(இதற்கு முந்தைய ‘மதுரை டிவிஎஸ்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).
பிறகு கருணாநிதியின் தலைமையில் இயங்கிக் கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி முறைகள் பற்றி அவன் அப்பாவும் டி.எஸ்.கிருஷ்ணாவும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பின் அப்பா விடைபெற்று எழுந்து கொண்டார். அன்றைக்கும் கிருஷ்ணா அவன் அப்பாவிற்கு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் கொடுத்தார்.
அப்போது கிருஷ்ணா அவனைப் பார்த்து, “நீ ஸ்மோக் பன்னுவியாடா?” என்று கேட்டார்.
அவன் “இல்லை” என்றான்.
கிருஷ்ணாவின் முகத்தில் அப்போது தோன்றிய சின்ன புன்முறுவலில் மேன்மைமிக்க ஒரு அழகு மிளிர்ந்தது.
டி.எஸ்.கிருஷ்ணா போன்ற சில அரிய அபூர்வ மனிதர்களுடன் அவன் அப்பாவிற்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டதற்குக் காரணம் அப்பாவின் நேர்மையும் எளிமையும்.
காமராஜ் அவரின் கடைசி காலம் வரை அவன் அப்பாவின் மேல் வைத்திருந்த மரியாதைக்கும் அதுதான் காரணம். இவர்களின் உறவில் இன்னொரு முக்கியமான சம்பவம் அவனுடைய ஞாபகத்தில் அழியாமல் இருந்து கொண்டிருக்கிறது…
அது 1954 ம் வருடமாக இருக்கலாம்.
அப்போது அவன் ஊரில் சட்டசபைக்கான உபதேர்தல் நடந்தது. அந்த உபதேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்கிற யோசனை ஏற்பட்டதும், காமராஜின் மனதில் உடனே தோன்றிய ஒரே மனிதர் அவன் அப்பாதான்.
உடனே அவன் அப்பாவிற்குச் சொல்லி அனுப்பப்பட்டது. ஒரு நிமிஷம்கூட யோசனை செய்யாமல் அப்பா அந்த வாய்ப்பை நிராகரித்தார். வெளிப்படையான அரசியல் வாழ்க்கைக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் வருவதில்லை என்ற அவரின் கொள்கையில் இருந்து அப்பா மாற்றிக் கொள்வதாக இல்லை.
அன்றைய சூழலில் அவன் அப்பா அந்தத் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் வெகு எளிதாக வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராகி இருப்பார். ஆனால் தாட்சண்யமே இல்லாமல் அப்பா வலியத் தேடி வந்த அந்த சந்தர்ப்பத்தைப் புறக்கணித்தார்.
அவன் அப்பாவின் இந்த அசைக்க முடியாத கொள்கையினால் காமராஜ் மிகவும் மனம் நெகிழ்ந்து போனார். அப்பாவின் நேர்மைகளில் நெகிழ்ந்து போகும் மனோபாவமும் மரியாதையும் காமராஜிடம் அவருடைய கடைசிக் காலம் வரை மாறாமல் இருந்தது.
வெளிப்படையான நேர் அரசியல் வாழ்க்கைக்கு அவன் அப்பா கடைசிவரை வரவில்லை. தேர்தல் வரும் காலங்களில் காமராஜுக்காக காங்கிரஸ் கட்சிக்கு சார்பான பணிகளில் அவன் அப்பா ஈடுபட்டதோடு சரி. அதே நேரம் நிஜமான காங்கிரஸ்காரராகவும், காந்தியவாதியாகவும் அப்பா இருந்தார். கவனமான அரசியல் பார்வையாளராகவும், தாட்சண்யம் இல்லாத விமர்சகராகவும் அவன் அப்பா இருந்து வந்தார். அவன் அப்பாவின் விமர்சனங்களுக்கும், கருத்துக்களுக்கும் காமராஜ் பெரிய மரியாதை காட்டினார். அதற்குக் காரணம் அப்பாவின் விமர்சனங்களில் சுயலாப உள் நோக்கங்களோ, தன் மேதாவித்தனங்களை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தந்திரங்களோ இருப்பதில்லை என்பதுதான்.
ஒரு சமயம் அவன் அப்பா காமராஜை கடுமையாக விமர்சனம் செய்கிற அரசியல் சம்பவம் ஒன்று நடந்தது.
பாரதப் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி திடீரென காலமாகியபோது, அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த காமராஜ், இந்திராகாந்தியை பிரதமாராக்கி விடும் விதத்தில் அரசியல் காய்களை நகர்த்தி விட்டிருந்தார். காமராஜின் அந்தச் செயலில் அவன் அப்பா மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகி இருந்தார்.
அவரின் அறிவு அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. சில மாதங்கள் சென்றபின் காமராஜ் டெல்லியில் இருந்து மெட்ராஸ் வந்திருந்தார். உடனே அவன் அப்பா விருதுநகரில் இருந்து கிளம்பி மெட்ராஸ் வந்தார். அப்போது அவன் மெட்ராஸ் வாழ்க்கைக்கு ஏற்கனவே வந்து விட்டிருந்தான்.
அப்பாவுடன் அவனும் காமராஜ் வீட்டிற்குச் சென்றிருந்தான். இந்த மாதிரி போகும்போது பொதுவாக அப்பா மதியநேர உணவின் போதுதான் போவார். அந்த நேரம் வேற விசிட்டர்ஸ் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால். காமராஜ் சாப்பிட்டுக்கொண்டே வந்தவரின் பேச்சை பொறுமையாகக் கேட்பார். அன்று அப்பா காமராஜை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவனுக்கு அப்பாவின் இந்தப் பேச்சு பயத்தையும் கவலையையும் கொடுத்தது. காமராஜ் இந்திராகாந்தியை பிரதமராக்கியது எந்தெந்தக் கோணங்களில் எப்படி எப்படி தவறானது என்று அப்பா விலாவாரியாக எடுத்துச் சொன்னார். அதைக்கேட்டு காமராஜ் சிறிதுகூட எரிச்சல் படவில்லை. கோபப்பட்டு முகம் சுளிக்கவில்லை.
அப்பா சொன்ன சில ‘பாயின்டுகளை’ காமராஜும் ஒப்புக்கொண்டார். ஆனாலும் அந்த நேரத்தில் மொரார்ஜி தேசாய் பிரதமராகி விடாமல் தடுப்பதற்கு இந்திராகாந்தியை பிரதமராக்குவது மட்டும்தான் காமராஜுக்கு ஒரே வழியாக இருந்தது. காமராஜ் அதைச் சிறிது விளக்கமாக அப்பாவிடம் எடுத்துச் சொன்னார்.
அவருடைய விளக்கத்தை அவனுடைய அப்பா ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பழுக்கு இல்லாத காந்தியவாதியான மொரார்ஜி தேசாய் பிரதமராக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதைக் காரணங்களோடு பதில் விளக்கம் தந்தார். இந்திராகாந்தி பிரதமரானதின் கசப்பான விளைவுகளை அரசியல் வாழ்க்கையில் ஒருநாள் காமராஜ் சந்திக்க வேண்டிவரும் என்று அப்பா அழுத்தமாகச் சொன்னார். அதைக்கேட்டு காமராஜ் சிரித்துக்கொண்டார்.
இந்திராகாந்தியை காமராஜ் பிரதமராக்கிய அரசியல் சம்பவம் அவன் அப்பாவின் மனதிற்குள் ஒரு காயமாக வலித்துக்கொண்டே இருந்தது. ஏதோவொரு கோணத்தில் இந்தியாவின் எதிர்கால அரசியல் குறித்து அவன் அப்பா பயப்படத் தொடங்கியிருந்தார்.
அவரின் சஞ்சலத்தை பல மடங்கு அதிகப் படுத்திவிட்டது 1967 ல் தமிழ்நாட்டில் நடந்த பொதுத்தேர்தல். காமராஜ் அவரின் சொந்தத் தொகுதியான விருதுநகரிலேயே தோற்றுப் போனார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றி அரசு அமைத்தது.
அவன் அப்பா அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். திமுகவின் ஆட்சித் தொடக்கத்தை அநாகரீக அரசியலின்; பொய்மையான சீலங்களின்; வெட்கங்கெட்ட வாய் ஜாலங்களின் ஆரம்பமாக அவன் அப்பா பார்த்தார். எல்லா நிலைகளிலும் திமுகவை SNOBS என அவர் கருதினார்.
சினிமாவில் அரசியலையும், அரசியலில் சினிமாவையும் கலப்படம் செய்தது போல, எல்லா விஷயங்களிலுமே அவர்கள் சமூகத்திற்குப் பாதிப்புத் தருகிற கலப்பட வியாபாரிகள் போன்றவர்கள் என அப்பா கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.
இன்னொரு விஷயமும் அவன் அப்பாவின் மனதை மிகவும் பாதித்திருந்தது. ஈவேரா பெரியாரின் திராவிடக் கழகத்திலிருந்து அண்ணாதுரையின் தலைமையில் ஒரு பெரிய அணியினர் பிரிந்து போய் திமுக என்ற கட்சியைத் தொடங்கியது. அவர்களை ஈவேரா பெரியார் விமர்சனம் செய்த மாதிரி வேறு யாரும் அந்த அளவு கடுமையாக விமர்சனம் செய்திருக்க முடியாது. ‘கண்ணீர்த் துளிகள்’ என்று பெரியார் திமுகவை தாட்சண்யம் இல்லாமல் கண்டனம் செய்தார். அதே நேரம் பெரியார் காமராஜை ‘பச்சைத் தமிழர்’ என்று புகழ்ந்தார்.
1967 தேர்தல் வரை அவரிடம் இதே போக்கு இருந்தது. தேர்தலில் ஆட்சியை திமுக கைப்பற்றியதும் பெரியாரிடம் திரண்டு சென்று அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட பிறகு, ஈவேரா பெரியார் அவர்களை ‘கண்ணீர்த் துளிகள்’ என்று விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொண்டார்.
Interesting Narrative. It brings before us the yesteryear’s reality and social happenings. Nice style! congratulations.