எனது மனிதர்கள் – 2

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2022
பார்வையிட்டோர்: 2,528 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்றுதான் அவரை நான் முதன் முதலாகப் பார்தேன். பரந்த, வட்டமான, பெரிய விழிகளையுடைய குழந்தைத்தனமான முகம். நிமிர்து என்னைப் பார்த்த முகத்தில் அப்போதுதான் புதிதாக அல்லாமல் ஏற்கனவே என்னை அறிந்தவர் போல் ஒரு பாவனை. பார்த்த மாத்திரத்தில் மனதில் பதிந்து விடுகின்ற முகம் அது. யார் அது? புரியவில்லை. முன்னர் எப்போதாவது சந்தித்திருப்பேனா? நினைவில்லை.

நான் போய்க்கொண்டிருந்த என் நண்பனைச் சந்திக்க. அங்கே நண்பன் எனக்காக காத்திருந்தான். தாமதத்துக்கு மன்னிப்பு கேட்கவேண்டிய தேவையே இல்லை. சிரித்தபடி அமர்ந்தேன். சந்தித்த விடயம் சற்று முக்கியமானது. கதைத்து முடித்தபின் பேச்சு திசைமாறியது. எனக்குள் அந்த குழந்தைத்தனமான முகம் வந்து போனது. நான் மெல்லப் புன்னகைத்து விட்டேன் போலிருக்கின்றது. ஏதோ சொல்ல வாயெடுத்த நண்பன், என்னவென்று கேட்டான் சிரித்துவிட்டு.

“பிறகு சொல்லுறன். நீங்கள் சொல்லுங்கோ” என்றேன். *இண்டைக்கு உங்களைப்பற்றி எங்கட இடத்தில் கதை வந்திட்டுது” என்றான். நான் ஆர்வத்தோடு பார்த்தேன்.

“வெளிக்கிடுறதுக்காக முகம் கழுவ சோப்கேசைத் தூக்கிக்கொண்டு போகேக்கையே பொடியள் பகிடிபண்ணத் தொடங்கிவிட்டாங்கள் சிநேகிதியிட்டை போறியோ எண்டு. நான் சிரிச்சுக்கொண்டு கிணத்தடிக்குப் போனன். முகம் கழுவிக்கொண்டிருக்கேக்க கிணத்தடிக்கு அவர் வந்தார். எங்க போறாய் எண்டார். உங்களிட்ட போறன் எண்டன். ஆளோடை எதுவும் கதைக்கலாமோ எண்டு கேட்டார். ‘ஓ, நீங்கள் கூட அவவோடை கதைக்கலாம். அவ கதைப்பா’ எண்டன்.

‘சீ, நான் கதைக்கேல்லை. ஆனால் ஒரு விசயத்தை ஆளிட்டச் சொல்லிவிடு. பெண் விடுதலை, அது, இது எண்டு என்ன இருக்குது. காலுக்கு மேல காலை போட்டுக்கொண்டிருந்தா, பனைமரத்தில் ஏறினா விடுதலை கிடைக்குமோ? ஆணாதிக்கம் எண்டு ஒண்டுமில்லை. இப்ப, ஒரு கணவன் சாப்பிட்டு தட்டில மிச்சம் வைச்சா, அதை மனைவி சாப்பிடுறதை இவை அடக்குமுறை எண்டு நினைக்கக்கூடாது. அவர் ஏன் மிச்சம் விட்டவர்? சட்டிக்குள்ள இருந்த எல்லாத்தையும் வீட்டில இருக்கிற எல்லாரும் சாப்பிட்டிருப்பினம். இவள் ஒண்டும் எடுத்து வைக்காமல் எனக்குத்தான் தந்திருப்பாள் எண்டு அவருக்குத் தெரியும். அவளும் சாப்பிடவேணும் என்றுதான் அவர் மிச்சம் வைக்கிறவரே தவிர, அவளை அடக்கவேணும் எண்டு நினைச்சு இல்லை. தனக்கு அவர் தருவார் எண்டு அவளுக்கும் தெரியும். அது ஒரு கணவனுக்கு தன்ரை மனைவியிடம் உள்ள அன்பு, பாசம், புரிந்துணர்வு எண்டதை உங்களுக்குச் சொல்லு எண்டு சொன்னார்” என்றான் என் நண்பன்.

அவ்வளவு நேரமும் ஒரு சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த நான்,

“கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான உறவு அந்த ரெண்டு பேர் மட்டுமே தீர்மானிக்க வேண்டிய விடயம் எண்டு நான் நினைக்கிறன். அதைப்பற்றி விவாதிக்க நான் எப்பவுமே தயாரில்லை. நான் விவாதிச்சிருக்கவுமில்லை. எல்லாம் இருக்கட்டும். அவர் ஆர் எண்டு எனக்கு விளங்கக்கூடிய மாதிரிச் சொல்லுங்கோ” என்றேன்.

பெயரைச் சொன்னான். விளங்கவில்லை. பட்டப் பெயரைச் சொன்னான். ம்ஹூம். புரியவில்லை.

“அடையாளம் சொல்லுங்கோ” என்றேன். சொன்னான் அடையாளத்தை. அவர் பாவிக்கும் உந்துருளியை. ஓஹோ ஹோ ஹோ! நண்பன் சொல்லச் சொல்ல…. பார்த்த மாத்திரத்திலேயே மனதில் பதிந்துவிடுகின்ற பரந்த, வட்டமான, பெரியவிழிகளையுடைய, குழந்தைத்தனமான முகமும், அப்போதுதான் புதிதாக அல்லாமல், ஏற்கனவே என்னை அறிந்தவர் போல் அதில் தெரிந்த பாவனையும், உந்துருளியை வளைத்துத் திருப்பிய லாவகமும் மனதுக்குள் பளிச்சென்று வந்து போயின.

“என்ன ஆளை விளங்கிட்டுதோ” என்றான் நண்பன். “ம்… ம்…. அவரின்ர அன்பான ஆலோசனைக்கு என்ரை நன்றியைச் சொல்லிவிடுங்கோ” என் புன்னகை அகல விரிந்தது. அந்தக் குழந்தை முகத்துச் சொந்தக்காரனா எனக்குப் பெண் விடுதலை வகுப்பெடுப்பது?

தளத்தில் நின்ற எல்லோருமாகச் சேர்ந்து அவருக்கு ‘பனையேறிய பெண் விடுதலை’ என்ற பட்டத்தை சூட்டினார்கள். நான் ஒருத்திக்கு அடையாளம் காட்ட, அவள் மற்றவர்களுக்கு காட்ட, அப்படியே எல்லோரும் எமது கதாநாயகனை இனங்கண்டுகொண்டார்கள். ஆனால் மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார்கள். லூட்டி அடிப்பதெல்லாம் தளத்தில் மட்டும்தான். வீதியில் அல்ல. ஆனால் நாளொரு கதையும் பொழுதொரு புதினமும் எப்படியோ அவரைப்பற்றி சேகரித்துக்கொண்டு வந்து ஒலிபரப்புவார்கள்.

இவர்கள் திரட்டிய தகவல்களின்படி, அவருக்கு பெண்கள் விடயத்தில் ஈடுபாடே இல்லை. தேவையேற்பட்டால் கூட பெண்களோடு அளந்துதான் பேசுவார்.

‘அப்படியா? அதனால்தான் எங்களிடம் பனைமரம் ஏறாதே, காலுக்கு மேல் கால் போடாதே’ என்று வலியுறுத்தப்பட்டதோ? இது வெறுப்பின் வெளிப்பாடோ? கேலியோ?

எப்போதும் அமைதி தவழும் அந்த முகத்தைப் பார்த்தால் ஒரு கோபக்காரனைப்போல் தெரியவில்லையே.

எம்மை நேராகப் பார்க்கின்ற அந்த அகன்ற விழிகளுக்குள்ளே வெறுப்பைக் கண்டதாக நினைவில்லை. ஆக மொத்தத்தில், பனையேறிய பெண் விடுதலையை ஒரு முசுறு என்று முடிவெடுத்தோம். இவர் யார் எங்களைப்பற்றிக் கதைக்க என்ற கோபமும் மனதின் ஓரத்தில் எழாமலில்லை .

அந்தச் சந்திப்பு அன்று எதிர்பாராத விதமாக நடந்தது. நானும் இன்னொருத்தியும் குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டுக்கு போயிருந்தோம். நண்பர் முன்னறையில் இருந்தார். நண்பரின் மனைவி வீட்டுக்குள்ளிருந்தவாறே ஏசிக்கொண்டிருந்தார். அவர் ஏசிக்கொண்டிருந்தது ஒரு கணவரை. யாரந்தக் கணவர்? நமது நண்பரா? காதல் திருமணம் கலகலப்பாக வெள்ளிவிழா ஆண்டை நெருங்கும் நேரத்தில் சபையைக் குழப்பியது யார்?

தனது அமைதி எம்மை மேலும் குழப்புவதை அறிந்துகொண்ட எமது நண்பர் விடயத்தை விளக்கினார். நண்பரின் மனைவியின் நாவில் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் கணவர் வேறொருவர், இவரல்ல. அவர் தன் மனைவியை வீட்டின் நாலு சுவருக்குள் வைத்துச் செய்த சித்திரவதை போதாதென்று வீதியிலே இழுத்து வந்து அடித்ததைப் பொறுக்கமாட்டாத மனைவி இவர்களிடம் அடைக்கலம் தேடி வந்திருக்கிறார். அந்தக் கணவரை கூட்டிவர ஆள் விட்டு, கணவர் ஊழியம் செய்யும் நிறுவன மேலாளரைக் கூட்டிவர ஆள் அனுப்பிவிட்டு குமுறிக்கொண்டிருந்தது இந்த வீடு. கதையைக் கேட்ட எங்களுக்கும் கொதி ஏறியது.

திடீரென வீட்டினுள் வந்த உந்துருளி ஒன்று முன்னறைக்கு நேரே வந்து நின்றது. அதில் வந்தது பனையேறிய பெண் விடுதலை. குழந்தை முகம் கோபத்தில் இறுகிக் கிடந்தது. நாங்கள் அறிந்த நாள்வரையில் இப்படித் தோற்றத்துடன் இதற்கு முன் கண்டதில்லை. வருகையின் நோக்கமும் கோபத்தின் காரணமும் புதிர்களாக இருந்தன.

நமது நண்பர் அவரிடம் நடந்து முடிந்திருந்த குடும்ப வன்முறையை முழுவதும் விளக்கினார். அந்த உரையாடலின்போதுதான் வில்லன் வடிவெடுத்த கணவர் வேலை செய்யும் நிறுவனத்தின் மேலாளர் நமது கதாநாயகன் என்பது புரிந்தது. மனைவிக்குக் கொடுத்துச் சாப்பிடும் கணவர்கள் அடக்குமுறையாளர்களல்ல என்பது இருக்கட்டும். மேலான புரிந்துணர்வை வெளிப்படுத்தவேண்டிய படுக்கையறையிலே மனைவியைக் காயப்படுத்துகின்ற இந்தக் கணவனின் செயலையும் இவர் நியாயப்படுத்தப் போகின்றாரா?

பனையேறிய பெண் விடுதலைக்குச் சினம் சிரசிலேறியது. சீறி வந்தன வார்த்தைகள்.

“ஆள் இப்ப வருவார்தானே? வரட்டும். அடிச்சுக் கையைக் காலை முறிச்சுப் போடுறன். பொம்பிளையளைப் பூ மாதிரி வச்சிருக்கவேணும். மனிசியைக் கை நீட்டி அடிக்கிறவனுக்கெல்லாம் என்னத்துக்கு கலியாணம்?” குழந்தை முகத்தின் மனதுக்குள்ளிருந்து பூ இதழ் இதழாக வரிந்து, தன் மென்மையையும், வாசனையையும், பிரமாண்டத்தையும் வெளிப்படுத்த, எனக்கு என்மேலேயே கோபம் வந்தது.

தளத்தின் முன்னறையில் எங்களின் பாராளுமன்றம் கூடியது. ‘பூ மாதிரி பெண்களை வைத்திருக்கவேண்டும்’ என்ற வார்த்தைகளில் எல்லாருமே ஆடித்தான் போனோம். மனைவியை எப்படி வைத்திருப்பதென்பது அவரவர் தனிப்பட்ட விடயம். ஆனால் அந்த மனிதரைப் பற்றித் தவறாகக் கணிப்பிட்டிருந்ததை எண்ணி நொந்து போனோம். எனினும், மனதில் நெருடல் இல்லாமல் இல்லை.

“இப்படிக் கதைத்தவர் ஏன் அன்று அப்படி ஒரு விடயத்தை சொல்லி விடவேண்டும்?”

“முரண்பாடாக இல்லை?” நள்ளிரவு கடந்தும், எங்களின் கூட்டத்தொடர் நீண்டது.

பெண்களை நேசிப்பது அவரது இயல்பாக இருக்கலாம். பெண்களோடு கதைக்கக்கூடாது என்பது அவர் தன்மீது தான் விதித்துக்கொண்ட கட்டுப்பாடாக இருக்கலாம். கட்டுப்பாட்டை உணர்வு மீறியபோது, நேசத்தை வெளிக்காட்டியிருக்கலாம் என்று கடைசியில் முடிவெடுத்தோம். நாங்களெல்லோருமே அவரை நேசிக்கத் தொடங்கிவிட்டோம் என்பதை உணர்ந்து கொண்டோம்.

மறுதடவை குடும்ப நண்பரைச் சந்தித்தபோது, பனையேறிய பெண் விடுதலை சொல்லிவிட்டு, ‘மிச்சம் சாப்பிடுகின்ற புரிந்துணர்வுக்’ கதையைச் சொன்னேன். மனைவியை அடிப்பவர்களுக்குத் திருமணம் எதற்கு என்று சீறியதால் அவர்பற்றி எங்களிடம் எழுந்த கேள்விகளைச் சொன்னேன். அவ்வளவு நேரமும் முகமெல்லாம் சிரிப்போடு என் கதையை கேட்டுக்கொண்டிருந்த நண்பர் அட்டகாசமாக ஒரு சிரிப்புச் சிரித்தார்.

*அதுக்கிடையில அந்தக் கதையையையும் உங்களுக்குச் சொல்லி விட்டுட்டானோ?” என்றார் சிரிப்பின் இடையே.

எந்தக் கதையை? நானும் என்னோடு வந்திருந்தவரும் ஆளை ஆள் பார்த்து புருவங்களை உயர்த்தினோம். அமர்க்களமான சிரிப்போடு நண்பர் நடந்த கதையை விளக்கினார்.

“நான்தானம்மா அந்தக் கதையை அவனிட்ட சொன்னனான். பெண் விடுதலை பற்றி ஒரு நாள் கதை வந்திட்டுது. எல்லாத்தையும் தூக்கி எறியிறது, ஆண்களை எதிர்க்கிறதுதான் பெண் விடுதலை என்று கனபேர் பிழையா நினைச்சுக்கொண்டிருக்கினம். அப்பிடியில்லை. ரெண்டுபேரும் அனுசரிச்சு போறதுதான் பெண் விடுதலை. கணவன் சாப்பிட்ட மீதியை மனைவி சாப்பிடுறதை அடக்குமுறை எண்டு ஆரும் சொல்லட்டும். நான் சொல்லமாட்டன் எண்டு நான்தான் அந்தக் கதையை அவனுக்கு விளக்கமாகச் சொன்னனான். அதுக்கு நீங்கள் என்ன சொல்லுவீங்கள் எண்டு உங்களிட்டை கேட்டுப் பார்க்கச் சொன்னனான். அவன் உங்களில் கோபத்தில் கேட்கேல்லை. அவன் ஒரு குழந்தையம்மா. உங்களைக் கேலி செய்ய வேணுமெண்டு நினைக்கிற ஆளுமில்லை. சும்மா கேட்டான். அவ்வளவுதான். அவன் ஒரு ஞானி.

அவனுக்கு ஒருத்தரையும் புண்படுத்தத் தெரியாது”

எங்களின் மதிப்புக்குரியவர்களின் பட்டியலில் அந்தக் கணமே அவரைச் சேர்த்துவிட்டோம். முற்றத்து ஒற்றைப் பனைக்கு நிகராக இவரையும் அந்த உயர்ந்த இடத்தில் தூக்கி வைத்தோம். அதற்காக, அதன் பின்னர் நாம் தேடிப் போய் அவரோடு கதைத்தோம் என்றெல்லாம் இல்லை. வீதியில் காண நேருகையில் நிமிர்ந்து ஒரு பார்வை. நேசமான ஒரு பார்வை. அவ்வளவே. உரையாடல் இல்லாமலே உறவு தொடர்கிறது.

மனதுக்குள் உள்ள நேசத்தை மனிதர்களிடம் வெளிப்படுத்துவதற்குக்கூடக் கஞ்சத்தனம் பார்க்கும் பிறவி. ஐந்து சதத்தைக்கூட தேவையற்று செலவழிப்பதில்லை என்று கேள்வி. திடீரென்று ஒரு நாள் தெருவில் மறித்து, உங்களைப்பற்றி நாம் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா என்று அவரிடமே நேரடியாகக் கேட்டால் என்ன செய்வார்?

நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது.

– 2002 ஜுலை, மலைமகள் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, வடலி வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *