மாலை ஆறரை மணியிருக்கலாம் விடுதி அறையில் விளக்கினைப் போட்டு விட்டு எழுத உட்கார்ந்தேன். ‘கொங்கு தேர் அஞ்சிறைத் தும்பியாக’ அன்று பகல் பொழுதில் நூலகங்களில் குறிப்புகளைச் சேகரித்திருந்தேன். இப்போது அவற்றை வகை தொகை படுத்த ஆரம்பித்தேன். பிறகு குறிப்புகள் கோவையாக இருக்கின்றனவா என்று படித்துப் பார்த்துத் திருப்தி அடைந்த நேரத்தில் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வகுப்புகள் கருத்தரங்குகள் வாய்மொழித் தேர்வுகள் என்று தொடர்ச்சியாக இருப்பதால் சனிக்கிழமைகளில் மட்டுமே நூலகங்களுக்குச் சென்று குறிப்புகளைச் சேகரிப்பதற்கும் அவற்றை வகை தொகை படுத்தி எழுதவும் நேரம் கிடைக்கின்றது.
எனவே நான் அந்த நாளில் நண்பர்கள் யாரும் வருவதையும் அவர்களுடன் பேசி நேரத்தை வீணடிப்பதையும் விரும்புவதில்லை. ஆனால் அதற்க்கு சோதனையாக இப்போது யாரோ வந்து விட்டார்கள்.
இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று குழப்பத்துடன் கதவைத் திறந்தேன். வந்திருந்தது முத்துவும் மணியரசுவும். இவர்கள் கடந்த ஆண்டில் நான் முதுகலை பயின்ற கல்லூரியில் உடன் படித்த மாணவர்கள். இப்போது வேறொரு கல்லூரியில் ஆய்வு மாணவர்கள்.
இவர்கள் வந்துவிட்டால் இலேசில் விடமாட்டார்கள். ஒருவர் தன்னைச் சிறந்த கவிஞர் என்று சொல்லிக் கொள்பவர். இதுவரையில் ஏராளமான கவிதைகளைச் சொல்லியிருக்கிறார். ஆனால் அவற்றுள் எந்த ஒன்றும் எந்தப் பத்திரிகையிலும் வெளியானதில்லை. இன்னொருவர் பேச்சாளர். இதுவரை பல இடங்களிலே போட்டிகளில் கலந்துகொண்டவர். ஆனால் எப்போதேனும் அவர் பரிசு பெற்றதாகத் தெரியவில்லை.
இவர்கள் பேச ஆரம்பித்துவிட்டாலோ அவர்களுக்கே சலித்துப் போகும்போது தான் நிறுத்துவார்கள்.
எதிரே இருப்பவரைப் பற்றிக் கவலையே பட மாட்டார்கள். அப்படிப் பட்டவர்களிடம் இன்று அகப்பட்டுக் கொண்டதை எண்ணி உள்ளுக்குள் நொந்துகொண்டேன்.
கவிஞர் முத்து தனக்குப் பிடிக்காத ஒரு பிரபலமான கவிஞரைக் கடுமையாக விமரிசிக்கத் தொடங்கினார். அக்கவிஞரின் சமீபத்திய கவிதை ஒன்றை மிக மட்டமாக விமரிசித்தார். அதே சமயம் தனக்குப் பிடித்த ஒரு கவிஞர் தன்னுடைய கவிதை ஒன்றைப் படித்து விட்டு எப்படியெல்லாம் பாராட்டினார் என்பதை மிகுந்த ஆர்வத்துடன் விவரித்தார். நடுவே அந்தக் கவிதையையும் கூறினார். அதனைக் கவிதை என்று அவர் மட்டுமே ஒப்புக்கொள்ள வேண்டும்.
அவர் முடித்த போது பேச்சாளர் தொடங்கினார்.ஓர் எழுத்தாளரின் சுய சரிதையைப் பற்றி விமரிசிக்க ஆரம்பித்தார். அவரெல்லாம் சுய சரிதை எழுதத் தகுதியில்லாதவர் என்பது போல பேசினார். எழுத்தாளரின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சிலவற்றை மிகத் தாழ்வான முறையில் பேசினார்.
இவர்கள் பேச்சில் எனக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும் எல்லாவற்றையும் கேட்கும் படி ஆயிற்று. பேச்சின் நடுவே முத்து சொன்னார்,
‘என்னப்பா முதல் முதலாக உன் ரூமுக்கு வந்திருக்கிறோம். தேநீர் உபசரிப்பு எதுவும் கிடையாதா? ”
“சரி வாங்க! வெளியே போய் சாப்பிடுவோம்”.
“ராமக்கிருஷ்ணாவில் காபி நன்றாக இருக்கும் ” . என்றனர்
சரி என்றேன்.
முதன்முதலாக ஓட்டலுக்குக் கூட்டிகூட்டிக்கொண்டு வந்திருக்கிறாய். வெறும் காபி மட்டும் தானா?” என்றனர்.
வெய்ட்டர் வந்த போது அவர்கள் முந்திக்கொண்டு ஏதேதோ ஆர்டர் செய்தார்கள்
“நேத்து ஆவி பறக்க இட்டிலி சாப்பிட்டேன்”, என்றார் முத்து. “எங்கே என்றார் மணியரசு.
“சுடுகாட்டுக்குப் பக்கத்திலே “, என்று கூறி கடகடவென்று சிரித்துக்கொண்டனர். இப்படி ஒருவரையொருவர் கடித்துக்கொண்டு சிரிக்க ஒவ்வொரு முறையும் ஓட்டலில் இருந்த அனைவரின் பார்வையும் எங்கள் பக்கம் திரும்ப, எனக்கு அருவெறுப்பாய் இருந்தது.
திடீரென்று பின்னால் இருந்து யாரோ கை வைக்க சட்டென திருன்பினேன். ஆரோக்கியசாமி நின்றிருந்தார். எங்கள் துறையின் உதவியாளர் அவர்.
“என்ன சார்! டிபன் சாப்பிட்ட வந்தீங்களா”.
“ஆமாம் ஆரோக்கியசாமி”.
“உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும். இப்படி வர்ரீங்களா?. ”
“பரவாயில்லை. இங்கேயே சொல்லுங்க ஆரோக்கியசாமி”.
“இல்ல! இப்படி வாங்க”, என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டார்.
ஏற்கெனவே இவர்களால் கலங்கியிருந்த நான் என்னடா இது புது தலைவலி என்று நினைத்துக்கொண்டு சென்றேன்.
இந்த ஆரோக்கியசாமி அவ்வப்போது ஐந்து பத்து என்று என்னிடம் கை மாற்று வாங்கியிருக்கிறார். இப்போது என்ன கேட்கப் போகிறாரோ என்று மனது அடித்துக்கொண்டது.
“என்ன ஆரோக்கியசாமி?”
“சார் நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்”.
மனதுக்குள் கணக்கு போட்டுச் சொன்னேன்.
“ஒரு நாப்பத்தஞ்சு இருக்கும்”.
“சரியா சொல்லுங்க சார்”.
“மனதுக்குள் மீண்டும் கணக்கு போட்டு விட்டுச் சொன்னேன்.
“நாப்பத்தஞ்சு தான் ஆரோக்கியசாமி.”
“சரி ஒரு அஞ்சு ரூபா இருக்குமா?”
“தெரியலை. பார்க்கிறேன்”, என்று சொல்லிக்கொண்டே பாக்கெட்டில் கைவிட்டேன். எடுப்பது ஐந்து ரூபாயாக இருக்கவேண்டுமே என்று கடவுளை வேண்டிக்கொண்டே எடுத்தேன்.
கடவுள் காப்பாற்றி விட்டார். எடுத்தது ஐந்து ரூபாய் தான்.
ஐந்து ரூபாயை வாங்கிக்கொண்ட ஆரோக்கியசாமி ஓர் ஐம்பது ருபாய் நோட்டை நீட்டினார்.
நம்ப முடியாத அதிசயமாய் இருந்தாலும் சட்டென வாங்கிக்கொண்டேன். இருந்தாலும் “இதுக்கு இப்ப என்ன அவரசம் ஆரோக்கியசாம. நாளைக்குக் குடுத்திருக்கலாமே”‘ என்றேன்.
“இல்ல சார்! இப்ப தான் ஒரு இடத்துல பணம் கெடச்சது. கெடச்ச நேரத்திலே உங்களையும் பார்த்துட்டேன். இப்பவே தரலைன்னா செலவாயிடும். அதான்”, என்றார்.
“நன்றி ஆரோக்கியசாமி”.
“நன்றியை நான் தான் சொல்லணும் சார். இத்தனை நாளைக்கு நீங்க ஒன்னும் கேக்காம இருந்தீங்களே”, என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
மேசைக்குத் திரும்பியபோது பில் இருபத்தைந்து ருபாய் ஆகியிருதது. பணத்தைச் செலுத்திவிட்டு நண்பர்களை வழியனுப்பிவிட்டு திரும்ப விடுதி நோக்கி நடந்தேன்.
ஓர் இனிய மாலைப் பொழுது வீணானதும் என் வேலைகள் தடைப் பட்டதும் இருபததைந்து ருபாய் வீணானதையும் அதனால் ஏற்பட்ட வருத்தத்தையும் மீறி ஏதோ ஒன்று ஒன்று மனதுக்கு இதமாக இருப்பதை உணர்ந்தேன். திரும்ப வரும் என நினைத்துக் கூட பார்க்காதது எதிர் பாராத விதமாகத் திரும்ப கிடைத்ததும் அதனால் ஏற்பட்ட சந்தோஷமே அது.
“இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை”.