ஒரு வெள்ளை அறிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2013
பார்வையிட்டோர்: 5,882 
 
 

ரொம்ப வருஷம் கழித்து அவன் அந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்தபோதுதான் அவளைப் பார்த்தான். அவளும், தான் வேலை பார்க்கும் துறையிலேயேதான் பணியாற்றுகிறாள் என்ற விபரமே அப்போதுதான் அவனுக்குத் தெரியவந்தது. அதுவே அவளிடம் கொஞ்சம் நெருங்கிவிட்டதைப் போலத் தோன்றி சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இத்தனை வருஷம் பார்க்காமல் இருந்திருந்தாலும், இப்போது பார்க்க நேர்ந்ததில் ரொம்பவும் நெருக்கமாக உணர்ந்தான். எதற்காக இப்படித் தோன்றுகிறது என்று நினைத்துப் பார்த்தபோது, ஊரில் இருக்கையிலேயே அவள் அழகு தன்னை வசீகரித்திருந்ததும், இவளெல்லாம் எங்கே தனக்குக் கிடைக்கப் போகிறாள் என்று மனம் ஏங்கிக் கிடந்ததையும், இருந்த காலங்களில் ஒரு முறை கூட மறந்தும் அவள் தன்னைப் பார்த்ததில்லை என்பதுவும், மறைந்தும், ஒளிந்தும், தயங்கியும், தவித்தும், பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டதையும், இப்பொழுது அவளைப் பார்த்த இந்தக் கணத்தில் கூடத் தன்னுள் அந்த ஏக்கம் தவிர்க்க முடியாமல் வெளிப்படத்தான் செய்கிறது என்பதை நினைக்கையில், அன்றிருந்ததை விட இப்பொழுது அழகு கூடியிருக்கிறதோ என்று நினைக்கத் தலைப்பட்டான்.

அவள் வந்து போவதைப் பார்த்தால், கடந்த சில வருஷங்களாகவே இந்த அலுவலகத்திலேயேதான் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள் என்பதாகத் தோன்றியது. அவளுக்கிருக்கும் அழகுக்கு அவள் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்க வைத்தது. முன்பே பழக்கமிருந்திருந்தால், அவள் இங்கிருக்கும் விபரம் தெரிந்திருந்தால், அதே அழகைப் பயன்படுத்தி, அந்த செல்வாக்கில், தனக்கும் ஒரு மாறுதலை அவள் வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்று விபரீதமாய்த் தோன்ற, அது எப்படி சாத்தியம், ஒரே ஊர்க்காரன் ஆனாலும் அவள்தான் தன்னையெல்லாம் ஏறிட்டுக் கூடப் பார்த்ததில்லையே என்று தன்னிரக்கம் மேலிட்டது இவனிடம். இது என்ன நினைப்பு என்று மெல்லிய சிரிப்பு உதித்தது..

ஆனாலும் ஒன்று. அவள் அழகுக்கு அவள் அப்படி இருந்ததுதான் சரி. ஏறிட்டுப் பார்த்துப் பேசக் கூட ஒரு மூஞ்சி வேண்டாமா? ஒரு வேளை நிமிர்ந்து பார்த்திருந்தால் தன்னால் நிச்சயமாக அவள் முகத்தை நேருக்கு நேர் கூச்சமின்றி நோக்கியிருக்க முடியாதுதான். சட்டென்று குனிந்து, விலகித்தானே போயிருப்போம், அதனால்தானே மறைந்து, ஒளிந்து திருட்டுத்தனமாய் அவள் அழகை ரசித்தது. அந்தக் காரியங்களிளெல்லாம்தான் எத்தனை சுகமிருந்தது.

இவனுக்கு இதேதாண்டா பொழப்பு…அவ பின்னாலேயே பார்க்கிறான் பாரு….பிடிங்கடா அவனை…ஓடிப்போய் கைல பிடிச்சுக் கடிச்சிரப் போறான்…

நண்பர்கள் கூட்டத்தில் இவன் மட்டுமேதான் அவளைப் பார்த்தான். ஏன் அவள் அழகு மற்றவர்களை ஈர்க்கவில்லை? ரசனையே இல்லையே எவனுக்கும்?தன் கண்ணுக்குத் தோன்றிய பேரழகு அவர்களுக்கு மட்டும் ஏன் உறுத்தவில்லை. சலனப்படுத்தவில்லை. தன் வயதொத்தவர்கள் தானே எல்லோரும்? அவர்கள் அப்படி இருந்ததுதான் தனக்கு வசதியாய்ப் போயிற்று. ஆனால் ஒன்று. அவர்களெல்லாம் நன்றாகப் படித்தார்கள். அதை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும். அதில் கோட்டை விட்டது தான் மட்டுமே. இவன் திருந்த மாட்டான்டா என்று உதறிவிட்டார்கள். இவளால்தான் அது கெட்டுப் போனதா? அப்படி ஒரேயடியாயும் கூறி விட முடியாதுதான். தனக்கு சினிமாவும், பாட்டும், கூத்தும் என்றுமே பிரதானமாய்த் தோன்றியிருக்கின்றன. பரீட்சைக்கு முதல்நாள் பயமில்லாமல் சினிமாப் பார்த்தவனாயிற்றே…! அந்த நாயகியின் இடத்தில் இவளை வைத்து ரசித்தவனாயிற்றே…ஆனாலும் காலம் தன்னை அத்தனை இழி நிலைக்குத் தள்ளி விடவில்லைதான். எப்படியோ தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஒரு வேலைக்குப் போயாயிற்று. …அதற்கான முயற்சியின்போது உஷாராகித்தான் இருந்தோம்…தன்னைப் போல் அசுர முயற்சி செய்தவன் எவனுமில்லை. அதே உழைப்பைப் படிக்கும்போதும் காட்டியிருந்தால், சென்று சேர்ந்த இடம் எவ்வளவோ உயரத்தில் போயிருக்கும். சினிமா, கலை, பாட்டு, கூத்து என்று இருப்பவன் கதையெல்லாம் இந்த அளவுக்குத்தான் இருக்கும் போலும்…இன்றும் விடாமல் அவையெல்லாம் கூட வந்து கொண்டேயிருக்கிறதே…! இதோ, தன் வாழ்க்கையில் இப்பொழுது மீண்டும் வந்து விட்டாளே…! இந்தப் பயணத்தின் நெடுக இவள் தென்பட்டுக் கொண்டேயிருப்பாள் போலிருக்கிறதே…!

பத்து வருடங்களாகத் தான் வெளியூரில் இருந்து விட்டு, முறைப்படி விண்ணப்பித்து, விதிவழிப்படியான எண் வரிசையில் இங்கே வந்து சேர்ந்திருப்பதும், இருக்கும் போட்டியில், வெவ்வேறு விதமான சிபாரிசுகளில் இதுவும் எத்தனை மாதங்களுக்கோ அல்லது எத்தனை நாளுக்கோ என்று ஒரு பயம் தோன்றிக் கொண்டேயிருப்பதும், என்னவெல்லாம் செய்தால் தன்னை அவர்கள் தவிர்க்க முடியாது, அனுப்ப முடியாது என்கிற நிலையை எய்த முடியும் என்ற சிந்தனையே தன்னிடம் ஓடிக் கொண்டிருப்பதும், அதற்கான முயற்சிகளை வலியத் தான் மேற்கொள்வதும், நாராயணனைக் கூப்பிடுங்க, அவர்தான் சரி…என்கிற வார்த்தைகள் சமீபத்தில் அவ்வப்போது வர ஆரம்பித்திருப்பதும், ஏதோவொரு வகையில் தன்னைத் திருப்திப்படுத்தி வருவதை உணரத்தான் செய்கிறது மனம்.

நாராயணன் என்ற தன் பெயர் கூட ஒருவகையில் ஊரில், தெருவில், கேலிக்குரியதாகத்தான் விளங்கியது அன்று. நாராயணன் நரைத்தலையன்……நாராயணன் நரைத் தலையன்….என்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதாகத் தோன்ற கை அவனையறியாமல் தலையைக் கோதியது. தன்னை அப்படி அழைத்துத்தானே கேலி செய்தார்கள்? யே…நரைத் தலையா…டே….நரத் தலையா….வாடா இங்க….! அந்தச் சின்ன வயதிலேயே தன் தலைமுடி நரைத்துவிட்டதற்குத் தான் எப்படிப் பொறுப்பாக முடியும்? வறுமை காரணமா? ஊட்டச் சத்து இல்லாமை காரணமா? அல்லது பெற்றோரின் உடல் வாகு வம்சாவளியாகத் தனக்கும் வந்த காரணமா? முடி நரைத்தால் அது ஒரு கேவலமா? வயதில் சின்னவனுக்கு நிறைய நரைத்திருப்பது பார்க்கக் கொஞ்சம் ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். சற்றே வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும்தான். அதற்காக நான் என்ன செய்ய முடியும்? அதற்காக அது கேலிக்குரிய விஷயமா? எதைச் சொல்வது? அப்பாவுக்கு அப்படி இல்லையாயினும், இளைய சித்தப்பா முடி வெள்ளையாய்த்தானே அலைந்தார்? சொல்லித்தான் என்ன ஆகப் போகிறது. நரைத்த தலை நரைத்ததுதான்? இப்போது மாதிரி அப்போதெல்லாம் முடியைக் கருப்பாக்கிக் கொள்ளும் வழக்கமிருந்ததில்லையே?அப்படிக் கருப்படித்துக் கொண்டிருந்தால் இந்தக் கேலிகளிலிருந்து தப்பித்திருக்கலாமோ? ஒரு வேளை அந்த வழக்கமிருந்து, தனக்குத் தெரியாமல் போயிருந்திருக்கலாம். யாருக்குமே தெரிந்ததாகவும் தெரியவில்லை. அத்தோடு அப்போது அதெல்லாம் தவறான வழக்கங்கள் என்கிற வகைப்பாடுக்குட்பட்டதாக வல்லவோ இருந்தன? அதெல்லாம் சினிமா ஸ்டார்கள் செய்து கொள்பவை என்பதாக…! இவையெல்லாம் கிடக்கட்டும்…இதெல்லாம் அன்று ஒரு பிரச்னையே இல்லையே…படிக்கணும்…வேலைக்குப் போகணும்…இதுதானே எப்போதுமான போதனை….படி…படி…படி…!இப்படிச் சொல்லித்தானே விரட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஒருவேளை தன் பெயரும், நரைத்த தலையுமே அவளுக்குப் பிடிக்காமல் போயினவோ என்னவோ…? எப்போது அவள் தன்னை அப்படி நோக்கி அறிந்திருக்க முடியும்? எல்லோரும் பாட்டாய்ப் பாடுவது அவள் காதிலும் விழுந்து, அவளும் அந்த எண்ணத்திற்கு வந்திருக்கலாம். தூசுக்கு சமானமாய் இருந்த காலம்தானே அது…! தன்னையெல்லாம் அவள் என்று ஒரு பொருட்டாய் மதித்தாள். அவள்பாட்டுக்கு ஒரே பார்வையாய், என்ன திமிராய் நிமிர் நடை நடப்பாள்.

இன்று அவளைப் பார்க்கையில் அந்த எல்லா எண்ணங்களும் சற்றும் அழிவில்லாமல்….சரிபோகட்டும்….அதற்காக அவளுமா இப்படிப் புத்தம் புதியதாய் இருப்பாள். அன்று கண்ட மேனி அழியாமல் என்கிறார்களே…அதுதான் இதுவோ….இவளுக்கு வயது என்பதே கிடையாதா? என்ன ஒரு மினு மினுப்பு…என்னவொரு பளபளப்பு…? அந்த உறாலே அவளால்தான் ஒளி வீசுகிறதோ…? சுற்றிலும் பரவியிருக்கும் சுகந்த மணம் அவளிடமிருந்து தோன்றுவதுதானோ?

உள்ளே நுழைகையில் வராண்டாவுக்கு அடுத்த படுக்கை வசமான நீண்ட அகல உறாலின் எதிர் வரிசையில் சற்றே இடது புறமான இடத்தில் அவள் இருக்கை இருந்ததுவும், வலியத் திரும்பிப் பார்த்தால்தான் அந்த உறாலைக் கடப்பதற்குள் அவளை ஒரு பார்வை பார்த்து விட முடியும். அப்படி வலியக் கழுத்தை ஒடித்து நோக்குவதே மற்றவர்களின் பார்வையில் பட்டு விடக் கூடும். யாரும் அறியாமல் அவளை எப்படிப் போகிற போக்கில் ஒரு நோக்கு நோக்கிவிட்டுக் கடப்பது? மொத்த நாளில் அந்தப் பக்கமாய் வருவதே ஒரு சில முறைதான். அதுவும் இந்தப் பாடாய் இருந்தால், பின் எப்படித்தான் பார்ப்பதாம்? . உள்ளூருக்கு வந்து பணியில் சேர்ந்து, முதலில் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்கிற சிந்தனையில்லாமல், இவள் தன்னை இப்படி வசீகரித்து விட்டதும், பழைய ஞாபகங்களைக் கிளறி விடுவதும் இம்சையாகத்தான் இருக்கிறது. இன்பமான இம்சை. மனதுக்கு அது வேண்டித்தான் இருக்கிறது. என்னவோ ஒரு குறுகுறுப்பு. தவிர்க்க முடியவில்லைதான்.

இப்படித்தான் சொந்த ஊரில் இருந்த காலத்தில் படிப்பில் கவனம் செலுத்த விடாமல் அலைக்கழித்தாள். நெஞ்சக் குளத்தில் கல்லெறிந்து, ஆசை அலைகளைக் கிளப்பிக் கொண்டேயிருந்தாள். அதனாலேயே மார்க் குறைந்து போனதும், அது தெரியாமல், என்னத்தப் படிச்சுக் கிழிச்சே…நீ, ஐம்பது சதவிகித மார்க்கெல்லாம் ஒரு மார்க்கா, எப்படி வேலை வாங்குவியோ எனக்குத் தெரியாது, இனி உன் சாமர்த்தியம் என்று அப்பா கை கழுவி விட்டதும், தான் சுதாரித்த காலங்களில் கூட அவளும், அவள் நினைப்பும்,அந்தக் கொள்ளை அழகும் தன் கூடவே வந்து கொண்டிருந்ததும், தான் பார்த்த, ரசித்த, மயங்கி மண்டியிட்ட ஒரே தேவதை அவள்தான் என்று தோன்றி இப்பொழுதும் ஏக்கப் பெருமூச்சைக் கிளர்த்திக் கொண்டிருக்கிறது இவனிடம்.

அந்தக் கட்டடத்தில் இவன் இருக்கிறானேயொழிய அந்த அலுவலகப் பணியாளன் அல்ல. அவள் வேலை பார்க்கும் அந்த அலுவலகத்திற்கு இவன் மாறுதலில் வரவில்லை. அதுவே அவன் அங்கே வந்த பின்னால்தான் அவனுக்கே தெரிந்தது. புதிதாகத் தோன்றிய ஒரு அலுவலகத்தின் பணியாளனாக, வேறு கட்டடம் கிடைக்கும்வரை அங்கு இருந்துகொள்பவனாகவே அவன் அலுவலகம் இருந்தது. அவனும் வந்து போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவன் தலைமை அந்த இடத்தை விட்டுப் போவதாய் இல்லை என்று சொன்னது இவனுக்குப் பிடித்திருந்தது. பக்கம் பக்கமாகவே கோயிலும், கடைகளும், பேருந்து நிலையமும், உணவகங்களும் அமைந்து போன அந்த இடம் ரொம்பவும் வசதி என்பதால், தாங்கள் பிடித்திருக்கும் அந்தக் கடைக்கோடி அறைதான் கடைசிவரை என்று உறுதியாய் இருந்தார் அவர். வேறு வாடகைக் கட்டடத்திற்கான பிரேரணையை அனுப்புவதில் தாமதம் செய்தார்.

வாரத்தில் ஐந்து நாட்கள் முகாமில் இருந்துவிட்டு, ஆறாவது நாள் அலுவலகம் வருவார். அவர் குறிப்பிடும் வேலைகளை அவரின் எதிர்பார்ப்பிற்கு முன்பே முடித்துக் கொடுக்கும் திறன் .இருந்தது இவனிடம். இவன் மீது அவர் கொண்டிருந்த மதிப்பு, ஒண்டியிருக்கும் அலுவலகத்திற்கான பல அவசரப் பணிகளில் முன்னின்று இவன் உதவும் போக்கு, அவர்களோடு நட்புறவுடன் இருந்து ஒட்டிக் கொள்ளும் தன்மை, அதனால் அடையும் சிறு சிறு பலன்கள் எல்லாமும் சேர்ந்து, அவனை ஒரு தவிர்க்க முடியாத பணியாளனாய் அந்தப் பெரிய அலுவகத்திற்கு ஆக்கியிருப்பது தாங்கள் வேறு இடம் பார்த்துச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்பதை நாளுக்கு நாள் உறுதிப் படுத்திக் கொண்டேயிருந்ததை உணர்ந்து அவர் அவனைப் பாராட்டினார்.

நான் கேம்ப் போயிட்டு வாரத்துல ஒரு நாள் ஆபீஸ் வர்றேன். நமக்கு எதுக்கு தனிக் கட்டடம்? இந்த எடத்தைத் தக்க வச்சிக்கிறது உங்க கைலதான் இருக்கு. அதான் நம்ம எல்லாருக்குமே வசதியானது…என்றார். ஒரு கணினி இயக்கியும், பியூனும் ஆக மொத்தம் நால்வர் அணிதான் அவர்கள் அலுவலகம்.

இவனின் வேலைத் திறன், அவள் காதுக்கும் போயிருக்கும்தானே என்றது இவன் மனம். தான் அந்த அலுவலகத்தின் எல்லோருக்கும் உதவுகையில், அவளுக்கு மட்டும் தன் உதவி தேவைப்படாதா என்ன? ஒன்றுகூடக் கிட்டவில்லையே இன்றுவரை என்று வலிய அவாவியது மனம். இதென்ன வேண்டாத சிந்தனை? தன்னின் இருப்பு பற்றி அவளுக்குத் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால்தான் என்ன?

அந்த அலுவலகத்தின் பல பிரிவுகளுக்கும் செய்யும் உதவி, ஒரு நாள் அவளுக்கும் தேவைப்படாமலா போய்விடும்? அப்போதாவது வந்து கேட்கமாட்டாளா? அன்றாவது இரண்டொரு வார்த்தைகள் அவளோடு பேச வேண்டி வராதா? அந்த நல் வாய்ப்பும் கிட்டாமலா போய் விடும்?

அது கிடக்கட்டும். முதலில் மாறுதலில் வந்து கடந்த ஓரிரு மாதங்களுக்கும் மேலாய் அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் தன்னை அவள் அறிவாளா? தான்தான் அந்தப் பழைய நாராயணன் என்பதையாவது உணர்வாளா? ஒரு வேளை அப்போதும் நரைத்தலையன் நாராயணன் என்ற அடைமொழியோடு தன் பட்டப்பெயரைத் தானே வாய்விட்டுச் சொன்னால்தான் புரியுமோ? தானே தன்னைப் பற்றி அப்படிச் சொல்லிக் கொள்ள முடியுமா? பட்டப்பெயரை எப்படிப் பெருமையாய்ச் சொல்வது?அது தவிர்க்க முடியாமல் சொல்வதுதானே? பெருமை எங்கிருந்து வந்தது? அப்படிச் சொல்ல அவள் அன்பு கிட்டாமல் போனால்?, எடுத்த எடுப்பில், மனதில் அந்த வெறுப்பு மீண்டும் வந்து புகுந்து கொண்டால்? அதே விலகல் வந்து ஒட்டிக் கொண்டால்? ஏன் இப்பொழுதும் இப்படி விலகலாக உணர்கிறது மனம்? எங்கெங்கோ சிதறிக் கிடந்த மனம் அவளைக் கண்டதும் அந்தக் குவி மையத்தில் வந்து உட்கார்ந்து கொண்டதே…!

பார்த்தால் கல்யாணம் ஆனவள் போல்தான் தெரிகிறாள். இதையும் குறிப்பாய்த்தான் கவனிக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது

போல்தான் அதே சின்னஞ்சிறு பொட்டை வைத்திருக்கிறாள். திருமணம் ஆனதின் அடையாளமாய் சற்றுப் பெரிய பொட்டை அணிந்தால்தான் என்ன? ரொம்பவும் அகலமல்லாத, ரொம்பவும் குறுகலும் அல்லாத தன் நெற்றிக்கு இந்த அளவுக்கான பொட்டுதான் சரி என்ற அழகுணர்ச்சிதான் காரணமாக இருக்க முடியுமோ? இரு புருவங்களுக்கும் மேல் அல்லாமல், நடுவில் அமர்ந்திருக்கும் அந்தப் பொட்டு, சற்றே மேல் தூக்கியிருந்தால் இன்னும் அந்த முகம் பளிச்சிடும் என்று தனக்குத் தோன்றுவது அவளுக்கு ஏன் தோன்றவில்லை? என்று அவள் இதைச் சரி செய்வது? இதுநாள் வரை, இத்தனை வருடங்களாய் அவளுக்கு இந்த முக்கிய யோசனையை யாருமே சொல்லவில்லையா…!

இத்தனை ஆண்டுகளாய் அவள் தன்னோடு ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை என்ற நிலையில், நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொட்டைப்பற்றித் தான் நெருக்கமாய்ச் சிந்திப்பது கேவலமாய் இல்லை? அபத்தமில்லையா இது?

யாராவது அவளைப் பற்றிப் பேசுவார்கள் என்று பார்த்தால் ஒருத்தரும் இன்றுவரை வாய் திறக்கவில்லை. யாருடனும் அவளும் பேசி நின்று பார்க்கவில்லை. வேலை நிமித்தமே கூட அப்படி எதுவும் நிகழவில்லையே?

ஆனால் ஒன்று. அந்த அலுவலக ஆண் பணியாளர்கள், பெண் பணியாளர்கள்பற்றி எதுவும் கேலியாகவோ, கிண்டலாகவோ, விளையாட்டுக்கே கூடப் பேசி இன்றுவரை இவன் கேட்டதில்லைதான். முன்பு இருந்த வெளியூர் அலுலவலகத்தில் அப்படி இல்லை. அங்கு ஒரு பெண் கிளார்க்கை, தனக்குப் பேசி முடித்து விடலாமா என்பதுவரை போனார்கள் நண்பர்கள். அந்தப் பெண்ணும் எப்படியோ இந்தப் பேச்சை அறிந்து கொண்டு, தன்னிடம் சிரித்தும், வெட்கப்பட்டும் நெளிந்ததைப் பார்த்தான். அப்போது இவளுக்கு மட்டும் தன் நரைத்தலை பிடித்திருக்கிறதோ என்று தோன்றியது. ஒரு வேளை வரி வரியாய் ஓடும் அந்த வெள்ளை முடிகள் இவளைக் கவர்ந்து விட்டதோ என்று நினைத்தான். மாறுதல் வராமல் இருந்திருந்தால் மாட்டி வைத்திருப்பார்கள்தான். தப்பித்தோம், பிழைத்தோம் என்று வந்து சேர்ந்து விட்டான் உள்ளூருக்கு.

இங்கு வந்தால், இளம் பிராயத்தில் தன் மனத்தில் தோகை விரித்து ஆடிய அதே பொன் மயில்.இன்றும் தன் மேன்மை குன்றாமல்….இறைவன் ஆனாலும் ஓரவஞ்சனைக்காரன். ஒரே இடத்தில்கொண்டா இத்தனை அழகைக் குவித்து வைப்பது?

அந்த மேடம்….என்று ஒரு நாள் ஆவணப்பிரிவு நாகுவிடம் வாய் திறந்தபோது அவர் சொன்னார்.

அவுங்களா…யாரு..? சாந்தா மேடத்தைத்தானே சொல்றீங்க….அவுங்க ஆடிட் செக் ஷன் பார்க்குறாங்க……பெர்ஃபெக்ட் லேடி…..அவராகவே சொன்னார் இப்படி.

இவனுக்குப் புரியவில்லை. அதென்ன பெர்ஃபெக்ட்? எதுக்காக? எதில்? கேள்விகள் பிறந்தன.

அவுங்க வேலைல சொன்னேன்யா…. – சாதாரணமாய் உடைத்தார் புதிரை. அந்தக் கால இருவர் உள்ளம் திரைப்படத்தில் வரும் சாந்தா காரெக்டரை நினைவு வந்தது இவனுக்கு. அந்தக் கதாபாத்திரமும் ஏறக்குறைய அப்படித்தானே…? கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி அந்தப் பாத்திரத்தை எத்தனை அழகாய்ச் செய்திருப்பார்கள்? சரோஜாதேவி என்கிற உருவம் மனதில் நன்றாய்ப் பதிந்திருக்கும்போது, எப்படி இவர்களால் அந்தந்தக் கதாபாத்திரங்களாய் வெவ்வேறு வடிவில் வாழ முடிகிறது? ரசிகர்கள் மனதில் எப்படி அப்படியாய் நிலைக்க முடிகிறது? வியந்து வியந்து ரசித்திருக்கிறான் இவன்.

அவுங்களும், நானும் ஒரே ஊர்தான் என்று சொல்ல இவனுக்கு ஆசையாய் இருந்தது. அசட்டு ஆசை என்றும் தோன்றியது. இத்தனை அழகு பிம்பமாய் இருக்கும் அவளின் ஊர்க்காரன் நான், நாங்கள் ஒரே தெருதான்…என்று மனம் அடித்துக் கொண்டது. தினமும் பார்த்துப் பார்த்து ரசித்து ஏங்கியிருக்கிறேன் என்று யாரிடம் சொல்வது? மனதிற்குகந்த ஆப்த நண்பன் என்று யாருமில்லையே? இவர்களிடம் சொன்னால் சிரிப்பார்களே? லூசு போலிருக்கு என்று நினைத்து விட்டால்?

எதற்காக இப்படியெல்லாம் மரை கழன்றதுபோல் நினைத்துக் கொள்கிறோம்? அவள் யாரோ? நான் யாரோ? நான் உண்டு, என் வேலை உண்டு. அவளைப் பற்றியே ஏன் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? அவள் அப்படியா இருக்கிறாள்? குனிந்த தலை நிமிர்ந்திருக்கிறாளா என்றாவது? பேனாவும் கையுமாய் இருக்கும் அவள் இதுநாள் வரை ஒரு முறை கூட முகம் நிமிர்த்திப் பார்த்ததில்லையே? யாராவது அருகில் போய் அவள் நெற்றியை விரலால் நிமிர்த்தி, ம்…நல்லா பார்த்துக்குங்க….என்று சொன்னால்தான் ஆச்சு. அது நடக்குமா?

அன்றொரு நாள் ஏதோவோர் தேசத் தலைவரின் நினைவுநாளுக்கு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப் பணியாளர்கள் அனைவரும் வாயிலில் கூடிய போது நேர் எதிரே ஆண்கள் வரிசையில் இவன் நின்றான். தெரிந்தமாதிரி ஒரு புன்னகையை இவன் சிந்த, எந்த எதிர்வினையும் இல்லையே? உண்மையிலேயே அவள் தன்னைத் தெரிந்து கொள்ளவில்லையா? தெரிந்தும், தெரியாததுபோல் இருக்கிறாளா? அல்லது தெரிந்தும் பொருட்படுத்தாதவளாய் அலட்சியப்படுத்துகிறாளா? காலத்தால் ஒருத்தியிடம் மாறுபாடே தோன்றாதா? அனுபவங்கள் மெருகேற வைக்காதா? கேள்வியே சரியில்லை. தான் மாறியிருக்கிறோமா? அன்றுபோலவே இன்றும் ஏங்குகிறாயே அவளுக்காக…அது சரியா? அவள் திருமணம் ஆனவள்…அவளை நினைக்கிறாயே…தப்பல்லவா…?

ஒன்றிரண்டு குழந்தைகளுக்காவது தாயாகியிருப்பாளே…அழகு குன்றாமல் இருக்கிறாள். அது வேறு…என்றாலும் பழக்க வழக்கங்களில் நெகிழ்ச்சி என்று ஒன்றைத் துளியும் காணோமே? இந்த அலுவகத்தில் இருக்கும் பலரும் அம்மாவாகவும், அப்பாவாகவும்தானே இருக்கிறார்கள்? அவர்களில் ஒருவள்தானே இவளும்…இவளுக்கு மட்டும் என்ன வந்தது?

குழந்தையாவது குட்டியாவது…நீங்க வேறே…ஒங்களுக்கு விஷயமே ஒண்ணும் தெரியாது போலிருக்கு…இப்பதானே வந்திருக்கீங்க….அந்தம்மாவுக்குக் குழந்தையெல்லாம் இல்ல…..

மகேஷ்வரன் இப்படிச் சொன்ன அன்று சற்றே அதிர்ந்து போனான் இவன். தன் மனதில் ஓடும் எண்ணங்களை எப்படி அறிந்தார் இவர். என்னவொரு நடைமுறை அனுபவம்?

ஏங்க? ஏன் அப்படி? என்றான் பதறியவனாய்.

ஏன் அப்டீன்னா? யாருக்குத் தெரியும்…போய் வேணும்னாக் கேளுங்க…என்றார் சிரித்தவாறே.

சரி….அத விடுங்க…இப்ப அதுவா முக்கியம்….எனக்கு இந்த ரிப்போர்ட்டை டாலி பண்ணிக் கொடுங்க….ப்ராஃபிட் அன்ட் லாஸ்ல எங்கயோ உதைக்குது…நீட்டினார் ஒரு அட்டவணையை.

யாருக்கு ப்ராஃபிட்? யாருக்கு லாஸ்? இவன் மனம் கேள்வி கேட்டுக் கொண்டது.

எனக்கு லாஸ் என்று வைத்துக் கொண்டாலும், அவளுக்கு ப்ராஃபிட் இல்லை போலிருக்கிறதே…! கிறுக்குத்தனமான நினைப்புதான்….

அன்று அவளை அந்தக் கோயிலில் பார்த்தான். ஆடி வீதியில் வலம் வந்து கொண்டிருந்தாள். சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். ஓதுக்குப் புறமாய் நின்றுகொண்டு இசைத் தூண்களை ரசித்துக் கொண்டிருந்தான் இவன். அப்படி ஒன்றும் வித்தியாசமாய் அவை ஒலிப்பதாய்த் தோன்றவில்லை. அவரவர் மனநிலைக்கேற்ப அது தோன்றக் கூடுமோ என்றிருந்தது. திரும்பி நடக்க ஆரம்பித்தபோது, அவள் அந்த மண்டபத்தைக் கடந்து கொண்டிருந்தாள். தவறு, தவறு அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தாள். அப்படியானால் அத்தனை நேரம் அங்குதான் உட்கார்ந்திருந்தாளா?

அடடா…தெரியாமல் போயிற்றே? – இவன் கால்கள் சற்று வேகமெடுத்தன. அத்தனை நேரம் ஓய்வில் அமர்ந்திருந்த தெம்போ என்னவோ அவள் நடையில் வேகமிருந்தது. ஆனாலும் இந்த வேகத்தில் அவள் போக வேண்டாம்தான். யாரோ விரட்டுவதுபோல. சுற்றிலும் நடந்து செல்லும் பலருக்கும் நடுவே, தான் வழக்கத்திற்கு மாறான வேகத்தைக் காட்டுவது அத்தனை நல்லதல்ல என்று ஏனோ அந்த நிமிடத்தில் தோன்றியது.

ஆடி வீதியின் தெற்கு வாசல் பக்கம் திரும்பியிருந்தாள் அவள். இவன் ஆட்களை விலக்கிக் கொண்டு போய்விட முயல்கையில், வேக வேகமாய் தங்க ரதம் குறுக்கிட்டது. ஊர்வலம் நெருங்கி வர ஆரம்பித்திருந்தது. நாதஸ்வர மேளம் முழங்க கூட்டம் நெருங்க ஆரம்பித்திருந்த வேளையில் நிச்சயம் திருப்பத்தில் அவள் இதற்காக நிற்கக் கூடும் என்று தோன்றியது.

தனியாய்த்தான் இருக்கிறாள். இன்று எப்படியும் அவளிடம் பேசிவிட வேண்டும் என்று மனம் அவாவித்தது. குறைந்தபட்சம் ஒரு சுமுகமான அறிமுகத்தையாவது ஏற்படுத்திக் கொண்டாக வேண்டும். அதன் மூலம் அவள் பற்றியதான சிந்தனையின் அலைக்கழிப்பிலிருந்து, இன்றோடு விடுபட்டு விட வேண்டும். ஒரு மென்மையான உறவை, அல்லது நட்பை அவளிடம் ஏற்படுத்திக் கொண்டு விட வேண்டும்.

நினைத்தவாறே ரதம் தன்னைக் கடப்பதற்கு முன் கால்களை வீசிப் போட்டு முன்னேறினான். கூட்டம் இவனை விட வேகமாய்த் திரளோடு இடம் பெயர்ந்து கொண்டிருந்தது.

திருப்பத்தைக் கடந்து அந்த வாயிலின் படிகளின் மேல் ஏறி நின்று கொண்டு பார்த்தால் அவள் எங்கு நிற்கிறாள் என்பதைக் கண்டு பிடித்துவிட முடியும் என்று வரிசைக்காகக் கம்புகள் கட்டப்பட்டிருந்த ஆட்கள் இல்லாத ஓரப் பகுதியாய்த் தேர்ந்தெடுத்து விறு விறு வென்று முன்னேறினான். சிங்க முக சிற்பத்தினை ஒட்டிய படிகளில் மளிச் மளிச்சென்று ஏறித் திரும்பி நோக்கினான். கூட்டத்தின் அசைவுகளில் கண்கள் பயணித்தன. அதற்கு அவசியமில்லை என்பதுபோல் வெகு அருகிலேயே பக்கவாட்டின் கடைக்கோடியில் அவள் நின்று கொண்டிருப்பது ஒரு தற்செயலான திரும்பலில் கண்ணில்பட்டது. தீர்க்கமாய், அத்தனை அருகில் அவளின் இருப்பினை மனம் உணர்ந்தபோது, சந்தோஷப்பட்டது. அருகில் நின்று கொண்டிருந்த அந்த ஆண் மகனின் கை அவள் கைகளைக் கெட்டியாய்ப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. கூட்டத்தில் தவறி விடுவாளோ என்பதைப் போல. அவளை எங்கோ அழைத்துக் கொண்டு போகப் போகிறான்…சீக்கிரம் நெருங்கு என்றது மனம். உருண்டு வேகமாய் வந்து கொண்டிருக்கும் ரதத்தின் முன் பகுதி நோக்கி தரிசனத்திற்காக முன்னேறியது கூட்டம்.

ஒரு கணம் அது யார் என்று உன்னிப்பாகக் கவனிக்க முற்பட்டபோது,ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த பெரிய பெரிய மெர்க்குரி விளக்குகளின் தாங்க முடியாத பளீர் வெளிச்சத்தில் அந்த உருவம் ஒரு திடீர் அதிர்ச்சியை இவனுக்குள் ஏற்படுத்திப் பதற வைத்தது. கண்ணில் ஒளி சிதறப் பளிச்செனப் பட்டது அந்த முழுதும் நரைத்து வெளிறிப் போன, கலைந்து காற்றில் பறந்து திரிந்த அவனின் தலை முடி. ஆடி வீதியின் தெற்கு வெளியில் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த அந்தப் பலத்த காற்றில், இழுத்து வந்த தேரே ஒரு கணம் கோணலாய்த் திரும்பித் தள்ளாட, பரந்து அகன்ற அந்த வெற்றுடம்பில் போர்த்தியிருந்த ஜரிகைத் துண்டு பிய்த்துக் கொண்டு கழன்று உயரப் பறக்க. அவனின் பளீரென்ற தேகம் அவன் பார்வையில் பளிச்சிட்டது. புள்ளிப் புள்ளியாய் விட்ட இடம் போக மீதிப் பகுதி எங்கும் , வித்தியாசமின்றிப் பரவலாய் அடர்ந்து பரவிப் படர்ந்திருந்த அந்தப் பார்வைக்கு வித்தியாசமான வெள்ளைத் தோலின் மாறுபாடான நிறம் இவனை ஒரு கணம் நிலைகுலைய வைத்தது. யாரோ எடுத்து நீட்டிய பறந்த துண்டை மீண்டும் விரித்துப் போர்த்தி, சாந்தாவைத் தன்னோடு அணைத்து நெருக்கமாய் நிறுத்தியிருந்தான் இப்போது அவன்.

பார்வையைச் சிறிதும் அகற்ற முடியாமல், வைத்த கண் வாங்காமல், அதிர்ச்சியில் அப்படியே நிலை குத்தி, தவிர்க்க முடியாமல் பனித்த கண்ணீர்த் துளிகளோடு, உறைந்துபோய் நின்றிருந்தான் நரைத்தலையன் நாராயணன்.

அவன் அவளை அணைத்துப் பிடித்தவாறே நகர்ந்து கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *