ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 24, 2022
பார்வையிட்டோர்: 3,113 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப்போவது தோப்பில் முஹம்மது மீரான் எழுத்தின் சிறப்பு.தோப்பில் முஹம்மது மீரான் கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் மனோபாவங்களை , பச்சையிலை வாசம் கமழும் கிராமச் சூழலில் நகரநாகரீகம் புகுந்து முகங்களில் சாயம் பூசி விடப்பட்ட மனிதமனங்களின் ஆழங்களை எல்லாம் மிகத் துல்லியமாகத் துழாவி எழுத்தால் உருமாற்றிக் காட்டுகின்றன தோப்பில் முஹம்மது மீரான் எழுத்துக்கள்……தோப்பில் முஹம்மது மீரான்

***

தெருவின் மத்தியில் என்னுடைய 20ஆம் நம்பர் வீடு. கீழ்ப்பக்கம் 19ஆம் நம்பர் வீடு, உலகநாதன் செட்டியாருடையது. மேல்பக்கம் 21ஆம் நம்பர் வீடு சங்கர நயினார் முதலியாருடையது (இவர் தாலுகா ஆபீசில் ஹெட்கிளார்க். ஓய்வுபெற ஒன்றிரண்டு மாதங்களே உள்ளன). பின் பக்கத்து வீடு சிவசுப்ரமணியன் ஆசாரியுடையது. எதிர் வரிசையில் என் வீட்டுக்கு நேராக யிருக்கும் மாடிவீடு வெங்கட்ராமன் பண்ணையா (ரெட்டியார்) ருடையது. கார்பரேசன் குழாயின் வாய் சில நேரம் வறண்டு விட்டால் குடிப்பதற்கு ஒரு குடம் தண்ணீர் தந்து உதவுவது எதிர்வீட்டு மாமி. பண்ணையாருடைய மனைவி. விளக்கேற்றின பிறகு அறுத்த கைக்கு உப்பு வைக்காத தெரு ஜன்மங்கள். எதுவும் தந்தால் சீதேவி வீட்டைவிட்டு வெளியேறி விடுமாம்.

வயோதிகர்கள் அதிகம் குடிவாழும் காலனி மக்கள், தங்கள் வீடுகளில் மரம், செடிகள் வளர்வதை விரும்பமாட்டார்கள். இலைதொழியுமென்று. காற்றில் சாஞ்சாடி நின்றிருந்த மரங்களை யெல்லாம் வெட்டி வெட்டயாக்கினார்கள். செடி கொடிகளை யெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு, புற்பூண்டுகள் முளைக்கா மலிருக்க வீட்டைச் சுற்றி சிமெண்ட் போட்டு, தரையில் தண்ணீர் பாய்ச்சிச் சூட்டைத் தணித்தனர். 19ஆம் நம்பர் உலகநாதன் செட்டியார் காம்பவுண்டுக்குள் எங்கிருந்தாவது ஓர் இலை பறந்துவந்து விழுந்தால் உடன் அதை எடுத்துத் தெருவில் வீசிவிட்டு கண்டமேனிக்குக் காற்றுக்கு ஏச்சு விடுவார். அவருடைய வீடும் முற்றமும் பளிச்சென்றிருக்கும். உச்சி வெயில் சிமெண்ட் முற்றத்தில் எரியும்.

என் அண்டைவாசிகளுக்கு, என் வீட்டின் பின்வளாகத்தில் நின்றுகொண்டிருக்கும் மாமரம் மிகப்பெரும் தொல்லையாகவே இருந்துகொண்டிருக்கிறது. வெளிநாட்டுப் பறவைகள் மாமரத்தில் கூடுகட்டிய பிறகுதான் இது தெரிய வந்தது. பின் வளாகத்தில் சூரிய ஒளியை நுழையவிடாமல் மாமரம் தடையாக நிற்கின்றது. அதன் குளிர் நிழலில் உட்கார்ந்துதான் கத்திரி வெயிலில் மூச்சாறுவது. மாமரத்தின் கீழ் கட்டிய திண்டில்தான் துணி துவைப்பது. சோப்புத் தண்ணீரும் குளிக்கும் தண்ணீரும் மாமரத்திற்கு ஓடிச் செல்ல ஓவுசால் தோண்டிவிட்டிருந்தேன்.

வீட்டைச் சுற்றி நாலு மூடு தென்னம் மரங்கள் நிற்பதால் விறகுப் பஞ்சமில்லை . கறையான் அரித்துக் கிடக்கும் விறகைப் பார்க்கும்போது வயிறு எரியும். சிறு வயதில் கிராமத்தில் என் சொந்தபந்தங்கள் ஒரு துண்டுச் சுள்ளிக்காக ஆலாப் பறப்பதைப் பார்த்த நினைவு வரும்போது கியாஸ் அடுப்பில் சோற்றுக்கு உலைபோடும் மனைவியை ஏசிக் கொட்டி மா மூட்டில் ஒரு சூட்டு அடுப்பு வாங்கி வச்சு விறகு எரிச்சு சோற்றை வேகவைக்கச் சொன்னேன். அவளுக்கு என் மீதான கடுப்புக்கு இதுவும் ஒரு காரணம்.

நான் ஊரில் இல்லாதபோது சோற்றுப் பானை கியாஸ் அடுப்பிலும், ஊரிலிருக்கும்போது சோற்றுப் பானை சூட்டு அடுப்பிலும். மாமரம் நிழல் தருவதால்தானே சூட்டு அடுப்பு. அவளுடைய கோபம் மரத்தின் மீது திரும்பியது. சில நேரம் நானே அடுப்புப் பற்றவைத்து மாமரத்தடிக்குளிர்ச்சியில் உட்கார்ந்து தீ நீக்கி விடுவதுண்டு. அது ஒரு தனிச் சுகம். கையில் புத்தகமோ, வார இதழோ இருக்கும்.

புகை முட்டி மூச்சுத் திணறாது; உடம்பு வியர்க்காது; மேக்கன் காற்று வந்துகொண்டேயிருக்கும். இதெல்லாம் சொல்வது ஆசாமிக்குப் பிடிக்காது.

உஷ்ண காலங்களில் கை உள்ள நாற்காலி எடுத்துப் போட்டு மாமரத்தடியில் உட்கார்ந்து எழுதும்போது அலுப்பே இருக்காது. மரத்தடி நிசப்தத்தில் பலப்பல நினைவுகளின் சுருள்கள் விரியும். இதுபோன்ற ஒரு மாமர நிழலில் உட்கார்ந்தபடியே வைக்கம் முகம்மது பஷீர் எழுதுவாரென்று சொல்வார்கள், மாலையானால் மாமரத்தடியில் கொசுத் தொல்லை அதிகம். வீட்டின் முன்பக்கம் நிற்கும் பாதாம் மரத்தில் அணில் தொல்லை. வானத்தைத் தொட்டு நிற்கும் மரத்திலிருந்து பாதம் காயைக் கறம்பிக் கொய்து போடுவது, வந்து விழுவது என் தலையில். கடி எறும்புத் தொல்லை வேறு. பெரிய அளவில் கொசுத் தொந்தரவு இல்லா விட்டாலும் கொழுஞ்சியான் மலை திசையிலிருந்து வீசி அடிக்கும் காற்றில் மிதக்கும் சுகம்.

செழித்தோங்கி வளர்ந்து நிற்கும் மாமரத்தைப் பார்த்துக் கேட்பார்கள். இது என்ன சாதியென்று. அதன் சாதி என்ன வென்று தெரிந்துகொள்ளவில்லை. நான் நட்டதல்லவே, கொத்துக் கொத்தாகப் பூப் பூக்கும். மாங்காய் இறுங்குபோல் காய்த்துத் தொங்கும். பளு தாங்க முடியாமல் கொப்புகள் மொட்டை மாடியில் அய்யடாவென்று குப்புறக் கிடக்கும்.

குலை குலையாய்த் தொங்கிக்கொண்டிருந்த மாங்காயைப் பறித்து பச்சை திங்க மகன் மரத்தில் ஏறினான். அவன் பின்னால் அவனுடைய கூட்டாளி ஒருவனும். இரு நோஞ்சாங்களையும் தாங்க முடியாமல் கொப்பு ஒடிந்து இருவரும் விழுந்தனர். மகனுடைய கால்மூட்டு புரண்டது. அவனுடைய கூட்டாளிக்கு எதுவும் ஆகாமல் ஆண்டவன் காப்பாற்றினார்.

மகன் மரத்திலிருந்து விழுந்தது கேள்விப்பட்ட அக்கம் பக்கம் தந்த உபதேசம்: ‘சவத்தை வெட்டித் தள்ளுங்கோ.’

பின் வீட்டு சிவசுப்ரமணியன் ஆசாரியுடைய பெண்டாட்டிக் காரி வள்ளிம்மை சித்தி, மனைவி காதில் ஊதினாள்.

‘சின்னய்யாவெ மோகினிப் பிசாசுதான் தள்ளிப் போட்டிருக்குது. மோகினி குடிகொண்ட மரத்தை நிப்பாட்டக் கூடாது. முறிக்கச் சொல்லு. பெரிய சின்னய்யாவுக்குப் பிடிவாதம் ஆகாது’. அவளுக்கு நானும் சின்னய்யா; என் மகனும் சின்னய்யா.

மோகினி குடிகொண்டிருக்கும் மாமரம் என்று தெரிந்ததும் மனைவியுடைய குடல் கலங்கியது. அவள் அதை உறுதிப்படுத்தினாள்.

‘உள்ளது தான். எங்க ஊட்டுலயும் ஒரு மாமரம் நின்னுது. வாரிப்புடிச்சு காய்க்கும். மோகினி குடிகொண்ட கனி மரங்கள் நல்லா காய்க்குமாம். கருகருத்தப் பருவத்தில் எக்க காக்காமா மூட்டுல ரத்தம் சத்திச்சு மயங்கி விழுந்தாரு. உடனே வாப்பா, மந்திரவாதி தங்கமணியைக் கூட்டி வந்து களிப்புக் களிச்சிட்டு பாலய்யனை விட்டு மரத்தை முறிச்சுப் போட்டுது’.

அவளும் மரத்தை வெட்ட வேண்டும் என்ற கொள்கை யுடையவளாகத்தானிருக்கிறாள். நான் தனிமைப்பட்டேன். ஒரு உடன்கொல்லி வர்மாணி தடவி மகனுடைய காலைக் கெடுத்தான். காலில் பழுப்பு வைத்துவிட்டது. ஊரில் பேருகேட்ட சிறிய பிள்ளை ஆயானுடைய மகன் ராசய்யன் ஆயான் கைப் பார்த்துத் தடவிக் கட்டுப் போட்டு கடும்பத்தியம் காத்ததினால் அவனால் நடக்க முடிந்தது. எம்புடு பணம் செலவு செய்து ஊராப்பட்ட எக்ஸ்ரேயும் ஸ்கேனும் எடுத்துப் பாத்தபோதும், பூழிக்குன்னு வைத்தியர் கால்மூட்டைப் பிடித்து லேசாக அசைத்துப் பாத்துவிட்டுச் சொன்னபடி மூட்டில் ஒரு ‘லெகமென்டு’ தான் போயிருந்தது.

வௌஞ்சு முற்றிய மாங்காயாகப் பார்த்துப் பொறுக்கி வைக்கோல் சுற்றிப் பழுக்க வைத்தபோது ஒண்ணுகூடப் பழுக்கல்ல. 101 மாங்காயும் அழுகிக் குளுகுளுத்துப் போயின. மாமரத்தில் குடிகொண்டிருக்கும் ஏதோ ஆவியின் வெக்கை தாக்கி மாங்காய் பழுக்கவில்லையென்று கூனிக்கிழவி சொன்னாள். மாமரத்து மூட்டில் மீன் தண்ணி கொட்டும் கோபமென்று சட்டிப் பானைத் தேய்க்கறதுக்கு வரும் லச்சும்மி சொன்னாள்.

21ஆம் நம்பர் வீட்டில் குடியிருக்கும் சங்கர நயினார் முதலியார் சுத்த சைவம். தயிர் சாதத்துக்கு அவருக்கு மாங்காய் ஊறுகாய் வேண்டும். பஜாரிலிருந்து அநியாய விலை கொடுத்து மாங்காய் வாங்கி வருவதைக் கண்டு இரக்கப்பட்டு பத்து மாங்காய் பறித்துக் கொடுத்தாள்.

‘வாங்கியது இருக்கு’ என்றாள் முதலியாருடைய மனைவி.

‘யம்மா தப்பா எடுத்துக்கிடாதங்கோ. நாங்க சுத்த சைவம். நீங்க மீன் தண்ணி விடுவது மாமரத்து மூட்டுலதானோ? அந்த மீன் வாடை மாங்காயில இருக்காதா?’ என்றார் முதலியாரின் ராஜ மூளையுடைய மனைவி, என் மனைவியிடத்தில்.

சொல்வதற்கு இவளிடம் பதில் இல்லை. ஒரே மனக்குழப்பம். அது அவளுடைய முகத்தில் தெரிந்தது. சண்டைக்காரியாகவே என்னிடத்தில் நடந்துகொண்டாள்.

ஒரே அடியாய்ச் சொல்லிப் போட்டேன்.

‘தலைக் குத்தி மறிஞ்சாலும், எக்காரணத்தாலும் மாமரத்தை வெட்டவே மாட்டேன்’. ஓங்கி அடிச்சதும் ஒரு வாரமா என்னிடம் அவள் பேசவில்லை – கலவம். பேசாமலிருந்த வார இறுதியில் அவளுடைய உறவில் ஒரு கிழடு இறந்துபோன வீட்டுக்கு ‘துட்டிக்கு’ப் போனாள். அங்கே வச்சுதான் இவளுடைய முகத்தைப் பார்த்து ஜின்னும்மா குறி சொன்னாள். குறி கேட்பதில் இவளுக்கு அதிக ஆர்வம். வாசலில் வந்து கிடுப்பைக் கிடுக்குகிற ராப்பாடிகளுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்துக் குறிகேட்பாள். அப்படிப்பட்ட புள்ளிக்காரி பேர் கேட்ட ஜின்னும்மாவைக் கண்டால் விடுவாளா.

‘தாயே எம்மொவனுக்கு விஸா எப்ப வரும்?’ தலையில் துணி போட்டுக்கொண்டு பவ்யமாகக் கேட்பாள்.

கொஞ்ச நேரம் இவள் முகத்தைக் கூர்ந்து நோக்கிவிட்டு ஜின்னும்மா சொல்லக் கூடாததைச் சொல்வதற்கான எத்தினிப்பாகக் கேட்டாள் – ‘ஒங்க ஊட்டுக்குப் பின்பக்கம் ஒரு மாமரம் நிக்குமா?’

‘ஆமா…’ இவளுக்குப் பெரிய ஆச்சரியம். 80 கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள தன் வீட்டின் பின்பக்கம் நிக்கும் மாமரத்தைப்பற்றி ஜின்னும்மா (ஜின்னை வசப்படுத்திய பெண்) எப்படித் தெரிந்துகொண்டார்.

‘அதிலுள்ள மாங்காய் பழுக்க வைத்தால் பழுக்காதே’.

‘பழுக்காது’.

‘சரிதானே ……?’

‘சரிதான்.’

சிறிது நேரம் கண்களை மூடி மவுனமாக இருந்துவிட்டு, டபக்கென்று மூடிய கன்களைத் திறந்துகொண்டு சொல்லத் துவங்கினாள்.

‘உன் புருஷனுக்கு ஒரு பெண் செய்வினை செய்து மாமரத்துக்கே மூட்டுல பூத்திப் போட்டிருக்கா. அந்தத் தகடை எடுக்காமயிருந்தா ஒங்களுக்குள்ளே சண்டை இருந்து கொண்டுதானிருக்கும். வியாபாரத்திலும் விருத்தி இருக்காது. ஒங்க ரண்டு பேரையும் ஒண்ணு சேர உடாம இருக்கத்தான் வேலைத்தரம் செய்து வச்சிருக்கா.’

‘அவொ ஆரு?’ இவள் திகைப்போடு கேட்டாள்.

‘அவளா? வேற ஆரு…’ ஒன் புருஷனுக்கு சொந்தக்காரி பெண்ணுதான் புளே.’

‘அதுக்கு மாற்று வழி உண்டா தாயே?’

‘இல்லாம இருக்குமா? மாமரத்தை முறிச்சா நல்லது. அதுக்கு முன்னே ஒரு மாற்று வேலைத்தரம் செய்து பூத்திப்போட்ட தகடெ எடுக்கணும். கொஞ்சம் செலவுள்ள விசயம். தங்கத் தகட்டில் மாற்று வேலைத்தரம் செய்து என் ஜின்னுக்கிட்ட கொடுத்தனுப்பி, ஊரும் காதும் அறியாம தோண்டி எடுத்துட்டு இதெ வைச்சா அவளுக்கு பைத்தியம் புடிக்கும்’.

‘வச்ச தேவடியா லெவிண்டிக்குப் பைத்தியம் புடிக்கணும்.’ இவள் பல்லை நெரித்தாள்.

மரண வீட்டுக்குப் போய்விட்டு வந்தவள் என்னைக் கவ்விக் குதறினாள். ‘ஒங்க சொந்தக்காரி எவளோ கள்ள லெவிண்டி தேவடியா நம்ம ரண்டு பேரையும் சேர உடாமயிருக்க மாமரத்து மூட்டுல செய்வினை செய்து வச்சிருக்காளாம்.’

‘யாரடி சொன்னா?’

‘மரிச்ச ஊட்டுக்கு வந்த ஜின்னும்மா.’

‘அதுக்கு நான் என்ன செய்யணும்?’

‘இந்த புளிச்சி மாமரத்தை முறிக்கணும். தங்கத் தகட்டில் மாற்று மந்திர வேலைகள் செய்து அவுங்க ஜின்னை ஏவி பூத்திபோட்ட செம்புத் தகட்டை எடுப்பாங்களாம்.’

‘சொன்ன மூதேவியெ கட்டவாருவலால சாத்து’ என்று சொல்லிவிட்டு மாமரத்தடிக்குச் சென்றேன். அந்நேரம் சுழன்று வீசிய ஒரு காற்றில் ஒரு சின்னக்கிளை ஒடிந்து 19ஆம் நம்பர் வீட்டுச் சுவரைத் தாண்டி விழுந்துவிட்டது. உடன் சீற்றத்துடன், துண்டு உடுத்தியிருந்த நிலையில் 19ஆம் நம்பர் உலகநாதன் செட்டியார் பின்வளாகத்துக்குக் குதித்தார்.

‘உம்மொ மாமரத்தால எங்க தோட்டமெல்லாம் இலை விழுந்து அசங்கியமாவுது. மரத்தை மூட்டோடு எடுத்துப் போடும். சொல்லிப் போட்டேன்.’

எடுக்காவிட்டால் கத்தியால் என்னைக் குத்திப் போடுவார் போலிருந்தது, அவருடைய பேச்சில் உள்ளடங்கிய கோப அழுத்தமும் முகபாவனையும்.

வீட்டுக்குள் புகுந்தால் ஜின்னும்மா சொன்னதைப் பற்றிச் சொல்லிச் சொல்லி மனைவி என்னைப் பிச்சரித்துக் கொண்டே பிருந்தாள். எனக்குக் கோபம் பொங்கிப் பொத்தது.

‘ஜின்னும்மாக்க உம்மாயெ நீ போய்க் கட்டிக்கோ’ என்று கோபப்பட்டபோது வாயை மூடினாள். வழக்கம் போல் அந்த வாரம் பேசவில்லை. பேசாமலிருக்கும்போது எனக்கு வேட்டி சட்டை கழுவித் தருவதில்லை. நானே மாமரத்தடியிலுள்ள திண்டில் வைத்து என் வேட்டி சட்டையைக் கழுவிக்கொண் டிருந்தபோது, மாமரத்தின் உச்சாணியிலிருந்து எவனோ ஒருத்தன் சுண்ணாம்பைக் கலக்கி சளோவென்று என் தலைவழியாக ஊற்றிவிட்டான். சூடாக இருந்தது. வெடுக்கென்று எழும்பி நின்று சத்தம் போட்டு தானக்கேடு ஏசினேன் – ‘எந்தப் பன்னிக்குப் பெறந்த, பொல்லா மிருகத்துக்குப் பெறந்த பயன்டா…?’

அண்ணாந்து பார்த்தேன். மர உச்சியில் ஒரு மனுசப் பிறவியையும் காணவில்லை. ஒரு வேளை மனைவியுடைய ஜின்னும்மா ஏவிவிட்ட நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்னாக இருக்குமோ? கட்ட வாருவலால சாத்தச் சொன்ன வைராக்கியம் தீர்க்க சுண்ணாம்பு கலக்கித் தலையில் விட்டிருக்குமோ?

கண்ணுக்குப் புலப்படாத ஜின்னு இறக்கை அடித்துப் பறக்கிறதாவென்று தேடிக் கொண்டிருந்தபோது, முன்பு பார்த்திராத அழகான வெள்ளைப் பறவை ஒன்று, நான் உட்கார்ந்திருந்ததற்கு நேர் மேல் பகுதியிலுள்ள கொப்பில் உட்கார்ந்து இருக்கிறது. மஞ்சள் நிறக் கால்களும் அலகும். அதையே பார்த்துக்கொண்டு நின்ற ஆச்சரிய மிகுதியில் தலை வழியாகத் தோளில் வந்து விழுந்த சுண்ணாம்பை மறந்து விட்டேன். லேசாக வீச்சமடிக்கத் துவங்கியது.

குளித்துவிட்டு மொட்டை மாடியில் ஏறினேன். ஒன்றல்ல, பத்துப் பதினெஞ்சு வெள்ளைப் பறவைகள் மாமரக் கிளைகளில் வெட்கத்தோடு உட்கார்ந்துகொண்டிருந்தன. தாலுகா ஆபீசுக்குப் புறப்பட பரபரப்புடன் தயாராகிக் கொண்டிருந்த முதலியார் கேட்டார் –

‘என்ன பாக்கீரும்?’

‘புதிய ஒரு இனம் பறவை சார்’.

ஏறி வந்தார்.

‘இது வெளிநாட்டுப் பறவைகள்’. சொல்லிவிட்டு விருட்டென்று படி இறங்கிப் போனார்.

எனக்குள் எங்குமில்லாத குதூகலம். என் வீட்டு மரத்தில் வெளிநாட்டுப் பறவைகள் விருந்து வந்திருக்கிறது. மாமரம் ஒரு சரணாலயமாகியிருக்கிறது. மாமரக் கொப்பிலிருந்து தாவிப் பறந்து போவதும் இரை தேடி எடுத்துவிட்டுப் பறந்து வந்து கொப்புகளில் வந்தடைவதும் காண்பதற்கு ஒரு தனி அழகு.

‘காணக் கண்கோடி வேண்டும்…!’

பாடலை நினைவூட்டியது.

நடுச்சாம வேளைகளில் வயோதிகர்கள் உறங்கும் காலனி அமைதியில் மாமர உச்சியிலிருந்து ஒலிக்கும் பறவைகளில் கெக்கரிப்பு காதுக்கு இன்பமாகவே இருக்கும். இயற்கையின் இராப்பாட்டாக வாயுவில் ஒழுகும், ஏதோ வனமத்தியில் ஒரு வள்ளிக் குடிசையில் அமர்ந்து வனகீதம் கேட்பது போன்ற அனுபவம் எனக்கு. வெளியே நின்று பார்த்தால் என் வீடு மரங்கள் அடர்ந்த ஒரு தோப்புக்குள் இருப்பது போன்றிருக்கும்.

இயற்கையை நோகச் செய்ய மனமில்லாத எனக்கு இப்போது எங்கள் காலனி மக்களோடு வாழ்வதே ஒரு சவாலாக இருக்கிறது. அதுவும் பறவைகள் விருந்து வந்த பிறகு.

மரத்தில் சரணமடைந்திருக்கும் பறவைகள் எதிர்வீட்டுப் பண்ணையார் மாமாவின் வீட்டு மேல் மாடியில் சுண்ணாம்பு கலக்கிவிட்ட மாதிரி எங்கும் பேண்டு வைப்பதாக மாமியுடைய ஆவலாதி –

‘குழுவனை விட்டு கூட்டைக் கலச்சு பறவைகளை விரட்ட வேண்டியதுதானே.’

எதிர்வீட்டோடு இருந்த நல்ல உறவில் லேசாக விரிசல் ஏற்பட்டது. உறவுகளில் விரிசல் காணப்படுவதற்குக் காரணமாக இருப்பது மாமரமும் பறவைகளும். முரட்டு மனுசன் என்ற பழியும் எனக்கு.

எதிர்பாராத ஒரு புலர் நேரம் 21ஆம் நம்பர் வீட்டு முதலியார், வீட்டுக் கதவைத் தட்டி எப்போதும் சொல்லும் ஆவலாதியை இம்முறை கொஞ்சம் அழுத்தமாகச் சொன்னார்.

‘அய்யா, நேற்று ராத்திரியும் ஒரு கண்ணுக்கு அறவே தூக்கமில்லை. பகல் பொழுது ஆபிஸில் பைலோடு மண்டையைப் போட்டு ஒடச்சிட்டு ஊட்டுல வந்து கொஞ்சம் நிம்மதியா தூங்கலாமென்னா உங்க ஊட்டு மரத்தில் கூடுகட்டி யிருக்கும் பறவைகள் சாமத்தில் போடும் கூச்சல்ல தூங்கவே முடியல்லைய்யா… ஏதாவது ஒரு வழி செய்யுங்கய்யா…’

‘ராத்திரி பறவைகள் போடும் கூச்சலுக்கு நான் என்ன சார் செய்ய முடியும்?”

‘கூட்டைக் கலச்சு போட்டா, வேறு எங்காவது போய்க் கூடு கட்டும்.’

‘முட்டை போடுறதுக்குக் கூடு கட்டியிருக்கு. அதை நான் பிரிக்க மாட்டேன்.’

‘நீங்க பிரிக்க வேண்டாம்.’

‘பின்னே யார் கூட்டைப் பிரிப்பது?’

‘நானே ஆளை வச்சு பிரிச்சு போடுதேன், அஞ்சோ பத்தோ குடுத்தாலும் பரவாயில்லை. ராத்திரி நிம்மதியா தூங்கலாமே.’

‘இல்ல சார். அது பாட்டுக்கு மரத்தில் இருந்துட்டுப் போவுது.’

‘ராத்திரி தூங்க முடியல்லியே…’

கேட்டதும் எனக்குக் கோபம் பொங்கிப் பொட்டியது.

‘காதுல பஞ்சு வச்சிட்டுப் படுங்கோ …’

சடடென்று சங்கர நயினார் முதலியாருடைய முகம் சிவந்துவிட்டது.

‘பக்கத்து வீட்டுக்காரங்களுக்குத் தொந்தரவு குடுக்கத்தான் மரம் வளக்கீளோ?’

‘நா வளக்கல்ல. அதா வளருது முதலியார் சார். அதை முறிக்க மாட்டேன்.’

‘நீங்க வளக்கல்லேன்னா வெட்டிப் போடுங்களேன். மரம் நிக்கூதுனாலத்தானே வேண்டாத பறவைகள் எல்லாம் வந்தடைஞ்சு மக்களுடைய தூக்கத்தைக் கெடுக்குது.’

‘எங்க தூக்கத்தைக் கெடுக்கல்லியே…’

முதலியார் எச்சரிக்கை செய்தார்-

‘கூட்டக் கலச்சு பறவைகளை வெரட்டுங்கோ, இல்ல மரத்தை வெட்டிப் போடுங்கோ. இது பெரிய பப்ளிக் நுயிஸன்ஸ்’

‘இப்ப நீங்க ஊட்டுக்கு போங்க சார்’. மனைவி அவரை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தாள்.

வெளியூர் செல்ல சட்டையை எடுத்து அணியும்போது பட்டனை மாட்டித் தந்துகொண்டு அவள் மெல்ல பழத்தில் ஊசி இறக்கினாள்.

‘பக்கத்து வீடு. மனவருத்தம் வேண்டாம். அவரா ஆளை விட்டு கூட்டைக் கலச்சுப் போடுதாருன்னா போடட்டு. பறவைகள் எங்காவது பறந்து போய்க் கூடுகட்டும். அவர் செய்யுத பாவம் அவருக்கு. இந்தப் புளிச்சி மாமரம் நிக்கூதுனாலத்தானே அக்கம் பக்கத்தோடு மனக்கசப்பு வருது. வெட்டிப் போடுவோம்.’

‘முடியவே முடியாது’. உறுதியாகச் சொன்னேன்.

மனைவியின் உபதேசத்தில் அவளுடைய ஒரு சுயநலமிருந்தது பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது. சில ரூஹானியத்துக்கள் (ஆவிகள்) வெண் பறவைகளின் உருவங்களில் மாமரங்களில் குடிகொண்டிருக்குமென்று கூனிக் கிழவி சொன்னதை இரவு தூங்கச் செல்லுகையில் உள் நடுக்கத்துடன் ஒரு கதையின் வாலாகச் சொல்லி வைத்தாள்.

வழக்கம் போல் வியாபார சம்பந்தமாக வெளியூர் சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் பசியுடன் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்த என் பார்வையில், எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து முதலியார் படி இறங்கி வருவதும், அவர் பின்னால் இரண்டு மூன்று நரிக்குறவர்களுடைய ஜடை முடியைச் சுற்றிக் கட்டிய தலைப்பாக்களும் தெரிந்தன.

கடைசி ஆளாக மனைவி படி இறங்கி வருவதும் தெரிந்தது.

நன்றி: https://thoppilmeeran.wordpress.com/2012/01/31/ஒருமாமரமும்கொஞ்சம்/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *