ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு ஒளிவட்டம் இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் AURA என்பார்கள்.
அனைத்து மத ஸ்தாபர்கர்கள்; மஹான்கள்; ஞானிகள், பெரியோர்கள் ஆகியோரின் தலையைச்சுற்றி ஒரு ஜோதி வட்டம் எல்லாப் படங்களிலும் போடப்பட்டிருப்பதே இதற்குச் சான்று.
ஒளிவட்டத்தை மனித உடலிலிருந்து உடலைச் சுற்றிலும் நிரந்தரமாக வரும் ஒளிவீச்சு என்று விவரிக்கின்றனர். (permanent radiation).
இந்த ஒளிவட்டங்கள் நான்கு விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகள் நிம்பஸ்; ஹாலோ; அரோலா; க்ளோரி என்பவைகள்.
நிம்பஸும் ஹாலோவும் தலையிலிருந்து வருபவை. அரோலா முழு உடலிலிருந்து வருவது; க்ளோரி தலை மற்றும் உடலிலிருந்து வருவது.
எல்லா ஒளிவட்டங்களிலும் வண்ணங்கள் பல காணப்படுகின்றன. இந்த வண்ணங்களை வைத்து குறிப்பிட்ட மனிதனின் குணாதிசயங்களை கண்டு பிடிப்பதோடு, அவன் உடலில் ஏற்பட்டுள்ள வியாதிகளையும் கூற முடியும்.
பிரகாசமான சிவப்பு நிறம் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் குறிக்கிறது; மங்கலான சிவப்பு நிறம் காமம் மற்றும் இச்சையைக் குறிக்கிறது; பழுப்பு நிறம் பேராசையையும்; ரோஸ் நிறம் அன்பையும்; மஞ்சள் நிறம் அறிவுத் திறனையும்; இளஞ்சிவப்பு ஆன்மீகத்தையும்; பச்சை ஏமாற்றுதல், பொறாமை ஆகியவற்றையும்; அடர்த்தியான பச்சை இரக்கத்தையும்; கருமை எதிர்பாராத மரணத்தையும் சுட்டிக் காட்டுகிறது.
உயிர் இருக்கும்வரை ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் இருக்கும் ஒளிவட்டம் உயிர் பிரிந்தவுடன் மறைந்து விடுகிறது.
ஒரு சுவையான சம்பவம். இது ஸ்ரீ சத்யசாய் பாபாவைப் பற்றிய ஒன்றாகும். உலகின் மிகப் பிரபலமான விஞ்ஞானி பாரனோவ்ஸ்கி ஒருமுறை புட்டபர்த்திக்கு வந்திருந்தார்.
அவர் வெறும் கண்களாலேயே ஒளிவட்டத்தை நன்கு பார்க்க வல்லவர். ஸ்ரீ சத்யசாய் பாபாவைப் பார்த்த பின்னர் அங்கு ஒரு கூட்டத்தில் அவர் பேசினார்.
“நான் உலகின் பல பிரபலமானவர்களுடன் ஒரே மேடையில் பேசியவன் என்றாலும், இன்றைய எனது அனுபவம் வினோதமான ஒன்று. பாபாவின் ஒளிவட்டம் ஆகாயத்தை எட்டும் இளஞ்சிவப்பு வண்ணமாக இருக்கிறது. இதுவரை நான் இப்படிப்பட்ட ஒரு ஒளிவட்டத்தை என் வாழ்நாளில் கண்டதே இல்லை. பாபா நடக்கும்போது அந்தப் பிரம்மாண்டமான இளஞ்சிவப்பும் ஆகாயத்தை ஊடுருவிச் செல்கிறது. அன்பின் உருவான இளஞ்சிவப்பாகவே இவர் இருப்பதால், பாபாவை நடமாடும் அன்பின் உருவம் என்றே அழைக்கலாம்…” என்றார்.
ஒளிவட்டத்தைக் காண உதவும் காமிராக்கள் இப்போது அமெரிக்காவில் தயாரிக்கப் படுகின்றன. சிங்கப்பூரில் இவைகள் போலீஸாரால் பயன் படுத்தப்படுகின்றன. இந்தக் காமிரா மூலம் படமெடுத்து அதைப் பரிசோதித்து அவரவர் இயல்பை துல்லியமாக கண்டறிய போலீஸாரால் முடிகிறது.
நோயாளிகள் தங்களது நோயை இனம் கண்டு அதற்குரிய சிகிச்சையைப் பெற முடியும். நோய் வருவதை முன்கூட்டியே அறியவும் முடியும். அதனால் ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ள முடியும்.
ஆன்மீக முன்னேற்றத்தை விரும்பும் ஒருவர் தனது முன்கோபம் போன்ற தீய குணங்களை அறவே அகற்ற இந்த ஒளிவட்டத்தைக் கண்டு தனது முன்னேற்றத்தையும் அறிந்து கொள்ளலாம். இளஞ்சிவப்பு ஜோதி ஒளிவட்டத்தை அடைய முயற்சி செய்யலாம்.
ஒளிவட்டம் பற்றி அறிந்து கொள்வது என்பது அறிவியல் நமக்குத் தந்த பரிசுகளில் முக்கியமான ஒன்றாகும்!!
ஒளிவட்டம் உண்மையே என்று அறிவியல் பூர்வமாக முதலில் கண்ட விஞ்ஞானி டாக்டர் வால்டர் ஜே கில்னர். லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவ மனையில் புகழ்பெற்ற மருத்துவராக இவர் பணி புரிந்தார். ‘The human aura’ என்ற இவரது நூல் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏராளமான பரிசோதனை ஆய்வுகளின் முடிவுகளை விளக்கமாகக் கூறும் நூல் இது.
1908 ம் ஆண்டே மனித ஒளிவட்டம் பற்றிய கருத்து டாக்டர் கில்னரின் மனத்தில் தோன்றிவிட்டது. கோல்தர் டை எனப்படும் டிக்யானினை வைத்து அவர் ஒளிவட்டத்தைக் காண வகை செய்தார். நூற்றுக்கணக்கான சோதனைகளைப் பொறுமையாக நடத்திய பின்பே 1911 ம் ஆண்டில் தாம் கண்ட ஆய்வின் முடிவுகளை ‘The Human Atmosphere‘ என்ற நூலாக எழுதி வெளியிட்டார். ஒளிவட்டம் காணும் முறையை இதில் அவர் விளக்கி எழுதியிருந்தார்.
வழக்கம் போலவே இதை நம்பாதோரின் கடுமையான விமர்சனத்திற்கு இந்த நூல் இலக்காயிற்று. ஆனால் தனது முயற்சியில் சிறிதும் மனம் தளராத டாக்டர் கில்னர், மனித ஒளிவட்டத்தை மேலும் தொடர்ந்து ஆராய ஆரம்பித்தார்.
1914 ல் பிரபல அறிஞர் சர் ஆலிவர் லாட்ஜ் என்பவர் கில்னரின் சோதனைகளில் மிகுந்த அக்கறை செலுத்தினார். 1920 ல் திருத்தப்பட்ட பதிப்பாக இவரது நூல் மீண்டும் வெளியிடப்பட்டது. 23-6-1920 அன்று தனது எழுபத்தி மூன்றாம் வயதில் மறைந்த இவர், தனது நூல் வெளியிடப் பட்டதைப் பார்க்க முடியவில்லை. பிரபல அறிவியல் இதழான ஸயின்டிபிக் அமெரிக்கன் இதழ் 1922 ல் இவரைப் பாராட்டி ஒரு பெரிய கட்டுரையை வெளியிட்டது.
எல்லாம் சரிதான்… ஆனால் ஒரு மனிதனின் ஒளிவட்டத்தை எப்படிக் காண்பது?
இதற்கு இரண்டு கண்ணாடி ஸ்க்ரீன்கள் வேண்டும். இவற்றின் மீது டிக்யானின் டை உள்ள ஆல்கஹால் கரைசல் தடவப்பட வேண்டும். கண்ணாடியில் ஒன்று அடர்ந்த பூச்சுடணும், மற்றது லேசான பூச்சுடணும் இருத்தல் வேண்டும்.
இந்த ஸ்க்ரீன்களை உபயோகிக்காதபோது அவற்றை இருட்டில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இல்லையேல் கெமிக்கல்கள் அழிந்து அவை பயனற்றுப் போய்விடும்.
இந்தக் கண்ணாடி வழியே யாரைப் பார்த்தாலும், அவரின் உருவத்தைச் சுற்றி பனி போல இன்னொரு உருவச்சுற்று தெரியும். பார்த்துப் பார்த்துப் பழக்கப் பட்டோருக்கு ஸ்க்ரீன் தேவை இல்லை. வெறும் கண்ணாலேயே ஒளிவட்டத்தைப் பார்க்க முடியும்.
ஆனால் ஒளி உருவத்தைப் பார்க்கவே முடியாதவர்கள், அடர்ந்த பூச்சுக் கண்ணாடி வழியே முதலில் பார்த்துவிட்டு, பிறகு லேசான பூச்சுக் கண்ணாடி வழியே பார்த்தால் ஒளி உருவம் இருப்பது தெளிவாகத் தெரியும்.
ஒளிவட்டத்தை விவரிப்பது என்பது இன்னொரு விஷயம்!! அதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. வெளிச்சம் அதிகப் பிரகாசமாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு நபரையும் பொறுத்தே ஒளிவட்டத்தின் அளவு நிர்ணயிக்கப்படும். வெளிச்சம் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குப் போகும் முறையில் இருப்பதே சிறந்த முறை. அதாவது ஒளிவட்டம் பார்க்கப்பட வேண்டியவர் ஜன்னலுக்கு முதுகைக் காட்டியபடி நிற்க, ஒளிவட்டம் பார்ப்பவர் ஜன்னலை நோக்கி நிற்க வேண்டும்.
இந்த ஒளிவட்ட சோதனை மூலம் வியாதிகளை இனம் கண்டு சிகிச்சை செய்ய முடியும் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம். தவிர ஒருவரின் பர்சனாலிடியை ஒளிவட்டத்தின் மூலம் கண்டறிய முடியும்.
நல்ல ஆரோக்கியம் உள்ள மனிதரின் ஒளிவட்ட வண்ணம் நீலம் மற்றும் சாம்பல் கலந்த ஒன்றாக இருக்கும். தலையைச்சுற்றி எட்டு அங்குலம் ஒளிவட்டமும் மற்ற இடங்களில் ஐந்து அங்குலமும் ஒரு பிரபல விளையாட்டு வீரருக்கு இருந்தது. அப்போது அவருக்கு வயது முப்பத்தி மூன்று. இதே அளவு அவருக்கு முன்னும் பின்னும் ஒளி பரவி இருந்ததையும் பார்க்க முடிந்தது.
அடுத்து ஆரோக்கியம் உள்ள ஒரு பெண்மணிக்கு வெளி ஒளிவட்டம் நாலரை அங்குலமாக இருக்க, கால் அருகே நான்கு அங்குலமாகக் குறைந்து இருந்தது. நீலம் கலந்த சாம்பல் நிற உள் ஒளிவட்டத்தைச் சுலபமாகத் தனியே பார்க்க முடிந்தது. மூன்றரை அங்குலம் முன்பின் அனைத்துப் பக்கமும் இருந்தது, கை கால்களில் மட்டும் அது மூன்று அங்குலமாகக் குறைந்திருந்தது.
ஐலீன் காரட் (Eileen Garrett) என்கிற பெண்மணி ஒளிவட்டத்தைப் பார்ப்பதில் வல்லவர். அவர் ஒரு க்ளர்வாயண்ட் (Clairvoyant) அதாவது கட்புலனுக்குப் புலனாகாமல் உள்ளவற்றை காணும் திறன் கொண்டவர். அவரின் இந்தத் திறமையை உலக அளவில் போலீஸார் பயன் படுத்திக் கொண்டனர்.