ஒத்தையடிப் பாதையிலே…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 10,033 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஜோசப்…டே ஜோசப்…”

“யார்றா ?”

“நான்தான்!”

“நான்தான்னா?”

“பூமணி!”

“அட! பூமணியா…”

“பூமணி! எப்படியிருக்கடா…?”

“இருக்கேன்.”

“லைனுக்குப் போகலையா பூமணி?”

“போவணும். உன்னைத்தான் தேடிட்டிருக்கேன்.”

“எதுக்கு?”

“ஒரு விசயம், ரொம்ப ரொம்ப முக்கியமானது!”

“சொல்லேன்.”

“நீ எங்கே இருக்கேனு தெரிய லீயே …!”

“இங்கதான். இங்க பாரேன். அட இங்க பார்றானா… எங்கயோ பாக்குறே! பூமணி இங்க… நேரா இங்க பாரேன்…”

“குரல்தான் வருது. விளையாடாத ஜோசப்! எங்க இருக்கேன்னு சொல்லிடு! என்னை அலையவுடாத! வெயில் வேற முதுகுலெ விழுந்து பிடுங்குது…”

பூமணி உள்ளுக்குள்ளே பேசிக் கொண்டான். கண்களை இடுக்கி காட்சிகளை இருட்டாக்கினான். எதிரில் ஒருவருமில்லை. வாய் துரு துருவென்றிருந்தது. மெல்ல – கண்களைப் பிரித்துப் பார்த்தான். தரை வெள்ளையாய் வெயில் விழுத்து கொண்டிருந்தது. அலையலையாய் ஒரு கொதிப்பு உடம்புக்குள் ஊடுருவிப் பொங்கிற்று! உடல் பரபரத்தது. இந்த ஏழு, எட்டு மாதமாய் காத்திருத்து. காத்திருத்து கண் பூத்துப்போயிற்று! ஏங்கி, ஏங்கி வெளியில் சொல்லாமலும் – சொல்ல ஆள் இல்லாமலும் கண்ணாலே ஒவ்வொன்றாய் செதுக்கி…செதுக்கி…அது – அதுவாய் சிதறுகிறவரைச் சேமித்து வைத்து…யப்பா எத்தனை சிரமம்? எந்த நிழலைப் பார்த்தாலும் அந்தப் பாலத்தைப் பார்த்தாலும் படபடப்பாகி விடுகிறது! ‘ஜோசப்…நீ பாட்டுக்குப் போய் விட்டாய், என்னால் தாள முடியவில்லை. ஒண்டியாகவே உட்கார்ந்து யோசனையிலும், தூக்கமில்லாமலும் எதையாவது துருவிக்கொண்டிருப்பது துக்கமாக இருக்கிறது! நீ தேர்ந்தெடுத்துக் கூப்பிட்டுப் போன பாதை. நாம் சேர்ந்து நடந்த தெரு. பாலத்தடி. படுக்கை. நாம் கல்லெறிந்த கள்ளிச் செடி புதர்! எல்லாமே உன் நினைப்பைத் தூண்டி விடுகிறது! எதன் மீதும் கண் பாவாமல், எதுவும் அலுங்கி விடாமல், அவ்வளவு ஜாக்கிரதையாக என்னால் நடக்க முடியவில்லை. ஏதாவது ஒன்று இடறி அலுங்கி விடுகிறது. வெளியில் போனால் இருப்பிடம் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம். திரும்பி வந்தால் ஏன் திரும்பி வந் தோம் என்ற தவிப்பு! என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை!

ஆறு வருடம் என்பது அவ்வளவு லேசில்லை. ஒவ்வொரு கணமும் மிக இழைவாய், ஒவ்வொரு அசைவும். ஒவ்வொரு துடிப்பும் முன் நகர்வாய் படிந்து கிடக்கிறது! கிடைத்ததைக் கொண்டு வந்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ‘இது என்ன? சொல்லு பார்ப்போம்…’ என்று உன் கண்கள் துள்ளும். நான் எதையாவது சொல்லுவேன். நீ சிரிப்பாய். விழுந்து விழுந்து சிரிப்பாய். மடை உடைத்துக்கொண்டு ஓடுகிறது மாதிரி அப்படி ஒரு சிரிப்பு! குதித்துக் குதித்து நீ நடக்கிற தடை! உன் உருண்டை முகம். கண்பட்டைக்குக் கீழே தானாய் துடிக்கும் துடிப்பு! உதட்டுக்கு மேலே பூத்திருக்கும் பூனை மயிர். முன் நெற்றியில் பாம் பாய் சுருண்டு கிடக்கிற, கேசம். நீ என் அருகில் இருந்த போது என் கண்ணில் விழாததெல்லாம் இப்போது விழுந்து மிதக்கிறது! ஜோசப் உனக்கு நினைவிருக்கா நீ என் காதைக் கிள்ளி விடுவாய், குபீரென்று ரத்தச்சிவப்பு எழும். அது கரைகிறது வரை பார்த்து மகிழ்வாய்! படுத்துக் கிடக்கும் போது – நடு முதுகில், கரெலென்ற கடிக்காத கட்டெறும்பை மண்ணொடு கிள்ளி என் முதுகில் ஊற விட்டு எனக்குப் புருபுகுப்புக் காட்டுவாய். எங்காவது… எதற்காவது நம்மை யார் துரத்தினாலும். தப்பித்து ஓடினாலும், நடு ரோட்டைக்கடந்தாலும் என் கை உன் பிடியில்தான், ஒரு நாளாவது நீ உதறிவிட்டுப் போயிருப்பாயா? ம்ஹும்! கிடையாது. ஜோசப் நான் உன்னை விழுங்கி விட்டாற் போல் கண்ணுக்குள், காதுக்குள். தெஞ்சுக்குள் உன் நினைவுதான்.

பூமணியின் வாய் ஓயவில்லை. அவனையும் அவன் நினைப்பையும் மீறி துருதுருத்தது. இத்தனை நாளாய் அணை போட்டு அடைத்து வைத்திருந்தது. உடைத்துக்கொண்டு ஒடுகிறது. நினைப்பிலே நடந்தான். கால் பின்னிக் கொண்டது. நடக்க முடிய வில்லை. பட்டை உறிக்கிற வெயில், பூமணி சுமையுடன் நடந்தான். கோணிப்பையைப் பிடித்துக் கொண்டு நடக்க முடியவில்லை. உள்ளங்கைப் பிசுபிசுப்பும் உடம்பு அழுக்கும், வெயில் ஏற ஏற எரிச்சலை உண்டு பண்ணிற்று! மசூதி தெருவிற்குள் நுழைந்து பீச் ரோட்டை நோக்கிப் போனான். தூரத்தில் கடல் புரளுகின்ற ஓசை! இனி முடியாது! இனி முடியாது! இன்று நல்ல சரக்கு எதுவும் அகப்படவில்லை. வெறும் கூழைக்காகிதமும் மட்டிக் காகிதமும் தான், நடந்து கடற்கரைக்குப்போய் மரநிழலில் படுத்துக்கொண்டான்.

***

மரத்தடியில் நிழல் சிதறிக்கிடந்தது. கோணியைக் குவித்து தலைக்கு வைத்துக்கொண்டு உடம்பைத் தளர்த்தினான். கடலின் உறுமல் காற்று வாக்கில் வந்தது. கடற்கரை மணல் நீளமாய் உலரப் போட்டது மாதிரிக் கிடந்தது. ஒரு பிடியை அள்ளி வீசினான். எதைத் தொட்டாலும் பாகற்காயாய் கசந்து பிசுபிசுக்கிறது. யாரோ எதையோ கலைத்து விட் இப் போனது மாதிரி இருந்தது. மணற் பொறியாய் கண்ணுக்குள் ஏதோ உதிர்கிறது! பூமணி வெகு நேரம் வரையிலும் அப்படியே படுத்துக்கிடந்தான். தூரத்தில் இரண்டு, மூன்று வாண்டுப் பயல்கள் குதிபோட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் ஆங்காரமாய் ஓடிவந்தாள். ஒடிசலான ஒருவனின் முதுகில் மொத்தி விட்டு இடதுகையைப் பிடித்து பரபரவென்று இழுத்துக் கொண்டு போனாள் – அவள் அவன் அம்மாவாக இருக்கும்.

பூமணி அம்மாவைப் பற்றி யோசித்தான். உருப்படியாக ஒன்று கூட நினைவில் விழவில்லை. முகம் கூட கரைந்து விட்டது. அப்பாவிற்கு முகமே கிடையாது. இதுதான் என்று எந்தத்தெளிவும் இல்லை. அது குறித்துக்கூட அம்மாவிடம் கேட்டதாக ஞாபகமில்லை. அம்மாவிடம் அடிக்கடி கேட்டதெல்லாம் ‘அம்மா பசிக்குது?’ அம்மாவும் எங்கெங்கோ ஓடி எதை எதையோ இழந்து பார்த்தாள். மூன்று வேளை கஞ்சிக்கு முடியவில்லை. பசி தாங்காது புழுதியில் விழுந்து புரண்ட நினைவு இன்னும் இருக்கிறது. உடல் மெலிந்து, சொறி பிடித்து உடம்பெல்லாம் புண் வந்து எங்கே செத்துப் போய் விடுவேனோ என்ற விளிம்பில்தான் அம்மா ரயில் ஏற்றிவிட்டாள். எங்கே எதுக்கு என்று தெரியாது. அப்போது ஆறோ ஏழோ வயசு! எப்படியாவது பிச்சை எடுத்தாவது உயிரைப் பிடிச்சுக்கோ என்று பெத்த கடனை ரயிலடியில் தீர்த்துக் கொண்டாள்.

மெட்ராஸ் எக்மோர் ஸ்டேஷனில் வந்து இறங்கிய போது பகலா, இரவா என்று கூட நினைவில்லை. உலகமே இருண்டு கிடந்தது. பசியில் சுருண்டு, பயத்தில் நாக்கு இழுத்துக் கொண்டது. பேச முடியவில்லை. யாரோ போகிற போக்கில் ஒரு பிஸ்கட் துண்டை வீசி எறிந்து விட்டுப் போனார்கள். யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. இப்படிப் போ என்று கோடு போட்டுக் காட்டவில்லை பசித்தவுடனே எதிரே போகிறவர்களைப் பார்த்து கை தானாக உயர்ந்தது. இதெற்கெல்லாம் கூட சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? ஒன்றிரண்டு பைசாக்கள் உள்ளங் கைக்குழியில் விழுந்தது. உள்ளங்கை கலகலப்பாயிற்று! இப்படியே எத்தனை நாட்கள் நகர்ந்தது என்று கூட ஞாபகமில்லை!

ஒரு நாள் –

பூமணி சிமிண்ட் கிராதியில் தலையைச் சாய்த்துக் கிடந்தான். பசி மயக்கம். பாதிக்கண் சொறுகி, மித மிதப்பாய் கிடந்தான். அப்போதுதான் ஜோசப் கண்ணில் விழுந்தான். கரிபிடித்துக் கசங்கிப் போயிருந்தான். கையில் ஒரு கோணிப் பை. எதையோ தேடி அங்கு மிங்குமாய் அலைபட்டுக் கொண்டிருந்தான். அவனைப்பார்த்த மாத்திரத்தில் ஏதோ ஒன்று உள்ளே விழுந்தது! அந்த இடத்தில் எத்தனையோ பேர் போகிறார்கள், வருகிறார்கள். பார்த்துக் கொண்டே நடக்கிறார்கள். தன்னை யார் பார்க்கிறார்கள் என்ற ப்ரக்ஞை கூட இல்லை. ஆனால் ஜோசப் அப்படி சாதாரணமாகப் படவில்லை. அவனைப் பார்த்த மாத்திரத்தில் நிறைந்தது! பயமும் நடுக்கமும் குறைந்து தெஞ்சு கனிந்திற்று! அவனும் இவனைப்பார்த்தான். சிறிது நேரம் அப்படியும் இப்படியும் சுற்றித் திரிந்துவிட்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். காலை அகட்டி கோணிக்குள் முகத்தை நுழைத்து எதையோ ஆராய்ந்தான். எவ்வளவு நேரம் அப்படியே நீண்டது என்று தெரியாது. எப்படியோ அது நேர்ந்து விட்டது. ஜோசப் பூமணிக்கு சினேகிதமாகி விட்டான்.

ஜோசப் பூமணியை நுங்கம்பாக்கத்திற்கு அழைத்துச் சென்றான். பூமணிக்கு அகலமான ரோட்டையும் ராட்ச அலறலுடன் நகர்கின்ற நகர நெரிசலையும் பார்க்கப் பார்க்க பயமும், திகிலும் கூடிற்று! பொங்கிப்பொங்கி வழிகிற கூட்டத்திற்குள் நுழையப் பயம். நடக்க முடியவில்லை. கால் பின்னிற்று! ஜோசப், பயமின்றிக் கூட்டத்தைப் பிளந்த கொண்டு நடந்தான். போஸ்டர்களையும் சுவர் விளம்பரங்களையும் பார்க்கப் பார்க்கப்பிரமிப்புதான் அந்தரங்கத்தில் நிற்கிற கட்-அவுட்கள் கண்ணை தெறித்தது! ஜோசப் இடமோ வலமோ திரும்பாது வேகமாக நடந்தான். நடக்க நடக்க உடல் பிசுபிசுப்புக் கூடிற்று! ஏதோ ஒர் தெரு முனையில் ஒரு தள்ளுவண்டி கடை. அலுமினியத் தட்டில் பொங்கப் பொங்கச் சாப்பாடு. நடுவில் மீன் குழம்பு, பூமணியின் பசி சாப்பாட்டில் தெரிந்தது. ஜோசப்தான் எது எதிலிருந்தோ பிதுக்கிப் பிதுக்கி சில்லறையைச் சேகரித்துக் கொடுத்தான். சாப்பிட்டதும் தெம்பா இருந்தது. ஜோசப் பூமணிவய சேர்துப்பட்டுப் பாலத்திற்குக் கூப்பிட்டுப் போனான். பாலத்தை ஓட்டி ஒரு பாதை. இழே இறங்க, இழிந்த சாக்கடையும் அழுக்கு உடலுமாய் ஒரு உலகம். மஹா ஆனந்தமாய் வானம் பார்த்துக் குதியாட்டம் போட்டு கொண்டிருந்தது!

ஆரம்பத்தில் பூமணிக்கு ஒன்று புரியவில்லை. தெளிவில்லாது இருந்தது. ‘பளீர்’ என்று வெள்ளையா எதையுமே பார்க்க முடியவில்லை. அழுக்கு நீர் விட்டுக் கழுவினாலும் கரையாத அழுக்கு. எப்படியோ எங்கிருந்தோ சேர்ந்து விட்ட அழுக்கு! உருப்படியாய் ஒன்றுமே இல்லையே என்ற கவலை மறந்து, வெயில், காற்று, பனி என்று சகலத்திலும் கரைந்தாலும் கண்ணில் சந்தோஷம் காட்டுகிற கூட்டம்! முகச்சுளிப்பு இல்லாது சுறுசுறுப்புக் காட்டுகிற கூட்டம். பூமணிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. நாள்பட நாள் படத்தான் ஒவ்வொன்றாய்த் தெளிவாயிற்று! ஒவ்வொரு கதவாய்த் திறக்க மூல உருவம் தெரிந்தது! எல்லோரும் என்னைப் போன்றவர்கள் தான். எவருடைய சந்தோஷத்திற்கோ, யாருடைய சௌகர்யத்திற்கோ, எந்தப் பசிக்கோ இரையாகிப் போனவர்கள். எங்கிருந்தோ என்னைப் போல் எல்லாவற்றையும் முறித்துப் போட்டுவிட்டு ஓடிவந்தவர்கள்! எங்கிருந்தால் என்ன? எவருடன் இருந்தால் என்ன? பூமணிக்கு மனசு விரிந்தது!

***

ஜோசப் பெரியதாக ஒரு சாக்கு வாங்கி வந்தான். பாலத்தடியில் போட்டு உதறினான். தூசு எழும்பி உயர்ந்தது! நான்கு பேர் சேர்ந்து அதைப் பிடித்துக் கொண்டார்கள். மூலைக்கொருவராய் பிடித்துக் கொள்ள, ஜோசப் பிளேடால் வெட்டினான். நான்காய் மடித்து சின்னதாய் ஒரு கோணி தைத்து பூமணியிடம் கொடுத்தான். அதை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதையும் பாடமாய்ச் சொன்னான். அகண்ட வாய்க்குள் கை நுழைத்து, சுருட்டி கட்டை விரலில் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இடது தோளில் கோணியும் வலது கை காகிதமுமாய் இருக்க வேண்டும். குப்பையைக் கிளறிய மாத்திரத்தில் எது உபயோகப்படும். எது உபயோகப்படாது என்று புத்தியை உபயோகிக்க வேண்டும் என்று ஒவ்வொன்றாய் விளக்கினார்கள். பூமணிக்கு ஒரு மாதத்தில் சகலமும் புரிந்து போயிற்று! வியாபாரிகளிடம் பேசும் வித்தை! ரவுடிகளிடமிருந்து தப்பிக்கும் தந்திரம்! என்று சகலமும் தெளிவாயிற்று!

இரவு – பாலத்தடி பகலாய் துள்ளிக் கொண்டிருக்கும். பாலத்தடியிலும் சுற்றுப்புறக் குடிசையோரங்களிலும் கும்பல் கூடும். எங்கெங்கோ சுற்றி…எதை எதையோ தேடி விழிபிதுங்கத் திரும்புவார்கள். பாலத்திற்கு மேலே விரைந்து மறைத்து கொண்டிருக்கும் வாகன வெளிச்சமும், இரைச்சலும் அடங்குகிற தேரம்! வெளியூர் ரயிலின் கூச்சல் ஓய்கிற நேரம். பூமி அடங்கி – அதிராமல் இருக்கும். கூட்டம் கூட ஒரே பாட்டும் ரகளையுமாய் அமர்க்களப்படும். கேட்டது, கிடைத்தது என்று தடு இரவு ஒரு மணியோ, இரண்டு மணியோ பேச்சு நீளும். பேச்சு சுவாரஸ்யத்திலே ஒவ்வொருவராய் துவண்டு தூங்கிப் போவார்கள். ஒருவரோடு ஒருவர் ஒட்டி இறுக்கிப் பிடித்துக் கொண்டே கண்மூடி கரைந்து விடுவார்கள். இது பழக்கமாயிற்று. உறங்கும் போதுதான் உள் உணர்வுகள் விழித் துக் கொள்கிறது. பேசும் போதும், சேர்ந்து நடக்கும் போதும் ஒருவரை ஒருவர் தொட வேண்டும். தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும். உள்ளே துளிர்க்கிறதை உடம்பைத் தொட்டுப் பரிமாறிக் கொள்வது, நெஞ்சில் கைபோட்டு காலோடு கால் பின்னிப் படுத்துக் கிடப்பது தான் மனசுக்குப் பிடிக்கிறது! ஒற் றைப் பிரியாய் ஒருவரையும் பார்க்க முடியாது. அன்றும் அப்படித்தான் பூமணியோடு ஜோசப் படுத்துக் கிடந்தான். ‘டப் டப்’ என்று லட்டி காலில் அடிபடுகிற சப்தம்! விழித்துப் பார்க்க போலீஸ்.

“எந்திரிங்கடா” – கூர்மையான ‘டார்ச் லைட்டின் ஒலி முகத்தில் விழுந்து குத்திற்று!

“ம்.”

“எந்திரிங்கடா.”

“என்னா சார்?”

“ஸ்டேஷனுக்கு வா…”

இரண்டு கான்ஸ்டபிள்கள் நின்றிருந்தார்கள். ஜோசப் கண்ணை சுருக்கிப் பார்த்தான். கான்ஸ்டபிள் முகம் தெரியவில்லை. ‘முடியலெ சார். வுட்டுடுங்க சார்…” என்றான். குரல் கமறிற்று !

“வாடான்னா?”

“கேஸ் கொடுக்கணுமா?”

“இல்லை. திரும்பிடலாம். இவன் யார்றா?”

“பூமணி சார். புதுசா வந்திருக்கான்”.

“அவனையும் கூப்பிட்டு வா.”

ஜோசப் எழுந்தான். முடியவில்லை . உடம்பெல்லாம் வலி, பாலத்து மேட்டில் ஏறி வெளிச்சத்துக்கு வந்தான். ரோடு சுத்தமாய் வெறிச்சென்றிருந்தது. இருள் சுருண்டு மெர்க்கரி வெளிச்சம். இரண்டு கான்ஸ்டபின்களும் முதுகுக்குப் பின்னால் சைக்கிளை உருட்டிக் கொண்டு சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டு வந்தார்கள், பூமணிக்குப் பயம். ஜோசப்பின் கையைப் பிடித்துக் கொண்டு ‘எதுக்குடா…எதுக்குடா…’ என்றான். ஜோசப் ‘பயப்படாதே! ஒன்றுமில்லை’ என்று மட்டும் சொன்னாள். ஸ்டேஷனில் ஒருவருமில்லை. ஸ்டேஷன் கடிகாரத்தில் மணி பதினொன்று!

“உன் பேரென்ன?”

“ஜோசப்.”

“இவன்…..?”

“பூமணி சார். புதுசு.”

“மாடு பிடிப்பானா?”

“மாட்டான்.”

“அப்ப நீ மட்டும் போ.”

கான்ஸ்டபிள் முறுக்கிய தாம்புக் கயிற்றை எடுத்துத் தூக்கிப் போட்டார். ஜோசப் அதை எடுத்துக் கொண்டான். கயிறு அழுக்கேறி யிருந்தது. வராண்டா தாண்டி வாசலுக்கு வந்தான். மெல்லத் திரும்பி பூமணியைப் பார்த்தான். அவன் பாவமாய் நின்றிருந்தான். கான்ஸ்டபிள் ஸ்டேஷன் பின்புறத்தைக் காட்டி ‘தம்பி பம்புலெ தண்ணி அடிப்பியா? எங்க ஜோரா அடிச்சு அந்த டிரம்மை நிரப்பு பார்க்கலாம்! அப்படியே லெட்டின், பாத்ரூம்லெ தண்ணி விட்டுக் கழுவிடணும்!” என்றார். பூமணி தலையை அசைத்ததும் இரண்டு கான்ஸ்டபிளும் ‘பான் பராக்’ போட வெளியே வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ஜோசப் வீதியில் இறங்கி வேகமாக நடந்தான்.

***

மாடு பிடிப்பது மாதிரியான கஷ்டமான காரியம் வேறொன்றுமில்லை. மானாவாரியாக போஸ்டர் களையும், வாழைப்பழத் தோலையும் மேய்ந்து கொண்டிருக்கிற மாடுகளை மடக்கிப் பிடிக்க வேண்டும். தெருத் தெருவாய் துழாவித் தும்பைப் பிடித்துவிட வேண்டும்! அவ்வளவு சுலபமாய் அது கைகூடுகிற காரியமல்ல.

பார்க்கச் சாதுவாய் கிடைப்பதைத் தின்று – கொடுப்பதை மென்று – அடிக்கிற வாகன ஹாரனுக்குக்கூட அசைந்து கொடுக்காத சாதுவாய் நிற்கும்! ஆனால் அவ்வளவு சுலபமாய் அகப்பட்டு விடாது. சண்டி பண்ணும். அலைக் கழித்து ஆளை உருக்கிப் போடும். ரோட்டில் போகிறவர்கள் – நகர ஜனங்கள், நாலு வார்த்தை நாகரீகமாய் எழுதிப் போட்டு விடுகிறார்கள். ‘நடு ரோட்டில் மாடுகளின் தொல்லை’ – பத்திரிகைகளுக்கும் சர்க்காருக்கும் எழுதிப் போட்டு விடுகிறார்கள். போலீசுக்கு உத்தரவு வருகிறது. போலீஸ் உடனே இங்கு ஓடி வருகிறது. தூக்கிக் கொண்டிருக்கிறவனை உலுக்கி உட்காரவைத்து தாம்புக் கயிற்றை நீட்டுகிறது! எந்தச் சுருக்கில் எந்த உயிரோ! மகனே உன் சமத்து!

ஜோசப் கால்போன போக்கில் போனான். கண்படுகிற தூரம் வரை எதுவும் நாலு காலில் தெரியவில்லை . இளமஞ்சள் நிறத்தில் காய்ச்சிய பசும் பாலாய் மெர்க்குரி வெளிச்சம். ஒன்றிரண்டு ஆட்டோக்களின் உறுமலைத் தவிர அமைதி நீண்டு கிடக் தது. ஒவ்வொரு இடமாய் தேடினான். எதுவும் கண்ணில் விழவில்லை. தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கும் ஒன்றையும் காணோம். ஒவ்வொரு தெருவாய் நுழைந்து களைத்தான். இடமால் தெரு தாண்டி மெயின் ரோட்டைத் தொடுகிற வளைவு. போகும் வழியில் முன் சந்தில் இரண்டு பசுக்கள். இப்படியும் அப்படியுமாய் குறுக்கே படுத்துக் கிடந்தன. அப்பால் ஒரு நாய் – தெரு நாய். எதையோ வெறித்துக் கொண்டிருந்தது. மெல்ல அருகில் போனான். பசுக்கள் நகரவில்லை. ‘த்தா’ அதட்டல் போட்டான். நாய் விழித்துக் கொண்டது. யாரோ தூரத்தில் எட்டிப்பார்த்து விட்டுப் போனார்கள். ஒரு கல்லை எடுத்து வீசி அடித்தான். இடது பக்கம் இருந்த பசு சுவரோரமாய் உடம்பைத் தேய்த்துக் கொண்டது. அடுத்த பசு தலையை அசைத்தது. கல் நடுவில் தாவி நாயின் முன் நின்றது. ‘ம்’ என்று நாய் முனங்கிற்று – காதில் கூட விழவில்லை.

ஜோசப் தாம்புக் கயிற்றை வீசி பசுவின் கொம்பில் சிக்க வைத்தான். பசு வாலைச் சுருட்டி தரையில் அடித்து காலை உதறிற்று! திடீரென்று நாய் ‘வள்’வென்று இவனை நோக்கிப் பாய்ந்தது! பயத்தில் கயிறு தப்பிற்று! ஜோசப்பின் கால் துவண்டது. எதையாவது பிடித்துக் கொள்ள வேண்டும் போல உடல் படபடத்தது. சுவரோடு ஒண்டிக் கொண்டான். நாய் விலகிப் போயிற்று! உடல் இன்னமும் நடுங்குகிறது. பார்த்தால் வெறிநாய் போல தோன்றியது. இனி அதைக் கடந்து போகப் பயம். மாடு பிடிக்காமலும் போக முடியாது. கான்ஸ்டபிள் பாய்ந்து விடுவார். திரும்பினால் நாய் வெறியோடு பார்க்கிறது. யார் யாருக்குத் தான் பயப்படுவது! உடம்பில் சூடு கூடிற்று! சுவரோடு முதுகைத்தேய்த் துக் கொண்டே அந்தப் பக்கமாகக் கடந்தான். ‘த்தா’ என்று அதட்டல் போட்டான். இரண்டு பசுக்களும் சுவாரஸ்யமாக எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தன.

மெல்ல நெருங்கி தாம்புக் கயிற் றில் ஒரு அடி போட்டான். தலையைக் குலுக்கிற்று. பின்புறம் வாலைப் பிடித்து முறுக்கினான். தடாலென்று எழுந்து கொண்டது. எழுந்ததும் காலை அகட்டி உடலை முறுக்கிக் ‘கோமியம்’ போனது. பளாரென்று கயிற்றை வீசியடித்து கழுத்தில் சுருக் குப் போட்டு இழுத்தான். பசு மிரண் டது. ‘ம்மா…’ ‘ம்மா…’ என்று கத்திற்று! ‘த்தா’ என்று கயிற்றைப் பிடித்து இழுக்க மற்றொரு பசு மிரண்டு ஓடிற்று! போதும். அகப்பட்டது வரை லாபம். ஜோசப் ஒரு குச்சியை எடுத்துப் பின்புறம் குத்த, பசுவின் துள்ளல் கூடிற்று! மெயின் ரோட்டிற்கு ஓட்டி வந்தான். காலை அகட்டி சாணி போட நின்றது – அதன் பின் நகரவே இல்லை. ‘த்தா … த்தா …… என்று கத்தியும் தகரவில்லை . முஷ்டியை மடக்கி ஓங்கி ஒரு குத்துவிட்டான். ‘முஸ்’ என்று முகத்தைத் திருப்பி சீறிற்று! அந்த திடுக்கிடல் பிடி தழுவ பசு ஒரே பாய்ச்சலில் தாவிற்று! கயிற்றைப் பிடிக்கத் தாவினான் ஜோசப். பசு மிரண்டது! ஒரே உதறலில் ஆளை வீழ்த்திற்று! ‘யம்மா’ என்ற அலறலுடன் கீழே சாய்ந்தான். அடிவயிற்றுக்குக் கீழே மாடு மிதித்து விட்டது!

***

பூமணி வேலையை முடித்து விட்டான். ஒரு ட்ரம் நிறைய தண்ணீர் அடித்து நிரப்புவதற்குள் நெஞ்சுக்கூடு கிழிந்து விடுவது போல வலி. லெட்ரின், பாத்ரூம் என்று சகலத்தையும் தண்ணீர் அலம்பி நிமிற நடு இரவு தாண்டிற்று! இன்னும் ஜோசப்பைக் காணோம்! கான்ஸ் டபிள்கள் இருவரும் டேபிளிலேயே தலை கவிழ்ந்து கண் அசந்து விட்டார்கள். பூமணி வாசலுக்கு இடது பக்கம் படிக்கட்டில் சப்பணம் கட்டி உட்கார்ந்திருந்தான். இருள் பிரிந்து பகலின் நிறம் கூடுகின்ற நேரம். ‘சரக் ‘கென்று ஒரு கை ரிக்ஷா வந்து நின்றது. ஜோசப்பை தூக்கி வந்தார்கள். பகீரென்றது! ஆட்டுக் குட்டியைத் தூக்குவது போல தலையும் காலு மாய் பிடித்துத் தூக்கி வந்தார்கள். பூமணி பதறி எழுந்தான்.

“சார்… சார்…”

“யார்? என்னய்யா …”

“பையனை மாடு தள்ளி மிதிச்சுடுச்சு!”

கான்ஸ்டபிள் வேகமாக வெளியே வந்தார்!

“ச்சு…ச்சு”

“அப்படியே மல்லாக்கா விழுந்தான் சார். ‘நச்’சுனு மிதிச்சுடுச்சு. நல்ல அடி. பாவம் உயிர்த் தளத்துலெ மிதிச்சுடுச்சு…”

“நல்லது பண்ணுனீங்கப்பா.”

“நம்ம ஏரியா ரிக்ஷாதான் சார்.”

“அப்படியா நல்லது!”

“வாரோம் சார். யார் சார் இவன்?”

“விசாரிக்கணும்”.

“பாவம் சார்! உயிர்தளத்துலெ மிதிச்சுடுச்சு! உடனே டாக்டர்கிட்ட கொண்டு போங்க…” அவர்கள் ரிக்ஷாவைத் தள்ளிக் கொண்டு போய் விட்டார்கள்.

‘கயிறு வெச்சிருந்தானேப்பா…’

“வுடுய்யா! அது போகட்டும். எஸ்.ஐ. வீட்டுக்குப் போயி தாக்கல் சொல்லிட்டு வா. என்ன சொல்றார்னு பார்ப்போம்” ஒரு கான்ஸ்டபிள் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

‘டீ….காபி எதுனா குடிக்கிறீயாடா…”

ஜோசப்பிற்கு பேச முடியவில்லை. அவனுக்குப் பக்கத்தில் பூமணி உட்கார்ந்திருந்தான். ஜோசப்பையே பார்த்துக் கொண்டிருந்தான். கண் பனிக்கப் பனிக்க பரிதவிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். கான்ள்டபிள் சற்று நகர்ந்ததும் ஜோசப்பின் சட்டைப் பட்டனைப் பிரித்து நெஞ்சில் கைவைத்துத் தடவிக் கொடுத்தான். “என்ன ஆச்சு ஜோசப்” என்று மெல்ல ரகசியக்குரலின் கேட்டான். மனசிலிருந்து வருகிற குரல். ஜோசப் கண்ணைத் திறக்கவில்லை. தலை லேசாய் தொங்க விட்டிருந்தது. பிறகு தலை ஆடியது. கண்ணைத் திறந்து விழியை உயர்த்திப் பார்த்தான். ‘பூமணி!’ மெல்ல உடலை நகட்டி பூமணியின் கையைப் பிடித்துக் கொண்டான் ‘வலிக்குது பூமணி’ என்றான்.

“மாடு முட்டிடுச்சா?”

“மிதிச்சுடுச்சு.”

“எங்கே?” அவன் கண்கள் பளபளத்தன! ஜோசப் தயங்கினான். பார்வை மட்டும் மேலும் கீழும் அலைந்தது. பூமணி மீண்டும் “எங்கே மிதிச்சது?” என்றான் ரகசியக் குரலில்.

“முத்திரம் பேயிரதுலெ” – கண்ணை மூடிக்கொண்டான். பூமணிக்கு வெல வெலத்துப் போனது. ஜோசப் முகத்தைப் பார்க்க முடியவில்லை. சற்று நேரத்தில் எஸ்.ஐ. வந்துவிட்டார். ஜோசப்பைத் தொட்டுப் பார்த்தார்.

“என்னடா ஆச்சு?” என்றார். அவனால் சொல்ல முடியவில்லை. கண்ணில் நீர் திரண்டு முட்டி தின்றது.

“எந்தூர்றா ?”

“இங்கதான் சார்!”

“சொந்த ஊரைக் கேட்டேன்.”

“தெரியாது சார். சின்ன வயசுலே வந்துட்டேன்!”

“அம்மா…அப்பா…சொந்தக் காரங்க?”

“கிடையாது சார்.”

“இவன்?”

“பூமணி. என் கூட இருக்கான்.”

“என்ன செய்யுறான்?”

“இவனும் காகிதம் பொறுக்குறது தான் சார்!”

“உன் பேர் என்ன சொன்ன?”

“ஜோசப்.”

“கிறிஷ்டியனா!”

ஜோசப் பதில் சொல்லவில்லை. அவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை. ‘வலிக்குதே… வலிக் குதே…’ என்று கையைக் குவித்து ‘அந்த’ இடத்தில் வைத்துக் கொண்டு அலறினான். அவன் முகம் வெளிறிற்று! கத்தரித்துப் போட்டது மாதிரி துடியாய்த் துடித்தான். கான்ஸ்டபிள் இருவரும் கலவரமடைந்தார்கள். ‘எதுனா பிராப்ளம்’ வருமா சார்? என்று எஸ்.ஐ.யின் முகத்தைப் பார்த்தார்கள்.

“பிரச்சினை இல்லை. வெளியிலெ எங்கனா டாக்டர் கிட்ட காட்டி வைத்தியம் பண்ணிட்டு செங்கல்பட்டு கவர்மெண்ட் சில்ரன்ஸ் ஹோம்லெ கொண்டுபோய் விட்டுடலாம். பிற்பாடு அவங்க பாடு…”

“நமக்கு ஒண்ணுமில்லையே….?”

“நமக்கென்ன?”

“நல்ல அடி! அதுவும் உயிர் தளத்துலெ…”

“ஹோம்லெ கொண்டு போய் விட்டிடலாம்.”

ஜோசப்பை ஜீப்பில் ஏற்றினார்கள். பூமணியிடம் ‘நீ உன் இடத்திற்குப் போயிடு’ என்றார்கள். நானும் ஜோசப்புடன் செல்கிறேன் என்றான். போலீஸ் விடவில்லை. பின் சீட்டில் ஜோசப் படுத்துக் கிடந்தான். பூமணி அவன் தலையைக் கோதி விட்டான். ஜோசப் அந்தக் கையைப் பிடித்துத் தடவினான். பூமணிக்கு, “ஜோசப்..ஜோசப்” என்று உரக்கக் கூவ வேண்டும் போல வந்தது. குரல் எழவில்லை. அவன் முகத்தையே உற்றுப் பார்த்தான். அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டே நின்றான். அவனை, அவன் துவண்ட தலையை, சட்டைப் பட்டன் பிரிந்த நெஞ்சை, விரலை, ஒழுகுகிற கண்ணை அப்படியே பார்த்துக் கொண்டே நின்றான். மெதுவாக சந்தடியின்றி ஜீப் ஊர்ந்து ரோட்டில் நழுவி வேகமாகக் கரைந்து போனது!

“தம்பி!”

பூமணி விழித்தான்.

“வா டீ குடிக்கலாம். டீ குடிச்சுட்டு நீ உன் இடத்திற்குப் போய் தூங்கு! காலையிலெ பேப்பர் பொறுக்கப் போவனுமில்லெ…”

“எனக்கு வேணாம்.”

“சும்மா வா, குடிக்கலாம்.”

கான்ஸ்டபிள் பூமணியின் கையைப் பிடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு டீக்கடைக்குக் கூப்பிட்டுப் போனார். இரண்டு டீ ஆடர் பண்ணினார். ஒன்றை பூமணியிடம் கொடுத்து விட்டு மற்றொன்றை தான் குடித்தார். எங்கோ பார்த்துக் கொண்டே ‘டீ’யைச் சுவைத்தார். பூமணிக்கு மனசு பரபரத்தது. நிற்கக் கூட முடியவில்லை. டீயைக் கீழே கொட்டி விட்டு, கிளாசைக் கீழே வைத்து விட்டு விலகி வேகமாக நடக்கத் தொடங்கினான்.

– செப்டம்பர் 1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *