எருதுகட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 10,741 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்று, புதன்கிழமை, ‘எருதுகட்டு’.

உக்கிரமான நாள்.

நிறைகுளவள்ளி அம்மனுக்கு வருஷா வருஷம் ஆவணிக்குள்ளே முளைக்கொட்டு நடத்தி ஆகணும். தவறினால் ஆத்தா ‘கோவம்’ ஊர் தாங்காது. எருதுகட்டு ஒரு வில்லங்க மான காரியம். ஆப்பநாட்டுச் சனம். பொங்கி விடும் பொங்கி குடிக்காத ஆள் இருக்க மாட்டான். சிறிசு. பெருசு… அத்தனையும் தள் னாடும். ‘குடிக்கக் கூடாது’ன்னு ஊர்க் கட்டுப்பாடு உண்டுதான். எவன் கேக்குறான்? வருஷத்திலே ஒருநாள் ஊர்க் கட்டுப்பாட்டை உடைக்கிறதிலேதானே சந்தோஷமே இருக்கு? சத்து. பொந்து, கண் மாய்க் கிடங்கு, கருவேலம் புதரு… எந்தப் பக்கம் திரும்பினாலும் கேனும். கிளாஸுமாக வியாபார மும்முரம் தான். அஞ்சு ரூபாய்க்கு ‘தீ’ மாதிரி சரக்கு போலீஸாம் ஜனத்தோடு ஜனமாகச் சேர்ந்து விடும். இறுக்கிப் பிடித்தால் சட்டம்-ஒழுங்கு நாறிப் போகும்.

கொட்டுக்காரர்கள் கும்மாளம் போட்டார்கள்.

‘டும்பளக்கா… டும்… டும்பளக்கா… டும்…’

சுழிக்காற்றுச் சருகாய் கழன்றார் கள். பெருநாழி கொட்டு, பேர்போன கொட்டு. எட்டு பேர் சேர்ந்து ஒரு ஜதை. குருசாமிதான் தலைவரு. ரோமம் புடுங்கிய சிட்டுக் குருவி மாதிரி திரேகம். விடைத்த மூக்கு. சிறுத்துக் குவிந்த உதடுகள். இமை ஆடாத குழிவிழுந்த கண்கள். தரை யில் குதிபாவாத நடை. சும்மா நடந் தாலும் இடுப்பில் கொட்டு இருக்கும் பாவனை.

‘இழவு வீடு’ என்றால் அதற்கு ஒரு ஆட்டம்; அடி. ‘எருதுகட்டு’ என்றால் அதற்கு ஒரு ஆட்டம்; அடி. தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டி. கல்லி ஜிப்பா, ரெண்டு கிளாஸ் ‘பட்டை’. போதை இறங்க இறங்க ஏற்றிக் கொள்ள தோது இருந்தால் ஆட்டம் ஜொலித்து விடுவான். வேடிக்கை பார்க்கும் வெள்ளை வேட்டிகளின் தோரணைகளைக் கலைத்து குதிக்க வைப்பான். தரை, புழுதி புரண்டு போகும்.

கோட்டை முனீஸ்வரருக்கு நிழல் தர ஒரு வேம்பு, ஒரு புளி. கிச்சிலப்ப நாயக்கன், இந்த இடத்தில் கோட்டை கட்டி வாழ்ந்தானாம். இப்பவும் ‘கோட்டை’ என்றுதான் பெயர். கட்டைச் சுவர் கூடக் கிடையாது. உழவு கட்டி இங்கேதான் எருது கட்டு நடத்தணும். முனீஸ்வரர் பார்வையிலே நடந்தால் ‘ரத்தப்பலி’ இருக்காதாம். அந்த தைரியத்திலேதான் மாடு பிடிக்கும் இளவட்டங்கள் தைரியமாகப் போய் எருதுகட்டுக் காளையின் கொம்புகளுக்கு இடையில் விழுவது.

பெரிய ஆட்களுக்கு, எருதுகட்டு நடத்தச் சம்மதம் இல்லே. சண்டை, சத்தம். வெட்டு, குத்து இல்லாமல் எருதுகட்டு முடியறதில்லே. வேடிக்கை பார்க்க வரும் வெளியூர்க்காரன், அவன் அவன் பார்ப்பகையை இங்கே வந்து தீர்த்துக் கொள்கிறான்.

வருஷா வருஷம் முளைக்கொட்டுக்காக கூடும் முதல் கூட்டத்திலேயே எருது கட்டுப் பிரச்சினை வரும். கடைசியிலே இளவட்டங்களின் பிடிவாதம்தான் ஜெயிக்கும்.

இந்த வருஷம் ‘தலைக்கட்டு வரி’ அம்பது ரூபாய். கைம்பொண்டாட்டிகளுக்கு ‘அரை வரி’. வண்ணான். குடிமகன், அரிஜனங்களுக்கு வரி கெடையாது. ஆத்தாளுக்கு பொங்கல் வச்சு, சாமி கும்பிட்டால்தானே வரி? அதுதான் கெடையாதே.

மாடு பிடிக்க மட்டும் பள்ளபட்டி ஆட்கள் வரணும். மாலை, மரி யாதை, வரவேற்பெல்லாம் கிடைக்கும். அய்யாமாரு கொடுக்கிற இந்த கௌரவமே பெருசு! இடுப்புக் குழந்தை போல், பள்ளபட்டி, ஒரு தனி குடியிருப்பு. அரிசனக் குடியிருப்பு. எருது கட்டுக் காளைகளெல்லாம் நேற்று ராத்திரியே வந்துவிட்டன. நாலு காளைகள். வந்திருக்கும் காளைகளில் பேர்போன காளை ‘ராமு’ முதுகுளத்தூர் பக்கம் ‘கருமல்’ கிராமத்துக் காளை. நாடு சுற்றி வந்த காளை. சாமான்யமாக பிடிபடாது. கழுத்திலே வடத்தை மாட்டி விட்டால் நாலு பேரையாவது குடலைச் சரித்தால்தான் ஆறும். ஊருக்கு முதல் கரைகாரர் ‘வேயன்னா’ செலவு பண்ணி கொண்டு வந்திருக்கும் காளை. காவல்கார வீட்டுத் தொழுவத்தில் நிற்கும் ‘ராமு’வைப் பார்க்க சனம் நெறித்தது. உரித்த வாழைப்பழத் தோல் போல மேனிக் கட்டு. வயித்துக்குள்ளே குடல் இருக் கோ… இல்லியோ! உடைமுள்ளு மாதிரி கொம்பு. நாகப் பாம்பின் முக வெறிப்பு.

‘ஆத்தாடியோவ்…!’ சனத்துக்குப் புல்லரித்தது.

கொட்டுக்கார குருசாமிக்கு மிச்ச மான போதை. திருவிழா உக்கிரம் தலைக்கேறி இருந்தது.

“ம்… அடி…. டும்… டும்..டும்…”

சனம் பிதுங்கியது. விலக இட மில்லை. தெரு நெடுக திருவிழாக் கடைகள், சேகுக்கடை, மிட்டாய் கடை, டீக்கடை. ஓட்டல், பீடி சிகரெட்டு, போலீஸு, சர்பத்துக் கடை. பலூன், ஊதி…… சந்து பொந் துக்குள்ளே சாராயக் கேன்… மைக் செட்டு… காச்… பூச்சு… காச்சு…பூச்சு…

வெளியூர்களில் இருந்து வேடிக்கை பார்க்க வந்து இருக்கும் சொந்தஞ் சுருத்துகளை, “வீட்டுக்கு வந்து கை தெனச்சுட்டுப் போங்க மாப்ளேய் …”கையைப் பிடித்து இழுத்தார்கள்.

கோட்டையைச் சுற்றி சனக்காடு.

சனத்திலே பாதி ‘சட்டிப் போலீஸு’, வேம்பு, புளிய மரமெல்லாம் மனிதக் காய்கள், வேப்பமர நிழலில் ரெண்டு பெஞ்சுப் பலகை. போலீஸ் அதிகாரிகளும், ஊருக்கு முதல் கரை காரர் வேயன்னா’வும் உட்கார்ந் திருந்தார்கள். வடக்கே, பெரிய கண் மாய் கரை நெடுகச் சனம். தெற்கே தெரு நெடுக பெண்கள் கூட்டம். எல்லார் சனத்துக்கும் ‘ராமு’ மாடு விளையாடுகிற விளையாட்டைப் பார்க்கத்தான் ஆசை ‘திரு திரு’வென வெயில்

பள்ளபட்டிக்காரர்கள் கொட்டு மரியாதையோடு வந்து கொண் டிருந்தார்கள். எல்லோர் கைகளிலும் வேல் கம்பு. வேல் கம்பின் கழுத்தில் பூ சுற்றி இருந்தது. பள்ளபட்டிக்கு முதல்கரை வைணப்பெருமாள். தலை யிலே உருமா கட்டு. கழுத்திலே மாலை, மணிக்கட்டிலே மல்லிகைச் சரம், எலுமிச்சம் பழம், கருத்திரேகம், முறுக்கு மீசை, வைணப் பெருமா ளுக்கு பின்னால் கையிலே வேல்கம்பு பிடித்து மாணிக்கம். தங்கதுரை, ஆத்தி. ராசு. கோவிந்தன், வேலு. மீசைக்கார ராசா, பாக்கியம், அப்பாக்களி. எல்லாருக்கும் கறுப்பு டவுசர், முண்டா பனியன், உருமா கட்டு. அரை ‘போதை’.

கூட்டத்தை விலக்கி விட்டு கோட்டைக்குள் நுழைந்ததும் கொட்டுக்கார குருசாமியோடு கூடி ஆட்டமான ஆட்டம். பெஞ்சுப் பலகையில் உட்கார்ந்திருக்கும் அதிகாரிகளுக்கு கும்பிடு போட்ட காலோடு கும்மாளம் போட்டார்கள்.

உள்ளூர் இளவட்டங்களுக்கு பச்சை டவுசர், முண்டா பனியன். முழு ‘போதை’.

மைதானத்தின் நடுவில் ‘வடம்’ கிடந்தது. விடலைப் பையன்கள் வடம் பிடிக்கத் தயாராய் நின்றார்கள்.

மாடு பிடிக்கப் போகும் உள்ளூர் இளவட்டங்களும் பள்ளபட்டி என வட்டங்களும் கோட்டை முனீஸ் வரருக்கு செதறு தேங்காய் உடைத்துக் கும்பிட்டு ‘திருமண்’ எடுத்து பக்தி யோடு நெற்றியில் பூசிக் கொண்டார்கள்.

சட்டிப் போலீஸ சனத்தோடு சனமாய் கலத்து சுற்றிக் கொண்டே வந்தது.

சனிமூலை வழியாக முதல்காளை இறங்கியது. மார்ப் பொதுச் செலவில் கொண்டு வந்த காளை நாலு பேர் கூடி வடத்தைத் தூக்கி காளையின் கழுத்தில் கோர்த்து முடிந்தார்கள். வடம் பிடிக்கும் விடலைகள் இங்கிருந்தே விசில் அடித்தார்கள். கழுத்துப் பாரம் தாங்க முடியாமல் மாடு திருகியது. மாட்டுக்காரர். மூக் கணாங்கயிற்றை ‘விருட்டென உறுவியதும் தார்க்கம்பால் பின் தொடையில் ஓங்கி ஒரு இடி இடித்தார். ஒரு துள்ளு துள்ளி ஓடி மண்டியிட்டுக் ‘கொம்பு மண்ணெடுத்து நிமிர்ந்து சிலிர்த்தது. ‘டும்… டும்… டும்… கோபம் ஏற்றினார்கள். எளவட்டங்கள் ‘சற… சற’ வென களத்தில் இறங்கினார்கள்.

‘டும்…. டும்…. டும்…

காளை, மேற்கே கிளம்பியது. விடலைகள், வடத்தை தூக்கிக் கொண்டு கிழக்கே ஓடினார்கள். மாடு திரும்பி எளவட்டங்களை விரட்டியது. சனம் சுத்தியது. ‘ஹேய்……” விடலைகள், வடக்கே ஓடினார்கள்.

பச்சை டவுசர்கார நாகு, காளை யின் திமிலில் போய் விழுந்தான். சனம் அலறியது. எல்லா எளவட்டங்களும் ‘திமு திமு’வென விழுந்து அமுக்கினார்கள்.

‘டும்பளக்கா …. டும்…. டும் பளக்கா… டும்பளக்கா … டும்’

நாகுவைத் தூக்கி வைத்துக் கொண்டு ரெண்டு ஊர் எளவட்டங்களும் ஆட்டம் போட்டார்கள்.

ரெண்டாவது காளை, கூட்டத்திற்குள் பாய்ந்து வேடிக்கை பார்க்க வந்த சனங்களை விரட்டியது. பிடிபட்டதும், கறுப்பு டவுசர்கார மாணிக்கத்தை தூக்கி வைத்துக் கொண்டு பள்ளபட்டி எளவட்டங்கள் மட்டும் ஆடினார்கள்.

‘டும்பளக்கா… டும்பளக்கா… டும் பனக்கா … டும்…!’

மூன்றாவது காளை, கறுப்பு டவுசர்கார அப்பாக்கனியின் தொடை யைக் குத்திக் கிழித்து விட்டு, நாலா வது சுற்றில் பிடிபட்டது. கறுப்பு டவுசர்கார கோவிந்தனை தூக்கி வைத்துக் கொண்டு பள்ள பட்டி எளவட்டங்கள் மட்டும் ஆட்டம் போட்டனர்.

‘டும்பளக்கா… டும்பளக்கா… டும்பளக்கா … டும்!’

கடைசியாக, சனி மூலையில் ‘ராமு’ காளை, தீ மிதியில் நிற்பது போல், கூடி இருந்த சனத்துக்கு இருப்புக் கொள்ளவில்லை. இமை ஆடாத ஆர்வம். சுற்றி விசில் சத்தம். தெற்கே, தெரு நெடுக பெண் கள், தலைமயிரை அள்ளி முடிந்து கொண்டு, கால் விரல் நுனியில் கழுத்து தீட்டி, தலை உயர்த்தி கண் குத்த நின் றார்கள். குருசாமி கூட்டம் அடிக்கிற அடியில் கொட்டுத் தோலை உரித்துக் கொண்டிருந்தார்கள். வேப்ப மரக் கிளை ஒன்று ஒடிந்து, ஏழெட்டுப் பேர் கீழே விழுந்து எழுந்து. மறு படியும் அடி மரத்து வழியே ஏறி வெறொரு கிளையில் அமர்ந்தார்கள். வடம் பிடிக்கும் விடலைகள், குத் துப் படாமல் தப்பிக்க முழிப்பாய் இருந்தார்கள். மாடு பிடிக்கும் என வட்டங்களுக்கு ‘போதை’ போன போக்குத் தெரியலே! எலுமிச்சம் பழத்தை நுகர்ந்தபடி சமாளித்தார் கள். ‘வேயன்னா’ தனக்கு அருகில் உட்கார்ந்து இருக்கும் போலீஸ் அதிகாரிகளிடம், “இந்தக் காளை… நான் கொண்டு வந்த காளை” என்றார்.

‘டும்பளக்கா … டும்..டும்பளக்கா … டும்….’

புழுதி கிளம்பியது. சட்டிப் போலீஸ் உஷார் ஆனது. ‘ராமு’ நிமிர்ந்து பார்த்தது. கூட்டத்தில் விசில் கீறியது. மாட்டுக்காரர் கழுத்து மணிச்சரத்தை அவிழ்த்தார். வடத்தை தூக்கி காளையில் கழுத்தில் மாட்டும் நாலு பேருக்கும் அடி வயிறு எவ்வியது.

“பயப்படாம … மாட்டுங்க”

வடத்தை மாட்டியதும் விலகி ஓடினார்கள். மாட்டுக்காரர் மூக்கணாங்கயிறை உறுவி ‘ராமு’வின் நடு முதுகில் ஒரு தட்டுத்தட்டி கையிலிருந்த மணிசரத்தைக் குலுக்கினார்.

ராமு, வலது முன்னத்திங்காலைத் தூக்கி ஒரு எட்டு எடுத்து வைத்து. வடம் பிடிக்கும் விடலைகளை நோக்கி… நாலு எட்டு.. வடத்தைப் போட்டு விட்டு கிழக்கே விழுந்து ஓடினார்கள். வடம் தனியே கிடந்தது. ‘டும் டும்…டும்…!’

ராமு, கொட்டுக்காரர்களைப் பார்த்தது. ‘டும்…. டும்…’ கொட்டுச் சத்தம் அடி இறங்கியது. குரு சாமியைப் பார்த்து ரெண்டு பாய்ச்சல்…. கொட்டுக்காரர்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தார்கள்.

மணிச் சத்தத்தைக் கேட்டு, ராமு. மேற்கே திரும்பியது. மாடு பிடிக்கும் எளவட்டங்கள் கௌரவமாய் பதுங்கினார்கள்.

ராமு. ஆற அமர நின்று நாலு திக்கும் பார்த்தது. தெற்கே, ‘டும்…. டும் டும்…’ ராமு. வடத்து மேலேயே ‘சிம்பி சிம்பி’ நடந்தது. வடத்து மேலே நடக்கிற மாடு. லேசிலே பிடிபடாது. ளெவட்டங்கள் அடர்த்தியாய் முன்னேறினார்கள்.

‘டும்பளக்கா… டும்.. டும்பளக்கா…. டும்…’ ராமு. திரும்பி, ஓர்ர்ர் …..சீர்ர்…சீர்….மீசைக்கார ராசாவைத் தூக்கி விட்டெறிந்தது. எளவட்டங்கள் எட்டுத் திக்கும் சிதறினார்கள். கூட்டம் கத்தியது “எவனோ… செத்தான்டா…!” ஊய்ய்…ய்…ய்…விய்..ஊய்..”

விடலைகள் வடத்தைத் தூக்கி கொண்டு சனி மூலைக்கு ஓடினார்கள். ராமு. சனி மூலைப் பக்கம் திரும்பிக் கிளம்பியது. வடத்தைக் கீழே போட்டு விட்டு சிட்டாய் பறந்தார்கள்.

‘டும்பளக்கா…டும்… டும்பளக்கா…. டும்… டும்…’

ஆறு சுற்று, ஏழு சுற்று ராமு பிடிபடலோ யாரும் நெருங்க முடியலே! சனம் ‘ஹ… An…’வெனக் கத் தியது. மைதானத்துக்குள் துண்டுகள் வீசினார்கள். தங்கதுரை. வேலு. பாக்கியம் மூன்று பேரும் இழக்கே, வடம் கிடக்கும் திசையில் மெதுவாய் பிரித்தார்கள். தனியே கிடந்த வடத்தை எடுத்து ஒரு கண்டு கண்டி விட்டார்கள்.

ராமு, கிழக்கே திரும்பிச் சிறியது. மேற்கே இருந்து இளவட்டங்கள் ‘சலசல’வென இறங்கினார்கள். ராமு, மேற்கே திரும்பி எளவட்டங்களை நோக்கி நாலு கால் பாய்ச்சலில்… கிழக்கே இருந்து கெதியாய் ஓடிவந்த தங்கதுரை கொம்புகளில் பாய்ந் தான். வேலு திமிலில் விழுந்து கவ் வினான். சனம் அலறியது. துண்டு களை வீசியது. விசில்…. விசில்..’டும் பளக்கா… டும்பளக்கா… டும்பளக் கா… டும்…’ ராமு. ஓட்டமாய் கொம்பு களை உலுப்பி உலுப்பி பார்த்தது. தங்கதுரையும் வேலுவும் விடுவதாக இல்லை . பின்னிக் கிடந்தனர். பாக் சியம் வடத்தை காளையின் கால் களுக்கிடையில் வளைத்து ஒரு சுண்டு சுண்டி விட்டான்.

ராமு சாய்ந்தது.

‘ஹேய்…ய்…ய்…..வீய்…..வ்வீய்…..’ கோட்டையைத் தாண்டி ஊர் அதிர்ந்தது. கொட்டுக் காரர்கள் குதியாய் குதித்தார்கள். பள்ள பட்டி இளவட்டங்கள், தங்கதுரையை தலைக்கு தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டமாய் ஆடினார்கள். தங்கதுரையைச் சுற்றி பெருங்கூட்டம். விசில் ‘வேயன்னா’வுக்குப் பின்னால் நின்ற முனியசாமி, குனிந்து, காதோரம் “மாமா நீங்க கொண்டு வந்த காளை ஒரு எளிய சாதிப்பய கையாலே பிடிபட்டுப் போச்சே!” வருத்தப்பட்டார்.

‘வேயன்னா’ நிமிர்ந்தார்.

“அப்படிச் சொல்லக் கூடாதப்பா. தங்கதுரை நம்ம ஊரு மரியாதையை காப்பாத்தி இருக்கிறான்”

சனம் கலைந்தது. கிழக்கே கலகம் கிளம்பியது. போலீஸ் துப்பாக்கிகளோடு ஓடியது.

“யார்… யாருக்குள்ளே சண்டையாம்?”

“வெளியூர் ஆளுங்களாம்”

நாலு திக்கும் சனம் சிதறி ஓடியது. ஓடிய கால்களுக்கிடையில் தங்கதுரை வேல் கம்புக் குத்துப்பட்டு செத்துக் கிடந்தான்.

– பிப்ரவரி 1993

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *