ஒலவ மரம் வீழ்த்திய காதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 5,422 
 
 

‘இந்த மரம் மட்டும் தேக்கா இருந்திச்சி, இப்ப லட்ச ரூவா தேறும்’ என்றாள் அய்யாக்கண்ணு, தன் இடது கையால் தட்டியபடி. அவனது இடது கை தட்டப்பட்ட இடத்தில் ஒரு உயர்ந்த ஒலவ மரம் நின்றது. உயர்ந்து, பருத்து, கிளை பரப்பி, எங்கும் விரிந்து, கோடி இலைகளுடன் பச்சைப் பசேலென்று, கண்ணால் பார்க்கும் போதே போய்க் கட்டிக் கொள்ளத் தோன்றும் அழகு.

‘கட்டிக்கொள்ள’ என்றால் ஒரு ஆள் போய் அதைக் கட்டிக்கொள்ள முடியாது. மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணைப் போல மூணு பேர் சேர்ந்து பிடித்தால் தான் அந்த ஒலவ மரமத்தைச் சேர்த்து அணைக்க முடியும். முரட்டுக் கிராதகி. பார்வையின் கவனக்குறைவில் தப்பி வளர்ந்து, திருமாலைப் போல நெடிது நின்றது ஒலவ மரம்.

ஏதோ ஒரு பறவை, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், ஏதோ ஒரு பழமென்று நினைத்து ஒரு இலவ மரத்தைக் குறி வைத்துக்கொத்த, அதில் இருந்த முதிர்ந்த விதைகளை எடுத்துத் தன் வாயில் சப்பி, சுவைத்து, அதன் மேலே இருந்த பஞ்சை மட்டும் விழுங்கி விட்டு, விதையை வாயில் வைத்து, நக்கியும், ருசித்தும், பின் அதன் ருசியில்லாத் தன்மையை உணர்ந்து, பறக்கும் போதே கீழே துப்பி விட, விதை விழுந்த இடம், நீர் வரத்து செழும்பாய் இருந்த வரப்பு அருகே.

பம்புசெட் ரூமுக்குப் பின்புறம், வாழைக்கன்றுகள் தார் ஈன்றிய ஈர நிலத்தில், யதேச்சையாய் இந்த ஒலவ விதையும் வீழ்ந்திருக்க வேண்டும். காலப் பெருவெள்ளத்தில் ஒரு சிறு துளிப் பொழுதாகிய வருடக்கணக்கில், அது நன்கு வேர் ஊன்றி, வளர்ந்து வீரியத்துடன் மேல் எழுந்து இருக்க வேண்டும்.

வளர்ச்சியில் நல்ல பருமன். பெருத்த வயிறும், பரந்த கால்களும்.

நல்ல உரமேறி பெருத்துக் கிடந்த அந்த மரம், ஊரான் சொத்தைச் சுரண்டும் களவாணியைப் போல, கரும்புக் காட்டுக்கு போடப்பட்ட யூரியா, டி.ஏ.பி., சாம்பல், உரங்களால், மேலும் உரம் பெற்று மேலும் உயர்ந்தது. எப்போதும் நீர்ச்சகதியில் ஊறி, ஊறி அதில் கனம் ஏறியது. சோலைமலைச் சாமியின் கண்களில் தப்பி, எப்படியோ வளர்ந்து எழும்பி விட்டது.

அந்த மரத்தின் உச்சியில், நாலு திசைகளிலும் நாலு கிளைகள் நீண்டு, விரிந்து, குடை பிடித்து நிழல் தந்தன. அந்த நிழல் குளுமை தந்தது. குளுமையான நிழலில், கரும்புக்குப் பட்டம் கட்ட வந்த கம்மாப்பட்டி ஆட்கள் தூக்குவாளியுடன் உட்கார்ந்து கஞ்சி குடித்தார்கள். அசதி வந்தால் படுத்து தூங்கினார்கள். குத்த வெச்சு உட்கார்ந்து ஊர்க்கதை பேசினார்கள். எப்போதும் அந்த மரத்தின் கீழ் ஏதாவது ஒண்ணு நடந்து கொண்டிருந்தது.

ஓங்கிய மரம், வெயில் பட்டு மினுமினுத்தது. தூரத்தில் இருந்து பார்த்த போது, ஆண்டாள் கோவில் ஆடித்தேர் போல் தெரிந்தது. பார்த்ததும் கை கூப்பி சாமி எனக் கும்பிடத் தோன்றியது.

தை மாசந் தோறும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து, பிற்பகல் பொழுதுகளில் குளுந்த மேல் காத்து வீசிய போது, காற்றில் ஒலவங்காய்கள் ஆடும். பார்க்க ஏதோ வெள்ளரிக்காய்களைத் தோரணம் கட்டியது போல, ஏராளமாய்க் காய்கள் காற்றில் படபடவென கீழே விழும். வெள்ளரிக் காயென்றால் எடுத்துத் தின்னலாம். இது ஒலவங்காய். நல்ல நீளத்தில் உள்ள காயை வாயில் வைத்து ருசிக்க முடியாது. ஒரே கசப்பாய்க் கசக்கும்.

விழும் காய்களை அய்யாக்கண்ணு பொறுக்கி எடுத்து, பம்புசெட் ரூமில் உள்ள உரச்சாக்குகளில் சேர்த்து வைப்பான். காய்ந்த ஒலவங் காய்கள் காற்றாய் இருக்கும். மூடை மூடையாய்ச் சேர்ந்த காய்களை உடைத்து, தோடு நீக்கி, விதை நீக்கிப் பஞ்செடுத்து, வெண்ணை மாதிரி உள்ள மென் பஞ்சைத்தனியாய்ச் சேர்த்து வைப்பது அம்மாவின் வழக்கம். பிரித்தெடுத்த பஞ்சை, துணி உறைகளில் அடைத்து, தலகாணியாய் வைத்து வைப்பாள் அம்மா.

சில நேரங்களில், ஏராளமான காய்களைச் சேர்த்து மூடைகளில் கட்டி, சைக்கிளில் கொண்டு போய் கோட்டைத்தலைவாசல் வேலாயுதம் பிள்ளை வீட்டிற்குக் கொண்டு போய் அவர் வீட்டு முற்றத்தில் கொட்டுவதும் உண்டு. பிள்ளையின் வீட்டு முற்றத்தில் நல்ல வெய்யில் வெளிச்சத்தில், மொத்தச் சாக்குகளும் அவிழ்த்துக் கொட்டப்பட, அதில் உள்ள காய்கள் மீது பிள்ளை ஒரு பார்வை வீசுவார். பார்வையே காய்களின் தரத்தை எடை போட்டு விடும். பிறகு வேட்டியை வழித்துக் கட்டிக் கொண்டு, கீழே உள்ள காய்களை ஓரே குவியலாக்கி, உள்ளங்கையை குவித்து, ஒவ்வொரு காயையும் படுக்கை வசத்தில் வைத்துத் தட்ட ஆரம்பிப்பார். நல்ல சொளை என்றால், அது ஒருபுறம். சொத்தைக் காயென்றால் அது ஒருபுறம். சொத்தைக் காய்களை கழித்து விடுவார். ஒரே தட்டு தட்டுவதில், இளம் பழுப்பு நிறத்தில் உள்ள காய் பிளந்து, உள்ளே உள்ள வெள்ளை பஞ்சு வெளியே தலை நீட்டுவதைப் பார்க்க ஏதோ அதிசயமாய் இருக்கும்.

நல்ல சொளைகள் உள்ள காய்களின் குவியலை ஒரு பார்வையிடுவார். பிறகு ரெவ்வெண்டாய் காய்களை எடுத்து எண்ண ஆரம்பிப்பார். ஒரு கைக்கு ரெண்டு காய்கள் வீதம் எண்ணி முடித்து. ஒரு காய்க்கு எட்டணா வீதம் கணக்குப் பண்ணி, வேட்டி மறைவில் உள்ள துணி மடிப்புப் பை எடுத்து, அதன் கயிற்றை அவிழ்த்து, எட்டாய் மடித்த ரூவாய்த் தாள்களை எடுத்துப் பணத்தை எண்ணித் தருவார். ஒரே நாளில் பணம் வசூலானால் அது அதிர்ஷ்டம் தான். சில நேரங்களில், ஒரு வாரம் ஆகும். வீட்டுக்குப் பணம் வசூல் பண்ணப் போனால் பிள்ளை வீட்டில் இருக்க மாட்டார். வீட்டில் உள்ள பெண்கள், ‘அவர் சேத்தூர் போயிருக்காரு’ என்பார்கள். பணம் வசூலாகாமலே போய் விடுமோ என்று மனசுக்குள் பயம் வரும். எதிர்பார்த்துப் போனால் பணம் வசூலாகாது.

காத்தடி காலத்தில், காய்கள் உதிர்ந்து மரம் மொட்டையாகி நிற்கும். ஊர்க்குடிமகன் ராமசாமியின் கூரிய கத்திரிக்கோலில் மாட்டிய தலை மொட்டையாகி, முடி இல்லாமல் ஆள் வெளியே வருவது போல. பார்க்கப் பரிதாபமாய் இருக்கும். மரத்தின் மேல் பச்சாத்தாபம் வரும்.

‘இரு மூணு மாசம் பொறு. முடி முளைக்கும். இலை துளிர்க்கும்’ என்ற ஆறுதல் சொல்லத்தோன்றும்.

அய்யாக்கண்ணுவுக்கு ஒலவ மரம் ஒரு காமதேனு மாதிரி. வருஷத்துக்கு நாலு தடவை காய் உதிரிக்கும் அட்சய பாத்திரம். காட்டில் ஆள் இல்லாத போது, காய்களைச்சேகரித்து வைப்பான். வீட்டுக்கு எடுத்துப் போய் உடைத்துப்பஞ்செடுப்பான். சில நேரங்களில் வேலாயுதம் பிள்ளையிடமே விற்று விடுவான். சோலைமலைச்சாமியிடம் சொல்வதில்லை.

எலக்டிரிக் கம்பத்தின் அருகே நின்ற மரம், மின்சார வயர்களுக்கு மேலே கிளை விரித்து நின்றது தான் பிரச்னை. நாலு இழை அலுமினியக் கம்பிகள், இரண்டு கரண்டு கம்பங்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தன. கரண்டு கம்பிக்கு மேலே தொங்கி நின்ற மரக்கிளைகள் சில நேரம் கரண்டு கம்பிகளில் உரசி, உரசி தீப்பிடித்து எரிந்தன. அய்யாக்கண்ணு அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், வயர்மேன் மாரிமுத்து அதைப்பார்த்து விட்டுக் கவலை தெரிவித்தான். நீட்டிக் கொண்டிருக்கும் எல்லாக்கொப்புகளையும் தறிச்சு விடுமாறு அய்யாக்கண்ணுவிடம் சொன்னான்.

மரத்தில் ஏற அய்யாக்கண்ணுவுக்கு தோதுப்படவில்லை. மரம் ஏற முடியாதபடிக்கு நெய்யாய் வழுக்கியது. கிளைகள் ஏறி நிற்க முடியாதபடி அடர்ந்து கிடந்தன.

‘முடிஞ்சா நீயே மேல ஏறி, வேண்டாத கொப்புகளை வெட்டிக்கய்யா’ என்று மாரிமுத்துவிடம் சொன்னான் அய்யாக்கண்ணு.

‘மரம் வயர் மேலே கிடந்ததுன்னா, மிஷினை வெச்சு தறிச்சு விட்டுரலாம். ஆனா, அந்த வெட்டுற மிஷின் எனக்கு ஆபீசுல கொடுக்கல. நீயே ஒரு நாளைக்கு அதுல மேல ஏறி, ஒரு நாலஞ்சு கொப்புகளை முறிச்சி விட்டுரு’ என்றான் மாரிமுத்து.

ஒலவ மரம் கரண்டு வயர்களை அணைத்தபடி கிடந்தது. அய்யாக்கண்னு மரம் ஏற பயந்தான். ‘பச்சை மரத்துல கரண்டு பாயும். ஷாக்கடிச்சு நான் சாகவா?’ என்றான்.

மாரிமுத்து, ‘எனக்கு இந்த மரம் ஏற வசதிப்படாது. ஆனா ஒண்ணு சொல்லிட்டேன். இந்த ஒலவ மரம் பெரிய ஆபத்து. வயர் மேல இது விழுந்துச்சுன்னா, கரண்டு கம்பமே சாய்ஞ்சுடும். உனக்கு மேக்குட்டு உள்ள காடு இஞ்சினியர் பரமசிவம் காடு. உடனே அங்கேயும் கரண்டு போயிடும். இந்த வரிசைல இருக்கறதுல மொத்தமா ஒரு பத்து கிணத்துல கரண்டு வராது. பாத்துக்கோ.’

‘மரம் வெட்டுறதுன்னா நீயே வெட்டக் கூடாது. வெட்டுனா கரண்டு கம்பம் மேல மரம் சாய்ஞ்சுடும். அப்படி கரண்டு கம்பம் சாய்ஞ்சா பத்தாயிரம் ரூபா அபராதம் போடுவோம்.’

‘அதனால ஒழுங்கு மரியாதையா நீயே நாளைக்கு ஆபீசுக்கு வந்து ஜே.ஈ.சாரைப் பாரு. அவரு சொல்றபடி கேளு’ என்று கறாராய்ச் சொல்லிவிட்டு, தன் இடுப்புக்கயிறு, உறை சகிதம் போய் விட்டான்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு படிக்காசு வைத்தான்பட்டி ஜே.ஈ. ஆபீசரைப் போய்ப் பார்த்தான் அய்யாக்கண்ணு. வயர் மேலே விழாம மரம் வெட்டணுமா? (அப்படி வா வழிக்கு) மரம் வெட்டறதுக்கு ஆட்களை ரெடி பண்ணிட்டு, எங்க ஆபீசுக்கு தகவல் சொல்லி அனுப்பு. நாங்க எங்க வயர்மேன் நாலு பேரை அனுப்புவோம். அவங்க கரண்டு கம்பத்து மேலே ஏறி, பீஸ் கேரியரை எல்லாம் பிடுங்கிட்டு, எல்லா வயர்களையும் கழட்டி விட்டுட்டு சரின்னு சொல்லுவாங்க. அப்ப, உங்காளுங்கள விட்டு மரத்தை வேகமா வெட்டச் சொல்லணும். மரத்தை வெட்டிச் சாய்ச்சதும், மறுபடி கரண்ட் கம்பத்துல ஏறி, வயர்களை எல்லாம் எங்க வயர்மேன்கள் மாட்டுவாங்க. அவங்களுக்கு சாப்பாடு, போக்குவரத்து மற்ற எல்லாச் செலவுகளும் உங்க பொறுப்பு. ஒரு ரெண்டாயிரம் ரூபாயை ரெடி பண்ணி வெச்சா, எங்க வயர்மேன்களை அனுப்பி வெச்சுருவேன். புரிஞ்சுதா?’ ஜே.ஈ. பேசிச் கொண்டே போனார்.

அய்யாக்கண்ணுவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த ஒலவ மரம் கூட அவ்வளவு விலை போகுமா என்று சந்தேகமே. அவனும் எல்லாருக்கும் காத்து வாக்கில் சேதி சொல்லியனுப்பினான். மம்சாபுரம் ஆள் ஒருத்தன் கோடாரியுடன் வந்து மரத்தை வெட்டப் பார்த்தான். பிறகு மரக்கொப்புகளுக்குக் கீழே இருந்த கரண்ட் வயர்களைப் பார்த்து விட்டு ‘இதோ வர்றேன்’ என்று சொல்லி விட்டுப் போனவன் தான். பிறகு வரவே இல்லை.

அய்யாக்கண்ணு திகைத்துப் போனான். ஒவ்வொரு தடவையும் வயர்மேன் மாரிமுத்து பம்புசெட் பக்கம் வரும் போதெல்லாம், அந்த ஒலவ மரத்தை ஏதோ பரம்பரை எதிரியைப் பார்ப்பது போலப் பார்வையிட்டான்.

‘யோவ் அய்யாக்கண்ணு! முதல்ல அந்த ஒலவ மரத்தை வெட்டிக் குளோஸ் பண்ணுற வழியைப் பாரு! அது எசகு பிசகா கரண்ட் வயர் மேல தொங்கிகிட்டிருக்கு ஆமா. பெரிய ஆபீசர் இதையெல்லாம் ரொம்ப உன்னிப்பா பாக்குறாரு’ என்றான் மாரிமுத்து.

– ‘நான் எல்லாப் பக்கமும் தகவல் சொல்லி விட்டுட்டேன்யா. நீ கவலைய விடு. இந்தப் பங்குனிக்குள்ள மரத்தைச் சாய்ச்சுருவேன்’ அய்யாக்கண்ணு சவால் விட்டான்.

எல்லா மர வெட்டிகளும் சோலைமலைச்சாமி வயக்காட்டுக்கு வருவதும், ஒலவ மரத்தைப் பெண் பார்ப்பதும், பிறகு ‘பெண் பிடிக்கவில்லை. என்னால் இவ்வளவு பெரிய ஓங்கு தாங்கான ஆளையெல்லாம் பெண்டாள முடியாது’ என்று சம்பந்தம் பேச மறுப்பதும், தொடர் வாடிக்கையாகிப் போனது. பச்சைப் பசேலென்று இருந்தும், பார்க்க கண்ணுக்கு நிறைவாய் இருந்தும் கரண்டி கம்பி தோஷம் இருந்ததால், ஒலவ மரம் முதிர்கன்னியாகவே இருந்தது.

ஒரு நல்ல வேனல் கால பின்மாலைப் பொழுதில், அய்யாக்கண்ணு, களை வெட்டும் பெண்களுடன் சேர்ந்து கிழக்கே போடு கரும்புக்கு களை வெட்டிக் கொண்டிருந்தான்.

– ‘இங்க யாருங்கய்யா அய்யாக்கண்ணுங்கறது’ என்ற குரல் கேட்டது.

அய்யாக்கண்ணு கரும்புப் பட்டத்திலிருந்து சரேலென மம்பட்டியுடன் வெளிப்பட்டான்.

‘என்னய்யா, என்ன வேணும்? நான் தான் அய்யாக்கண்ணு’.

‘உன் காட்டுல ஒலவ மரம் ஒன்ணு நிக்குதுன்னு சொன்னாங்க. அத வெட்டி எடுத்துட்டுப் போக வந்தேன்’.

யாராவது பக்கத்தில் நின்று மூச்சை இழுத்து விட்டால், கீழே விழுந்து விடுபவன் போல வந்த ஆள் இருந்தான். வெள்ளை வேட்டி, வெள்ளைச்சட்டையில் மீசையில்லாமல் மழுக்கென்ற முகம்.

‘எந்த ஊரு?’

‘வன்னியம்பட்டி’

‘பேரு?’

‘பச்சையப்பன்’

‘என்ன ஆளுங்க?’

‘……………’

‘வாங்க என்னோட’

வந்த வயசாளியைக் கூட்டிக்கொண்டு, வரப்பு மிதித்து நடந்து சென்று, பம்பு செட் ரூமுக்குப் பின்புறம் கன்னி கழியாமல் நின்ற முதிர்கன்னி ஒலவ மரத்தைக் காட்டினான் அய்யாக்கண்ணு.

பச்சையப்பன் மரத்தின் மொத்த உயரத்தையும் பார்வையால் அளந்தான். பிறகு மரத்தின் இடுப்புப் பக்கம் வந்து அதைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தான். மரம் உளுத்துப் போனதா என்று தட்டிப் பார்த்தான். பிறகு முகவாய்க்கட்டையைத் தேய்த்தபடியே சிந்தனையில் ஆழ்ந்தான்.

‘சரி, விலையைச் சொல்லு’

‘நீங்களே ஆரம்பிங்க’

‘நீ உத்தேசமா உன் எதிர்பார்ப்பைச் சொல்லுய்யா’

‘……………..’

‘……………..’

பேரம் ஆரம்பமாகியது. நீண்டு கொண்டே போன பேரம். ‘இந்தா இழு. விடாதே பிடி’ ங்கற கதையாக ‘உனக்காச்சு எனக்காச்சு’ ன்னு கை மேல் துண்டு போட்டு பேரம் நடத்தாத குறை தான்.

பச்சையப்பன் தன்னுடைய பழைய மரம் வெட்டிய வீரப் பிரதாபங்களை ஒவ்வொன்றாய் அவிழ்த்துவிட ஆரம்பித்தான். அய்யாக்கண்ணு தனக்குத் தெரிந்த விறகு வியாபாரிகளைப் பற்றி கதை அளந்தான்.

பேரம் பேச ஆரம்பித்தவர்கள், யாவாரம் செஞ்ச கதை, சம்சாரி கதைகள், வெள்ளாமை செஞ்ச கதைகள், யார் யாரோடு தொடுப்பு வைத்திருக்கிறார்கள் போன்ற சரித்திரச்சம்பவங்களையெல்லாம் நினைவுபடுத்தத் தொடங்கினர்.

ஆட்டுக்கு இணை ஆடு சேர்ந்த கதையாக, இவ்விருவரும் பேச்சு சுவாரசியத்தில் ஒன்றி விட்டனர். பழங்கதைகள் பேசிக்கொண்டே வந்த பச்சையப்பன், அந்த ஒலவ மரத்திற்கு அருகிலேயே தெக்குப்பக்கமாய் நின்ற, வானத்தைத் தொட்ட தென்னை மரத்தைத் தொட்டுப் பார்த்தான். அதை ரெண்டு தட்டு தட்டியவன்.

‘சரியான வைரம் பாய்ஞ்ச தென்னை மரம் போல. இது நல்ல வலு உள்ளது’ என்றான்.

‘அது நாப்பது வருசத்து மரம். வயசாளி. எங்க சோலைமலைச் சாமியோட அம்மா நட்டது’. என்று தென்னை மரத்தின் பூர்வ கதையைச் சொன்னான் அய்யாக்கண்ணு.

இழைச்சு தூண் செய்யவோ, உத்தரத்துக்கோ ஆகாது. ஆனா, கட்டிடத்துக்கு சாரம் கட்ட லாயக்கு’ என்றான் பச்சையப்பன்.

அந்த தென்னை மரத்தை நான் விக்க முடியாது. எங்க சோலைமலைச் சாமி விக்கச் சொன்னது ஒலவ மரத்தை மட்டும் தான்’

கருக்கலில், மேற்குத் தொடர்ச்சி மலையின் பின்புறம் சூரியன் வீழ்ந்த போது தான் பச்சையப்பன் துண்டை உதறி விட்டு எழுந்தான். இறுதியில் ஒலவ மரம், தென்னை மரம் இரண்டுக்குமாகச் சேர்த்து மூவாயிரத்து ஐநூறு என்று முடிவானது. அய்யாக்கண்ணு தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தான்.

பச்சையப்பன் தன் வேட்டியை உயர்த்தி, பட்டை நாடா அண்டர்வேரில் மடித்து வைக்கப்பட்டிருந்த கத்தை நோட்டுகளில் ஒரு நூறு ரூபாயை எடுத்து அய்யாக்கண்ணுவின் கையில் திணித்து,

‘பிடி, இது அச்சாரம்!’ என்று பேரத்தை முடித்து வைத்தான்.

அந்த வாரத்தின் சனிக்கிழமையில் பம்புசெட்டுத் தொட்டியில், தண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிக் குளித்துக் கொண்டிருந்த அய்யாக்கண்ணு, இனாம் நாச்சியார் கோவில் கிராமத்தின் கவர்மெண்டு ஆஸ்டல் பக்கம் டிராக்டர் வரும் சத்தம் கேட்டான். திரும்பிப் பார்த்த போது, ஒரு டிரெய்லருடன் டிராக்டர். அதில் ஐந்தாறு ஆட்கள் வந்து கொண்டிருந்தனர்.

‘வெயில் ஏறிக்கிடக்கு, இப்பப் போய் இவங்க வர்றாங்களே. வெள்ளெனவே வந்தா என்னவாம். வெவரங் கெட்ட பயலுவ. வெள்ளெனவே வந்திருந்தா, இந்த நேரத்துக்குள்ள வெட்டி எடுத்துக்கிட்டுப் போயிருக்கலாம்’ அய்யாக்கண்ணு மனசுக்குள் சலித்துக்கொண்டான்.

டிராக்டரில், டிரைவர் சீட்டுக்கு அருகே அந்த பச்சையப்பன், அதே வெள்ளை வேட்டி, அதே வெள்ளை நிற அரைக்கை சட்டை, அதே வெத்திலை, பாக்கு. கொலையாளிகளைப் போல தெரிந்த வேலையாட்கள் கோடாரி, கடப்பாரைக் கம்பிகளுடன் குதித்தனர்.

‘நடுவுல வர்ற போது, ரெண்டு ஆளுக வீட்டுல நிறுத்தி அவங்களையும் கூட்டிக்கிட்டு வர வேண்டியதாப்போச்சு. இப்ப வேலைய ஆரம்பிச்சுடுறோம்!’

‘ஒரு நிமிசம். இந்த ஜே.ஈ. ஆபீசுக்கு தகவல் சொல்ல வேணாமா?’ என்று கேள்வியைச் சொடுக்கினான் அய்யாக்கண்ணு.

‘அட நீ ஒண்ணு! அவனுக கெடக்குறாங்க. எங்க, எதுல பொறுக்கித் திங்கலாம்னு அந்த படிக்காசு வைத்தான்பட்டி ஜே.ஈ., ஏ.ஈ.ரெண்டு பேரும் நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுக்கிட்டு அலையறாங்க. என்னிக்காவது லஞ்சம் வாங்கற போது கையும், களவுமா பிடிபட்டு, விலங்கு மாட்டி உள்ள போகப் போறானுவ. மலம் திங்கற பன்னிங்க!’ பச்சையப்பன் கோபத்தில் வெடித்தான்.

‘சரி அப்ப நீங்க வேலைய ஆரம்பிங்க. அதுக்கப்புறம் வர்றதை நாம பாத்துக்கலாம்’ அய்யாக்கண்ணு வேலை தொடங்க சைகை செய்தான்.

களத்தில் குதித்தார்கள் பச்சையப்பன் ஆட்கள். மூணு பேர் அந்த ஒலவ மரத்தைச் சுற்றி நின்று கோடாரி வீசத் தொடங்கினார்கள். மரத்தில் வெட்டு விழும் இடுப்புப் பக்கத்தில் பச்சையப்பனின் கண் பார்வை நிலை குத்தி நின்றது. நீர்ச்சத்து ஏறிக்கிடந்த மரம் இலகுவாய் இளக்கம் கொடுத்தது. சில்லுச் சில்லாய் அதன் தண்டு சிதறி விழ ஆரம்பித்தது. முரட்டு ஆட்கள் ரொம்ப மூர்க்கத்தனமாய் ஆயுதப் பிரயோகம் செய்தனர்.

கூலியாட்களின் கருத்த உடலில் வழிந்த வேர்வைத்துளிகளில், சூரிய ஒளி பட்டு மின்னியது. இப்போது ஆள் மாற்றி நின்று வெட்டினார்கள். இடுப்பு சிறுத்து, புதிதாய்ச் சமைஞ்ச மெலிந்த பெண்ணின் இடுப்பு போல ஆனது ஒலவ மரம். பத்து நிமிஷம் இளைப்பாறி, ஆளுக்கு ஒரு குடம் தண்ணியை ஒரே மூச்சில் குடித்து விட்டு, மீண்டும் மரம் வெட்ட ஆரம்பித்த போது, அவள் மெல்ல முனகினாள்.

சுதாரித்த ஆட்கள், டிராக்டரிலிருந்து கொண்டு வந்து தடித்த நைலான் கயிறுகளை மரத்தின் மேல் கிளைகளில் கட்டி, அதன் நீண்ட மறு முனைகளை டிராக்டரின் பின்புறம் இழுத்துக்கட்டினார்கள். பிறகு பச்சையப்பன் டிரைவரைப் பார்த்துக் கொண்டே, தன் தோள் துண்டை எடுத்துக் காற்றில் வீசினான். புரிந்து கொண்ட டிரைவர், டிராக்டரை உசுப்பி எழுப்ப, வண்டி மெதுவாக முனகிக்கொண்டே அசைந்தது. இறுகக் கட்டப்பட்ட நைலான் கயிறுகள் தெறித்து விடுவன போல முறுக்கேறி நின்றன. டிரைவர் வண்டியின் மூச்சை இளைக்க விட்டு விட்டு, மீண்டும் அதை உசுப்பினான். இப்போது மரமும் இறுகக் கட்டப்பட்ட கயிறுகளும், கடும் முனகலோடு ஒன்றுக்கொன்று விடாப்பிடியாக முறுக்கேறி நின்றன.. டிரைவர் மறுபடி ஒரு முறை இஞ்சினின் மூச்சை இளைக்க விட்டு விட்டு, பிடி கொடுத்து ஒரு இழு இழுத்தான். கயிறுகளின் இறுக்கமும், அது இழுத்து நின்ற ஒலவ மரமும், பார்ப்பதற்கு ஆடி மாச ஆண்டாள் திருத்தேரை பக்தர்கள் படாத பட்டு இழுப்பது போன்றே தோன்றியது.

‘பட் படால், படால்’ என்ற இடியோசை காதைப் பிளந்தது. மரம் அதன் இளைத்த இடுப்போடு முறிந்தது. அதன் படர்ந்த கிளைகள், தண்டு சகிதம் வடக்குப் பக்கமாய் அசைந்து சாய்ந்தது.

ஏதோ பெருமாள் குடி கொண்ட திருவண்ணாமலையே குடை சாய்ந்தது போல மொத்த மரமும் மெட்ராஸ் நாடார் காட்டின் பக்கம் விழுந்தது. மிச்ச சொச்சமாய்க் கிடந்த துண்டுக் கொப்புகளை மேலும் வெட்டி அப்புறப்படுத்தினர் கூலியாட்கள்.

வீழ்ந்த ஒலவ மரம், பூமியெங்கும் பரந்து கிடந்தது. மல்லாந்து கிடந்து வானம் பார்த்தது. ஒரு தடவை அதைப் பார்வையால் விழுங்கிய பச்சையப்பன், அதன் அருகில் போய் தன் வலது காலை உயர்த்தி அதன் பருத்த மார்பு ஒன்றின் மேல் வைத்து மிதித்தான். அது சிலிர்த்தது. தன்னைப் பெண்டாள வந்தவனை ஏறிட்டுப் பார்த்தது. பச்சையப்பன் கீழுதட்டில் ஒரு கேலிச்சிரிப்படன், மீண்டும் அதன் தொடைகளைத் தன் காலால் அழுத்தினான். அது மீண்டும் சிலிர்த்தது.

தன் பௌருஷத்தால் அதை வெற்றி கொண்டோம் என்ற மமதையில், தன் பூரண ஆண்மையின் வெளிப்பாடாக, பச்சையப்பன் ஒலவ மரத்தைப்பார்த்து, ஒரு சிரிப்பு சிரித்தான். சம்போகம் முடிந்த திருப்தியில் ஒலவ மரம் சோர்ந்து, தளர்ந்து போய்த் தரையில் கிடந்தது.

Print Friendly, PDF & Email
அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர். தொழில் தனியார் பள்ளி ஆசிரியர். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை, என்று 15 நூல்கள் வெளியிட்டுள்ளேன். எமது 3 நூல்களுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நூல் வெளியிட நிதி தந்துள்ளது. தொலைந்து போன கால்டுவெல் ஐயரின் நூல்களை மீட்டெடுத்து, மீள் பதிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்.அலமேலு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *