரியையாக அனுமானித்தாள். யோகியாக நினைத்தாள். முக்காலமும் தெரிந்த முனி புங்கவப் பெண்ணாய் எண்ணினாள். அவள் கரத்தைப் பலமாகப் பிடித்துக்கொண்டாள். அவள் தோளில் வலுவாகச் சாய்ந்து கொண்டாள்.

இரவில் இரு பெண்களும் தூங்கவில்லை. சித்திராவின் கையைப் பலமாகப் பிடித்தபடி, அங்குமிங்குமாய் புரண்ட குமுதினி, திடீர் திடீரென்று எழுந்தாள். கவரில் சாய்ந்தாள். தரையில் அமர்ந்தாள். அறைக்குள் தாவித் தாவி நடந்தாள். மனப்புவனில், அம்மா முதலில், அப்புறம் அப்பா, பிறகு தம்பி, ஒரு தங்கை, இறுதியில காசிநாதன்.

இந்த நினைவுகள் வகைவகையாய் மாறி மாறி, முன்னும் பின்னுமாய் வந்தன. ஐந்து உடல்களும் சிதைந்து, சீரழிந்து, ஈமக்கடனுக்காக இன்னும் துடித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை, அவர்களின் அவயங்கள் தனித்தனியாய்ச்சிதறிக்கிடப்பது போன்ற சிந்தனை.

குமுதினி பயந்து போனாள். தனியாய் விழித்திருக்க பயந்துப்போய் கட்டிலில் துாங்கிய சித்திராவை எழுப்பப் போனாள். அவள், யோகித்தனமாக பேசிய ஆறுதலை மீண்டும் கேட்க வேண்டும் என்று ஒரு ஆவல். ஆனாலும், பலமாக மூச்சு விட்டுத் துங்கும் தோழியை அப்போதைக்கு கமைதாங்கியாய் ஆக்குவதற்கு அவள் மனம் கேட்கவில்லை. இறுதியில், அவளோடு சேர்ந்து ஒட்டிப் படுத்துக் கொண்டாள். அவள் கையை, தன் இடுப்போடு கற்றி வளைத்துக் கொண்டாள். இந்த உளைச்சலில் இன்னோர் எண்ணம்.

‘பெற்றோரும் காசியும் இறந்திருந்தால் நான் உயிரோட இருக்கப் போவதில்லை. இருக்கவே மாட்டேன்.’

சுய மரணச் சிந்தனை, குமுதினிக்குள் சிறிது ஆறுதலைக் கொடுத்தது. எந்தப் பிரச்சனைக்கும் மரணம் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது புரிந்தது. அவளுக்குத் துாக்கம் வரவில்லைதான். ஆனாலும் அவள் மரணத் திடத்தோடு படுத்தாள்.

பொழுது புலர்ந்தது. புல்லினங்கள் ஆர்க்கும் முன்னாலேயே குமுதினி எழுந்தாள். பத்திரிகைகள் வருகிற வரைக்கும், அவளால் காத்திருக்க முடியவில்லை. விடுதியை விட்டு வெளியேறியபோது ஏதோ கேட்கப் போன காவலாளியிடம் ஏற்கனவே செத்துப் போனவளுக்கு என்ன ஆனால், ஒனக்கென்னயயா? என்று கத்திவிட்டு, தன்னதனியாக நடந்தாள். பத்திரிகைகளை, எதிர்பார்த்து, திறக்கப்படாத கடைகளைப் பார்த்தபடி திறந்த விழியோடு நடந்தாள். நேற்று வரை விடுதிக்குள்ளேயே இரவில் நடமாட பயந்த அந்த இலங்கை தமிழ்க்காரி, இப்போது, தன் நடமாட்டமே பார்ப்பவர்களுக்குப் பயமூட்டும்படி ஓடினாள். தாவினாள். நடந்தாள். ஆங்காங்கே நின்று தேம்பினாள்.

எப்படியோ, எல்லாத் தமிழ் பத்திரிகைகளையும், ஆங்கிலப் பத்திரிகைகளையும் வாங்கியவளுக்கு, அப்போதுதான் காக கொண்டு வரவில்லை என்பது புரிந்தது. பத்திரிக்கைகாரப் பையனிடம் மன்றாடினாள். ஏற்கனவே தெரிந்தவன்தான்.

“தம்பி! நான் இதோ இந்தச் செய்தி சொல்ற துரதிருஷ்டக்காரிப்பா.. அதோ அந்த விடுதியில் வந்து காக வாங்கிக்றியா? எனக்கு இவை எல்லாமே வேணும்.”

“அதுக்கென்னம்மா நீங்க கொண்டு போங்க. நான் அப்புறமாய் வாங்கிக்கிறேன்.”

குமுதினி, கை நிறையப் பத்திரிகைகளோடு நடந்தாள். படிக்காமலே நடந்தாள். உண்மையை எதிர்கொள்ள பயம். பின்னர், ஒரு சில இடங்களில் நின்று நின்று வாசித்தாள்.ஒரு பத்திரிகையில் வந்தது இன்னொரு பத்திரிகையில் பொய்யாகட்டும் என்ற பொய் மனப்பான்மையுடனேயே படித்தாள். நூற்றுக் கணக்கான இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவ பலத்தோடு சிங்களவர்கள் குத்திப் போட்டதும், வெட்டிப் போட்டதும், கற்பழித்ததும் நிருபணமாயின. விடுதிக்குள் எப்படித்தான் வந்தாளோ. நடப்பது தெரியாமல் நடந்து, தன் அறைக்குள் வருவது தெரியாமல் வந்து கட்டிலில் விழுந்தாள். சித்திரா, அப்போதும் அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.

குமுதினி கரணையற்றுக் கட்டிலில் விழுந்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்லப் போன சித்திரா நிதானப் பட்டாள். ‘அழட்டும், நல்லா அழட்டும். மனத்தின் சோகக் குவியல்கள் கண்ணிரில கரையட்டும். விம்மலோடு விம்மலாய் வெடித்து வெளிக் கிளம்பட்டும்.’

மூடிய கண் திறக்காமல், காலையிலிருந்து நண்பகல் வரை கட்டிலைக் கெளவிக் கொண்ட குமுதினியையே சித்திரா யோசித்தாள். இவளோட குடும்பத்தின் இப்போதைய நிலையை, எப்படி அறிவது? யாரிடம் கேட்பது?

குமுதினி கண்ணற்றவளாய், கண் விழித்தாள். சித்ராவும், தமயந்தியும், குமுதினியை தாங்கிப் பிடித்து ஆட்டோவில் ஏற்றினார்கள். இலங்கைத் துணைத் துதரகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே பலத்த போலீஸ் காவல். அவர்களை உள்ளே விட மறுத்தார்கள். கெஞ்சிப் பார்த்தும் மிஞ்சிப் பார்த்தும் பலன் இல்லை. வெளியே வந்த காருக்குள் இருந்த அதிகாரியைப் பார்த்து குமுதினி கையெடுத்துக்குெம்பிட்டாள். ஓராண்டுக்கு முன்பு, முதல் தடவையாக இந்த அலுவலகம் வந்தபோது, சொந்தவீடாய்த் தோன்றிய அந்த மாளிகை, இப்போது அந்நியமாய்க் காட்டியது. ஆனாலும், குமுதினி அந்த அதிகாரியிடம் மன்றாடிக் கேட்டாள்.

“என்னை ஞாபகம் இருக்குதா அய்யா? இந்த அலுவலகத்துல பண்பாட்டு விழாவிலேய பாடியவள். இப்போ என்னோட குடும்பம் கொழும்பில் எப்படி இருக்கு என்று சொல்ல முடியுமா?”

காருக்குள் இருந்தவர், டிரைவரை உகப்பினார். கார் பறந்தது. தன்னையறியாமலே காரின் முன்னால் ஒடிய குமுதினியை, சத்திரா தாங்கிப் பிடித்தாள். அவளை தமிழ்ப் புலி யாக நினைத்த ஒரு காவலாளி மேல் புலிப் பார்வையை வீசினாள். பிறகு, சித்திராவையும், தமயந்தியையும் மார்பின் இரு பக்கமும் சேர்த்தபடி, அங்கேயே தவம் கிடந்தாள். தகவல் கிடைக்கவில்லை. தகராறுகள் கிடைத்தன. இறுதியில் குமுதினிதான் தோழிகளை, உஷார் படுத்தினாள்.

“என்னோட பெயரைத் தெரிஞ்சு ஒருவேளை இன்னும் உயிரோட இருக்கிற என் குடும்பத்தை அழிச்சிடப்படாது. வா.”

நான்கு நாட்கள் குமுதினிக்கு விநாடி விநாடியாய் கழிந்தன. ஒவ்வொரு விநாடியும் உயிர்மரணப் போாரட்டம். மாணவக் கொந்தளிப்பை தாங்கும் வகையில் கல்லூரிகள் மூடப்பட்டன. திருமணமாகப்போகும் சித்திரா,குமுதினிக்காக இசகு பிசகாய் எதுவும் செய்து, மாட்டிக் கொள்ளக் கூடாதே என்று பயந்து, அவள் தந்தை விடுதியிலிருந்து அவளை வலுக்கட்டாயமாகக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்.

தனித்து விடப்பட்ட குமுதினியின் புலம்பல் ஒடுங்கியது. அழுகை அகன்றது. உணர்வால் செத்துப் போனாள். சோகத்தால் மரத்துப் போனாள். கைப்பணம் போய்விட்டது. எங்கேயாவது போய் விவரம் கேட்க வேண்டுமானால், பணம் வேணுமே.

குப்புறக் கிடந்தவள், விம்மல் சத்தம் கேட்டுக் கண் விழித்தாள். தந்தையோடு வந்த மணப்பெண் சித்திரா தரையில் மண்டியிட்ட படி, அவளையே பார்த்து அழுதாள். அழவேண்டியவள், அழுபவளுக்கு ஆறுதல் சொல்பவள்போல, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். சித்திரா, நான்கைந்து நூறு ரூபாய் நோட்டுகளை அவளிடம் நீட்டிவிட்டு, தன் கையில் போட்டிருந்த மோதிரத்தைக் கழற்றியபோது, “ஒனக்குப் பணம் வந்திருக்காது. வேற வழியில என்னால் உதவவும்முடியலே. அதனாலதான்.” என்று இழுத்துப் பேசினாள்.

குமுதினி, ரூபாய் நோட்டுகளை வாங்காமலே, தன் உள்ளங் கையில் திணிக்கப்பட்ட மோதிரத்தை மெளனமாக நின்ற சித்திராவின் விரலில் மாட்டியபடியே, அரட்டினாள்.

“இது என்னோட அன்பைக் காட்டுகிற சின்னம். கொடுத்த அன்பைத் திருப்பித் தரலாம். அன்பே வேண்டாமுன்னு இதைத் தரலாமாடி? என் கல்யாணத்துக்குத் திருப்பிப் போடணுமேன்னு நினைக்கிறியா? அப்படி ஒரு நிலைமை வராது.டி. தாரதாய் இருந்தால், இந்தப் பாவிக்கு அன்பை மட்டுமே தாடி, அன்பு உருவமற்றது. மோதிரம் உருவம் உள்ளது.”

சித்திரா, குமுதினியைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். விலகி விலகிப் போன அவள் முகத்தைத் தன் தோளில் கவிழ்த்துக் கொண்டாள். குமுதினியின் பிடரியில், சித்திரா சிந்திய கண்ணிர் பெருக்கெடுத்தது.

இரண்டு நாட்கள் மேலும் ஓடின.

குமுதினி, அறைக்குள்ளேயே முடங்கிவிட்டாள். காலத்தை மறந்த புலனற்ற நிலை. சொல்லவும் முடியாத, சொன்னாலும் தீராத அவலத்தையே உணவாகக் கொண்ட உள்ளத்தின் ஒடுங்கிய நிலை. விடுதி வெறுமையாய்க் கிடந்தது. எவளோ ஒருத்தி வந்து, ராமேகவரத்துக்குப் பாதிக்கப்பட்ட தமிழர்கள், கப்பலில் வந்து இறங்குவதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்றைப் படித்துச் சொன்னாள். குமுதினிக்கு லேசாய் உணர்வு தட்டியது. ராமேசுவரம் போய்ப் பார்க்கலாம். பணத்துக்கு?

புத்தகங்களைக் குடைந்து, பெட்டியைக் குடைந்தவளுக்கு எப்போதோ வைத்திருந்த இருநூறு ரூபாய் கிடைத்தது. எழும்பூர் ரெயில் நிலையத்தைப் பார்த்து ஓடினாள்.

ராமன் தொழுத பூமியான ராமேஸ்வரம், இப்போது இரத்த அலைகளாய் விம்மியது. ஆயிரக்கணக்கான மக்கள் எதிர் கொண்டழைக்க, கப்பலில் வந்திறங்கிய அகதிகளை, குமுதினி, ஒடி ஒடிப் பார்த்தாள். ஒவ்வொருவராய்ப் பார்த்தாள். தெரிந்த முகம் எதுவும் தென்படவில்லை. எவரிடமாவது கேட்கலாம் என்றால், ஒவ்வொரு முகமும் செத்துத் தொங்கியது.

அந்த முகங்களைப் பார்க்கப் பார்க்க, அவர்களின் கமையையும், தான் வாங்கிக் கொண்டதுபோல் அவள் உள்ளம் கனத்தது. அதே சமயம் தனது இழப்புத் தாங்கிக் கொள்ளக் கூடியது போலவும் தோன்றியது.

சென்னை திரும்பிய குமுதினி, யார் மூலமாவது, தன் குடும்பத்து நிலைமையை உணர்ந்த பிறகே, ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தாள். அவர்கள் இருந்தால் இருக்கலாம். இறந்தால் இறக்கலாம்.

மீண்டும் தன்னந்தனியாய், இலங்கைத் துணைத் துாதரகம் போனாள். அவளை உள்ளேயே விடவில்லை. விரக்தியோடு திரும்பியவள், தமிழக அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பார்த்தாள். அத்தனைபேரும் ஆறுதல் சொன்னார்கள். அறிந்து சொல்வதாய் இதய கத்தியோடு பதிலளித்தார்கள்.

ஒரிரு நாட்கள், அவளுக்குக் கொலைகார நாட்களாய் ஒடின. அறையே சிறையாகியது. தமிழ் ஐக்கிய முன்னணிப் பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம்,சென்னைக்குவந்திருப்பதாக வானொலி கூறியது. குமுதினி லேசாய் உயிர்த்து எழுந்தாள். அந்த இலங்கைத் தமிழ்த் தலைவரைச் சந்தித்தாள். அவரோ, ஒட்டு மொத்தமாய் அத்தனை தமிழர்களுக்குமாக அழுது கொண்டிருந்தார். அவள், அவரிடம் தன் நிலையை எடுத்துச் சொன்னபோது, “பக்குவமாய், விசாரிச்சுப் பார்க்கேன். ஒருவேளை நான் விசாரிக்கிறதாலேயே ஒன் குடும்பத்தினர் பழி வாங்கப் படாமல் இருக்கணும். எதற்கும் விபரத்தை எழுதிக் கொடு” என்றார்.

குமுதினி, எழுதிக் கொடுக்காமல் நழுவி வந்தாள். ‘செத்திருந்தால் இந்நேரம் செத்திருப்பார்கள். எனக்குத் தகவல் வேண்டும் என்பதற்காக ஒரு வேளை உயிரோடு இருந்து, அவர்களுக்கு, நானே எமனாகப் படாது. பார்க்காவிட்டாலும் பரவாயில்லை. நல்லபடியாகப் பொன் பொருளோடு வேண்டாம். கைகால் கதியாய் இருந்தால் போதும்.’

குமுதினி, விடுதிக்குள் வந்து, உடல் முழுவதையும் மூடிக் கொண்டாள். “இன்னுமா துாக்கம்? என்று அம்மா போர்வையை விலக்குகிறாள். “ஏன் அழுக்குப் பேர்வையைப் போத்தியிருக்கே?” என்று அப்பா, கேட்கிறார். “ரூபாவானில ஒரு நல்ல நிகழ்ச்சி” என்று தங்கை ஞாபகப்படுத்துகிறாள். சென்னையில் இருந்து என்ன வாங்கிட்டு வந்தே?” என்று தம்பி கேட்கிறான். இவர்கள் எல்லாருக்கும் எதையோ பதிலாகச் சொல்லிவிட்டு, குமுதினி, புரண்டு படுக்கிறாள். போர்வையால் மீண்டும் உச்சிமுதல் உள்ளங்கால் வரை மூடிக் கொள்ளப் போகிறாள். திடீரென்று பேர்வை இழுக்கப்படுகிறது. காசிநாதன் சிரித்தபடி, “எனக்கும் போர்வை” என்கிறான்.

குமுதினி அலறியபடியே எழுந்தாள். அவள் சத்தம் கேட்டு யாரும் வரவில்லை. விடுதியே வெறிச்சோடிக் கிடந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். ஓடாமல் கிடந்தது. நேரத்தை அறிவதற்காக, வானொலிப் பெட்டியைத் திறந்தாள். கொழும்பில் இருந்து, விமானத்தில் தமிழர்கள் சென்னைக்கு வருவதாக, வானொலிச் சேதி கூறியது. குமுதினி எழுந்தாள்.

ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்துவிட்டாள். குடும்பத்தினர் கண்டிப்பாக வருவார்கள் என்று மனம் கணக்குப் போட்டது. அப்பாவுக்குத் தெரியாத அதிகாரிகளே இல்லை. பணத்துக்கும் பஞ்சம் இல்லை. கண்டிப்பாக வருவார்கள். ஒருவேளை, காசிநாதனும் அவர் குடும்பத்தினரும் வரலாம்; வர வேண்டும்.

விமானம் ஆகாயத்தை வட்டமடித்தபோது, அவள் குதிகால்களை உயர்த்தி உயர்த்திப் பறக்கப் போகிறவள் போல் எழும்பினாள். விமானம் இறங்கியது. குமுதினி, ஒடினாள். பாதுகாப்புத் தடையையும் மீறிப் போனாள். அதற்குள் விமானத்திலிருந்து ஒவ்வொருவராய் இறங்கினார்கள். நளினி, தலையைத் துக்கிப் பார்த்தாள். தன் முன்னால் நின்றவர்களைப் பலவந்தமாய் விலக்கிப் பார்த்தாள். அப்பா மாதிரி தோணலயே. அம்மா மாதிரி தோணலயே? அதோ அப்பா என்னேடாட அப்பா. அப்பா, அப்பா, அப்பா இதோ இருக்கேன், இதோ இருக்கேன்.”

கூவிய குமுதினியின் குரல் உடைந்தது. வந்தவர் அப்பா மாதிரிதான். பார்த்தவர்களில், எவரும் அவளுக்குத் தெரிந்தவராய் தெரியவில்லை. அப்போதும் ஒரு ஆறுதல். குடும்பத்தினர் அகதி முகாம்களில் இருக்கலாம். ஒருவேளை வீட்டிலேயே இருக்கலாம். இல்லையானால், அவர்கள் தப்பியோடி வட மாகாணங்களில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களில் இருக்கலாம். திரிகோணமலையில் திரியலாம். கிழக்குப் பகுதியான மட்டக்களப்பில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கலாம்.

விரக்தி வாய்ப்பட்ட வடிவோடு, அவள் திரும்பியபோது, திடீரென்று ஒரு குரல். திரும்பினாள். யார் என்று அடையாளம் பிடிபடவில்லை. அப்புறந்தான், தந்தையின் தொழிற்சாலையில் சூட்டும் போட்டும் போட்ட அதே அருணாசலம்,இப்போது தாடியும், மீசையும், ஒட்டிப்போன வயிறோடு, உலர்ந்து போன கண்களோடு நிற்பது தெரிந்தது. அந்த முதியவரின் கையைப் பிடித்தபடி, அவள் விம்மினாள். அவர், தம் கமையை எடுத்து அவள் தலையில் இறக்கினார்.

“எல்லாம் முடிந்தது. எல்லாமே முடிந்தது. கொழும்புல அப்பா காரில் ஏறினார். தொலைவில் வந்த பழக்கப்பட்ட சிங்களவர்களைப் பார்த்து, அப்பாசிரித்தபடிநின்றார்.நம் கம்பெனியில் கடனுக்கு சரக்கு வாங்குபவர்கள்தான். அப்பாவைப் பார்த்துவிட்டுப் பாய்ந்தாங்க. அப்புறம் அவர் தலை கீழே விழுந்தது. அதோடு விடலை பிணத்தைக் காரிலேயே தூக்கிப் போட்டபடி போனாங்க. ஒங்க வீட்டைப் பார்த்து ஒட்டினார்கள். அப்போ என்னோட குடும்பமும், ஒன்னோட தம்பி பிறந்த நாளை கொண்டாடுறதுக்காக ஒங்க வீட்டுக்குப் போயிருந்தாங்க.எல்லாருக்குமே அது இறந்தநாளாய் ஆயிட்டும்மா. ஒருவர்கடடத் தேறலம்மா. அதோட அவங்க விடலேம்மா. நம்ம தொழிற்சாலையையும் தரை மட்டமாக்கிட்டாங்க. என் தலைவிதி, நான்தான் தப்பிச்சேன். இலங்கையில் நம்ம ஆட்களுக்கு நடந்த கொடுமைகளை, வார்த்தைகளாலே வர்ணிக்க முடியாதும்மா”

குமுதினி, கல்லானாள். மரமானாள்; அவளை பார்த்தபடி, நின்ற அருணாசலத்திடம், ஓர் அதிகரி வந்து, “நாங்க ஏற்பாடு செய்திருக்கிற முகாமுக்கு வாரிங்களா? இல்ல, இந்த அம்மாவோட போரீங்களா?” என்றார். அருணாசலம் குமுதினியையே பார்த்தார்.

குமுதினியின் உடம்பு லேசாய் அதிர்ந்தது. நான் இனிமேல் இருக்கப் போறதில்லை. இவரும் என்னோடு வந்து என் மரணத்துக்கு இடையூறாக இருக்க வேண்டாம்.’

கல்லான நெஞ்சோடு அவள் பதிலளித்தாள்.

“இவரை முகாமுக்கே அனுப்புங்க”.

அருணாசலம், பிரிய மனம் இல்லாமல் பிரிந்தார்.

குமுதினி, தன்னந்தனியாய் நடந்தாள். மரத்துப் போன மனசோடு, செத்துப் போன சிந்தனையோடு, சாவதற்காக நடந்து கொண்டிருந்தாள். அருணாசலத்திடம், காசிநாதனைப் பற்றிக் கேட்காததுகூட, அவளுக்கு உறைக்கவில்லை.

கிண்டியைத் தாண்டி, அண்ணாசாலை வழியாக, அவள் நின்று நின்றும், வேகவேகமாகவும் நடந்தாள். அவள் பார்க்காமலே பல காட்சிகள் அவள் கண்ணில் முட்டின.

ஆங்காங்கே ஆர்பாட்டங்கள். அத்தனைபேர் உடைகளிலும், இலங்கையின் சோகத்தை உள்வாங்கும் கருப்புத் துணிகள், தொழிலாளர் ஊர்வலங்கள், பல்வேறு கட்சிகளின் சுவரொட்டிகள். பெண்களின் ஊர்வலங்கள், முக்கிய இடங்களில் உண்ணாவிரதங்கள், பாய்ந்து சென்ற வாகனங்களில் துக்கக் கொடிகள். ‘இந்திய அரசே ராணுவத்தை, அனுப்பு என்ற முழக்கங்கள். அன்றாடப் பிழைப்புக்காரர்கள் கூட ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தாக்ள். அவர்களின் கரங்களில் போராளித் தனமான அட்டைகள், கண்களில், இலங்கயை எரிக்கப் போவது போன்ற அக்கினிப் பிழம்புகள். கொடும்பாவி எரிப்புகள்.

தானும் ஆடி, சதையும் ஆடி, தமிழகமே ஆடிப் போனதை, குமுதினி உள்வாங்கினாள். இலங்கைதமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள், ஊழி நடனம் ஆடுவது போல், அவள் பார்வைக்குப் பட்டது.பார்க்கப் பார்க்க, அவளுள் இனம் காண முடியாத ஓர் இன உணர்வு ஏற்பட்டது.

‘இவர்கள் எல்லாம் யாருக்காக இப்படிச் செய்கிறார்கள்? இவர்கள் ரத்தம் ஏன் இப்படி துடிக்கிறது? இதுதான் இனம் என்பதோ? இதுதான் ரத்தபந்தம் என்பதோ? இவ்வளவு பெரிய தமிழ்க் குடுமபத்தில் நான் அனாதையா? எம்மவர்களுக்காக உடலாலும், உயிராலும் துன்பப்படும் இவர்கள் என் சோதர, சோதரிகள். என் அப்பன்கள், என் அம்மாக்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நான், இந்த இனத்தளத்தில்தான் நடமாடுகிறேன். ஓர் அப்பாவின் மரணத்தில் இதோ பல தாய் தந்தையரை பார்க்கிறேன். ஒரு சில குடும்பத்தின் மரிப்பில் ஐந்துகோடிப் போரைக் கொண்ட தமிழ்க் குடும்பத்தை தரிசிக்கிறேன். நான் அனாதையில்லை. தற்கொலை செய்து கொள்ளும் கோழையில்லை. இந்த மொழி என் தாய். இந்தத் தமிழகம் என் வீடு. இவர்கள் என் சோதரர், சோதரிகள். நான் சாக மாட்டேன். சாவுக்கும் போகமாட்டேன். இலங்கைக்கும் போகமாட்டேன். காசிநாதன் ஒருவேளை உயிரோடு இருந்தால், அவர் இங்கேதான் வரவேண்டும். எந்த தகவலும் தெரியாத காசிநாதனைவிட இப்போது என்னிடம் ஆறுதலுக்காக புலம்பிய பெரியவர் அருசணாசலமும், இங்கே, அகதிகளாக குவியும் இலங்கை தமிழர்களுமே எனக்கு அதிக முக்கியம். இவர்களுக்கு, ஒரு சேவகியாக இருப்பேன். சேவிப்பேன். தனி வாழ்வில் செத்து, பொது வாழ்வில் பிழைத்த குமுதினி, ஆர்பாட்டக்காரர்களையும்,உண்ணாநோன்புகொண்டவர்களையும் கையெடுத்துக் கும்பிட்டாள். வேகவேகமாக நடந்தாள். அருணாசலம் அகதி முகாமுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பே, அவரைத் தன்னோடு அழைத்துக் கொள்வதற்காக வேக நடையாய் நடந்தாள். உயிரோட்டமாய், உணர்வோட்டாய் ஓடினாள்.

– கலைமகள் (தீபாவளி மலர்) -1990 – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *