கடலில் நடுவே சில காலடிச் சுவடுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,982 
 

(1986 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பங்குனி மாத வெய்யில் உக்கிரமாய் இருந்தது. வயற்கரை வாய்க்கால்கள் எல்லாம் பாளம் பாளமாய் வெடித்திருந்தன. பொங்கலுக்கும் மழையே பெய்யவில்லை.

அரிவி வெட்டிய வயல்களை உழுது விடவும் முடியவில்லை. வயல்கரைகள் காய்ந்து போயிருந்தது. முற்றத்து மண்ணில் மிதிக்கக்கூட முடியவில்லை.

தென்னை மரத்து அடிவளையில் சாய்ந்து கொண்டு தகதகக்கும் வானத்தைப் பார்த்தான் ஆறுமுகம். நாலுமணியாகுது. ஆனா இன்னமும் தலையிடிக்கிற வெய்யில்…” என்று முணுமுணுத்துக் கொண்டு துண்டால் முகத்தை அழுத்தித்துடைத்துக் கொண்டான். –

சுற்றாடலை வெறுமையுடன் பார்த்தான். முன்பென்றால் இந்த நேரம் சிறுபோகத்து வேலை தொடங்கிவிடும். வரம்பு ஒதுக்கி மண் அணைத்து புல்லு அறுத்து அடுத்த விதைப்பை எதிர்நோக்கத் தயாராகி விடுவார்கள். இந்தத் தடவை…சிறுபோகம் செய்ய முடியுமோ தெரியாது.

நீளமாய் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான் முதலாளியைப் போய்ப் பார்க்க வேணும், சிறு போகம் விதைக்கிறீங்களோ என்று கேட்கவேணும்’

‘ஆறுமுகண்ணை ‘ படலையை திறந்து கொண்டு ரத்தினம் வந்தான்.

காலமை கிளிநொச்சிக்குப் போனனான். அங்க சிறுபோகம் கூட்டம் நடந்தது. இந்தப் பக்கம் இந்த முறை தண்ணி இல்லையாம், ஒருத்தரும் காணி செய்ய ஏலாது திக்கென்றது ஆறுமுகத்துக்கு ஓமண்ணை, எல்லா வாய்க்காலுக்கும் குடுக்க குளத்தில் தண்ணி காணாதாம். கொஞ்ச வாய்க்காலுக்குத்தான் குடுக்கினம். அதெல்லாம் ரோட்டுக்கு அந்தப்பக்கம். இங்கையெல்லாம் ஒருத்தராலும் விதைக்க ஏலாதாம். இதைக் கேள்விப்பட்டு எங்கட பக்கத்துச் சனங்கள் பதகளிச்சுப் போய் நிற்குதுகள்’

ஆறுமுகம் ஒருதடவை சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கிற பண்ணைப் பார்த்தான்.

முதலாளியின்ர காணியில் நாங்கள் கொட்டில் போட்டு இருந்து. வருஷத்தில் ரெண்டு போகத்திலயும் கஷ்டப்பட்டு உழைக்கிறம். அப்படி உழைச்சுமே அரை வயிற்றுக்கு காணாது. இனிச்சிறுபோகமும் இல்லையெண்டால் என்னடா செய்யிறது, முதலாளியும் வட்டத்துக்குப் போய்வந்திருப்பர். வாறியே அவரிட்டைப் போய் விபரம் கேட்பம்.

நானும் அப்படித்தான் யோசிச்சு வந்தனான். ‘வாங்கோ அண்ணை’

ஆறுமுகம் திரும்பி குடிசைக்கு வர பார்வதி வாசலில் நின்றாள். இடுப்பில் இரண்டு வயதுக்குழந்ரத. வயிற்றுக்குள் ஆறுமாதக்கரு. கவலையும் யோசனையுமாய் கலைந்து போன முகம். அக்கறையில்லாமல் வாரி முடிந்திருந்த தலை மயிர், கிழிந்து போகும் அளவுக்கு நைந்துபோன சேலை ஏனோ தானோவென்று உடலைச் சுற்றியிருந்தது.

‘நாலு நாளாய் ஒரேயடியாய் காலுக்கை வலிக்குது. இடுப்பில சுண்டி இழுக்குது.

அவள் சொல்வதை நின்று கேட்க நேரமில்லாமல் ஆறுமுகம் வாசலுக்கு விரைந்தான்.

மனதுக்குள் பார்வதியின் பரிதாப முகம்…எட்டாவதைச் சுமந்து கொண்டு, சே…ஒரு கணம் அவனுக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது, மனதுக்குள் எந்த நேரமும் நெருடுகின்ற குற்ற உணர்வு.

“பெத்ததுகளுக்கே வயிற்றுக்கு சாப்பாடு போட வழியில்லை. இந்த நிலமையில் இன்னொன்று…”

நெற்றியில் விண்ணென்று வலித்தது.

முதலாளி வீட்டு முற்றத்தில் இன்னும் நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். இவர்களை மாதிரியே முதலாளியின் வேறு கமங்களில் இருப்பவர்கள். இவர்களைக் கண்டதும் கவலைகனைப் பகிர்ந்து கொள்ளும் மனதுடன் நெருங்கி வந்தார்கள் எல்லோர் முகங்களும் இருண்டு போயிருந்தது.

முதலாளி நித்திரையாம் அதுதான் அவர் எழும்பிறவரைக்கும் காவல் நிற்கிறம்’

ஆறுமுகம் வீட்டின் பக்கம் பார்வையை உயர்த்தினான்.

நவீனமாய்க் கட்டப்பட்டிருந்த வீட்டு வாசலில் கார் பக்கத்து ஷெட்டில் மோட்டார் பைக்…… அதுக்கும் அப்பால் வரிசையாய் இரண்டு டிராக்டர்கள்.

சின்ன முதலாளி நிற்கிறார் போல’ நினைத்துக் கொண்டிருக்கையில் அந்த இளைஞன் கறுப்புக் கண்ணாடியை மூக்கின் மேல் ஒருவிரலால் உயர்த்திக் கொண்டே படிகளிலிருந்து இறங்கினான். இவர்களை ஒருதடவை பார்த்துவிட்டு….

அப்பா எழும்பிவிட்டார் இப்ப வருவார்’ என்று சொல்லிக் கொண்டே மோட்டார் பைக்கிலில் அமர்ந்தான். அவன் போய் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் முதலாளியின் வரவால் களைந்து போய்த் திரும்பினார்கள்.

வெள்ளைத் துவாயால் தோளைப் போர்த்தியபடி திருநீற்று நெற்றியுடன் வந்தார்.

கூட்டத்தில் முடிவாய்ச் சொல்லிப் போட்டினம். போன மாரி மழை சரியான குறைவுதானே. குளத்தில் தண்ணி கொஞ்சம்தானாம் இருக்குது. தண்ணிக்கு அளவாத்தான் காணி செய்யலாம். ரோட்டுக்கு இந்தப்பக்கம் ஒரு காணியும் செய்ய ஏலாது.

முதலாளி….

‘உங்கட நிலமை எனக்குத் தெரியுது. என்ர கமங்களை நம்பியிருக்கறனீங்கள். இந்தக் காலத்தில் வேற தொழிலும் செய்ய ஏலாது. ஆனால் நான் என்ன செய்யலாம் சொல்லுங்கோ…..’ அவரும் வருத்தத்துடன் தான் சொன்னார்.

கடைசி நம்பிக்கையும் பறிபோன நிலையில் அவர்கள் கொஞ்ச நேரம் மௌனமாய் நின்றார்கள். பிறகு கலைந்து வெளியே வந்தார்கள்.

‘சிறுபோகம் இல்லையெண்டால் அது முதலாளிமாரை மட்டுமில்லை, எங்களைப் போல கூலி வேலை செய்யிறவையளையும் எவ்வளவு பாதிக்கும். அதை ஆர் நினைச்சுப் பார்க்கப் போகினம்’.

‘அதுதானே அண்ணை . இப்ப பங்குனி. வாற கால போகத்தில் வரம்பு செதுக்கிற வேலை தொடங்க ஐப்பசி ஆகும். இடையில் எட்டு மாசங்கள் … அது வரைக்கும் என்ன செய்யிறது. எனக்கெண்டால் விளங்கேலை அண்ணை.

ஆறுமுகத்துக்குத் தொண்டைக்குள் வந்து எதுவோ அடைத்துக் கொண்டது. ஒவ்வொரு நாளையும் எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற நினைப்பில் வயிறு பிசைந்தது.

‘முதலாளிக்கு முரசுமோட்டையிலும் காணி இருக்குத்தானே. அதில் ஏதும் வேலை நாங்களும் செய்யலாந்தானே. அவைக்கு ஒரு காணி விதைக்க ஏலாட்டியும் இன்னொன்டு விதைக்கலாம். காசுள்ளவை தேடிப்போய் குத்தகைக்கெண்டாலும் எடுத்துச் செய்வினம். எங்கடை பாடுதான் பெரிய ஆக்கினை.’

கல்லு ரோட்டால் நடந்து பூநகரி ரோட்டு வந்தபோது பஸ் ஒன்று நாலைந்து பேருடன், கடந்து போனது. வெய்யில் நன்றாய் இறங்கி விட்டது.

‘வேலையுள்ள நேரம் உழைக்கிறல நாலு காசு மிச்சம் பிடிச்சு வைக்கவும் எங்களுக்குத் தெரியாது. உள்ள நேரம் திண்டு குடிச்சிட்டு பிறகு பட்டினி கிடக்கிறது.

‘நாங்கள் பட்டினி கிடப்பம். பிள்ளையள்…? பார்வதிக்கு இன்னும் மூன்று மாசம் இருக்கு பிள்ளை பிறக்க. நான் என்ன செய்யப் போறனோ தெரியாது?

ரத்தினம் ஆறுமுகத்தைக் கவலையோடு பார்த்தான்.

‘இவ்வளவு கவலைப்படுறம், ஏதோ எங்கடை காலமும் போகத்தானே போகுது, யோசிக்காம வாங்கோ’

ஆறுமுகம் வீட்டுக்கு வந்த போது மெதுவாய் இருட்டியிருந்தது. அவனைக் கண்டதும் விளக்குக் கொளுத்த மண்ணெண்ணை இல்லை என்றாள் பார்வதி.

‘இப்ப நிலவுதானே. விளக்கு வேண்டாம் இருங்கோ’ முற்றத்துக் குற்றியில் அமர்ந்துகொண்டு வானத்தை நிமிர்ந்து பார்த்தான்.

அடுத்து வந்த சில நாட்களும் அவர்களைப் பொறுத்தவரையிலும் உன்னைப்பிடி என்னைப்பிடி என்று கடந்து போனது. குளத்தில் தண்ணி திறக்கப்பட்டு விட்டது என்ற செய்தியைத் தங்களுக்குச் சம்பந்தமில்லாத அந்நிய செய்தியாக உணர்ந்தார்கள். விதைக்கக் கூடிய வயல்களில் விதைப்பு நடந்து முடிந்து விட்டது. நெல் விதைக்கவும், பசளை போடவும் முதலாளி தங்களைக் கூப்பிடவில்லையே என்ற ஆதங்கம் அவர்களுக்கு நெஞ்சு நிறைய ஏற்பட்டது. வழக்கமாய் இந்தப் பக்க வயல்களுக்குப் புல்லு மருந்தடிக்கவும், பூச்சி மருந்தடிக்கவும், ஆறுமுகமும் ரத்தினமுந்தான் போவது வழக்கம். அதற்குக்கூட முதலாளி கூப்பிடவில்லை. தாங்க முடியாமல் முதலாளியிடம் கேட்கப் – போனார்கள்.

வாசல் ஹாலில் முதலாளியின் மகன் தான் டிரான்ஸிஸ்டரில் கிரிக்கட் கொமண்டரி கேட்டுக் கொண்டிருந்தான். இவர்களைக் கண்டதும் வயலில மருந்தடிக்கினம் அப்பா அங்க போயிட்டார். நில்லுங்கோ வருவார் என்றான்.

அவனிடமாவது விஷயத்தை சொல்லிக் கேட்போம் என்று வாய் திறக்க அவன் ரேடியோவுடன் உள்ளே போய்விட்டான்.

‘பெரிய பட்டப்படிப்புப் படிச்சு உத்தியோகம் பார்த்து என்ன பிரயோசனம் தகப்பனிட்ட சொல்லி எங்கட பிரச்சினையைக் கவனிக்கக் கூடாதே. வருஷம் முழுவதும் இவையளுக்காகத்தானே உழைச்சனாங்கள்’, அலுத்துக் கொண்டவன் முதலாளியின் காரைக் கண்டதும் மரியாதையாய் விலகி நின்றான்.

என்ன ரெண்டு பேரும் வந்திருக்கிறீர்கள்.’

முதலாளி ! வயல்ல மருந்தடி நடக்குதாம். எங்களை மறந்து போனிங்களே. ஏதாவது வேலை தந்தால் தானே நாங்களும் உழைச்சு சீவிக்கலாம். சரியான கஷ்டமாக்கிடக்கு.’

‘இங்க பார் ஆறுமுகம். உங்களை இந்தக் காணியில் குடிவைச்ச மாதிரி அந்தக் காணியிலயும் அவங்களை வைச்சிருக்கிறன். அந்த வயல் வேலைகளைத் தாங்கள் தான் செய்ய வேணும் எண்டு அவங்கள் சொல்லுறாங்கள். நீங்கள் வேற எங்கையாவது போய் வேலை செய்யுங்கோவன்.’

‘எங்கை போறது. முழுக் கூலிச்சனமும் வேலை கிடைக்காமல் அழையுதுகள், ஒரு இடத்திலயும் வேலை இல்லை முதலாளி’

‘அப்ப நான் என்ன செய்யிறது. இந்தாங்கோ இருபது ரூபா ஆளுக்குப் பத்துப் பத்து எடுங்கோ, கணக்கில எழுதி வைக்கிறன். பிறகு வேலை செய்து கழிக்கலாம்’

20 ரூபாவைக் கொடுத்து விட்டு அவர் வீட்டுக்குள் போய் விட்டார். ஆறுமுகம் விரக்தியோடு அந்தக் காசைப் பார்த்தான்.

‘பார் ரத்தினம்; எட்டு மாதத்துக்கு முந்தியே முதலாளி அட்வான்ஸ் தாறார். இந்தப் பத்து ரூபாவைக் கொண்டு போய் என்னத்தைச் செய்யிறது.

‘சரி, இதாவது தந்தாரே வா போவம். எனக்குத் தெரிஞ்ச பொடியன் செல்வம் எண்டு முரசு மோட்டையில் இருக்கிறான். அவனிட்ட போய்க் கதைச்சுப் பார்ப்பம் அங்கை ஏதாவது வேலை எடுக்கலாமோ எண்டு. வா போவம்’.

இருவரும் அங்கிருந்து பரந்தன் வரை நடந்தே வந்தார்கள். பரந்தன் சந்தியில் செல்வத்தை எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது. சைக்கிளில் வந்தவனை ரத்தினம் மறித்தான்.

‘கடவுளே! வேலையோ…. இங்க உள்ள சனங்களே ஓடித் திரியுதுகள். காணிகள் விதைச்சது குறைவு தானே. எத்தினை பேருக்கொண்டு வேலை குடுக்கிறது. ஏன் உங்கட முதலாளி இந்தப் பக்கம் செய்யிற வயல்ல உங்களுக்கு வேலை தரக் கூடாதே.

அவர் என்ன செய்யிறது இங்க அவற்ற காணியில் உள்ள வைக்கும் வேலை வேணுந்தானே’ ஆறுமுகம் மெல்லிய குரலில் சொன்னான்.

‘அதுசரி, ஆனா அவற்ற காணியில் இருக்கிற கங்காணி ராமு’ வேயலில குடியிருக்காத தன்ர சொந்தக்காரரையும் தனக்குத் தெரிஞ்சவைகளையும் கூட்டி வந்து வயல் வேலை செய்ய விடுறான்தானே. அந்த இடத்துக்கு நீங்கள் செய்யலாம் தானே.’

இந்தப் புதிய செய்தியால் இருவரும் கொஞ்சம் அதிர்ந்து போய் நிமிர்ந்தார்கள்.

மறுநாள் காலையில் போய் முதலாளியிடம் கேட்டபோது ‘ராமுதான் அங்கு கங்காணி. அவன் தான் பொறுப்பு. பாத்துக் கொள்ளுறதும் அவன்தான். என்னால என்ன செய்ய ஏலும்’ என்றார்.

‘நீங்கள் இப்படிச் சொல்லக் கூடாது முதலாளி. உங்கட காணியில் நீங்களே வேலை தரேலை எண்டால் நாங்கள் எங்க போறது’

‘சரி சரி… இனி புல்லுப்பிடுங்கும் நேரம் பார்ப்பம்’

அரைகுறையாய் மனம் திருப்திப்பட வீட்டுக்குத் திரும்பினார்கள்.

ஆறுமுகம் வீட்டுக்கு வந்த போது பார்வதி சொன்னாள் : காலமை வண்டில் கொண்டு முத்து வாறானாம். காட்டில் விறகு வெட்டி வர உங்களையும் வரச் சொன்னான். என்ன போறீங்களே…..

‘போகாம என்ன செய்யிறது. இருபது ரூபா எண்டாலும் தருவான். தன் உள்ளங்கைகளை ஒரு தடவை விரித்துப் பார்த்துக் கொண்டான். காய்த்துப் போயிருந்த கைகளைப் பரபரவென்று தேய்த்துவிட்டுக் கொண்டான்.

அடுத்து வந்த நாலு நாளும் காட்டிற்கு விறகு வெட்ட முத்துவுடன் போனான். இந்த நாலு நாளும் ஒரு நாளைக்கு இரண்டு நேரம் சாப்பிட்டார்கள். மறுபடியும் எங்காவது வேலை கிடைக்குமா என்று அலைந்தான்.

விதைத்த காணிகளில் புல் பிடுங்கும் வேலைகள் ஆரம்பமாயின. முதலாளி தங்களைக் கூப்பிடுவார் என்று நான்கு நாட்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு மனம் தாளாமல் முதலாளியிடம் ஓடினார்கள்.

‘உங்கட காணியில அங்க இருக்கிற வேற ஆட்கள் தானே வேலை செய்யினம். அந்த இடத்துக்கு நாங்கள் வாரம் முதலாளி’

முதலாளி ஒரு நிமிஷம் அவர்களைப் பாத்துவிட்டு, ‘அங்க பக்கத்தில இருக்கிற ஆக்கள்… ஒவ்வொரு நாளும் வந்து வேலை செய்யச் சுகம். நீங்கள் இங்கயிருந்து எப்பிடி நேரத்துக்குப் போய் வாறது. வேலைதான் சுணங்கிப் போகும்’ என்றார்.

“முந்தியெல்லாம் ஐம்பத்தைஞ்சாம் கட்டையிலயிருந்து சனங்களை டிரக்டரில் ஏத்தி இறக்கினீங்கள்தானே ? இப்பவும் எங்களை டிரக்டரில் கூட்டிப் போய்க் கூட்டிவரலாம். வேணுமெண்டால் கூலியை ரெண்டு ரூபா குறைச்சுத் தாங்கோ’

ஒரு பத்துப் பதினைஞ்சு பேருக்காக டிராக்டர் ஒட முடியுமே? டீசல் சும்மா தாறானே?’ அவரது குரலில் சூடு ஏறியது.

சரி நீங்கள் டிரக்டரில் ஏத்த வேணாம். நாங்கள் நடந்தே வாறம்’

‘உங்களோடை பெரிய கரைச்சல்’ சலித்துக் கொண்டே உள்ளே திரும்ப – ‘அப்பா’ என்றபடி அவரது மகன் வந்தான்.

ரோட்டுக்கு அங்காலைபோய் காணி செய்ய எங்கலால முடியுது. ஆனா இதுகளுக்கு அங்க போய் வேலை செய்ய முடியாமக் கிடக்கு. இது அநியாயம். என்னட்டை இதை விடுங்கோ. நான் பார்த்துக் கொள்ளுறன். நாளைக்கு காலமை நீங்கள் எல்லாரும் இங்க வாங்கோ வேலைக்குப் போகலாம்.

அவனது வார்த்தைகள், ஒரு வினாடி திகைப்பையும் மறுவினாடி நம்பிக்கையையும் தர அவர்கள் உற்சாகமாய்க் கலைந்து போனார்கள். தந்தையும் மகனும் உள்ளே வாதாடுவது கேட்டது.

வீட்டுக்கு வந்த பின்பும் ஆறுமுகத்துக்கு ஒரே பரபரப்பாய் இருந்தது. பார்வதியைப் பார்த்தான். வயிற்றுக்குள் குழந்தையுடன் அவள் பட்டினி கிடப்பதைக் காண நெஞ்சே வெடித்தது. அவள் பல்லைக் கடித்துக் கொண்டு அந்த ஏழ்மையை ஏற்றுக் கொள்வதை உணர்ந்தபோது ஒரு குரல் அழலாம் போலிருந்தது. வேலை ஏதும் செய்தால் இந்த அவலம் இல்லை. அரை வயிற்றுக்குக் கஞ்சி குடிக்கலாம்.

மறுநாள் டிரக்டர் பெட்டிக்குள் அவர்கள் பதினைந்து பேர்கள் ஏறிக் கொள்ள முதலாளியின் மகனே டிராக்டரை ஓடிக் கொண்டு போனான். அவனைத் தப்பாய் நினைத்தோமே என்று ஆறுமுகத்துக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது. என்ன இருந்தாலும் படிச்சவன் இல்லையா… துணிச்சல் இருக்கும். எங்கடை ஏழ்மை புரியும்.

வயலை நெருங்க நெஞ்சுக்குள் திக் திக் என்று அடித்துக் கொண்டது வயலுக்குள் பதினைந்து பேரளவில் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். டிரக்டர் போய் நின்றதும் வயலுக்குள் நின்ற ராமு விறுவிறுவென்று வந்தான்.

‘நாங்கள் புல்லுப் புடுங்கி முடிப்பம் எண்டுதானே சொன்னனான் தம்பி. பிறகு ஏன் ஆட்களை கூட்டி வந்தனீங்கள்’.

அதுகென்ன, அவையளோடை இவையலும் பிடுங்கட்டும். எல்லாரும் இறங்கிப் போய் வேலை செய்யுங்கோ…’

அவர்கள் இறங்கி வயலுக்குள் போக முற்பட ராமு மறித்தான்.

‘இது சரியில்லைத் தம்பி. இவையள் வேலைக்கு வரத் தேவையில்லை. நாங்களே பிடுங்குவம்’.

ராமு! நீ இப்பிடி மறிச்சால் நீ கூட்டி வந்த பிற ஆட்களை நான் இந்த நிமிசம் கலைச்சுப் போடுவன். எங்கட காணிக்குள்ள இருக்கிற இதுகளுக்கு வேலை குடுக்காமல் மற்றவைக்கு குடுக்க முடியுமே. நீங்க போங்கோ… உள்ள வேலையில் பகிர்ந்து செய்யுங்கோ. அதுகளும் ஏழையள். இதுகளும் ஏழைகள் ம்…. போங்கோ என்று சொன்னவன்

முதலாளிமாருக்குள்ளதான் போட்டியும் பொறாமையும் இருக்குதெண்டால் உங்களிட்டையும் கூடவா? பட்டினி எண்ட ஒண்டில உங்களுக்குள்ள இருக்கிற ஒற்றுமையைக் கூடவா நினைச்சுப் பார்க்கேலை’ என்று சொல்லவில்லை. மனதோடு மட்டும் நினைத்துக் கொண்டான்.

‘சரி, சரி விடு அண்ணை அவங்களும் வேலை செய்யட்டும்’ என்றான் வயலினுள் நின்றிருந்த தொழிலாளி ஒருவன்.

– 1986, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *