ஈரம் பூத்த நெருப்பு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 14,834 
 
 

டேய் கஜா… அண்ணங் கேட்டார்டா… அமௌன்ட் எவ்ளோ கலெக்ஷனாயிருக்கீதுன்னிட்டு…?

இன்னா… ஒரு மூணு… மூன்றை இருக்கும் தல..

“மூணா? மூன்றையா? ஒயுங்கா சொல்டா பேமானி.’

“அய! இன்னா சத்தாய்க்கிற. இன்னவோ நானே தூக்கிணு பூட்றாமாதிரி. இத்த நீயே எண்ணிப்பாரு’ என்றபடி தன் கையிலிருந்த லெதர் பேக்கை தூக்கிப் போட்டான் கஜா.
கத்தை கத்தையாகத் திணிக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுக்களைப் பிரித்து எண்ணத் தொடங்கினார்கள்.
மூன்று லட்சத்து முப்பத்தையாயிரத்து எழுநூற்றைம்பது இருந்தது.

ஈரம் பூத்த நெருப்பு!பத்தாதேடா கஜா, ஒரு அஞ்சு ரூபாயாவது தேறும்னு எதிர்பார்த்தேன். ம்… இன்னா பண்லாம்? டேய் அந்த … பேட்டைப் பக்கம் ஒரு ரவுண்ட் போய் வரலாமா?

தோடா… நல்லா சொன்ன தல… அந்த ஏரியாப் பேரச் சொன்னாலே பசங்க சொம்மா பிசிராகிறானுக! அவனுங்க நல்ல காலத்திலயே பைசா அவுக்க மாட்டானுக. இப்ப மட்டும் குட்துறப் போறானுகளா? டிடு தல… இத்த வெச்சிக்கிணே சமாய்ச்சிடலாம். பேசாத எட்துணுபோய் அண்ணங்ட்ட குட்துட்டு அவர் இன்னா சொல்றாரோ அப்படியே செஞ்சிடலாம் தல.

போடாங்… பொயக்கத் தெரியாத தத்தியாக்கிறீயே… என்றபடி பையில் இருந்த பணத்திலிருந்து ஒரு ஐநூறு ரூபாய்க் கட்டை எடுத்து “இந்த ஒரு அரைக்கீது நீ எட்துணுபோ. நான் ஒரு அரை எட்துக்கறேன். அப்பால பசங்களுக்கு எதுனா வாங்கிக் குட்து அனுப்பு. நான் மீதிப் பணத்தை எட்துணுபோய் அண்ணனாண்ட குட்துட்டு இன்னா சொல்றான்னு கேட்டுணு வறேன்.’

“இன்னா தல… பசங்களெல்லாம் காண்டாயிடுவானுங்க,’ என்று இழுத்தான் கஜா.

“இன்னாடா, புச்சாக்கீது, வெறுங்கையோட போகாத, அல்லாத்தையும் பிரிச்சுக் குட்தனுப்பச் சொல்றியா?’ என்றான் காட்டமாக.

“அதில்ல… தல வந்து…’ என்று கஜா தலையைச் சொறிய,

“வந்ததும் கடியாது போயும் கடியாது. வேணா ஆளுக்கொரு கோட்டர் வாங்கி ஊத்தி, பிஸ்மில்லால சொல்லி வயித்துக்கு எதுனா வாங்கிப் போட்டனுப்பு. கையில ஒரு நூறோ இருநூறோ குட்தனுப்பு. இன்னா சர்தானா?’

“சரி தல…’ என்றவாறு நகர்ந்தான் கஜா.

அவன் தலைமறைந்ததும் இன்னொரு அரைக் கட்டை லவட்டி ஒரு பழைய காகிதத்தில் சுற்றிக் கட்டி தன் (அல்லக்கை) உதவியாள் மணியை அழைத்து, “டேய் மணி… இந்த எட்துணுபோயி வூட்டாண்ட குட்திரு’ என்றான்.

“எந்த வூட்லண்ணா?’

“அடிங்… கயித்தமாட்டையில ஒண்ணு வெச்சேன்னா அப்டியே தாராந்திருவே.. இன்னா நெக்கிலா? எட்திணுபோய் மருவாதியா அயனாவாரத்தில் குட்திட்டு வாடா சோமாரி.’

“ஓ…. பெரியண்ணியா? அப்படி தெளிவா சொன்னாதானே தெரியும்’ என்றபடி பொட்டலத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பினான் சுப்பையன்.

மீதிப் பணத்தை எடுத்துக் கொண்டு “அண்ண’னிடம் சென்றான் அவன்.

“ண்ணா… வண்கணா…’ என்றான் பவ்யமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு.

“இன்னாடா மாரி… ரொம்பத்தான் பம்மிற… இன்னா மேட்ரு…?’
“ஒண்ணில்லண்ணா… நாளனிக்கு நம்ம நித்யாவோட மொத வருஷம் வருதுங்ணா… அதான் பசங்க எதுனா செய்யலாமின்னுட்டு ஆசைப்பட்றானுக.. போனவாரங்கூட அண்ணங் கேட்டீங்கல்லணா… அதாணா…இதில ஒரு ஒண்ணு எழுபத்தைஞ்சு கீதுண்ணா. அண்ணங் இன்னா சொல்றீங்களோ அப்படியே செய்திடலாண்ணா’ என்று மிகவும் பதுங்கி நின்றான் மாரி.

அமைந்தகரையில் ஒரு சந்துக்குள் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போடப்பட்ட ஒரு ஒண்டிக்குடுத்தனம்! அதன் தண்ணையில் ஒடிசலான தேகம், பரட்டைத்தலை, அழுக்கேறிய அரசாங்க இலவசக் காட்டன் புடவையுடன் நெஞ்சில் பல கவலைகளைத் தேக்கி கண்களில் மட்டும் ஜீவனை நிலைநிறுத்தி கைகளில் சுரத்தேயில்லாமல் பூக்கட்டிக் கொண்டிருந்தாள் அஞ்சலை. தினமும் கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு நடந்தே சென்று பூ வாங்கிவந்து சரம்கட்டி அக்கம் பக்கத் தெருக்களில் விற்று வருவாள். போக வர பேருந்துக்கு ஆகும் காசை மிச்சமாக்கி குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைப்பாள். அந்தப் பூ வியாபாரத்தில் வரும் சொற்ப வருமானத்தில் வீட்டு வாடகை, கரண்ட்பில், தண்ணீர் பில், முறைவாசல் என்று போக மூன்று ஜீவன்களுக்கு கால்வயிறு நிறைவதே கடினம்! எட்டு வயதில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகனும், நான்கு வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். அவர்களுக்காக மட்டுமே இன்னும் உயிரைப் பிடித்த வைத்துக் கொண்டிருக்கிறாம் அஞ்சலை.

“டேய் மாரி… அந்தப் பய நித்யாவுக்கு குடும்பம் கொயந்தைன்னு யார்னாக்கிறாங்களாடா…?’

“ஆமாண்ணா, ரெண்டு பசங்கண்ணா… சின்னச் சின்ன பசங்க…’

“பாவண்டா அவன். அந்தப் பணத்தை வெச்சு அவன் குடும்பத்துக்கு எதுனா செய்ங்கடா. சொம்மா வெட்டிச் செலவு செய்யாதீங்கடா..’

“சரிண்ணா, செஞ்சிடலாண்ணா’ என்று அங்கிருந்து நகர்ந்தான் மாரி.

வெளியே வந்ததும் கஜாவுக்குப் போன் செய்து, “கஜா… நீ இன்னா பண்ற, நித்யா படத்தப்போட்டு ஒரு ரெண்டாயிரம் கண்ணீரஞ்சலி போஸ்டர், ஒரு அஞ்சு டிஜிட்டல் பேனர், அப்பால பிட் நோட்டீசு எதுனா ஒரு ரெண்டாயிரம் அடிக்கச் சொல்லி ஆர்டர் குட்துரு. வூட்டாண்ட வந்து அட்வான்ஸ் காசு வாங்கிக்கோ. ஒரு ஆயிரம் பேருக்கு பிரியாணி போட்றலாமின்னுட்டு பிளான் பண்ணிக்கிறேன். இன்னா சொல்ற கஜா?’

“போட்றலாம் தல, நம்ப பசங்களும் அத்தையே தான் சொன்னானுக.’

“சரி… சரி… பசங்களை இட்டுக்கோ சீக்கிரமா வேலையைப் பாரு. நாளைக்கு நைட்டு எட்டு மணிக்கலாம் போஸ்டர் ஒட்ட ஆரம்பிச்சிடணும்.’

மறுநாள் மாலை ஐந்து மணி. “இன்னா கஜா ரெடியாடிச்சா.’
“ஆங்… அல்லாம் ரெடி தல. எங்கிருந்து ஆரம்பிக்கலாம் தல?’
எங்கிருந்து வேணா ஆரம்பி ஏரியால ஒரு தெருவும் தப்பக்கூடாது. அப்பால அந்தத் தெரு மொனையாண்ட ஒரு பேனர். நித்தியா குடியிருந்த வூட்டாண்ட ஒண்ணு, மெயின் ரோட்டுக்கா ஒண்ணு வெச்சிடலாம். பசங்களாண்ட சொல்லி பிட் நோட்டீசை விநியோகம் பண்ணிடு. நாளைக்கு பிரியாணி போடப் போற விஷயத்த நம்ம குப்பத்துப் பசங்களுக்குச் சொல்லிடு. இன்னா புரிஞ்சுதா?

சரி தல.. இப்பவே சொல்லிடறேன் என்றான் கஜா.
பசங்களை அழைத்து வேலைகளைப் பிரித்துக் கொடுத்தான். ஆளுக்கொடு வேலையைக் கையில் எடுத்துக் கொண்டு பரபரப்பாக இயங்கினார்கள். இரவெல்லாம் கண்விழித்துப் பேயாய் அலைந்தார்கள். நாளை பிரியாணி தானம் செய்கிறார்களோ இல்லையோ இன்று பிரியாணிப் பொட்டலங்களும் மதுப்புட்டிகளும் விளையாடின அவர்களின் கைகளில்! ஏரியா சுவர்கள், டிஜிட்டல் பேனர் வடிவில் நித்யாவுக்கு அஞ்சலி செலுத்தியது.

அன்று காலை மார்க்கெட்டுக்குப் போய் வந்ததில் இருந்தே ஒரு மாதிரி மயக்கமும் தலைச்சுற்றலையும் உணர்ந்த அஞ்சலை அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள். பள்ளிக்கூடம் விட்டு வரும் வழியில் மல்லிகா அக்கா வீட்டில் இருந்து தங்கச்சிப் பாப்பாவையும் அழைத்துக் கொண்டு வீடு திரும்பிய குழந்தை கேட்டான். “இன்னாம்மா, இன்னும் பட்தினுக்கிற, பூ விக்கப் போவலியா இன்னிக்கு?’

“அம்மாக்கு காத்தாலேர்ந்து ஜொரம்டா கண்ணு. அந்தக் கூடையில பூ வாங்கி வெச்சிருக்கேன். அத்த எட்துணுபோயி மல்லிகாக்கா வீட்ல குட்துட்டு எதுனா காசு தருவாங்க வாங்கியா. வரச்சொலோ உனக்கும் தங்கச்சிப் பாப்பாவுக்கும் எதுனா சாப்பிட வாங்கியா’ என்றாள் அஞ்சலை ஈனஸ்வரத்தில்.

“அம்மா… உனக்கு?’

“வாணாங்கண்ணு, மாத்திரை போட்டுணு தூங்கப் போறேன். நீயும் பாப்பாவும் சாப்பிடுங்க’ என்றாள்.

மறுநாள் காலை அஞ்சலையால எழக்கூட முடியவில்லை. பையன் அஞ்சலையிடம் “அம்மா, பசிக்குதும்மா.. சாப்பிட எதுனா செய்து தறீயா?’

“வூட்ல எதுவும் இல்லியே கண்ணு. நீஒண்ணு செய். தங்கச்சிப் பாப்பாவ இட்டுணுபோயி பால் வாடில வுட்ரு. நீ இஸ்கோலுக்குப் போ. அங்க சத்துணவு வாங்கிச் சாப்பிட்டு வா கண்ணு. அம்மா சாயங்காலம் எதுனா செய்து தரேன்.’

“அம்மா… இன்னிக்கு ஞாயித்துக் கிழமே. ஸ்கூலு லீவு’ என்ற பதிலில் தடுமாறிய அஞ்சலை, “கண்ணு தங்கச்சிப் பாப்பாவ இட்டுணு போயி வெளிய வெளியாடிட்டிரு. நா பக்கத்து வூட்ல எதுனா வாங்கி வெக்கறேன்’ என்ற அஞ்சலைக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. சுவரில் சாய்ந்து உட்கார்ந்து மீண்டும் படுத்துக் கொண்டாள்.

பத்து மணிக்கு வீடு திரும்பிய பையன் “அம்மா, தெரு முச்சூடும் அப்பாவோட படம் போட்டு போஸ்டர் போஸ்டரா ஒட்டிக்கிறாங்கம்மா. அப்பால மெயின் ரோட்டாண்ட பெர்சு பெர்சா படம்லாம் வெச்சு மாலெல்லாம் போட்டுக்கிறாங்க’ என்றான் ஆச்சர்யமாக.

இப்போதுதான் அஞ்சலைக்கு ஞாபகம் வந்தது. தன் கணவன் நித்யா என்கிற நித்யானந்தன் இறந்த நாள் இன்று. அழுது புலம்பினாள்.

“ஐயோ… அந்தப் பாவிப் பயலாண்ட அட்சிக்கினேன். கேட்கலியே… இப்ப நம்மள இப்டி அனாதையாக்கிட்டுப் பூட்டானே. கட்டேல போற சண்டாளனுங்க இப்டி அநியாயமா எம்புருஷனப் பலி குட்துட்டானுகளே…’ என்று அழுது புரளும் தாயைத் தேற்றத் தெரியாமல் பிஞ்சு மனம் துடித்தது.
அஞ்சலையின் தாடையைப் பிடித்து, “அம்மா… அழாதம்மா. நீ அழறதைப் பார்த்து தங்கச்சிப் பாப்பாவும் அழுவுது பாரு! அம்மா அம்மா இன்னிக்கு அப்பா பேர்ல பிரியாணியெல்லாம் போடறாங்களாம்மா. நா வேணாப் போயி பார்த்திட்ட வரவாம்மா?’ என்று கேட்டான் ஏக்கத்துடன்.

“வாணாங் கண்ணு. நீ எங்கியும் அலைய வாணாம். அவுங்க இங்க வருவாங்க’ என்றாள் அஞ்சலை.

“சரிம்மா’ என்ற பையன் தங்கையுடன் வாசலில் விளையாடச் சென்றான். தெரு மக்கள் அனைவரும் தெருமுனையை நோக்கிப் படையெடுக்க, என்னவென்று பார்த்தான். பிரியாணிப் பொட்டலம் விநியோகம் ஆரம்பித்தது. மீண்டும் வீட்டுக்குள் ஓடிவந்த பையன் அஞ்சலையிடம் கேட்டான்.

“தெருல குட்து முச்சிட்டு இங்க வருவாங்க கண்ணு. நீ போய்க் கூட்டத்துல மாட்டிக்காதே. வூட்டாண்டயே இரு’ என்றாள்.
பார்த்துக் காத்து நேரம் போனதுதான் மிச்சம். யாரும் வந்தபாடில்லை. பசி வயிற்றில் ஊசி குத்த தாங்க முடியாமல் வாடிய முகத்துடன் குழந்தை கேட்டான், “அம்மா, ரொம்ப பசிக்குதும்மா, யாரும் வரவேயில்லையே… இப்பனாச்சும் நான் போயி பார்த்திட்டு வரேம்மா…’ என்ற குழந்தையின் நிலை கண்டு தன் இயலாமையை நொந்து கொண்டு வேறு வழி இன்றி “சரி’ என்றாள்.

அந்தப் பசிக் கொடுமையிலும் சிரித்த முகத்துடன் துள்ளிக் குதித்து தெருமுனை நோக்கி ஓடினான். அங்கே ஒரு ஈ, காக்கா கூட இல்லாமல் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. டீக்கடை அண்ணனிடம் கேட்டான்.

“அவுங்க அப்பவே குட்து முட்சிட்டு பூட்டாங்களேடா. ஏதோ உங்கப்பம்பேர் சொல்லி இன்னிக்கு அல்லாரும் பிரியாணி சாப்பிட்டாச்சு…’ என்றபடி தன் வேலையில் மூழ்கிப் போனார் அவர்.

முகம் சுண்டிப் போய் தொய்வு நடை போட்டு வீடு திரும்பிய பிள்ளையைப் பார்த்து, “இன்னா கண்ணு… பொட்லம் வாங்கியாந்தியா’ என்றாள் அஞ்சலை.

“இல்லைமா, அல்லாம் அப்பவே காலியாடிச்சாம். ரொம்பப் பசிக்கிதும்மா’ என்றான் அழும் குரலில்.

பசி மயக்கத்தாலோ என்னவோ சின்னப் பாப்பா தூங்கி விட்டிருந்தது.

தன் பிள்ளையில் வாடிய முகத்தைப் பார்க்க ஆற்றாதவளாய்த் தலையைக் குனிந்து கொண்டே சொன்னாள் அஞ்சலை.
“கண்ணு, அதோக்கீதே அந்தத் தவலைல தண்ணீக்கீது, மொண்டு குட்சிட்டு வந்து அம்மாவாண்ட பட்துக்கோ. காத்தால அம்மா உப்புமா செஞ்சி தர்றேன்’ என்றாள் சுரத்தில்லாத குரலில்.
அவனும் சென்று ஒரு சொம்புத் தண்ணீரை மொண்டு பாதி குடித்தான். வயிற்றின் நெருப்பு சற்றுத் தணிந்தது. மீதித் தண்ணீரை அங்கேயே வைத்தவிட்டு ஓடிவந்து அஞ்சலையின் முந்தானைத் துணியில் சுருண்டு கொண்டான்.

சிறிது நேரத்தில் எழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்த குழந்தையைப் பார்த்துக் கேட்டாள். “இன்னா கண்ணு… தூக்கம் வரலியா…?’

“அம்மா பசி தாங்கமுடியலமா?’ என்ற பையனின் கண்களில் கசிந்த கண்ணீர்த் திவலையைக் கண்டு அஞ்சலையின் நெஞ்சில் ஆயிரம் இடி தாக்கிய வேதனை! ஆயினும் வைராக்கியமாகப் போராடி தன் அழுகையை அடக்கிக் கொண்டு பிள்ளையிடம் சொன்னாள், “கண்ணு… அந்தச் சொம்புலக்கீற தண்ணிய இப்பிடிக்கா எடுத்தா’ என்றாள். அவனும் சென்று எடுத்து வந்து அஞ்சலை முன் வைத்தான். அஞ்சலை சட்டென்று தன் சேலைத் தலைப்பின் ஒரு பகுதியைச் சரக்கென்று கிழித்தாள். அதை அப்படியே அந்தச் சொம்புத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்தாள். அந்த ஈரத்துணியை அப்படியே குழந்தையின் வயிற்றில் சுற்றிக் கட்டினாள். “இதோ… இப்ப பசி பூடும் கண்ணு. நீ பட்து தூங்கு’ என்றாள். பரிதாபமாகத் தன் தாயின் முகத்தை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்து விட்டு படுத்துக் கொண்டான். வயிறு ஈரமானது. ஆனால் நெஞ்சிலய நெருப்பு கனன்றது.

– பிப்ரவரி 26,2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *