உழைக்கும் கைகளே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 5,659 
 
 

அந்த மெஷின் காலையிலேயே ரிப்பேரு. வர எல்லா கஸ்டமரும் இந்த கவுண்டருக்கே வரவேண்டியதாயிடுச்சு. சாதாரணமா சிரிச்ச முகமா இருக்கும் எழிலுக்கு அன்னைக்கு ஒரே பதட்டம்.அந்த பச்சப்புடவை அம்மா வேற சில்லறை தராம ரூபா நோட்டா நீட்டறாங்க.யாருமே சில்லறை தரலைன்னா திண்டாட்டம் தான்.

போன வாரம் வரை “வெஜ் ஃப்ரேஷ்” கடையில வேல பார்த்திட்டிருந்தா எழிலரசி. நல்லா பேரு வச்சாங்க உங்கம்மா உடுத்த நல்ல ட்ரெஸ் இல்ல. எழிலாம். அரிசிக்கே வழியில்ல அரசியாம் – முருகன் சிரிப்பான். முருகனுக்கு, என்ன பேரது…. டோமாட்டோவோ சோமாட்டோவா.. அதுல சாப்பாடு டெலிவரி பண்ணுற வேல.

முதலில் வேலை பார்த்துட்டு இருந்த கடையில சம்பளம் கம்மின்னு காரணம் சொல்லி நின்னுட்டா எழில். அது மட்டும் காரணமில்ல. அங்க வேல பார்க்குற சாந்திக்கு எழிலைப் பிடிக்காது. எடக்கா பேசிட்டே இருப்பா. தினம் கைப்பை முதற்கொண்டு செக்கிங்க் செய்து வெளிய அனுப்புவாங்க. பெரிய கம்பேனிகளில கூட இத்தன ரவுசு இல்ல. போதும்டா சாமி இந்த வேலைன்னு ஓடியாந்துட்டா.

எட்டாம்கிளாஸ் வரை தான் படிச்சிருந்தாலும், வந்த ஓண்ணு ரெண்டு நாளிலேயே கம்ப்யூட்டரை இயக்க கத்துகிட்டா. நாலே நாளில பில்லிங்க் போட கத்துகிட்ட எழிலோட புத்திசாலித்தனம் முதலாளிக்கு புடிச்சுப் போயிடுச்சு. முத்து இன்னைக்கும் இவளையேத்தான் குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்கான்.

ரெண்டு நாளைக்கு முன்ன ராப்போதுல நாலு வீடு தள்ளி ஒரே சண்டை. அந்த வீட்டு பொண்ணு, வேத்து சாதி பையன கல்யாணம் கட்டுவேன்னு ஒத்த காலுல நிக்கிறா. ‘அந்தப்பய குலமென்ன என்ன, நம்ம குலம் என்ன’ன்னு தெருவே அதிர்ந்து போகுற அளவு வீட்டுல கூச்சல். இத்தனைக்கும் ரெண்டு பேரும் ஒரே சாதி தான், சாதி உட்பிரிவு தான் வேற.

அந்தக் கதையத்தான் முதலாளிகிட்ட எழில் சொல்லிட்டு இருந்தா. “என்ன சாதியான என்ன சார். சாதியே வேணாம், இதுல சாதி உட்பிரிவு வேற. பிடிச்சா கட்டிக்கொடுக்க வெண்டியது தானே. சொல்ல போனா சாதியே இல்லாம பண்ணிபுடணும். ஒசந்த சாதின்னு அவங்க கொடி புடிக்குறதும் வேணாம். கொறஞ்ச சாதின்னும் இவங்க சலுகை கேக்கவும் வேணாம். உழைச்சா உயர முடியும். அவ்ள தான்”

முத்து அவளை முறைத்தான். சட்டென நாக்கை கடித்தாள். இதப்பத்தியெல்லாம் பொதுவுல பேசாதன்னு முருகன் அடிக்கடி சொல்லும். பேசிருக்கக் கூடாது. முத்து இவளை அடிக்கடி நோட்டம் விடுவது அன்னையிலிருந்து தான்.

போன வாரமா முந்தின வாரமான்னு தெரியல, அவ புருசன் வேலை பாக்குற கம்பேனி டெலிவரி ஆளு ஒருத்தன் பசி மயக்கத்துல கஸ்டமருக்கு கொண்டு போன சாப்பாட்ட பிரிச்சு சாப்டுட்டானாம். அதுலேருந்து கம்பேனில கெடுபிடி அதிகமாப் போச்சு. வெய்யிலில களைச்சு திரிஞ்சு அதுங்க சோத்துல கை வெக்கவே மணி மூணாகிடும். பாதி நாள் திங்கறதே இல்லைங்கற கதையெல்லாம் யாரும் சொல்லுறதே இல்ல.

சிட்டுவுக்கு வயசு அஞ்சு. சதீசுக்கு எட்டு. ரெண்டு பேரும் ஸ்கூல்லையே சத்துணவு சாப்பிட்டுடுங்க. மாச செலவு போக, சேட்டுக்கிட்ட வண்டிக்கு வாங்கின கடனுக்கு வட்டி கட்டினா மிச்சம் அதிகம் தங்காது. அவசர செலவுக்கு கொஞ்சம் பூட்டி வச்சுக்குவா. பிள்ளைங்கள தனியார் ஸ்கூல்ல படிக்க வெக்கணும்னு ரெண்டு பேருக்கும் ஆசை.

வாய்க்கும் கைக்கும் சரியா போயிடுது. முன்ன வேல பார்த்த கடையில வெல போகாத கறிகாய அரை வெலைக்கு குடுப்பாங்க. அந்தக் கததான் முடிஞ்சு போச்சே. இங்க வந்து ஒரு வாரம் தான் ஆகுது. கேக்கவும் முடியல. நினைக்கவும் பயமா இருக்கு.

இன்னைக்கு முருகனுக்கும் சம்பள நாள். வாரா வாரம் சம்பளம் வந்துடும். ஜோமாட்டோ கம்பேனில கொஞ்சம் இங்கிலீசு பேச தெரியணும். முருகனும் சுமாரா பேசும். அதுக்கு மயங்கிப் போயி தான் கட்டிகிட்டா.

ஐஞ்சு மணிக்கு வீட்டுக்கு கிளம்பினா. கொஞ்ச நேரத்துல யாரோ தன்ன கூப்புடுற மாதிரி இருந்துச்சு. திரும்பினா, முத்துப் பயதான். இவ மனசுக்கு இதொண்ணும் சரியா படல. இன்னும் வேகமா நடந்தா. சாதி வேறியனா இருப்பானோ. நம்மள அடிச்சு போட்டுருவானோ!

எழில் ஓட்டமும் நடையுமா ஒரு கடைவாசல்ல மறைஞ்சு நின்னா. அவனும் ஒதுங்குறது தெரிஞ்சது. ஒரு வேள அவன் பார்வை சரியில்லையோ? யார் கண்ணுல என்ன விசமோ! எந்த வயசு பொண்ணுங்களுக்கும் பாதுகாப்பு இல்ல.

அவன் இல்லைன்னு நல்லா தெரிஞ்ச பிறகே புறப்பட்டா.

இருந்தாலும் வீடு நெருங்கும் முன்ன யாரோ பின்னடி வர மாதிரியும் முறைக்குற மாதிர்யும் பிரமை. பிரமை இல்ல. நிழல் கூட தெரியுது. திரும்பிப் பார்த்தா யாருமில்ல. ‘ஆத்தா இன்னிய பொழுது எப்படியாச்சும் காப்பாத்திடு.’

வந்ததும் வராததுமா சிட்டுவுக்கும் சதீசுக்கும் சண்டை. இதுங்க சண்டைய தீர்த்து வெக்கவே நேரம் சரியா போயிடுது. நிழலா ஒரு உருவம் கதவு பக்கத்துல தெரியுது. கொஞ்ச நேரம் சத்தமே இல்ல. அப்புறம் டக்டக்னு கதவு தட்டுற சத்தம். பயத்துல நாக்கே வரண்டு போச்சு.

தயங்கி மெல்ல கதவு வழியா எட்டிப் பார்த்தா. அவனே தான். குருகுருன்னு பார்த்துட்டு இருந்தான். “முதலாளி குடுத்துட்டு வரச் சொன்னாங்க. நம்ம கடையில வேல பாக்குறவங்களுக்கு, சந்தையிலிருந்து வந்ததும் நல்லதா கொஞ்சம் காய்கறி அவரே தந்துவிடுவாரு. எழிலுக்கு கொஞ்சம் நிம்மதியாச்சு. சோத்துக்கு வழி செஞ்ச நல்ல மொதலாளி.

“சரி. அப்படி வச்சுட்டுப் போ” – கடுகடுத்தாள்.

அவன் போகலை, அவளையே பாத்துட்டு நின்னான்.

“இதை அங்கன குடுத்திருக்கலாமே. என் கிட்ட”

“நீங்க ரொம்ப வேலையா இருந்தீங்க, அவசரமா கிளம்பிட்டீங்க. உங்க வீடு தெரியல. அதான் பின்னாடியே ஓடியாந்தேன்”

“வச்சுட்டுப் போப்பா. ரொம்ப தாங்க்ஸு.”

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”

வேளிய வண்டி சத்தம் கேட்டதுந்தான் உசுரே வந்துச்சு. நல்லவேளை முருகனும் வந்துடுச்சு.

முத்து இப்போ எழிலையும் முருகனையும் பார்த்தபடி தயங்கித் தயங்கி பேசினான்

“என் ஊரு மதுரை தாண்டி சின்ன கிராமம்…எங்க பாட்டி தான் என்ன வளர்த்திச்சு. கொஞ்சம் படிச்சேன். பெறவு படிப்பு வேணாம்னு பாதியில நிப்பாடிட்டேன். படிச்சிருக்கணும். இப்ப வருத்தப்பட்டு என்ன செய்ய! பாட்டியும் செத்து போச்சு. தனியாத்தான் இருக்கேன். உழைக்கறவன் எல்லாம் ஒரு சாதின்னு அன்னைக்கு சொன்னீங்களே. நான் உழைக்கணும். முன்னுக்கு வரணும். எனக்கு கொஞ்சம் இங்கிலீசு அப்புறம் பில் போடுறதெல்லாம் கத்து தரீங்களா அக்கா”

எழிலுக்கு வார்த்தை வரல. கேடுகெட்ட காலம் எல்லாரையும் தப்பாவே பாக்கச் சொல்லுது. முன்னுக்கு வர முருகனும் அவளும் பாடுபட்டதெல்லாம் கண்ணுல படமா ஓடிச்சு.

எழில் குரல் தழுதழுத்தது. ”நம்ம சனம் நீ. முன்னுக்கு வர நினைக்கற சாதி. கண்டிப்பா செய்யறேன் முத்து ரெண்டு நிமிசத்துல சோறாக்கிடுறேன். இருந்து சாப்பிட்டு போ தம்பி.”

‘உழைக்குற சாதி தான் நானும்’ – வீசி வெளிச்சம் பரப்பின நிலா கூட அதே சொல்லிச்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *