கதை வகை: மொழிபெயர்ப்பு
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 14,114 
 
 

“”ஒரு பெரிய அலை என்னை கிட்டத்தட்ட இழுத்துக்கிட்டே போயிடுச்சு”, ஏழாவது ஆள் சொன்னார். முணுமுணுப்பாகத்தான் இருந்தது. “”எனக்கு பத்து வயது இருந்தபோது ஒரு செப்டம்பர் மாதம் அது நடந்தது”.

அந்த இரவில் கதை சொல்ல வேண்டியவர்களில் அவர்தான் கடைசி ஆள். கைக்கடிகாரத்தில் மணி பத்தைக் கடந்திருந்தது. வட்டமாக உட்கார்ந்திருந்த சிறிய குழுவினரால், வெளிஇருட்டிலிருந்து கிழித்துக்கொண்டு வரும் காற்று மேற்கு பாய்வதைக் கேட்க முடிந்தது. காற்று மரங்களை உலுக்கி, ஜன்னல்களைத் தடதடக்க வைத்து, இறுதியில் ஒரு சீட்டியொலியுடன் வீட்டைக் கடந்து சென்றது.

“”என் வாழ்க்கையில் நான் பார்த்ததிலேயே பெரிய அலை அதுதான்”. அவர் சொன்னார்: “”வித்தியாசமான அலை. ஒரு முழு ராட்சசன்”.

மெளனமாக இருந்தார்.

“”அது என்னை மட்டும் விட்டுவிட்டது. ஆனால், எனக்குப் பதிலா எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது. எனக்கு முக்கியமான எல்லாத்தையும் இன்னொரு உலகத்துக்கு வாரிக்கிட்டுப் போயிடுச்சு. அந்த அனுபவத்திலிருந்து மீண்டு வரவும் இழந்ததைப் பெறவும் எனக்கு பல வருஷங்களாச்சு..ஈடுசெய்ய முடியாத பல அற்புதமான ஆண்டுகளை இழந்தேன்”.

அந்த ஏழாவது ஆள் ஐம்பது வயதில் இருப்பவராகத் தோன்றினார். ஒல்லியாக, உயரமாக, மீசையுடன் இருந்தார். வலது கண் பக்கத்தில் ஒரு வடு இருந்தது. நீளமாக இல்லையென்றாலும், ஆழமாக, ஒரு கத்தியால் குத்தப்பட்டது போல இருந்தது. தலையில் திட்டுத்திட்டாக நரைத்திருந்த குட்டையான முரட்டு மயிர். சொல்வதற்குத் தேவையான வார்த்தைகள் கிடைக்காதவர்களிடம் நீங்கள் பார்க்கக்கூடிய அதே தோற்றத்தில் அவர் முகம். அது அவரது அங்கத்தில் ஒன்றுபோல, ரொம்ப காலமாகவே அப்படி இருப்பதாகத் தோன்றியது, சாம்பல்நிற அங்கிக்குள் சாதாரண நீலநிறச் சட்டை அணிந்திருந்தார். கைகளை அடிக்கடி தோள்பட்டைக்கு கொண்டு வந்தார். சுற்றியிருந்த யாருக்கும் அவர் பெயர் என்ன, வாழ்வதற்காக அவர் என்ன செய்கிறார் என்று தெரியாது.

ஏழாவது ஆள்அவர் தொண்டையை கமறிக்கொண்டு, இரண்டு மூன்று வினாடிகள் வார்த்தைகளை இழந்து மெளனமாக இருந்தார். அவர் மேலே சொல்வதற்காக மற்றவர்கள் காத்திருந்தனர்.

“”என் விஷயத்தில் அது அலையாக இருந்தது” அவர் சொன்னார். “”அது எப்படியிருக்கும் என்பதை உங்கள் ஒவ்வொருவருக்கும் சொல்ல வழியே இல்லை. ஆனால் என் விஷயத்தில் அது ராட்சத அலை வடிவம் கொண்டு நிகழ்ந்தது. ஒருநாள் திடீரென்று தன்னைத்தானே அது எனக்குக் காட்டியது. முன்னெச்சரிக்கை ஏதுமில்லாமல். ராட்சத அலை வடிவத்தில்! அது பேரழிவாக இருந்தது”

***

சு-மாகாணத்தின் கடலோர நகரில் நான் வளர்ந்தேன். அதன் பெயரைச் சொன்னால் நீங்கள் தெரிந்து கொள்வீர்களா? என சந்தேகப்படும் அளவுக்கு அது மிகச் சிறிய நகரம். என் அப்பா உள்ளூர் மருத்துவர். ஆகவே, எனக்கு செüகரியமான குழந்தைப்பருவம் கிடைத்திருந்தது. க- என்று நான் அழைப்பவன்தான் நினைவு தெரிந்த நாள் முதலாய் என் நண்பன். அவன் வீடு எங்களுக்கு அருகில் இருந்தது. பள்ளியில் எனக்கு ஓராண்டு முந்தைய வகுப்பில் படித்தான். நாங்கள் சகோதரர்கள் போல பள்ளிக்கு ஒன்றாகப் போய் வருவோம். இந்த நெடுநாள் நட்பில் நாங்கள் ஒருமுறைகூட சண்டை போட்டது கிடையாது. எனக்கு ஒரு அண்ணன் இருக்கவே செய்தான். ஆறு வயது மூத்தவன். வயசு வித்தியாசப்பட்டாலும் குணாதிசயம் மாறுபட்டாலும்தான் என்ன, சகோதரர்கள் நாங்கள் நெருக்கமாக இல்லை. என் சகோதர பாசம் முழுவதும் க- மீது விழுந்தது.

க- வெளிறிய நிறத்துடன் எலும்பும் தோலுமாக, சிறிய உருவமாக இருப்பான். பெண் என்று சொல்லும் அளவுக்கு முகம் அழகாக இருந்தது. அவனுக்குக் கொஞ்சம் வாய் திக்கும். அவனைத் தெரியாதவர்களுக்கு மனவளர்ச்சி குறைந்தவன்போல தோன்றச் செய்தது. அவன் பலவீனமாக இருந்ததால், வீடு என்றாலும் பள்ளி என்றாலும் நான்தான் அவனுக்குப் பாதுகாவலனாக இருந்தேன். நான் வாட்டம் சாட்டமாக இருந்தேன். மற்ற பயலுகள் எல்லாமும் என்னே நிமிர்ந்துதான் பார்ப்பார்கள். ஆனாலும், நான் க-வுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கக் காரணம், அவன் அப்படியொரு இனிமையான, வெள்ளந்தியான பையன். அவன் திக்குவாய் என்றாலும் மனவளர்ச்சி குன்றியவன் அல்ல. பள்ளியில் அவன் நன்றாகப் படிக்கவில்லை. எல்லாப் பாடங்களிலும் பாஸ் பண்ணிவிடுவான். இருந்தாலும் ஓவிய வகுப்பில் அவன்தான் பெரிய ஆள். அவனிடம் ஒரு பென்சில் அல்லது வண்ணத்தூரிகை கொடுத்தால் போதும். ஓவிய ஆசிரியரே வியக்கும்படி படங்கள் வரைவான். அவன் அடுத்தடுத்து எல்லா ஓவியப் போட்டிகளிலும் வென்றான். தொடர்ந்து அவன் ஓவியம் வரைந்துகொண்டிருந்தால், நிச்சயமாக புகழ் பெற்ற ஓவியனாக வருவான் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு கடற்பரப்பை வரைவது பிடித்திருந்தது. கடற்கரைக்குப் போய் மணிக்கணக்காக அமர்ந்து வரைவான். பல நேரங்களிலும் நானும் அவன் பக்கத்தில் இருப்பேன். தூரிகையை அவன் விரல்கள் லாவகமாக, கச்சிதமாக இயக்குவதைப பார்த்துக் கொண்டிருப்பேன். அதுவரை காலியாக, வெற்றுத்தாளாக இருந்ததன் மீது எப்படி இத்தனை உயிர்ப்புள்ள வடிவத்தை, வண்ணத்தை உருவாக்குகிறான் என்று வியந்திருக்கிறேன். அது சுயம்புவாக வந்த திறன் என்று இப்போது உணர்கிறேன்.

ஒரு வருஷம் செப்டம்பர் மாதத்தில் பெரிய புயல் ஒன்று எங்கள் பகுதியைத் தாக்கியது. பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான புயல் என்று வானொலியில் அறிவித்தார்கள். பள்ளிகள் மூடப்பட்டன. தெருக்கடைகளைச் சாத்திவிட்டு எல்லாரும் புயலுக்குத் தயாராக இருந்தார்கள். காலை எழுந்தவுடன் அப்பாவும் அண்ணனும் வீட்டைச் சுற்றி வந்து, புயற்கால கதவுகள் அனைத்தையும் ஆணி வைத்து அடித்துக் கொண்டிருக்க, அம்மாவோ, அவசரமாக வெளியேற நேரிட்டால் தேவைப்படக்கூடிய உணவுகளைத் தயார் செய்து கொண்டிருந்தாள். நான் போத்தல்களில் குடிநீர் நிரப்பி வைத்தேன்.

பெரியவர்களுக்கு இந்தப் புயல் ஆண்டுதோறும் வந்து மிரட்டுகிற ஒன்று. ஆனால், நடைமுறைக் கவலைகளை ஒதுக்கிவிட்டால், குழந்தைகளுக்கு இந்தப் புயல் ஒரு சர்க்கஸ் போல, வேடிக்கைக்கான அற்புதமான வாய்ப்பு.

மதியவேளைக்கு சிறிதுநேரம் கழித்து வானத்தின் நிறம் திடீரென்று மாறத் தொடங்கியது. ஏதோ ஒரு மாறுபாடு, நம்பமுடியாததாக இருந்தது. நான் வெளியே முற்றத்தில் இருந்தேன். காற்று ஊளையிட்டது. வீட்டுக்கூரையின் மீது மணலை வீசியதைப் போல, வெற்றோசையுடன் மழை பொழியத் தொடங்கியது. கடைசிக் கதவையும் மூடிவிட்டு நாங்கள் அனைவரும் ஒன்றாக, இருண்டுகிடந்த ஒரே அறையில் வானொலியைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்தோம். புயல் அதிக மழையைக் கொண்டு வராது என்று வானொலியில் சொன்னார்கள். ஆனாலும் காற்று அதிக சேதத்தை ஏற்படுத்தும், கூரைகளைப் பிய்த்தெறியும், கப்பல்களைக் கவிழ்க்கும் என்றார்கள். காற்றில் பறந்து வந்த உடைசல்களால் பலர் இறந்திருந்தனர். பலர் காயமடைந்திருந்தனர். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று திரும்பத் திரும்ப எச்சரித்தார்கள். அப்போதைக்கப்போது, ஒரு பெரிய கரம் கொண்டு உலுக்குவதைப்போல வீடு குலுங்கும், கிரீச்சிடும். சில நேரம், ஏதோ ஒரு கனமான பொருள் மூடிய கதவில் வந்து மோதும். அவை பக்கத்துவீட்டுக் கூரையோடுகள் என்று அப்பா ஊகித்தார். மதியவேளை அம்மா சமைத்திருந்த சோறும் ஆம்லெட்டும் சாப்பிட்டோம். வானொலி அறிவிப்பைக் கேட்டபடி, புயல் கடந்து போகக் காத்திருந்தோம்.

புயல் கடப்பதற்பதற்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை. சு–மாகாணத்தின் கரையைத் தொட்டதும் புயல் வலுவிழந்துவிட்டதாகவும், அது வடகிழக்காக மெல்ல நகர்ந்து செல்வதாகவும் வானொலியில் சொன்னார்கள். காற்று தொடர்ந்து ஊளையிட்டு வீசியது. நிலத்தில் நின்ற எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து பூமியின் கடைசிக்கு கொண்டு செல்ல முயன்றது.

இவ்வாறு மோசமாக இருந்த காற்று ஒரு மணிநேரத்துக்குப் பிறகு நின்றது. திடீரென்று சந்தடியில்லாமல் ஆனது. எல்லாவற்றின் மீதும் அமைதி கவிந்தது. தொலைவில் ஒரு பறவையின் வேதனைக் குரலை என்னால் கேட்க முடிந்தது. அப்பா கதவைத் திறந்து வெளியே பார்த்தார். காற்று வீசுவது நின்றுபோய், மழைப் பொழிவும் இல்லாமல் ஆகிவிட்டது. கனத்த வெண்மேகங்கள் வானத்தின் முடிவு வரை இருந்தன. இங்கும் அங்குமாக நீலத்திட்டுகள். வாசலில் நின்ற மரங்கள் இன்னமும் மழையின் பாரத்தை சொட்டிக்கொண்டிருந்தன.

“”நாம் புயலின் மையத்தில் இருக்கிறோம்” அப்பா என்னிடம் சொன்னார். “”கொஞ்ச நேரத்துக்கு இப்படி அமைதியாக இருக்கும். சுமார் பதினைந்து இருபது நிமிடங்கள்வரை. இடைவேளை மாதிரிதான். திரும்பவும் காற்று முன்புபோலவே வீசும்”.

“”நான் வெளியே போகலாமா” என்று அப்பாவிடம் கேட்டேன். “”தொலைவாகப் போகாமல் வீட்டைச் சுற்றியே நடக்கலாம். காற்று வீசத் தொடங்கியதும் வீட்டுக்கு வந்திடணும்” என்றார்.

நான் வெளியே போய் ஆராயத் தொடங்கினேன். பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு அங்கே புயல் வீசிக்கொண்டிருந்தது என்பதை நம்ப முடியாதபடி அமைதி. வானத்தைப் பார்த்தேன். புயலின் “கண்’ மேலே இருந்து எல்லாவற்றையும் வெறிப்பதாகத் தோன்றியது. அப்படியொரு “கண்’ உண்மையில் இல்லைதான். சுழன்றடிக்கும் காற்றின் நடுவே அமைதியான மையத்தில் நாங்கள் இருந்தோம்.

வீட்டுக்கு ஏற்பட்ட சேதத்தை பெரியவர்கள் ஆராய்ந்துகொண்டிருக்க, நான் கடற்கரைக்கு இறங்கிச் சென்றேன். முறிந்த மரக்கிளைகள் சாலையில் இறைந்து கிடந்தன. அவற்றில் சில, பெரியவர்களாலும் தூக்க முடியாத, கனமான பைன் மரக் கிளைகள். வீட்டு ஓடுகள் எல்லா திசைகளிலும் சிதறிக் கிடந்தன. கார் கண்ணாடிகள் உடைந்திருந்தன. ஒரு நாய்க்கூண்டு சாலையில் உருண்டு கிடந்தது. வலுவான கரம் ஒன்று வானிலிருந்து இறங்கி எல்லாவற்றையும் அடித்து தரைமட்டமாக்கியிருக்க வேண்டும்.

நான் சாலையில் நடப்பதை க- பார்த்துவிட்டு அவனும் வெளியே வந்தான்.

“”எங்க போறே?” என்றான்

“”சும்மா கடற்கரையைப் பார்க்கத்தான்”

ஒரு வார்த்தை பேசாமல் அவனும் என்னுடன் வந்தான். அவனது குட்டி வெள்ளை நாயும் எங்களைத் தொடர்ந்தது.

“”காற்று வீசத் தொடங்கின அடுத்த நிமிஷமே வீட்டுக்குத் திரும்பிப் போகணும்” நான் சொன்னேன். அவன் மவுனமாக ஆமோதித்தான்.

கடற்கரை என் வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்தது. அலைத்தடுப்புத் திண்டுகள் கரையோரத்திலே வரிசையாக குவிக்கப்பட்டிருந்தன. அந்த நாளில் அது என் உயரத்துக்கு இருந்தது. அலைதொடும் கரைக்குச் செல்ல நாங்கள் ஒரு படிக்கட்டை ஏற வேண்டும். இங்கேதான் நாங்கள் தினமும் விளையாட வருவோம். எங்களுக்குப் பரிச்சயம் இல்லாத இடமே கிடையாது. இருந்தாலும், புயலின் மையத்தில் எல்லாமும் வித்தியாசமாகத் தெரிந்தன. வானத்தின் நிறம், கடல், அலை ஓசை, எற்றும் அலைகளின் வீச்சம் என கடற்கரை முழுவதுமே வித்தியாசமாக இருந்தது. அலைத்தடுப்புத் திண்டுகள் மீது உட்கார்ந்தோம். ஒருவரோடு ஒருவர் பேசாமல், கடலைப் பார்த்தோம். பலத்த புயலின் மையத்தில்தான் நாங்கள் இருந்திருக்கிறோம் என்றாலும், அலைகள் மாறுபாடுடன் அமைதியாக இருந்தன. அலைகள் தொடும் கரை வழக்கத்தைவிட ரொம்பவும் தள்ளிப் போயிருந்தது. எங்கள் முன்பாக வெள்ளை மணல் கண்ணுக்கெட்டிய தூரம் விரிந்தது. வரிசை கட்டிய நுரைப்பு தவிர கடலோர மொத்தப் பரப்பும் ஏதோ வீட்டுப்பொருள் எதுவுமே இல்லாத அறையைப் போல இருந்தது.

அலைத்தடுப்புத் திண்டுகளை விட்டு இறங்கி, கடற்கரையோரமாகவே, ஒதுங்கிய பொருள்களை ஆராய்ந்தபடி நடந்தோம். பிளாஸ்டிக் பொம்மைகள், செருப்புகள், மரச்சாமான்களின் பகுதிகளாக இருந்த மரச் சிதிலங்கள், கிழிந்த துணிகள், வழக்கத்தில் இல்லாத போத்தல்கள், அயல்மொழி எழுதப்பட்ட அட்டைப்பெட்டிகள், எதற்குரியது என்றே தெரியாத பொருள்கள் என பலவும் கிடந்தன. அது ஒருவிதமான மிட்டாய்க் கடை போல இருந்தது. இவற்றையெல்லாம் புயல் எங்கிருந்தோ எடுத்து வந்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு வித்தியாசமான பொருள் எங்கள் கவனத்தை ஈர்த்ததால் அதை எடுத்து எல்லா கோணங்களிலும் பார்த்துவிட்டுத் தூக்கிப் போடுவோம். க-வின் நாய்க்குட்டி வந்து அதை மோப்பம் பார்க்கும்.

நாங்கள் நடக்கத்தொடங்கி ஐந்து நிமிடங்கள்கூட ஆகியிருக்கவில்லை. அலை எனக்கு மிக அருகில் வந்து இருப்பதை உணர்ந்தேன். ஒசைப்படாமல், எச்சரிக்கை செய்யாமல், நான் நின்ற இடம் வரை கடல் தனது நீண்ட, மென்மையான நாக்கினை நீட்டியது. இதுபோல் முன்னெப்போதும் நான் பார்த்திருக்கவில்லை. நான் சிறுவன் என்றாலும் கடலோர நகரில் நான் வளர்ந்திருந்தேன். கடல் எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிவேன். எந்த அறிவிப்பும் இல்லாமல் தாக்கி நாசப்படுத்தும் என்பதும் தெரியும். ஆகவே அலைதொடும் கரைக்கு அப்பால் செல்ல கவனம் செலுத்தினேன். அதையும் மீறி அலைகள் நான் நின்ற இடத்துக்கு சில அடிகள் வரை ஓடி வந்தது. பிறகு, சந்தடியே இல்லாமல் கடல் உள்வாங்கியது. அப்படியே சற்று நின்றது. என்னை அணுகிவந்த அலைகள் மென்மையான, அச்சுறுத்தாத, கரைஅலம்பும் அலைகள். ஆனாலும் ஏதோ ஒரு விஷயம்- ஒரு பாம்புத் தோலை தொடுவது போன்ற உணர்வு- என் முதுகெலும்பை சில்லிட வைத்தது. என்னவெனத் தெரியாத அர்த்தமற்ற பயம். நிஜமான பயம். அக்கணத்தில் நான் அறிந்தேன். அலைகள் உயிர்ப்புடன் உள்ளன. நான் அங்கே இருப்பது அவற்றுக்குத் தெரியும். என்னை பிடிக்கத் திட்டமிடுகின்றன. மனிதனைத் தின்னும் ஏதோ ஒரு பெரிய மிருகம் அங்கே படுத்துக் கிடப்பதாகவும் அது என் மீது பாய்ந்து அதன் பற்களால் என்னை கிழிக்கக் கனவு காண்பது போலவும் உணர்ந்தேன். நான் ஓடியாக வேண்டும்.

“”இங்கிருந்து போகிறேன்”, க-விடம் கத்தினேன், அவன் பத்து அடிகள் முன்னே இருந்தான். எதையோ பார்த்துக் கொண்டு எனக்கு முதுகைக் காட்டியபடி குந்தியிருந்தான். அவன் கேட்கப் போதுமான அளவுக்கு நான் கத்தினேன் என்பதை நிச்சயமாக அறிவேன். ஆனால் என் குரல் அவனைச் சென்று சேரவில்லை. என் குரல் அவனில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாதபடி ஏதோ ஒன்றில் அவன் கவனம் இருந்திருக்க வேண்டும். க- அப்படித்தான். எல்லாவற்றையும் மறந்துவிடும்படியாக ஏதோ ஒரு விஷயத்தில் மூழ்கிவிடுவான். அல்லது நான் நினைத்தபடி உரக்க கத்தாமல் இருந்திருக்கவும் சாத்தியம்தான். என் குரல் வித்தியாசமாக, யாருடையதையோ போல ஒலித்தது என்பதை நினைவுகூர முடிகிறது.

பிறகு கனத்த உறுமல் ஓசை கேட்டது. பூமியை உலுக்குவதுபோல இருந்தது. உண்மையில், உறுமல் சத்தம் கேட்கும் முன்பாக நான் வேறொரு ஒலியைக் கேட்டேன். ஓர் ஓட்டையிலிருந்து பெருமளவு தண்ணீர் பீச்சியடிப்பதுபோன்ற சப்தம். அது சில கணம் நீடித்தது. பிறகு நின்றது. அதன் பிறகு மீண்டும் வித்தியாசமான ஒசையைக் கேட்டேன். அதுவும்கூட க-வை தலைஉயர்த்திப் பார்க்கும்படி செய்யப் போதுமானதாக இல்லை. அவன் இன்னமும் குந்தியமர்ந்தபடி காலடியில் எதையோ மனம் குவித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். ஒருவேளை அவன் இந்த அலை உறுமலைக் கேட்கவில்லையோ! பூமியை உலுக்கும் அந்த பேரோசையை அவன் எப்படித் தவறவிட்டிருக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் சொல்வது வித்தியாசமாகப் படும்- அந்த பேரோசை நான் மட்டுமே கேட்பதாக இருந்திருக்கக்கூடும். ஒருவகை சிறப்பு ஒலியாக! க-வின் நாய்கூட கவனித்ததாகத் தெரியவில்லை. நாய்கள் ஓசைகளை எப்படி உணரும் என்பது உங்களுக்குத் தெரியும்.

க-விடம் ஓடிப்போய் அவனைப் பிடித்து அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். செய்யக்கூடியது அது மட்டுமே. அலை வந்து கொண்டிருப்பது எனக்குத் தெரியும். க-வுக்குத் தெரியாது. என்ன செய்யவேண்டும் என்பதை எவ்வளவு தெளிவாக அறிந்திருந்திருந்தேனோ, அதே தெளிவுடன் நான் எதிர்திசையில் ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அலைத்தடுப்புத் திண்டுகளை நோக்கி முழுவேகத்தில் ஒடினேன். தனியாக! என்னை எது இப்படிச் செய்ய வைத்தது என்றால், நிச்சயமாக, அது பயம்தான். என்னை ஆக்கிரமித்த பயம் என் குரலை ஒதுக்கிவிட்டு, என் கால்களை அதன் போக்கில் ஓடவிட்டது. கடற்கரையின் மென்மையான மணலில் தடுக்கி

விழுந்து அலைத்தடுப்பு திண்டுக்கு ஓடினேன். அங்கிருந்து திரும்பி க-வை கூப்பிட்டேன்.

“”வேகமாக வா, அங்கிருந்து வந்துவிடு. அலை வருது”. இப்போது என் குரல் நன்றாக ஒலித்தது. அலை உறுமல் நின்றிருந்ததை உணர்ந்தேன். இப்போது, கடைசியாக க- என் கத்தலைக் கேட்டு தலை உயர்த்திப் பார்த்தான். ஆனால் காலம் கடந்துவிட்டது. மிகப்பெரிய, படம்விரித்த பாம்பு போன்ற அலை, கொத்த வரும் தோற்றத்தில் வேகமாக கரைக்கு வந்துகொண்டிருந்தது. அதுபோன்ற அலையை என் வாழ்க்கையிலேயே பார்த்தது கிடையாது. மூன்று மாடி கட்டட உயரத்துக்கு இருந்திருக்க வேண்டும். ஒசையின்றி (குறைந்தபட்சம் என் ஞாபகத்தில் அந்தக் காட்சி ஒசையற்றது) எழுந்த அந்த அலை, க-வின் பின்புல வானத்தை மறைத்தது. க-ஏதும் புரியாமல் சில கணங்கள் என்னைப் பார்த்தான். பிறகு ஏதோ உணர்ந்தவன்போல அலையைத் திரும்பிப் பார்த்தான். ஓட முயன்றான். ஆனால் இப்போது ஓடுவதற்கு நேரம் இல்லை. அடுத்த கணமே அலை அவனை விழுங்கியது. படுவேகமாக வரும் ரயில் என்ஜின் போல அவன் மீது மோதியது.

கரையில் மோதிய அலை பல ஆயிரம் அலைகளாகச் சிதறியது. காற்றில் பறந்து, நான் நின்ற அலைத்தடுப்பை மூழ்கடித்தது. திண்டுகளில் ஒடுங்கி, அதன் தாக்கத்திலிருந்து என்னால் தப்ப முடிந்தது. என் உடைகள் நனைந்ததைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மீண்டும் திண்டு மீது தவழ்ந்து ஏறி, கடற்கரையில் நோட்டம்விட்டேன். உள்வாங்கும் அலை, காட்டுக் கத்தலுடன் திரும்பிக் கொண்டிருந்தது, பூமியின் மறுபக்கத்திலிருந்து யாரோ புராதன கம்பளத்தை இழுத்துச் சுருட்டுவதைப்போல. கடற்கரையில் எங்குமே க- இருப்பதற்கான தடயமே இல்லை. வெறும் மணல்தான் இருந்தது. உள்வாங்கும் அலை, கரையின் நீரையும்இழுத்து கடலின் அடியை வெளிப்படுத்தியது. நான் தனியாக திண்டு மீது அதே இடத்தில் உறைந்து நின்றேன்.

எல்லாவற்றின் மீதும் மீண்டும் அமைதி கவிந்தது. நம்பிக்கையற்ற அமைதி, ஒலியை பூமியிலிருந்து பிய்த்துவிட்டதைப்போன்ற அமைதி. க-வை விழுங்கிய அலை வெகுதொலைவில் மறைந்துவிட்டது என்ன செய்வது எனத் தெரியாமல் அங்கே நின்றேன். கடலுக்கு இறங்கிப் போகலாமா? அங்கே கீழே எங்காவது க- மணலில் புதையுண்டு கிடக்கலாம். ஆனால் நான் திண்டைவிட்டு இறங்கக்கூடாது எனத் தீர்மானித்தேன். பெரிய அலைகள் பல வேளைகளில் இரண்டு மூன்றாக வரும் என்பதை அனுபவத்தில் அறிவேன்.

எவ்வளவு நேரம் போனது எனத் தெரியாது. பத்து பன்னிரண்டு விநாடிகள் இருக்கலாம். நான் நினைத்ததைப்போலவே அடுத்த அலை வந்தது. கடற்கரையில் மீண்டும் ராட்சத உறுமல். அந்த ஓசை குறைந்ததும் மற்றொரு அலை தலையைத் தூக்கி எழுந்தது, தாக்குவதற்கு. என் தலைக்கு மேலாக வானத்தை மறைத்து உயர்ந்தது. ஆனால் இந்த முறை நான் ஓடவில்லை. அலைத்தடுப்பில் வேரூன்றி நின்றேன். மனம்கடந்த நிலையில், அது என்னை தாக்கிடக் காத்திருந்தேன். க-வை கடல் வாரிக்கொண்ட பின்பு நான் மட்டும் ஓடுவதால் என்ன நன்மை ஆகப்போகிறது என்று நினைத்தேன். அல்லது ஒருவேளை நான் பயத்தில் உறைந்துவிட்டேனா? என்னை எது அங்கே நிறுத்தியது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. இரண்டாவது அலையும் முதல் அலையைப் போலவே பெரியது. இன்னும்கூட பெரிதாக இருக்கக்கூடும். என் தலைக்கு மேலாக, மிக உயரத்திலிருந்து, வடிவம் குலைந்து, ஒரு செங்கல் சுவர் மெல்ல இடிந்து விழுவதைப்போல விழத் தொடங்கியது. அந்த அலை மிகப்பெரியது என்பதால் அது ஓர் அலை போலவே தெரியவில்லை. உலகுக்கு அப்பாலான வேறு ஏதோ ஒன்று, மற்றொன்றிலிருந்து உருவாகி அலையின் தோற்றம் கொள்ள நேரிட்டதைப் போல இருந்தது. இருள் என்னை தழுவிக் கொள்ளும் தருணத்துக்கு தயாரானேன். என் கண்களைக் கூட மூடவில்லை. வியக்கத்தக்க தெளிவுடன் என் இதயம் துடிப்பதைக் கேட்டேன்.

என் முன்பாக எழுந்த அலை அப்படியே நின்று, தனது ஆற்றல் முழுவதையும் முன் நகராமல், வான்வெளியிலிருந்து அசைவற்று நொறுங்கி விழப்போவது போலத் தோன்றியது. அப்போது அலையின் பிடரியில், அதன் கொடூரமான, கண்ணாடிபோன்ற நாக்கில் நான் க-வைப் பார்த்தேன்.

உங்களில் சிலருக்கு இதை நம்ப முடியாமல் இருக்கலாம். அப்படியெனில் உங்களை நான் குறை சொல்ல மாட்டேன். இப்பவும்கூட எனக்கே அந்தச் சிக்கல் இருக்கிறது. நான் என்ன பார்த்தேன் என்பதை என்னால் விவரிக்க முடியாது. ஆனால் நான் அறிவேன். அது கற்பனை அல்ல. மனப்பிராந்தி அல்ல. அந்த நேரத்தில் என்ன நடந்தது என்பதை நேர்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். அலையின் நுனியில், குப்பியில் அடைக்கப்பட்டதைப்போல க-வின் உடல் அதில் சுருண்டிருந்தது. அது மட்டுமே அல்ல. க- என்னை நேராகப் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டிருந்தான். அங்கே, எனக்கு முன்னே, தொட்டுவிடும் தொலைவில் என் நண்பன் இருந்தான். என் நண்பன் க-. சில நிமிடங்களுக்கு முன் அலையால் விழுங்கப்பட்ட என் நண்பன். அவன் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றான். அது சாதாரண சிரிப்பு அல்ல. பெருஞ்சிரிப்பு. இலக்கியத்தில் சொல்லப்படுவதைப்போல இந்த காதிலிருந்து அந்தக் காது வரைக்குமான சிரிப்பு. நான் அறிந்த க- அவன் அல்ல. அவன் வலது கரம் என் கையைப் பிடித்து இப்போது அவன் இருக்கும் இன்னொரு உலகத்துக்கு என்னை இழுத்துக் கொள்ள வருவதைப்போல என் திசை நோக்கி நிண்டிருந்தது. கொஞ்சம் நெருங்கியிருந்தால் அந்தக் கரம் என்னை பிடித்திருக்கும். பிடிக்கத் தவறியதால் க- மறுபடியும் என்னைப் பார்த்துச் சிரித்தான், எப்போதையும்விட பெரிதாக.

அந்த நேரத்தில்தான் நான் பிரக்ஞை இழந்தேன். அடுத்து நான் அறியவந்தது, என் அப்பாவின் மருத்துவக்கூடத்தில் படுக்கையில் இருந்ததைத்தான். நான் கண்விழித்ததும், செவிலி என் அப்பாவை கூப்பிட ஓடினாள். அவர் ஓடி வந்தார். நாடி பார்த்தார், கண் பாவையைப் பார்த்தார், நெற்றியில் கையை வைத்தார். நான் கைகளை அசைக்கப் பார்த்தேன், முடியவில்லை. காய்ச்சலில் உடம்பு கொதித்தது. மனசு இருண்டு கிடந்தது. “”நீ மூன்று நாளாக தூங்கியபடி கிடந்தாய்?” அப்பா என்னிடம் சொன்னார். அண்டை வீட்டார் என்னை வீட்டுக்குத் தூக்கி வந்திருந்தனர். க-வை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பாவிடம் எதையோ சொல்ல விரும்பினேன். எதையோ சொல்லியாக வேண்டும். மரத்து வீங்கிய நாக்கில் வார்த்தை வரவில்லை. ஏதோ ஒரு ஜீவன் என் வாய்க்குள் குடியேறியது போல இருந்தது. அப்பா என்னிடம் உன் பெயர் என்ன என்று கேட்டார். அதை நினைவுகூரும் முன்பாக நான் மீண்டும் மயக்கமடைந்து, இருளில் மூழ்கினேன்.

மொத்தத்தில், ஒரு வாரத்துக்கு திரவ உணவு சாப்பிட்டு படுக்கையில் கிடந்தேன். பல முறை வாந்தியெடுத்து, பலமுறை பிதற்றினேன். பின்னாளில் அப்பா சொன்னார். என் நிலைமை மிக மோசமாக இருந்ததாகவும், அதிக காய்ச்சலாலும் அதிர்ச்சியாலும் நான் நிரந்தமாக நரம்புநோய்க்கு ஆளாகிவிடுவேனோ என்று அவர் அஞ்சியதாகவும் சொன்னார். எப்படியோ, குறைந்தபட்சம் நான் உடம்பையாகிலும் மீட்டேன். ஆனால் என் வாழ்க்கை பழையபடி இல்லை.

க-வின் உடல் கிடைக்கவே இல்லை. அந்த நாயும் கூட கிடைக்கவில்லை. வழக்கமாக கடலில் மூழ்கிப் போகிறவர்களின் உடல் சில நாள்களுக்குப் பிறகு அங்கே கழிமுகத்தில் ஒதுங்கும். க-வின் உடல் ஒதுங்கவில்லை. கரை ஒதுங்க முடியாதபடிக்கு அவனது உடலை அந்த அலை ரொம்ப தூரத்துக்கு இழுத்துப் போயிருக்கலாம். கடலின் ஆழத்தில் மீன்களுக்கு உணவாகியிருக்கலாம். பல நாள் தேடுதல் நடந்தது. மீனவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி சொல்லியாக வேண்டும். ஆனால் கிடைக்கவில்லை. சடலம் கிடைக்காமல் இறுதிச்சடங்குகள் செய்ய முடியவில்லை. பாதி பைத்தியம்போல, க-வின் பெற்றோர் கடலோரம் தினமும் மேலும் கீழும் நடப்பார்கள். அல்லது வீட்டுக்குள்ளேயே கதவை அடைத்துக்கொண்டு ஜெபிப்பார்கள்.

அவர்களுக்கு இது மிகப்பெரிய இழப்பு என்றாலும், புயல் நேரத்தில் அவர்களது மகனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றதற்காக என்னை க-வின் பெற்றோர் திட்டியதில்லை. நான் எப்படி அவனை என் சகோதரன் போல பாதுகாத்தேன் என்பது அவர்களுக்குத் தெரியும். என் பெற்றோரும், என் முன்னிலையில் இந்த சம்பவத்தைப் பற்றி பேசியதே இல்லை. ஆனால் உண்மை எனக்குத் தெரியும். நான் முயன்றிருந்தால் க-வை காப்பாற்றியிருக்க முடியும். அலை தொடும் முன்பாக ஓடிப்போய் அவனை நான் இழுத்து வந்திருக்க முடியும். அது நடந்து முடிந்த ஒன்றுதான் என்றாலும் நிகழ்வுகளை மனதில் ஓட்டிப் பார்க்கும்போது, நான் காப்பாற்றியிருக்க முடியும் என்றுதான் எப்போதுமே தோன்றியது. நான் சொன்னதைப்போல, பயம் ஆக்கிரமித்ததால், அவனை அங்கேயே விட்டுவிட்டு என்னை மட்டும் காப்பாற்றிக் கொண்டேன். க-வின் பெற்றோர் என்னை நிந்திக்கவில்லை என்பதும், நடந்திருந்த சம்பவத்தை மற்றவர்கள் என் முன்பாக பேசாததும் என்னை மேலும் வேதனைப்படுத்தியது. உணர்வின் அதிர்ச்சியிலிருந்து மீள ரொம்ப காலம் ஆயிற்று. பல வாரங்கள் பள்ளி செல்லாமல் இருந்தேன். சரியாக சாப்பிடாமல், தினமும் படுக்கையில் படுத்தபடி முகட்டை வெறித்துக் கொண்டிருந்தேன்.

க- எப்போதுமே அங்கே அலையின் நுனியில் இருந்தான். என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு, கரங்களை நீட்டியபடி அழைத்தான். மனதைக் துளைக்கும் அந்தக் காட்சியை அகற்ற இயலவில்லை. தூங்க முடிந்தாலும், கனவு வந்தது. கனவில், அலைக்குப்பியிலிருந்து க- வெளியே

வந்து கரத்தை நீட்டி என் மணிக்கட்டைப் பிடித்து உள்ளுக்கு இழுக்கப் பார்ப்பான்.

எனக்கு இன்னொரு கனவும் வந்தது. நான் கடலில் நீந்திக்கொண்டிருக்கிறேன். அது ஒரு கோடையின் பிற்பகல். கடலுக்கு வெகுதூரத்தில் நான் நீந்திக் கொண்டிருக்கிறேன். என் முதுகில் வெயில் காய்கிறது. கடல்நீர் இதமாக இருக்கிறது. அப்போது, திடீரென்று ஒரு கை எனது வலது காலைப் பிடிக்கிறது. என் கணுக்காலை ஒரு பனிக்கரம் பிடிப்பதை உணர்கிறேன். உதறித் தள்ள முடியாதபடிக்கு வலிமையானதாக இருக்கிறது. உள்ளுக்குள் இழுத்து செல்லப்படுகிறேன். அங்கே க-வின் முகம் தெரிகிறது. அதே விரிந்த சிரிப்பு. இந்தக் காதிலிருந்து அந்தக் காது வரை. நான் அலறுகிறேன். சத்தமே வருவதில்லை. தண்ணீரை விழுங்குகிறேன். நுரையீரல் நிரம்புகிறது. இருட்டில் அலறிக் கண் விழிக்கிறேன். மூச்சுத்திணறி, வேர்வையில் நனைந்துபோகிறேன்.

அந்த ஆண்டின் முடிவில், என்னை வேறு ஊருக்கு அனுப்புங்கள் என்று பெற்றோரிடம் வேண்டிக் கொண்டேன். க- அடித்துச் செல்லப்பட்ட கடற்கரையைப் பார்த்துக் கொண்டு என்னால் தொடர்ந்து அங்கே வாழ முடியாது. என் பயங்கரக் கனவுகளும் நிற்காது. வெளியேறாவிடில் நான் பைத்தியமாவேன். பெற்றோர் என்னைப் புரிந்து கொண்டு வேறு ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்தனர். ஜனவரி மாதம், நாகனோ மாகாணத்தில், கோமோரோ அருகே ஒரு கிராமத்தில் இருந்த என் அப்பா குடும்பத்திடம் போய்ச் சேர்ந்தேன். அங்கேயே என் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி வகுப்புகளை முடித்தேன். விடுமுறையில் வீட்டுக்குப் போனதில்லை. அவ்வப்போது என் பெற்றோர் வந்து பார்த்துச் சென்றனர்.

இன்று வரை நான் நாகனோவில் வாழ்கிறேன். நாகனோ நகரில் ஒரு பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்று, ஒரு உதிரி பாக உற்பத்திக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். இப்போதும் அங்கேதான் இருக்கிறேன். எல்லாரையும் போலத்தான் வேலை செய்கிறேன். நீங்களே பார்ப்பதைப்போல, என்னிடம் மாறுபாடாக எதுவும் இல்லை. அதிக நண்பர்கள் கிடையாது என்றாலும் சில நண்பர்களுடன் மலையேற்றம் செல்வேன். என் பிறந்த ஊரைவிட்டு வெளியேறியதும் பயங்கர கனவுகள் வருவது நின்றுவிடவில்லை. அவை என் வாழ்வின் பகுதியாகத் தொடர்ந்தன. அவை அவ்வப்போது வரும். கதவுக்கு வெளியே இருக்கும் ஊழியன் போல. அந்தச் சம்பவத்தை மறக்கும் நிலைக்குப் போகும்போதெல்லாம் அந்த கனவுகள் வந்தன. அதே கனவுகள், சிறு மாற்றங்கள்கூட இல்லாமல். வேர்த்துப்போய், படுக்கை நனைந்திருக்க அலறிக்கொண்டு எழுந்திருப்பேன்.

ஒருவிதத்தில் இதனால்தான் நான் கல்யாணம் செய்யவில்லை. என்னுடன் உறங்குவது யாராக இருந்தாலும் நள்ளிரவில் நான் அலறுவதால் விழிப்பதை விரும்பவில்லை. பல பெண்கள் மீது ஆசை கொண்டதுண்டு, ஆனால் ஓர் இரவைக்கூட அவர்களுடன் கழித்ததில்லை. பயங்கரம் என் எலும்பில் தங்கி இருந்தது. மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாததாக இருந்தது.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு என் ஊரை விட்டுப் பிரிந்திருந்தேன். அந்தக் கடற்கரைக்கு- எந்த கடற்கரைக்குமே போனதில்லை. போனால் என் கனவு பலித்துவிடும் என்று அஞ்சினேன். எனக்கு நீச்சலடிப்பது பிடிக்கும். ஆனால் அந்த நிகழ்வுக்குப் பிறகு குளத்துக்கு போனதில்லை. ஆற்றுக்கோ, ஏரிக்கோ போக மாட்டேன். படகில் பயணிக்கமாட்டேன். எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் நான் முழுகுவது போன்ற காட்சியை நீங்கிவிட முடியவில்லை. க-வின் ஜில்லிட்ட கைகள் போல, இந்த இருட்டு கற்பனைகளும் என் மனதைவிட்டு அகல மறுத்தன.

அப்புறம் ஒருநாள்….சென்ற இளவேனிலின்போது… அலையால் க- அடித்துச்செல்லப்பட்ட அந்த கடற்கரைக்கு கடைசியாகச் சென்றேன்.

அதற்கு முந்தைய ஆண்டில் என் தந்தை புற்றுநோயால் இறந்திருந்தார். எங்கள் பழைய வீட்டை அண்ணன் விற்றுவிட்டான். சாமான்களை ஒழித்துக்கட்டும்போது, என் குழந்தைப்பருவ சாமான்கள் நிறைந்த அட்டைப் பெட்டியைக் கண்டெடுத்தான். அதை எனக்காக நாகனோவுக்கு அனுப்பினான். அவற்றில் பலவும் வெறும் குப்பை. ஆனால் அதில் இருந்த ஒரு கட்டு ஓவியங்கள் க- எனக்காக வரைந்து கொடுத்திருந்தவை. க-வின் நினைவுக்காக என் பெற்றோர் அதை வைத்திருந்திருக்கலாம். ஆனால் அது என் பழைய பயங்கரத்தைக் கிளப்பியது. அதிலிருந்து க-வின் ஆவி எழுந்து வந்ததைப்போல இருந்தது. நான் உடனே அப்படியே சுற்றி வைத்துவிட்டேன். பின்னர் வீசிவிடலாம் என எண்ணியிருந்தேன். ஆனாலும் அப்படிச் செய்ய இயலவில்லை. முடிவு செய்ய இயலாத பல நாள்களுக்குப் பிறகு, அந்த ஓவியங்களை மீண்டும் எடுத்து திறந்தேன். க-வின் நீர்வண்ண ஓவியங்களை நீண்ட நேரம் பார்க்க என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன்.

ஓவியங்களில் பலவும் நிலப்பரப்பு, எனக்குப் பரிச்சயமான நீண்ட கடற்கரை, கடற்கரை மணல், மரங்கள், நகரம் ஆகியவைதான். க-வின் கரங்களில் நான் அறிந்திருந்த அதே துல்லியத்துடன் வண்ணத்தில் வரையப்பட்டவை.

ஆண்டுகள் பல கழிந்தும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அவை பளிச்சென்று இருந்தன. நான் கருதியிருந்ததைக் காட்டிலும் மிகுந்த திறமையுடன் வரையப்பட்டிருந்தன. அவற்றைப் புரட்டிக் கொண்டிருந்தபோது நான் இதமான நினைவுகளில் ஆழ்வதைக் கண்டேன். அந்தப் படங்களில் க- என்ற சிறுவனின் ஆழமான உணர்வுகள்- அவன் இந்த உலகத்தைக் கண்கொண்டு பார்த்ததைப்போலவே இருந்தன. நாங்கள் இருவரும் ஒன்றாக செய்தவையும், ஒன்றாகச் சென்ற இடங்களும் மிக அழுத்தமாக மீண்டும் எனக்கு தோன்றத் தொடங்கின. என் கண்கள்தான் அவனது கண்கள் என்பதை உணர்ந்தேன். என்னுடன் சேர்ந்து நடந்த பையனின் அதே பார்வையால்தான் நானும் பார்த்து வந்தேன் என்பதை உணர்ந்தேன்.

அதன் பின்னர், வேலையிலிருந்து வீடு திரும்பியதும் க-வின் ஓர் ஓவியத்தை எடுத்து வைத்து உன்னிப்பாக ஆராய்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். ஓர் ஓவியத்துடன் மணிக்கணக்காய் உட்கார்ந்திருப்பேன். ஒவ்வொன்றிலும் நான் நீண்ட காலமாக நினைவுகளிலிருந்து ஒதுக்கி, மூடி வைத்திருந்த குழந்தைப் பருவத்தின் மென்மையான வேறு நிலப்பரப்புகளைக் கண்டேன். க-வின் படைப்புகளைப் பார்க்கும்போது, என் சதைக்குள் ஏதோ ஒன்று ஊடுருவிப் பாயும் உணர்வைப் பெற்றேன்.

இப்படியாக ஒரு வாரம் போன பிறகு திடீரென்று ஒரு நாள் ஒரு யோசனை தோன்றியது: போயின ஆண்டுகள் முழுதிலும் நான் பயங்கரமான தவறைச் செய்திருந்திருக்கலாம் எனத் தோன்றியது. அலையின் நுனியில் அவன் இருந்தவேளை, க- என்னை வெறுப்புடனோ அல்லது வருத்தத்துடனோ பார்த்திருக்கவில்லை. என்னை அவனுடன் இழுத்துச் செல்ல முயன்றிருக்கவில்லை. நிலைகுத்திய பயங்கரச் சிரிப்பும்கூட, ஒரு கோணத்தில் தென்பட்ட, ஒளி அல்லது நிழலால் ஏற்பட்ட தோற்றப்பிழையாக இருக்கலாமே தவிர, அவனது பிரக்ஞையுடன் நடந்த செயலாக இருக்காது. பெரும்பாலும் அவன் ஏற்கெனவே நினைவிழந்த நிலையில் இருந்திருப்பான். அல்லது ஒருவேளை நிரந்தரப் பிரிவின் மெல்லிய புன்னகையை அவன் காட்டியிருப்பான். அவன் முகத்தில் நான் பார்த்ததாக கருதிக் கொண்ட அழுத்தமான வெறுப்பின் பார்வை, அந்தக் கணத்தில் என்னை ஆட்கொண்ட வலிய பயங்கரத்தின் பிரதிபலிப்பன்றி வேறு அல்ல என்பதாகவும் இருக்கலாம்.

க-வின் நீர் வண்ண ஓவியங்களை எவ்வளவு அதிகமாகப் பார்த்தேனோ அதே அளவுக்கு நான் நம்பத் தொடங்கிய இந்த புதிய எண்ணங்களின் உறுதிப்பாடும் அதிகமானது. நான் எவ்வளவு நேரம் அந்தப் படத்தைப் பார்த்தேன் என்பது ஒரு பொருட்டல்ல. அதில் ஒரு சிறுவனின் மென்மையான, அப்பாவித்தனமான ஜீவனைக் காண முடிந்தது.

என் மேசையில் நான் நெடுநேரம் உட்கார்ந்திருந்தேன். நான் செய்ய வேண்டியது எதுவுமில்லை. சூரியன் மறைந்தது. வெளிறிய இருள் அறையைச் சூழ்ந்தது. பிறகு வந்த இரவின் ஆழ்ந்த அமைதி நிரந்தரம் போல தோன்றியது. கடைசியில், இரவு போய் அதிகாலை வந்தது. புதிய நாளின் சூரியன் அடிவானத்தை இளஞ்சிவப்பாக்கியது. பறவைகள் எழுந்து பாடின.

அந்த நேரத்தில்தான் நான் மீண்டும் அங்கே போயாக வேண்டும் என அறிந்தேன்.

பையில் சில பொருள்களை போட்டுக் கொண்டு, இன்று நான் அலுவலகம் வருவதற்கில்லை என்று போன் செய்துவிட்டு, ரயிலேறி என் சொந்த ஊருக்குப் புறப்பட்டேன்.

என் நினைவில் இருந்த அமைதியான சிறிய கடலோர நகரமாக அது இருக்கவில்லை. அசுர வளர்ச்சியால் அது ஒரு தொழில் நகரமாக உருவெடுத்திருந்தது. நிலப்பரப்பு பெரிதும் மாறியிருந்தது. ஸ்டேஷன் பக்கமாக இருந்த ஒரு சிறிய கடை இப்போது வணிக வளாகமாக மாறியிருந்தது. நகரின் ஒரே திரையரங்கம் இப்போது சிறப்பங்காடியாக இருந்தது. என் வீடு அங்கே இல்லவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு இடித்துவிட்டிருந்தார்கள். வெளியே நின்ற மரங்களையும் வெட்டியிருந்தார்கள். க-வின் பழைய வீடும்கூட மறைந்துபோய், அங்கே நுகர்வோர் கார், வேன் நிறுத்துமிடமாக மாறியிருந்தது. அந்த நகரம் எப்போதோ என்னுடையதில்லை என்றாகியிருந்தது.

நான் கடற்கரைக்குச் சென்று அலைத்தடுப்புத் திண்டுகள் மீது ஏறினேன். அடுத்த பக்கத்தில், தொடுவானம் வரை கடல் எப்போதும் போல விரிந்து சென்றது. அலைவாய்க் கரையும் முன்பு போலவே இருந்தது. நீண்ட கடற்கரையில் மக்கள் கால் நனைத்து நடந்துகொண்டிருந்தனர். மாலை நாலு மணி இருக்கும். சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது. பையை பக்கத்தில் வைத்துவிட்டு உட்கார்ந்து கடற்பரப்பின் அமைதியைச் சிலாகித்துக் கொண்டிருந்தேன். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது இங்கே ஒரு பெரும் புயல் வந்ததையும் உலகிலேயே சிறந்த என் நண்பனை விழுங்கியதையும் கற்பனை செய்யவும் முடியவில்லை. அந்த பயங்கர சம்பவத்தை நினைவுகூர்வோர் கிட்டத்தட்ட யாருமே இன்றில்லை. ஏதோ அது ஒரு கற்பிதம் போலவும் நான் தெளிந்த விவரங்களுடன் கண்ட கனவு போலவும் தோன்றத் தொடங்கியது.

அப்போதுதான் என் மன ஆழத்தில் இருந்த இருள் விலகியிருந்ததை உணர்ந்தேன். எப்படி திடீரென்று வந்ததோ அதைப் போலவே திடீரென்று விலகியதை உணர்ந்தேன். கடற்கரை மணலைவிட்டு எழுந்து, என் ஷூவைக் கழற்றாமல், என் பேண்டை மடிக்காமல், என் கணுக்காலை நுரைதிரிக்கும் அலை நனைக்கவிட்டேன். சிறுவனாக இருந்தபோது என்னுடைய எல்லாவற்றையும் துடைத்தெறிந்த அலை, இன்று ஒருவித சமாதானத்துடன், என் கால்களை அன்புடன் வருடியது, என் ஷூவை மேலும் கருப்பாக்கியது. ஒரு மெதுவான அலை வரும். பிறகு நீண்ட இடைவெளி. மீண்டும் ஒரு அலை வந்து தொட்டுப்போகும். கடந்து சென்றவர்கள் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். நான் பொருட்படுத்தவில்லை. கடைசியாக என் வழியை மீண்டும் கண்டடைந்துவிட்டேன்.

வானத்தைப் பார்த்தேன். சில பருத்திப் பொதிகள் அசைவற்றுத் தொங்கின. எனக்காகவே அவை இருப்பதாகத் தோன்றியது. நான் ஏன் அப்படி நினைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. இதேபோன்று, புயலின் “கண்’ பார்ப்பதற்காக நான் அப்போது வானத்தைப் பார்த்திருந்ததை நினைத்துப் பார்த்தேன். நெடிய நாற்பது ஆண்டுகளும் ஒரு பாழடைந்த வீடு போல சரிந்தன. ஒரே நேரத்தில் புதிய மற்றும் கடந்த காலங்கள் ஒன்றாகச் சுழன்று அழுந்தின. ஒசைகள் யாவும் மட்டுப்பட்டன. ஒளி மங்கியது. நான் சமநிலை இழந்து அலையில் விழுந்தேன். என் இதயம் தொண்டைக்கு வந்து துடித்தது. என் கைகளும் கால்களும் உணர்விழந்தன. அதே நிலையில் நீரில் முகம் புதைத்து, எழ முடியாமல் நீண்ட நேரம் கிடந்தேன். ஆனால் நான் அச்சப்படவில்லை. இல்லை. இல்லவே இல்லை. இனியும் நான் பயப்படுவதற்கு ஏதுமில்லை. போயின அந்த நாட்கள்.

இப்போது என் பயங்கர கனவுகள் நின்றுவிட்டன. நள்ளிரவில் நான் அலறிக் கொண்டு எழுவதும் இல்லாமல் போனது. மீண்டும் புதிய வாழ்வைத் தொடங்க முயன்றேன். ஒரு வகையில் அதற்கு காலம் கடந்துவிட்டது என்பது தெரியும். இனி நான் வாழும் காலம் அதிகமில்லை. இது காலம் கடந்து வந்தாலும் நான் நன்றி சொல்வேன். முடிவில் நான் இரட்சிக்கபட்டதற்காக, ஒரு வகையான மீட்சிக்காக. ஆம். நன்றி சொல்வேன்: வாழ்வின் இறுதிவரை அலறிக்கொண்டு, அச்சப்பட்டுக்கொண்டிராமல் ஆனதற்கு.

***

ஏழாவது ஆள் அமைதியானார். மற்ற ஒவ்வொருவர் மீதும் பார்வையைப் பதித்தார். யாரும் பேசவில்லை, நகரவில்லை, மூச்சுக்கூட விடவில்லை. கதையை அவர் முடிப்பதற்காக காத்திருந்தார்கள். வெளியே காற்று ஓய்ந்துவிட்டது. எதுவும் அசையவில்லை. ஏழாவது ஆள் மீண்டும் தனது கையை, வார்த்தைகளைத் தேடுவதுபோல, தோள்பட்டைக்கு கொண்டுவந்தார்.

“”பயம் ஒன்றுக்குத்தான் நாம் பயப்பட வேண்டும் என்று நம்மிடம் சொல்வார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை”} அவர் சொன்னார். பிறகு, சில வினாடிகளில் மேலும் சொன்னார்: “”சரிதான், பயம் இருக்கத்தான் இருந்தது. அது நமக்கு பல நேரங்களில் பல வடிவங்களில் வந்து ஆட்கொள்கிறது. அத்தகைய நேரத்தில் நாம் செய்யும் அச்சுறுத்துலான செயல், அதற்கு முதுகைக் காட்டி கண்ணை மூடிக்கொண்டுவிடுவதான். பிறகு நமக்குள் இருக்கும் மிகவும் அற்புதமான பொருளை எடுத்துக் கொடுத்து, வேறு ஏதோ ஒன்றிடம் சரணடைந்துவிடுகிறோம். என் விஷயத்தில், அந்த ஏதோ ஒன்று அலையாக இருந்தது.

– ஜப்பானிய மொழியில்: ஹாருகி முரகாமி

தமிழில்: இரா. சோமசுந்தரம் (டிசம்பர் 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *