எதிர் கோணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 27, 2013
பார்வையிட்டோர்: 17,119 
 

பேருந்தின் படிக்கட்டில் நின்றிருந்த அந்த பையனைப் பார்க்க விடுமுறைக்கு வந்திருந்த பள்ளிமாணவனைப் போலிருந்தான்,

ஒடிசலான தோற்றம், வெளிறிய ஜீன்சும், ஆரஞ்சுவண்ண டீசர்டும் அணிந்திருந்தான், அவனது கழுத்தில் கேமிரா தொங்கிக் கொண்டிருந்தது, முதுகில் கேமிராவின் உபகரணங்கள் அடங்கிய பையை தொங்கவிட்டிருந்தான், அன்று பேருந்தில் நிறைய கூட்டமாக இருந்தது.

சவரிமுத்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தபடியே அந்த பையனையே பார்த்துக் கொண்டிருந்தான்,

அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருப்பது கேனான் கேமிரா, அது போன்ற கேமிரா ஒன்றை ஹிண்டு பேப்பர் விளம்பரத்தில் பார்த்திருக்கிறார், சமீபத்தில் அவர் பார்த்த ஒரு திரைப்படத்தில் கூட அதன் நாயகன் இது போன்ற ஒரு கேமிராவை கையில் வைத்திருந்த ஞாபகம் வந்தது.

அதே கேமிரா தான், பார்க்க பார்க்க ஆசையாக வந்தது, ஒரு காலத்தில் சவரிமுத்துவிற்கு சொந்தமாக ஒரு அக்பா கேமிரா ஒன்றை வாங்க வேண்டும் என்பது கனவாக இருந்த்து, ஆனால் அதற்காக அவரால் பணம் சேர்க்க முடியவில்லை, மூத்த மகள் சுகுணாவிற்கு திருச்செந்தூரில் மொட்டை போட சென்ற போது மச்சினன் வைத்திருந்த யாசிகா கேமிராவை இரவல் வாங்கிக் கொண்டு போய் புகைப்படம் எடுத்தார்,

பிளாஷ் இல்லாத காரணத்தால் உருப்படியாக போட்டோ எடுக்கமுடியாமல் போய்விட்டது, ஆனாலும் இரண்டு நாட்களாக அந்த கேமிராவை தன்னோடு கூடவே வைத்திருந்த்து அவருக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது, கேமிராவை கழுத்தில் போட்டுக் கொண்டவுடன் திடீரென தனது உயரம் மிக அதிகமாகிப்போனது போலவும், தன்னையே எல்லோரும் வியப்போடு பார்ப்பது போலவும் அவருக்கு தோன்றியது,

அந்த உந்துதலில் தான் டைம்கீப்பர் லாசரிடமிருந்த பழைய கேமிரா ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் வீட்டிற்கு தெரியாமல் கடன்வாங்கி ரகசியமாக கேமிராவை வாங்கி வந்தார், பொங்கல் விடுமுறையில் பிள்ளைகளை ஆற்றின் மணல்திட்டிற்கு அழைத்துப் போய் விதவிதமாகப் போட்டோ எடுக்க வேண்டும் என்று இரண்டு பிலிம் ரோல்கள் கூட வாங்கி வைத்திருந்தார்.

தைப்பொங்கலுக்கு மறுநாள் வைப்பாற்றுக்குள் பெரிய விழா நடக்கும், ராட்டினங்கள், பலூன்விற்பவர்கள், விதவிதமான ரிப்பன் வளையல் விற்பவர்கள், தூள் ஐஸ், பாம்பே விற்பவர்கள், குறவன் குறத்தி ஆட்டம், இசைக்கச்சேரி என்று ஒரே குதூகலமாக இருக்கும்,

ஆற்றின் தென்பகுதியில் ஒரு உயரமான மணல்திட்டிருந்த்து, அதிலேறி பிள்ளைகள் மணலறச் சறுக்கி விளையாடிக் கொண்டிருப்பார்கள், அந்த உயரமான மணல்திட்டினை ஒட்டி எஸ் வடிவில் வளைந்த கூந்தல்பனைமரம் ஒன்றிருந்தது,

அந்த பனைமரத்தின் அருகில் கையில் ஒரு ஒலைக்கிளி ஒன்றை கொடுத்து இரண்டுபிள்ளைகளையும் நிறுத்தி கலர் படம் எடுத்தால் மிக அழகாக இருக்கும் என்று கற்பனை செய்திருந்தார், அதற்காகவே பிள்ளைகளுக்கு அடர்ந்த நீலமும் சிவப்பும் கலந்த வண்ணத்தில் உடைகளும் வாங்கியிருந்தார்,

அன்றைக்கு ஆற்றில் கூட்டம் நிரம்பி வழிந்த்து, தனது கைப்பையில் இருந்து அவர் கேமிராவை வெளியே எடுத்த போது சுகுணா ஆச்சரியத்துடன் ஏதுப்பா என்று கேட்டாள்.

டிரைவர் ரவியோடது என்று பொய் சொல்லி சமாளித்தபடி அவர்களை மணலில் நடத்திக் கூட்டிக் கொண்டுபோனார், அவர்கள் அணிந்திருந்த உடைக்கு பொருத்தமாக ஒலைக்கிளி ஒன்றை வாங்கி கொடுத்து பனைமரத்தடிக்கு கூட்டிப் போனார்,

மணல்மேட்டில் இருந்து சரிந்து விழும் சிறுவர்கள் கைகளை விரித்தபடியே கூச்சலிட்டிக் கொண்டிருந்தார்கள், காற்றில் மணல் பறந்து சென்று கொண்டிருந்தது, பருத்திப்பால் விற்கின்றவன் தனது பானையில் மணல் விழுந்துவிட்டது என்று ஏசிக் கொண்டிருந்தான்,

சறுக்கும் சிறுவர்களை விலக்கி விட்டு இரண்டு மக்ள்களையும் பனைமரத்தடியில் நிறுத்திவிட்டு வாகான ஒரு கோணத்தில் படம் பிடிப்பதற்காக கேமிராவை முடுக்கினார், அதன் ஷட்டர் திறந்து கொள்ளவேயில்லை, கேமிராவை ஒரு குலுக்கி குலுக்கிவிட்டு மறுபடியும் இயக்கிப் பார்த்தார், இப்போது பட்டனை அமுக்கவே முடியவில்லை, எரிச்சலுடன் ஒங்கி அழுத்தினார், பட்டன் அப்படியே அமுங்கி நின்றுவிட்டது, என்ன எழவு கேமிரா என்று அலுத்துக் கொண்டபடியே அதை மறுபடியும் கடகடவென குலுக்கினார், கேமிராவின் அமுக்கும் பட்டன் வேலை செய்யவேயில்லை,

இப்போது கேமிராவை கழட்ட முடியாது, பிலிம்ரோல் வேறு போட்டாகிவிட்டது, என்ன செய்வது என்று புரியாமல் அதை மேலும் கீழுமாக மறுபடியும் குலுக்கி பார்த்தார், கேமிரா சுத்தமாக வேலை செய்யவில்லை, சே ஆயிரம் ரூபாயை ஏமாற்றி பிடுங்கிவிட்டானே என்று லாசர் மீது ஆத்திரமாக வந்தது, பிள்ளைகள் கையில் ஒலைக்கிளியோடு நின்று கொண்டேயிருந்தார்கள், காற்றில் மணல் பறந்து கொண்டேயிருந்தது.

சவரிமுத்துவின் மனைவி கலா பொறுமையற்றவளாக சொன்னாள்.

சுகுணா நீங்க போயி விளையாடு, உங்கப்பா போட்டோ எடுக்க ரெடியானது நானே கூப்பிடுறேன்

பிள்ளைகள் குடை ராட்டினத்தை நோக்கி நடந்து போனார்கள்,

சவரிமுத்து சலிப்போடு ஆற்றின் கரையில் டெண்ட் அடித்து பேமிலி போட்டோ எடுத்த தரும் ராயல் ஸ்டுடியோவிற்கு போய் ஆலோசனை கேட்கலாம் என்று நடந்து போனார், அங்கே போட்டோ எடுப்பதற்காக நிறைய கூட்டம் சேர்ந்திருந்த்து,

வேலை நேரத்தில் இதை எல்லாம் கவனிக்கமுடியாது என்று ஸ்டுடியோ முதலாளி சவரிமுத்துவை துரத்திவிட்டார்.

திரும்பி வந்த போது ஏமாற்றமாக இருந்தது, வெயில் வேறு போய்க் கொண்டேயிருந்த்து, நினைத்தது போல ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது,

சவரிமுத்துவின் மனைவி மணலில் ஜமுக்காளத்தை விரித்து உட்கார சொன்னாள், ஒரமாக உட்கார்ந்தபடியே கேமிராவை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்,

தன்னை சுற்றி நடக்கும் கொண்டாட்டங்ஙகள், ஆடல் பாடல்கள் எதுவும் அவர் மன்தின ஈர்க்கவேயில்லை, கேமிராவை எப்படியாவது சரிசெய்து பிள்ளைகளை போட்டோ எடுக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணம் ஒடிக் கொண்டிருந்த்து,

விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் தலைகலைந்து பறக்க, உடைகள் கசங்க, அவரிடம் ஒடி வந்து கேமிராவை சரி பண்ணியாச்சாப்பா என்று கேட்டார்கள்,

இல்லைடா கண்ணு, நாளைக்கு எடுப்போம் என்று தலைகவிழ்ந்தபடியே சொன்னார், அவரது வருத்தமான முகத்தை கண்ட கலா சொன்னாள்.

போட்டோ வேணும்னா, ஸ்டுடியோவில போயி பிடிச்சிகிடலாம், அதுக்கு எதுக்கு நல்ல நாளும் அதுவுமா மூஞ்சியை தூக்கிவச்சிகிட்டு உட்கார்ந்திருக்கீங்க, கைமுறுக்கு கொண்டு வந்திருக்கேன், தரவா.

வேண்டாம் என முறைத்தபடியே கையில் மணலை அள்ளி அள்ளி மறுபக்கம் கொட்டிக் கொண்டிருந்தார், அன்று உருவான தீராதமனவருத்தம் இன்றைக்கு விழித்துக் கொண்டது.

பஸ்ஸின் படியில் நின்றிருந்த அந்த பையன் கழுத்தில் இருந்த கேனான் கேமிரா அவரது ஆசைளை கிளறிவிட்டது,

பக்கத்தில் உள்ள சமணர்மலைக்கு போய்விட்டு வருகிறான் போலும்,

இந்த வயதில் டிஜிட்டல் கேமிரா, நிறைய லென்சுகளும் வைத்திருக்கிறான், கொடுத்துவைத்த பயல், ஆசையை அடக்கமுடியாமல் அவனிடம் சவரிமுத்து கேட்டார்.

கேனான் 5 டியா.

அந்தப் பையன் காற்றில் மோதும் கேசத்தை இடது கையால் ஒதுக்கிவிட்டபடியே சொன்னான்.

5டி, மார்க் 3, சிங்கப்பூர்ல வாங்கினது.

பள்ளிபடிப்பை கூட முடித்திருப்பானா என்று தெரியாது, அதற்குள் 5 டி மார்க் 3 வாங்கியிருக்கிறான், அதுவும் சிங்கப்பூருக்கு போய் வாங்கியிருக்கிறான்,

வாழ்க்கை சிலருக்கு எல்லாவற்றையும் வாறி வழங்குகிறது, சிலருக்கு எதையும் அடைய முடியாமல் செய்துவிடுகிறது என ஆத்திரமாக வந்தது.

பேருந்து சின்ன ஒடை பஸ் ஸ்டாப்பில் நின்றது, நாலைந்து கிராமவாசிகள் ஏறிக் கொண்டார்கள், சவரிமுத்து விசில் அடித்துவிட்டு கேமிரா வைத்திருந்த பையனுடன் எப்படி பேச்சு கொடுப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்,

பஸ் சீரற்ற சாலையில் சென்று கொண்டிருந்த்து, ஒரு பள்ளத்தில் டயர் விழுந்து ஏறியதில் பேருந்து குலுங்கியது.

தம்பி நீங்க வேணும்னா என் சீட்ல வந்து உட்காருங்க. ஏன் கேமிராவை வச்சிகிட்டு சிரமப்படுறீங்க என்று தனது சீட்டை விட்டு எழுந்து கொண்டான் சவரிமுத்து.

அந்த பையன் வேண்டாம் என்று மறுத்தபடியே படியிலே நின்று கொண்டான்,, அதுவரை கால்கடுக்க நின்று கொண்டுவந்த ஒரு முதியவர் அந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார்,

சவரிமுத்து அந்த பையனிடம் பேசுவதற்கு தோதாக தானும படிக்கட்டில் நின்று கொண்டான். பையன் போட்டிருந்த பாரீன் செண்டின் மணம் தூக்கலாக இருந்தது.

கேமிரா என்ன விலையாகுது எனக் கேட்டான் சவரிமுத்து.

ஒன் செவண்டி எயிட் என்றான் அந்த பையன்.

ஒரு லட்சத்து எழுபத்தியெட்டாயிரம் கொடுத்து ஒரு கேமிராவை விலைக்கு வாங்கியிருக்கிறான், ஒரு வருஷம் கண்டக்டர் உத்யோகம் செய்தால் கிடைக்க கூடிய வருமானமது,

என்ன வேலையிது, எதற்காக இந்த கண்டக்டர் உத்யோகத்தில் வந்து சேர்ந்தோம், எதற்காக திருமணம் செய்து பிள்ளைகளை பெற்றுக் கொண்டோம், ஏன் கைக்கு கிட்டாத விஷயங்களை மனது திரும்ப திரும்ப ஆசைப்பட வைத்துக் கொண்டிருக்கிறது என தன்மீதே ஆத்திரமாக வந்த்து.

சமண மலைல மேற்கே ஒரு குகை இருக்குமே, அதுக்குள்ளே போனீங்களா, பேக் லைட்ல பாக்க ரொம்ப நல்லா இருக்கும், என ஆர்வத்துடன் சொன்னான் சவரிமுத்து.

அந்த பையன் பதில் பேசவில்லை, கேமிராவை நைசாக கையால் தொட்டு பார்க்கலாமா என ஆசையாக இருந்தது.

பைபர் பாடியா என்று கேட்டான் சவரிமுத்து.

அந்த பையன் கண்டு கொள்ளவேயில்லை, வேண்டுமென்றே தலையை திருப்பி சாலையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியை வேடிக்கை பார்த்தபடியே வருவது சவரிமுத்துவுக்கு ஆத்திரமூட்டுவது,

படிக்கிறவயதில் ஆசைப்பட்டதை வாங்கமுடியாமல் போவதை கூட தாங்கிக் கொள்ள முடிகிறது, ஆனால் வேலைக்கு போன பிறகும் ஆசைப்பட்ட எதையும் வாங்க முடியவில்லை என்றால் என்ன வாழ்க்கையிது என்று எரிச்சலாக வந்த்து.

பேருந்தின் வேகத்தில் அந்த பையன் கழுத்தில் இருந்த கேமிரா ஊசலாடி சவரிமுத்துவின் மேல்பட்டது, அந்த உரசலை அவர் ஆனந்தமாக அனுபவித்தார், எப்படியாவது ஒரு முறை அந்த கேமிராவை கையில் வாங்கி பார்த்துவிட வேண்டும், முடிந்தால் ஒரு ஸ்நாப் அடித்துவிட வேண்டும் என உள்ளுற தோன்றிக் கொண்டேயிருந்தது

அந்த பையன் டீசர்ட்டினுள் காற்று புகுந்து சட்டையை படபடக்க செய்ய ஏகாந்தமாக வந்து கொண்டிருந்தான்.

என்ன இருந்தாலும் பிலிம்ல எடுக்குற மாதிரி கான்டிராஸ்ட் டிஜிட்டல்ல வராது, இப்போ கோடாக் பிலிம் கம்பெனியை நிறுத்திட்டாங்களாமே, என்றார் சவரிமுத்து.

இதெல்லாம் எதற்காக என்னிடம் சொல்கிறாய் என்பது போல அந்த பையன் சவரிமுத்துவை முறைத்துப் பார்த்தான், பிறகு தானாக நமட்டு சிரிப்பு ஒன்றை சிரித்துக் கொண்டான்,

அந்த சிரிப்பு சவரிமுத்துவிற்கு ஆத்திரமூட்டியது , ஆனால் அதைக் காட்டிக் கொள்ளவில்லை,

இதுல மெமரி 64 ஜிபியா. பாடி மட்டும் எவ்வளவு வெயிட் இருக்கும் என மறுபடியும் கேட்டார்,

பையன் கடந்து செல்லும் வேப்பமரங்களையே பார்த்தபடி வந்தான்,

தன்னோடு அந்த பையன் பேசவிரும்பவில்லை என்பது சவரிமுத்துவிற்கு நன்றாக புரிந்த்து, ஏன் பேசினால் என்ன குறைந்து போய்விடுவான், காக்கி சட்டை போட்டுக் கொண்டு கண்டக்டராக இருப்பவனுடன் கேமிரா பற்றி பேசுவது அவமானத்திற்கு உரிய ஒன்றா, இந்த காலத்து பையன்கள் பெற்றோர்களுடன் கூட முகம் கொடுத்து பேசுவதில்லை, பிறகு எப்படி வெளியாட்களுடன் பேசுவார்கள்,

அந்த பையனின் கவனத்தை எப்படி ஈர்ப்பது என்று சவரிமுத்துவிற்கு தெரியவில்லை, அடுத்தடுத்த நிறுத்தங்களில் பயணிகள் ஏறினார்கள், பேருந்தினுள் முண்டியத்து டிக்கெட் கொடுத்துவிட்டு திரும்ப வருவதற்குள் அந்த பையன் முன்படிக்கட்டிற்கு மாறியிருந்தான், சவரிமுத்துவிற்கு ஆத்திரமாக வந்த்து,

தன்னை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவன் முன்படிக்கட்டிற்கு போயிருக்கிறான், அவனை அப்படியே விட்டுவிடக்கூடாது, பயணிகளை விலக்கி தள்ளி நகர்ந்து முன்படிக்கட்டிற்கு வந்த போது அந்த பையன் ஒற்றைக் கையில் தொங்கிக் கொண்டு வருவது தெரிந்தது.

சவரிமுத்து ஒங்கி விசில் அடித்தார், பேருந்து சடன் பிரேக் போட்டு நின்றது.

புட்போர்ட்ல நிக்குறவங்க எல்லாம் மரியாதையா மேலே வாங்க, யாராவது கிழே விழுந்து செத்துகித்துப் போனா நான் போலீஸ் கேஸ்ல லோல்பட வேண்டியிருக்கும், யோவ் உன்னை தான்யா சொல்றேன், மேலே வா, என கத்தினார்.

புட் போர்டில் நின்றிருந்த இளைஞர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் கேலி செய்தபடியே சற்று உடலை வளைத்து உள்ளே வந்தார்கள்,

படியில் நின்றிருந்த நடுத்தரவயது ஆளின் சட்டையை பிடித்து உள்ளே இழுத்து கத்தினார் சவரிமுத்து,

உனக்கெல்லாம் என்ன இளவட்டம்னு நினைப்பா, அவங்க தான் தண்ணி தெளிச்சிவிட்ட மாதிரி அலையுறாங்க, உனக்கு என்ன கேடு வந்துச்சி, உள்ளே வாய்யா.

அந்த ஆள் வெளிறிப்போன முகத்துடன் உள்ளே காத்துவரலை, அதான் என்று சமாளித்தார்.

காத்து வரல்லன்னா, டாப்புல ஏறி உட்காந்துக்கோ, ப்ரீயா காத்துவரும் என்றார் சவரிமுத்து,

அதைக்கேட்டு யாரோ சிரித்தார்கள், தனது வேடிக்கையை பேருந்தில் இருப்பவர்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் நடுத்தரவயது ஆளை மேலும் கிண்டல் செய்த ஆரம்பித்தார் சவரிமுத்து, படியில் நின்றிருந்த கேமிராபையன் அந்த வேடிக்கைகளை ரசிக்கவில்லை என்பது அவனது முகபாவத்தில் தெரிந்தது,

புளியம்பட்டி ஸ்டாப்பை தாண்டியதும் பேருந்து பிரேக் அடித்து நிற்க துவங்கியது சவரிமுத்து தலையை வெளியே எட்டிப்பார்த்தபோது ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது, இந்த நேரத்திற்கு தூத்துக்குடி செல்லும் கூட்ஸ் ரயில் ஒன்று கடந்து போகும், கூட்ஸ் வருவதற்கு இன்னும் பத்து நிமிஷமிருக்கிறது,

கேமிரா வைத்திருந்த பையன் கிழே இறங்கி நின்றிருந்தான், கிழேயே அவனிடம் பேசி கேமிராவை வாங்கிவிட வேண்டும் என்ற ஆசையோடு சவரிமுத்து இறங்கி நின்று கொண்டார்,

அந்த பையன் வேண்டுமென்றே அவரை விட்டு விலகி ரயில்வே கேட் அருகில் போய் ரயில் வருவதை போட்டோ எடுப்பதற்கு உரிய இட்ம் தேடுவது போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த கல்லு மேல ஏறி நின்னு ரயிலை போட்டோ எடுக்கலாம், நல்ல வியூ கிடைக்கும் என்றார் சவரிமுத்து.

ரயிலை எல்லாம் போட்டோ எடுக்க பிடிக்காது என்றான் அந்த பையன்.

அந்த குரலில் எரிச்சல் இருந்த்து போல தெரியவில்லை, நம்மோடு பேச ஆரம்பித்துவிட்டான், இனி அப்படியே பிடித்துக் கொள்ள வேண்டியது தான், என்று மனதிற்குள் சொல்லியபடியே, லோ ஆங்கிள்ல தண்டவாளத்தோட் கூட்ஸ் டிரைனை போட்டோ எடுத்தா சூப்பரா இருக்கும். என்று சொல்லி சிரித்தார் சவரிமுத்து.

அந்த பையன் பதில் சொல்லாமல் ஒரு சூயிங்கத்தை வாயிலிட்டு மெல்ல ஆரம்பித்தான்.

நானும் உன் வயதில் போட்டோ எடுத்திருக்கிறேன், அதில் ஒன்றுக்கு காஷ்மீரின் சுற்றுலா துறை விருது கூட கிடைத்திருக்கிறது என்பதை எப்படி சொல்வது என புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார் சவரிமுத்து,

கடந்த காலத்தை இந்த ஐந்து நிமிசத்திற்குள் சொல்லி புரிய வைப்பது எளிதானதில்லை,

கூட்ஸ் ரயில் வருவத்ற்குள் கேமிராவை ஒரேயொரு முறை கையில் வாங்கி பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கிக் கொண்டிருந்த்து.

எதற்குத் தயக்கம், வாய்விட்டு கேட்டுவிட வேண்டியது தான் என்பது போல அந்த பையனிடம் சிரித்த முகத்துடன் சொன்னார்.

நானும் நல்லா போட்டோ எடுப்பேன்,

அந்த பையன் உதட்டை மடித்து அழுத்தியபடியே அப்படியா என்பது போல தலையாட்டினான், அந்த செய்கை சவரிமுத்துவை மேலும் ஆத்திரப்படுத்திய போதும் அதைக்காட்டிக் கொள்ளவில்லை, தொலைவில் இருந்து ரயில்வரும் ஹார்ன் ஒசை கேட்க ஆரம்பித்தது.

உங்க கேமிராவை ஒரு நிமிஷம் பாக்கலாமா என்று கேட்டார் சவரிமுத்து,

அதை காதில் கேட்காதவனை போல நடித்த அந்த பையன் த்ரையில் கிடந்த ஒரு சிறிய கல்லை எடுத்து தண்டவாளத்தை நோக்கி வீசினான்.

ஒருவேளை தான் கேட்டது அந்த பையனுக்கு நிஜமாகவே காதில் விழாமல் போயிருக்குமோ,இன்னொரு முறை எப்படிக் கேட்பது என்று கூச்சமாக இருந்தது,

அதற்காக கேட்காமல் விட்டுவிட்டால் இது போன்ற லேட்டஸ்ட் கேமிராவை கையால் தொட்டு பார்ப்பது இயலாமல் போய்விடுமே, சவரிமுத்து மீண்டும் முகத்தில் செயற்கையாக ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு சொன்னார்.

நல்ல சாப்ட் லைட்டிங் இருக்கு, பஸ் பக்கத்தில வந்து நில்லுங்க, நான் உங்களை ஒரு போட்டோ எடுத்து தர்றேன்

நோ, ஐ டோண்ட் வான்ட் என்றான் அந்த பையன்,

இப்போது எதற்காக ஆங்கிலத்தில் பேசினான், டிக்கெட் கேட்கும் போது ஒழுங்காக தமிழில் தானே பேசினான், பிறகு இப்போது என்ன கேடு, அவன் வேண்டுமென்றே தன்னை எரிச்சல்படுத்துகிறான், போடா மசிரே என்று திட்டுவதற்கு பதிலாக நாகரீகமாகச் சொல்கிறான், ஆனாலும் ஆத்திரப்படக்கூடாது, வயது பையன்கள் அப்படிதானிருப்பார்கள், அது அவர்களின் இயலபு, மறுபடியும் அவனோடு இயல்பாக பேச வேண்டும்,

கூட்ஸ் ரயில் வரத் துவங்கியது, நிறைய பெட்டிகள் கொண்ட கூட்ஸ் அது, தடக் தடக் என நீண்டு போய்க் கொண்டேயிருந்த்து, பேருந்தின் கசகசப்பில் பெருமூச்சிட்டுக் கொணடிருந்தவர்கள் கூட தங்களை மறந்து கூட்ஸ் ரயிலை வேடிக்கை பார்த்தபடியே இருந்தார்கள், வண்ணத்துபூச்சிகளின் கூட்டம் ஒன்று சாலையோரம் அடர்ந்திருந்த தும்பை செடிகளின் மீது பறந்து கொண்டிருந்தன,

பேருந்து மறுபடியும் கிளம்பியது, அந்த பையன் இப்போது தனது கேமிராவையும் முதுகில் இருந்த பையையும் முன்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் நீட்டி மடியில வைச்சிகிடுங்க, இறங்கும் போது வாங்கிகிடுறேன் என்றான், அந்த பெண் வாங்கிக் கொண்டாள்.

சவரிமுத்துவால் அதை தாங்கிக் கொள்ளவேயில்லை, இந்த மயிரான் வேண்டுமென்றே தன்னுடன் விளையாடிவிட்டான், அவனுக்கு தான் யார் என்பதை புரிய வைக்க வேண்டும் போலிருந்தது,

பேருந்து வள்ளிக்குளம் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது, ஒடிவந்து ஆட்கள் பேருந்தில் ஏற முண்டியத்தார்கள், துணிமூட்டையுடன் ஒரு ஆள் பேருந்தில் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்தான், சவரிமுத்துவின் ஆத்திரம் அந்த துணிவியாபாரி மீது திரும்பியது

துணிமூட்டையை உள்ளே திணித்துக் கொண்டிருந்த ஆளின் சட்டையை பிடித்து கிழே இறக்க முயன்றார் சவரிமுத்து, அந்த ஆள் அதை கண்டுகொள்ளாமல் முண்டியத்து உள்ளே போய்க் கொண்டிருந்தான்.

சவரிமுத்து ஆத்திரத்துடன் கத்தினார்.

யோவ் அறிவு கெட்ட முண்டம், பஸ்ஸை விட்டு கையை எடுயா, இவ்வளவு பெரிய துணிமூட்டையை எல்லாம் பஸ்ல ஏத்த முடியாது, கிழே இறங்கு.

டபிள் லக்கேஜ் வாங்கிக்கோங்க, எப்பவும் கொண்டு போறது தானே , இப்படி ஒரமா வச்சிருக்கிடுறேன், என்றான் துணிவியாபாரி.

லக்கேஜ் எவ்வளவு போடணும்னு எனக்கே சொல்லி தர்றியா, வண்டில ஏற்றமுடியாதுன்னா, முடியாது தான், துணிமூட்டையை ஏத்திகிட்டு போக இது என்ன கழுதையா, கையை எடுய்யா,

பேருந்தினுள் இருந்து ஒருவர் குரல் கொடுத்தார்.

கண்டக்டர், ஏன்யா வெட்டியா தகராறு பண்றே, பாசஞ்சர் லக்கேஜ் கொண்டுவரக்கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா, காக்கி சட்டையை போட்டுட்டா பஸ்ஸே இவங்க அப்பன் வீட்டு இதுனு நினைச்சிடுறாங்க.

அதைக்கேட்ட சவரிமுத்துவுக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது,

சட்டம் பேசுற அந்த முகரை யாரு, எங்கே காட்டு பாப்போம், யாருடா அது, என சப்தமிட்டார்.

பேருந்தினுள் அப்படி பேசியது யார் என தெரியவில்லை, பேருந்து மெதுவாக புறப்பட்டது, சவரிமுத்து கோபம் தணியாமல் ஒங்கி விசில் அடித்தான்,

பேருந்து பிரேக் அடித்து நின்றது.

துணிவியாபாரிக்கு ஏண்டுகிட்டு சப்தம் போட்ட முகரை யாருனு தெரியாம வண்டி கிளம்பாது, கண்டக்டர்ன்னா என்ன இளக்காரமாக போச்சா, நானும் காலேஜ்ல படிச்சிருக்கன், எனக்கும் பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கு, காஷ்மீர்ல போயி வேலை பாத்தவன்டா நான், எகத்தாளம் பேசுன அந்த ஆள் யாருனு இப்ப தெரிஞ்சாகணும்

தாடி நரைத்துபோயிருந்த ஒருவர் அமைதியான குரலில் சொன்னார்.

கண்டக்டர், யாரோ தெரியாம பேசிட்டாங்க விடுங்க, நீங்க் தான் அனுசரிப் போகணும்.

அப்படி விடப்போயி தான் தலைமேல ஏறுறாங்க, இன்னைக்கு நான் ரூல் படி தான் நடக்க போறேன், படிக்கட்டில நிக்குற எல்லா ஆட்கள் எல்லாம் கிழே இறங்கி அடுத்த பஸ்ல வாங்க, இல்லேன்னா பஸ் கிளம்பாது.

படியில் நின்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள், டிரைவர் ஹார்ன் அடித்தபடியே நேரமாச்சி சவரியண்ணே என்று குரல் கொடுத்தார்

படியில நிக்குற ஆள் எல்லாம் தான இறங்குறாங்க, இல்லே நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டியை விடச்சொல்லட்டும்மா என்றார்.

சும்மா ஒண்ணும் நிக்கலை, டிக்கெட் எடுத்திருக்கோம் என்று யாரோ சொல்வது கேட்டது

அப்போ வண்டியை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுவோம், புட்போட் டிராவலுக்கு 500 ரூவா பைன்னு சட்டம் இருக்கு, தாசண்ணே வண்டியை எடுங்க,

படிக்கட்டில் நின்றிருந்த ஏழெட்டு பேர் பேருந்தை விட்டு இறங்கிக் கொண்டார்கள், கேமிரா பையன் தனது பையை, கேமிராவை அந்தபெண்ணிடம் இருந்து வாங்கிக் கொண்டான், அவன் முகத்தில் கலக்கம் தெரிகிறதா என்று சவரிமுத்து பார்த்தார், சலனமேயில்லை, அவன் கேமிராவை கழுத்தில் போட்டபடியே நடக்க துவங்கியிருப்பது தெரிந்தது.

பேருந்து கிளம்பியது, வெளியே எட்டிப்பார்த்தார், அந்த பையன் தனது கேமிராவை திறந்து ஒடும் பஸ்ஸையும் அதிலிருந்து எட்டிப்பார்க்கும் சவரிமுத்துவையும் சேர்ந்து போட்டோ எடுப்பது தெரிந்தது.

தனது முகம் அந்த போட்டோவில் நன்றாக வந்திருக்குமா, என்ன லென்ஸ் போட்டிருப்பான், அவன் நின்ற இடத்தில் இருந்து பேருந்து எவ்வளவு தூரத்தில் போய் கொண்டிருந்தது, போகஸ் சரியாக வந்திருக்குமா, என்று அடுத்தடுத்து ஏதேதோ எண்ணங்கள் வந்து போயின,

எதற்காக தேவையில்லாமல் இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஆழமான வருத்தமும் அவருக்குள் எழுந்து அடங்கியது,

அந்த பையனை அப்படி நடத்தியிருக்ககூடாது என்று நினைத்தபடியே பேருந்தின் விசில் அடித்து அடுத்த ஸ்டாப்பில் இருந்த கல்லூரி மாணவர்களை படியில் ஏற்றி கொண்டார்,

படியில ஆள் ஏத்தக்கூடானு இப்போ தான் சண்டைபோட்டு கத்துனான் அதுக்குள்ளே என்ன ஆச்சி என டிரைவர் திட்டுவது காதில் கேட்டது,

விடுங்கண்ணே, நாம தான் அனுசரிப்போகணும் என்றபடியே டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தான் சவரிமுத்து.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *