கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 16, 2023
பார்வையிட்டோர்: 3,076 
 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாட்சிமை தங்கிய மன்னர் பிரானின் விருந்தினர்களில் ஒருவனாக -அதுவும் மூன்று வருஷம் எட்டு மாதம் தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. நமது மாகாணத்தில் அச்சமயம் ராஜீயக் கைதிகளின் நிலைமை முன் னிருந்ததை விட மகா மோசமாகி விட்டது என்பதே என் தீர்மானம். பெருவாரியான ஜனங்கள் சட்ட மறுப்புச் செய்து சிறைவாசத்தை வரவேற்க அதி தீவிரமாக முனையாததாலும், அதன் காரணமாகச் சிறைச்சாலைகளில் ராஜீயக் கைதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும், இப்படிப்பட்ட நிலைமை ஏற்படுவதற்குக் காரண மாயிற்று. இதற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. திருச்சி ஜெயிலுக்குள் சதியாலோசனை ஆரம்பித்ததாகத் தொடரப் பட்ட சென்னைச் சதியாலோசனை வழக்கில் ஜூரிகளுக்குத் திருச்சியில் ஜெயில் ஒழுங்கே சிதறிப் போய்விட்டது என்ற அபிப்பிராயம் எப்படியோ உதயமாயிற்று. அவர்கள் தங்களுடைய தீர்ப்பில் இந்த அபிப்பிராயத்துக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்தே எழுதியிருந்தார்கள். திருச்சி ஜெயிலுக்குள், அவர்கள் குறிப்பிடுவது போல், அப்படி என்ன நடந்து விட்டது என்றெல்லாம் நாம் பரிசீலனை செய்வது அநாவசியமாகும் என்று கருதுகிறேன். அது நடந்து போன விஷயம். அவர்கள் என்னவோ ஸ்மிருதி வாக்கியம் மாதிரிக் கூறி வைத்தார்கள். அடுத்தாற் போல் சர்க்கார் அவர்கள் முடிவை நம்பிக் கொண்டு, எங்கள் மேல் பூர்ண ஆதிக்கம் செலுத்தித் தக்க கட்டுப்பாட்டிற்குள் வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தது. இதன் முடிவு எங்களுக்குக் கோரமான அடக்கு முறையாய்விட்டது. 

இந்தச் சிறிய கட்டுரையில் நான் கூறப்போகும் விஷயங்கள் பலருக்கு ஆச்சரியமாயிருக்கலாம். ஆனால் அவை உண்மையென்று மட்டும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மீரட் சதி வழக்குக் கைதியாயிருந்த ஸ்ரீயுத டாங்கே ஒரு சமயம் இந்தியச் சிறைகள் “பூலோக நரகம்” என்று கூறினார். நாங்கள் அநுபவித்ததை வைத்துக் கொண்டு பார்த்தால் நமது மாகாணத்திலுள்ள சிறைகளுக்கு அதை விடச் சிறப்பான பெயரைக் கண்டுபிடிப்பது துர்லபமே. 

ஒத்துழையாமை இயக்கமும் சட்ட மறுப்பும் கொந்தளித்துக் கொண்டிருந்த காலத்தில் சிறை புகுந்த நண்பர்கள் இதைக் கேட்டுக் கொஞ்சம் ஐயுறலாம். ஆனால் நான் சொல்ல வேண்டியவைகளை மட்டும் பொறுமையோடு கேட்டால் இந்த மாதிரி சந்தேகத்திற்கே இடமிராது. 

தண்டனைக்கு முன்பே ஜாகை தயார்! 

சென்னைச் சதியாலோசனை வழக்கில் நானும், வங்காளத்து ஸ்ரீ முகுந்தலால் சர்க்காரும், நமது மாகாணத்தின் பல வேறு ஜில்லாக்களைச் சேர்ந்த இன்னும் பதினெட்டுப் பேரும் சம்பந்தப்படுத்தப்பட்டிருந்தோம். வழக்கு ஜஸ்டிஸ் பக்கென்ஹாம் வால்ஷ் முன்னிலையில் 8-1-34-ல் விசாரணைக்கு வந்தது. 24-4-34-ல் வழக்கு முடிவாயிற்று. 

விசாரணையின் போது நாங்கள் சென்னைச் சிறைச்சாலையி லேயே இருந்தோம். மேஜர் கன்ட்ராக்டர்தான் சூபரின்டெண் டென்டாக இருந்தார். அவர் மிகவும் நேர்மையானவர்; ‘தப்புத் தண்டா’க் காரியங்களுக்குப் போகாதவர்; குற்றவாளிகளிடத்தும் பட்சமாகவும் தாராள மனப்பான்மையுடனும் நடந்து கொள்பவர் என்று எல்லாக் கைதிகளும் அவரைப் போற்றினார்கள். ஆனால் சர்க்காரும் அதைச் சார்ந்தவர்களும் எங்களைச் சுற்றி விரித்த துவேஷ வலையில் அவரும் சிக்கிக் கொண்டார். கைதிகளையும் அன்புடன் நடத்தும் ஸ்ரீ. கன்ட்ராக்டர் எங்கள் விஷயத்தில் நடந்து கொண்ட விதம் மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. 

எங்கள் வழக்கு முடிந்தது ஏப்ரல் 24-ந் தேதி என்று முன்னமேயே கூறியிருக்கிறேன். அப்பொழுது விசாரணை நடந்து கொண்டிருந்த சமயம். மார்ச் மாதத்தில் ஒரு நாள் எங்களுக்கு எப்படியும் தண்டனை கிடைக்கும் என்று சூசகமாக எதிர்பார்த்து, அப்படித் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின் எங்களில் யார் யாரை, இந்த மாகாணத்திலுள்ள எந்தச் சிறைச்சாலைகளுக்கு அனுப்ப வேண்டும் என்பது சம்பந்தமாக இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அவர் எழுதினார். சென்னை நீதி மன்றத்தின் அதிகாரத்தையும் அந்தஸ் தையும் இவ்வளவு எளிதாக ஸ்வீகரித்துக்கொண்டு விட்டார் ஸ்ரீ. கன்ட்ராக்டர். இது நீதி மன்றத்தை அவமதிப்பதாகாதா? ஒரு மனிதன் எவ்வளவு குற்றங்கள் செய்திருந்த போதிலும், அவனைக் குற்றவாளி என்று நிரூபித்துத் தீர்ப்பளிக்கும் வரை, அவனைக் குற்றமற்றவனாகவே சட்டம் கருதுகிறது. ஆனால் ஸ்ரீ.கன்ட்ராக்டர் இதை யெல்லாம் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. இந்த விசித்திரமான வேண்டுகோளுக்கு அவர் காட்டும் காரணத்தையும் பார்ப்போம்: சென்னைச் சதியாலோசனை வழக்கில் சம்பந்தப்பட்ட நாங்கள் ஜெயிலுக்குள் ஒழுங்கைத் தகர்த்தெறிகிறவர்களாம்; மற்ற சாதாரணக் கைதிகளையும் உண்ணாவிரதம் இருக்கும்படி தூண்டினோமாம்; இந்த நிலைமையை இப்படியே வளர விட்டுக் கொண்டு போவது ஆபத்தாய் முடியுமாம். எவ்வளவு சீக்கிரமாக நாங்கள் பிற இடங்களுக்கு வெளியேற்றப் படுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நலம் என்று அவர் கருதினார். ஸ்ரீ. கன்ட்ராக்டர் இந்த மாதிரித் தம்மிடம் ஒரு குற்றமுமில்லை என்றும் எங்களுடைய சகிக்க முடியாத நடத்தையைப் பற்றிக் குறை கூறியும் எழுதியிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. 

ஆனால் உண்மை அவர் கூற்றுக்கு நேர் மாறானது. ஆரம்பத்தில் விதிகளின்படி எங்களுக்கு ஏற்பட்ட வசதிகளையும் சௌகரியங் களையுங் கூடச் செய்து கொடுக்காமல் நாங்கள் அளவற்ற கஷ்டங் களை அநுபவிக்கும்படி விட்டு விட்டார். 1933 ஜூலை மாதம் கடைசி வாரத்தில் நாங்கள் சென்னைச் சிறையிலிருந்தோம். எங்கள் துன்பமும் அப்பொழுது தான் ஆரம்பித்தது. பற்பொடி, சோப், எண் ணெய் இன்னும் இது மாதிரி அவசியமான சாமான்கள், விசா ரணையிலிருக்கும் கைதிகளுக்குக் கொடுக்கலாமென்று சட்டம் இருக்கிறது. ஆனால் எங்களுக்கு இவை யெல்லாம் மறுக்கப் பட்டன. எங்களை எப்பொழுதும் பூட்டுப் போட்டுப் பூட்டியே அடைத்திருந்தார்கள். இதே மாதிரி ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து கொண்டிருந்தது. நாங்கள் எத்தனையோ தரம் ஸ்ரீ. கன்ட்ராக்டரிடம் எங்களுக்குரிய சாமான்களைக் கொடுக்கும்படி செய்ய மன்றாடிக் கேட்டோம். தண்டனை பெறாத கைதிகளும், விசாரணையி லிருக்கும் கைதிகளும் தங்களுடைய சொந்தச் செலவிலேயே ஆகாரம், உடை முதலிய தேவைகளைத் தருவித்துக் கொள்வதற்கு உரிமையுண் டென்றும், அவர் இவ்விஷயமாய்த் தம்மிஷ்டம்போல் நடக்க உரிமையில்லை யென்றும், அவசியமான பொருள்களை எங் களுக்கு அளிக்க வேண்டியது சட்டப்படி அவர் கடமையென்றும் எடுத்துச் சொன்னோம். 

ஆனால் அவர் நாங்கள் சொன்ன காரணங்கள் ஒன்றையும் காது கொண்டு கேட்பதாயில்லை. நாங்கள் இந்த விஷயத்தைக் கோர்ட்டின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம். ஏற்கெனவே ஏற் பட்டிருந்த விதிகளை ஸ்ரீ. கன்ட்ராக்டர் அனுசரிக்க வேண்டுமென்று ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். அப்புறமும் கூட அவர் கொஞ்சமும் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. 

முன்னிருந்த மன வுறுதியுடன் பாராமுகமாகவே யிருந்தார். நாங்கள் எங்களுக்குள் என்ன செய்வதென்று ஆழ்ந்து ஆலோசனை செய்தோம். கடைசி வழியாக எங்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கும் வரை உண்ணா விரதம் இருப்பதென்று தீர்மானிக்கப் பட்டது. நாங்கள் உண்ணாவிரதம் அனுஷ்டித்தோம். மூன்றாவது நாள் ஸ்ரீ. கன்ட்ராக்டர் தன்னுடைய பிடிவாதத்தை விட்டு எங்களுடைய வேண்டுகோளுக்கு இரங்கினார். அவருடைய சர்க்கார் விதித்த சட்டங்களையே அவர் கௌரவப்படுத்த வேண்டுமென்ப தற்கு நாங்கள் இவ்வளவு மனோ வேதனையும் சரீரத் துன்பமும் அனுபவிக்க வேண்டியிருந்தது. 

ஸ்ரீ. கண்ட்ராக்டருடைய இந்தத் துணிச்சலையும் உதாசீனத் தையும் மேலதிகாரிகள் கண்டிக்கவேயில்லை. அதற்குப் பதிலாக எங்களைப் பற்றி எங்கும் பரப்பப் பட்டு வந்த துவேஷப் பிரசாரக் கோஷ்டியில் அவர்களும் கலந்து கொண்டார்கள். இந்திய சர்க்காரின் ஹோம் மெம்பர் ஹென்றிஹெய்க்கிலிருந்து ஐரோப்பிய சங்கத்து எப்.இ. ஜேம்ஸ்வரை எல்லோரும் இந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். விசாரணையின் தொடக்கத்திலேயே அவர்கள் பகிரங்கமாக எங்களைக் குற்றவாளிகளாகக் கருதினார்கள். எளிதில் பற்றி யெரியக் கூடிய பொருளில் தீக்கங்கு விழுந்தால் என்ன ஆகும்? ஏற்கெனவே இவர்களுடைய அபிப்பிராயத்தைக் கொண் டிருந்த வட்டாரங்களில் இந்த அபவாதமும் சேர்ந்து கொண்டது. ஸ்ரீ.கன்ட்ராக்டருடைய வேண்டுகோளை ஆதரித்து 11-4-34-ல், அதாவது எங்கள் விசாரணை முடிவதற்கு 13 நாளைக்கு முன்பே, இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஸ்ரீ. கன்ட்ராக்டரின் வேண்டுகோளின் படி, எங்களைப் பல சிறைகளுக்குப் போக உத்தரவு பிறப்பித்து விட்டார். எங்களுக்கு எப்படியும் தண்டனை கிடைத்து விடும் என்ற எண்ணம்தான் இந்த உத்தரவுக்கு அடிப்படை. இந்த உத்தரவை எப்படி வர்ணிப்பது என்று இன்னமும் எனக்கு விளங்கவில்லை. இது அவர்களுடைய தவறா? அஜாக்கிரதையா? அல்லது அதி காரத்தைத் துர்விநியோகம் செய்ததா? நான் ஏதோ சிறைச் சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரலைத் தாக்கி எழுதுகிறேன் என்று நினைத்துவிடக் கூடாது. எனக்குத் தெரிந்த மட்டும் அவர் ரொம்ப நல்லவர்; தாராள நோக்குடையவர்; ஈவிரக்க முள்ளவர்; குற்றவாளிகள் எனக் கருதப்படுவோரின் நலனுக்காகவும், வளர்ச்சிக் காகவும் பாடுபடக்கூடியவர். நீதி ஸ்தலத்தை அவமதிப்பதாயுள்ள இந்தக் காரியத்திற்கு அவர் எவ்வளவு தூரம் பொறுப்பாளி என்றும் எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆனாலும் விஷயங்கள் நடந்திருக் கின்றன. வெறுக்கத் தகுந்த இந்த மாதிரிக் காரியங்களை ஜனங் களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்பது என் அவா. மாகாணத் தலைவர்களின் கவனத்துக்கும் இவை வர வேண்டுமென்பது என் விருப்பம். 

எந்த ரீதியில் இந்த சர்க்கார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது? அதன் அடிப்படை என்ன? நாங்கள் எல்லோரும் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவோம் என்பது சர்க்காரின் தீர்மானம்; அதில் துளிகூடச் சந்தேகமே அவர்களுக்கு இல்லை. ஒரு வேளை நீதிபதியின் தீர்ப்பு வேறு விதமாக மாறும் பட்சத்தில் இவர்கள் கட்டின மனோராஜ்யம் சிதைந்து போக வேண்டியது தானே? அப்பொழுது இவ்வளவு ஆர்ப்பாட்டமும் என்னவாகும்? இதை யோசிக்கும் பொழுது நாம் வேறொரு முடிவுக்கு வர வேண்டியிருக்கும். 

ஒரு வேளை அதிகாரத்தாலோ வற்புறுத்தலாலோ முயற்சித்து, சில வருஷங்களுக்கு எங்களைச் சிறைகளுக்குள்ளே தள்ளி விடலாம் என்ற நிச்சயம் இருந்திருக்குமோ? இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் எங்களை எந்தெந்த ஜெயில்களுக்கு அனுப்ப வேண்டுமென்று அதில் கண்டிருந்ததோ அங்கெல்லாம் ஏகப் பரபரப்பு. 

எங்களை வரவேற்பதற்காக ஆயத்தங்கள் – முன்னெச்சரிக்கை யான காரியங்கள் செய்யப்பட்டன. நாங்கள் நிச்சயமாய் வந்து விடுவோமா அல்லது விசாரணை செய்த நீதிபதியின் தயாளத்தால் எங்களில் யாவரும் அவர்கள் பிடியிலிருந்து தப்பி விடுவோமா என்பதைக் கூடப் பத்திரிகைகளைப் பார்த்துக் கொண்டே யிருந்திருப்பார்கள் போலும்! 

1934-ம் வருஷம் ஏப்ரல்மீ 24-ம் தேதியன்று மாலையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. எங்களில் மூன்று பேர் விடுதலையடைந்தார்கள். மற்றும் 17 பேரும் தண்டனையடைந்தோம். ஸ்ரீ கன்ட்ராக்டர் நேரத்தை வீணாக்காமல் முன்னேற்பாட்டின்படி எங்களை மூன்று பிரிவுகளாக அன்றைய தினமே பிரித்து விட்டார். 25-ம் தேதியன்று கண்ணனூருக்கு ஒரு பிரிவும், கோயம்புத்தூருக்கு ஒன்றும், வேலூருக்கு ஒன்றுமாக அனுப்பி வைத்தார். கடைசிப் பிரிவில் நான்,ஸ்ரீ.நாராயணன் நம்பியார், ஸ்ரீ தசரதராம ரெட்டி, ஸ்ரீ ஜெகந்நாதன் ஆக நால்வரும் இருந்தோம். 26-ம்தேதி காலை எங்களைப் பெல்லாரி ஜெயிலுக்கு மாற்றி அனுப்பினார்கள். 

நாங்கள் ஜெயிலை அடைந்த போது இரவு எட்டு மணியிருக்கும். பொதுவாக 6-மணிக்குப் பிறகு எந்தக் கைதியையும் ஜெயிலுக்குள் அனுமதிப்பது வழக்கமில்லை. ஆனால் எங்கள் விஷயத்தில் அவர்கள் விசேஷச் சலுகை காட்டினார்கள். கொஞ்சம் கூடத் தாமதிக்க வைக்காமல் எங்களை வந்தவுடனே உள்ளே அனுமதித் தார்கள். இந்த வேண்டாத சலுகை காட்டப் போக, நாங்கள் அன்றிரவு முழுவதும் அவஸ்தைப்பட வேண்டியிருந்தது. நாங்க ளெல்லாம் பி-வகுப்புக் கைதிகள். எங்களுக்குச் சர்க்கார் செலவில் படுக்கையும் தலையணையும் பெற்றுக் கொள்ள உரிமையுண்டு. ஆனால் அன்று குளிர்ந்த சிமின்ட் தரையில், விரிப்பில்லாமல், கையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு படுத்தோம். 

அறை முழுவதும் ஒரே புழுதி; துர்நாற்றம். அதைச் சுத்தம் செய்து எவ்வளவு காலம் ஆகியிருக்குமோ! போதாக்குறைக்கு மூட்டைப் பூச்சிகள் இரத்தம் உறிஞ்சும் தொழிலில் ஈடுபட்டன. எல்லாமாகச் சேர்ந்து அன்று இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அவஸ்தைப் பட்டோம். இத்துடன் எங்கள் துன்பம் முடியவில்லை. அப்பொழுது பெல்லாரி ஜெயிலில் ஸ்ரீ. ஹோ என்பவர் சூபரின்டெண்டென்டாக இருந்தார். அவர் ராஜீயக் கைதிகளோடு அடிக்கடி பொருதுபவர். நாங்கள் வந்து சேர்ந்த மறுநாளே அவர் எங்களைச் சண்டைக் கிழுக்க ஆரம்பித்தார். ஹைகோர்ட்டு நீதிபதி எங்களை பி-வகுப்பில் போட்டிருந்தாலும், ஸி-வகுப்புக் கைதி களைப் போல் எங்களையும் நடத்தும்படி தம் சிப்பந்திகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதன் பேரில் மறுநாள் காலையில் பி-வகுப்புக் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் காப்பிக்குப் பதிலாக, எங்களுக்கு அரிசிக் கஞ்சி கொண்டு வந்து கொடுக்கப்பட்டது. நாங்கள் இந்த மாதிரி நடத்தையைக் கண்டித்து, அதைக் குடிக்க மறுத்து விட்டோம். உடனே எங்களைத் தனித்தனியாக அறைகளில் போட்டுப் பூட்டும்படி உத்தரவு போட்டார். பிறகு அதிகாரிகளுடன் காலை 8 மணிக்கு ஆரம்பித்த பேச்சு 1 மணிக்குத்தான் முடிவடைந்தது. கடைசியில் எங்களை பி-வகுப்புக் கைதிகளாக நடத்த ஸ்ரீ.ஹோ ஒப்புக் கொண்டார். இந்த மாதிரி நடத்த ஒப்புக் கொண்டதில் தாம் என்னவோ ரொம்ப தாராளம் காட்டி விட்ட தாகத்தான் அவர் எண்ணம். பெல்லாரி ஸென்ட்ரல் ஜெயிலில் முதல் நாள் இப்படிக் கழிந்தது. 

அங்கு மூன்று மாதங்கள் இருந்தோம். அதற்குள் என்னையும் ஸ்ரீ நம்பியாரையும் வேலூருக்கு அனுப்பி விட்டார்கள். மற்ற இருவரும் கோயம்புத்தூர் சிறைக்குச் சென்றார்கள். 

பி-கிளாஸ் ஸி-கிளாஸான கதை 

நாங்கள் வேலூருக்குச் சென்று இரண்டு மாதம் ஆவதற் குள்ளாக 5-10-34-ல் சர்க்கார் ஒரு உத்தரவை அனுப்பி ஒரு விதக் காரணமுமில்லாமல் என்னையும் ஸ்ரீ. நாராயணன் நம்பியார், ஸ்ரீ. கோபால சாஸ்திரி இவர்களையும் ஸி-வகுப்புக்கு மாற்றி விட்டனர். பொதுவாக ஒருவரை ஏ-வகுப்பிலோ பி-வகுப்பிலோ போட்டு விட்டால் பிற்பாடு இதை ஊர்ஜிதப் படுத்துவதானாலும் அல்லது மாற்றுவதானாலும் சர்க்கார் ஒரு மாதத்துக்குள்ளாகவே நடவடிக்கை எடுத்துக் கொள்ளுவதுண்டு. அதுதான் எப்பொழுதும் அனுஷ்டிக்கப் பட்டு வரும் முறை. ஆனால் எங்கள் விஷயத்தில் சர்க்காருக்கு 5 மாதத்திற்கு மேல் அவகாசம் வேண்டியிருந்தது. இந்த மிதமிஞ்சின சுணக்கம் ஏதோ மூடு மந்திரமாகத்தான் இருக்கிறது. 

நாங்கள் எல்லோரும் 1933 ஜூலை கடைசி வாரத்தில் அரெஸ்ட் செய்யப்பட்டோம். 1933 ஆகஸ்டுக்கப்புறம் நானும் ஸ்ரீ. சாஸ்திரியும் பி-வகுப்பில்தான் இருந்தோம். அல்லது பி-வகுப்புக்கு ஒப்பான வகுப்பில் இருந்தோம். ஆகவே ஸி-வகுப்புக்கு மாற்றும் பொழுது நாங்கள் 13 மாதங்களுக்கு மேலாகவே பி-வகுப்பிலிருந் திருக்கிறோம். எந்த வகுப்பில் எங்களை நிரந்தரமாக வைக்க வேண்டுமென்று முடிவு செய்ய இவ்வளவு காலம் பிடித்தது. 

எங்களை இவ்விதம் தாழ்த்தினதற்கு சர்க்கார் உத்தரவில் ஒரு காரணமும் இல்லை. கைதிகளை வகுப்பு வாரியாகப் பிரிப்பதற்குச் சில சட்டங்கள் சர்க்காராலேயே ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, ஒருவனுடைய கல்வியையும் சமூக அந்தஸ்தையும் ஒட்டி, அவனுக்கு ஏ-வகுப்போ, பி-வகுப்போ கொடுக்கப் படுகிறது. ஸ்ரீ சாஸ்திரி மாதம் 100 – ரூக்கு மேற்பட்ட சம்பளத்தில் ரங்கூனில் அரசாங்கத் தந்தி ஆபீசில் வேலை பார்த்தவர். அதை ராஜிநாமா செய்து விட்டு, 1930-ல் வேதாரண்யம் சத்யாக்ரக இயக்கத்தில் சேர்ந்து சிறைவாசத்தை மேற்கொண்டார். 1932-லும் சட்டமறுப்பு இயக்கத்தில் அவர் பி-வகுப்புக் கைதியாகச் சிறையிலிருந்தார். பின்னர் எங்களுடன் சேர்ந்து அவர் தண்டிக்கப் பட்டது மூன்றாவது சிறைவாசம். இதற்கிடையில் பி-வகுப்பிற்கு லாயக்கில்லாதபடி அவருடைய அந்தஸ்து திடீரென்று கீழே விழுந்து விட்டதா? என் விஷயத்தைக் கவனித்தால், நான் சென்னைச் சர்வ கலாசாலையில் படித்த ஒரு பி.ஏ; சாப்பாட்டிற்குப் போதுமான சொத்துமுடையவன். தோழர் நம்பியார் மலை யாளத்தைச் சேர்ந்தவர். வழக்கு ஹைகோர்ட்டில் நடக்கும் பொழுதே அவர் தம்மை பி -வகுப்பில் வைக்குமாறு லா மெம்பருக்கு மனுச் செய்திருந்தார். அதன்படி மலபார் கலெக்டரால் அவருடைய அந்தஸ்து முதலியவை விசாரிக்கப்பட்டு, கிடைத்த தகவலின் பேரில் அவருக்கு பி-வகுப்பு கொடுக்கப்பட்டது. வகுப்பு வாரியாகப் பிரிக்கப்படும் பொழுதே ஒவ்வொருவர் விஷயத்திலும் நன்றாகப் பரிசீலனை செய்த பின்பே இன்ன வகுப்பு என்று நிர்ணயிக்கிறார்கள். விசாரணையின் போது கூடப் போலீஸும் எங்களில் சிலருக்கு மேல் வகுப்பு கொடுப்பதைப் பற்றிப் பலமாக ஆட்சேபித்தனர். இந்த மாதிரி நடந்ததையெல்லாம் கவனித்தால், தங்களுக்குப் போதிய தகவல்கள் கிடைக்கவில்லை யென்றோ, நன்றாகப் பரிசீலனை செய்வதற்கு அவகாசமில்லை யென்றோ, சர்க்கார் குறை கூறவே இடம் கிடையாது. அதற்குப் பிறகும் வகுப்பைக் குறைப்பதற்கு அனுகுணமாக எங்களிடம் திடீரென்று எவ்வித மாறுபாடும் நிகழ்ந்து விடவில்லை. அப்படி யிருக்கும் போது சர்க்கார் உத்தரவு காரணமில்லாமலும் அநீதியாகவும் பிறப்பிக்கப்பட்டது. தாங்களே ஒரு காலத்தில் வகுத்த விதிகளையே தகர்த்தெறிந்து விட்டார்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? 

துயரப் பெருங்கதை 

ஸி-வகுப்புக்கு மாற்றியதால் விபரீதமான விளைவுகள் ஏற்பட்டன. எங்களிலே சிங்கம் போன்றிருந்த ஒரு தோழர் மரித் தொழிந்தார் என்றால், அதற்குக் காரணம் இந்த வகுப்பு மாற்றந் தான். எங்கள் அனைவரிலும் சாஸ்திரிதான் மிகவும் பலிஷ்டர். ஸி-வகுப்பு அவரைப் படிப்படியாக உலர்ந்து, நலிந்து, இடை விடாத துன்பத்திற்கு ஆளாக்கி விட்டது. சகிக்க முடியாத வயிற்று வலியால் அவர் பட்ட பாடு அளவில்லாதது. இந்த வலி வகுப்பு மாறிய பிறகே தோன்றியது. பத்து மாதம் அவர் நரக வேதனையை அனுபவித்து வந்தார். வாழ்க்கையே பெரும் பாரமாய்ப் போய் விட்டது. அன்னத் துவேஷமேற்பட்டது. சோறு செல்லவில்லை. அதனால் அவருக்கு ஜவ்வரிசிக் கஞ்சி கொஞ்சம் கொடுக்கப்பட்டு வந்தது. வஜ்ரம் போன்ற அவர் உள்ளம் தேக உபாதைகளாலும், உணவுக் குறைவாலும், உடைந்து சிதற ஆரம்பித்தது. 1935, ஜூலை மாத ஆரம்பத்தில் ஒரு நாள் இரவு, அவர் தம் அறையில் தூக்கிட்டுக் கொள்ள முயற்சித்தார். ஆனால் காவல் சிப்பாயால் தடுக்கப் பட்டார். இத்தனை துன்பத்தில் துடித்துக் கொண்டிருந்த அவருக்கு வேண்டிய சிகிச்சை செய்வதற்குப் பதிலாக, அதிகாரிகள் அவர் தம்மையே மாய்த்துக் கொள்ள முயன்றதற்காக வழக்குத் தொடர்ந் தார்கள். ஓரிரண்டு விசாரணைகள் கூட நடந்தன. இடையில் அவர் சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் உத்தரவுப்படி, எக்ஸ்’ரே பரிசோதனைக்காகவும், அவசியமானால் சஸ்திர சிகிச்சைக்காகவும், சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு மாற்றப் பட்டார். பரிசோதனையின் மூலம் சில உடற் கோளாறுகள் தெளிவானதன் காரணமாக அவர் ஆபரேஷன் செய்து கொள்ள வேணுமென்று சொல்லப்பட்டது. அவரும் சம்மதித்தார். 1935 – ம்u, ஆகஸ்ட் 4-ம்s காலை, கலனல் பண்டாலை அவர்களால் ஆபரேஷன் செய்யப்படுவதற்காக அவர் ஆபரேஷன் மேடைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின் அவர் உயிருடன் மீளவில்லை. இந்த மரணத்தைப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரிய வில்லை. டாக்டர்களிலிருந்து வார்டு பையன்கள் வரை எவரும் எதையும் வெளியிடுவதில்லை. இதைப் பற்றியே அவர்கள் பேச விரும்பவில்லை. சாஸ்திரியின் மரணம் நேர்ந்த விதத்தையும், எந்த நோய்க்காக அவருக்குச் சஸ்திர சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. அதே வருஷம் அக்டோபர் கடைசி வாரத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு எக்ஸ்’ரே சோதனைக்கு அனுப்பப்பட்ட என் தோழர் நம்பியாரின் அநுபவமும் இதுதான். அதாவது அவரால் சாஸ்திரியைப் பற்றி ஒரு செய்தியும் தெரிந்து கொள்ளவே முடியவில்லை. 

நம்பியார் உயிரோடு இருக்கிறார் என்றாலும், உயிர் உடலோடு எப்படியோ ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஸி-வகுப்புக்கு மாற்றப்பட்டதிலிருந்து அவருக்குக் குடல் கோளாறுகளுடன் அஜீரணமும் ஏற்பட்டது. பின் வயிற்றுளைவு, வயிற்றோட்டம், சீதம் விழுதல் முதலிய நோய்களும் தொடர்ந்து கொண்டன. மாதக் கணக்காய்ச் சீதம் விழுந்து கொண்டேயிருந்தது. குடலருகே இடைவிடாத நோவும் இருந்து வந்தது. தினந்தோறும் வாந்தி யெடுப்பதும் சகஜமாய்ப் போயிற்று. கொஞ்சம் சோறு உண்டால் ஓரிரண்டு மணி நேரத்தில் அத்தனையும் வாந்தி யெடுத்து விடுவார். இதற்காக ஜவ்வரிசிக் கஞ்சியே ஆகாரமாக்கப்பட்டது. ஒரு நோயாளி மாதக் கணக்காய் இந்தக் கஞ்சி மட்டும் குடித்துக் கொண்டிருந்தால் என்ன கதியாகுமென்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம். சென்னையில் எக்ஸ் ‘ ரே பரிசோதனையில் அவருடைய வயிற்றில் புண் இருப்பது தெரிய வந்தது. டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றனர். ஆனால் அவருடைய குடும்பத்தார் அதற்கு இணங்கவில்லை யென்று தந்தி கொடுத்தனர். சாஸ்திரியின் மரணத்தைக் கேட்டு அவர்கள் பயந்திருக்கலாம். இவ்வாறு நம்பியார் சஸ்திர சிகிச்சை செய்யப்படாமலே திரும்ப வந்தார். அவர் திரவ ஆகாரமே சாப்பிட்டு வர வேண்டுமென்று சொல்லப்பட்டது. 

1934-ம்ளு அக்டோபரிலிருந்து நான் வாய்ப்புண்ணாலும் அஜீரணத்தாலும் கஷ்டப்பட ஆரம்பித்தேன். அவை, ஒரு மாதம் இரண்டு மாதம் நின்று, அடிக்கடி தொந்தரவு கொடுத்துக் கொண்டே வந்தன. நான் நிறையிலும் குறைந்து கொண்டே வந்தேன். சிறை சூபிரண்டென்டு லெப்டினன்ட் சங்கர் அதைக் கவனித்து எனக்கு வழக்கமாய்க் கொடுக்கும் சாதத்திற்குப் பதில் கோதுமை ஆகாரம் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தார். சில மாதங்களுக்கு நான் கோதுமை ஆகாரம் சாப்பிட்டு வந்ததால் எடையும் கூடிவர ஆரம்பித்தது. மேமீ இறுதியில் ஸ்ரீ. சங்கர் மாற்றப்பட்டு அவர் ஸ்தானத்தில் மேஜர் ரமணன் வந்தார். ஸ்ரீ. சங்கருடைய ஏற்பாட்டின்படி அந்த மாதம் முழுதும் எனக்குக் கோதுமை உணவு கிடைத்து வந்தது. அந்தக் கால அளவு முடிந்ததும் ஸ்ரீ. ரமணன் மீண்டும் கோதுமை ஆகாரம் அளிக்க மறுத்துவிட்டார். மறுபடி பழைய கதைதான்; எடையில் குறைய ஆரம்பித்தேன். பலமுறை நான் வேண்டிக் கொண்டும் ஸ்ரீ. ரமணன் இணங்கவில்லை. ஆரம்பத்தில் 138 ராத்தல் இருந்த என் எடை 1935 செப்டம்பர் ஆரம்பத்தில் 116 ஆகக் குறைந்தது. மிகவும் பலஹீனமும் அடைந்தேன். 

கடைசியாக நான் வேண்டிக்கொண்டதற்கு ஸ்ரீ ரமணன், நான் வெளியே போய் இஷ்டமான ஆகாரங்களைச் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிக் கொள்ளலாம் என்று முரட்டுத் தனமாய்ப் பதிலளித்தார். அவருக்குக் கீழிருந்து வேலை பார்க்கும் மற்ற அதிகாரிகள் மூலமும் சொல்லி அவருக்கு நியாயத்தைப் புகட்டலாம் என்று பார்த்தேன். பலிக்கவில்லை. கடைசியாகப் பன்னிரண்டு நாள் உண்ணாவிரதமிருந்தேன். ஸ்ரீ.ரமணன் நான் உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டால் நல்ல முறையில் நடத்துவதாக வாக்குக் கொடுத்ததன் மேல் நான் விரதத்தை நிறுத்தினேன். ஆனால் ஸ்ரீ. ரமணன் செய்த முதல் காரியம் என்ன வென்றால், ஜெயில் விதிகளை மீறியதாக என் மேல் வழக்குத் தொடர்ந்ததே. அதன் பலனாக 1936-ம் ளு மார்ச் 2-ம் ௨ எனக்குக் கூடுதலாக மூன்று மாதத் தண்டனை கிடைத்தது. அம்மாதம் 31-௨ நான் கண்ணனூருக்கு மாற்றப்பட்டேன். 

சிறை வாழ்க்கையைப் பற்றி என் அநுபவங்கள் சிலவற்றை மேலே குறிப்பிட்டிருக்கிறேன். இக்கட்டுரையை முடிப்பதற்குள், எங்கள் சிறை வாழ்க்கையைப் பற்றிய பொதுவான சில விஷயங்களையும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். 

பார்க்கத் தகாதவர்களும் நெருங்கத் தகாதவர்களும்: 

தன்னுடைய சுயேச்சையை இழந்து சிறைச்சாலையில் கைதியாகப் போவது எப்படியிருக்கும் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்த விஷயமே. அந்த க்ஷணமே அவன் தன் உற்றார் உறவினர், மற்றும் ஆப்தமான நண்பர்களிடமிருந்தும் வேறுபடுத்தப்படுகிறான். அவனைச் சுற்றிலும் சிறைச்சாலையின் சுவர்கள் அரண்கள் போல நிற்கின்றன. வெளியுலகத்துக்கு அவன் உயிரோடிருந்தும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். வெளியுலகில் நாகரிக முற்போக்கு ஏற்பட்டு வருவதும், ராஜீயக் கொந்தளிப்புகள் தேசத்தில் மூண்டிருப்பதும் அவனுக்குத் தெரியாது. அவன் தனி. 

இது சாதாரணக் கைதியின் நிலைமை. ஆனால் ‘பயங்கரர்கள்’ என்று பட்டம் சூட்டப் பெற்றவர்கள் பாடு மகா மோசம். நாங்கள் சென்றபொழுது இந்தத் தனிமையே தாங்க முடியாததாயிருந்தது. மேலும் ஆரம்பத்தில் சொன்னபடி திருச்சி சம்பவங்களில் சர்க்காருக்குப் பூர்ண நம்பிக்கை ஏற்பட்டதிலிருந்து எங்களை மற்றக் கைதிகளோடு-ராஜீயக்கைதியானாலும் சரி, இதரர்களானாலும் சரி சேராமல் பிரித்து வைத்திருக்க வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எங்களை ஒருவரும் அண்டவும் கூடாது; எங்களோடு ஒரு வார்த்தை பேசவும் கூடாது. மீறினால் தண்டனை. 

ஒரு சிறைச்சாலையில் இந்த உத்தரவை அளவுக்கு மிஞ்சியே அமுலுக்குக் கொண்டு வந்திருந்தார்கள். தோழர்கள் பாபி ராஜுவும் ராமானந்த சௌத்ரியும் பி-வகுப்புக் கைதிகளாயிருந்தார்கள். அவர்கள் கோயம்புத்தூர் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப் பட்டார்கள். அவர்களுக்காக 30 அறைகளுள்ள ஒரு பெரிய ‘பிளாக்’ ஒதுக்கி விடப்பட்டிருந்தது. ஒருவரை முதல் அறையிலும் மற்ற வரை 30-வது அறையிலும் போட்டுப் பூட்டினார்கள். 

அவர்கள் ஒருவரை யொருவர் பார்க்கவோ பேசவோ அனுமதிக்கப்படவில்லை. காலையில் ஒருவர் தன் காலை அனுஷ் டானங்களை முடித்துக் கொண்டு கஞ்சி குடித்துவிட்டு அறைக்கு வந்த பின்பே மற்றவரைத் திறந்து விடுவார்கள். அவருடைய அலுவல் ஆனதும் மீண்டும் அடைத்து விடுவார்கள். இந்தக் கொடுமையை அவர்களால் சகிக்க முடியவில்லை. வேறு உபாயங்களைக் கையாண்டு விட்டு உண்ணாவிரதமிருந்தார்கள். 

இன்ஸ்பெக்டர் ஜெனரல் வந்திருந்தபோது நிலைமையை விளக்கிக் கூறி, தாங்கள் உண்ணா விரதமிருப்பதன் நோக்கத்தையும் சவிஸ் தாரமாகக் கூறினார்கள். இன்ஸ்பெக்டர் ஜெனரல், முழுவதையும் கேட்டுவிட்டு, பகலில் அவர்களை அடைக்கக் கூடாதென்று உத்தரவு பிறப்பித்தார். அவர் அங்கு இருக்கும்வரை இந்த உத்தரவு தற்காலிகமாக அமுலிலிருந்தது. அவர் தலை மறைந்ததும் குட்டித் தேவதைகள் பலவந்தமாக அவர்களை அடைத்து விட்டார்கள். மீண்டும் உண்ணா விரதம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டார்கள். 

ரகசிய உத்தரவு 

‘பயங்கரர்களை’ எக்காரணத்தை முன்னிட்டும் ஜெயில் ஆஸ்பத்திரிக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சர்க்கார் 

ஒரு ரகசிய உத்தரவு பிறப்பித்திருந்தது. சாகுந்தறுவாயிலிருந்தாலும் சரிதான், தயா தாட்சண்யமே கிடையாது. கிடந்த அறையிலேயே அவஸ்தைப்பட்டு இறக்கவேண்டியதுதான். ஒரு சிறிய சம்பவத்தை மட்டும் சொல்லுகிறேன். 

காக்கினாடா சதியாலோசனை வழக்கில் சம்பந்தப்படுத்தப் பட்ட பையன் ஒருவன் எங்களுடன் இருந்தான். ஜெயில் வாழ்க்கையே அவனுக்குப் புதிது. திடீரென்று அவனுக்கு வலிப்பு வர ஆரம்பித்து விட்டது. ஒரு நாளிரவு அவன் தன்னுடைய அறையில் விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனே ஜெயிலருக்கு ஆள் அனுப்பினோம். அவன் அறையைத் திறந்து அவனைப் பரிசோதித்தார்கள். இராக் காலங்களில் அவனுடைய தனிமையை நினைத்து இரங்கி, அவனுக்கு இராக் காலங்களில் ஒத்தாசையாக இருக்குமென்று சொல்லி ஜெயில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்படி சொன்னோம். 

அவர்கள் மறுத்து விட்டார்கள். கடைசியில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகாவிட்டாலும் நாங்கள் யாராவது சிலர் அவனுக்குச் சிசுரூஷை செய்கிறோம் என்று சொல்லி எங்களில் சிலரை அந்த அறையில் பூட்டும்படியும் சொல்லிப் பார்த்தோம். எவ்வளவோ தர்க்கத்திற்குப் பின் 2, 3 நாட்கள் இருக்க அனுமதி கொடுத்தார்கள். நல்ல வேளை, அவனுக்கும் கொஞ்சம் குணமாயிற்று. அப்புறம் இந்தச் சலுகை நிறுத்தப்பட்டது. மீண்டும் அவனுக்குச் சில சமயங்களில் வலிப்பு வந்தது. இதை விட ஒரு நல்ல ஜெயிலுக்கு அவனை அனுப்பி வைக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்து, கடலூருக்கு அனுப்பி வைத்தோம். 

வழக்கு முடிந்த பிறகு போலீஸ் எங்களிடம் கொண்டிருந்த பிடிப்பு கொஞ்சம் தளர்ந்து கொடுக்கும் என்றுதான் நாங்கள் கருதினோம். ஆனால் இது உடும்புப் பிடியாக மாறும் என்று எதிர் பார்க்கவில்லை அவர்கள் எங்களுடைய விதியைக் கூடக் கட்டுப் படுத்தி விடக் கூடியவர்கள் போல நடந்துகொண்டார்கள். எங்க ளுடைய நண்பர்கள், உறவினர்கள் கடிதங்கள் எல்லாம் அவர்கள் மூலமாகத்தான் எங்களுக்குக் கிடைக்க வேண்டும். அதே பிரகாரம் நாங்கள் அனுப்பும் கடிதங்களும் அவர்கள் மூலம்தான் போய்ச் சேர வேண்டும். அவர்கள் அதைச் சோதித்த பின்பே குறித்த இடத்திற்கு அனுப்பி வைப்பார்கள். இந்த அதிக்கிரமத்தினால் கடிதங்கள் சில சமயம் மாறுவதும் உண்டு. வேலை மிகுதியினால் பரிசோதனை உத்தியோகஸ்தர் தன் நினைவிழந்து சில சமயங்களில் கடிதங்களை அப்படியே கிழித்துக் குப்பைத் தொட்டியிலும் போட்டு விடுவதுண்டு. நான் மேலெழுந்த வாரியாக ஒன்றும் சொல்லி விடவில்லை. என்னுடைய விஷயம் சம்பந்தப்பட்ட வரையில் எனக்கு எழுதப்பட்ட கடிதங்கள் எத்தனையோ என் கைக்கு வந்து சேரவில்லை என்று பிற்பாடு தெரிந்தது. இது தவிர சி.ஐ.டி.கள் வேறு எங்கள் புஸ்தகங்களைக் கண்காணிக்க ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்குப் பிரியமான புஸ்தகங்கள்தான் எவை என்று நீங்கள் ஊகித்துக் கொள்ளலாமே! 

கையையும் காலையும் கட்டிப் போட்டு ஒரு கூண்டில் அடைத்து வைத்த மாதிரி, பேச்சாள் துணை யின்றி ஏகாங்கிகளாக நாட்களைக் கழித்தோம். எங்கோ, மனிதப் பூண்டே அற்ற ஒரு தீவாந்தரத்தில் கொண்டு விடப்பட்டதாகவே ஒவ்வொருவரும் உணர்ந்தோம்.”போய் விடுகிறேன், போய் விடுகிறேன்!” என்று சொல்லும் தீண்டாமையைக் கட்டிப் பிடித்து, வக்காலத்து எடுத்துப் பேசுபவர்கள் எங்களுடன் சில காலம் இருந்திருந்தால் தங்க களுடைய கொள்கையை அடியோடு மாற்றிக் கொண்டு விடுவார்கள். தீண்டத் தகாதவர்கள் என்று ஒதுக்கப்படும் ஜனங்களின் உள்ளக் கொதிப்பு அவர்களுக்கு அப்பொழுது நன்றாகப் புலப்படும். தீண்டப் படாதவர்களாயும், பார்க்கப்படாதவர்களாயும் நாங்கள் வாழ்ந்த அநுபவத்தை வைத்து இதைச் சொல்லுகிறேன். சொந்த அநுபவத்தை விட விஷயங்களை அறிவதற்கு மேலான பயிற்சி சாலை வேறு என்ன வேண்டும்? 

– மணிக்கொடி இதழ் தொகுப்பு, 1939

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *