மின் மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2013
பார்வையிட்டோர்: 9,912 
 

செல்லாள் பள்ளம் போன்ற இறக்கத்தில் பதனமாக நிதானமாக இறங்கினாள். ஆங்காங்கு குடித்து விட்டு வீசிய பாட்டில்கள் உடைந்து சில்லுகள் கிடக்கலாம். புதுப்பொண்டாட்டியான செல்லாள் மறுவீடு புதுவீடு என நான்கைந்து நாட்களுக்காக தொடர்ந்த அலைச்சலுக்குப்பிறகு ஓய்ந்திருக்கிறாள். தனக்கு ஓய்வு வேண்டும். தன்னால் உறவினர்களின் ஊர்களுக்கு வரமுடியாது என உறுதியாகச் சொல்லிவிட்டாள். அடிவயிற்றில் வலி. காலண்டரைப் பார்த்தாள். சரியாக ஒத்தப்படை நாட்கள். பொழுது வெயிலுமில்லாமல் மழையுமில்லாமல் ”உம்“மென்று புகைந்து கொண்டிருக்கிறது. குச்சு வீடுகளின் வாயிலில் தண்ணீர் காயவைக்கும் புகையும் எரிக்கும் பொருள்களின் வாசமும் நாசியை வதம் செய்கிறது. என்ன ஊர் இது. வீதியிது. எப்பொழுதும் ஏதாவது ஒரு நெருப்பு மூட்டி புகைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

பவுண்டரிக்கும் மில்லுக்கு பகல்பொழுது வேலைக்குப் போகிறவர்கள் வேகு வேகுவென கால்வீசி நடக்கிறார்கள். பாலம் வேலை நடக்கிறது. பேருந்தோ குதிரை வண்டியோ கூட வருவதில்லை. நடந்து ரயில்பாதையைக் கடந்து பள்ளியருகில் போனால் ஆட்டோக்கள் கிடைக்கும். அவள் வசிப்பது வீடு என பெயருக்குச் சொல்ல்லாம். ஒரு காலத்தில் இடிவிழுந்து பாறைகள் பெயர்ந்தும் பெருங்குழிகள் வாய்ந்தும் கிடந்த இடம். சில பள்ளங்களில் நீர் ஊற்றுப் பறித்து குழந்தைகள் விளையாடுவதும் துணிமணிகள் துவைப்பதற்கும் பயண்படுத்தப்படுகிறது. ஊர்வன உயரிகளின் இரவு சங்கீதம் தினமும் கேட்கிற பாக்கியம் பெற்றவர்கள் அந்த நெத்திக்குட்டைப் பகுதியில் வசிப்பவர்கள். பிரதான அரசியல்கட்சிகளின் வாங்கு வங்கி அந்தக்குட்டை. அதனால் அவர்களை அந்த இடத்தில் வாழ அனுமதித்து இருக்கிறார்கள். செல்லாள் தன் கணவனுடன் உடல் ஓய்ந்து களைத்தபோது இவற்றையெல்லாம் கேட்டு அறிந்திருக்கிறாள். கடைசியாக கேட்டாள்.

“அப்படின்னா நமக்குச் சொந்தமானது இல்லையா பொறம்போக்கா..குட்டையா இது“ என்றாள். அச்சத்துடன். அவனுக்குச் சுருக் கெனப்பட்டது. “யெய்..நாங்க நூறு வருசமா இருக்கம் உனக்கு மட்டும் என்ன பயம்..“ எனக் கடிந்தான். அவளுக்கு சொந்தமா வீடு வாசல் இருக்குது என தனது பெற்றோர்கள் ஆசைகாட்டிச் சொன்னதை நினைத்தாள். பத்திரங்களைப் பார்த்தா கல்யாணம் செய்யமுடியும். நம்பிக்கை தானே வாய் வார்த்தைதானே. அவளுக்குப் “ப்ச்ச்“ சென்றானது. மனசு பொசுக்கென அவிந்து கொண்டது போலானது. வெளெரென பஞ்சு சேகரித்துக் கொண்டிருந்த ஆகாயத்தைப் பார்த்தாள்.“அடி போடி போக்கத்தவளே..“ என அவள் ஏமாந்ததைக் கேலி செய்வது போலிருக்கிறது.

அவளைப் போலவே பெண்கள் தங்களின் குடங்களைத் தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் மேட்டுப்பகுதிகளில் விளையாட ஆரம்பித்த்து. நீர் கெட்டு வீச்சமடித்த பச்சைக்குளத்தின் நீருக்குக் காகங்களும் கொக்குகளும் வரத்துவங்கியது. தங்கள் கடப்பாரை, மட்டக்கோல், சங்கிலிக்குண்டு, கரண்டி, மண்வெட்டிகளை தங்கள் கோவில் போன்றிருந்த இடிந்து தரைமட்டமாகியிருந்த பகவதியம்மன் கோவில் சாளைகளிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த சிறிய நடைபாதையைத்தான் இவர்களும் மேற்குப் பகுதியில் வசிக்கிற ஊர்மக்கள் தங்கள் விரைவாக ரயில்பாதையை, பேருந்து சாலையை அடையப் பயண் படுத்துகிறார்கள். அவர்கள் கடந்துபோக ஏதுவாக வழிவிட வழிவிட தங்கள் குழந்தைகளைத் திரும்பவும் “யேய் தள்ளி நில்லு விலகி உட்காரு என மலம் கழிக்கும் சிறுவர்களை எச்சரிப்பதற்கு வயதானவர்கள் ஒரு சிலர் மேடையில் அமர்ந்து கொள்கிறார்கள். நெத்திக்குட்டையின் மூத்த பெண்கள் அந்த வழியைப் பயண்படுத்து பவர்களை சாடை மாடையாக “நாய்க மேயறதுக்கும் கழுதைக திரியறதுக்கும் வேற எடமில்லை. எத்தனைதான் சொன்னாலும் ரோசங்கெட்ட சென்மங்க.. இவளுகயெல்லாம் வெள்ளம் வந்து தூக்கிட்டுப்போனா ஆகாதா..” என நேரடியாகவே வைய ஆரம்பித்தாள். இரண்டு பேராக தூக்குப் போசியுடன் போகிறவள் பதிலுக்கு..“ஒண்டறதுக்கு ஊடு இல்லாம குட்டக்குள்ள வந்து உட்காந்துட்டு சாடை பேசறது பாரு அவ நம்மளத்தான் பேசறா..நாற முண்டை..”

“ஏன்டி..அப்பவே சொல்லிருக்கலாம்ல..அவள கிழிச்சிருப்பன்ல..“

“காலங்காத்தால வேலவெட்டிக்குப் போறப்ப அவகோட என்னடி தகராறு“

“இவளுகளுக்கு ஏதோ பட்டாப்போட்டுக் கொடுத்த மாதரி எல்ல பேசறாளுக..பொழுதோட வரபோது பேசட்டும் அவளுகள உண்டு இல்லன்னு பண்ணிடறேன்..“என்றாள் அப்பெண்..

செல்லாள் இந்த சண்டையையும் வாக்குவாதத்தையும் கவனித்தாள். பிறகு இவளைக்கவனித்த அந்தப் பெண் சிரித்தபடி அருகில் வந்து “நல்லாயிருக்கயா..ம்மிணி.. என்ன சொல்றான் எம்மருமவ.. அவளுகள சும்மா விடக்கூடாது. நாம அவங்க தடத்துல இப்படித்தான் போறமா..சும்மா உட்டுருவாங்களா..“

“ஏன் ஆத்தா வேற தடமில்லையா அவங்களுக்கு“

“இத ரோடு பாரு..எத்தாம்பெரிசு அதுல போகமாட்டாங்க இதா சுருக்கு வழி.. அதுக்குன்னா ஊடுகளுக்குள்ளாரயா நுழஞ்சி போறது.. அவிக ஊட்டுக்குள்ள போனா உடுவாங்களா..“

செல்லாளுக்கு கருக் கென்றது. இந்த லட்சணம் வேறயா அப்படின்னா தினமும் சண்டையும் கெட்ட வார்த்தைகளுமாகத்தான் கழியுமா.. காலைக்கடன் முடித்த குழந்தைகள் இவளின் புதுப் பெண் அலங்காரம் வளையல்கள் நகச்சாயம் கொலுசுகளின் சத்தம் கலைந்த கொத்து மல்லிகையின் பிரிந்த நூல் புரள்வதை வேடிக்கை பார்க்கிறது. கைகளில் விரல்களில் மருதாணியால் வரையப்பட்ட மலர்க் கோலங்களை தொட்டுப்பார்த்து ஆச்சர்யப்படுகிறார்கள். தாய்மார்கள் “ஏய் வாங்கடி இங்க..அவ கிட்ட என்ன பராக்கு..சூரப்புள்ளக சாமி..திடீர் தீடிர்னு வீட்டுக்குள்ளயே போயிரும்..”

“அக்கா வரங்க்கா..“ பறந்து ஓடியது. வாசலில் பன்றிக் குடும்பம் மொலுமொலுவென வந்து உப்புத்தண்ணீர் வாளியை சாண மலையை ஆட்டுப்பட்டிகளை முகர்ந்து விட்டு இடது புறமாக உள்ள குட்டையின் நீர்த் தேக்கத்திற்குப் பாய்ந்தது. .

நடைபாதைக்கு ஏதுவாக பாம்பு பல்லி பூராண் தொந்தரவுகளுக்கு என்று ஒரு டியுப்லைட் வீதி லைட் போடச்சொல்லி எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் பொதுவான மனுசனான ஊர்மணியம் பெரியசாமியிடம் முறையிடுவதற்கு மேட்டுவளவு சனம் அவர் சாளைக்கு வந்திருக்கிறது. திண்ணைத்தாவாவில் அவர் உட்கார்ந்திருக்க முடிவெட்டிக்கொண்டிருந்தான் சலையன். வானம் மேகமூட்டமாக உம்மென்று இருந்தது. தோப்பில் உதிர்ந்த மட்டைகள் களையப் படுகிறது. கிருதா முடிந்து எலுமிச்சம்பழம் நிற்குமளவு மீசை வைக்கப்பட்டு “போதும்றா உட்றா சும்மா நீவாத சோலி கெடக்குது.. இந்தா என்ன காலைல டொனேசனா..“

“இல்லைங்க சாமி..நம்ம நெத்திக்குட்டைக்கு டியுப்லைட் போடறதப்பத்திக் கேட்ருந்தம்ங்க.. நீங்க கரண்ட் ஆபிசுல பேசறம்ணு சொல்லிருந்தீங்க..“

“ஆம்மா. .வக்காலி எப்ப போனாலும் இப்பத்தி வா பொறகுக்கு வாங்கறான.. இவனுகள ஆபிசு கட்றதுக்கு எடம் குடுத்த்தே நானு.. நம்மள உட்காறக்கூட சொல்ல மாட்றானுகளே..சரி..இன்னக்கிப் போறண்ட்டா.. போடச் சொல்றன்போ..“

“அதுல ஒரு சின்ன சிக்கலும் இருக்குதுங்க..ஒருக்கா லைட்டு போட்ருக்காணுக..எவன்னு தெரியலைங்க ஒடச்சுட்டுருக்காணுக..சாமி” பேசும் போதே மக்களித்தான்.. அவர் காயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சட்டெனத்திரும்பினார். அவன் எச்சரிக்கையாக முன்னமே கத்தியை எடுத்துக் கொள்கிறான்

“என்னது லைட் போட்டு ஒடச்சிட்டாணுகளா..ஏனாம்மா..”

”…………..”

”ஏண்டா அவன் லைட் போட்டுக் கொடுக்கறது பெரிசு.. கவர்மெண்ட்ல காரியம் பண்றதே குதரக்கொம்பு அப்பறம்..ஒடச்சம்னா…என்றா நாயம்.. அப்பறம் எப்படறா. .சரி நானு பொழுதோட வந்து விசாரிக்கறன்.. ஒரு ஏழுமணிசுமாருக்கு உங்க கோயல் இருக்கல்ல பகவதியம்மன் கோயல்ல உங்காளுகள இருக்கச் சொல்றா. நாற்காலியிலிருந்து எழுந்து கொள்கிறார். டேய் எல்லாரும் கௌம்புங்க..தே..பையா நீமட்டுமிரு கொஞ்சம் வக்கப் போரடிக்கணும்..எல்லா ஆடுக புந்து சரிச்சிவிட்ருக்கு..“

“சாமி போட்டது போட்டபடி கெடக்குங்க.. ஊட்டுவரைக்கும் போயிட்டந் தருட்டுங்களா..“சொல்றதுதானாம் மனுசன் உடமாட்டார்.. வேலை குடுத்து நெளுவு எடுத்துவார்..“

“போறதுன்னா போடா.. ஆளா கிடக்காது யார்றா உன்னையத் தாங்கிட்டு இருப்பாங்க..“ கோபம் எகிறியது அவருக்கு. உட்கார்ந்திருந்த நாற்காலியை உதைக்க அது திருகிக் கொண்டு விழுந்தது. அவன் வேண்டாவெறுப்பாக தோப்பிற்குள் நுழைந்தான். நாம ஒரு சோலிக்கு வந்தாப் போதும்யா. சரியா வேலை வெச்சிருப்பானுகள.. வாய்க்குள் முனகினான்.

“யேய் சலையா ..நான் எதுக்கு இருன்னண்ணா..அதெப்பட்றா அவன் லைட் போட்டுக் கொடுத்துமு உடையுது அதென்ன கணக்கு“

“——“- அவன் தலையை தெற்கும் வடக்கும் பார்த்துக் கொண்டு மக்களித்தான். அதனயே கேட்கறீங்க..நம்மகிட்ட சொல்றதுக்கு கஷ்டமாருக்கு.“

“கஷ்டமா இருக்கு சரி சொல்லாத..கரண்டுகாரன் கேப்பானே என்ன சொல்றது அதுக்குத்தான் கேட்கறன் நீ நிசத்தைச் சொன்னினா நான் அதுக்குத்தகுந்த மாதிரி பொய்ய சொல்லி லைட்டப் போட வெக்கலாம்.”

“அது வந்துங்க..வள்ளு வளுசுக என்ன பண்ணிப் போடுதுங்கன்னா அவிங்க சமாச்சாரத்துக்கு இடஞ்சலா இருக்குதுன்னு உங்காளுகளுமு எங்காளுகளுமு சேர்ந்தே போடற டுப்லைட்டுகள அவங்க வெனயம் பண்றதுக்குக் ஒசரம் ஒடச்சுப் போடுதுங்க சாமி.. இதானுங்க உண்ம.. “- விசயத்தைக் கேள்விப்பட்டதுமே நடந்து கொண்டிருந்த மனுசன் பொழி இறக்கத்தில் தொபக்கென்று காலை வைத்துவிட்டார். கால் சேறானது. தாந்த சாதிப்பயல் முன்னால் கால் இடறிவிட்டோமே என அவமானமாகப் போய்விட்டது.

‘ இருந்தாலும் சரியான திமிருதாண்டா இந்தப்பசங்களுக்கு.. நானு நடையா நடந்து அவங்கிட்ட லைட்போடச் சொன்னா ஒடச்செறியிவீங்களா.. த..வர்றேன் பொழுதொடத்துக்கு.. உனக்கு இளிப்பா இருக்கா.. வேற காரணமிருக்கோணும்ல..என்னன்னு சொல்லித்தொலை இளிக்காத..கோவம் வந்துருமாமா..“

“அதுங்க நெறையக் குடும்பியிக இருக்காணுக.. சரியான ஊடுவாசல் இருக்காது..பொறவு ஊட்ல அப்பனாத்தா இருக்கு அதுக எங்கீங்க சாமி பொழங்கும்.. அதுதான் அவ்வடத்தள்ளயில இருக்கற பழைய கல்லுக்கோய மேடையிலதான்..“

“மேடையில பொழங்கறாங்களா..அதுக்கு என்னயப் போயி வௌக்கு வெக்கச்சொல்றியா..காலங்காலத்தால பேசற நாயம்..பாரு..“

“உங்க மேவறத்தாளுக அதாங்க உங்காளுக நடக்கறதடத்துக்கு வௌக்கு வேணும்ங்கறாங்க.. எங்காளுக பொழங்கறதுக்கு இடம் வேணும்கறாங்க.. நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியலை..ஆனா ஒண்ணுங்க சாமி நாங்க உங்கள நம்பிப் பொழக்க வந்தவணுக..உங்க தயாதிக தான் எடங்குடுத்தீங்க இல்லன்னு சொல்ல்லைங்க.. கைவிட்டாறீங்க..சொல்லிப்போட்டனுங்க..“

“என்றா கவுர்மெண்ட் ஆர்டர் போடறமாரி போட்ற.. சரி பொழுதோடத்திக்கி வாறம்போ. .எல்லாரையும் இருக்கச் சொல்றா..பொழங்கிட்டு இருக்கப் போறானுங்க..“ துண்டை தலைக்கு உருமால் மாதிரிகட்டிக் கொண்டு வரப்பில் இறங்க நினைத்தவர் மறுபடியும் சாளைக்குள் நுழைங்கிறார். காலங்காத்தால பஞ்சாயத்தப் பாரு..கைகால் முடியெல்லாம் சிலிர்த்தது. எத்தன பொழப்பு கெடக்கு மனசயே மாத்திட்டானே..தண்ணி காயவெக்க தீ போடச் சொன்னனே.. போட்டியா என்று பச்சை விறகை ஊதிக் கொண்டிருந்த உமையாளிடம் அமர்ந்தவரை அவள் விரட்டுவதற்கு புகையாத விறகை எடுத்து ஓடிருயா வெச்சு இழுத்துவன் என்கிறாள்..வெள்ளிக்கழம அமாவிசியுமு அதுவுமா எத்தன தரங் கோமணமு இளகறது உனக்கு ..சாலாக்கப் பாரு..“

மின்வாரியத்தின் லாரி வந்து நிற்கிறது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் வாயில் ஈ நுழைபவது தெரியாமல் மிரட்சியுடன் நோக்கினார்கள். எச்சில் கொப்பளிக்கிறார்கள். வயதானவர்கள் புகைத்துக்கொண்டு இறுமினார்கள். குழந்தைகள் வரிசையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. உடைந்த மின்விளக்கின் சிதிலங்கள் சரிசெய்யப்பட்டு புதிய டியுப் லைட் பொருத்தப்படுகிறது. உடைத்து விடாத வண்ணம். அதற்குக் கம்பிகளானால வலையொன்று பொருத்தும் போது நெத்திக்குட்டை மக்கள் வெகுஞ்சினத்துடன் நோக்கினார்கள். விளக்கை எரியவிட அது மாலை வெளிச்சத்தில் அழகான ஒரு வெண்கோடாக எரிந்தது.

செல்லாளின் கணவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை அவள் எரிச்சலுடன் அழைக்கிறாள். இன்றிரவும் இதே இடத்தில்தான் நாம் உறங்கப் போகிறோமா என சாடையாக் கேட்க அவனோ ஆம் எனத் தலையை அசைக்கிறான். சமையல் பாத்திரம் கழுவுதல் துணிமணிகள் பாத்திரங்கள் பீரோ ஒரு சிறு பிளாஸ்டிக் கயிறு கட்டில் எல்லாமே அந்த அறையில்தான். அவள் நம்பி வந்தது உண்மயாகவே ஏமாந்தது போலிருக்கிறது. அறையா அது கோணிச்சாக்குகளின் கூடாரமாக இருக்கிறது. என்ன்னென்னவெல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்கள். வீடு வாசல் இருக்கிறது. ஆடு மாடு கோழி ஏன் கிணறு கூட இருக்கிறது என்றார்கள். வந்து பார்த்தால் நெத்திக்குட்டைக்கே அது கிடையாது. வரட்டும். எங்க அப்பனாத்தா. சொந்தமெல்லாம் நாக்கப் புடுங்கிக்கொள்வது மாதிரி கேட்கத்தான் போகிறேன். நானும் ஏமாந்து விட்டேன். அவனைப் பார்த்த மயக்கத்தில். அப்படித்தான் இருந்தான் அவனும். அம்மாளுக்கு எங்க போச்சு புத்தி. விசாரிக்க வேண்டாமா.

“என்ன செல்லா விளக்கு வெக்கற நேரத்துல ஒரே யோசன..மூஞ்ச பொக்குனு வெச்சிருக்கற..ஊர் ஞாபகம் வந்திருச்சா..அப்படித்தான் இருக்கும். என்னடி பண்ண..நானெல்லாம் அவிக அப்பங்கூட வந்தபோது தோப்புக் கொட்டாயிலதா இருந்தம். ஏதொ இந்த தெர்தல் ஒட்டுன்னு வந்தமிட்டி இப்படியாச்சும் குட்டை சுடுகாடு ரயிலோரம்னு புறம்போக்குகள்ல கட்சிக்காரங்க இருக்க உட்ருக்காணுக..மாமியாகாரி சமாதானம்

“——-“

“ஏனாத்தா ஒண்ணும் பேசமாட்டன்ஙகற..சங்கடப்பாடத ராத்திரிக்கே அக்கட்டள்ல போயிறம். பாரு லைட் போட்டுட்டாணுக… மேடைக்குப் போயறம் நானும் அவிக அப்பனும். நீங்க சந்தோசமா இருங்க..“

“எத்தன பொய் சொல்லீருக்கீங்க.. ஏமாத்திட்டீங்களே…“ என அழ ஆரம்பித்தாள்

“அழுகாத கண்ணு.. நம்ம இனவிருத்திக்கு நாம பெத்துப் போடவேண்டியது நம்ம கடமைதாயி..பொம்பளசென்ம மாப்பொறந்திட்டமே.. நீயாவது பரவாயில்ல..என்னய எத்தனை கிழவிங்க தண்ணி வண்ணி பண்ணயத்த வேலைன்னு வாங்கிருக்காங்க தெரியுமா..பிருசங்கோட சேர்றதே அரிசு.. நானு அப்படியில்ல தாயி.. ரவையானா அவன வெளியில உடாத.. நம்ம உசிருக்கு இது ஒன்னு தாண்டி நிம்மதி.. போ தாயி முகங்கழுவிக்கோ.. உனக்கென்ன கொறச்சல். .பொழுதானா நாங்க கோயல் மேடைக்குப் போயர்றம்..இருந்திக்க..“

“என்னாத்தா சத்தம்..“ கணவன் வந்தவனைப் பிலுபிலு வெனப் பிடித்தாள். அவன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு.. “செல்லா..நீ கொடுத்து வெச்சவ கொஞ்ச நேரத்தில இருட்டுழுகும் பாரு. பக்கத்துல மேட்டுல. பாறைல அள்ளைலயெல்லாம் நான் காட்டுறன். அங்க எத்தன குடும்பம் இருக்குணு.. சரிசரி வீட்டெல்லாம் சுத்தம் பண்ணுங்க பெரிவரு வர்றாரு பஞ்சாயத்துக்கு..“ அம்மாள் குளாப் எடுத்து கண்ணாடி சுத்தம் செய்து திரியைப் பொருத்தினாள். அப்பன் காய்கறி அரிசி வாங்கிக் கொண்டு வர செல்லாள் அதை வெடுக்கென புடுங்கிக் கொண்டு உள்ளே போனாள்.

அம்மாள் சாடையாக அவளுக்கு நாம் பொய் சொல்லி ஏமாற்றிய விசயம் தெரிந்து விட்டது. நீ எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டிரு என்றாள். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சிறுமிகள் இரண்டு நாள் பழக்கத்தில் செல்லாள் அணுசரணையைக் கண்ட பிரியத்தில் உள்ளே வர முயற்சிக்கிறது. அம்மாள் யேய் போங்கடி.சூரப்புள்ளகளா. .நாளைக்கு வாங்க.. விரட்ட முனைய அவள் அக்குழந்தைகளை உள்ளே அழைத்துக் கொண்டு போய் தனக்குக் கொடுத்து விட்ட பனியாரக்குடத்திலிருந்து பலகாரங்களை எடுத்துத் தர குழந்தைகளின் கண்களில் புதிய வெளிச்சமும் சந்தோசமும் தெரிகிறது. அம்மாள் “ஏய் செல்லா இப்படிக்குடுத்து பழக்கி வெச்சன்னா வம்பாயிரும் போகாதுக அப்பறம் உனக்குத்தான் கஷ்டம்“ என்றாள்.

ஊர்மணிய பெரியவர் கோயல் திண்ணையில் அமர்ந்த போது நெத்திக்குட்டைக் காரர்கள் எழுந்து நின்று கொண்டனர். அவர் அதிசயத்தார். “இத்தன குடும்பம் இருக்குதா இங்க நானென்னமோ ஏதோ பத்துக் குடும்பம்னு நெனைச்சனே.. ஒருத்தன சரி இருந்துட்டுபோகட்டும்ணு விட்டம்..நீங்க ஆளாளுக்கு அவனவன் சொந்தக்காரனக் கொண்டு வந்து கொண்டு வந்து நிறச்சுப் போட்டிங்க….சரி ஏதொ ரகள ரச்சப் பண்ணாம ஊரோ ஒத்துப் போயி இருந்தாச் சரி..த..என்னனு வெடுக்குனு சொன்னா..முடிச்சிட்டுப் போயறலாம்..“

“ஏங்க நீங்க நம்மாளுங்கறத மறந்தாறதீங்க..ஆயிரந்தான் இருந்தாலும் அவனுக பொழைக்க வந்தவனுக..நாம போக வறதுக்கு ஊர்சுத்த முடியாது இந்த வழிதா குறுக்கு வழி. ராத்திரிக்கு நைட்டு பகல்னு வேலை வெட்டிக்குப் போயிட்டு வர்ற தடத்துல இவுங்க புள்ளக பேண்டு வெச்சிடுதுக. பாம்பு பல்லி புராண் ஊருது. இதுக்கு நாம வீதி லைட் போட்டு வெச்சா இவனுக அன்னக்கு ராத்திரிக்கே ஒடச்சிடறாணுக.. பாருங்க இன்னக்கி லைட் போட்டிருக்குது ராத்திரியே ஒடச்சிருவாணுக.. இவனுக கிட்ட உத்தரவாதம் வாங்குங்க.“. முதல்லயே பொடிவைத்தான் அவரின் உறவு இளந்தாரி..

“ சாமி நாங்க ஒடக்கறதில்லங்க…உங்க பசங்கதான் எங்க புள்ளங்களப் பார்க்கறதுக்குமு எங்க பொம்பளங்களப் பார்க்க வர்றதுக்குமு இந்த லைட்டு தொந்தரவா இருக்குதுன்னு ஒடக்கிறாங்க.. அத மொதல்ல தெரிஞ்சிக்கங்க.. சும்மா நாயம் பேசிட்டு…ஒவ்வொரு விசயத்தயும் எடுத்தா ஊர் நாறிடும்“

“எந்த நாயத்துக்குக் கூப்பிட்டிங்க என்றா பேசறீங்க.. அது மனுசம்புத்திடா அதவிடுங்க ஆகற சோலிக்கு வழியப் பாரு. பாத்தியாய்யா அவனுக்கு திமிரு..ஆமா உங்க புள்ளக..பொம்பளக பெரிய ரதிமணிக…எங்காளுக..தரிசனம் பண்ண வர்றாங்க..டேய் சும்மாள தாளிக்கதா..“

பெரியவர் தலையில் கைவைத்து தலைகவிழ்ந்து கொண்டார். தன்னை அழைக்க வந்தவனைத் தேடினார். அவன் அங்குமிங்கும் கூட்டத்தில் ஒளிய அவர் “அந்த நாய முன்னால தள்ளு.. யெய் வாடா இங்க..என்றா இது..“

“அவங்கிட்ட என்ன பேச்சு.. அந்த லைட்டுக்கு எதாவது ஆச்சுன்னா பிரச்சனையாயிரும்..“என்றார்கள் பெரியவரின் உறவு இளந்தாரிகள். துள்ளிக் கொண்டிருந்தவனை அவர் தனியா அழைத்துப் போய் “டேய் பார்த்தியா இரநூறு ஓட்டு இருக்கும் போலிருக்குது. நம்மாளுக எவண்டா சொன்னமாதிரி ஓட்டுப்போடறீங்க..வெடிய வெடிய என்ற சோத்தயுமு தண்ணியுங்குடுச்சிட்டு காலைல கொண்டு போய் எதிராளிக்கு ஓட்டுப்போடறீங்க.. அவனுக அப்டியில்ல கரக்டா நடந்துக்குவானுக.. உனக்குத்தடந்தான வேணும் நானு ஏற்பாடு பண்றன்..அதுமட்டுமில்லாம நம்மாளுக யாரு வெளிவேலைக்கு வர்றீங்க.. அவனுகளத்தான நம்பியிருக்க வேண்டியதிருக்கு பைத்தியகாரணாட்டப் பேசற..“

“இதப் பாருங்க நடக்கற தடம் இடம் நம்ம பெரிய சின்னப்பனுகளுது. நம்மளது. உடச்சொல்லுங்க.. லைட் எரியணும்.. அதுக்கு ஒரு வழியப் பாருங்க. நாமென்ன அவனுக ஊட்டுக்கு சோத்துக்கா போறம்.. உங்களயெல்லாம் யாரு இங்க வரச்சொன்னது.. ஓட்டுன்னு பார்த்தா மானம்மரியாத போயிரும்யா “

“அடப்பொழயத்தவன..நொம்ப வருசங்கழிச்சு பஞ்சாயத்துத் தேர்தல் வருதுல்ல..நாந்தான கவுன்சிலருக்கு நிக்கன்.சொல்ல வேண்டாம்னு பார்த்தா பேசவெக்கிறயே..“

“நம்மாளுகளும் சுயநலவாதிக ஆயிட்டிங்கய்யா..“

“என்றா பெரிய சுயநலவாதி..காடு கறை தோட்டம் தொறவு மாடு கண்ணு அடியாள் பெத்து பொறப்பு உறவு..ஊருன்னு அலையவறனுக்குத்தாண்டா தெரியும் அரசியலோட அரும உனக்கென்ன உங்கப்பன் சொத்த்த்தின்னு அழிக்கறவன்தான..நீ முடிட்டு பொத்திட்டு நில்லு அள்ளல..“என்றார் கோவமாக..

“யேய் சொல்றா.. நீங்க இங்க இருந்துட்டுப் போங்கண்ணு சொன்னது எங்க அப்பனும் பெரியப்பணும் தான்.. அவிங்க சொல்லிப்போட்டதுனால நானும் விட்டுட்டம்.. ஆனா இந்த தடத்த மறிக்கறது.. லைட்ட ஒடக்கறது. வெச்சிக்காதீங்க..“ அவர் சொன்னதும் அமைதி நிலவியது. பிறகு அவர்களுக்குள்ளாக சலசலவென பேச்சுச் சத்தம். அவர் எழுந்து கொண்டார். அவர்களை என்னய்யா சொல்கிறிர்கள் என்பதான கேள்விப்பார்வை அது.

“அய்யா.. இனிமேல் எங்கனால பிரச்சனை வராதுங்க சாமி..நீங்க மகராசரா நடந்துக்கங்க.. போயிக்கங்க.. ஆனா உங்காளுக ஒடச்சிப் போட்டு எங்களக்குத்தம் சொல்லாதிங்கன்னுதான் எங்காளுக கேட்கறது..“

“இங்க எல்லாருந்தான இருக்கீங்க எல்லாருக்கும் சொல்லிக்கறனப்பா.. நேந்து கலந்து போய்க்கங்க.. கவர்மெண்ட்ல ஒரு காரியமாகறது எத்தன கஷ்டம் அவ்வளவு கஷ்டப்பட்டு லைட் போடறம் நீங்க ஒடக்காதீங்க.“ எனப் பேசியபடியே மேடேறி நடந்து போய் தனது புல்லட்டில் ஏறிப்பறந்தார்.

செல்லாளுக்கு மறுபடியும் அடிவயிறு வலிப்பது போலிருந்தது. இரவின் நிழல் சாளைகளின் மேல் படிந்து கொண்டிருந்தது. பாசிபடிந்த நிரிலிருந்த தவளைகளின் சத்தமும் ராக்கொழிகளின் சத்தமும் இடைவிடாமல் ஒலிக்க அதைவிடவும் குறட்டை சத்தமும் ஊஊம் என்று அனத்தும் புறாக்களின் சத்தமும் அவளுக்கு இந்த நான்காவது நாளும் உறக்கமில்லை. பகலிலும் உறக்கம் இல்லை. எங்கு நின்றாலும் உட்கார்ந்தாலும் தூங்கி வழிந்தாள். அவர்களின் உறுதிப்படியாக அந்த நடைபாதைத்தடம் குழந்தைகள் அசிங்கம் செய்யாமல் பார்த்துக் கொண்டதில் சுத்தமாக இருந்தது. நடந்தாள். பாம்பு போல் நெளிந்து வளைந்து போகிறது. இடையிடையே வீடுகளே கோழிக்கூடைகள் போலேதான் இருந்தது. அவளுக்குத் தான ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதில் இருந்த கோபம் இப்பொது தூங்க முடியவில்லை என்பதில் அதிகமானது. அவர்கள் சொல்லும் அந்த சிதிலமான கற்கோயில் மேடைக்கு வந்தாள். அவ்விடம் பத்திருபது பெண்கள் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த டியுப்லைட் வெளிச்சம் மிகச்சரியாக அவர்கள் மீது வெளிச்சத்தைப் பொழிந்து கொண்டிருக்கிறது. பிச்சைக்கார்ர்கள் உறங்குவது மாதிரியிருக்கிறது. இவளைப்பார்த்ததும் தூக்கம் வராமல் புரண்டவர்கள் எழுந்து..வா தாயி..வா.. என்றார்கள் சில பெண்கள். அந்த மேடை ஒரு காலத்தில் புராதனக் கோயிலாக இருந்திருக்க வேண்டும். மேடையின் நான்கு புறங்களிலும் கற்சிலைகளின் சிதறல்கள்..பிறகு கொஞசம் கொஞ்சமாக அது தரையாக ஆக்கப்பட்டு வயதான பெண்கள் ஆண்கள் ஓய்வெடுக்க உறங்க என்பதாகப் பயண்படுத்துகிறார்கள் போலிருக்கிறது. கற்சிதிலங்களைக்களைக் கையிலெடுத்துப் பார்த்தாள். அச்சிலையின் பெண்முகமும் அதன் உடல்பாகங்களும் வேறுவேறாக கையில் அகப்பட்டது. செல்லாளுக்கு கொஞ்சம் துணி தேவைப்பட்டது. அவள் உட்கார்ந்திருந்த்தைப் பார்த்தவர்கள் தங்களின் தலைமாட்டிலிருந்த பழைய துணிகளைத் தருகிறார்கள். அவள் வெளிச்சமற்ற பகுதியைத்தேடினாள். அந்தப் பெண்கள் சூழ்ந்து கொள்ள அவள் பாதுகாக்கிறாள். அந்தப் பெண் “நீ கொஞ்சம் வசதியா இருந்து பழகியிருப்ப..சொன்னாங்க தாயி.. பத்தாவது படிப்பு கூட படிச்சிருக்கன்னு..எங்களுக்கு ஓண்ணுந் தெரியாது தாயி.. நல்லது கெட்டது சொல்லிக்குடும்மா.. இல்லியா..ராத்திரிக்கு இங்க வந்திரு கண்ணு.. பயப்படவேண்டியதில்ல.. நானும் இன்னக்கிதான் உட்கார்ந்தன்.. வெடுக்குனு வந்து படுத்துக்கலாம்..“ அவள் சுற்றுப்புற இறக்கத்தின் மேடைகளில் உறங்கும் வயதான ஆண்களைப் பார்க்கிறார்கள்.. பயப்படாத கண்ணு.. அந்தப் பெரிசுகதான் நம்மளுக்கு பாதுகாப்பு..என்ன சாமி பண்றது நம்ம வங்கிட்டுவந்த வரம் அப்படியாச்சு.. ஒத்தக்குடிசக்குள்ள இப்படியிருந்துட்டு தண்ணி வண்ணி பொழங்கறது..அங்கயே சாமி கும்பிட்டுக்கறம்..சோத்த ஆக்கிக்கிறம்..திங்கவும் செய்யறம்.. இத இப்படி வந்திட்டா..நாமளும் வெடுக்குனு முணுநா படுத்துக்காம்பாரு.. ஒருவர் பேச மற்ற பெண்கள் வயித்த மடக்கி வெட்கத்துடன் கேட்டுக்கொண்டு சாய்ந்து படுத்த்து..ஒரு பெரிசு “மணி எத்தனையிருக்கும் என்றது..“அதற்கு பதினொரு மணி இருக்கும்ப்பா. பாரு…“

செல்லாளுக்கு தூக்கம் வரவில்லை. தன் அம்மாள் ஞாபகம் வந்தது. தான் உட்காரும்போதெல்லாம் அம்மாவின் நினைப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. தனக்குக் கீழெ இருக்கும் இரண்டு சகோதரிகளுக்காகவே தான் முன் சென்றால் தானே அவர்களுக்கு ஒரு வழி பிறக்கும் என்று வந்து விட்டாள். இந்தப் பெண்களைப்பார்த்ததும் தனக்குத்தான் எத்தனை தாய்.. அம்மாள் கடைசியாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. முன்னபின்ன இருந்தாலும் அனுசரிச்சுப்போய்க்க சாமி..நம்ம ஊட்ட சுத்தமா மறந்திறணும் என்றாள். அவள்சொன்னது திரும்பி எந்தக்காரணத்தைக் கொண்டும் வந்துவிடாதே என்பதுதான் எனப்புரிந்து கொண்டாள். அம்மா ஏன் சொன்னாள் என்பதும் புரிய ஆரம்பித்த்து. சில நேரங்களில் தன்னுடன் பேச்சுத்துணை கொண்ட பெண்கள் உறங்கிப்போனார்கள். அவள் அந்தச் சிலையின் கற்சிதிலங்களைப் பொறுக்கிக் கொண்டாள். உடலின் பாகங்களாக உள்ளங்கையளவு இருந்தது. அது போலவே தங்களின் வாழ்வும் மாறிப்போயிருக்கிறது. மேடையை விட்டு நடந்து வந்தாள். ஆழந்த உறக்கத்தின் நடுவே உறங்கும் தாயிடமிருந்து பாலருந்தும் சத்தம் கேட்கிறது சில குடிசைகளிலிருந்து.. அந்த மின்மரத்தின் முன்பு நின்றாள். அந்தக் குழல் விளக்கு தன் கடமையை பொம்பளைத்தனத்துடன் செய்து கொண்டிருப்பதாய் நினைத்தாள். பாவமாக இருந்தது.

வெளிச்சமே உன்னை வணங்குகிறேன். காலங்காலமாக எங்களை வன்மத்துடன் தீண்டி விட்டு பொறுப்பைத் தந்து முடக்கிவைத்துவிடுகிறாய். இப்பொழுது நீ போய்விடு. ஒவ்வொரு கல்லாக எறிய ஆரம்பித்தாள். ஒவ்வொரு கல்லும் சரியாக விழுந்தது. கம்பிவலையின் மீது ணங்க் ணங்க் என விழுந்த சத்ததில் சில்லு சில்லாக உடைய அது மீண்டும் கண்ணாடி இல்லாமலே எறிய ஆரம்பிக்க அவளுக்குக் கோபம் கொப்பளித்தது. சற்றுப்பெரிய அளவிலான கல்லை விட்டெறிய பொட்டென்று போனது வெளிச்சம்.. அங்கிருந்து மேடையின் தரையில் பெண்களின் உறக்கத்தைப் பார்க்க அவர்களின் இருப்பு எதுவும் தெரியவில்லை. கீழிறங்கினாள். நடந்துபோகும் போது பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண் அவளைப் பார்த்து சிரித்தாள். புள்ளையா பையனா என்றாள் செல்லாள் அவள் “பொண்ணு“ என்றாள்.. தலையைக் கோதிவிட்டவள். பிஞ்சு விரல்களை நீவும் போது கண்டாள் பிஞ்சுக் கைகளைக் கண்டாள். சிறுசிறு கற்கள்.. அவளின் கைகளிலும் கற்கள்.. அவள் அழுதாள். அழத்தொடங்கியவளைத் தேற்றிவிட்டு அந்த இருளில் இறங்கிக் கரைந்துபோனாள் செல்லாள்..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *