நிர்வாகிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 1, 2023
பார்வையிட்டோர்: 1,736 
 

(1993 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆதிகேசவன், ஜாயின்ட் செகரட்டரி அந்தஸ்துள்ள அதிகாரி இல்லை. ஆகையால் அவர் அறையில் ஏ.சி. இல்லை. அதேசமயம், அவர், காமா-சோமா குட்டி அதிகாரியுமல்ல. இதனால் அந்த அறையில் வெறும் மின்விசிறிகள் மட்டும் சுழலவில்லை. ஏர்கூலரும், அவற்றோடு சேர்ந்து சத்தம் போட்டது. அவர் வயிற்றை மறைத்து, ஆசாமியை பாஸ்போர்ட் சைஹறில் உருவமாகக் காட்டுவதுபோல், அரைவட்ட மேஜை பளபளத்தது. அதன்மேல இண்டர்காம், இண்டர்னல் டெலிபோன், எக்ஸ்டர்னல் டெலிபோன், பர்சனல் டெலிபோன், அவுட் கோயிங் டிரேய், இன்கமிங் டிரேய், காளான் வடிவிலான டேபிள் லைட், மத்தள வடிவிலான பென் ஸ்டாண்ட், எமர்ஜென்ஸி லைட், டேபிள் பேன், டிரான்ஸ்ஸிஸ்டர் செட், ஸ்கிருப்பிலிங் பேடு போன்ற தவிர்க்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் விதவிதமான நிறங்களில் மின்னின. தரையே இல்லாததுபோன்ற கம்பள விரிப்பு. கவரே இல்லாதது போன்ற வால் பேப்பர்.

இந்தப் பின்னணியில், தலையே இல்லாதவர் போல், கூட்டு இயக்குனர் ஆதிகேசவன், தலையை, கழுத்தை நோக்கி மடித்துப் போடடு, ஒரு பைலை கொக்கு மாதிரி கண்களால் கொத்திக் கொண்டிருந்ார். அதைப் படித்தாரா பார்த்தாரா என்று சொல்லுவதற்கு இல்லை. 55 வயது மனிதர். எப்போதுமே கழித்திருக்கும் முகம். உயர்ந்திருக்கும் புருவங்கள். சபாரி ஆடைக்குள் சலிப்படைந்த உடல், அந்தச் சுழல் நாற்காலியில் கால்மேல் கால் போட்டு, அந்தப் பைலை, அவர் கவனித்துக் கொண்டிருந்தபோது –

டெலிபோன் மணி அடித்தது. எந்த டெலிபோன் அடிக்கிறது என்பதைக் கண்டறிய, பூனை கருவாட்டைப் பார்ப்பது போல, மோப்பமாகப் பார்த்துவிட்டு, ஒன்றை லபக்கென்று பிடித்துக் கொண்டார். ஆரம்பத்தில் அலட்சியமாக ‘யெஸ்’ என்று, எதிர்முனையில் ஏதோ ஒருவர் பிச்சைக் கேட்பதுபோலவும், இவர் என்ன வேண்டும் என்று பதிலுக்குக் கேட்பதுபோலவும், பேசினார். பிறகு அலறிப் புடைத்து எழுந்தார். தடுமாறியபடியே பேனாவை எடுத்து, ஒரு தாள்மேல் குத்தியபடியே கத்தினார். அந்தக் கத்தல் தில்லிக்கு டெலிபோன் இல்லாமல் கூட கேட்டிருக்கும்.

“எஸ். ஸார். நோ வார். எஸ். எஸ். சார். வாட் சார்? ஈவினிங் சார். ஓ.கே. வார். அடடே. நீங்க தமிழ் ஆளா.. என்ன? நீங்கடைரெக்டர் இல்லையா? பி.ஏ.வா. அதுக்கென்ன?. அவசர விவகாரமா வாராரா?. உங்க பேரு?. மிஸ்டர் ராமதுரையா? ஸார். என்னைப்பற்றி கொஞ்சம் நல்லா சொல்லி வைங்கோ. நான் நல்லவனாக்கும். நான் ஒரு ஹலோ. ஹலோ. என்ன? பறந்து வாராரா. வரட்டும். அப்புறம் என்னைப் பற்றி.”

டெலிபோன் கட்டாகிவிட்டது. அது தானாய்க் கட்டானதா, அல்லது ஆதிகேசவனின் கய விளம்பரம் தாங்க முடியாமல் பி.ஏ.’ ராமதுரையே கட்டடித்து விட்டாரா என்று தெரியவில்லை. இது பற்றித் தாமும் யோசிப்பது போல், ஆதிகேசவன் நாற்காலியில் உட்காரமலேயே, காலைத் துாக்கி நின்றார். சே என்னைப் பற்றி தப்பா நினைச்சிருப்பானோ? யாசகம் கேட்டதா எண்ணியிருப்பானோ, டைரெக்டர் கிட்ட நான் காக்கான்னு அவரு காதில ஊதி என்னை இங்கே இருந்து ஊதித் தள்ளிவிடுவானோ..? முன்ன பின்ன தெரியாத இந்த ராமதுரையிடம் அப்படிக் கெஞ்சியிருக்கக் கூடாது. பொருன்னு சொல்லியிருக்கக்கூடாது.”

ஆதிகேசவன், தன்னை வேறுவிதமாக அடையாளப்படுத்திக் கொள்ள எண்ணி, டெலிபோனை சுழற்றிச் சுழற்றி, கடைசியில் வெற்றி பெற்றார்.

“ஹலோ… யாரு? ராமதுரையா? நான்தான். அதான் ஆதிகேசவன். சாயின்ட் டைரெக்டர். அப்போ டைரெக்டர், எப்ப மெட்ராசிவேருந்து புறப்படுவார்? என்ன விஷயமா வாராரு? ஓ.கே. சொல்ல வேண்டாம். ஆனா. நான் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ஏன்னா. நான். நெருப்புன்னா நெருப்பு. அடங்காத நெருப்பு. ஸ்ரைட் பாாவேர்டு. ஆமாம். இம்பார்சியல். டிசிசிவ். ஹலோ. ஹலோ.”

டெலிபோன், இப்போது தில்லி முனையில் மூஞ்சில் அடித்தாற்போல் வைக்கப்பட்டது, ஆதிகேசவனுக்கு நன்றாகவே உறைத்தது. அதனால் உடம்பெல்லாம் வியர்த்தது. கைகால்கள் அதிர்ந்தன. ராமதுரை பி.ஏதான். “நம்ம ரேங்குக்கு ரொம்ப ரொம்ப கீழேதான். ஆனா. ரைட்டான எடத்துல ராங்க் செய்யக்கூடிய நிலையில் இருப்பவன். அவனை, மாமா மச்சான் மாதிரி பேரமட்டும் மொட்டையா சொல்லியிருக்கப்படாது. புது டைரெக்டர். அவருகிட்ட என்ன சொல்லப் போறானோ. சே. அப்படி எல்லாம் சொல்ல மாட்டான். ஏன்னா அவனும் தமிழன். அய்யய்யோ.. அதனால்தான் சொல்லுவான். தமிழனுக்குத் தமிழன் இந்த உபகாரமாவது செய்யாமல் இருப்பானா?.”

ஆதிகேசவனால், மேற்கொண்டு சிந்திக்க முடியவில்லை. அன்றிரவே வரும் டைரெக்டருக்கு ஆவன செய்யணுமே?

ஆதிகேசவன், பஸ்ஸரை அழுத்தினார். அந்தச் சத்தம் கேட்டு, ‘கிளாஸ் போர் நாராயணன், அலறி அடித்து கைகால்களை பாவவாக் காட்டினானே தவிர, அவன் கால்கள் என்னமோ, மெல்லத்தான் நகர்ந்தன.

“இந்தாப்பா, நாராயணா உதவி இயக்குநருங்க, ஏ.ஓ., என்ஜினியர் எல்லோரையும் என் ரூமுக்கு உடனே வரச்சொல்லு. ஒடிப்போய் சொல், ஏய்யா பாராக்குப் பார்க்கிறே. டைரெக்டர் வர்ராரு ஒடிப் போ, ஒடிப்போ”

டைரெக்டர் என்னமோ, அந்த அலுவலக வாசலுக்குள் வந்தது போல், நினைத்த கிளாஸ்போர் நாராயணன், நிஜமாகவே ஓடினான். (நாராயண் இளைஞன், அதனால் ‘இன்னில்’ அறிமுகமாகிறான்) ஆதிகேசவனிடமிருந்து கழற்றிக் கொள்ளும் வகையிலும் ஓடினான். ஆனால், ஆதிகேசவன் அவனை மட்டும் நம்பவில்லை. இன்டர்னல் டெலிபோனில் எல்லோரிடமும் சொல்லிவிட்டு, அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். இன்னும் அவர்கள் வரவில்லையே என்று, கதவைத்திறந்து எட்டிப் பார்த்தார். பிறகு, அவரே வெளியில் ஓடி, ஒவ்வொருவரின் அறைமுன்னால் நின்று, கிராமத்தில் துஷ்டிக்குச்சொல்வதுபோல, டைரெக்டர் வருகையைச் சொன்னார்.

எப்படியோ, அனைத்து மேனேஜ்மெண்ட் கேடர் அதிகாரிகளும் வந்து விட்டார்கள். அந்த அறையின் பாதி இடத்தை ஆக்கிரமித்த சோபா செட்டில் உட்கார்ந்தார்கள். ஆதிகேசவன், ஒரு துண்டு சோபா நாற்காலியில் சவாரி போட்டார். எதிரே இருந்த நீண்ட சோபாவில் அசிஸ்டெண்ட் டைரெக்டர் இளங்கோவும், இன்னொரு அசிஸ்டண்ட் டைரெக்டர் மைதிலியும் கலியாண ஜோடிபோல் உட்கார்ந்திருந்தார்கள். இருவரும் யூனியன் சர்வீஸ் கமிஷன் மூலம் நியமனமான டைரெக்ட் ரெக்குருட் மென்டகள். முஸொரி டிரையினிங்ல ஒன்றாகச் சேர்ந்தவர்களாம். இந்த இருவரும், மற்றொரு அசிஸ்டென்ட் டைரெக்டர் அருளப்பனை இளக்காரமாகப் பார்த்ார்கள். கிளார்க்காய் சேர்ந்து இந்த ஐம்பத்தியெழறை வயதில் அசிஸ்டென்ட் டைரெக்டரான மனிதர். ஆப்டர் ஆல் ‘புரோமோட்டிவ்’.

அந்த அருளப்பனோ, இந்த இருவரையும் கோபத்தோடு பார்த்தார். ‘காதலிக்கத் தெரியுது. ரூல்ஸ் ரெகுலேஷன்தான் தெரியல. தெரிஞ்சுக்கவும் விரும்பல. ஆனாலும், பயபுள்ளிக நல்லாத்தான் இருக்கு. அவனுக்கு உருளைக்கிழங்கு மாதிரி உடம்புன்னா, இவளுக்கு தக்காளி மாதிரி வடிவம். என் காலத்துல இப்படி ஒரு சங்கதி எனக்குக் கிடைக்கலியே!’

கூட்டு இயக்குனர் ஆதிகேசவன், எல்லோரையும் கூலாகப் பார்த்துவிட்டுப்பேசினார். ஏலம் போட்டு பேசுவதுபோல் தகவல் சொன்னார்.

“டைரெக்டர் வர்ராரு… இன்னிக்கு வர்ராரு. நைட்ல வர்ராரு…”

“எதுக்காக வாராராம்?”

“அதெல்லாம் கான்பிடன்சியல்”

“அதாவது உங்களுக்குத் தெரியாதுன்னு சொல்றீங்களா?”

மைதிலி, அப்படிக் கேட்டுவிட்டு சிரித்ாள். பின்னர், அந்த சிரிப்பு புன்னகையாக, இளங்கோவின் காதைக் கடித்தாள். அவனும் பதிலுக்கு கிசுகிசுத்தான, “ஒண்னு கிடக்க ஒண்ணு பேசாதே. இந்த கிழம் பொல்லாதது. நீயும் நானும் புரோபேஷன்ல இருக்கோம். இது ரிப்போர்ட் சரியா எழுதினால்தான், நாம பர்மெனன்ட்டாக முடியும்.”

‘புரோமோட்டிவ்’ அருளபயன், கோபத்தை அடக்க முடியாமல், வெற்றிலையைத் துப்பும் சாக்கில் வெளியே போய்விட்டு வந்தார். ‘என்ன காதல் வேண்டிக் கிடக்கு.? அதுவும் இந்தச் சமயத்தில. நான் மட்டும் மைதிலி மாதிரி பேசியிருந்தா, இந்த ஆதிகேசவன் சும்மா இருந்திருப்பாரா? தாளிச்சிருக்க மாடடார்,? நேரடி நியமன உதவி இயக்குநர்கள் என்றால், பாஸுக்குக் கூட பயம். பொண்ணுன்னா பொட்டப் பயலுக்குக் கூட சகிப்புத்தன்மை. சே. சே. என் சர்வீசில இப்படி ஒரு.

வெற்றிலையைத் துப்பிவிட்டு உள்ளே வந்த அருளப்பனை ஆதிகேசவன் அதட்டினார்:

“கான்பரன்ஸ்ஸுக்கு வெற்றிலையோடு வரப்படாதுன்னு எத்தனவாட்டி சொல்றது மிஸ்டர்?”

அருளப்பன், சோர்ந்து போய், பொத்தென்று உட்கார்ந்தார். ‘பாஸ் பார்க்கிற பார்வையே சரியில்லையே? ஒழுங்காக ரிட்டயர்டு ஆக விடமாட்டானா? ஏன் இந்த மைதிலியும் முகத்தில் ஈ ஆடாமா இருக்கா? …’ஊடலா’.

ஆதிகேசவன், பொதுப்படையாகப் பேசினார்.

“டைரெக்டர் புதுக கொஞ்சம் அதட்டலானவருன்னு கேள்வி. எங்கே ரூம் புக் பண்ணலாம்?”

“ஸ்டேட் கவர்ன்மெண்ட் சேப்பாக் கெஸ்ட் ஹவுசில் செய்யலம் வார்.”

“துறைமுக கெஸ்ட் ஹவுஸ் ஈசி வார்.” “எப்.சி.ஐ. கெஸ்ட் ஹவுசையும் பார்க்கலாம் எயார்”

“பெல் கெஸ்ட் ஹவுகம் இருக்கு வார். எதுன்னு நீங்கதான் சொல்லனும் சார்”

“எல்லா கெஸ்ட் ஹவுஸையும் புக் பண்ணிடலாம். டைரெக்டருக்கு எது பிடிக்குதோ அதுல.

‘டைரெக்டர் ஒவ்வொரு கெஸ்ட் ஹவுசா பர்ாக்கிறதாய் இருந்தால், அவர் துரங்க முடியாது. பொழுது விடிஞ்சுடும்”

இப்படிச் சொன்ன, என்ஜினியரை ஏகாம்பரம், பொடிப் பொடியாய் பார்த்தார். ஏதோகெஸ்டட் என்று உள்ளே விட்டால் ரொம்பதான் பேகறான். உடனே, கான்ட்டிராக்டர் இவரிடம் எப்படி பயப்படுகிறாரோ, அப்படி இந்த என்ஜினியர் ஆதிகேசவனிடம் பயப்பட்டார். இப்படி சொன்னதற்காக, தண்ணி இல்லாதக் காட்டுக்கு மாற்றணும்னு எழுதிவிடுவாரோ?. சே. கான்பரன்ஸிலே வாயை திறக்க கூடாதுன்னு ஏன் என் புத்திக்கு உறைக்கல.’

இந்தச் சமயத்துல நிர்வாக அதிகாரியான ஏ.ஓ., ஒரு ஆட்சேபனையைக் கிளப்பினார். அதற்காகவே பிறந்த மனிதர்போல், அவர் மோவாயும் மூக்கும் கேள்விக்குறி வடிவத்தில் இருக்கும்.

“சேப்பாக் கவர்ன்மெண்ட் கெஸ்ட் ஹவுசில தங்கணுமுன்னா, டூர் வருகிற அதிகாரி ஸ்டேட் கவர்ன்மென்ட் செகரட்டிரி அந்தஸ்துல இருக்கணும். நம்ம டைரெக்டர், டெபுடி செகரட்டிரி ரேங்தான். அவருக்கு ரூம் கிடைக்காது. அதனால முயற்சி செய்யக்கூடாது.”

சின்னஞ்சிறுககளான அசிஸ்டென்ட் டைரெக்டர்களைப் பார்த்து ஒருவித தாழ்வு மனப்பான்மை கொள்ளும் புரமோட்டி அருளப்பன், இருத் நிர்வாக அதிகாரியை பார்க்கும் போதெல்லாம் தன்னைப் பற்றியே கொஞ்சம் கொண்டாட்டமாக நினைப்பவர். ரகசியமாக இரண்டு வெற்றிலையில் கண்ணாம்பைத் தடவினார். இந்த ஏ.ஓ.வை விடப்பாடாது. ஜி.பி.எப் அப்ளிகேஷனை எவ்வளவு நாளா வச்சிக்கிட்டு இருக்கான்?

“என்ன.ஏ.ஓ.சார்? எப்போ பார்த்தாலும் அப்ஜக்ஷன்தானா? இடையில இப்படிதும்மப்படாது.கெஸ்ட் ஹவுஸ் ஆபீசருக்கு நீங்க சொல்ற ரூல் தெரியாது. அவருக்கு டெலிபோன் செய்தே சொல்லிக் கொடுப்பீங்கபோலிருக்கே? அந்த பப்ளிக்டிபார்ட்மென்டல அன்டர் செகரட்டரியா இருக்கிற ஐ.ஏ.எஸ் கனகா, நம்ம மைதிலியோட முசெளரியில… டிரயினிங் படிச்சவள். இவங்கள அனுப்பினா, ரிசர்வேஷன் சிலிப்பை கையோட வாங்கிட்டு வந்துடுவாங்க.”

மைதிலிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இந்த ஆதிகேசவ அசடுவிடம், நல்ல பெயருவாங்குவதற்கு ஒரு சான்ஸ், புரபேஷன். புரோமோஷனாக ஒரு வாய்ப்பு. விடப்படாது. அந்த கனகா திமிரு பிடிச்சவள்தான். ஆனாலும், கையில காலிலே விழுந்து அந்த ஐ.ஏ.எஸ். திமிருக்கு சலாம் போட்டு, அனுமதி ‘சிலிப் வாங்கி ஆகணும்.

“எஸ். ஸார். கனகா என்னோட பெஸ்ட் பிரண்ட் ஸ்ார். எதெற்கெடுத்தாலும் என்கிட்டதான் சந்தேகம் கேட்பாள். நான் போய் ரிசர்வ் செய்திட்டு வரேன் சார். எதுக்கும், மிஸ்டர் இளங்கோவனையும் என்னோட அனுப்புங்க சார். அவருக்கும் அந்தக் கனகா டிரைனிங் மேட்”

அருளப்பன், தன்னையறியாமலே நாற்காலியில் உடம்பைச் சாய்த்து, பேசினார்

“என்ன மேட்டோ இருந்துட்டு போகட்டும். நீ ஒருத்தி போதாதம்மா.. அகாய சூரியாச்சே. மிஸ்டர் இளங்கோவிற்கு ஜே.டி., வேற ரெஸ்யான்சிபிலிட்டி கொடுப்பார். நீ மட்டும் போ. இந்த ஏ.ஓ. சொன்ன ரூல்ஸ்ல ஒடிச்கப் போடறது மாதிரி ரிசர்வ் பண்ணிட்டு வந்துடு.”

மைதிலி, தயங்கித் தயங்கிப் போனாள். இளங்கோவிற்கு, இருப்புக் கொள்ளவில்லை. காதலியைப் பிரித்த காதகனான அருளப்பனை கண் குத்திப் பார்த்தான். பிறகு அந்தக் கூட்டத்தில் ஏதாவது கேளாறு செய்ய வேண்டும் போல் இளங்கோவிற்கு தோன்றியது. செய்யவும் துவங்கினான்.

“சார். சார். டைரெக்டர் எந்த பிளைட்ல வாரார்?”

“என்ன கேள்வி மிஸ்டர்? டில்லி பிளைட்தான்”

“டில்லியில் ரெண்டு பிளைட் இருக்கு… ஒன்று சென்னைக்கு நேரா வருது. இன்னொன்ரு ஹைதராபாத் வழியா வருது. இதுல எந்த பிளைட்ல வருவாருன்னு தெரியுமா?”

“அடக் கடவுளே.”

இளங்கோ விடவில்லை.

“எனக்குத் தெரிஞ்சு புது டைரெக்டர் ஹரிசிங், ரயிலுல வரத்தான் ஆசைப்படுவாரு… எங்க முலொரி டிரையினிங்கல அவர் கிளாஸ் எடுக்கும்போது, கூடுமானவரை விமானப் பயணத்தை அவாய்டு செய்யுறதா, சொன்னாரு

‘நானே கேட்டேன்யா… அவர் பறந்து வரார்ருன்னு ராமதுரை சொன்னான். அதான் அவரோட பி.ஏ. சொன்னான்.”

“பறந்து வரார்ருன்னு சொன்னதை, ஏன் பிளைட்டுன்னு எடுத்துக்கிறீங்க? அவசரம் அவசரமாவாராரு எங்கிற அர்த்தத்துவ சொல்லி இருக்கலாமில்லயா?”

‘அடப்பாவி.. அவன் தமிழ் ஆர்வத்துக்கு நானா அகப்பட்டேன்?”

ஆதிகேசவன் டெலிபோனை கற்றோ கற்றென்று கற்றினார். தில்லி ராமதுரைக்கு டெலிபோன் காவடி எடுத்தார். லயன் கிடைக்கவில்லை.

இப்போது ஏ.ஓ., ஆடிட் அப்ஜக்கஷனுக்கு பதிலைக் கண்டுபிடித்தவர் போல், துள்ளிக் குதித்துப் பேசினார்.

“நம்ம போனுக்கு யாராவது கால் போட்டாலும், லயன் கிடைக்காது. கொஞ்சம் டெலிபோனை அப்படியே வையுங்க சார்…”

ஆதிகேசவன், டெலிபோனை வைக்கவும், அது மணி அடித்து முனங்கவும் சரியாக இருந்தது. ஒரு வேளை அது தில்லி காலோ என்று பயபக்தியுடன் எடுத்து, எரிந்து எரிந்து விழுந்தார்.

“நான் டில்லி லயன் கிடைக்கலேன்னு அவஸ்தைப் படறேன். உனக்கு, பாமாயில் கிடைக்கல என்கிறதா பெரிசாப் போச்சு. டெலிபோனை வை. என்ன… மிரட்டறே? வீட்டுக்கு வந்தா என்னடி பண்ணுவே. வைடி போனை.”

ஆதிகேசவன், டெலிபோனை வைக்காமல் காதுகொடுத்துக் கேட்டார். அவர் மட்டுமல்ல, அங்கேயிருந்த எல்லாரும்; அவர் மனைவி தர்மபத்தினி, கணவன் சொன்ன சொல்லைத் தட்டாதவர்.

ஆகையால், அவர் ‘வைடி என்று சொல்லிவிட்டதால், அவரை மட்டுமல்ல, அந்த ஆபீசில் அவளுக்குத் தெரிந்த மற்றவர்களையும் வைதாள், வைதாள் அப்படி வைதாள்.

ஆதிகேசவன், கூனிக்குறுகி டெலிபோனை வைத்தார். டில்லிக்குச் சுழற்றப் போனார். டயல் சத்தமே கேட்கவில்லை. இளங்கோ விளக்கமளித்தான்.

“எதிர்முனையில் பேசினவங்க, டெலிபோனை ஏறுக்கு மாறா வைத்தால், வேற நம்பருக்கு பேச முடியாது சார். மேடம் ஆதிகேசவன் போனை சரியா பொருத்தாமல் ஓரங்கட்டி வைத்திருப்பாங்க.”

ஆதிகேசவன், குரங்கு ஓணானைப்பிடித்துப்பார்ப்பதுபோல, டெலிபோனை எடுத்து டயலிங் சத்தம் வருகிறதா என்று கேட்டார். வரவேயில்லை. அய்யோ. பிளேனா. ரயிலா. தெரிஞ்சாகனுமே என்று ஒரு எழுத்துக்கு ஒரு தடவை புலம்பியபடி, டெலிபோன் குமிழை எடுத்தார். ஆனாலும் மறுமுனையில் தர்மபத்தினி டெலி போனை சரியாக வைத்ததுபோல் தெரியவில்லை. எப்படியோ கால் மணிநேரத்திற்கு பிறகு டயல் சத்தம் கேட்டது. பி.ஏ., ராமதுரைக்கு போன் போட்டார். மணி அடித்தது. ஆனால் மகராஜன் இல்லை.

“டைரெக்டருடைய வீட்டுக்கு போன் போடுங்க சார்”

போட்டார். உடனே மணி அடித்தது. ஏஸ். என்ற குரலைக் கேட்டதும், ஆதிகேசவன் எழுந்தார். குழைந்து குழைந்து பேசினார்.

“ஹலோ சார். எஸ் சார். குட் ஈவினிங் சார். நமஸ்தே சார். ஐ யாம் சாயின்ட் டைரெக்டர் ஆதிகேசவன் சார். குச்சிருையி சார். அப்புறம் சார். சாரி சார். ஐ தாட் யு தமிழ் நோ சார். ஐ யாம் நாட் தமிழ் வெறியன் சார். பை தி பை சார். ஆப்கா கமிங் ட்ரெயின் ஆர் பிளேன்.கம்மிங் பை.ட்ரெயின். தாங்க்யூ சார்.வெளிவெளிதாங்க்யூ சார். என்ன யூ ர் நாட் டைரைக்டர் ஹிஸ் சன்.”

ஆதிகேசவன், அனைவரையும் பார்த்து பரிதாபமாக கருத்துரைத்தார்.

‘இந்த காலத்துல பெரிய பொறுப்புல இருக்கிறவங்களோட மவனுகளும் மிரட்டுராங்க. தப்பித் தவறி வாயில தமிழ் வந்ததுக்காக என்னை போய் தமிழ் வெறியரை இருக்கபடாது என்கிறான், அந்த பயல்;

‘புரோமோட்டி அருளப்பன், ஆதிகேசவனுக்கு, ஆறுதல் சொல்லாமல் கடுக்காய் கொடுத்தார்.

“ஆனா சார். ஒரு வேள… இங்கிருந்து புறப்படறதை கம்மிங்ண்னு சொல்லியிருக்கலாமே?”

“என்னய்யா சொல்றே?”

“எஸ் சார். அங்கே இருந்து கம்மிங்ன்னு டெலிபோன்ல சொன்னா, டில்லிக்கு கம்மிங்ன்னு அர்த்தம். இங்கிருந்து கம்மிங்ன்னாடில்லிக்கு கோயிங்க்னு அர்த்தம். எனக்கென்னமோ டைரெக்டரு மகன், அவன் அப்பன் ரயிலில சென்னையிலிருந்து புறப்படறத சொல்லியிருப்பான். ராமதுரை ஏற்கனவே அவரு வருவதை உங்ககிட்ட சொல்லிட்ட அனுமானத்துல போகிறதை மட்டும் சொல்லியிருப்பான்.”

ஆதிகேசவன் உச்சந்தலையில் இரண்டு கைகளையும் சேர்த்துக் கட்டினார். இளங்கோ ஒரு யோசனை சொன்னான்.

“டைரெக்டர் மகன் கிட்ட பழையடியும் பேகங்க சார்”

“அவ்வளவுதான். அப்புறம், அவன் அப்பன வரவேற்க நானிருக்கமாட்டேன். பிள்ளைக்காரன் அவரு காதுல ஊதிடுவான். தற்செயலா தமிழிலபேசினதே தப்பாப்போச்சு. இந்த ஆசாமி மட்டும் காலிஸ்தான் ஆளாக இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்?”

இளங்கோ, இடைமறித்தான்.

“சார். இப்ப ஆக வேண்டிய வேலையை கவனிக்கலாம்.”

“ஒ. கே. ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு குரூப் போகட்டும். ஏர் போர்ட்டுக்கு ஒரு குரூப் போகட்டும். எங்கே வராரோ அங்கே பிக்கப் செய்யலாம். அப்புறம் ஏ.ஓ! ஒங்களைத்தான். நாளைக்கு எல்லாரையும் ஆபீசுக்கு வழக்கமாக வர நேரத்தில் வரச் சொல்லுங்க…”

“நாளைக்கு ஹாலிடே சார். நல்ல டேயிலேயே வரமாட்டாங்க”

‘டேய்’ என்ற வார்த்தையை அழுத்தம் திருத்தமாய் சத்தம் போட்டு உச்சரித்த நிர்வாக அதிகாரியை நோக்கி ஆதிகேசவன், கண்டிப்புடன் சொன்னார்.

“நாம் மானேஜ்மென்ட் கேடர். நமக்காகத்தான் அவங்க இருக்காங்களே தவிர, அவங்களுக்காக நாம் இருக்கல. மானேஜ்மென்ட் கேடர் எப்போ கூப்பிட்டாலும் வரணும். சரி, மிஸ்டர் ஏ.ஓ.! உங்க பட்டாளத்த கூப்பிடுங்க”

நிர்வாக அதிகாரி, டெலிபோனில் எதையோ பேசினார். பத்து நிமிடத்திற்குள் நான்கைந்து கிளார்க்குகள் பறந்து வந்தார்கள். அவர்கள் உட்கார இடம் இருந்தாலும், உட்காரவும் இல்லை. மானேஜ்மென்ட் கேடர் அவர்களை உட்காரவும் சொல்லவில்லை. இளங்கோ, அவர்களிடம் ஏதோ சொல்லப் போனான். பிறகு ‘கிளாஸ் திரிகளிடம் மேஸ்திரி மாதிரியான நிர்வாக அதிகாரிதான் பேச வேண்டுமே தவிர, அசிஸ்டன்ட் டைரெக்டர்பேசுவது கெளரவக்குறைவு என்பதுபோல் பேசமாமல் இருந்தான். எவரும், அந்த கிளார்க்குகளை முகம்பார்த்து நோக்கவில்லை. ஆதிகேசவன் கூட, ஏ.ஓ.வைப் பார்த்து, சொல்லுங்கள் என்பது மாதிரி கண்களால் சொன்னார். அந்த நிர்வாக அதிகாரியும், அவர்களுக்கு என்னவெல்லாமோ சொன்னார். ஒவ்வொருவருக்கும் ஒரு கெஸ்ட் அவுஸ் ரிசர்வ் செய்ய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. சிலர் விமான நிலையத்திலும், ரயில் நிலையத்திலும எடுபிடிச் சாமான்களைத் துாக்குவதற்காக நிறுத்தி வைக்கப் பட்டார்கள்.

அப்படியும் இப்படியுமாய் ஒரு சினிமா பட நேரம் முடிந்தது. ஆதிகேசவன், எவரையும் வெளியே அனுப்பவில்லை. தேநீர் குடிக்கக்கூட விடவில்லை. அசிஸ்டென்ட் டைரெக்டர் அருளப்பன், எஞ்ஜினியர் ராமு இரண்டு கிளார்க்குகள், இரண்டு கார்களில் சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டார்கள். ஆதிகசவன் இளங்கோவைப் பார்த்து போகலாமா என்பது போல், பார்த்தால் இளங்கோ ஏடாகோடமாய் பதிலளித்தான்.

“இந்த டெல்லி பிளைட்டே சரியான டைம்முக்கு வரதில்லை சார் எதுக்கும் டெலிபோனில பிளைட் டைமை செக்கப் செய்துட்டு போகலாம் சார்”

“நீ வேற… இங்கே இருக்கிறத அங்கே இருப்போம். டெலிபோன்ல அவன் ஏதாவது சொல்ல, நாம் அத நம்ப, கடைசில நம்ம நம்பி வர்ர டைரெக்டர் திரிசங்குவா ஆயிடுவார். நத்திங் டூயிங். புறப்படு.”

சென்னை விமான நிலையத்திற்குள் வந்த ஆதிகேசனும், இளங்கோவும், மூன்று கிளார்க்குகளும், பிளைட் நேரம் காட்டிய தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தார்கள். இரண்டு விமானங்களும், இரண்டு மணிநேரம் லேட். இளங்கோ ஆதிகேசவனை, குற்றவாளி போல் பார்த்துவிட்டு, பிறகு முகத்தை வேறுபுறமாக திருப்பிக் கொண்டான். அப்போது ஆதிகேசவனுக்கு ஒரு திடீர் எண்ணம்.

“இந்தாப்பா இளங்கோ. சென்ட்ரல்ல டிரயின் வர்ர சமயம் இது. நானும் ஏ.ஓ.வும் அங்கே போய் அவரைப் பார்த்துவிட்டு வந்துடுறோம். பிளைட்க்கு முன்னால வந்துடுவோம்.”

“சில சமயம் பிளேன் கொஞ்சம் சீக்கிரமாகவும் வரலாம் சார்”

“அதனால என்ன? உனக்குத்தான் டைரெக்டரு முசெளரியிலேயே தெரியுமே. அவரை வரவேற்று எப்படியோ பேசிக்கிட்டே இரு. நாங்க வந்துடறோம். ஒருவேளை ரயிலில் வந்தால் ஏ.ஓ.வ. உன்கிட்ட அனுப்பி வைக்கிறேன்.”

ஆதிகேசவன், நிர்வாக அதிகாரியுடன் ஒடிவிட்டார். இளங்கோ தேள்கடி திருடன் போல் விழித்தான். எப்படி இந்த டைரெக்டரை, பயணிகள் வெள்ளத்தில் கண்டுபிடிக்கிறது? முட்டாள்த்தனமா அவரைத் தெரியுமுன்னு வேற பெருமை அடிச்கட்டேன்.

இளங்கோ, அங்குமிங்குமாக அலைந்தான். அந்த விமான நிலையத்தில் கம்பிகளில் பொருத்தப்பட்ட ஒரு பிளாஸ்டிக் நாற்காலி யில் உட்கார்ந்தான். தொலைக்காட்சி அறிவிப்பைப் பார்த்தான். கண்ணாடிக்குள் வைக்கப்பட்டநாகரீகப்பொருட்களைப்பார்த்தான். செக்யூரிட்டி ஆசாமிகளின் சட்டைப் பட்டன்களை எண்ணினான். அவர்களின் துப்பாக்கிகளுக்குள் எத்தனை ரவை இருக்கும் என்று கணக்குப் போட்டான். பிறகு, இதுவும் போததென்று சக அதிகாரியான மைதிலியிடம் பட்டும் படாமலும், தொட்டு தொடாமலும்கூத்தடித்த நிகழ்வுகளை கண்முன்னால் நடப்பதுபோல் மீண்டும் புதுப்பித்துக் கொண்டான்.

எப்படியோ ஒரு மணி நேரத்தை ஒட்டிய பிறகு தற்செயலாகத் திரும்பினால், எதிர்த்திசையில் எலிவேட்டரில், பொம்மைகள் போல் மனிதர்கள் ஆடாமல் அசையாமல் நின்றார்கள். பிறகு கீழ்நோக்கி நகர்ந்தார்கள். அடடே. தில்லி பிளைட் வந்துடுச்சே.

இளங்கோ, விமான தளத்திற்குள் சுழன்று சுழன்று செல்லும் கன்வேயர் பெல்ட்டில் பெட்டிகளை எடுக்கப் போன மனிதர்களையும், கையில் பெட்டிகளை வைத்துக் கொண்டு நேராய் வாசலுக்குப் போனவர்களையும் விட்டுவிட்டுப் பார்த்தான். இந்த டைரெக்டர் எப்படி இருப்பான்? சர்தார்ஜியா? இல்ல பஞ்சாபியா? இல்ல ராஜஸ்தானியா? கருப்பா, சிவப்பா?

இளங்கோ, ஒவ்வொரு பயணியாக உற்றுப் பார்த்தான். மாலை போட்டு வரவேற்கப் பட்டவர்களையும், கட்டித் தழுவி எதிர்கொண்டு அழைத்தவர்களையும் விட்டுவிட்டு, பே’ என்று தனியாக யாரும் நிற்கிறார்களா என்று பார்த்தான். ஒரு பேயிடம்’ போய் ‘ஆர் யூ ஹரி சிங்?” என்றான். அவர் முறைத்த முறைப்பில் வேறுபக்கம் போனான். எந்தப் பேயும் அங்கே இல்லை. ஒரு வேளை வெளியே போய் ஹரிசிங் நிற்கலாம் என்று ஓடினான், ஓடினான். விமான வழி வாசல் ஓரத்திற்கே ஓடினான்.

இதற்குள் இன்னொரு சத்தம், திரும்பிப் பார்த்தால், இன்னொரு தில்லி விமானம். எலிவேட்டரில் பழைய பயணிகளே, கீழ்நோக்கிப் போய் மேல் நோக்கி வருவதுபோல் இருந்தது. ஒரே மாதிரியான சர்தார்ஜிகள். ஒரே மாதிரியான பைஜாமாக்கள். பொதுப்படையான புடவைகள். இங்கிலீஸ் கலர் பெட்டிகள்.

இளங்கோ மீண்டும் அவர்களைச் சல்லடை போட்டான். எவரும் தனித்து நிற்கவில்லை. அங்குமிங்கும் பார்க்கவில்லை. இளங்கோ பயந்து போனான். ஆனாலும் லேசாக நிம்மதி. ஆசாமி, ரயிலில்தான் வந்திருப்பார். ஆதிகேசவன் அவரைப் பிடித்திருப்பார். எனக்கு வேலை மிச்சம்.

இளங்கோ, கால்மணிநேரம் இளைப்பாறுகிறவன் போல், கால் மேல் கால் போட்டு, கச்சிதமாக இருந்தான். அப்போது, ஆதிகேசவன், நிர்வாக அதிகாரியுடனும், மூன்று கிளார்க்குகளுடனும் ஒடோடி வந்தார். வரும்போதே பேசிக் கொண்டு வந்தார். “இளங்கோ. இளங்கோ. டைரெக்டர எங்கேப்பா வச்சிருக்கே? அதிக நேரமா காத்திருக்காரோ?”

இளங்கோ ஆதிகேசவனை பார்க்க முடியாமல் பார்த்தான். பிறகு தட்டுத்தடுமாறி சமாளித்தான்.

“இங்க வர்ல சார். அங்கேதான் வந்திருப்பாரு…”

“ஏன் மிஸ்டர் உனக்கு பதவிக்குரிய திறமை இல்வியே. அங்க வந்திருந்தால், நான் எதுக்கு இங்கே வரேன்? நெசமாவே உனக்கு டைரெக்டர் நேரடியா தெரியுமா, இல்ல புளுகுனியா? அய்ய்யய்யோ.. மோசம் போயிட்டேனே. இந்த இளங்கோவால மோசம் போயிட்டேனே. இந்த ஏ.ஓ. அப்பவே மறிக்கிறது மாதிரி அபசகுனமா பேசினார். அது பலிச்சுட்டே… மோசம் போயிட்டேனே. மோசமாய் போயிட்டேனே.”

ஆதிகேசவன், அலறும் ஒசைக்கு பின்பாட்டுப்பாடுவதுபோல், எல்லோரும் இக்கன்னாபோட்டார்கள். ஆதிகேசவனுக்கு டைரெக்டர் என்ன செய்து விடுவாரோ என்று பயம். இவர்களுக்கு ஆதிகேசவன் என்ன செய்திடுவாரோன்னு பயம். இந்தச் சமயத்தில் மைதிலி வந்தாள்.கையில ஒரு செவ்வகக் காகிதத்தை ஆட்டியபடியே சிலுக்கி மினுக்கி வந்தாள்.

“சக்சஸ் சார் சக்க்சஸ். ரிசர்வேஷன் கிடைச்சுடுத்து. ஏ.ஓ. சொன்னது மாதிரி நம்ம டைரெக்டருக்கு கெஸ்ட் ஹவுசில தங்க. அந்தஸ்து இல்ல. ஆனாலும் நான் வாங்கிட்டேன.”

“இந்தாம்மா… உன் பெருமைய அப்புறம் வச்சிக்கோ. இல்லன்னா நீ போய் தங்கிக்கோ.”

மைதிலி ஒன்றும் புரியாமல் விழித்தபோது, அவள் விழியோடு விழிவிட்ட இளங்கோ, ஏதோ ரகசியமாகச் சொன்னான். இந்தச் சமயத்தில் எடுபிடி ஆட்கள் மாதிரி நின்ற கிளார்க்குகளில் ஒரு துடிப்பான இளைஞன் தடிப்பாகக் கேட்டான். யூனியன் லீடர். அவர்களுக்கு கேட்கும்படி தனது சகாக்களிடம் ஒரு சொற்பொழிவையே நிகழ்த்தினான்.

“டைரெக்டரும் ஒரு மனுசன்தான். அவர் வராருங்கிற எக்சைட்மென்டல நடந்ததினால ஏற்பட்ட விவகாரம் இது. ரயில்வே ஸ்டேஷன்லேயும் ஏர்போர்டிலேயும் மிஸ்டர் ஹரி சிங். வி.ஆர் ஹியர்”. அப்படின்னு ஒரு அட்டயை வச்சுட்டு இருந்தால், இந்த வம்பே வந்திருக்காது. மேலதிகாரியைப் பார்க்கும் போதும், அவரை ஒரு மனுஷனா நினைச்கப் பேசியிருந்தால், இப்படி வந்திருக்காது. தெய்வமா நினைக்கிறதாலே ஏற்பட்ட கோளாறு. இப்ப அந்த தெய்வம் என்னச் செய்யப் போகுதோ… எனக்கென்னப்பா வம்பு?. நாட்டுக்கு ஜனநாயகம் வந்தாலும் நிர்வாகத்துக்கு இன்னும் வர்ல”

ஆதிகேசவன் தலைமையில் நின்ற அந்த மானேஜ்மென்ட் கேடர், சொற்பொழிவாளனை நேருக்கு நேராகப் பார்க்கவில்லை. ‘ஆப்படர் ஆல் அவன் ஒரு கிளாஸ் திரி ஊழியன், நாமலோ கெஜட்டட் அவன்கிட்ட என்ன பேச்சு?”

– வாசுகி – 1993 – தலைப்பாகை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர், 2001, திருவரசு புத்தக நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *