ஏமாற்றம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 1,623 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வெள்ளைக் கமலத்தில் வீற்றிருந்த சரஸ்வதி தேவி அல்லும் பகலும் அநவரதமும் அவளைப் பூசித்து, அவ ளைப் பெருமைப்படுத்துவதிலேயே திருப்தியடைந்திருக்கும் தன் பக்தனான எழுத்தாளனை எறிட்டு நோக்கினாள்.

இருண்ட இரவை ஒளி செய்யத் துடிக்கும் புகை மண்டிய அகல்விளக்குக்கு முன்னால் ஏகாந்தத்தில் ஏதோ ஓர் புத்தகத்தை வைத்துப் படித்துக்கொண்டிருந்தான் எழுத்தாளன். நம்பிக்கை தீய்ந்துவிட்ட அவன் கண்களும், சோர்வு தட்டிய உள்ளமும் புத்தகத்திலேயே லயித்திருந்தன.

நாமகள் தன் பக்தனைப் பார்த்துப் பெருமிதத்தோடு புன்னகை பூத்தாள். மறுகணம் அவள் மதிவதனத்திற் துயரக்களை படர்ந்தது. தன் பக்தன் பகல் முழுவதும் பசியோடு இருக்கிறான் என்பதை உணர்ந்தோ !

தன்னருகிற் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் தன் சகோதரியைக் கெஞ்சி அவளிடம் ஓர் பொற்கிழி வாங்கிக்கொண்டு தன் மெல்லிய பாதங்கள் கன்றும் படி யாகத் தன் அன்ன நடையைத் துறந்து எழுத்தாளனி டம் ஓட்ட ஓட்டமாக ஓடினாள். அவனோ குனிந்த தலை நிமிராமற் புத்தகத்தையே படித்துக்கொண்டிருந்தான்! பொறுமையிழந்த வாணி “ஏ! பக்த” என்று தன் பவழ இதழ்களை அசைத்தாள்.

எழுத்தாளன் நிமிர்ந்து பார்த்தான். தன் முன்னால் வெள்ளைக் கலையுடுத்துக் கல்வித் தெய்வம் நிற்பதைக் கண்டான். தடாரென்று தன் இருக்கையை விட்டெழுந்து, இருகைகளையும் தலையிற் கூப்பிக்கொண்டே “ஞானத்தெய்வமே! தாசன் வணக்கம்” என்று குழறினான். அவன் அங்கம் முழுவதும் ஆநந்தத்தால் நடுங்க விழிகள் ஆநந்தக் கண்ணீருகுத்தன.

“தனய, உன் மனோ வியாகுலத்தை அறிந்து இதோ உனக்குப் பொற்கிழி ஒன்று கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக்கொள்” என்றாள் பாரதி.

எழுத்தாளனுக்கு நடுக்கம் தெளிந்துவிட்டது. தைரியத்தோடு “அம்மணி; இந்த அபூர்வ தரிசனத்தை அநுக்கிரகித்ததாங்கள், கேவலம் ஒரு பொற்கிழியைத் தந்து என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களே; என் மனோ வியாகுலத்தை அறிந்தேன் என்று வேறு சொல்கிறீர்களே? இந்தப் பொற்கிழிக்கா நான் ஏங்கினேன்? உலக மாதா! உலக இலக்கியங்களை எல்லாம் இந்நொடியிலேயே என் மூளையிற் பதித்துவிடக் கிருபை செய்” என்று பிரார்த்தித்தான்.

சரஸ்வதிதேவி திகைத்தாள்! இந்த எதிர்பாராத வேண்டுதலைக்கண்டு அவளுக்குக் கோபங்கூடவந்தது. ஆனாலும் தன்னைத்தானே சாந்தப்படுத்திக்கொண்டு,”மைந்த! வளர்ந்து வரும் உலக இலக்கியங்களை எல்லாம் என்னாலேயே சீரணித்துக் கொள்ள முடியவில்லை. அப்படியிருக்கும்போது உனக்கு நான் எப்படிப் புகட்டுவது? உன்னோடு தர்க்கம் பண்ணிக்கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. இதோ உனக்காகக் கொண்டு வந்த இந்தப் பொற்கிழியைப் பெற்றுக்கொள்” என்று கெஞ்சினாள் பிராமி.

“அப்படியானால் எனக்கிந்தப் பொற்கிழி வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவளைத் திரும்பிப் பார்க்காமலே தன் இருக்கையில மர்ந்து கொண்டு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான் எழுத்தாளன்.

சரஸ்வதிதேவி பொற்கிழியைத் தூரஎறிந்துவிட்டு ஏமாற்றத்தோடு வெண் தாமரையை நோக்கி நடந்தாள்.

இலக்குமியைச் சிந்தியாமல் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலங்கூட நிம்மதியாகத் தூங்க மாட்டார் சண்முகம் செட்டியார். அவர் இலட்சுமி கடாட்சம் நிறையப் பெற்றவர். உள்ளூரிலே பெரிய வட்டிக்கடை அவருடையது தான். கொழும்பிலே தேயிலை வியாபார த்தில் நிறையப் பங்குகள் இருந்தன. ஆனாலும் அவர் மனத்தில் ஏதோ ஓர் குறை, திருப்தியின்மை இருந்தது!

செந்தாமரைச் செல்வி தன் பக்தனின் மனோ விசாரத்தை அறிந்தாள். அவள் செக்கச் சிவந்த முகார பிம்பம் சோகத்தில் வெளிறியது!

முளரியினின்று நீங்கித் தன் பக்தன் வீட்டுக்கு வழி கொண்டாள் சீதேவி. இருளிலே அவள் மலரிருக்கை கூம்பிக்கிடந்தது.

கையிலே சரஸ்வதியிடமிருந்து இரந்து பெற்றுக் கொண்ட ஏட்டுச் சுவடிகளுடன், மையிருளைக் கிழித்துக் கொண்டு ஒளிப்பிளம்பாக நடந்தாள் திருமகள்.

தன் சிறிய இரகசிய அறையிலே அன்றைய வருமானத்தை எண்ணி இரும்புப் பெட்டிக்குள் வைக்கிறார் செட்டியார். பசை முறியாத பச்சை நோட்டுகளின் சல சலப்பு இரவின் நிசப்தத்திற் தெளிவாகக் கேட்கிறது! சீதேவி வந்திருப்பது கூடச் செட்டியாருக்குத் தெரியவில்லை. சூரியப் பிரகாசமாய் ஒளிரும் மின்சார விளக்கு களின் ஒளியிற் செய்யாளின் சோபை குன்றிவிட்டதோ!

அலர்மகள் தம் மெய்யன்பனின் பக்தியைக் கண்டு மனம் பூரித்தவளாய் “அன்பா” என்று ஆசையோடு அழைக்கிறாள்…

திகிலோடு திரும்பிப் பார்க்கிறார் செட்டியார். பொருளின் செல்வி தான் என்பதைப் புரிந்து கொண்ட பிறகு அவள் பாதங்களிற் சாஸ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரிக்கிறார். சரிந்து கிடக்கும் அவர் வயிறு நிலத்திற் தோய்ந்து உடம்பின் பாரத்தைத் தாங்க மாட்டாமற் பிதுங்குகின்றது.

இளையாள், செட்டியாரின் வணக்கத்தை ஏற்று இறும்பூதெய்து கிறாள். “பக்தா! உன் மனக் குறையை அறிந்தவளாய் இதோ உனக்கு இந்த ஏட்டுச் சுவடியைக் கொண்டு வந்திருக்கிறேன். இதை ஒரு தரம் படித்த மாத்திரத்திலேயே நீ சகலகலாவல்லுநனாகவும் ஆகிவிடுவாய். எழுந்திரு” என்று தாய்க்குரிய அன்போடும், தேவிக்குரிய பெருமிதத்தோடும் சொன்னாள் சீதேவி.

செட்டியார்,எழுந்திருந்து “மாதா, என் மனோ விசாரத்தை அறிந்த தாங்களா இந்தக்கறிக்குதவாத ஏட்டுச் சுரக்காயை எனக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்? திடீரெனத் தேயிலைப் பங்குகள் விலை குறைய நேரிடலாம். செல்வி! இந்த ஏழை மேலிரங்கி நும்திவ்ய தரிசனத்தைக் கடாட்சித்த நீவிர் தேயிலைப் பங்குகளின் விலை திடீரென்று உயரும்படி பணிக்க வேண்டும்” என்று தன் தசை திமிறிப் பருத்த உடம்பை வளைத்துச் சொன்னார்.

இலக்குமியின் ஒளி முகத்தில் ஏமாற்றத்தின் ரேகை படர்ந்தது. பேச்சற்று நின்றாள்.

“அம்மணி…” தொடங்கப்போனார் செட்டியார்.

இந்திரை வெறுப்பும் ஏமாற்றமும் தொனிக்கும் குரலில் “பங்கு மார்க்கட், பணவீக்கம், ரூபாய் மதிப்பு என்கிற வார்த்தைகளை எனக்கே விளங்கிக்கொள்ள முடியவில்லை. சரி; சரி இந்த ஏட்டுச் சுவடியைப்பிடி; எனக்கு நேரமாகிவிட்டது” என்று சொல்லிக் கொண்டே ஏட்டை எறிந்துவிட்டுச் செந்தாமரையை நோக்கி விரைந்தோடினாள்.

செட்டியார் மறுபடியும் பணத்தை எண்ணி இரும்புப் பெட்டியில் வைக்கும் பணியிற் தன்னை மறந்து ஈடுபட்டார்.

சுப்ரீம் கோர்ட் நீதியரசர் சோமநாதர் தன் படுக்கையிற் கிடந்தவாறே யோசித்துக் கொண்டிருந்தார். நீதாசனத்தில் கம்பீரமாகவும், கோரமாகவும் காட்சியளிக்கும் அவர் முகம் மனித உணர்ச்சிகளின் போராட்டத்திடையே சோபையை இழந்திருக்கிறது.

கூலி வேலைகூடக் கிடைக்காததினால், மூன்று நாட்கள் பட்டினியாகிக் கிடந்த இளம் விதவை ஒருத்தி, மனமுடைந்தவளாய், அந்த மன உடைவினால் ஏற்பட்ட ஆவேச வெறியில் தன் குழந்தையைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்ய எத்தனிக்கையில் சட்டத்தினதும், தர்மத்தினதும் காப்பாளர்களான அரசாங்கத்தினரின் கையிற் சிக்கிவிட்டாள். சட்டத்தின் படி நாளைக்கு அவளுக்குக் கொலைத் தீர்ப்பு அளிக்க வேண்டும்! ஆனால்…

சோமநாதருக்கு நித்திரை வரவேயில்லை. யோசிக்கிறார்…. கட்டிலிற் படுக்கவே முடியவில்லை அவரால்….

யமபுரியிலே கூற்றுவனுக்குத் தன் நீதாசனத்தில் இருப்புக் கொள்ளவில்லை….

இருளிலே, இருளாக ஓடிவருகிறான் சோமநாதரிடம். தர்மத்திற் பிறழாத, தயாள சிந்தையற்ற அவன் கோரமான முகத்திற் கவலை படர்ந்திருப்பது கன்னக் கனிந்த இருளிற்கூடத் தெரிந்தது.

சோமநாதர் சிந்தனையிலிருந்து விடுபடவேயில்லை. யமன் வந்திருப்பது கூட அவருக்குத் தெரியவில்லை.

“குழந்தாய்! சாகிறவர்களைப் பற்றி ஏன் சிந்திக்கிறாய்? என்பாசக் கயிற்றைத்தான் உன்கையிற் பேனாவாகக் கொடுத்திருக்கிறேன். சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் அவ்விதவை நாளைக்கு என்னை வந்தடைய வேண்டும். தயங்காதே. உன் தர்மத்தைச் செய்; நீதியை ச்செலுத்து.” என்று கேட்கிறான் தென்றிசைக்கோன்.

சோமநாதர் எழுந்திருந்து பார்க்கிறார். முன்னால் நிற் வன் யமன்தான் என்று தெரிந்தும் “பிரபு! குற்றமற்றவளை அகாலத்திற் கொல்வது தர்மமா? அதுதான் நீதியா?” என்று சிறிது தைரியத்தோடேயே கேட்டார்.

“குழந்தாய்! குற்றம், சுற்றம், காலம், அகாலம் எல்லாம் பார்த்தாற் தர்மம் நிலைக்குமா? இதோ என்னைப் பார். ஈன இரக்கம் இன்றி அன்றன்று சாகவேண்டியவர்களை நான் யமபுரிக்குக் கொண்டுபோய்க்கொண்டிருக்கிறேன். அதனாற்தான் என்னைத் தர்மராஜன் என்று கூடச் சொல்கிறார்கள்” என்று நயமாகச் சொன்னான் காலன்.

“நல்ல தர்மராஜன் தான் நீர்! இந்த தர்மத்தை உபதேசிக்க இவ்வளவு தூரம் வந்துவிட்டீரே! முட்டாள்!! நாளைக்கு நிச்சயமாக நான் அவளைக் கொலைக்குத் தீர்க்கப் போவதில்லை. நீர் முடிந்தால் உம் தர்மத்தைக் காப்பாற்றிக்கொள்ளும்” என்று முழங்கினார் சோமநாதர்.

யமதர்மராஜன் தன் தர்மந்தவறிவிடப் போகிறதே என்ற பயத்தில் சிவபிரானிடம் முறையிட ஓடினான்.

துறைமுகத் தொழிலாளி கோவிந்தன் தன் கயிற்றுக் கட்டிலிற் படுத்திருந்தவாறே எதையோ எண்ணிக் கொண்டிருந்தான். முகடு பிய்ந்து கிடந்த அவன் வீட்டுக் கூரைக்கூடாக அவனது இன்ப லட்சியங்கள் போல வானத்திற் தாராகணங்கள் மின்னுவது தெரிந்தது.

அதே நேரத்திற் பாற் கடலிலே பாம்பணையிற் பள்ளி கொள்ளும் பரந்தாமனுக்கு நிலை கொள்ளவில்லை. எழுந்து ஓடி வந்தான் கோவிந்தனிடம்.

கொண்டல் வண்ணன் வந்தது கூடத் தெரியவில்லை கோவிந்தனுக்கு. அடுத்த நாள் நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தத்தைப்பற்றி அவ்வளவு பலமான யோசனை…

யசோதைமைந்தன் சோகந் தொனிக்கும் குரலில் “கோவிந்தா! வேலை நிறுத்தம் பண்ணத் திட்டமிட்டிருக்கிறாயே. உன் இனத்தார் வேலை நிறுத்தம் பண்ணினால் கப்பலில் வந்துள்ள அரிசி மூட்டைகள் இறக்கப்படாதே. அப்போது நாட்டு மக்களின் கதி என்ன? என் நாமத்தைக் கொண்டுள்ள என் பரமபக்தனான நீ, என் காத்தற் தொழிலுக்கு இடையூறு வருவிக்காமல் வழக்கம்போல வேலைக்குப் போகவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.

கோவிந்தன் சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தான். மாயவனைப் பார்த்ததும் அவன் மனம் குமுறியது. கோபத்தோடு “நீர் தானா காத்தற் தொழிலைச் செய்கிறவர்? பகல் முழுதும் மூட்டை – அதுவும் அரிசி மூட்டை சுமக்கிறேன். ஒரு வேளைச் சாப்பாட்டுக்கே என் ஊதியம் போதவில்லை. இது தானா உம் காத்தற் தொழிலின் லட்சணம்?” என்றான்.

எதிர்பாராத அம்மிரட்டலைக் கண்டு அச்சுதன் மலைத்து நின்றான். பின்பும் தன் வழக்கமான புன்னகையை வரவழைத்துக் கொண்டு “கோவிந்தா! நீ உழைக்கப் பிறந்தவன். அது உன் கடமை. கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே! என்று தானே நான் கீதையிற்கூட உபதேசித்திருக்கிறேன். அவ்வுபதேசத்தைக் கடைப்பிடித்து உன் கடமையைச் செய். பலன் தானாகவே வரும்” என்று பத்மநாபன் பணிவுடன் சொன்னான்.

“என் இனத் தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடுவதும் என் கடமைதான். அதைத்தான் நாளைக்குச் செய்யப் போகிறேன்” என்று குமுறினான் கோவிந்தன். காகுத்தன் கலவரமடைந்து கடுகி ஓடினான். போலிஸ் படைக்குக் கடமையைச் செய்யும்படி யோசனை கூறவோ?

– சுதந்திரன்-12-8-51

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *