எல்லாம் ஒரு பேச்சுக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2013
பார்வையிட்டோர்: 9,305 
 

அழகிப் போட்டி தொடங்கியது.

மெல்லிய இருட்டில் படு உயரத்திலிருந்து ஒளிக் கம்பாய் விழும் ஸ்பாட் லைட்டுகள் கூடவே வர ஒவ்வொரு அழகியும் அட்டகாசமாக வந்து அறிமுகமாகி வரிசையாய் புன்சிரிப்புடன் நின்றனர்.

அதில் நான்காவதாக வந்து மிகுந்த பரப்பரப்பை உண்டாக்கியவள் மிஸ் திவ்யா பார்த்தசாரதி. சென்னையைச் சேர்ந்தவள். மூன்று மாதங்களுக்கு முன்புதான் சென்னை அழகியாக தேர்வு பெற்றவள்.

அடுத்தடுத்த ரவுண்டுகளிலும் திவ்யா பாயிண்டுகளில் முன்னேறிக் கொண்டிருந்தாள்.

குறிப்பாக அந்த ஹெரிடேஜ் ரவுண்டில் வெவ்வேறு மாநில உடையலங்காரத்தில் மற்ற அழகிகள் வந்து அசத்தும் போது திவ்யா மட்டும் ஒரு வித்தியாசமான காஸ்ட்யூமில் தேசியக் கொடி மூவர்ணத்தில் எல்லா கலாசாரங்களையும் ஒருங்கிணைத்து வரவும் அரங்கமே அதிர்ந்தது.

பாயிண்டுகளில் திவ்யா எங்கோ போய்விட்டாள்.

கடைசி ரவுண்டு.

ஜூரிகள் கேள்விகளைக் கணைகளாகத் தொடுக்க உடனடியாக பதில் சொல்லும் சுற்று.

திவ்யாவின் முறை வந்தது.

“மிஸ் திவ்யா. நீங்கள் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். உங்களுக்கு இந்தியாவின் வறுமையைப் பற்றித் தெரியுமா? வறுமையை ஒழிக்க உங்களிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?”

ஒரு ரிடையர்டு ஐ.பி.எஸ். கேட்டது.

திவ்யா ஒரு நொடி ஆடிப்போய்விட்டாள்.

ஆனாலும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு “நான் பசித்த வயிறுகளை பார்க்காதவள் இல்லை. உணராதவள் இல்லை. எனது பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகளின் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டு எனது பாக்கெட் மணியை மிச்சம் பிடித்து அவர்களின் ஸ்கூல் பீஸ் கட்ட உதவியிருக்கிறேன். இதை நான் பெருமைக்காக இங்கே சொல்ல வரவில்லை. இந்த பிளவுபட்ட சமுதாயத்திலே எனது பொறுப்பான பங்கை நிறைவேற்றியிருக்கிறேன் என்பதையே தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வசதி படைத்தவர்கள் தங்களுடைய அனாவசிய மற்றும் ஆடம்பரச் செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொண்டு அதை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினாலே போதும். இந்தியாவில் ஏழ்மை என்பது இனிமேல் இராது. மிகச் சாதாரணமான இந்தக் கொள்கையைப் பிரபலப்படுத்த என் உயிர் மூச்சு உள்ள வரை பாடுபடுவேன்.”

சந்தேகமே இல்லாமல் திவ்யா இந்திய அழகி ஆனாள்.

“திவ்யா. சிம்ப்ளி சூப்பர்ப். உனக்குக் கேட்கப்பட்ட கேள்விதான் மிகக் கஷ்டமானது. அதற்கு என்னமாய் பதிலளித்தாய். வெல்டன் திவ்யா. ஓ! அந்த காஸ்ட்யூம். கிரேட். ஒன்டர்புல். எங்களையெல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விட்டாய். கங்கிராட்ஸ்”.

திவ்யாவின் உயிர்த் தோழி ரம்யா வாழ்த்தினாள்.

“அதை ஏன் கேட்கிறாய், போ. என் காஸ்ட்யூம் டிசைனர் ரவி மேனன்தான் செய்தான். இந்த காஸ்ட்யூமுக்கு மட்டுமே பத்தாயிரம் ஆகிவிட்டது. எல்லாம் முடிந்த பிறகு பார்த்தால் சாஃப்ரன் கலருக்கு பதில் ரெட் வைத்திருந்தான் மடையன். நான் ரொம்ப டென்ஷனாகி விட்டேன். அதை அப்படியே கடாசிவிட்டு புதிதாக ஒன்று செய்யச் சொன்னேன். இரண்டே மணி நேரத்தில் தயாரானது. என்ன, பில் டபுளானது”.

“ஏய் ஏதோ செலவு மிச்சம் செய்து வறுமை ஒழிப்பு அது இதுன்னு பேசின மாதிரி இருந்துச்சு”.

“ஓ! அதுவா? ஏதோ ஒரு பேச்சுக்காக சொன்னால் அதைப் போய் சீரியஸாக எடுத்துக்கிட்டு. அதைவிடு. சென்னை வந்ததும் தாஜ்ல கிராண்ட் பார்ட்டி வைச்சிருக்கேன். அவசியம் வந்திடு. என்ன?”

– மே 2007

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *