(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஆணுறையைத் தவிர அனைத்தையும் விமானப் பயணத்தின் போது விற்கும் விமான சேவை இது, மலிவு விலை விமான சேவை எனக்கு அறவேப் பிடிக்காது எனினும், ரோமில் இருந்து ஸ்லோவாக்கிய தலைநகரத்திற்குப் போவதற்கு இதைவிட்டால் வேறுவழி கிடையாது என்பதால் பிராட்டிஸ்லாவாவில் ஒரு கருத்தரங்கை முடித்துவிட்டு ரோமிற்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றேன்.
எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த, பெண் மென்சோகத்துடன் ஒரு கையில் தனது இரண்டு அல்லது மூன்று வயது குழந்தையையும் பிடித்துக் கொண்டு செக்-இன் உடைமைகளின் எடை அதிகம் இருக்கின்றது என, சிலவற்றை எடுத்து, கைப்பையில் திணித்துக் கொண்டிருந்தாள். அம்மு கொஞ்சம் நிறமாக இருந்து, தங்க நிறக் கூந்தல் இருந்தால் எப்படி இருந்திருப்பாளோ அதேப்போல இருந்தாள். பிரதிகளில்தான் தருணங்கள் தன்னை நீர்த்துக் கொள்கின்றன. அம்முவின் உருவத்தை உணர்வை சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் தேடிக்கொண்டிருக்கின்றேன். நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்திருப்பாளோ என்னவோ, குழந்தையை இழுத்துக்கொண்டு, பாதுகாப்பு சோதனை வலையத்தை நோக்கி வேகமாக நடந்துப் போனாள்.
நான் வைத்திருந்தது வெறும் கைப்பைதான், பொதுவாக 10 கிலோ தான் அனுமதி என்றால் நான் எடுத்துச் செல்வது 5 கிலோவிற்கு மிகாது. எனக்கான நடைமுறைகளை முடித்து, விமானத்திற்காகக் காத்திருக்கும் தளத்திற்கு சென்றபொழுது, அங்கும் இங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு முதுகில் ஓர் அடியைப்போட்டு உட்கார வைத்துக்கொண்டிருந்தாள் அந்த ஐரோப்பிய அம்மு. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளை அடிக்க மாட்டார்கள் என்றாலும், முன்னாள் சோவியத் தோழமை நாடுகளில், ஒழுக்கம் தண்டனைகளின் வழியாகவும் போதிக்கப்பட்டிருந்ததால், இந்தத் தலைமுறையிலும் சிலப் பல இடங்களில் வெளிப்படும். ஏன் மேற்கத்திய இத்தாலியில் கூட, ஒரு முறை அடம்பிடித்த குழந்தையை அம்மா இரண்டு சாத்து சாத்த, பாட்டியிடம் ஓடிப்போன குழந்தைக்கு, பாட்டியிடமும் இரண்டு அடி கிடைத்தது.
சிறுகதைகளைத் தேட ஆரம்பித்தபின்னர் காத்திருப்பின்பொழுது புத்தகம் படிக்கும் பழக்கத்தையும், இளையராஜாவைக் கேட்கும் பழக்கத்தையும் விட்டுவிட்டதால் மனிதர்களை கவனிக்க ஆரம்பித்தேன், கண்டிப்பாக ஒரு சிறுகதையாவது சிக்கும். ஐரோப்பிய அம்முவின் குழந்தை, என்னைப் பார்த்து கண் சிமிட்டியது, அப்படியேக் குட்டி ஐரோப்பிய அம்மு. கூந்தல் நிறம் மட்டும் கருப்பு, குழந்தையின் அப்பாவின் பாதி ஜீன் கூந்தலில் வந்துவிட்டது போலும், நிமிடத்திற்கு ஒரு முறை கைபேசியை எடுத்து யாருக்கோ அழைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள், ஒரு சந்தர்ப்பத்தில் பேசிக்கொண்டிருக்க, குழந்தை அவள் கட்டுப்பாட்டை மீறி என்னை நோக்கி ஓடி வந்தது. பேசிக்கொண்டிருந்தவள், ஓடி வந்து குழந்தையை வெடுக்கென இழுத்துக் கொண்டு போனாள். கோபமும் அம்முவையே பிரதிபலித்ததனால் ஐரோப்பிய அம்முவின் மேலும் ஈர்ப்பு அதிகமானது.
விமானத்திற்குள் செல்ல ஒவ்வொருவராகத் தயாராக, விமான சேவையின் அதிகாரிகள் கைப்பையின் எடையையும் பரிமாணத்தையும் சோதிக்க ஆரம்பித்தனர். பாதிக்குப் பாதி பேர் அழுத்தி திணித்து, சமாளித்துவிட்டனர். ஐரோப்பிய அம்முவின் கைப்பையோ இரண்டு மடங்கு இருந்தது,அவளே சில மேல் சட்டைகளை எடுத்து மாட்டிக்கொண்டாலும் இன்னும் அளவு குறையவில்லை. நேரம் அதிகம் எடுத்துக் கொண்டிருப்பதால், அவளை தண்டக் கட்டணம் செலுத்தச் சொன்னார்கள். ஸ்லோவாக்கிய மொழியில் அதிகாரிகளும் அவளும் பேசிக்கொண்டிருந்தாலும், கெஞ்சல்கள் எந்த மொழியிலும் புரியும் என்பதால் என்னப் பேசி இருப்பார்கள் என்பது விளங்கியது. அவளிடம் பணமும் குறைவாக இருந்தது போலும். வரிசையில் இருந்து விலகி, குழந்தையின் சில உடைகள், அவளது சில உடைகள், சில விளையாட்டுப்பொருட்கள்,ஆகியனவற்றை குப்பைத் தொட்டியில் போட்டாள். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பை இருந்ததால் இந்த முறை விமானத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டாள். வரிசையில் இருந்து விலகிய நான், குப்பைத் தொட்டிக்குச் சென்று அவற்றை எடுத்து யாரும் கவனிக்காதபடி கைப்பையில் போட்டுக்கொண்டேன்.
மாநகரப்பேருந்தில் பயணம் செய்ய உள்நுழையும் பொழுது என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு, கடைசியாக விமானத்திற்குள் நுழையும்பொழுது ஏற்பட்டது. எந்த விசயத்தை ஒதுக்க நினைக்கிறமோ, அதுவே ஆடை அலங்காரங்களுடன் அருகே வரும். எனக்கு அவளுக்கருகே ஓர் இருக்கை கொடுக்கப்பட்டது. தலைக்குமேல் கைப்பைகளை வைக்கும் இடங்கள் நிரம்பிவிட்டதால், காலுக்கு அடியில் அவரவர் கைப்பைகளை வைத்துக்கொள்ள அறிவுறுத்த்தப்பட்டனர். எனது பையில் துருத்திக் கொண்டிருந்த குழந்தையின் விளையாட்டு பொம்மையின் நுனியைப் பார்த்த அவளின் குழந்தை தையத்தக்கா என கையாட்டிக்கொண்டே இருந்தது. இரண்டு முறை பேச முயற்சித்தேன், குழந்தைக்கு தொடர்ந்து அடி கிடைக்கக் கூடாது என ரோம் வரும் வரை எதுவும் பேசவில்லை. ரோமில் விமானம் தரையிறங்கிய பின்னர் அவள் குப்பையில் தூக்கி எறிந்த பொருட்களை எடுத்துக் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, எல்லோருக்கும் முன்னராக வேகமாக வெளியேறினாள்.
சரி செக்.இன் உடைமைகள் எடுக்கும்பொழுதாவது பிடித்துவிடலாம் பின் தொடர்ந்தால், அங்கும் எல்லோரையும் முந்திக்கொண்டு, தனது பெரிய பெட்டியை எடுத்துக்கொண்டு
விமானநிலையத்தில் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தவனை நோக்கி வேகமாக நடந்தாள். அது அவளுடைய காதலனாகவோ கணவனாகவோ இருக்கக்கூடும், குழந்தை அவளிடம் இருந்து அவனிடம் தாவிக்கொண்டது. நல்ல வாட்ட சாட்டமான இத்தாலிய இளைஞன். குழந்தை மீண்டும் என்னைப்பார்த்துக் கைக்காட்ட ஐரோப்பிய அம்முவும் ஏதோ சொல்ல, அவன் என்னை முறைக்கத் தொடங்கினான். இத்தாலியர்கள் முதலில் அடித்துவிட்டுத்தான் பேசுவார்கள், எதற்கு வம்பு என பொருட்களைக் கொடுக்கஎனது பேருந்து வரும் இடத்திற்குப் போனேன். ஒரு வேளை உண்மையான அம்முவும் என்னை சந்திக்க நேர்ந்தால் இப்படித்தான் நடந்து கொள்வாளோ !! என்ற யோசனையுடன் குழந்தையின் விளையாட்டுப்பொருளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கையில் ஐரோப்பிய அம்முவின் கார் கடந்தது. முன்னிருக்கையில் இருந்த குழந்தை பொம்மையைப் பார்த்து தையத்தக்கா என ஆட, அந்த ஐரோப்பிய அம்மு என்னைப் பார்த்தாள், அவளின் மாறும் முகபாவத்தைக் கவனிக்கும் முன்னர் எனதுப் பேருந்து இடையில் வர, மற்றும் ஒரு சிறுகதை அனுபவத்துடன் பேருந்தில் ஏறினேன்.
– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.