ஆரவாரத்தோடு திருப்பதி தேவஸ்தானத்தில் நுழைந்தார் கைலாசம். சுற்றிலும் படைபலத்தோடு இருந்தார். மனதில் பெருமிதம் நிறைந்திருந்தது. அவர் நினைத்தபடியே ஒரு மணி
நேரத்தில் சாமி தரிசனம் நிறைவேறியது.கைலாசம் செய்த கடத்தல் வேலைக்கு கூலியாக மட்டும் பத்து லட்சம் ரூபாய் கிடைத்திருந்தது. தனது தொழில் கச்சிதமாக முடிந்ததால் அதற்கு காணிக்கை செலுத்துவதற்காகத்தான் திருப்பதிக்குச் சென்றிருந்தார்தரிசனம் முடிந்து வெளியே வந்தவர் கோயிலை ஒரு வலம் வந்து உண்டியலின் அருகே சென்றார்.ஒரு லட்ச ரூபாயை
ஒட்டு மொத்தமாகப் போட்டார். சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டாரகள்.
ஆலயப்பிரவேசம் முடிந்ததும் மிடுக்கோடு வெளியே வந்தார் கைலாசம்.
‘கடத்தல் பிஸினசில் என்னை மிஞ்ச யார் இருக்கா? கைலாசமா கொக்கா?” இறுமாப்போடு கூறினார். சுற்றியிருந்த ஜால்ராக்கள் ஆமோதிப்பதைப் போல தலையை ஆட்டினார்கள்.
அப்போது ‘டிரிங்…டிரிங்..’ என மொபைல் அலறியது. எடுத்துப் பேசினார் கைலாசம்.
‘ஐயோ…நாம மோசம் போயிட்டோம்ங்க.நம்ம பொண்ணு காலேஜ் விட்டு வரும்போது யாரோ கடத்திக்கிட்டு போயிட்டாங்க. பத்து லட்ச ரூபாய் கொடுத்தால்தான் விடுவாங்களாம். நீங்க உடனே புறப்பட்டு வாங்க’ மறுமுனையில் அவரது மனைவி அலறுவதைக் கேட்டு இடி விழுந்ததைப் போல் அரண்டு போனார் கைலாசம்.
– செல்வராஜா (டிசம்பர் 2011)