(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
25 ஜனவரி 1965
பின் இரவு; மணி மூன்று அல்லது மூன்றரைதான் இருக்கும். ‘மூன்றாவது ஷிப்ட்’ வேலை முடிந்து, நான் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சில்லென்று வீசிய காற்று, பாடாமலே என்னைத் தாலாட்டித் தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தது. ‘நடக்கட்டும் நடக்கட்டும், நானும் என் சைக்கிளும் தூக்கத்தில் எங்கேயாவது போய், எதிலாவது முட்டி மோதிக் கொண்டு நொறுங்கும் வரை உன்னுடைய திருவிளையாடல் நடக்கட்டும், நடக்கட்டும்!’ என்று நான் விழித்த கண் விழித்தபடி போய்க் கொண்டிருந்தேன்.
மறுநாள் பொழுது விடிந்தால் – விடிந்தால் என்ன, அது தான் விடிந்து விட்டதே! – குடியரசு தினம். முன்னெல்லாம் அதன் கோலாகலம் முதல் நாள் இரவே அங்கங்கே கொஞ்சம் தலை காட்டும்; அதாவது மூவர்ணக் கொடிகள் நிறைந்த தோரணத்தையாவது மக்களில் பலர் தாமாகவே முன் வந்து வீதிக்கு வீதி கட்டிக் கொண்டிருப்பார்கள். இப்போதோ அதுகூட இல்லை; ஆளுங் கட்சிக்காரர்கள் கூட அதற்குரிய காசை வாங்கி, ஆனந்தமாக சினிமாப் பார்த்து விட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறதே! தூங்கட்டும் தூங்கட்டும்; தேர்தலின்போது மட்டும் கொஞ்சம் விழித்துக் கொண்டிருந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது? நினைக்கட்டும்; நினைக்கட்டும்.
எதிர்க்கட்சிக்காரர்களுக்கோ இந்த வருடத்துக் குடியரசு தினம் ‘துக்க தின’மாகப் போய்விட்டது. ஆட்சிமொழி இந்தி நாளை அமுலுக்கு வரப்போவதாக அறிவித்திருப்பதால்! எனக்கென்னவோ இது பிடிக்கவில்லை; என்னைப் போன்றவர்களுக்கு எல்லாத் தினமுமே துக்க தினமாக யிருக்கும் போது, நாளை மட்டும் என்ன துக்க தினம் வாழுகிறதாம்?
இவ்வாறு எண்ணமிட்டுக் கொண்டே நான் வீட்டை அடைந்தபோது, எனக்காகக் காத்துக் கொண்டிருந்த என் மனைவி கதவைத் திறந்து விட்டு விட்டு எனக்குத் தெரியாமல் எதையோ எடுத்துச் சட்டென்று மறைக்கப் பார்த்தாள்; என்றுமில்லாத அந்த அதிசயத்தைக் கண்டு நான் துணுக்குற்று “என்ன அது?” என்றேன் ஒன்றும் புரியாமல்.
“அதற்குள் பார்த்துவிட்டீர்களா, அதை? ஒன்றுமில்லை, நீங்கள் போய்ப் பேசாமல் தூங்குங்கள்” என்றாள் அவள்.
சர்வ வல்லமையுள்ள சாட்சாத் கணவனாயிற்றே நான்! எனக்குத் தெரியாமல் அவள் எதையாவது மறைத்தால் அதை நான் பொருட்படுத்தாமல் இருப்பேனா? அப்படியிருந்தால் அவளைப் பொறுத்தவரை எனக்குள்ள ‘அதிகாரம்’ என்ன ஆவது? ஆகவே நான் ஆத்திரத்துடன், ‘”அது எனக்குத் தெரியும்; என்ன அது? அதைச் சொல், முதலில்!” என்றேன் விறைப்புடன்.
“சரியாய்ப் போச்சு போங்கள்! தூக்கம் கெட்டுப் போகுமே என்று பார்த்தால் அதற்குள் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டதா உங்களுக்கு? எனக்கென்ன வந்தது, எப்படியாவது போங்களேன்?” என்று சொல்லிக் கொண்டே அவள் எனக்கு முன்னால் ஒரு கடிதத்தை எடுத்து விட்டெறிந்துவிட்டு, “யாரோ தமிழ்மாறனாம்; அவர் உங்களிடம் இந்தக் கடிதத்தைக் கொடுக்கச் சொன்னாராம்; இது தான் விஷயம்; இதை நீங்கள் பொழுது விடிந்து பார்த்தால் என்னவாம்?” என்றாள், அதற்குள் எழுந்து அழ ஆரம்பித்துவிட்ட குழந்தையைத் தூக்கிச் சமாதானம் செய்து கொண்டே.
அவள் சொன்னபடி, அதைப் பார்க்கப் பொழுது விடியும் வரை காத்திருக்கவில்லை நான்; அப்போதே பிரித்துப் பார்த்தேன்:
நண்பர்க்கு,
இன்று காலை உங்களிடம் பேசிவிட்டு வந்ததிலிருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. நீங்கள் என்னதான் சொன்னாலும் தமிழுக்காக ஒரு சில தமிழராவது தங்களைத் தியாகம் செய்யாதவரை, இந்தி ஏகாதிபத்தியவாதிகள் இறங்கி வரமாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். அந்த நினைப்பைச் செயலாக்க என்னையே ‘முதல் பலி’யாக அவர்களுக்குக் கொடுத்து விடுவதென்றும் நான் தீர்மானித்து விட்டேன். இனி யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில் பொழுது விடிவதற்கு முன்னால் அது எப்படியும் நடந்துவிட்டிருக்கும்…
வருந்தற்க; எனக்குப் பின்னால் தமிழ் வாழ்வது போலவே என் தாயாரும் வாழவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அந்த விருப்பத்தை நம் ‘பாக்டரியிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டியிருக்கும். ‘கிராஜுடி, பிராவிடெண்ட் பண்ட்’ ஆகியவற்றின் தொகையைக் கொண்டு நீங்கள் தான் நிறைவேற்றி வைக்க வேண்டும். அதற்காகவே இந்தக் கடிதம்….
கடைசி வணக்கத்துடன்
தமிழ் மாறன்.
அட, பாவி! சாகும்போது கூட ‘சொந்த நிதி’யைத் தவிர வேறு ‘எந்த நிதி’யையும் எதிர்பார்க்காத சண்டாளா! கடைசியில் இந்த முடிவுக்கா வந்துவிட்டாய் நீ? தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக யாரோ சிலர் தமிழைக் காப்பாற்றப் போவதாகச் சொல்ல, அதற்காக நீ உன் உயிரையா கொடுக்கப் போகிறாய்? – ஐயோ! என்றும் குன்றாத தமிழுக்கு, இன்றுவரை எதனாலும் பாதிக்கப்படாத தமிழுக்கு, இப்படி ஓர் இழுக்கா? அந்த இழுக்கும் ஒரு பாவமும் அறியாத உன்னாலா அதற்கு ஏற்படுவது? இது கூடாது; இதை நடக்கவிடக் கூடாது!
இப்படி நினைத்ததும், “கதவைத் தாளிட்டுக்கொள்; இதோ, நான் வந்து விடுகிறேன்!” என்று தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிய நான், எதற்கும் ‘தக்கதுணை’யொன்று இருந்தால் நல்லது என்று எண்ணி, எங்கள் தெருவில் ‘தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு’ ஆக ‘நால்வகைக்கன்னி’களுடன் – ‘எங்கே உங்கள் திராவிட நாடு?’ என்று யாராவது ஓர் அதிகப்பிரசங்கி கேட்டால், ‘இதோ இருக்கிறது எங்கள் திராவிட நாடு!’ என்று அவன் முகத்தில் அடித்தாற்போல் சொல்வதற்காகத்தானோ என்னவோ, ‘எழுந்தருளி யிருந்த ‘தமிழ்ப்புயல் தயாநிதி’யைக் கொஞ்சம் தயக்கத்துடனேயே தட்டி எழுப்பினேன்.
அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்த அவர் “என்ன சங்கதி, எதற்கு என் இனிய தூக்கத்தைக் கெடுத்தீர்?” என்றார் சற்றே ‘பைரவ’ரைப் பின்பற்றி.
“மன்னிக்க வேண்டும்; நேற்று வரை தமிழ்ப் புயலாயிருந்த தாங்கள் இன்றைய ‘துக்க தின’த்தை இப்படித் ‘தூக்க தின’மாகக் கொண்டாடலாமோ? எழுந்திருங்கள், தங்கள் தலையாய தொண்டன் தமிழ்மாறன் தமிழுக்காகத் தன் இன்னுயிரையே ஈயப்போகிறானாம். அந்தத் ‘தற்குறி’யைத் தடுத்தாட்கொள்வது தங்கள் கடமையன்றோ? வாருங்கள், என்னுடன்” என்றேன் நான் பணிவுடன்.
அவ்வளவுதான்; அவர் சட்டென்று எழுந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு “ஆகா! இதுவன்றோ நான் எதிர்பார்த்த இனிப்புச் செய்தி! ஆகா! இதுவன்றோ நான் எதிர்பார்த்த இனிப்பச் செய்தி!” என்று ஒரு கணம் ஆனந்தக் கூத்து ஆடிவிட்டு, மறுகணம் “ஒரு வினாடி பொறும்!” என்று சொல்லிவிட்டு, அவசரம் அவசரமாக எங்கோ ஓடினார்!
எனக்கு ஒன்றும் புரியவில்லை; “தலைவர் எவ்விடம் செல்கிறாரோ?” என்றேன், அவரைச் சற்றே தடுத்து நிறுத்தி.
“புகைப்படக்காரரைக் கையோடு அழைத்துக் கொண்டு வரவேண்டாமோ? அந்த அபூர்வமான காட்சியை அந்த அருமையான காட்சியை அப்படியே படம் எடுத்துவிட வேண்டாமோ?” என்றார் அவர்.
“எந்த அருமையான காட்சியை?” என்றேன் நான்.
‘தமிழுக்காக, தமிழ் அன்னைக்காக அந்தத் தமிழ் இளவல் தன் இன்னுயிர் நீக்கும் காட்சியைத்தான்’ என்றார் அவர் பரவசத்துடன்.
அதற்குமேல் அங்கே நிற்க ‘என் வயிற்றெரிச்சல்’ எனக்கு இடம் கொடுக்கவில்லை. ஏனெனில் தமிழ்மாறனைப் போன்றவர்கள் ‘வெறி’க்கு வேலை கொடுத்தால், தமிழ்ப்புயல் தயாநிதியைப் போன்றவர்கள் எப்போதுமே ‘அறிவு’க்கு வேலை கொடுப்பவர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே ‘உங்கள் தலையிலே இடி விழ!’ என்று நான் அவருக்குத் தெரியாமல் அவரை ஆசீர்வதித்துக் கொண்டே, ‘அந்த அப்பாவிப் பைய’னின் வீட்டை நோக்கி – அந்த ‘அனுதாபத்துக்குரிய ‘வனின் வீட்டை நோக்கிக் காற்றாய்ப் பறந்தேன்!
26 ஜனவரி 1965
“தமிழ் வாழ்க, தமிழ்த் தாய் வாழ்க! தமிழ் வாழ்க, தமிழ்த் தாய் வாழ்க!”….
இப்படி ஒரு குரல் – ஆம், ஒரே ஒரு குரல்தான் – அவன் வீட்டை நான் நெருங்க நெருங்க அதுவும் என்னை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது.
ஒருவேளை அவன் குரலாயிருக்குமோ? – இதை நினைக்கும்போதே நெஞ்சில் திக்கென்றது எனக்கு!
இன்னும் வேகமாக சைக்கிளை மிதித்தேன்; அதே வேகத்தில் அந்தக் குரலும் என்னை நோக்கி விரைந்து வந்தது.
“தமிழ் வாழ்க; தமிழ்த் தாய் வாழ்க!” “தமிழ் வாழ்க! தமிழ்த் தாய் வாழ்க!”
சந்தேகமில்லை; அதே குரல்தான்!
ஆனால், அது தீனக் குரலாயுமில்லை; ஈனக் குரலாயுமில்லை . தமிழின் கம்பீரத்தைப் போலவே அதுவும் கம்பீரமாயிருந்தது!
எங்கிருந்து வருகிறது, அது?
இந்தக் கேள்வியை நான் எழுப்புவதற்குள் “அதோ பாரும்!” என்றொருகுரல் எனக்குப் பின்னாலிருந்து வந்தது. திரும்பிப் பார்த்தேன்; பக்கத்தில் புகைப்படக்காரருடன் தமிழ்ப்புயல் தயாநிதி எனக்குப் பின்னால் ‘டாக்’ஸியில் வந்து கொண்டிருந்தார். அவரை நான் பொருட்படுத்தாவிட்டாலும் அவர் காட்டிய திசையைப் பொருட்படுத்திப் பார்த்தேன்; தீ, செந்தீ!
இந்தியால் மூட்டப்பட்ட செந்தீயா, அது?
“ஆம்; ஐயமில்லை அப்பனே, ஐயமில்லை, அந்த தீக்குள்ளிருந்து தான் அந்த இளவலின் குரல் வருகிறது; எடும், அந்த அற்புதக் காட்சியை அப்படியே! என்றார் அவர், எனக்குப் பதில் சொல்வது போல் தமக்குப் பக்கத்திலிருந்த புகைப்படக்காரரிடம்.
“என்ன!” – திறந்த வாய் மூடுவதற்குள் சைக்கிளை விட்டுக் கீழே குதித்து விட்டேன் நான்; என்னைத் தொடர்ந்து தமிழ்ப்புயல் தயாநிதியும் தமது புகைப்படக்காரருடன் ‘டாக்ஸி’யை விட்டுக் கீழே குதித்துவிட்டார்!
ஆனால்….ஆனால்…
என்ன விரைந்து என்ன பயன்? அவனுக்கு அருகே காலியாகக் கிடந்த ‘பெட்ரோல் டின்னையும் இறைந்து கிடந்த தீக்குச்சிகளையும்தான் என்னால் பார்க்க முடிந்தது; அவனைப் பார்க்க முடியவில்லை!
ஆம்; அதற்குள் அவன் குரல் அந்தத் தீயிலே மங்கி மறைந்துவிட்டது; அவன் இன்னுயிரும் பொன்னுடலும் கூட உருகிக் கரைந்து, கருகி உதிர்ந்து, உருத் தெரியாமல் மறைந்துவிட்டன!
“ஐயோ, தமிழ்மாறா! உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு வெறியூட்டும் வீணர்கள் தமிழால் வாழும்போது, அதே தமிழால் நீங்கள் ஏன் சாக வேண்டும்?”
வாய் விட்டுக் கதறினேன் நான்! என்னுடைய கதறலைக் கேட்டோ என்னவோ அக்கம் பக்கத்தில் இருந்தவர்களெல்லாம் அலறி எழுந்து வந்து என்னைச் சூழ்ந்து கொண்டனர்.
அதே சமயத்தில் எங்களுக்கு எதிரே போலீஸ் லாரி ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து பத்துப் பதினைந்து போலீஸ்காரர்கள் குண்டாந்தடிகள் சகிதம் இறங்கிக் கூட்டத்தைக் கலைக்க, அவர்களைத் தொடர்ந்து வந்த இன்ஸ்பெக்டர், “இந்தத் தற்கொலைக்கு இவனை யார் தூண்டிவிட்டது? சொல்லுங்கள், யார் தூண்டிவிட்டது இவனை!” என்று கர்ஜித்தார், கடமையில் மட்டுமே தன் கவனத்தைச் செலுத்தி.
அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தோம்.
“சொல்லப் போகிறீர்களா, இல்லையா?” என்றார் அவர் மறுபடியும்.
அதற்கு மேல் அவருடைய பொறுமையைச் சோதிக்க விரும்பாமல், “எங்களுக்குத் தெரியாது, ஸார்” என்றார் ஒருவர்.
“தெரியாதா, ஏறு வண்டியில்!” என்று அவருடைய சிண்டைப் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு, “உனக்கு?” என்றார் அவர் அடுத்தவரை நோக்கி.
“தெரியாது!” என்று சொல்வதே குற்றமாயிருக்கும் போது அவர் என்ன செய்வார், பாவம்! எப்படியாவது அவரிடமிருந்து தப்ப வேண்டுமே என்பதற்காக ‘யார் தூண்டிவிட்டது இவனை? என்றார் அவரும் இன்ஸ்பெக்டரைப் பின்பற்றி.
“என்னையே திருப்பிக் கேட்கிறாயா, ஏறு வண்டியில்!” என்று அவருடைய சிண்டையும் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு, “உனக்கு?” என்றார் இன்ஸ்பெக்டர் அவருக்கு அடுத்தவரை நோக்கி.
‘இதென்ன வம்பு!’ என்று எண்ணியோ என்னமோ, “இந்த எதிர்க் கட்சிக்காரர்கள்தான் ஸார், இவனைத் தூண்டிவிட்டிருக்க வேண்டும்” என்றார் அவர் கையைப் பிசைந்தபடி.
“அவர்கள்தான் நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை என்று சொல்லிவிட்டார்களே?” என்றார் இன்ஸ்பெக்டர்.
“அவர்கள் இல்லையென்றால் வேறு யாராயிருக்கும்? ஒருவேளை சமூக விரோத சக்திகள் ஏதாவது…”
அவர் முடிக்கவில்லை ; அதற்குள் “அந்த சக்தி நீதான்; வண்டியில் ஏறு!” என்று அவருடைய பிடரியையும் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு “உனக்கு?” என்றார் அவர் அடுத்தாற்போல் இருந்தவரை நோக்கி.
“என்ன சொன்னாலும் இந்தக் கடமை வீரரிடமிருந்து தப்ப முடியாது போலிருக்கிறதே?” என்று நினைத்தோ என்னமோ, “ஆளும் கட்சியின் சோஷலிஸம் பிடிக்காத ஆலை முதலாளிகள்தான் ஸார், இவனைத்தூண்டி விட்டிருக்க வேண்டும்!” என்றார் அவர், தம் இஷ்ட தெய்வத்தை இன்ஸ்பெக்டருக்குத் தெரியாமல் பிரார்த்தித்துக் கொண்டே.
அப்போதும் அவருடைய கஷ்டம் தீரவில்லை; “அவர்களும்தான் நாங்கள் யாரையும் தூண்டிவிடவில்லை என்று சொல்லிவிட்டார்களே?” என்றார் இன்ஸ்பெக்டர், அவரைவிடாமல்.
“அவர்களும் இல்லையென்றால் வேறு யாராயிருக்கும்? வந்து…. வந்து” என்று அவர் இழுக்க, “சரி, வந்தே சொல்!” என்று அவருடைய பிடரியையும் பிடித்துத் தூக்கி லாரியில் ஏற்றிவிட்டு, “எல்லோரும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்களா?” என்றார் இன்ஸ்பெக்டர். ஒரே கல்லில் எல்லா மாங்காய்களையும் அடித்து வீழ்த்த!
அப்போது, “இல்லை, நான் சொல்கிறேன் உண்மையை!” என்று எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது; அந்தக் குரல் வந்த திசையை நோக்கி நாங்கள் அனைவரும் திரும்பினோம்.
“யார் அது? இங்கே வந்து சொல், அந்த உண்மையை!” என்று அந்தக் குரலுக்குப் பதில் குரல் கொடுத்தார் இன்ஸ்பெக்டர்.
அவ்வளவுதான்; “இதோ இந்தத் தாய்தான் தூண்டி விட்டாள் அவனை!” என்று சொல்லிக் கொண்டே ஆற்றொணாத் துயரத்தால் அலமலந்து போயிருந்த தமிழ்மாறனின் தாயாரைக் கொண்டுவந்து, அதுதான் சமயமென்று அவருக்கு முன்னால் நிறுத்தினார் தமிழ்ப் புயல் தயாநிதி!
“இவளா!” என்றார் இன்ஸ்பெக்டர் வியப்புடன்.
“ஆம், இந்தத் தமிழ்த்தாய்தான் தூண்டிவிட்டாள் அந்தத் தமிழ்மகனை!” என்றார் அவர் மிடுக்குடன்.
இன்ஸ்பெக்டர் சிரித்தார்; சிரித்துவிட்டுச் சொன்னார்.
“இப்போது தெரிந்துவிட்டது. இவனை யார் தூண்டி விட்டார்கள் என்று?”
“யார்?” என்றார் தயாநிதி.
“நீர்தான்; சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நீர்தான்! ஏறும் வண்டியில், உம்மை ஏமாற்ற நான் விரும்பவில்லை” என்றார் இன்ஸ்பெக்டர், அவரையும் வண்டியில் ஏற்றி.
அவர் சொன்னது உண்மைதான் என்றாலும் அந்த உண்மையைத் தமிழ் மக்கள் உணர்கிறார்களா, என்ன? “தமிழ்ப்புயல் தயாநிதி, வாழ்க தமிழ்ப்புயல் தயாநிதி வாழ்க!” என்று ஒருசாராரும், “எங்கள் தயாநிதியை விடுதலை செய்! எங்கள் தயாநிதியை விடுதலை செய்!” என்று இன்னொரு சாராரும் தொண்டை கிழியக் கத்திக் கொண்டே கலைந்து சென்றனர்!
ஆம், அவர்களுடைய நினைவில் இப்போது அந்தத் தமிழ் மாறனும் இல்லை; அவனைப் பெற்றெடுத்த தாயும் இல்லை; தமிழ்ப் புயல் தயாநிதிதான் இருந்தார்!
அதற்குமேல் அங்கென்ன வேலை எனக்கு? “வாழ்க, தமிழ் மக்கள்!” என்று நான் அவர்களை வாழ்த்திக்கொண்டே திரும்பினேன் – எனக்கே உரிய வயிற்றெறிச்சலுடன்தான் வேறு என்ன செய்ய?
27 ஜனவரி 1966
இதெல்லாம் அன்று; இன்றோ ?…..
இன்னுயிரை மட்டுமல்ல; பொன்னுடலைக் கூடத் தீக்கு இரையாக்காமலே ‘தியாக முத்திரை’ குத்திக் கொண்டு சிறையை விட்டு வெளியே வந்திருக்கும் தமிழ்ப்புயல் தயாநிதி, தீக்குளித்த தமிழ் மாறனின் படத்தை வண்ணப் படமாகத் – தீட்டிக் கொண்டிருக்கிறார்! நாளை அது சந்திக்குச் சந்தி நிற்கலாம்; அதற்குக் கீழே “இந்த இளவலைத் தீயிட்டுக் கொன்ற இந்தி வெறியர்களுக்கா உங்கள் ஓட்டு? வையுங்கள் வேட்டு” என்பது போன்ற வாசகங்களும் காணப்படலாம். அதன் பயனாகத் தமிழ்ப் புயல் தயாநிதி சட்டசபை உறுப்பினராகலாம்; சபாநாயகராகலாம்; அமைச்சராகக் கூட ஆகலாம்…
அதற்குப்பின் சர்க்கார் செலவில் தமக்குக் கிடைக்கப் போகும் இலவசக் கார், இலவச பங்களா, இலவச எடுபிடி ஆட்கள், இலவசப் பிரயாணம், இன்னும் ‘இலை மறைகா’யான இதர இதர, இன்னபிற இன்னபிற சுக சௌகரியங்கள் ஆகியவை குறித்து அவர் இன்றே, இப்போதே ‘இனிய பல கனவு’களும் காணலாம்…
ஆனால், என் அருமை நண்பன் தமிழ் மாறனைப் போன்றவர்கள்?
‘வெறி’யால் வீழ வேண்டியதுதானா? அந்த வெறிக்கு அவர்களை ஆளாக்கும் ‘நர மாமிச பட்சிணிகள்’ தங்கள் ‘நயம் மிக்க அறி’வால் வாழ வேண்டியது தானா?
இது என்ன வெறி, இது என்ன நெறி?
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.