“குருவே எனக்கு எந்த வேலையும் சரிப்பட்டு வர மாட்டேன்கிறது. எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடிகிறது” என்று கவலையோடு சொன்னவனிடம் ஆறுதலாய் பேசத் துவங்கினார் குரு.
“ஏன், உன் வேலைகளில் என்ன பிரச்சனை வருது?” என்ற குருவின் கேள்விக்கு வந்தவன் செய்த தொழில்களை பட்டியலிட்டான்.
“பாருங்க குருவே, இத்தனை தொழில் செய்தும் எதிலும் எனக்கு முன்னேற்றம் கிடைக்கல”
வந்தவனின் குறைபாடு குருவுக்குப் புரிந்தது. அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
ஒருவனுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது.அதில் கிணறு வெட்ட கிளம்பினான். கிணறு வெட்ட இடம் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த வெளீயே வந்த பெரியவர் ஒருவர், ஒரு இடத்தை சுட்டிக் காட்டி அங்கு கிணறு வெட்ட சொன்னார். அவனும் அங்கு தோண்ட ஆரம்பித்தான். சிறிது ஆழம் தோண்டியிருப்பான், அந்தப் பக்கமாய் போன வழிப் போக்கன் ஒருவன், ‘ஏம்பா அங்க தோண்Fடுற, அங்கலாம் பாறைதான் ஜாஸ்தி இந்த இடத்துல தோண்டு” என்று வேறு ஒரு இடத்தை காட்டிவிட்டு போனான். நம்ம ஆள் உடனே அங்க தோண்ட ஆரம்பித்தான்.
அப்போது அந்த வழியே போன இன்னொரு ஆள் அவனை வேறு இடத்தில் தோண்டச் சொல்ல மீண்டும் இடத்தை மாற்றினான். இப்படியே ஒரு மாத காலம் போனது. ஒவ்வொருவர் பேச்சைக் கேட்டுக் கேட்டு இடங்களை மாற்றிக் கொண்டிருந்ததில் அவன் எந்த இடத்தையும் முழுமையாய் தோண்டியிருக்கவில்லை.
அந்த சமயம் முதலில் வந்த பெரியவர் அந்தப் பக்கம் வந்தார். அவனுடைய குழப்பத்தை உணர்ந்தார். ‘இப்படி மாறி மாறி தோண்டியதற்கு பதில் அந்த உழைப்பை ஒரே இடத்தில் காட்டியிருந்தால் நல்ல நீர் சுரக்கும் கிணறு உனக்கு கிடைத்திருக்கும்’ என்றார்.
இந்தக் கதையை குரு சொல்லி முடித்தபோது எந்தத் தொழிலையும் தான் முழுமையாய் செய்யாமல் பாதியிலேயே விட்டது வந்தவனுக்கு புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன WINமொழி: இலக்குகளை மாற்றிக் கொண்டிருந்தால் வெற்றி கிடைக்காது
– வெளியான ஆண்டு: 2011 (நன்றி: http://ranjan360.blogspot.com)