கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 9,150 
 
 

குவைத் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் ‘குப்’பென்று உஷ்ணம் பரவுவதை உணர்ந்தார் சிவானந்தம். அவர் அரபு நாடுகளுக்கு வருவது முதல் தடவை. அவர் சென்றதெல்லாம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்தான். விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது முதலில் அங்கெல்லாம் தெரிவது குளிர்ச்சிதான்.

இவை பாலைவனங்களாக இருந்தவை. இங்கு குளிரும் அதிகமாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார்.

அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த டிரைவர் பின்னால் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்களைக் கடந்து அவன் சென்றடைந்து கதவைத் திறந்த காரில் ஏறிக் கொண்டார்.

காரும் சூடாகவே இருந்தது. டிரைவர் ஏஸியை முடுக்கிவிட்டு, ஸீட் பெல்ட்டை அணிந்து கொண்டு வண்டியை எடுத்தான்.

கார் பளிச், வெறிச் சென்றிருந்த அகன்ற சாலைகளில் வழுக்கிக்கொண்டு 100 கி.மீ. வேகத்தில் பறக்க ஆரம்பித்தது.

“ஸார்… உங்களுக்கு ‘ஸ்டார் ஃப்ளோ’ என்ற கெஸ்ட் ஹவுஸில் இடம்” என்றான் டிரைவர் தமிழில்.

“ஓ, தமிழா?” என்றார்.

“யெஸ் ஸார்” என்றான் அவன்.

“எத்தனை நாளாகிறது இங்கு வந்து?” என்று பேச்சு கொடுத்தார்.

“ஏழு வருஷம்.”

“சொந்த ஊர்?”

“கும்பகோணம்”

“ஓ” என்றார்.

இந்திய மக்கள் எத்தனை உள்ளடங்கிய இடங்களிலிருந்து அயல் நாடுகளில் இன்று அலட்சியமாகக் குடியேறுகின்றனர் என்று நினைத்தபோது ஆச்சர்யமாக இருந்தது. அவர் பொறியியல் படித்து வெளிவந்த நாட்களில் மேல்படிப்புக்காக யு.எஸ். செல்பவர்கள்தான் அதிகம். வேலை தேடுபவர்கள் மும்பை, டெல்லி என்று பயணமாவதுண்டு.

அவர் வாழ்க்கைதான் சென்னையிலேயே நின்றுவிட்டது. அவரும் விரும்பி இருந்தால் சென்றிருக்கலாம். ஏதோவொரு ஆசையில் கனடா செல்ல வேண்டும், யு.எஸ். போகலாமா என்று விண்ணப்பங்களைக் கூட வரவழைத்தார். வசதியில்லை; தைரியமும் இல்லை; குடும்பத்தின் பொறுப்புக்கள் இறுக்கிப் பிடித்தன… இன்று தனியாக நிற்பதற்குக் காரணம்கூட ஒருவகையில் அதுதான்.

முடிந்த கதை, கடந்த வாழ்க்கை பற்றி நினைப்பதில் அர்த்தம் உண்டோ? இப்போதுகூட அவர் அனுபவம் பெற்ற சுற்றுச்சூழல் பற்றிய ஒரு ஆய்வுக்காகத்தான் பத்து நாட்கள் பயணமாக வந்திருக்கிறார்.

குவைத் மேல் நாடுகளின் சாயலை ஒற்றி எடுத்திருந்தது. உயர உயரக் கட்டிடங்கள். தொழில் துறை குறிப்பாக எரிபொருட்கள் தயாரிக்கும், சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளே அதிகம் இருந்ததால் மஞ்சள் நிறத்தில் விளக்குகள் ஒளிரும் அவைகளின் தோற்றம் இரவில் பார்க்க அழகாக இருந்தது.

கிட்டத்தட்ட 45 நிமிடப் பயணத்திற்குப் பின் கார் ஒரு பல மாடிக் கட்டிடத்தின் வாசலில் வந்து நின்றது.

டிரைவர் “வாங்க ஸார்” என்று உள்ளே அழைத்துச் சென்றான். ரிசப்ஷனில் அமர்ந்திருந்த ஆளைப் பார்த்ததுமே கேரளத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது.

“7வது மாடி. நம்பர் 14”என்று சாவியைக் கொடுத்தான்.

துப்புரவாக இருந்த அந்த வரவேற்புப் பகுதியைத் தாண்டி மின்தூக்கியில் ஏறினர். லிப்ட் செல்லும் உணர்வே இல்லை. 7வது மாடியில் இருந்த ஒரு கதவைத் திறந்து அவரை உள்ளே செல்லும்படி கேட்டுக் கொண்டான் டிரைவர்.

அவர் இருக்கும் வீடு போல் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஃப்ளாட். குளிர்பதம் கட்டிடம் முழுவதிலுமிருந்தது.

“நாளைக் காலை 7 மணிக்கு ரெடியாக இருங்க ஸார்… நான் வருகிறேன்” என்றான்.

“7 மணியா?” என்றார் சிவா வியப்புடன்.

“ஆமாம் ஸார். இங்க காலை 7லிருந்து 3 மணி வரைதான் வேலை நேரம். இப்போது மணி…? தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தார். இந்திய இரவு இரவு 2.30. அப்படியானால் இங்கு இரவு 12 மணி.

சீக்கிரம் படுத்தெழ வேண்டும்.

டிரைவர் போய்விட்டான்.

இரண்டு பேர் சௌகரியமாகப் படுக்கக்கூடிய அந்தப் படுக்கையில் சாய்ந்தார் சிவானந்தம். தொடர்ந்த விமானப் பயணம் அவருக்கு மிகந்த அயர்ச்சியைத் தந்தது – வயதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

திடீரென்று அவருக்கு ஆயாசமாக இருந்தது. இந்த வேலை செய்துதான் அவர் சாதிக்கப் போவது என்ன?

பணமா? பதவியா? புகழா? அறுபத்தி ஐந்து வயதில் தனிமரமாக நிற்கும் அவருக்கு இவை இனி எந்த விதத்தில் உதவப் போகிறது? அல்லது உயர்த்தப் போகிறது?

தொழில் ரீதியாகப் பழகிய இளம் வயது நண்பர்களின் வற்புறுத்தலில்தான் இந்த வேலையை ஏற்றுக் கொண்டு வந்திருந்தார்.

தூக்கம் எளிதில் வரவில்லை – ஏதோ பலவிதமான எண்ணங்களுடன் கைபேசியில் அலாரம் வைத்துவிட்டு உறங்கினார்.

*****

மறுநாள் காலை 7 மணிக்கு அவர் கீழே வரவும் அந்த டிரைவரும், மற்றொரு இளைஞனும் அவரை நோக்கி வந்தனர்.

“வெல்கம் ஸார்… என் பெயர் சல்மான். நீங்கள் வேலைக்காக வந்திருக்கும் கம்பெனியின் இஞ்சினியர்” என்று தன்னை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்துகொண்டு கைகுலுக்கினான்.

மாநிறத்தில் நடுத்தர உடல்வாகுடன் சிரித்த முகமாக இருந்தான் சல்மான்.

இருவரும் காரை நோக்கி நடந்தனர்.

“நீங்கள் ப்ரெக்ஃபாஸ்ட் சாப்பிட்டீங்களா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான் சல்மான்.

“இல்லை… இத்தனை காலையில் என்னால்…” என்று இழுத்தார் சிவானந்தம்.

“இட்ஸ் ஓகே. இங்கே பக்கத்தில் ஒரு தமிழ் ஹோட்டல் இருக்கிறது. ஆனால் சைவம், அசைவம் இரண்டும்…” என்றான் சல்மான் தமிழில்.

“ஓ… நீங்களும் தமிழ்தானா?” என்று கேட்ட சிவா, “நான் சுத்த சைவம்,” என்றார்.

“ஓ…” என்ற சல்மான், “அப்போது கஷ்டம்தான். நீங்கள் இட்லி, தோசை ஏதாவது சாப்பிடலாமே… இஃப் யூ டோன்ட் மைன்ட்…” என்றான்.

“வேண்டாம் தம்பி… பார்த்துக்கலாம்…” என்றார் சிவா.

கார் கிளம்பியது. பெரும்பாலான கட்டிடங்களும், சாலைகளும் புது மெருகு அழியாமல் நின்றன. பெரும்பாலும் எல்லாமே ‘ப்ரௌன்’ நிறத்தில் இருந்தன. சாலைகளும், நடைபாதைகளும் பெரும்பாலான இடங்களில் துப்புரவாக இருந்தன. குளிர்பதனம் செய்யப்பட்ட கார் என்பதால் கார் செல்லும் வேகமோ, மற்ற கார்கள் பறக்கும் ஓசைகளோ கேட்கவில்லை.

எல்லோருமே மௌனமாக, விரைவாக இயங்கிக் கொண்டிருந்தனர். நடைபாதை வியாபாரம் கண்ணில் படவில்லை. நடந்து செல்பவர்களும் வெகு சிலரே, அதுவும் வெகு சில இடங்களில்.

“இங்கு எத்தனை நாட்களாக வேலை செய்கிறீர்கள் சல்மான்?” என்று கேட்டார் சிவா.

“எட்டு வருஷங்களாக இருக்கிறேன்.”

“குடும்பம்?”

“ம்… மனைவி, ஒரு குழந்தை, ஆண்.”

“பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்?”

“தமிழ்நாட்டில், தஞ்சாவூர் அருகில் ஒரு கிராமத்தில்…”

“அடடே… எனக்குக்கூடப் பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம்தான்” என்றார் சிவா.

“எந்த ஊர் ஸார்..?”

“திருக்காட்டுப்பள்ளி – ஒன்பத்து வேலி…”

“ம்… கேள்விப்பட்டிருக்கிறேன்… போனதில்லை. நீங்கள் போவதுண்டா?”

சிவா புன்னகை செய்தார்.

“அந்தத் தொடர்பெல்லாம் அறுந்து பல காலமாகி விட்டன.”

சல்மான் பதில் சொல்லாமல் புன்னகை செய்தான். அதற்குள் அவர் போக வேண்டிய இடம் வந்து விட்டது.

******

சிவானந்தம் குவைத் வந்து ஒரு வாரமாகி விட்டது. அவர் இன்னும் இரண்டு நாட்களில் சென்னை திரும்ப வேண்டும்.

இந்த ஒரு வாரத்தில் சிவா, சல்மானுடன் இணைந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. அவனது புத்திசாலித்தனமும், சுறுசுறுப்பும் சமயோசிதமும் அவரை வியக்க வைத்தன.

அவன் மிகச் சரளமாக இந்தி, ஆங்கிலம், மலையாளம், சுமாரான தெலுங்கு மற்றும் அரபியில் பலருடன் சகஜமாக உரையாடினான்.

கடைசி நாள் அவரைத் தன் வீட்டுக்கு சாப்பிட அழைத்துச் சென்றான் சல்மான். “பயப்படாதீங்க சார்… உங்களுக்காக என் வொய்ஃப் ஸ்பெஷலாக சாம்பார், ரசம் எல்லாம் செய்திருக்கிறாள்” என்றான் சிரித்தபடி.

சிவாவும் புன்னகை செய்தார்.

சிறியதாக இருந்தாலும் சல்மானின் வீடு சுத்தமாக இருந்தது. அவன் மனைவி அவனுக்கு ஏற்ற ஜோடியாக இருந்தாள். குழந்தைக்கு ஒரு வயதுதான். சாப்பாடு நன்றாகவே இருந்தது.

“சாம்பார் நன்றாக இருந்ததா?” என்று கேட்டார் ஆஷா, சல்மானின் மனைவி.

“வெரிகுட்… ஐயர் வீட்டு சாம்பார் போலிருந்தது” என்று பாராட்டினார் சிவா மனம் விட்டு.

“இருக்காதா… ஐயர் வீட்டுப் பெண்தானே ஆஷா…” என்றான் சல்மான் சிரித்தபடி.

சிவா திடுக்கிட்டு ஆஷாவைப் பார்த்தார். “யெஸ் ஸார்… லவ் மாரேஜ்… ஆனால் பெற்றோரின் சம்மதத்துடன்” என்றாள் ஆஷா.

“உன்னைப் போன்ற புத்திசாலி இளைஞர்கள் இந்தியாவில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்றார் சிவா.

சல்மான் பெருமூச்செறிந்தான்.

“இருக்கலாம்தான்… நான் ஒன்று கேட்பேன்… நீங்கள் பதில் சொல்வீர்களா?” என்று கேட்டான்.

“கேள்…”

“இங்கு வந்த இந்த ஒரு வாரத்தில் நீங்கள் எங்காவது குப்பை; கூளம், தெருவில் எச்சில் துப்புபவர்கள், வெட்டியாகக் கூட்டம் கூட்டமாக நின்று பேசுபவர்களைத் தெருவில் பார்த்தீர்களா?” என்றான்.

“இல்லை…”

“உங்கள் இருக்குமிடத்தில் தூசோ, மாசோ, கரப்பான் பூச்சியோ, கொசுவோ, ஈயோ, பல்லியோ இருக்கிறதா?”

“ம்ஹும்…”

“தண்ணீர், மின்சாரம் இவைகள் நின்று போனதா?”

“இல்லை…”

“வாழ்க்கைக்கு சில விஷயங்கள் அத்தியாவசியத் தேவை. அதில் சுத்தமும் சுகாதாரமும்; முக்கியமாக அது இங்கு இருக்கிறது. போக்குவரத்தில் ஒழுங்கு, கற்றுக்கொள்ள, ஐ மீன், பல மொழிகளை, மனிதர்களை அறிந்துகொள்ள வாய்ப்புகள் நிறைய உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக பணம்… இவை அனைத்தும் இங்கு கிடைக்கும்போது இவற்றைத் துறந்து நான் ஏன் இந்தியா வந்து அத்தனை சுகாதாரம் குலைந்த ஒழுங்கற்ற நாட்டில் வாழ வேண்டும்… சொல்லுங்கள்?”

“இருந்தாலும்… சொந்த நாடு…” என்று இழுத்தார் சிவா.

“நாங்கள் நாட்டைத் துறக்கவில்லை ஸார்… நாடுதான் எங்களைப் போன்றவர்களைத் துரத்தி விடுகிறது… இந்த நாட்டில் ஊழல் இல்லாமல் இல்லை… இருக்கிறது. ஆனால் அவை நம் நாட்டில் நடக்கும் எதிலும், எப்போதிலும், எல்லாவற்றிலும் ஊறிக் கிடக்கும் வகையில் இல்லை. மக்களுக்கு நம் நாட்டில் அதிக உரிமை இருக்கிறது. ஆனால், கடமை உணர்வு இல்லை; அதை உண்டாக்கவுமில்லை. எண்ணெய் வளம் ஒன்றை ஆதாரமாகக் கொண்டே இந்த நாடு ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவு பெரிய வளர்ச்சி பெற்றிருக்கிறது? பல வளங்கள் பரவிக் கிடந்தும் நாம் ஏன் இன்னும் தாழ்ந்தே இருக்கிறோம்? குறிப்பாக சுகாதாரத்திலும், சுற்றுச்சூழல் பராமரிப்பிலும்…?”

சிவாவிடம் பதில் இல்லை. இருந்தாலும் விடாமல், “நம் நாட்டின் ஜனத்தொகை அதிகமப்பா…” என்றார்.

“அதற்கும் நாம்தானே காரணம்…”

“வறுமை… இன்னொரு காரணம்; இல்லையா?”

“உண்மைதான்… ஆனால் நாம் இன்னும் வறுமையை ஒழிக்கவில்லை என்பதைவிட ஒழிக்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன். வறுமை ஒழிப்பு என்பது ஒரு கோஷம்… அரசியல்வாதிகளுக்கு…”

“உண்மைதான்” என்றார் சிவா.

“வறுமை கொடுமையான விஷயம்தான். ஆனால், அது கட்டாயமாகப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய சமாச்சாரமில்லை. நம் நாட்டில் ஏழைகள் எல்லோருமே நல்லவர்கள் என்பது போலும், பணம் படைத்தவர்கள் மோசமானவர்கள் என்பது போன்றதொரு உணர்வை ஊடகங்கள் மறைமுகமாகவும், நேரிடையாகவும் தோற்றுவிக்கின்றன… இல்லையா?”

“……”

“பணம் எல்லோருக்கும் தேவை. நம் கார் டிரைவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் தமிழ்நாட்டுக்காரன். அவன் அப்பா விவசாயி. விவசாயம் படுத்து விட்டதாலும், அவன் அதிகம் படிக்காததாலும் நண்பர் ஒருவரின் உதவியில் இங்கு வந்து டிரைவராக வேலை செய்கிறான். அவனுக்கு வரும் வருமானத்தில் தன் செலவைப் பார்த்துக்கொண்டு ஊருக்கும் பணம் அனுப்புகிறான். தனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்களையும் இங்கு வேலைக்கு இழுத்துக்கொண்டு வந்திருக்கிறான். இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? சம்பாத்தியம்… பணம்… அது எங்கு கிடைக்கிறதோ, சில கஷ்டங்களும், நஷ்டங்களும் இருந்தாலும் அவற்றை ஏற்று சமாளித்துக் கொண்டு செய்ய இந்தியர்கள் தயாராக இருக்கின்றனர். அதை நாம் எப்படிக் குற்றமாக எடுத்துக்கொள்ள முடியும்? நான் இந்தியா வரவேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால், வரக்கூடாது என்பதைவிட வரமுடியவில்லை என்பதுதான் நிஜம்.“

சிவா சிந்தனை வயப்பட்டார்.

“அன்று நேருவும், காந்தியும், ராஜாஜியும் வெளிநாடு சென்று படித்தாலும் இந்தியாவுக்குத் திரும்பினார்கள். ஆனால், அவர்களின் கவனம் நாட்டுப்பற்றும், நாட்டை வெளிநாட்டவர்களிடமிருந்தும் மீட்டு நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற வேகமும், வேட்கையும் இருந்தன. ஆனால் இன்று? எதற்கும் எதிர்ப்பு, போராட்டம், ஆர்ப்பாட்டம்! உலகமே ஒரு பெரிய கிராமமாக, ஒரு விரலின் நுனியில் பல காரியங்களை சாதிக்கவும், விவரங்களை சேகரிக்கவும் முடியும் இந்நாளில் யாரை, யாரிடமிருந்து எப்படி மீட்பது?

நம்மிடம் உள்ள அசாத்திய சுதந்திரம்தான் இன்று நம் எதிரி. அது ஒரு இருபுறமும் கூர்மையான கத்தி. எப்படி வேண்டுமானாலும் வெட்டும். இன்று மக்களிடமும் அரசியலிலும் பல ஆயுதங்கள் இருக்கின்றன.”

“வாஸ்தவந்தான் சல்மான்… உன் வாதம் ஒருவகையில் ஏற்புடையதே… அன்று நமக்கு எதிரி வெளி ஆளாக இருந்தான். இன்று நமக்கு எதிரிகள் நாமேதான். அவர்களிடம் ஜாதி, மதம், மொழி என்று பல ஆயுதங்கள் இருக்கின்றன. அவர்களை வெல்லுவது இன்னும் கஷ்டமான சவால்தான்…” என்றார் சிவா.

சல்மான் பதில் சொல்லாமல் புன்னகை செய்தான்.

அவனிடம் விடைபெற்றுக்கொண்டு காரில் வந்து ஏறும்போது வழக்கம் போல் இரவு நேரத்திலும் குவைத்தின் உஷ்ணம் குறையாமல் சுரீரென்று சுட்டது.

ஆனால், அதைவிட சல்மானின் சொற்களில் இருந்த உண்மையும், அதிலிருந்த யதார்த்தமும் சிவாவின் மனதையும், அறிவையும் அதிகமாகச் சுட்டது.

– தினமலர்- காலைக்கதிர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *