இன்னமும் சோதனையா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 25, 2022
பார்வையிட்டோர்: 1,856 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பிருந்தாவனம்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஞானகுமாரன் ஒரு கலாரசிகர்.சங்கீதம், நாட்டியம் முதலான இன்பக்கலைகளை உண் மையாக மெய்மறந்து அநுபவிப்பார். அநுபவிப்பது போலப் பொய் வேஷம் போடமாட்டார்.

ஒருசமயம் சங்கீதப் பள்ளிக்கூடம் ஒன்று கட்டுவதற்கு நிதி சேர்க்க ஊரிலே ஒரு கதம்பக் கச்சேரி நடைபெற்றது.

கச்சேரி நடத்தியவர்கள் பிருந்தாவன ஆசிரியருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார்கள். அழைப்பை ஏற்றுக்கொண்டு ஆசிரியர் கச்சே ரிக்கு வந்திருந்தார்.

அன்றைய நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கது. தேவகி என்ற பெண் ணின் பாட்டு. குழைவும் இனிமையுங் கலந்த அவளுடைய சாரீரம் கொட்டும் மதுர கீதத்தில் மனத்தைப் பறிகொடுக்காதவர்களேயில்லை. லட்சுமி தாண்டவமாடும் அந்த இளம் மங்கையின் எழில் முகத்தில் சொக்கிப்போகாதவர்கள் மனித ஜென்மமே அல்ல.

“பிருந்தாவனம்” ஆசிரியர் நல்ல ரசிகர். என்றேனோ? அன்றைக்கென்று தேவகி என் னவோ அபாரமாகத்தான் பாடினாள். உள்ளமும், உடலும் ஒன்றாக உருகிப் பாடினாள். அவ ளது இதய ஒலிகளைக் கேட்கச் சபையில் ஓர் உண்மையான ரசிகர் வந்திருக்கிறார் என்று அறிந்தாளோ என்னவோ! ‘இன்னமும் சோதனையா?’என்ற பாட்டை மோகனத்தில் குழைந்து குழைந்து பாடினாள் கண்ணீர் வராத ஒரு குறை.

ஆனால், கண்ணீர் பிருந்தாவன ஆசிரியருக்கு வந்தது. ஸ்தூல தேகத்தில் தாம் ஒரு சாதாரண மனிதனாகச் சபையில் இருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. அலங்காரமான மேடையில் ஜெகஜ் ஜோதியான மின்சார வெளிச்சத்தின்கீழ் ஒய்யாரமாகவிருந்த அந்தப் பூலோகரம்பையின் ஒயிலும். அவளுடைய கந்தர்வ கானமும் சேர்ந்து அவரை ஆகாயத்தில் எங்கேயோ பூரண சந்திரிகையின் கீழே கொண்டு போயிற்று.

அவள் பாடிக்கொண்டிருந்த போது அவருக்கு மனம் உருகி அழவேண்டும் போல இருந் தது. ஓடிப்போய் அவள் கால்களிலே விழவேண்டும் போலத் தோன்றியது. கதிரையோடு தலையை பின் பக்கம் சாய்த்து மேடையைப் பார்த்தபடி அப்படியே மெய்மறந்து போயிருந்தார். தலை அவரை மீறி ஆடியது. வாய் ‘ஆஹா’ என்றது.

சபையின் முன்னணியில் நாகரிக “மரங்களின் மத்தியில் ஒரு பைத்தியம் இருந்தது. அக்கம்பக்கத்திலுள்ளவர்களுக்கு ஆச்சரியமாகத்தானிருந்தது. வெட்கமாகவுங்கூட இருந்தது. ஆனால் பாடகிக்கோ அதுவொரு உற்சாகத்தைக் கொடுத்தது. ‘யாரோ இவர்?’ என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள். இரவு 10 மணியளவில் கச்சேரி முடிந்து எல்லாரும் வெளியேறினார்கள்.

அடுத்தவார பிருந்தாவன த்தில் அந்தக் கதம்பக் கச்சேரி பற்றி ஒரு ரஸமான விமரிசனம் வெளியாகியிருந்தது. கச்சேரிக்குச் சமுகந்தந்திருந்த ஆசிரியரே அதை எழுதியிருந்தார். அதில் தேவகியின் சங்கீதத்தைப் பற்றித் தான் முக்கியமான வானளாவப் புகழ்ந்து எழுதியிருந்தார். தாம் அநுபவித்த உணர்ச்சிகளை ஒழிக்காமல் வெளிவெளியாகவே கூறியிருந்தார்.

அவளது பாட்டும் அழகும் சேர்ந்து பண்ணொடு இசை சேர்ந்தாற் போல ரம்யமாக விருந்ததென்றும், அது ஒரு அற்புதமோ சொப்பனமோ என்றெல்லாம் தம்மைப் பிரமிக்கும்படி செய்துவிட்டதென்றும் வர்ணித்திருந்தார். முடிவில், பாடகி இடையிடையே செருமியதுகூட ஒரு இன்னிசசையாவே பரிமளித்த தென்று ஒரு விளம்பரமான குறிப்போடு தமது பாராட்டுதலை முடித்திருந்தார்.

இது வெளியான பத்திரிகை இதழ் தேவகியின் கைக்குப் போயிற்று என்று சொல்லவேண்டியதில்லை.

கதம்பக் கச்சேரி விமர்சனத்தை அவள் ஆவலோடு படித்தாள். தன்னைப் பற்றி எழுதிய பகுதியைத் திருப்பித் திருப்பிப் படித்தாள். ஆயிரந்தடவை படித்தாள். ஒவ்வொருமுறையும் படிக்கப் படிக்க அவளுக்குப் புதுப்புது உணர்ச்சிகள் மனத்தில் உதித்தன. மகாகாவியத்தைப் போல புதுப்புதுக் கருத்துக்கள் தெரிந்தன. ஒருசமயம் மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும்; மற்றொருசமயம் அதைப் படிக்கும் போது, அதை எழுதியவரை உடனே பார்க்க வேண்டும், அவரோடு மனங்குளிரப் பேசவேண்டும் என்ற தாகம் உண்டாகும். “பாடகி இடையிடை செருமியதுகூட நன்றாகத்தானிருந்தது” இந்த வசனத்தைப் படித்த போது அவளது நாணத்தால் சிவந்தது. பத்திரிகையைச் சட்டென்று மடித்து எடுத்துக்கொண்டு அலை குள்ளே தனியாப் போயிருந்து மீண்டும் படிக்கத் தொடங்கினாள். முடிவில். இப்படியெல்லாம் தன்னைத் தூக்கி வைத்து எழுதிய ஆசிரியருக்குத் தனது நன்றியைத் தெவித்துக் கழகம் எழுதுவதென்று தீர்மானித்தாள்.

“இவ்வளவு பாராட்டுதலுக்கு அடியேன் தகுதியுடையவளா ஆசிரியரே!”.. என்று எழுதிய தேவகியின் கடிதம் ஞானகுமாரனுக்குப் பெரும் மனப்பூரிப்பைத் தந்தது. பேனையை எடுக்க உடனேயே அவளுக்கு என்னென்னவோ எழுதினார்; எவ்வளவோ எழுதினார்…. எழுதி அதைத்தபாலில் சேர்த்த பிறகு தான் அவருக்கு மனநிம்மதி பிறந்தது.

இதற்கு பிறகு அவர்களிடையே பல கடிதங்கள் போய் வந்தன. “சில காலமாகப் பிருந் தாவனத்தில் உணர்ச்சியான நல்ல கதைகள், கட்டுரைகளே வருவதில்லை” என்று அதன் வாசகர்கள் குறைகூறினார்கள் என்றால் அதற்குக் காரணம் ஆசிரியரின் அசிரத்தையல்ல; தேவகிதான் ஞானகுமாரனின் சர்வ உணர்ச்சிகளையும் கொள்ளை கொண்டிருந்தவள் அவளல்லவா!

கடித உறவு முற்றி நாளடைவில் அவர்கள் நேரிலும் சந்திக்கத் தொடங்கினார்கள். தன்னைத் தேடி அவர் தன் வீட்டுக்கு வருகிறார் என்பதை நினைக்க நினைக்க … அவளுக்கு அது ஏழேழு ஜன்மத்திலும் கிட்டாத ஒரு பாக்கியம் போலத் தோன்றியது! ஞானகுமார னுக்கோ… அவள் வீட்டிலேயே குடியிருந்து விட்டால் பிறவிப்பயன் தீர்ந்துவிடாதா என்றிருந் தது. சந்தித்த போதெல்லாம் அவர் அவளைப் பாடச் சொல்லிக் கேட்டு அவள் பக்கத்தே அமர்ந்து ‘ஆஹா! ஊஹூ!’ என்று பரவசப்பட்டார். பல மணிக்கணக்கான அவளைப் பார்த்துக் கொண்டே ‘ஆசைக்காதலி! நீ பாட்டிசைத்துக் கனிவோடு கூடுவையேல் ஏது மினிக் கவலை யில்லை; இவ்வுலகில் இதுவன்றோ பரமபதம்!” என்று சொன்னார்.

கலைஞர் – ரசிகர் காதல் என்னவோ மகோன்னதமாகத்தாகிருந்தது. ஆனால் …. இந்த ஆனால் என்ற முறிவு’ அவர்களிடையேயும் இல்லாமற் போய்விடவில்லை. அழகான தாமரைப் புஷ்பம் தடாகத்திலே எத்தனை நாளைக்குப் பூத்திருக்க முடிகிறது?

தேவகியின் பெற்றோருக்கு அவளை ஞானகுமாரனுக்குக் கல்யாணஞ் செய்து கொடுக்க வேண்டுமென்று ஓர் எண்ணம் உண்டாயிற்று. விஷயத்தை மெள்ள வெளிவிட்டார்கள்…

ஞானகுமாரன் தேவகி வீட்டுக்குப் போவது சட்டென்று நின்றுவிட்டது. அவர்கள் திகைத் துப் போனார்கள். வருவார் வருவார் என்று தேவகி பல நாட்களாக எதிர்பார்த்தாள். அவர போகவேயில்லை. மனங்கொதித்துக் கடைசியில் ஒரு கடிதம் எழுதினாள் ஞானகுமாரனுக்கு.

ஐயா,

நான் ஒரு தாசியின் பெண் என்று தெரிந்து என்னை ஏற்றுக்கொள்ள உங்கள் மனம் இசையவில்லைப் போலும். அடுத்த ஜன்மத்திலாவது உங்களைப் போல உயர்ந்த குலத்தில் பிறக்க வேண்டுமென்று கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை. என இதயத்தை நீங்கள் அறிய வில்லை. ஒருமுறை வந்தீர்களானால் என் நெஞ்சைப் பிளந்து உங்களுக்குக் காட்டுகிறேன். உங்களைப் போல எழுத்து வன்மையை எனக்குப் பகவான் தந்திருக்கவில்லையே! எப்படியும், ஒன்றை நிச்சயமாக நம்புங்கள். இந்த இதயத்திலே ஞானகுமாரரைத் தவிர வேறு ஒரு மனித ஜென்மத்துக்கு என்றைக்குமே இடமில்லை. ஆனால் என் உடல் – அது என் பெற்றோர்களுக்குரியதல்லவா? என்னை மறக்காதீர்கள்!

– தேவகி

கடித்தைப் படித்துவிட்டு ஞானகுமாரன் நீண்ட பெருமூச்சு விட்டார். அவ்வளவுதான்.

இதற்குப்பின் ஐந்து வருஷங்கள் உருண்டோடி விட்டன. தேவகிக்கு யாரோ ஒருவ னோடு கல்யாணம் ஆகியது. அவர்கள் எங்கெங்கோ எல்லாம் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள்

“பிருந்தாவனப் பத்திரிகையின் ஆசிரியர் பீடத்தில் இப்போது வேறு யாரோ ஒருவர் இருந்தார். ஞானகுமாரன் பல வருஷங்களுக்கு முன்பாகவே அதிலிருந்து விலகிக்கொண்டு விட்டதாகச் சொல்லப்பட்டது.

சுற்றுப்பிரயாணம், க்ஷேத்ராடனம் எல்லாம் முடித்துக்கொண்டு ஊர் திரும்பியிருந்த தேவகி – அனந்தராமனுக்கு, ஒருநாள் பட்டணத்தில் ரேடியோ நிலையத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், அந்த மாசம் 26ந் தேதி மாலை 6.30 மணிக்கு அவளுக்கு ரேடியோவில் ஒரு புரோகிராம் கொடுத்திருப்பதாகக் கண்டிருந்தது.

26ந் தேதி மாலை 5.45 மணிக்கு பக்கவாத்தியக்காரர்களையும் தனது சிநேகிதி மார்கள் இரண்டு பேரையும் அழைத்துக்கொண்டு ரேடியோ நிலையத்து வாசலில் காரில் போய் இறங்கினாள் தேவகி.

மணி 6.15 ஆனதும் உள்ளே இசைத்தட்டுக்கள் வைத்துக் கொண்டிருந்த அறிவிப் பாளர் வெளியே ‘வெயிற்றிங்ஹாலுக்கு வந்து பக்கவாத்தியக்காரன் ஒருவனைக் கூப்பிட்டு இரண்டாவது புரோட்காஸ்டிங் அறைக்குவரும் படி சொல்லிவிட்டுத் திரும்பினார்.

தோழிமார்களோடு பேசிச் சிரித்துக்கொண்டு எங்கேயோ பராக்காகவிருந்த தேவகி அறிவிப்பாளரின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டுப்போய்த் திரும்பிப் பார்த்தாள். ஞானகுமாரனே ரேடியோ அறிவிப்பாளரென்று தெரிந்து அவள் ஒருகணம் பிரமித்துப்போய்விட்டாள். உற்சாகமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தவளுடைய முகம் திடீரென்று இப்படி ஏன் வாடிப்போயிற்று – என்று அவளது சிநேகிதிகள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.

6.30 மணி ஆயிற்று. “…ரேடியோ நிலையம். அடுத்த 45 நிமிஷத்துக்கு தேவகி – அனந்தராமன் பாடுகிறார்” என்ற அறிவித்தலோடு கச்சேரி ஆரம்பமாயிற்று.

அன்றைக்கு ரேடியோவைத் திருப்பியவர்கள் சொக்கிப்போனார்கள்.

‘இன்னமும் சோதனையா?’ என்ற பாட்டைக் கேட்டவர்கள் உண்மையாகவே மனம் உருகினார்கள். ‘இவ்வளவு சோகபாவத்தோடு பாடியவள் யாரப்பா அது!’ என்று ஒருவரை யொருவர் கேட்டார்கள். ‘நாங்கள் கேள்விப்பட்ட தில்லையே!’ என்றார்கள்.

பைத்திரயக்காரர்கள்! அப்பேர்ப்பட்ட சங்கீதத்தைப் பூலோகத்தில் கேள்விப்படம் அது, கேவலம், கண்டத்துக்கு மேலிருந்து கிளம்பும் சங்கீதமா என்ன?

இறந்துபோன கணவனைக் கனவிலே கண்டவள் போல. மனங் குழைந்து உடலம் உயிரும் உருகிப் பாடினான். தேவகி அன்றைக்கு.

‘இன்னமும் சோதனையா’ என்ற பாட்டை ஐந்து வருஷங்களுக்கு முன்னே அவள் பார்போது, அன்று கண்ணீர் வரவில்லை. ஆனால் இன்றைக்கோ இரண்டு கண்களிலம் கண்ணீர் வழிந்து ஓடிற்று.

“இதுவரை பாடியவர்…தேவகி – அனந்தராமன்” என்று முடிவில் அறிவித்தபோது ரேடியோ அறிவிப்பாளரின் குரல் தளதளத்தது; பெருமூச்சோடு நடுங்கியது.

– மறுமலர்ச்சி ஆடி – 1947, ஈழத்துச் சிறுகதைக் களஞ்சியம், முதற் பதிப்பு: நவம்பர் 2019, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *