இந்த கதையின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி விடுகிறேன். (அறிவுரையை பின்னால் சொல்லிக் கொள்ளலாம்)
மிஸ்ஸ்டெல்லா அழகிய பெண், உண்மையிலேயே அழகிய பெண் என்றும் சொல்லலாம், ஆனால் தினம் தினம் அதை மற்றவர்களுக்கு நிருபிக்க மெனக்கெடுகிறாள். உடை விசயங்களிலும் கொஞ்சம் தாராளம், சிறிது அலட்சிய மனப்பான்மை
ஜான் : உடனே ஸ்டெல்லாவுக்கு ஜோடியாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள், தொழிலதிபர் மைக்கேலின் டிரைவர்
மைக்கேல் : தொழிலதிபர். மிகப் பெரிய பணக்காரர், அன்பானவர். சில சமயங்களில் அன்பு அளவு மீறி விடுகிறது.
மேரி: முதலாளி மைக்கேலின் அலுவலகத்தில் கடைநிலை ஊழியை.
மைக்கேல் காலை பிரார்த்த்னையை அந்த ஊர் சர்ச்சில் முடித்து விட்டு தனது காருக்கு வருகிறார். நேரமாகிவிட்டது.வாட்சை பார்த்து விட்டு வண்டியை எடுத்தவரின், கார் காம்பவுண்டை தாண்டி ரோட்டுக்கு வரும்போது பார்வை எதிர்புறம் பஸ்ஸுக்காக நின்றிருந்த மேரியை பார்த்ததும் காரை மெதுவாக்கினார். மேரி பஸ்ஸுக்காக காத்திருந்தவள ,அருகில் கார் ஒன்று வந்து நிற்கவும் அதிர்ந்து போனாள்.
உள்ளிருந்து “ஏறிக்கொள்” இந்த குரல் அவளுடை முதலாளியின் குரல்போல உணர்த்தவும் குனிந்து அதை உறுதி செய்து முன்னால் ஏறுவதா, பின்னால் ஏறுவதா தடுமாறினாள். முன்னாலே ஏறிக் கொள், அதற்கு மேல் எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தார். சார்..டிரைவர் வரலிங்களா? மிகப் பெரிய முதலாளி, தன்னையும் பொருட்டாய் காரில் ஏற்றிக் கொள்கிறார், அதனால் ஏதோ பேசவேண்டுமென்று இவள் பேசினாள். வீட்டுல இருக்க சொல்லிட்டு வந்திருக்கேன், நீ ஆபிசுக்குத்தானே போறே, அஞ்சு நிமிசம் பொறு, வீட்டுக்கு போயிட்டு அப்படியே போயிடலாம்.
இவளுக்கு தர்மசங்கடமாய் இருந்தது. முதலாளி காரில் இப்படி உட்கார்ந்திருந்தாலே, போக வர பார்ப்பவர்கள் ஏதாவது சொல்ல வாய்ப்பு உண்டு. இதில் இவர் வீட்டில் ஐந்து நிமிடம் காத்திருக்க வேறு சொல்லுகிறார். மனதுக்குள் பயம் வந்தாலும், வெறும் புன்னகையை மட்டும் சிதறவிட்டாள்.
பங்களாவுக்குள் கார் நுழையவும், டிரைவர் ஜான் ஓடிவந்தான். வந்தவன் ஐயா பக்கத்தில் மேரி உட்கார்ந்திருப்பதை பார்த்துவிட்டு முகத்தை சுருக்கினான். வண்டியை நிறுத்தியவர், ஜான் நான் உள்ளே போயிட்டு வந்துடறேன். கொஞ்சம் வெயிட் பண்ணு. அவசர அவசரமாய் உள்ளே சென்றார்.
மேரிக்கு தர்மசங்கடமாய் இருந்தது. ஜான் அவள் அருகில் வந்து நின்றவுடன் இவள் வண்டியைவிட்டு இறங்கலாமா? வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள்.
என்ன மேரி முதலாளியே உன்னை காருல ஏத்திகிட்டாரா? குரலில் பொறாமையா? இல்லை கவலையா தெரியவில்லை. இவள் மெல்ல தலையை மட்டும் ஆட்டினாள்.ம்.. பெரிய ஆளாயிட்டே என்னை மாதிரி ஆளுங்களை கண்டுக்குவியா? முணங்கிக்கொண்டே காரின் பின்புறம் சென்றான்.
பதிலை உடனே சொல்ல வாய் துடித்தது, அடக்கிக்கொண்டாள். நானா காரில் லிப்ட் கேட்டேன்? அவராய் நிறுத்தி ஏறு என்றார், முடியாது என்று சொல்ல முடியுமா? எங்கள் அப்பா காலத்துலிருந்து குடும்பத்துக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது இவர்கள் குடும்பம். இந்த ஜானுக்கு முன்னால் அப்பாதானே இவருக்கு டிரைவராய் இருந்தது. அப்பொழுது ஜான் வெறும் தோட்டம்தானே பார்த்துக் கொண்டிருந்தான். அவனை டிரைவர் ஆக்கியது மட்டுமல்லாமல், முதலாளியிடம் இவன் நன்றாக கார் ஓட்டுவான் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி கொடுத்தவர் அப்பாதான்.இவள் கவலையில் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்க,
காரின் பின்புறமாக டிரைவர் இருக்கையின் அருகில் வெளியே நின்று கொண்டிருந்த ஜானின் மனமோ, இவளை மனைவியாக்கி பக்கத்தில் உட்காரவைத்து அப்படியே சுற்றிவர எவ்வளவு கனவு கண்டிருப்பான், இப்பொழுது முதலாளி இவளை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு வந்தது ஏனோ மனதை பிசைந்தது. இது எதிர்பாராத உதவி என்று இவன் மனம் ஒப்பவில்லை.
கார் அலுவலக காம்பவுண்டு கேட் வாசலில் நின்ற செக்யூரிட்டி, முதலாளிலுக்கு சல்யூட் வைத்து விட்டு முன்புறம் மேரியை பார்த்தவுடன் ஆச்சர்யபட்டான். பாரப்பா…! முதலாளி காருல வர்ற அளவுக்கு மேரி பெரிய ஆளாயிட்டா. மனதுக்குள் எண்ணங்கள் இப்படி ஓடின.
வாசலில் கார் நின்றவுடன் ஜான் ஓடிவந்து கதவை திறப்பதற்குள் இவராக காரின் பின்புறம் இருந்து இறங்கி, முன் புற கதவை திறந்து மேரியை இறங்க சொன்னார்.
அப்பொழுது முதலாளியை வரவேற்பதற்காக வந்த மேனேஜர், உடன் செகரட்டரி ஸ்டெல்லா இவர்கள் இருவரும் இதை எதிர்பார்க்கவே இல்லை. முதலாளி காரை திறக்க மேரி கூச்சத்துடன் இறங்குவதை பார்த்தவர்கள் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர்.
ஸ்டெல்லாவுக்கோ உள்ளமெல்லாம் எரிந்தது. மேரி ஒரு டிரைவரின் மகளாய் இருந்தவள், அலுவலகத்தில் சாதாரண உத்தியோகம் செய்து கொண்டிருப்பவள். இவள் முதலாளி காரில் வந்து இறங்குகிறாள். நினைக்க நினைக்க அவளின் சிவந்த முகம் செந்நிறமாக மாறியது. சே எவ்வளவு அழகு இருந்து என்ன? இப்படி ஒருவாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால் இந்த அலுவலகமே மூக்கில் விரல் வைத்து பார்க்குமே.
மானேஜர் இப்படி ஒரு பணியாளை முதலாளி கதவை திறந்து இறங்க வைத்தால் மற்ற பணியாளர்களும் இதைத்தான் எதிர்பார்ப்பார்கள், அவருடைய சிந்தனை நிர்வாக சிக்கலை பற்றி யோசிக்க ஆரம்பித்தது.அப்புறம் மேரியை கூப்பிட்டு எச்சரிக்க வேண்டும். இல்லை வேறு இடத்துக்கு மாற்றி விடவேண்டும். இதை நான் நேரடியாக செய்யகூடாது, ஏதாவது காரணம் காட்ட வேண்டும்.
மைக்கேல் இதைபற்றி எதுவும் கவலைப்படாமல் மானேஜருடன் பேசிக் கொண்டே அவர் அறைக்குள் சென்றுவிட்டார். ஸ்டெல்லா மானேஜர் பின்னாலே சென்றவள் அவர்கள் இருவரும் உள்ளே சென்ற பின் வேகமாக வெளியே வந்தாள், மேரியை பார்க்க.
அவர்கள் போகும் வரை அப்படியே நின்று கொண்டிருந்த மேரி மெதுவாக அலுவலகத்துக்குள் நுழைய ஆரம்பித்தாள். இவர்கள் இறங்குவதை முன்புறம் உட்கார்ந்திருக்கும் ஓரிரண்டு பேர் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அப்படி அந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள், அங்கிருந்தபடியே மேரியை பார்த்த பார்வை….மேரிக்கு கூச்சம் பிடிங்கி தின்றது.
அதற்குள் வேகமாக இவளை பார்க்க வந்த ஸ்டெல்லா, மேரியின் கையை பற்றி (அவசரப்படுவதைகாட்டக்கூடாது) என்ன மேரி பாஸ் நீ நடந்து வர்றதை பார்த்து ஏத்திட்டு வந்தாரா?
இல்லை, பஸ் ஸ்டாண்ட்ல நின்னுகிட்டு இருந்தேன், வீட்டுக்கு கூட்டிட்டு போய் அஞ்சு நிமிசத்துல வந்துடறேன்னு வெயிட் பண்ண சொல்லி அப்புறம் வந்தாரு.
பஸ் ஸ்டாண்ட்லேயேவா? குரல் நீள.. இழுத்தவள் வீட்டுக்கு கூட்டிட்டி போனாரா….. இழுத்தவள். உன் கிட்ட வெயிட் பண்ண வேற சொன்னாரா?…..முகம் தொங்கி போனது. இந்த அலுவலகத்தில் சுண்டி இழுக்கும் அழகு இருந்தென்ன பிரயோசனம்?
காரை ஓரமாய் பார்க் பண்ணிவிட்டு வந்த ஜானின் முகத்தில் சுரத்தே இல்லை. முதலாளியே மேரிக்காக கதவை திறக்கிறார் ! இனி அலுவலகத்தில் இருப்பவர்கள் வெறும் வாயை மெல்ல ஆரம்பிப்பார்கள் “மேரி முதலாளியை கைக்குள்ள போட்டுகிட்டா…அப்படீன்னு. என்னைய மாதிரி டிரைவருக்கு வாக்கப்படுவாளா?
என்ன மேரி நேத்து சும்மா ஜம்முனு கார்ல போயிகிட்டு இருந்தே? பஸ் ஸ்டாண்டில் தினமும் இவளுடன் பஸ்ஸுக்கு நிற்பவளின் கேள்வி !
மைக்கேல் மைக்கேலாகவே இருக்கிறார். இந்த நிகழ்வை பற்றி எந்த அக்கறையும் கொள்ளாமல். காரணம் மேரி இறந்து போன அவரின் டிரைவர் பெண், சிறுவயது முதல் அவளை பார்த்து வந்தவர். அன்று அவளை காரில் ஏற்றிக்கொண்டது, சடாரென்று ஏற்பட்ட ஒரு அன்பு அவ்வளவுதான்.
ஸ்டெல்லாவும் மேரி மீது வன்மம் கொண்டிருக்கவில்லை, அவளை பொறுத்தவரை தான் அழகி என்ற எண்ணம் மட்டுமே. இதுவே எல்லோரையும் அடிமைபடுத்தி விடும் என்ற எண்ணத்தில் இருப்பவள். அதனால் மற்றவர் கவனம் மேரியின் மீது பாய்வது அவளுக்கு சின்ன எரிச்சல்.
மானேஜருக்கு இதனால் எல்லா பணியாளர்களும் எதையோ எதிர்பார்ப்பார்கள் என்ற எண்ணம். இது சரியா தவறா தெரியவில்லை, ஆனால் இது அவரின் பார்வை.
ஜானுக்கு இவள் தன்னுடைய மனைவியாக போகிறாள் என்ற தீவிர எண்ணம், அதனால் அவள் முதலாளிக்கு நெருக்கம், என்று வந்துவிட்டாள், தான் அவளை அணுகுவது என்பது சிரமம் என்பது அவன் பார்வை
மேரிக்கு ஜானின் மீது என்ன அபிப்ராயம் கொண்டிருக்கிறாள் என்பது நமக்கு தேவையில்லை.இப்பொழுது அவள் வேண்டுவது இதுதான்.
தினமும் கர்த்தரை வேண்டிக் கொள்கிறாள். முதலாளி எதிரில் எங்காவது காரில் வந்துவிடக்கூடாது என்று.