தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 8,625 
 

“வீ’ என்று பால் குக்கரின் சப்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் டாக்டர் ராஜீவ். மணி காலை 6.40.

“ஐயையோ தூங்கி விட்டோமே’ என்று தன்னையே நொந்து கொண்டான். 7.30 மணிக்கு சென்னையில் அவன் பணிபுரியும் புறநகர் மருத்துவமனையின் அவுட் பேஷண்ட் பகுதியில் நோயாளிகளைப் பார்க்க வேண்டும். அவசரமாய்ப் பிரஷ் செய்து விட்டு காபிக்காக டைனிங் ஹாலுக்குச் சென்றவன், “”என்ன சுமோ ஐந்தரை மணிக்கு என்னை எழுப்பாமல் விட்டு விட்டாயே? லேட் ஆயிடுச்சி பார். இன்னிக்கு எக்சர்ûஸக்கு ஜூட்” என்றான்.

அவன் தந்தை ராணுவ அதிகாரியாக இருந்தபோது குன்னூரில் வெலிங்டன் காம்பஸில் இருந்து பள்ளியில் படித்துகொண்டிருந்தபோதும் பின் பூனே ஆர்ம்டு ஃபோர்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்றபோதும் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் பழக்கம். இன்று நேரம் தவறி எழுந்ததால் அவுட். அவனுக்கு நெருக்கமானவர்கள் அவனை மிலிட்டரி என்றுதான் அழைப்பார்கள். அவன் மனைவி சுமதி, “”ஏங்க, நீங்களே காலை இரண்டு மணிக்குதான் வந்து படுத்தீங்க. பாவமாய் தூங்கிட்டிருந்தீங்க. எழுப்பவே மனசு வர்ல. அதான்” என்றபடி காபியைக் கையில் கொடுத்தாள். காபியைக் குடித்துவிட்டு விரைவாக குளித்துவிட்டு வரும்போது சரியாக ஏழு பத்து.

ஏன் கலவரம்டிபன் சாப்பிட ஆரம்பிக்கும்போதே சுமதி, “”நேத்திக்கு ராத்திரி பதினொரு மணிவரை நீங்கள் ஐஸ் கீரீம் வாங்கிட்டு வருவீங்கன்னு பூஜா குட்டி வெயிட் பண்ணா. நீங்க என்னடான்னா எமர்ஜென்ஸி எமர்ஜென்ஸின்னு பாதி நாள் லேட்டா வர்ரீங்க. உங்க பிரெண்டு சரவணன் தான் அந்த ஏடி எம் சி கார்பரேட் ஹாஸ்பிடலுக்கு கூப்பிடறாரே. பேசாம அங்க கல்ஸல்டண்ட் ஆனீங்கன்னா வேலையும் குறைவு. பணமும் ஜாஸ்தி வரும். இப்ப யூ ஆர் வொர்க்கிங் ஃபார் பீநட்ஸ் இந்தியாவை விட்டு வெளி நாடும் போக மாட்டேங்கறீங்க. அப்படி என்ன நாட்டுப் பற்றோ?” என்றவளை ஒருமுறை முறைத்தான். அவள் ஒரு பிரபல ஐ.டி.கம்பெனியின் சாப்ட்வேர் என்ஜினியர்.

“”இதோ பார் சுமோ,பணத்துக்காக கமிட்மண்ட் இல்லாம வேலையை மாத்தறது. அடுத்த கம்பெனியில் ஐயாயிரம் ரூபாய் அதிகம் கொடுத்தால் அங்க தாவறது இதெல்லாம் உங்க ஐ.டி.கல்சர். எனக்கு ஒத்து வராது” என்று கண்டிப்புடன் கூறினான். அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே சுமதி அவனருகில் கண்ணைக் காண்பித்தாள். ஒரே மகள் பூஜாக் குட்டி இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு அவனைக் கோபத்தோடு முறைத்தபடி நின்று கொண்டிந்தாள்.

ராஜீவ், “”அட பூஜா குட்டி எப்ப வந்த? சொல்லவே இல்லை” என்று வடிவேல் ஸ்டைலில் சமாளித்தான். “”நேத்திக்கு ஏன் ஐஸ்கீரீம் வாங்கிட்டு வர்லை?” என்றவளிடம். “”பூஜா குட்டி நேத்திக்கு ஒனக்கு ஐஸ்கீரீம் வாங்கதான் கிளினிக்லேந்து கிளம்பினனா. ஆஸ்பிடல்லேந்து ஃபோன். அங்க அர்ஜெண்டா போனா ஒன்னமாரி ஒரு பாப்பாவுக்கு கழுத்துல காத்தாடி நூல் அறுத்து ஒரே ரத்தமா வந்துச்சா அதுக்கு ஆபரேஷன் பண்ணி தையல் போட லேட் ஆயிடுச்சு. அதான் நேத்திக்கு லேட்” என்றான்.

“”அந்த பாப்பா பேர் என்னா டாடி” என்றவளிடம் “”ம்ம்ம் சலிம்” என்றான்.

“”பாயாப்பா?” என்றவளிடம், “”நீ ஜென்டரைக் கேக்குறியா? ஜாதி மதத்தைக் கேக்குறியா?” என்றான்.

உடனே சுமதி, “”ஏங்க குழந்தைக்கு போய் எதுக்கு இப்போ ஜாதி மதத்தை எல்லாம் சொல்லித் தர்றீங்க? ஏற்கெனவே ஏதோ ஜாதிக்கட்சித் தலைவர் அரெஸ்ட் ஆனதால் பந்த், கலாட்டா. பஸ், ஆட்டோ எதுவும் ஒடலியாம். என்ன ஆகுமோ தெரியலை?” என்று கடிந்து கொண்டாள்.

“”ஓகே சாரி சாரி” என்று இரு கைகளையும் தூக்கி மன்னிப்புக் கேட்டான். பூஜாவிடம், “”அவன் ஒரு பையன்டா குட்டி” என்றவனிடம் பூஜா, “”அந்த பையன் இப்ப நல்லாயிட்டானாப்பா?”

என்றாள்.

“”இன்னும் ஒரு வாரத்தில் நல்லாயி ஸ்கூலுக்கு போவான். ஒகேடா குட்டி… இன்னிக்கு கண்டிப்பா ஐஸ்கீரீம் உண்டு”

பூஜா கதவருகில் சென்று “”டாடி” என்று அழைத்தாள் தனது அழகான இரண்டு கண்களையும் உருட்டி,வலது ஆள்காட்டி விரலை உயர்த்தி தனது குண்டு கன்னத்திற்கு அருகில் வைத்து, “”இன்னிக்கு கட்டாயமாக ஐஸ்கீரீம் ஓகே” என்றாள். அந்த அழகை மனதார ரசித்து பூரிப்புடன் “”ஷ்யூர்ரா குட்டி” என்று அவள் கன்னத்தில் தட்டி விட்டு கிளம்பினான். மணி 7.20.

சாதாரணமாக தன் காரில் பத்து நிமிடங்களில் 4 கி.மீ. தூரத்தில் இருக்கும் மருத்துவமனையை அடைந்துவிடலாம்.

இன்று இரண்டு சாலை சந்திப்புகளில் கலவரக்காரர்கள் தடுத்து நிறுத்தினாலும், டாக்டர் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று கூறி தப்பி நேரே சென்றபோது அடுத்த நான்கு சாலை சந்திப்பில் கொஞ்சம் கூட்டம் அதிகம் இருந்தது. ஓர் அரசாங்க பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சில கலவரக்காரர்கள் பயணிகளை இறக்கிவிட்டு அதைக் கல்லாலும் தடிகளாலும் அடித்து உடைத்துக் கொண்டிருந்தார்கள். சற்று தள்ளி காரை நிறுத்திய ராஜீவ் காரிலிருந்து இறங்கி தான் டாக்டர் என்று ஒரு கட்சித்தலைவரிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ வந்த ஒரு கலவரக்காரன் தன் கையில் வைத்திருந்த தடியால் ஓங்கி அடித்துக் காரின் முன் கண்ணாடியை உடைத்தான். பொலபொலவென்று விண்ட் ஸ்கிரீன் நொறுங்கியது.

“”டேய் டேய் நிறுத்துடா அவர் டாக்டர்டா” என்று கூறிய அந்த தலைவரிடம் கலவரக்காரன், “”டாக்டர்னா என்ன கொம்பு மொளச்சிருக்கா? அப்படி அர்ஜென்டா போயி மக்கள்டேந்து கொள்ளையடிச்சு துட்டுதானே சம்பாதிக்கப் போறாரு?” என்றான். அவன் குடிபோதையில் இருப்பது நன்றாகத் தெரிந்தது. ராஜீவுக்கு ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியவில்லை. காரைத் திருப்பி ஓரமாக நிறுத்திவிட்டு மெக்கானிக் மோகனுக்கு ஃபோன் செய்தான். மோகனின் குழந்தையை ராஜீவ் மோசமான உடல் நிலையிலிருந்து உயிரைக் காப்பாற்றி இருந்ததால் மிகவும் விசுவாசமாய் இருப்பான். அவனிடம் நிலைமையை விவரித்த ராஜீவ். எல்லாம் உங்க தலைவர் கட்சிதான் என்றான். பத்தே நிமிடங்களில் மோகன் அவன் அஸிஸ்டண்ட் சசியுடன் மொபட்டில் வந்து இறங்கினான்.

“”எவன் சார் உடைத்தவன்?” என்றவனிடம் தூரத்தில் பஸ்ûஸ அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த சிவப்பு சட்டைக்காரனைக் காண்பித்தான். “”இவனா கஜாப்பையன் இவன் லோக்கல் ரெüடி. குடிகாரன் சார். சசி இவன் எங்கடா இங்க வந்தான்? என்று கூறி சார், இவன் எங்க ஜாதியும் இல்லை எங்க கட்சியும் இல்லை சார். எங்க தலைவர்தான் பூரண மதுவிலக்கு கேக்குராறே. இந்த மாதிரி பசங்களாலதான் சார் பேரு கெடுது. எங்கனா கலாட்டா நடந்தா அடிச்சி நொறுக்கி லூட் அடிப்பானுங்க. திருட்டு பசங்க. சரி சார் நீங்க கவலைப்படாதீங்க. இன்சூரன்ஸ் எல்லாம் வேண்டாம் சார். ரெண்டாயிரந்தான் ஆவும். மத்யானம் ரெடி பண்ணிடறேன். டேய் சசி சாரை மொபட்டில் கொண்டுபோய் விடு” என்றான். சசியும் ராஜீவை மொபட்டில் ஏற்றிக்கொண்டு குறுகிய சந்துபொந்துகளில் புகுந்து கொண்டுபோய் ஆஸ்பிடலில் இறக்கிவிட்டான். போக்குவரத்து வசதி இல்லாததால் அன்று ஹாஸ்பிடலில் கூட்டம் குறைவு. நர்ஸ் ஸ்டெல்லாவின் உதவியுடன் நோயாளிகளைப் பார்த்துக்கொண்டிருந்த போது,வரிசையில் குழந்தையுடன் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பெண்,அழுது கொண்டே இருப்பதைக் கவனித்து அவளை அருகில் அழைத்து, “”என்னம்மா என்னாச்சு?” என்றான்.

“” காலையிலிருந்து குழந்தை மூச்சு விட கஷ்டப்படற மாதிரி தெரியுது சார்” என்றாள். “”காலையில் என்ன சாப்பிட்டான்?”

“”காலேல சோறு ஆக்க டைம் ஆச்சு. பசிக்குதுமான்னான். கொஞ்சம் கடலை இருந்தது அதை சாப்பிடு கண்ணு சோறாக்குகிறேன் என்றேன். கடலை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே திடீர்னு இருமி கொஞ்சம் வாந்தி எடுத்தான். அதுலேந்து இப்படி இருக்கான் சார்” என்றாள் அழுதுகொண்டே. ஸ்டெதஸ்கோப் வைத்து பரிசோதித்த ராஜீவ், “”சிஸ்டர் ஏர் என்ட்ரி புவரா இருக்கு. அட்மிட் பண்ணி டெரிபிலின் இ டெக்கட்ரான் கொடுங்க. சாப்பிட்டது ஆஸ்பிரெட் ஆயி மூச்சுக் குழாயில் இருக்கா பார்ப்போம்” என்றான்.

ஸ்டெல்லா அந்த பெண்ணிடம், “”இன்னிக்கு அட்மிட் பண்ணும்மா. ஊசி போடணும். குழந்தையின் பெயர் என்ன?” என்றவளிடம் அந்த பெண், “”பாலமுருகன்மா ஏழுவயசு. பயம்மா இருக்குமா. அவுங்க அப்பா காலையே வெளில கூலி வேலைக்குப் போனாரும்மா. தெரிஞ்சா ஏன் ஒழுங்கா குழந்தையைப் பார்த்துக்கலேன்னு என்னை அடிப்பாரும்மா”என்றாள்.

ஓ.பியை முடித்து விட்டு வார்டில் முந்தின இரவு ஆபரேட் செய்த சலீமைப் பரிசோதித்து அவன் தந்தையிடம், “”இனி கவலையில்லை. இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம் அடுத்த வாரம் வந்து தையல் பிரிக்கலாம்” என்று கூறி மீண்டும் ஓ.பி க்கு சென்றான். திடீரென்று ஸ்டெல்லா சிஸ்டர் ஓடி வந்து, “”சார் பாலமுருகனை கொஞ்சம் வந்து பாருங்க. மூச்சுத்திணறல் அதிகமாகி விட்டது” என்றாள். வார்டுக்கு விரைந்து சென்ற ராஜீவ் பாலமுருகனைப் பரிசோதித்து விட்டு, “”சிஸ்டர் செஃபோ டாக்ஸிம் இன்ஜெக்ஷன் குடுக்கணும். இருக்கா? என்றான்.

ஸ்டெல்லா கையைப் பிசைந்தபடி “”இப்ப நாட் அவைலபிள் சார். இன்று ஜாதிக் கலவரத்தால் கடைகளும் இல்லை. இருந்தாலும் அந்த அம்மாவால் பணம் கொடுத்து வாங்க முடியும் என்று தோன்றவில்லை

என்றாள்.

“” பரவாயில்லை சிஸ்டர் நாம வாங்கிக்கலாம். ஆனால் கடை இல்லையே” என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, “”சார்” என்று பக்கத்து பெட்டில் இருந்த சலீமின் அப்பா கூப்பிட்டார். திரும்பியவனிடம் “”நான் உபயதுல்லா சலீமின் அப்பா” என்றார்.

“”சார் உங்க பையன் சலீம் நல்லாயிட்டான். நாளைக்கு வீட்டுக்கு போகலாம். அடுத்த வாரம் தையல் பிரிக்க வந்தால் போதும். நான்தான் சொன்னேனே” என்றான்.

“”நான் அதுக்கு வர்ல சார். பாலமுருகன் மூச்சுவிட ரொம்ப கஷ்டப்படறான் சார். நான் ஒரு மெடிக்கல் ஷாப்லதான் சார் வேலை செய்றேன். நீங்க தப்பா நினைக்கலேன்னா எங்க கடையிலிருந்து அவனுக்கு வேண்டிய மருந்தை கொண்டு வர சொல்றேன் சார்” என்றான். “”தாங்க்யூ முடிஞ்சா செய்யுங்க” என்றான்.

“”சிஸ்டர், டாக்டர் அஷோக்கைக் கூப்பிடுங்க” என்றான். அஷோக் துடிப்புள்ள திருமணமாகாத இளைஞன். முந்தைய இரவு முழுவதும் அவன்தான் சலீமுக்கு ஆபரேஷன் செய்ய மயக்க மருந்து கொடுத்து உதவியவன். இன்று அவனுக்கு ஆஃப். அஷோக், பாலமுருகனை பரிசோதித்து விட்டு, “”சார் கொஞ்சம் கிரிட்டிகல் கேஸ்தான். ஸ்கேன் செய்யணும். மேலும் ஜெட்வெண்டிலேஷன் வசதி இங்கில்லை. எக்மோர் குழந்தைகள் ஹாஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணினால் பெட்டர்” என்று இழுத்தான்.

அதற்குள் ஸ்டெல்லா, “”நம்ம ஆம்புலன்ஸ் டிரைவர் இன்றைக்கு லீவ். 108க்கும் ஃபோன் செய்து பார்த்தேன். இந்த ஜாதிக் கலவரத்தில் அங்கங்கே பிளாக்கைக் கிளியர் செய்து வருவதற்கு இன்னும் இரண்டு மணிநேரமாவது ஆகும்” என்கிறார்கள் என்றாள். அதற்குள் பாலமுருகனுக்கு மூச்சுத்திணறல் அதிகமாகியது. கண்கள் இரண்டும் மேலே சொருகிக்கொண்டன. எமர்ஜென்ஸியாக அவனைக் காப்பாற்ற, ஏதாவது செய்யவேண்டும். ராஜீவ் செய்வதறியாவது தவித்தபோது சீனியர் டாக்டர் கூப்பரின் ஞாபகம் வந்தது. அவர் பார்ஸிக்காரர். தமிழ்நாட்டில் வெகுநாட்கள் இருந்ததால் ரிடையர்மெண்டுக்குப் பிறகு சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். மிகவும் நேர்மையானவர். உடனே அவருக்கு ஃபோன் செய்தான். “”என்னடா மிலிட்டரி. இன்னிக்கு என்ன லீவா?” என்றவரிடம் விஷயத்தைக் கூறினான்.

“”ஓ ஆமாம். ஷிஃப்ட் பண்றது கஷ்டம்” என்று கூறி, “”உனக்கு அனஸ்தீஸியா குடுக்கும் டாக்டரிடம் ஃபோனைக் கொடு” என்றார்.

“”குட்மார்னிங் சார். நான் அஷோக்” என்றவனிடம், “”ஓகே யங் மேன். லிசன் ஜெட் வென்டிலேஷன் இல்லை என்றால் பரவாயில்லை. நான் சொல்லும்படி செய். ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். ராஜீவுக்கு டென்ஷன் கொடுக்காதே” என்று கூறிவிட்டு ராஜீவிடம் “”டேய் மிலிட்டரி. எந்த குழந்தையை ட்ரீட் பண்ணினாலும் பூஜாவுக்கு செய்வதுபோல் நினைத்துக்கொண்டு செய். யூவில் சக்ஸீட். குட்லக்” என்று கூறினார். அதற்குள் சலீமின் தந்தை உபயதுல்லா ஒரு வெள்ளை தாடி மனிதரை அழைத்து வந்து, “”சார் இவர் அஸ்லாம் பாய். எங்க கடைமுதலாளி. பாலமுருகனின் இன்ஜக்ஷன் மருந்தைக் கொண்டு வந்து விட்டார், சைக்கிள்லையே” என்றார்.

“”ரொம்ப தாங்க்ஸ் பாய். இதற்கு எவ்வளவு?” என்றவனிடம், “”அதெல்லாம் வேணாம் சார் சலீமைக் காப்பாற்றியது போல் இந்த புள்ளையையும் காப்பாத்துங்க. அல்லா உங்களுக்கு துணை இருப்பார்” என்றார் கையை கூப்பியபடி.

ஆபரேஷன் தியேட்டரில் பாலமுருகனைப் படுக்க வைத்தபோது அவனுக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தது. வேறு எந்த அசைவும் கொடுக்க அவனுக்கு சக்தியில்லை. ராஜீவ் மூச்சுக் குழாயை சோதிக்க, ப்ராங்கோஸ்கோப் என்னும் டியூப் போன்ற கருவியை செலுத்தினான். டாக்டர் கூப்பர் அறிவுரைத்ததுபோல் அதில் உள்ள சைட் டியூப் வழியாக ஆக்ஸிஜனை பம்ப் செய்து அஷோக், ராஜீவிடம் ஒரு நிமிடத்தில் நீங்கள் பரிசோதித்து மூச்சுக்குழாயில் ஏதாவது அடைத்துக் கொண்டிருந்தால் எடுத்துவிட வேண்டும். ஒரு நிமிடத்துக்குள் அந்த ஆக்ஸிஜன் தீர்ந்துவிடும். மறுபடியும் ஆக்ஸிஜன் கொடுக்கும்போது நீங்கள் கருவியை வித்ட்ரா செய்ய வேண்டும். மீண்டும் ஆக்ஸிஜன் பம்ப் செய்தால்தான் நீங்கள் பரிசோதிக்க முடியும். பீ அலெர்ட் சார்” என்று கூறி அவன் ஆக்ஸிஜன் மானிட்டரை நம்பாமல் ஸ்டெதெஸ்கோப் டயஃப்ரமை பாலமுருகனின் மார்பில் பிளாஸ்டர் செய்து அவ்வப்போது ராஜீவை நிறுத்தும்படியோ, வித்ட்ரா செய்யும்படியோ, உள்ளே செலுத்தவோ சமிக்ஞை செய்துகொண்டிருந்தான்.இரண்டு மூன்று முறை ஆகியும் ராஜூவால் சளியை மட்டுமே எடுக்க முடிந்தது. நான்காவது முறை செலுத்த முற்பட்டபோது “”சார் ஹீ இஸ் ஸிங்கிங். இதுதான் லாஸ்ட் அட்டெம்ப்ட்” என்றான் ராஜீவிடம். ராஜீவ் உண்மையிலேயே பூஜா படுத்திருப்பதாக நினைத்துக்கொண்டு “”கடவுளே கடவுளே” என்று வேண்டிக்கொண்டு பரிசோதித்தபோது மஞ்சளாக ஒரு பொருள் பாலமுருகனின் மூச்சுக் குழாயில் தென்பட்டது. இதயம் படபட வென அடித்துக்கொள்ள 4 மி.மீட்டர் டயாமீட்டர் உள்ள குழாயின் உள்ளே ஒரு மெல்லிய போர்செப்ûஸ உள்ளே செலுத்தி அந்தபொருளைப் பிடித்தான். பிடித்த உணர்வுதான் இருந்தது. மிகவும் மெல்லிய டியூப் ஆனதால் அதைப் பார்க்க முடியவில்லை. டியூபையும் ஃபோர்செப்ûஸயும் மிகக் கவனமாக வெளியே எடுத்தான். “”சார் பட்டாணி சார்” என்று ஆபரேஷன் நர்ஸ் அலறினாள். “”மைகாட் இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால் மூச்சுக் குழாயில் ஊறிப் போய் முழுவதும் அடைப்பட்டிருக்கும். காட் இஸ் கிரேட் சார்” என்றான் அஷோக். பத்து நிமிடங்களில் பாலமுருகன் சீராக மூச்சுவிட ஆரம்பித்தான். “”கண்ணைத் திற, நாக்கை நீட்டு” என்றவுடன் அவ்வாறே செய்தான்.

“”உன் பெயர் என்ன?”

“” பாலமுருகன் ” என்று தெளிவாகப் பதில் வந்தது.

“”என்ன படிக்கிற?”

“” மூன்றாவது”

“” அம்மா பெயர் என்ன?”

“” அம்சா”

“”அப்பா பெயர் என்ன?”

“” கஜேந்திரன்” என்று எல்லா கேள்விகளுக்கும் தெளிவாகப் பதில் கூறினான்.

அரை மணி நேரத்தில் வார்டுக்கு ஷிஃப்ட் செய்யும்போது கூடவே வந்த டாக்டர் ராஜீவ், அம்சாவிடம், “”நீங்கள் சொன்னது கரெக்ட். பட்டாணிக்கடலைதான் மூச்சுக் குழாயில் அடைத்திருந்தது. எடுத்தாகிவிட்டது. இனி ஆபத்தில்லை” என்றான்.

குலுங்கி குலுங்கி அழுதபடியே அம்சா ராஜீவைக் கையெடுத்து கும்பிட்டாள். அவள் அணிந்திருந்த பிளவுஸ் கையில் கிழிந்திருந்தது. இதைக் கவனித்த பாலமுருகன், “”அப்பா வந்தாராம்மா உன்ன அடிச்சாராம்மா?”

என்று கேட்டு கண்ணீர் மல்க மறுபக்கம் திரும்பிக் கொண்டான். ஆவனைச் சொல்லிக் குற்றமில்லை. குழந்தையின் அனுபவம் அவனை அங்கு அப்படிக் கேட்க வைத்தது. சோகம் ராஜீவின் நெஞ்சைத் தாக்கினாலும் அந்தக்குழந்தையின் புத்திசாலிதனத்தைக் கண்டு வியந்தான். அதற்குள் வார்டு பாய் மணி, “”அத ஏன் சார் கேக்குற. அவங்க அப்பன் வந்து என்ன கேக்காம எப்படி ஆபரேஷனுக்கு சம்மதிச்சேன்னு போட்டு அந்த அம்மாவை எல்லார் முன்னாலேயும் அடிஅடின்னு அடிச்சான் சார். குடிச்சிருந்தான் சார். இவுரு இருக்கிற நிலைமைக்கு ஏடிஎம்சி பிரைவேட் ஆஸ்பிடல்ல வைத்தியம் செஞ்சிருப்பாராம். அவங்க உள்ளேயே விடமாட்டாங்க சார். சும்மா வாய் உதாரு” என்றான்.

ராஜீவ் பாலமுருகனின் தாயிடம், “”கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் குடுங்கம்மா. அதுல இருமல்,வாந்தி இல்லேன்னா சாயங்காலமா ஏதாவது சாப்பிடக் குடுங்க” என்றவனிடம், பாலமுருகன் குறுக்கிட்டு “”என்ன வேணா சாப்பிடலாமா டாக்டர்?” என்றான். “”கட்டாயமா”” என்றவனிடம், “”ஐஸ்கிரீம் சாப்பிடலாமா டாக்டர்?” என்றான்.

“”ஓ ஐஸ்கீரீம் நாளைக்கு நானே வாங்கித் தரேன் ஒகே” என்று கூறி வெளியே செல்ல எத்தனித்தபோது, “”டாக்டர் சார்” என்று கூப்பிட்ட பாலமுருகன், தன் இரண்டு கண்களையும் உருட்டி, வலது ஆள்காட்டி விரலை குண்டு கன்னத்துக்கு அருகில் வைத்து, “”நாளைக்கு கண்டிப்பா ஐஸ்கீரீம்” என்றவுடன் அவனுக்கு பூஜா ஞாபகம் வந்தது. “”ஷ்யூர்ரா குட்டி” என்று கன்னத்தில் தட்டி விட்டு சென்றான்.

ராஜீவ் தன் ரூமுக்கு சென்று “அப்பாடா’ என்று நாற்காலியில் உட்கார்ந்தபோது மணி மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. தினமும் இரண்டு மணிக்கு லஞ்ச் வீட்டில் சாப்பிடும் வழக்கம். இன்று பசி வயிற்றைக் கிள்ளியது.

“டொக்,டொக்’ என்று கதவைத்தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தபோது ஸிஸ்டர் ஸ்டெல்லா கையிலிருந்து இரண்டு தட்டுகளை மேஜைமேல் வைத்து, “”சார் உங்கள் லஞ்ச்” என்றாள். இன்னிக்கு கேண்டீன், ஹோட்டல் எதுவுமே இல்லை. உங்களுக்கு மட்டும் எங்கே இருந்து சாப்பாடு வந்தது ஸிஸ்டர் என்றவனிடம். எங்கள் ஸ்டாஃப் மெஸ்ஸிலிருந்து சார். இன்று எக்ஸ்ட்ராவா செய்ய சொன்னோம் என்றாள் அவள் கொடுத்த சாம்பார் சாதம், கத்தரிக்காய் பொறியல், தயிர் சாதம், ஊறுகாய் தேவாமிர்தமாய் இருந்தது சிஸ்டர்” என்று ஆரம்பித்தவனிடம் “”சார், என்ன கேட்கப் போறீங்கன்னு தெரியும். இன்னிக்கு ஆஸ்பிடல் ஸ்ஃடாப் அத்தனை பேருக்கும் எங்கள் மெஸ்லிருந்துதான் சாப்பாடு. சாப்பாடு கொண்டு வராத பேஷண்ட்டோட அட்டெண்டெண்ட்ஸ் எல்லோருக்கும் கூட கொடுத்து விட்டோம்” என்றாள் புன்னகையுடன்.

பர்ûஸ எடுக்கப்போன ராஜூவிடம் ஸ்டெல்லா, “”சார் என்ன நீங்க எல்லா சாப்பாட்டுக்கும் பணம் தரப்போறீங்களா? வையுங்க”

“” ஏன் சார் இப்படி சுயநலக்காரரா இருக்கீங்க?” என்று கூறியவளிடம், “”சிஸ்டர் நீங்க என்ன சொல்றீங்க?” என்றான்.

“”பின்ன என்ன சார்?. நேற்று இரவுமுழுவதும் போராடி சலீமைக் காப்பாத்தினீங்க, இன்று பாலமுருகனை காப்பாத்தினீங்க. எல்லோருக்கும் சாப்பாடு வாங்கிக் கொடுத்து அந்த புண்ணியத்தையும் நீங்களே தட்டிக்கலான்னு பாக்குறீங்களே சார்” என்றாள்.

சிரித்துக் கொண்டே தலையை ஆட்டி அதை மறுத்த ராஜீவ், “”சிஸ்டர், நீங்கள் சொல்வது உண்மையில்லை. சரியான சமயத்தில் நீங்க மட்டும் பாலமுருகனின் மூச்சுத்திணறலை கவனிக்கத் தவறியிருந்தால் நாம் அவனை இழந்திருப்போம். அதைத்தான் நான் இப்போ யோசித்துக் கொண்டிருந்தேன். இன்று காலை கலவரம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்த மெக்கானிக் மோகன், என்னை மொபட்டில் விரைவாக அழைத்து வந்து இங்கு சேர்த்த சசி, டியூட்டி ஆஃப் இருந்தும் ஒய்வெடுக்காமல் வந்த டாக்டர் அஷோக், சலீமின் தந்தை உபயதுல்லா, அவர் கடை முதலாளி அஸ்லாம் பாய், டாக்டர் கூப்பர், அத்தனை பேரும்தான் பாலமுருகன் பிழைக்கக் காரணமானவர்கள். நாம் அனைவரையும் இயங்க வைத்த கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்” என்றான்.

மெகானிக் மோகன் ஃபோன் செய்து, “”சார் எங்க தலைவர் விடுதலை ஆயிட்டார். ஸ்டிரைக் முடிஞ்சது. உங்க காரும் ரெடி. அரை மணி நேரத்தில் காரோடு அங்கு வருகிறேன் சார்” என்றான்.

“”தாங்க்ஸ் மோகன்” என்று கூறி நிமிர்ந்தபோது பாலமுருகனின் அம்மாவும் மற்றொரு மனிதனும் தடாலென்று ராஜீவின் காலடியில் விழுந்தார்கள். “”என்னம்மா இது எழுந்திருங்கள்” என்று கூறினான்.

எழுந்து நின்ற அந்த மனிதனைக் கண்டதும் திடுக்கிட்டான். காலையில் கார் கண்ணாடியை உடைத்த சிகப்பு சட்டைக்காரன் ஓ அந்த கஜாதான், பாலமுருகனின் தந்தை கஜேந்திரனா? “”இதாங்கையா பாலமுருகனின் அப்பா” என்ற அம்சா “”நீங்க நல்லாயிருக்கணும். நாங்க இத என்னிக்குமே மறக்கமாட்டோம்” என்றாள்.

கஜேந்திரன், “”ஐயா என்ன மன்னிச்சிடுங்க” என்றவுடன் அம்சா ஒன்றும் புரியாமல் விழித்தாள். அம்சாவிடம் ராஜீவ், “”அது என் டியூட்டிம்மா. நீங்க போய் பாலமுருகனுக்கு ஏதாவது குடிக்க குடுங்க” என்று அவளை அனுப்பிவிட்டு, கஜேந்திரன் பக்கம் திரும்பிய ராஜீவ் அவன் குற்ற உணர்வில் தலையைக்குனிந்து குலுங்கி குலுங்கி அழுவதைக் கண்டான். “”மிஸ்டர் கஜேந்திரன். வருத்தப்படாதீங்க. காரை ரிப்பேர் செய்தாச்சு. ஆனா உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் இந்த சமுதாயத்தின்மேல்? நான் சொல்லட்டா, நீங்கள் அநாவசியமாக உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து கோபமடைகிறீர்கள். ஏழையாகப் பிறந்தால் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியாதுன்னு உங்களுக்கு யார் சொன்னாங்க? எந்த துறையை எடுத்துக் கொண்டாலும், டாப் லெவலில் இருப்பவர்கள் ஏழைக் குடும்பத்திலோ நடுத்தர குடும்பத்திலோ பிறந்தவர்கள்தான். உங்களைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால், சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம். என்னோடு படித்தவர்கள் எத்தனையோபேர் என்னைவிட பத்து மடங்கு பணக்காரர்களாகவும் வசதியாகவும் இருக்கிறார்கள். நான் அவர்களோடு ஒப்பிட்டுக்கொண்டு இந்த சமுதாயத்தின் மேல் கோபப்படுவது தப்பில்லையா நான் செய்யும் அரசாங்க வேலை எனக்கு மன நிறைவை அளிக்கிறது. உதாரணமாக இன்று அரசாங்க ஆஸ்பத்திரியில் பாலமுருகனுக்கு ஒரு பைசா செலவில்லாமல் அவன் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. இதில் உள்ள மனநிறைவு வேறு எதிலாவது வருமா? இதை நான் மட்டும் செய்யவில்லை. இன்று உதவியவர்கள் அனைவரும் உங்கள் ஜாதி மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. எல்லோருமே மனித நேயத்தோடு உதவி செய்து மன நிறைவு பெற்றார்கள். இப்படிப்பட்ட விஷயங்கள் நம் இந்திய மண்ணில் மட்டும்தான் நடக்கும். பிறகு ஏன் உங்களுக்கு இந்த சமுதாயத்தின் மீது அவ்வளவு கோபம் நீங்கள் கண்டிப்பாக உடல்ரீதியாக என்னை விட பலசாலி. ஏன் என்னைவிட புத்திலியாக கூட இருப்பீர்கள். உங்களை சற்றே மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அரசாங்கம் உங்களுக்கு எவ்வளவோ உதவி செய்கிறது. நீங்கள் கலவரத்தில் ஈடுபட்டு பொது சொத்தை நாசம் செய்து அரசாங்கத்தையும் இந்த சமுதாயத்தையும் குறை கூறினால் எப்படி?

வாழ்வில் முன்னேற முடியும் யோசியுங்கள். பாலமுருகன் மிகவும் புத்திசாலி. அவனுக்கு நல்ல சுற்றுப்புற சூழலைக் கொடுத்து நன்றாகப் படிக்க வையுங்கள். தயவு செய்து குடிப்பழக்கத்தை நிறுத்துங்கள். நாளைக்கே வேலைக்குப்போய் திரும்பிவரும்போது சாராயக்கடைக்கு போவதற்கு பதில் ஐஸ்கிரீம் கடைக்குபோய் பாலமுருகனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வந்து கொடுங்கள். அவன் மலர்ந்த முகத்தைப் பார்த்து சந்தோஷப்படுங்கள். அந்த சந்தோஷம் பெரியதா அல்லது குடியில் வரும் சந்தோஷம் பெரியதா என்று உங்களுக்கே தெரியும். நான் ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை. எல்லா ஜாதி மதங்களும் சொல்வதைத்தான் சொல்கிறேன். மற்றவர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள் கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள் வெற்றி நிச்சயம். போய் வாருங்கள்” என்று கூறி எழுந்தபோது ஃபோன் மணி அடித்தது.

சுமதி “”ஏங்க மணி நாலரை. நானே ஆஃபீஸ்லேந்து வீட்டுக்கு வந்தாச்சு. நீங்க இன்னும் லஞ்சுக்கு கூட வரலியே. இன்றைக்கு காண்டீன் இருக்காதே? என்ன செய்தீர்கள்?” என்றவளிடம்.

“”நான் சாப்பிட்டாச்சு. ஸ்டெல்லா சிஸ்டர் மெஸ் சாப்பாடு. கொஞ்சம் வேலை. இதோ கிளம்பிவிட்டேன்”என்றான்.

ராஜீவ் வந்து கொண்டிருக்கும்போது மீண்டும் கைபேசி மணி. ஐஸ்கிரீம் கடை ஒரமாக காரை நிறுத்தி இறங்கி பார்த்தான். மீண்டும் சுமதிதான். “”என்ன சுமோ?”

என்றவளிடம் “”ஏங்க எவ்ளோ பெரிய காரியத்தை செய்துவிட்டு ஒண்ணுமே சொல்லலியே. ஸ்டெல்லா சிஸ்டர் உங்களுக்கு லஞ்ச் கொடுத்ததற்காக தாங்க் பண்ண ஃபோன் செய்தேன். சொன்னாங்க ஒரு குழந்தையின் மூச்சுக் குழாயில் அடைத்துக்கொண்டிருந்த பட்டாணியை எடுத்தீர்களாமே நைஸ்” என்றாள்.

“”நீ தானே சுமோ காலையில சொன்ன? ஐ ஆம் வொர்க்கிங் ஃபார் பீநட்ஸ்ன்னு சொன்னீல்ல?” என்றான். உடனே சுமதி பொய் கோபத்துடன் “”அப்பா யோவ் மிலிட்டரி. சரியான சமயத்துல சொல்லி காமிப்பீங்களே. எனிவே யூநோ சம்திங் ஐ லவ் யூ. அண்ட் ஐ ஆம் ப்ரெüட் ஆஃப் யூ” என்றவளிடம் “”ஹி ஹி ஹி ஹி. டாக்டருக்கு இதெல்லாம் சகஜமப்பா” என்று கவுண்டமணி பாணியில் சொல்லி ஃபோனை ஆஃப் செய்து ஐஸ்கீரீம் கடைக்குள் நுழைந்தான்.

– பி.சுந்தரராஜன் (ஆகஸ்ட் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *