ஒரு காலைக் காட்சி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 19, 2022
பார்வையிட்டோர்: 4,749 
 

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூரியனின் முன்னணித் துருப்புகள் வேகமாய் வாட்களைச் சுழற்றிக் கொண்டே இறங்கிக்கொண்டிருந்தன. அலுவல் நிமித்தம் செல்லும் மக்கள் பெருங்கூட்டம் சகலவிதமான வாகனங்களிலுமாக விரைந்து கொண்டிருந்தன. பச்சை, மஞ்சள், சிகப்புகள் மாறி மாறி விழுந்தன. தலைக்கு மேலோடும் பாலத்தில் ரயில் பெட்டிகள் தடதடத்தன.

பக்கத்து ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, அறுமுனைச் சந்தியை நெருங்கிக்கொண்டிருந்தான். சந்திப்பில் இருந்து அவனுக்கு மேலும் பத்துபன்னிரண்டு நிமிடங்கள் நடக்க வேண்டும். மே மாதப் பொரிவில் ஏற்கனவே கைக்குட்டை நனைந்துவிட்டது. சிறிய டர்க்கித் துண்டு வைத்துக் கொள்ளலாம் என்றால், வாரச் சந்தையில் வட்டிக்குக் கடன் கொடுப்பவன் பை போலப் பெரிதாக வைத்துக்கொள்ள வேண்டும். துடைத்துத் துடைத்து, பாக்கெட்டில் திணித்து, இன்னும் சற்று நேரத்தில் கார நெடியோன்று எழும்.

செல்ல நேரிடும் வசதியானதோர் அலுவலகத்தில் முகம் கழுவித் தண்ணீர் குடித்த கையோடு கைக்குட்டையையும் அலசிப் பிழிந்து கொள்ள வேண்டும்.

சில அலுவலகங்கள் எல்லா வசதிகளுடனும் இருந்தன. வரவேற்பறை குளிரூட்டப்பட்டு, வசதியான சோபாக்கள் போடப்பட்டு, பெரிய புகழ் பெற்ற ஓவியர்களின் நகல் ஓவியங்கள் மாட்டப்பட்டு இருக்கும். மூத்திரம் பெய்ய நேரிடும் கோப்பைகளில் நாப்தலீன் உருண்டைகள் சுழன்றன. கை கழுவும் கோப்பை அருகே திரவ சோப்பு இருந்தது. சில அலுவலகங்களில் ஈரக்கை உலரக் காற்று வீசும் கருவிகள் கூட இருந்தன. வேறு சில அலுவலகங்களில் கை கழுவும் தண்ணீருக்காக குழாயைத் திருக வேண்டிய உழைப்பு இல்லை. குழாயின் கீழே கையைக் காட்டினாலே கூடப் போதும். ‘கொடக்’கென இளநீர் உடைத்தாற் போன்று தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும்.

வேலை நெருக்கடியில் சில சமயம் மூத்திரம் பெய்ய மறந்து போனால் சந்திப்புகளில் பஸ்ஸூக்கு காத்திருக்கும் நேரங்களில் மூத்திரம் முட்டும். கனத்த நிறங்களில் பளிங்கு ஓடுகள் பாவிய சுவர்களுடன் தட்டுப்படும் கழிப்பிடங்களை நுழைய நெருங்குகையில் வீசும் காரமான வாடை. சில இடங்களில் ஓடை நிறைந்தோ, கோப்பை நிறைந்தோமலம் வழியும். ஓடைக் கழிவுகளில் வெள்ளையான புழுக்கள் வில்போல வளைந்து துள்ளித் தெறிக்கும். குடற்புழுக்கள் அடித்துக்கிடத்தியது போல் மிதக்கும். மூச்சைப் பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாலும் உள்ளே இருந்து வெளிவரும்முன் இரண்டு மூன்று மூச்சாக இழுப்பதைத் தவிர்க்க முடியாது. கண்களில் மூக்கில் காரமான காற்று உரசும். இரு முறையேனும் எச்சில் உமிழ வேண்டியதிருக்கும்.

கடுமையான வெயில் அடித்து, வியர்த்து ஊற்றுவதால் இந்த மாதங்களில் மூத்திர முட்டல் குறைவு. ஆனால் இரண்டு முறையேனும் கைக்குட்டையை நனைத்துப் பிழிந்துகொள்ள வேண்டும்.

பிற்பகல் இரண்டரை மணி அளவில் அலுவலகம் சேரும் முன்பு நான்கு வாடிக்கையாளர்களையேனும் பார்த்து விடவேண்டும். கையில் இருந்த பிரீஃப் கேஸ் நன்கு கனத்தது.

இந்த ஊரில் நாவிதன் பெட்டி போல் பெரும்பான்மையோர் கையில் ஒரு பெட்டி வைத்திருந்தனர். அது ஒரு கௌரவம் போல. லோகல் ரயில் வண்டியில், சிலர் எதற்கேனும் பெட்டியைத் திறக்கும் போது, ஓரக்கண்ணால் உந்திப் பார்க்கையில், சில பெட்டிகளில் ஒரு டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் டிஃபன் பாக்சும் இருக்கும். சில பெட்டி களில் செய்தித்தாளுக்குப் பதில் ரம்மி ஆடுவதற்கான இரண்டு சீட்டுக் கட்டுக்கள் இருக்கும். சில பெட்டிகளில் ரப்பர்ஸ்டாம்புகள், இங்க் பேட், லெட்டர்ஹெட், செல்லான் புத்தகம், பில்புத்தகம், செக் புத்தகம், பாஸ் புத்தகம் என்று நிறையக் கிடக்கும். தனியாளின் நடமாடும் கம்பனியின் தாவர சங்கம சொத்துக்கள் அவை. சில பெட்டிகளில் இன்னதெனத் தரம் பிரிக்க முடியாத அநேகக் காரியங்கள் இருக்கும். நாலங்குல கனமுள்ள ஒரு பெட்டியில் ஒரு ஜெலூஸில் மாத்திரை ஸ்ட்ரிப். ஒரு அலிகார் பூட்டின் சாவி, ஒரு கண்ணாடிக் கூடுமாத்திரம் இருந்ததைக் கண்டதுண்டு. ஒரு நாள் அலுவலகம் விட்டுத் திரும்பி வரும்போது பார்த்த எக்கோலாக் பெட்டியில் வட்டப்பாறை போன்ற ஒருசேனைக் கிழங்கு கவிழ்ந்து கிடந்தது.

நெரிசலான பஸ் பிராயணங்களில் இந்தப் பெட்டிகள் சொல்லி வைத்துக் கால் முட்டில் இடிக்கும். ரயிலில் இருந்து பன்னிரண்டு நொடி அவசரத்தில் வெளிச்சாடும்போது, பெட்டி உள்ளே கால்களுக்கிடையில் சிக்கிக்கொள்ள வெறும் கைப்பிடியோடு மட்டும் வெளியே விழுவர் சிலர்.

பெட்டியைக் கைமாற்றி, சாலையைக் கடக்க, பச்சைக் குறிக்காக நின்றான் சில நிமிடங்கள்.

வலது பக்கம் இறங்கும் சாலையோரத்தில், அந்த நகரின் மொத்த வியாபார பழச் சந்தை. தினமும் நாலைந்து லாரிகள் கொட்டுப் பாரமாய் சீசனுக்குத் தகுந்தாற்போல் வந்திறங்கும். அன்னாசிப்பழங்கள், ஆரஞ்சுப் பழங்கள், சாத்துக்குடிப் பழங்கள், பங்கன பள்ளி, ருமானி, ராஜாப்பூரி, கூடை கூடையாய் தோத்தாப்பூரி, பல்ஸாட் அல்லது பெட்டி பெட்டியாய் ரத்னகிரி அல்போன்சா மாம்பழங்கள், ப்ளம்ஸ், ஆப்பிள்,சீத்தாப்பழம், பப்பாளிப் பழங்கள், குலைகுலையாய் பச்சை வாழைப் பழங்கள், தர்பூஸ், கலிங்கர், மாதுளை, சிக்கு… சாலையோரம் உருண்டு கிடக்கும் அழுகல் பழங்களின் கலவை வாடை. அழுகாத பகுதியாய்ப் பார்த்துப் பார்த்துக் கரம்பும் சிறுவர்.

பழச்சந்தையின் சுவரையொட்டுப் போட்டது போல் சில நூறு களான குடிசைகள். குடிசைகள் என்றால் கிராமத்துக் குடிசைகள் போல், சுற்றி மண் சுவரும் ஒரு கதவு நிலையும் இரண்டு சன்னல்களும் மேலே தென்னையோலை, பனையோலை அல்லது புற்கட்டுக்களால் ஆன கூரை, சாணமிட்டு மெழுகிய பசுந்தரை, முன்னால் முற்றம், ஒரு வாழைக் குப்பம், இரண்டு கத்தரி, வெண்டை, ஒரு புடலை, பாகல் அல்லது அவரைப் பந்தல், ஒரு ஆடு,பசுமாடு, கலப்பை, நுகம், உழவுமாடுகள், நெல்குத்தும் கல்லுரல், தோசைக்கும் மாட்டுக்கு பருத்திக் கொட்டையும் அரைக்கும் ஆட்டுரல், அது பதிந்த திண்ணை, மாட்டுக்குத் தண்ணீர் காட்ட கல்தொட்டி உரக்குண்டு, சுவர் மூலையில் கூரையில் இருந்து தொங்கும் துடைக்கயிற்றுச் சுருள், உமிக்கரிப் பட்டை, கோழிக்கூடு… இந்தக் குடிசைகள் அந்த வகைத்தன அல்ல.

ஜூன் முதல் அக்டோபர் பாதி வரையே மழை மாதங்கள். எனவே மற்ற காலங்களில் காற்றுக்கும் வெயிலுக்கும் வழிப்போக்கர் பார்வைக்கு மான ஒரு மறைப்பு மட்டுமே. படுத்துக்கொண்டே நட்சத்திரம் பார்க் கலாம். சந்தைச் சுவரில் சாய்த்து இறங்கிய இரண்டு கோல்களுக்குத் தாங்க லாக நாட்டிய மற்று இரு கோல்கள், கூரை,சுற்றுச்சுவர், வாசல் எல்லாம் கோணித்துண்டுகள், பாலிதீன் தாள்கள் அல்லது பிரப்பம்பாய்கள்.தளம், ரோட்டில் கால் நடக்கப் பாவிய கடப்பைக் கற்கள் அல்லது தார்பாவலே தான்.

மூன்று துண்டுச் செங்கல்கள் அடுப்பு, கைகளினாலேயே தட்டித் தட்டிச் சுட்டெடுக்க சோள ரொட்டியோ, பாக்ரியோ, சப்பாத்தியோ காய்கறி வதக்க, மீன் வறுக்க எனப் பொதுவாக சற்றே குழிந்த அடைக்கல். சோறு வைக்க ஒன்றும் பருப்பு அல்லது உசல் வைக்க ஒன்றுமாய் பாத்தி ரங்கள், ஒருகரண்டி, இரண்டு சாப்பாட்டு ஏனங்கள், தண்ணீர் பிடிக்க ஒரு ஜெர்ரி கேன், இரண்டு டம்ளர்கள், குளிக்கத் தண்ணீர் எடுக்க ஒரு வாளி, ஒரு பிளாஸ்டிக் செம்பு, தூரமாய் ஆளரவம் குறைந்த இடம் பார்த்தோ, ரயில்வே லைனிலோவெளிக்கிருக்கப் போகும் போது தண்ணீர் கொண்டு போக என கைப்பிடிக் கயிறு கட்டிய பாமாயில் டப்பா…

எல்லாச் சுவைகளோடும் வாழ்க்கை அங்கும் துரிதகதியில்தான் இயங்கிக்கொண்டிருந்தது.

சிவப்பு மாறி மஞ்சள் விழுந்தது. சிவப்பு கண்டும், வேகமாய்க் கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் அல்லது அலட்சியத்தில் விரைந்த செம்மாருதி ஒன்று, மஞ்சள் கண்டதும் தாமதிக்காமல் புறப் பட்ட நான்கு பால் கேன்கள் தொங்கிய சைக்கிளில் ‘கிர்ரீச்’ என்ற பிரேக்கின் இறுதிக்கட்டத்தில் மோதியது. ஆட்சேதமில்லை.

எழுந்த சைக்கிளின் பால்கேன்களில் இரண்டின் மூடி திறந்து, பள்ளம் நோக்கிய வெள்ளமாய் பால் சுதந்திரமாய் ஓடியது. ஓடும் வாக் கில் சிறு ரோட்டுப் பள்ளங்களில் தேங்கியது.

சைக்கிளில் இருந்து சரிந்த உ.பி.க்கார பால் பையா எழுந்து மற்ற ரண்டு கேன்களையும் மீட்க முயலும்போது, மூடி திறந்த கேன்கள் முற்றிலும் வடிகாலில் இருந்தன.

கண்மூடி முழிக்கும் அவகாசத்தில், குடிசையில் இருந்து வேகமாய் ஒரு கிழவி பாய்ந்து வந்தாள். சற்றே நிறுத்தம் கொண்டிருந்த போக்கு வரத்து இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு, ஓட்டமும் தள்ளாட் டமுமாய் வந்த கிழவியின் இடுப்பில் ஒரு குழந்தை இருந்தது.

குழந்தையின் உருவம் ஒரு வயதுபோலத் தோற்றம் தந்தாலும் பருவம் மூன்று வயதுக்குக் குறையாது. கிழவி சூல்கொள்ளும் பருவம் தாண்டி முப்பது ஆண்டுகளாவது இருக்கவேண்டும். எனவே அவள் குழந்தையாக இருக்க நியாயமில்லை. மகன் அல்லது மகள் குழந்தையாக இருக்கும் வாய்ப்புக்கூட அருமைதான்.கொள்ளுப் பேரக்குழந்தையாக இருக்கலாம். அல்லது உறவின் நயப்பு ஏதுமற்ற அண்டை அயல்வீட்டுப் பிள்ளையாகக்கூட இருக்கலாம். ஒடி வந்த கிழவி, பால் தேங்கிக் கிடந்த சிறு பள்ளம் ஒன்றின் பக்கத்தில் குனிந்தாள்.

இடது கையால் இடுப்பில் இருந்த பிள்ளையை வளைத்துப் பிடித் துக் கொண்டு, வலதுகையை அகப்பை போலக் குவித்து, பள்ளத்தில் கலங்கித் தேங்கிக் கிடந்த பாலை கோரிக்கோரி குழந்தையின் வாயில் விடலானாள்.

இயக்கம் கொள்ள ஆரம்பித்த வாகனங்கள் கிழவியையும் குழந்தை யையும் பால் தேங்கிய பள்ளத்தையும் ஒரு போக்குவரத்துத் தீவுபோல் பாவித்துக்கொண்டு மேற்கொண்டு ஓடலாயின.

– அமுதசுரபி, 1987

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *